Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 11

அத்தியாயம் 11

பரணி துர்க்காவின் வாய் தகராறு வாய்க்கால் தகராறாக ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போக, பிரபாகரனுக்கும் அஞ்சனாவிற்கும் இவர்கள் இருவரையும் சமாதானம் பண்ணி இழுத்து பிடிப்பது தான் வேலையாக இருந்தது.



Advertisement

அதிலும் அஞ்சனா கண்களாலையே நண்பனை கண்டிக்க சொல்லி கட்டளை இடுவதும், அதை புரிந்து கொண்டு பரணியின் பிடரியில் ஒன்றை வைத்து பிரபாகரன் இழுத்து செல்வதும் என்று பிரபாகரன் அஞ்சனாவிற்கு இடையில் அறியப்படாத, சொல்லப்படாத நேசம் ஒன்று இளையோடி கொண்டிருந்தது.

அப்போதுதான் வந்து சேர்ந்தது அவர்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா. ஆறு நாட்கள் சுத்தி உள்ள அத்தனை ஊரும் அங்கு தான் இருக்கும்.

Advertisement

Advertisement

“டேய் என்னடா புதுசா பண்ற.. சீக்கிரம் கிளம்பி வா…” என்று பரணியின் வீட்டில் நின்று அவனை திருவிழாவிற்கு அழைத்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.

ஆனால் பரணியோ “சொன்ன கேளு டா.. நீ முன்னாடி போ அப்புறமா நான் வாரேன்…” என்று அவனை விரட்டுவதிலேயே குறியாக இருக்க, இவர்களை பார்த்துக் கொண்டிருந்த பரணியின் தாயின் கண்களிலும் லேசான பதட்டம் இருந்தது.

Advertisement

பிரபாகரன் விடுவதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படித்தான் அவனை விட்டு பரணி விலகி நடக்கின்றான். காலேஜ் தவிர வேறு எங்குமே பிரபாகரனுடன் பேசுவதில்லை. வெளிப்படையாகவே தவிர்த்தான்.

அதற்கு காரணம் முருகானந்தம். அவருக்குத்தான் கௌரவம் தகுதி எல்லாம் முக்கியமே, தன் மகன் சாதாரண மாடு மேய்ப்பவன் மகனுடன் நெருங்கி பழகுவது பிடிக்கவில்லை,

அதிலும் அவன் தன் மகனை வைத்துக் கொண்டே தன் மகளிடம் வம்பு வளர்ப்பதை நேரில் பார்த்தபின் ஆத்திரத்தின் உச்சத்திற்கே போய்விட்டார்.

தங்கவேலின் மாட்டுப் பண்ணை ஒன்றும் சிறிது இல்லை. 20 மாடுகள் இருக்க வருமானம் நன்றாகவே வந்தது. ஐந்து நாட்கள் முன் மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல, அதில் இரண்டு மாடுகள் கூட்டத்தை விட்டு மாறி, முருகானந்தத்தின் வயலில் இறங்கி வாயை வைத்து விட,

ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்தவர், மாட்டை பிடித்து கட்டி வைத்து அடிக்க, விடயம் தெரிந்து தங்கவேல் பரணி வந்து சேர, மாடு வயலை நாசம் செய்வதற்கு கண்டித்தாரோ இல்லையோ பரணியை தன் மகனுடன் சேர்ந்து பார்க்கக் கூடாது என்று கண்டிக்க,

“பிரபாக்கு நான் மட்டும் தான் பிரெண்ட்.. அவன் என்ன தவிர வேற யாரோடயும் பழக மாட்டான்…” என்று பரணி பதில் சொல்ல

“இருக்கப்பட்டவன் அப்படித்தான் பாவம் பார்த்து பழகுவான்.. நீயும் இளிச்சுகிட்டு எதையெல்லாம் சுரண்டலாம்னு பழகுவியோ.. தொலைச்சுபுடுவேன் நாயே, உன் தகுதி என்னவோ அந்த இடத்துல இருந்துக்கோ.. இனிமேல் அவனா வந்து பழகுனாலும் நீ தான் விலகிப் போகணும்.. இல்ல இன்னைக்கு மாட்டுக்கு நடந்தது நாளைக்கு உன் அப்பன் ஆத்தாளுக்கு நடக்கும்…” என்று கண்கள் சிவக்க எச்சரிக்க

பரணியின் பெற்றோரும் “நமக்கு எதுக்கு வம்பு.. அந்த புள்ளையோட பழகுறத குறைச்சுக்கப்பா…” என்று அறிவுரை சொல்ல

அதன் பின் தான் இந்த விலகல். ஆனால் பிரபாகரனோ ஒற்றைக்காலில் நின்று பரணியை திருவிழாவிற்கு அழைத்துச் சென்றான்.

தன்னை தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் நண்பனை ஒதுக்கி வைக்க முடியாமல், முருகானந்தம் பேசினால் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் பிரபாகரனுடன் இயல்பாக இருந்தான்.

திருவிழாவின் மூன்றாவது நாள் அன்னதானம் வழங்கும் இடத்தில், அந்த ஊரின் வெட்டியான் குடும்பத்தினரை கடைசி பந்தியில் வந்து சாப்பிடுங்க என்று ஒருவன் விரட்டி கொண்டிருக்க

அதை பார்த்த பரணி அந்த நபரிடம் “அண்ணே! என்னண்ணே இது.. அன்னதானம் பண்றது புண்ணியம் தேடத்தான்.. அதுல பாவத்த சேக்காதீங்க.. அவங்களுக்கும் சாப்பாடு பரிமாறுங்க…” என்று பரணி சொல்லிக் கொண்டிருக்கும் போது

அங்கு துர்க்காவுடன் வந்து சேர்ந்திருந்தான் பிரபாகரன். “என்னடா மச்சான் பிரச்சினை?…” என்று பிரபாகரன் கேட்க

பரணி விடயத்தை கூற, சற்று கண்டிப்பாக குரலில் “என்ன புது பழக்கம் இது.. வகை பிரிக்கிறீங்களோ.. இங்க எல்லாரும் ஒன்னு தான் அவங்கள முதல்ல கவனிங்க…” என்று சொல்ல

ஊர் தலைவரின் மகன் சொன்ன பின் மறுக்க முடியுமா, அவர்களுக்கும் சாப்பாடு பரிமாறப்பட பரணியோ அவர்களிடம் “சங்கடப்படாம சாப்பிடுங்க.. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்…” என்று அவர்களை இலகுவாக்கினான்.

இதை கவனித்த துர்க்காவிற்கு என்னதான் அவன் அவளை சீண்டுவதில் நீர்க்குமிழி போல் கோவம் இருந்தாலும், அவன் குணாதிசயங்கள் மிகவும் பிடிக்கும்.

அவனை பொறுத்த வரைக்கும் எல்லா உயிர்களும் மதிக்கப்பட வேண்டியவை, அது மனிதர்கள் என்று இல்லை மூன்று மாதங்கள் முன் இறந்து பிறந்த கன்றுக்குட்டிக்காக அவன் கவலையாக சுற்றி வந்ததிலிருந்து தெரிந்தது. இன்று இந்த நிகழ்வு.

பிரபாகரனோ “பரணி துர்க்கா ராட்டினம் சுத்தணுமாம் இவள கூட்டிட்டு போறியா?.. நான் அவசரமா கோயில் பூசாரிய சந்திக்கணும்.. அப்பா முக்கிய தகவல் சொல்ல சொன்னாரு…” என்று சொல்ல

“ஏன் இந்த வாயாடிக்கு நீ போயிட்டு வார வரைக்கும் பொறுமையா இருக்க முடியாதாமா…” என்று பரணி கேட்க

துர்க்கா முறைத்துக் கொண்டு ஏதோ சொல்ல வர “டேய் ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்காடா.. எனக்கு மாத்தி மாத்தி ஏதாவது வேலை வந்துட்டு இருக்கு.. நீ கொஞ்சம் கூட்டிட்டு போ…” என்று பிரபாகரன் சொல்ல

துர்க்காவோ “எந்த ஒட்டடை குச்சியும் எனக்கு துணைக்கு வர வேணாம்.. நானே போறேன் ண்ணா…” என்று துர்க்கா பரணி முறைத்துக் கொண்டே சொல்ல

“துர்க்காம்மா உன்ன தனியா எல்லாம் விட முடியாது…” என்று பிரபாகரன் பரணியை பார்க்க “சரிடா நான் கூட்டிட்டு போறேன்…” என்றவன் துர்க்காவை முன் செல்ல சொல்லி, அவளை ஒரு அடி இடைவெளியில் பின்தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்றதும் நிறைய கேளிக்கை விளையாட்டுகள் நடக்க, கூட்டம் நெரிசலாக இருக்க, துர்க்காவை ஆண்கள் சிலர் உரசுவது போல் வரவும்

“ஏய் சாரை பாம்பு! இந்த பக்கம் வா…” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன் கை வளைவில் விட்டவன், அவளை தொடாமல் தன் கைக்குள்ளாகவே பாதுகாப்பு போல் கூட்டத்தை விலக்கிவிட்டு ராட்டினம் சுற்றும் இடத்திற்கு அழைத்து வந்தான்.

பாதுகாக்கின்றேன் என்று அவன் அவளை அதிகப்படியாக நெருங்காமல் கண்ணியம் காத்தது அன்றைய துர்க்காவிற்கு உணர முடியவில்லை. இன்றைய துர்க்காவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அதே நேரம் அவன் விளையாட்டிற்கு கேட்ட கேள்வியும், இவள் யோசிக்காமல் கூறிய வார்த்தைகளும் நினைவு வர அன்றைய செயலுக்கு இன்று தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

*******

ராட்டினம் ஏற்கனவே சுற்றிக்கொண்டு இருக்க சுற்றி முடியும் வரை அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு துர்க்கா நிற்க, பரணி அப்போதுதான் துர்க்காவை பார்த்தான்.

சிகப்பு நிற பாவாடை ஜாக்கெட்டுக்கு வெள்ளை நிற தாவணி அணிந்து, தங்க நகைகள் அணிந்து, அவள் நீண்ட முடியை பின்னி கனகாம்பரம் பூச்சரம் சூடி, தங்க பதுமை போல் ஜொலித்தாள்.

தாவணி பாவாடையில் அவளை முதல் முறை பார்க்கின்றான். அவளும் அப்போது சிவா சொன்னதற்காக தான் சடங்கிற்கு எடுத்த தாவணியை இரண்டாவது தடவையாக கட்டி வந்திருந்தாள்.

இப்போதும் சிவாவை தான் விழிகளால் தேடிக் கொண்டிருக்கின்றாள். “ஓய் சாரப்பாம்பு! தனியா வந்திருக்க.. அஞ்சுவ கூப்பிடலலையா…?” என்று பரணி கேட்க

“அவள் அவ தங்கச்சியோட கடை சுத்தப் போறா.. நான் ஏற்கனவே சுத்திட்டேன்.. அதுவும் இல்லாம அவளுக்கு ராட்டினம் சுத்த பயம் உங்களுக்கு தெரியாதா?…” என்று கேட்க

“தெரியும்.. சரி அஞ்சு உன்ன தேடி உங்க வீட்டுக்கு வார.. நீ அவள தேடி எங்க வீட்டுக்கு வந்ததில்லையே ஏன் …?”

“வரணும்னு யோசிப்பேன்.. ஆனாலும் ஒரு மாதிரி இருக்கும்…” என்று துர்க்கா சொல்ல

“என் வீட்டுக்கு வர உனக்கு என்ன சங்கோஜம்?…”

“தெரியல ஏதோ ஒன்னு…”

“அப்படி என்ன தயக்கம்.. நேரா கிளம்பி வர வேண்டியதுதானே…” என்று பரணி சொல்ல

“ஆமா நான் உங்க வீட்டு மருமக என் வீடுதானேனு உரிமையா வாரத்துக்கு…” என்று சிவாவை பார்வையால் தேடிக்கொண்டு என்ன சொல்கின்றோம் என்று புரியாமல் சொல்ல

பரணியும் அவளின் பேச்சுக்கு விளையாட்டாக “நீ சரின்னு சொல்லு.. இப்பவே அம்மன் கழுத்துல இருக்கிற தாலிய கழட்டி உன் கழுத்துல கட்டி என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போறேன்…” என்று சொல்ல

அவன் கூறியதைக் கேட்டவள் “எனக்கு என்ன பைத்தியமா.. ஊரையே கூட்டி மண்டபத்துல தாலி கட்டிக்க வேண்டிய நான் கோயில்ல, அதுவும் உங்க கையால தாலி கட்டிக்க.. உங்களுக்கும் எனக்கும் என்ன பொருத்தம் இருக்குனு இப்படி சொல்றீங்க…” என்று பொரிந்து தள்ள

பரணிகோ விளையாட்டுக்கு சொன்னதுக்கு பொருத்தம் என்ற அளவிற்கு துர்க்கா தாழ்த்தி பேசியது சுருக்கென்று இருந்தது.

அவள் சொன்ன பொருத்தம் என்னவோ நண்பர்கள் கூறிய சிவா துர்க்கா பெயர் பொருத்தம் தான். முருகானந்தம் போல் பணம் வசதி பார்த்து இருந்தால் ஏழையான சிவாவை நம்பி வீட்டை விட்டு சென்றிருக்க மாட்டாளே.

அதேபோல் திருமணம் என்றால் அவளுக்கு ஆடம்பரமாக செய்வதுதான். அவள் சடங்கானதற்கே மண்டபத்தில் திருவிழா போல் அல்லவா விழா எடுத்தனர். அதை வைத்து தான் சொன்னாள்.

ஆனால் கேட்டவன் மனதில் அது ஆழமாக பதிந்து போனது. “ஏய் நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்…” என்றான் கசங்கிய முகமாக

அவள் அதை கண்டு கொள்ளவில்லை “ராட்டினம் சுத்தி முடிஞ்சு…” என்றவள் சென்று ராட்டினத்தில் ஏறிக்கொண்டாள்.

என்ன இருந்தாலும் சிறு பெண்ணிடம் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று தன்னையே நொந்து கொண்டு பரணி நின்று இருக்க,

அவ்விடம் பிரபாகரன் வந்து சேர்ந்தான். அவனை விட்டுவிட்டு “நீ பாத்துக்க பிரபா, சித்தப்பா வர சொன்னாங்க நான் போய் பாத்துட்டு வாரேன்…” என்று சென்றுவிட்டான்.

*****

பரணி துர்க்காவிடம் விளையாட்டாக பேசியது அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்த கார் டிரைவரின் காதில் கேட்டு விட, அதை அவன் அப்படியே சென்று முருகானந்தத்திடம் ஒப்பித்து விட, திருவிழா முடிந்த மறுநாளே அதே டிரைவரை அனுப்பி பரணியை தனது மாந்தோப்பிற்கு அழைத்து வர சொல்லி இருந்தார் முருகானந்தம்.

“என்னடே என் பையனோட பழகுறத நிப்பாட்ட சொன்னதுக்கு அவன் எனக்கு நண்பன் மட்டும் தான்னு சொன்ன.. ஆனா நீ பண்றது எல்லாம் பாத்தா என் பையன வெச்சே என் பொண்ணு மனச கலைச்சு என் வீட்டுக்கே மருமகனா வந்துடலாம்னு திட்டம் திட்டுறயோ…!” என்று ஆக்ரோஷமாக கேட்க

“ஐயா அப்படி எதுவும் இல்ல.. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சு கிட்டு இருக்கீங்க.. நான் விளையாட்டா தான் துர்க்கா கிட்ட பேசிட்டு இருந்தேன்…” என்று தன்மையாகவே சொல்ல

“எது தப்பாவா! நீ திருவிழாவுல வச்சு என் பொண்ணு கிட்ட கல்யாணத்த பத்தி பேசுனத காதால கேட்ட சாட்சி இருக்கு.. என் பொண்ணு கிட்ட உனக்கு என்ன விளையாட்டு பேச்சு வேண்டி இருக்கு.. நீ விளையாட்டுக்கு பேசுனதோட விபரீதம் என்னனு நாளைக்கு பாப்ப.. அதுக்கு பிறகாவது அடங்கி இருந்தா உசுரு தப்பிக்கும்.. இல்ல முதல் பழியே நீ தான்…” என்று மிரட்ட

‘ஐயோ! நாளைக்கு என்ன செய்ய போறாரோ!…’ என்று பதறிய பரணி தன்னிலை விளக்கம் குடுக்கும் முன் பிரபாகரன் அங்கு வர, மகன் முன் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாத முருகானந்தம்

“இந்தாரு இது எதுவுமே என் மகனுக்கு தெரியக்கூடாது.. இடத்த காலி பண்ணு…” என்று அதட்ட

பரணி பிரபாகரனை பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்துக் கொள்ள, “என்னாச்சுப்பா.. பரணி இங்க?…” என்று பிரபாகரன் கேட்க

“அது ஒன்னும் இல்ல.. அவங்க பண்ணை மாடு எல்லாம் நல்லா இருக்கானு விசாரிக்க கூப்பிட்டேன்…” என்று பரணியை கண்களில் கண்டிப்போடு பார்த்து சொல்ல

“என்னது மாட்ட விசாரிக்க கூப்பிட்டீங்களா?…” என்று சந்தேகமாக பிரபாகரன் கேட்க

“அட அது ஒன்னும் இல்ல பிரபா.. இப்போ புது வியாதி மாட்டுக்கு எல்லாம் பரவுது.. அதுதான் இவன் வீட்ட தான் நிறைய மாடு இருக்கு அதுகளுக்கு ஏதும் வியாதி வந்திருக்கான்னு கேட்டுட்டு இருந்தேன்…” என்று சூசகமாக முருகானந்தம் கூறியது இரு இளைஞர்களுக்கும் புரியவில்லை.

“அது தான் பிரபா.. ஐயா விசாரிச்சிட்டு இருந்தாங்க…” என்று சொன்ன பரணியும் நண்பனின் முகத்தை பார்க்காமல் தோப்பை விட்டு விறுவிறுவென்று வெளியேற, போகும் பரணியை யோசனையாக பார்த்துக் கொண்டே நின்றான் பிரபாகரன்.

நாளை விபரீதம் நடக்கும் என்று முருகானந்தம் சொல்லி இருக்க, என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்த பரணிக்கு அடுத்து வந்த நாட்களில் எதுவும் நடக்கவில்லை.

அவனும் பிரபாகரிடமிருந்து மொத்தமாக விலகி இருக்க, தனது விலகல் தெரிந்து கொண்டு முருகானந்தமும் தனித்து விட்டார் என்று அவன் நினைத்திருக்க,

அப்போதுதான் தாய் தந்தையுடன் சித்தி வீட்டிற்கு சென்றிருந்தவனுக்கு செய்தி வந்திருந்தது அவனது மாட்டுப் பண்ணை தீப்பிடித்து எரிவதாக.

அதைக் கேள்விப்பட்டு பதறி அடித்துக் கொண்டு, வாடகை காரை எடுத்துக் கொண்டு ஊருக்கு வரும்போது தான் விபத்து ஏற்பட்டது.

அன்று முருகானந்தம் மாடுகளை பற்றி பேசியதும் இன்று மாட்டு பண்ணை எரிந்ததும் ஒரே புள்ளியில் இணைந்தது.

பரணி விபத்திற்கு உள்ளான அன்று தான் துர்க்காவின காதல் விவகாரம் தெரிய வந்து அடுத்த நாளே அவளும் வீட்டை விட்டு சிவாவுடன் சென்றதும்.

அதன் பிறகு பரணியின் வாழ்க்கையும் திசை மாறியது, பிரபாகரனின் வாழ்க்கையும் தங்கையை தேடி திசை மாறியது.

இதற்கு இடையில் நண்பனின் நிலை தெரிந்து பார்க்க வந்தவனிடம் பரணியோ “நான் உயிரோட இருக்க வேணும்னு நினைச்சா என்ன விட்டு விலகியே இரு…” என்று முக்தை கூட பார்க்காமல் கட்டளையாக சொல்லி விட

முதலில் எதுவும் புரியாத பிரபாகரனுக்கு பரணியின் மாட்டு பண்ணையை எரித்தது தந்தை தான் என்று தெரிய வந்தது.

உடைந்தே போனான். தன் தந்தை ஏன் இதை செய்ய வேண்டும் அவரின் இந்த கோர முடிவால் அவன் நண்பன் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றானே என்று மனது வெம்பியது.

அதற்கான விடையாக பிரபாகரன் மறைமுகமாக பரணியின் சிகிச்சைக்கு உதவி செய்ய முயன்ற போது “பிரபா நம்ம நண்பர்கள கூட நம்ம தகுதிக்கு ஏத்த போல தான் இருக்கனும்.. உன் கூட வரம்பு மீறி பழகுனதுக்கு தான் அவன் பண்ணைய எரிச்சேன் அவன் விலக்கிட்டான் நீ அவனேயே புடிச்சிட்டு தொங்காத.. சேதாரம் அவனுக்கு தான்…” என்று நேரடியாகவே சொல்லி விட

“நீங்க எல்லாம் மனுஷனா.. நீங்க செஞ்ச ஒரு செயலால ரெண்டு உயிர் போயிருக்கு.. அத பத்தி கொஞ்சமும் கவல படாம இப்போ உங்களாள கஷடப்படுற அவனையும் ஏதாவது பண்ணுவேன்னு சொல்றீங்க…” என்று எகிறி பாய முருகானந்தம் மகனை கண்டு கொண்டாதாக தெரியவில்லை.

ஆனால் பிரபாகரனுக்கு நன்கு தெரியும் கௌரவம் என்னும் சொல்லுக்காக தந்தை எது வேண்டுமானாலும் செய்வார் என்று,

அவரை எதிர்த்து நல்லதை பாடம் புகட்ட முடியாத சூழ்நிலையில் தள்ளி விட்டு சென்று விட்டாள் அவன் தங்கை.

எனவே தன்னால் தன் நண்பனுக்கு நடந்தவை போதும், எந்த ஒரு தீங்கும் இனிமேல் நிகழ வேண்டாம் என்று எண்ணி பரணியை விட்டு மொத்தமாக விலகிக் கொண்டான்.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 11

  • Gayathri Sgh

    Apo அந்த விபத்தும் முருகானந்தம் தான 😡😡. இப்படி ஒரு குடுப்பதையே அழிச்சிடு ஏதும் செய்யாத மாறி பேசுறாரு 😡.. அப்போ துர்கா னால தான் பழனிக்கும் இப்படி ஆயிருக்கு அந்த விஷயம் அவளுக்கு theriyuma🤔

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!