Skip to content
Post Views: 244
அத்தியாயம் 12
பரணியை விட்டு விலக முடிந்த பிரபாகரனால் அஞ்சனாவை விலக்கி வைக்க முடியவில்லை.
Advertisement
பரணிக்கு விபத்து நடந்த பின்னர் அஞ்சனா தனது ஊருக்கே தாய் தங்தையுடன் சென்று விட்டாலும், உற்ற தோழி என்ன ஆனாள் என்ற எண்ணம் நெஞ்சை வாட்ட, பிரபாகரனின் ஊருக்கு வந்து மாரியம்மன் கோயிலில் காத்திருப்பாள்.
அஞ்சனாவிற்குமே துர்க்காவின் செயல் அதிர்ச்சி தான். ஏனென்றால் காதல் என்ற வார்த்தையை பற்றி பெரிதாக இருவருமே பேசிக் கொண்டது கிடையாது.
Advertisement
Advertisement
மற்ற தோழிகள் சிவாவின் பெயருடன் அவள் பெயரை இணைத்துக் கூறும் போது, அஞ்சனாவும் இதையெல்லாம் மனதில் ஏற்றுக் கொள்ளாதே என்று எடுத்துரைத்திருக்கின்றாள்.அதையும் மீறி தன் தோழி எப்படி காதலில் விழுந்தாள்.
அதுவும் காதல்!. அவளும் 14 வயது சிறுமி தானே அந்த வார்த்தைக்கு அர்த்தமே புரியவில்லை. எதற்காக வீட்டை விட்டு சென்றாள் என்பது மட்டுமே மனதில் உறுத்திக் கொண்டிருக்க,
Advertisement
சென்றவள் பத்திரமாக இருக்கின்றாளா எந்த இன்னல்களும் அவளுக்கு நேர்ந்திடவில்லையே என்பது தெரிந்தாக வேண்டும் என்று மனது துடித்தது.
எனவேதான் ஒருமுறை பிரபாகரனை சந்தித்து அவள் எப்படி இருக்கின்றாள் ஏதும் தகவல் கிடைத்ததா என்று கேட்க,
அவனும் தெரியவில்லை என்று முகம் வாட சொல்ல, ஏதாவது தகவல் தெரிந்தால் உடனே தனக்கு தெரிவிக்குமாறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாகவும் கூறினாள்.
அதேபோன்று ஒவ்வொரு வெள்ளியும் மாரியம்மன் கோயிலின் பின்னால் உள்ள வேப்பமரத்தடியில் காத்திருப்பாள்.
தங்கையை தேடி அலைந்து ஓய்ந்து போய் இருக்கும் பிரபாகரனுக்கு, அஞ்சனாவை பார்த்து அவளுக்கு தகவல் கூறும் போது அவள் சொல்லும் “கவலைப்படாதீங்க.. நல்ல சேதி கூடிய சீக்கிரம் கிடைக்கும்…” என்ற அந்த ஒரு ஆறுதல் அவனுக்கு ஏதோ புது தெம்பை அளிக்கும்,
மீண்டும் உற்சாகமாக தங்கையை தேடுவான். இப்படியாகத்தான் நாட்கள் ஓடி துர்க்கா மீண்டும் கிடைத்தது.
*****
துர்க்கா கிடைத்த பின்னர் அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை. துர்க்காவை எந்த நிலையில் பார்த்தனர், அவள் பட்ட இன்னல்கள் அனைத்தும் அவன் ஒன்று விடாமல் சொல்ல
பிரபாகரன் மனதில் அழுத அழுகைக்கு சற்றும் குறையாத கண்ணீரை கண்கள் வீங்கும் வரை வடித்தாள் அஞ்சனா.
அன்று பிரபாகரன் மனதில் இருந்த அவள் மீதான ஈர்ப்பு இன்னும் கொஞ்சம் ஆழமானது. அதன் பிறகு ஒவ்வொரு வெள்ளியும் என்று இல்லாமல், மாதம் ஒரு முறை கடைசி வெள்ளியில் அவனை வந்து சந்திப்பதாக கூறினாள்.
துர்க்கா கிடைத்து விட்டாலும் சீர்திருத்த பள்ளியில் இருக்கின்றாள் என்பது மன வருத்தம் என்றாலும் பத்திரமாக இருக்கின்றாள் என்பது நிம்மதியை தந்திருந்தது. இருந்தும் கலங்கி நின்ற பிரபாகரனை அப்படியே விட அஞ்சனாவிற்கு ஏனோ மனது வரவில்லை.
அவன் அடிக்கடி கூறும் வார்த்தை “உன்கிட்ட மனசுல உள்ளதெல்லாம் சொல்லும்போது தான் கொஞ்சம் லேசா இருக்கு.. இல்லனா மூச்சு முட்டியே எப்போவோ செத்து இருப்பேன்…” என்பான். அவன் மன ஆறுதலுக்கு, தான் துணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினாளோ என்னவோ மாதம் ஒருமுறை வந்து அவனை சந்திப்பாள், துர்க்காவை பற்றி விசாரிப்பாள்.
பிரபாகரனும் தங்கையை சென்று பார்த்திருந்தால் சொல்லுவான், இல்லை என்றால் அவளைப்பற்றி அவள் படிப்பை பற்றி விசாரிப்பான் . அப்படியே நாட்கள் ஓடி வருடங்கள் கழிய துர்க்காவும் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
******
அஞ்சனாவிற்கும் அப்போது பதினெட்டு வயது அல்லவா, தாவணி பாவாடையில் தோகை மயிலாக அழகாக இருப்பாள்.
துர்க்காவை சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தாலும், பரணி ஏன்கனவே பிரபாகரனை சந்திப்பது தெரிந்து கண்டித்து இருக்க, முருகானந்தத்தை பற்றிய முழு விபரமும் சொல்லி இருக்க, வீட்டிற்கு சென்று பார்க்க தோன்றவில்லை, எனவே பிரபாகரனிடம் துர்க்காவை கோயிலுக்கு அழைத்து வரும்படி கேட்டாள்.
ஆனால் துர்க்காவோ சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்ததில் இருந்தே ஒரு மாதிரியாக இருக்கின்றாள். எதிலும் பற்று இல்லாதவள் போல் விசித்திரமாக நடக்கின்றாள். ஏதாவது பிரபாகரன் கேட்டாலும் எனக்கு பிடித்தது போல் இருக்கின்றேன் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி விடுகின்றாள்.
ஆனாலும் தங்கையின் நடவடிக்கையில் ஏதோ நெருடல் இருக்க, சரி தன் தோழியிடமாவது மனது திறந்து பேசினால் நல்லது தானே என்று எண்ணியவன் அஞ்சனா அவளை பார்க்க விரும்புவதாக கூற,
ஒரு நொடி மலர்ந்த முகம் மறு நொடியே மாறிவிட “இல்லண்ணா நான் யாரையும் பாக்க விரும்பல.. தயவு செஞ்சு என்ன தொந்தரவு பண்ணாதீங்க…” என்று தீர்க்கமாக சொல்லி விட்டாள்.
துர்க்காவின் பதிலை தெரிந்து கொண்ட அஞ்சனாவிற்கு கவலையாக இருந்தாலும், துர்க்காவின் மனநிலையை புரிந்து கொள்ள கூடியதாகவும் இருந்தது .
வாழ்க்கையின் இன்னொரு கோர முகத்தை பார்த்தவர்கள் தன் மீது அன்பு செலுத்துபவர்களிடம் இருந்து விலகி நிற்கவே விரும்புவார்கள்.
யார் கண்ணிலும் படாமல் எங்காவது மறைந்துவிடத்தான் தோன்றும். அதிலும் துர்க்கா அனுபவித்த கஷ்டங்களும் வேதனைகளும் சொல்லில் அடக்கி விட முடியாதே.
எனவே இன்னும் கொஞ்சம் நாட்கள் போகட்டும் என்று “துர்க்காக்கு விருப்பம் இல்லனா வேணாம்.. ஆனா ஃபோன்ல என் கூட பேச சொல்லுங்க…” என்றாள் கண்களில் ஏக்கத்தை தேக்கி
“சரி வீட்டுக்கு போய் ஃபோன் போட்டு கொடுக்கேன்.. உன் ஃபோன் நம்பர் குடு…” என்று அப்போதுதான் அஞ்சனாவின் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான்.
தன் ஃபோனில் அவள் நம்பரை சேமிக்கும் போது (அஞ்சு..) என்று டைப் செய்தவன் ஒரு நொடி விழிகளை மலர்த்தி அவளைப் பார்த்தான்.
தாவணி பாவாடையை சாரியில் தேய்த்துக் கொள்வாள் போலும், பாசிப்பருப்பு பச்சை வண்ணத்தில் மெல்லிய தங்க கோடுகளால் கட்டம் போட்ட பாவாடை ஜாக்கெட்டுக்கு, நாவல் பழ நிறத்தில் கட்டம் போட்ட தாவணி சற்று வித்தியாசமாக இருந்தாலும் அவளுக்கென்று வடிவமைத்ததை போன்று கச்சிதமாக இருந்தது.
இவனுக்கு ஃபோன் நம்பரை சொல்லிவிட்டு சற்று தொலைவில் ஆனந்த கூச்சலிட்டுக்கொண்டு ஓடும் ஆற்றை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆற்றங்கரை காற்று வந்து அவள் ஆடை களைத்து விளையாட, இடை விலகிய தாவணியை இழுத்து விட்டு கொண்டிருந்தாள்.
பிரபாகரனுக்கு ஏற்கனவே அவள் மீது நேசம் துளிர்விட்டு, இலை விரித்து, கிளை பிரிந்து, ஓங்கி வளர ஆரம்பித்து இருக்க, பதினெட்டு வயதில் பருவமங்கையாக இருக்கும் அஞ்சனா மீது 26 வயது வாலிபனுக்கு காதல் வரவில்லை என்றால் தான் அதிசயம்.
அவனும் எவ்வளவோ மனதை அடக்க முயன்று விட்டான், முடியவில்லை. தன் முன் நிற்பவள் தன்னைவிட எட்டு வயது சிறியவள் என்பதை தவிர வேறு எந்த தயக்கமும் அவனுக்கு இல்லை.
அதையும் இன்று ஏனோ அவள் எழில் வனப்புகள் குழி தோண்டி புதைத்து இருக்க, கொஞ்சும் குமரி அவளை மாங்கல்யம் சூட்டி மணவாட்டி ஆக்கிவிட மனதில் முடிவெடுத்து விட்டான்.
கண்களில் ரசனையுடன், உதட்டில் மெல்லிய புன்னகையுமாக அவளை ஆழ்ந்து பார்த்தான். உதடுகள் தானாக முணுமுணுத்தது “என் செல்லம்மா…” ஃபோனிலும் அஞ்சு என்ற பெயரை அழித்துவிட்டு செல்லம்மா என்று பதிவு செய்து கொண்டான்.
ஃபோனை பாக்கெட்டில் வைத்தவன் பார்வை அவளை ரசனையாக தழுவியது. அவள் இழுத்து விடும் தாவணியை பார்த்தவன் ‘பெருசா இடுப்பு தெரியலையே.. இழுத்து ஊசி குத்தி வெச்சி இருக்கா.. அப்புறம்…’ என்று நினைத்தவன் கண்கள் மேலேற அப்போதுதான் புரிந்தது, அவளின் செயலுக்கான விளக்கம்.
பார்வையை திருப்பி தலையை கொத்திக் கொண்டவன் இதழ்களில் வெட்க புன்னகை. அவளின் மற்றைய பக்கம் வந்து நின்றவன் “க்கும்…” குரலைச் செரும, அஞ்சனாவும் அவன் முகம் பார்த்தாள்.
இப்பொழுது தான் அப்பாடா என்று இருந்தது. மாராப்பு போடும் பக்கம் அவன் நின்றதால் சட்டென காற்றின் வேகம் கூட, காற்றில் தள்ளாடிய முந்தானையை இழுத்து இடையில் சொருகவோ, இல்லை அவனுக்கு மற்ற பக்கம் போய் நிற்கவோ முடியவில்லை.
என்னதான் ஒரு பெண்ணாக அவஸ்தையாக இருந்தாலும் அவள் அவ்வாறு செய்தால் அவனை, அவன் பார்வையின் கண்ணியத்தை குற்றம் சொல்வது போல் ஆகிவிடும் என்று தான் அப்படியே நின்றாள்.
அதை புரிந்து கொண்டவனாக பிரபாகரன் அவளின் வலது பக்கம் வந்து நிற்கவும், ஆசுவாசமானாள்.
“சரி உன் அண்ணன் என்ன பாக்க கூடாதுன்னு சொல்லலையா?.. என் அப்பாவ பத்தி.. நானும் அவனும் ஏன் பிரிஞ்சோம்னு சொல்லலையா?…” என்று கேட்க
“அண்ணா எல்லாமே சொன்னாரு.. உங்க அப்பா பத்தியும் கூட.. உங்களையும் துர்க்காவையும் பாக்க கூடாதுன்னு சொன்னாரு…” என்று சொல்ல
“அவன் சொன்னத ஏன் கேட்கல.. அவன் பேச்ச மீறி எதுக்கு என்னுலயும் என் தங்கச்சி மேலே இவ்வளவு பாசம்…” என்று கேட்க
“தெரியல.. உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்.. அது எல்லாத்துக்கும் மேல எனக்கு எதுவும் ஆகாம நீங்க பாத்துப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு…” என்று சொல்ல
அவள் வார்த்தையும், அதில் இருந்த நம்பிக்கையிலும் பிரபாகரனுக்கு நெஞ்சு முட்டியது, சந்தோஷம் தாள முடியவில்லை. அவன் நண்பன் தன் மீது வைக்காத நம்பிக்கையை தன்னவள் வைத்திருக்கிறாள் என்ற பெருமிதம்.
இந்த நொடியே அவளை இறுக அணைத்து இன்பமான தருணத்தை அனுபவிக்க ஆசைதான். ஆனால் இருக்கும் இடம் கோயில் பின்புறம் என்பதால் அவள் ஒற்றை கையை பற்றிக் கொண்டான்.
சுளகு போன்ற அவனின் விரிந்த கைகளுக்குள் அவள் ஒற்றை பூங்கரம் சிக்கிக் கொண்டதும், உடல் சிலிர்த்து அடங்கியது. அடி வயிற்றில் ஆயிரம் பூஞ்சிட்டுக்கள் படபடவென சிறகு வரித்து பறக்க, விழிகள் நர்த்தனமாட அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
அந்த நொடி, அந்த நொடியே அவன் காந்த கண்களில் கட்டுண்டு நின்றாள் கோதை அவள் .
அவனோ அவள் பட்டாம்பூச்சி விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் “கடைசி வரைக்கும் இதே நம்பிக்கைய என் மேல வச்சு.. என் கைகோர்த்து வருவியா.. நீ இருந்தா போதும் செல்லம்மா என்னால எந்த துன்பத்தையும் தாங்கிக்க முடியும்.. ஏன்னா இந்த உலகத்துல எங்கயுமே கிடைக்காத ஒட்டுமொத்த சந்தோஷமும் உன் கிட்ட தான் இருக்கு.. எனக்கே எனக்கா நீ இருப்பியா…!” என்று அவன் காதலை யாசிக்க அந்த கன்னியால் எப்படி மறுக்க முடியும்.
அவளுக்கு அவன் மீது எப்போதோ பைத்தியம் பிடித்து விட்டதே. கோயிலினுள் நுழையும் போதே, ஒற்றைக் காலால் வேஷ்டியின் நுனியை தூக்கி, லாவகமாக வலது கையில் பிடித்துக் கொண்டு தோரணையாக அவன் கோயில் மணலில் நடந்து வருவதை கண்கொட்டாமல் எத்தனை நாட்கள் ரசித்து இருக்கின்றாள்.
ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் கூட அவள் அவனை கண்டுகொண்டு கண்ணோடு கண் கலக்கும் போது அவளுள் ஏற்படுமே ஒரு சிலிர்ப்பு அதை வார்த்தைகள் கொண்டு விவரித்து விட முடியாது.
தன் நெஞ்சோரமாக அவன் மீது உள்ள நேசத்தை பதுக்கி வைக்க முடியாமல் அவள் திணறிய நாட்கள் அவளுக்கு தான் தெரியும்.
இது வயதில்லை என்று தன்னை தானே அவள் கடிந்து கொள்வாள். இப்போது அவனே வாய் விட்டு கேட்ட பின்னர் தயக்கம் என்ன ,
தன் மனதை உரைக்க போகும் படபடப்பில் அவள் இதயம் தாறுமாறாக துடிக்க, அந்த துடிப்பு அவள் கையிலும் தெரிய,
அவன் கைக்குள் சிறைப்பட்டிருந்த அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி அவன் மீது இருக்கும் அவள் காதலை சொல்வதற்கு கூட, அவன் தைரியம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.
நாதம் வருவேனா என்றது சங்கு தொண்டையில் இருந்து “ம்ம்.. இருப்பேன்…” என்றாள் எங்கே வார்த்தைக்கு வலிக்குமோ என்று.
அவள் மூச்சுக்காற்றின் ஓசை கூட அவன் காதுக்கு கேட்குமே, அவள் கூறியதும் கேட்டது. இருந்தும் கொஞ்சமாக தலையை சரித்து காதை திருப்பி “இல்ல கேட்கல…” என்றான் மென் புன்னகையுடன்.
அவன் செயலில் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, கன்னங்கள் இரண்டும் சிவந்து ஜொலிக்க, “இருப்பேன்.. உங்க கூடவே இருப்பேன்…” என்றாள்
அழுத்தி…
நிறுத்தி…
ஆசையாக…
காதலாக…
அவன் கைகளில் இருந்த அவள் ஒற்றை கையை எடுத்து, தன் இடது நெஞ்சில் வைத்தவன் “தேங்க்ஸ் செல்லம்மா.. இது போதும்.. காலத்துக்கும் நீ மட்டும் போதும்.. எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குவேன்.. என்கூட இரு…” என்று சொல்ல
இமை மலர்த்தி, அவன் விழிகளுடன் தன் நயனங்களை கலக்க விட்டவள், சரி என்ற வகையில் தலையை ஆட்டி “செல்லம்மா நானா?…” என்று கேட்க
அழகாக இதழ் பிரித்து சிரித்தவன் “ஆமா.. என் செல்லம்மா.. எனக்கே எனக்கான செல்லம்மா…” என்று ஆசையாய்…
காதலாய்…
தாபமாய்…
ஏக்கமாய்…
சந்தோஷமாய்… சொல்ல
என் செல்லம்மா என்றதில் உள்ளங்கால் வரை உச்சந்தலை முதல் ஜிவ் என்ற உணர்வு ஓடி மறைய, முகத்தை திருப்பிக் கொண்டு “சரி நான் கிளம்பட்டுமா?…” என்று கேட்க
“அது என்னடி.. நான் ஆசையா செல்லம்மான்னு சொல்றேன்.. நீ மொட்டையா கிளம்பட்டுமானு சொல்ற.. என்ன தெரிஞ்ச நாள் வச்சு வாங்க போங்கன்னு தான் கூப்பிடுற.. ஆசையா ஏதாவது சொல்லி கூப்பிடலாமே…” என்று ஏக்கமாகவும் எதிர்பார்ப்புடனும் கேட்க
“அது.. அது எப்படி.. சட்டுனு…” என்று அவளுக்குள்ளாகவே முணுமுணுக்க
அவனோ “ஓய் செல்லம்மா!….” என்று கசிந்துருகும் குரலில் அழைக்க,
அவன் முகத்தை அவள் பார்க்க “ஐ லவ் யூ செல்லம்மா!.. நான் இருக்கேன்.. என் கண்ண பாத்து நீயும் உன் காதல சொல்லு…” என்று ஹஸ்கி குரலில் அவன் கேட்க
அவன் குரலின் வசியமோ
இல்லை அவன் கண்களின் வசியமோ இல்லை அவன் காதலின் வசியமோ
“ஐ லவ் யூ மாமா!…” என்றது அவள் செவ்வளரி இதழ்கள்.
அவள் காதலைச் சொன்ன மகிழ்ச்சியில் ஒற்றை கையை எடுத்து அவள் கன்னத்தை தொட போக, அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டவள் “நேரமாச்சு மாமா.. ஃபோன் பண்ணுங்க அடுத்த வெள்ளி பாக்கலாம்…” என்று சொன்னவாறு தாவணி காற்றில் பறக்க ஓடி சென்றாள். அன்றிலிருந்து காதலில் கசிந்துருகும் நாட்களானது அவர்கள் இருவருக்கும்.
error: Content is protected !!
பிரபா love சொன்ன விதம் சூப்பர்…
அஞ்சனா மனசுல பிரபா இருந்ததுனாலதான் இவளோ நாள் அவனை தேடியும் வந்து பேசியிருக்க…
👌😍❤️❤️❤️❤️