Skip to content
Post Views: 67
அன்பழகனின் இல்லம். ஜீவா வேலை முடிந்து களைப்போடு வீடு திரும்பியிருந்தான், வழக்கம்போலவே களையின்றி இருந்தது அவர்களது வீடு.
அம்மா பவானி கோவிலுக்குச் சென்றிருக்க, வீட்டில் ஆள் இருப்பதைப் போலவே தெரியவில்லை.
“தனா!” என்று தங்கை அர்த்தனாவை அழைத்தான் ஜீவபிரகாஷ்.
“சொல்லுடா” என்றபடி அறையிலிருந்தே குரல் கொடுத்தாள் அர்த்தனா.
Advertisement
“ஏன் மேடம் வெளியே வந்து பேச மாட்டீங்களோ?” கடுப்பாகக் கேட்டான் ஜீவா.
“காஃபி போட்டுக் கொடுடி” என்று கேட்டவன்,
“அம்மா எங்க?” என்றான்.
Advertisement
“கோவிலுக்கு” என்று அர்த்தனா சொல்ல, தங்கையின் முகம் பார்த்தவள்,
Advertisement
“நீ ஏன் டல்லா இருக்க?” என்று சரியாகக் கணித்துக் கேட்டான். அது உண்மை என்றபோதும் அவள் அப்படி இருப்பதற்கான காரணமே அவளை சுட, கிடைத்தவன் அண்ணன் என்று அவனிடம் கோபத்தைக் காட்டினாள்.
“என்ன டல்லா இருக்கேன்? பின்ன இந்த வீட்ல எப்படி சிரிச்சிட்டே சந்தோஷமா இருக்க முடியுமா?” என்றாள் எரிச்சலாக.
அர்த்தனா சொல்வதில் இருக்கும் அர்த்தம் ஜீவாவிற்கு நன்றாக தெரியும். அவனுக்கும் வருத்தமிருக்கிறது, ஆனாலும் என்ன செய்ய? அர்த்தனா போல கத்துவது அவன் வழக்கமில்லை.
Advertisement
“அப்பா எங்கடா?” என்று அடுத்தக் கேள்வி கேட்க,
“லிவர் டேமேஜ் பண்ற வேலையில வெற்றிகரமா இறங்கியிருப்பாரு, வேற என்ன?”
ஆற்றாமை, இயலாமை, எரிச்சல், வேதனை என்று அத்தனை உணர்வும் அர்த்தனாவின் குரலில் இருந்தது.
தாத்தா செய்த பாவத்திற்கு அவர்கள் அனுபவிக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது. திலக்கின் தந்தை கார்வண்ணனை தன் மகனின் அரசியல் எதிரியாகக் கருதி, நண்பனின் மகன் என்றும் பாராமல் அவர் செய்த வேலை தன் மகனின் தலையெழுத்தை மாற்றும் என்று சக்கரபாணி நினைக்கவில்லை.
அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். நம்மை நம் செயல்களாலும் சொற்களாலும் மட்டுமே இந்த உலகம் நினைவு கூறும் என்பது உண்மை. சக்கரபாணியின் செயல்களால் அவர் குடும்பத்தினர் அவரை வெறுத்தனர். அந்த வெறுப்பு அவர் மகன் அன்பழகனுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பையும் உண்டாக்கியது.
சில நேரம் பாசமான தந்தை, அன்பான கணவன் என்று அவதாரமெடுத்தாலும், மகனைப் பார்க்கையில் தன் நண்பனின் மகனுக்குத் தந்தை இல்லாது போக, தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வில் குடிக்கத் தொடங்கினார் அன்பழகன். பிள்ளைகள் வளர்ந்து அவரைத் திருத்தியிருக்க, மீண்டும் திலக்கின் நிலையால் அது அதிகமானது.
இதனாலயே அந்த குடும்பம், அப்பா என்று எல்லார் மீதும் அர்த்தனாவிற்கு ஒரு வெறுப்பிருந்தது. ஜீவா அப்படியில்லை, உண்மையில் அவன் இழந்தது அதிகம்.
தந்தை இல்லாது திலக்கிற்கு அன்பு கிடைக்கவில்லை என்றால், இருந்தும் கிடைக்கப்பெறாதவன் ஜீவா. அதில் அப்பாவின் மீது அதீத கோவம் அர்த்தனாவிற்கு.
நன்றாக போய்க்கொண்டிருப்பது போல இருக்கும். ஆனால் ஏதோ ஒரு சொல், ஏதோ ஒரு நிகழ்வினால் அன்பழகனுக்கு நண்பனின் நினைவு வந்துவிடும். ஒன்று குடி, இல்லை தனிமை என்று தன்னைத் தொலைக்கும் மனிதர் தன் மக்களின் நியாயமான சந்தோஷங்களைத் தான் அழிப்பதை உணரவே இல்லை.
அவருக்கு அவர் கொடுத்துக் கொள்ளும் தண்டனை அவரின் குடும்பத்தைக் காயம் செய்கிறது என்பது புரியவே இல்லை.
“அப்பா கொஞ்ச வருஷமா நல்லா இருந்தாங்கதானே? திலக் இஸ் கெட்டிங் பெட்டர், அவன் நல்லா ஆகிட்டா அப்பா நல்லா இருப்பாங்கடா தனா”
அண்ணன் சொல்லவும் அவனை ஆழப்பார்த்தாள் அர்த்தனா.
“அப்போ எப்பவும் நம்ம வாழ்க்கை அவங்களை வச்சுத்தான் இருக்குமா அண்ணா? உங்கிட்ட அப்பா அன்பா பேசினதை விரல் விட்டு எண்ணிடலாம். சில நேரம் திலக் அண்ணா மேல காரணமே இல்லாம எனக்குக் கோவம் வருது. ப்ச்.. போடா” என்று சொன்னவள் காஃபி கலக்கினாள்.
ஜீவாவிற்குத் தங்கையின் கேள்விக்குப் பதில் இல்லை. அமைதியாக நின்றான். அண்ணன் தன்னை விட அதிகம் பாதிக்கப்பட்டவன் என்று புரிந்தது. கூடவே அவனுக்கு வேலைப்பளு அதிகம். அதனால் அவனுக்குக் காஃபி கலந்து கொடுத்தாள்.
“இன்வெஸ்டிகேஷன் எந்த லெவல்ல இருக்குண்ணா?” என்று பேச்சுக்கொடுக்க,
“ப்ச், அரசியல்வாதிங்களோட எதிரிங்க எல்லா திசையிலையும் இருக்காங்க. என்ன, யாருனு பார்த்துட்டு இருக்கோம்” என்றான் சலிப்போடு.
“டர்டி பொலிடிக்ஸ்” என்று கசப்பாக அர்த்தனா சொல்ல,
“பொலிடிசியன்ஸ் ஆர் டர்ட்டி” என்று திருத்தினான் ஜீவா.
தங்கை கொடுத்த காஃபியைப் பருகியவன்,
“நல்லா இருக்கு” என்று கோப்பையை உயர்த்திக் காட்டினான்.
“சரிடா, நீ ரெஸ்ட் எடு. அம்மா பக்கத்துல உள்ள கோவிலுக்குப் போயிருக்காங்க. வந்துருவாங்க, முடிஞ்சா உன் டாடிகிட்ட போய் பேசு” என்றவள் அறையை அடையும் முன், ஜீவாவின் குரல் நிறுத்தியது.
“ரஞ்சனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை அர்த்தனா?” என்ற அண்ணனின் கேள்வியில் அப்படியே நின்றாள் அவள். என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று அவள் யோசிக்க, அதற்குள் காஃபியைப் பருகியவன், தங்கையை நோக்கி நடந்து வந்தான்.
அர்த்தனாவின் விழிகள் அங்குமிங்கும் அசைய, “போலிஸ்காரங்கிட்ட பொய் சொல்லாம உண்மையை சொல்லிடு” என்றான் அழுத்தமாக.
*************
ராஜமகேந்திரன் மெத்தையில் உட்கார்ந்து அவனது மடிக்கணினியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தான். பிரசன்னா நைட் டிரஸுக்கு மாறியவள்,
“வர்க் பண்றீங்களா?” என்று கேட்டபடி அருகே வந்தாள்.
“பண்ணிட்டு இருந்தேன். முடிச்சிட்டேன், சொல்லு” என்றான்.
“இப்போதான் எனக்கு ஹாப்பியா இருக்கு. அண்ணாகிட்ட நிறைய இம்ப்ரூவ்மெண்ட்ஸ்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்றவளின் குரலில் பழைய துள்ளல் இல்லாவிட்டாலும் சந்தோஷமும் நம்பிக்கையும் நிறைந்திருந்தது.
“சந்தோஷம்” என்றவன் குரல் ஒருமாதிரியாக இருந்தது.
“லைட் ஆஃப் பண்ணிடு” என்றவன், அவனது மடிக்கணினியை மேஜை மீது வைத்துவிட்டு படுத்தான்.
அவனருகே பிரசன்னா வந்து படுத்தவள், அவளாகவே கணவனின் கைவளைவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டாள்.
“என்ன அதிசயம்?” மகேந்திரனின் குரல் கேலியாக வந்தது.
“ப்ச்” என்று பிரசன்னா உச்சுக்கொட்டியவள், “நான் சந்தோஷமா இருக்கேன் சொன்னா, உங்க ரியாக்ஷன் ஏன் இப்படி இருக்கு?” என்றாள் அயர்ச்சியோடு.
“பின்ன? உங்கண்ணாவை வச்சுத்தான் உன் சந்தோஷமிருக்கு, அப்போ நான் யாரு?” என்றான் அவள் பக்கம் திரும்பி.
குற்றச்சாட்டினை இப்படி குறிப்பார்த்து வைப்பதில் அவனை அடித்துக்கொள்ள முடியாது என்று மனத்தில் நினைத்தாள் பிரசன்னவர்தினி.
“எங்கண்ணன் இப்படி கோமாவுல இருக்கும்போது எனக்குக் குளுகுளுன்னு இருக்குமா? ப்ச்.. எனக்கு வேற மாதிரி பேசக்கூட மனசு வரல” என்றாள் மிதமிஞ்சிய எரிச்சலோடு.
“ஏன் மகேந்திரன் இப்படி இருக்கீங்க? எமோஷன்ஸே இல்லாம?” ஒருவித பயத்தோடு கேட்டாள் பிரசன்னா.
உண்மையில் அந்த கேள்வி கூட நகைச்சுவையாகவே அவனிடம் சேர்ந்தது.
“ஹாஹா, எமோஷன்ஸ் இல்லையா? அப்புறம்?” என்று அவன் அடுத்துக் கேட்க, சட்டென்று விலகிப்படுத்தாள் பிரசன்னா. அவள் விலகிய வேகத்தில் இன்னும் நெருக்கமாக அவளை இறுக்கியிருந்தான் ராஜமகேந்திரன்.
பிரசன்னா அவன் பிடியிலிருந்து திமிற, மகேந்திரனோ அவளை விடாது தனக்குள் பொத்தி வைப்பது போல அணைத்திருந்தான். அதே நிலையில் குனிந்தவன் மெல்லிய குரலில் அவளிடம் பேசினான்.
“உன் அண்ணன் நல்லாயிருக்கான்னு தெரிஞ்ச பின்னாடி என் பக்கம் வந்தா எனக்கு ஹர்ட் ஆகாதா?” என்று கேட்டான்.
“அதில்…” என்றவளை அவன் பேசவிடவில்லை.
“பேச விடுடி” என்று அதட்டியவனின் இறுக்கமான அணைப்பு மூச்சுமுட்ட, அதனை சொல்லவும் செய்தாள். மகேந்திரனோ,
“எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. நம்மைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணினவ, அண்ணனுக்கு ஒன்னுனதும் என்னை அம்போன்னு விட்டுப் போய்ட்டான்னு எனக்கும் மூச்சு முட்டுச்சு” என்றான். பேச பேச அவன் இதழ் அவள் கழுத்தோடு உரச, தீப்பற்றியது அவள் தேகம்.
“ப்ச், தள்ளுங்க” என்று அவனை உதறியவளை அவனும் விட்டான்.
“மூச்சு முட்டுச்சா? அதான் ஜாலியா இருந்தீங்களே” மூச்சு வாங்கக் கேட்டாள் பிரசன்னா.
“ஒன்னுப் புரிஞ்சுக்கோ, கடமைக்கும் துயரத்துக்கும் முடிச்சுப் போடக்கூடாதுனு எங்க சீனியர் அட்வகேட் சொல்லியிருக்கார். திலக் விஷயத்துக்குன்னு இல்லை, நான் எப்பவும் இப்படித்தான்” என்றான் அழுத்தமாக.
அதுவரை விட்டத்தைப் பார்த்துப் பேசியவன், சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்து,
“நீ என்னை என்ன லவ் பண்ணின? எதுவும் தெரியாம? என்னைத் தெரியாம?” என்று கேட்டவன்,
“உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் அங்க ஹாஸ்பிட்டல்யே இருந்து எம்.பி போஸ்ட் வேண்டாம்னு சொல்லியிருந்தா தியாகி போஸ்ட் கொடுத்து சந்தோஷப்பட்டிருப்பீங்க. இல்லையா?” என்று கோபத்தை அடக்கியவன் கத்தவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் வந்து விழுந்த விதம் சீற்றத்தை சிறப்பாகக் காட்டியது.
“இதோ, இன்னிக்கு உன் அண்ணாவை ஹாஸ்பிட்டல்ல பார்த்த பின்னாடி என் பக்கம் வர? அப்போ என் மனசு? என் ஃபீலிங்க்ஸ்? அண்ட் என் எமோஷன்ஸ்?” என்று பிரசன்னாவின் முகம் பார்த்துக் கேட்டான்.
அவளுக்குப் படபடவென்று வந்தது. அவனுடையக் கேள்விகள் நியாயமாகப் பட்டது அவளுக்கு விந்தையாக இருந்தது.
“நீ இவ்வளவு பாசம் வச்சிருக்க உன் அண்ணனுக்கும் உன் மேல பாசமிருக்குதானே? அவன் கிட்ட உன்னை வச்சு நான் சீட் கேட்டிருந்தா அவன் கொடுத்திருக்க மாட்டானா?” என்றதும் பிரசன்னா கோபம் கொண்டாள்.
“மகேந்திரன்” என்று அவன் பெயரைக் கோபத்து அவள் சொல்ல,
“என்ன மகேந்திரன்? சொல்லு, உன் தங்கச்சியோட வாழணும்னா சீட் வேணும்னு சொல்லியிருந்தா திலக் கண்டிப்பா கொடுத்திருப்பான். இல்லையா?” என்று கேட்க, திலக் தனக்காக விட்டுக்கொடுத்திருப்பான் என்றே தோன்றியது.
பிரசன்னாவின் கண்களில் ஈரம் கூடியது.
“நீங்க அப்படி கேட்க மாட்டீங்க” என்று பிரசன்னா சொல்லிய விதத்தில் அரசியல்வாதி அந்தர் பல்டி அடித்தான்.
அந்த வார்த்தைகள் காதலின் வாகையாகத் தெரிந்தன. வாதையும் காதலே! வாகையும் காதலே என்ற நிலை மகேந்திரனுக்கு.
“அடிக்கடி அறிவிருக்குனு காட்டிறியேடி” என்று தள்ளியிருந்த தலைவியைத் தன் அணைப்புக்குள் மீண்டும் கொண்டு வந்தான்.
“எஸ், நானும் கேட்க மாட்டேன். அது நம்ம மூணு பேருக்கும் மரியாதை கிடையாது. உன் அண்ணன் எனக்கு அரசியல் எதிரிதான்! அவனோட எனக்குப் போட்டிதான்! ஆனா என் மரியாதைக்குரிய எதிரி!” என்று மகேந்திரன் சொல்லிய விதத்தில் பிரசன்னாவிற்கு அழுகை கூடியது.
மகேந்திரனுக்கு எப்போதும் எதிலும் அவன் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். அப்படி மற்றவர்களின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற ஆவல்.
“எனக்கு ஒருவேளை இப்படி ஆக்சிடெண்ட் ஆகியிருந்தாலும் உங்கண்ணா ஜிப்பா மாட்டிட்டு ஜம்முனு பார்லிமெண்ட் போயிருப்பான்” என்று ராஜமகேந்திரன் சொல்ல,
“அண்ணா அப்படியெல்லாம் செய்ய மாட்டார். ஃப்ர்ஸ்ட் இப்படி பேசாதீங்க லூசு மாதிரி” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“இசிட்? அவன் கண்முழிச்சதும் அவனைக் கேளு” என்று சொல்ல, அண்ணன் கண்விழித்துவிடுவான் என்ற வார்த்தைகளே பிரசன்னாவை புன்னகைக்க செய்தது.
ஐந்து நிமிடங்களுக்கு முன் கணவனை வெறுக்கும் நிலையில் அவள் என்றால் அவளால் கூட நம்ப முடியாது.
அவனை வெறுப்பது அத்தனை சுலபமில்லை என்பதை நித்தமும் மகேந்திரன் உணர்த்திக்கொண்டே இருந்தான்.
“இங்க பாருங்க, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும், ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குதா இல்லையான்னு.. ப்ச்.. நான் ஆசைப்பட்டது இது இல்லை” என்றாள் எப்போதும் போல.
“இங்க பாரு, நீ என்னையும் உன்னையும் மட்டும் பார்த்தா நீ ஆசைப்பட்ட மாதிரி நம்ம லைஃப் இருக்கும். நீ எல்லாரையும் நம்ம ரெண்டு பேருக்குள்ள கொண்டு வர, அதான் பிரச்சனை. ஓகே, டயர்டா இருக்கு. தூங்கலாம்” என்றவன் கண்களை மூடிகொண்டான்.
பிரசன்னாவிற்கு எதிர்ப்பார்ப்புகள் எதிரியாக நிற்க, உறக்கம் அண்டவில்லை. எல்லாம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாள்.
ஏதோ யோசனை செய்த மகேந்திரன்,
“திலக் யாரையாச்சும் லவ் பண்ணியிருப்பானா?” என்று கேட்க,
“தீடீர்னு ஏன் அப்படி கேட்கிறீங்க?” என்று பிரசன்னா கேட்க,
“ஒரு மனுஷன் வாழக்கூடாதுனு நினைக்கிறாங்கன்னா என்ன அர்த்தம்? ஒன்னு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. அரசியல் எதிரிங்க யாரும் அவனைக் கொல்லணும்னு நினைக்கல, அப்படி நினைச்சா ஈசியா இந்த நேரம் மாட்டியிருப்பாங்க. அப்போ பதவி இல்லைன்னா பணம், பெண்?” என்று மனைவியைப் பார்த்தான்.
“அண்ணா யாரையும் அப்படிப் பார்த்ததில்லையே. இருந்தா சொல்லியிருப்பாங்க” என்றாள்.
“சரி விடு. ஜீவாவுக்கு இந்த கேஸ் ரொம்ப முக்கியம். அவன் பார்த்துப்பான், ஒருவேளை நமக்குத் தெரிஞ்சு எதையாவது மிஸ் பண்ணினா அவனுக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன்” என்றான் மகேந்திரன். இருவரும் அவரவர் யோசனைகளோடு உறங்கினார்கள்.
கடமைக்கும் துயரத்திற்கும் சம்மந்தமில்லை என்று தத்துவம் பேசியவனை அடுத்த நாளே ரத்தவெள்ளத்தில் தவிக்க வைத்தாள் பிரசன்ன வர்த்தினி.
error: Content is protected !!