Skip to content
Post Views: 71
தினமும் இரவு மகள் சீதாவிடம் பேசிவிடுவாள் ராதா. இங்கே ஜானகிக்கு பார்த்த வரன்களை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தவள் இன்று மதியம் வந்தவர்கள் பற்றியும் சொல்லி, “என்னவோ இவ அவ்ளோ கலகலப்பா இல்லன்னு அந்த பையன் யோசிக்கிறானாம். இவ எப்போதுமே யாருகிட்டேயும் அதிகம் பேசவும் மாட்டா.ஒட்டவும் மாட்டா. கல்யாணம் ஆன பிறகும் புகுந்த வீட்டுல இப்படியே இருந்தா என்ன செய்ய?அவங்க நம்மை தானே சொல்லுவாங்க…”என்று மகளிடம் புலம்பினாள் ராதா.
“ம்மா..புலம்பாதே. அவளுக்குன்னு ஒரு குடும்ப வாழ்க்கை அமைஞ்சா அதை அவ நல்லாவே ஹாண்டில் பண்ணுவா.அந்த பையனுக்கு இவளை பிடிக்காம போனா,அதுக்கு நம்ம வீட்டு பொண்ணை குறை சொல்லிவியா? அவளுக்குன்னு பிறந்தவன் வருவான்.அவனுக்கு இவளை அப்படியே பிடிக்கும். மத்தவங்களுக்காக நம்மை மாத்திக்கவும் கூடாது”என பெற்றவளிடம் சொல்லிக் கொண்டிருந்தவளின் மனதில் தான் மட்டும் என்ன…அம்மாவுக்காக,அவளது விருப்பங்களுக்காக எவ்வளவு விட்டு கொடுத்துக்கொண்டிருக்கிறோம் ‘என்று மருகியது மனம். மனதின் வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள்.இன்று வரை இவள் வாழும் வாழ்க்கை,செய்யும் வேலை எல்லாம் அம்மாவின் ஆதிக்கத்தில் தானே!
இவளது வார்த்தைகளை கேட்ட ராதாவுக்கு கொஞ்சம் கோவம்தான். “என்னவோ சொல்லு. பொண்ண பெத்தா தானே அதோட பயம் புரியும். சரி,உனக்கு சாப்பாடு செஞ்சுக்கிட்டியா?வேலை எப்படி இருக்கு இன்னிக்கு? ஒருவேளை ஜானுவுக்கு கல்யாணம் தகைஞ்சுடுச்சுன்னா ,பொழுதோட வந்து சேருடி . அவ எந்த ஹெல்பும் பண்ண மாட்டா.”என்று அன்றைய பேச்சை முடித்துக் கொண்டாள் ராதா. அம்மாவின் பேச்சை கேட்ட சீதாவின் மனதில்,’திருந்தவே மாட்டாங்க’ என்றுதான் ஓடியது. அம்மா சொல்வதும் சரிதான். அக்கா இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று யோசித்துக்கொண்டே வேலைகளை கவனிக்க சென்றாள் .
சனிக்கிழமை அன்று காலையில் வழக்கம் போல மருத்துவமனைக்கு கிளம்பி சென்றாள் ஜானகி. காலையில் சென்றவுடனேயே வேலை அவளை சுருட்டிக் கொண்டது. முதல்நாள் இரவு அறுவை சிகிச்சை முடிந்து கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகளின் பட்டியல் வந்திருந்தது. எக்ஸல் ஷீட்டில் அவற்றை ஓட விட்டு பார்த்துவிட்டு அவர்களுக்கான டயட் சார்ட்டை தயார் செய்ய ஆரம்பித்தாள். தயார் செய்தவற்றை மேலாளர் கையெழுத்துக்கு அனுப்பிவிட்டு , நோயாளிகளை பார்க்கவென்று மேலே இருக்கும் உள்நோயாளிகள் பிரிவுக்கு சென்றுவிட்டு படி இறங்கி வந்தாள் . இங்கே சேர்ந்தது முதல் இன்று வரை அவள் லிப்ட் உபயோகித்தது இல்லை.அதனாலோ என்னவோ உடல் எடை கூடவில்லை.
Advertisement
இவள் கீழே இவளது இருப்பிடத்திற்கு வரவும் , கொஞ்சநேரத்தில் அவுட் பேஷண்டுகள் மருத்துவரின் அறிவித்தலில் இவளை பார்க்க கையில் பைலை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களது உடல்நிலை பற்றிய குறிப்புகளை படித்துவிட்டு அவர்களுக்கான டயட் சார்ட் தயார் செய்து கொடுக்கவேண்டும். ஒவொருத்தர் உடல்நிலைக்கு தகுந்தவாறு தயாரிக்க வேண்டும்.சிலருக்கு பருப்பு சேர்க்க கூடாது.சிலருக்கு தயிர், சிலருக்கு காரம் என்று உடலுக்கு தகுந்த உணவுகளை குறிப்பிட வேண்டும்.
பெரும்பாலும் டயட் சார்ட் வாங்கி செல்பவர்கள் அதை நடைமுறைபடுத்துவது இல்லை. குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு மருத்துவரை மீண்டும் சந்திப்பது, மருந்துகளை சாப்பிடுவது அதோடு மருத்துவரிடமே ‘நீங்க எழுதி கொடுத்த மருந்து ஒர்க் ஆகலையே டாக்டர்’ என்று புலம்புவது. தீர்வு அவர்கள் சாப்பிடும் உணவிலும் இருக்கிறது என்று சொன்னால் யார் கேட்கிறார்கள்?
இந்த எண்ணங்கள் சமீப காலமாக ஜானகியின் மனத்திலும் எழுகிறது. வேலையை மட்டும் கவனி என்று மனது போட்ட அதட்டலில் அதை மட்டும் செய்கிறாள். முதல் நாள் பெண் பார்க்கவென்று வந்த அந்த பையன் இன்று தனது அம்மாவை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு அவரது ஆலோசனையின் பெயரில் நியூட்ரிஷனிஸ்ட்டை பார்க்கவென்று அழைத்து வந்தான். சத்தியமாக அந்த இடத்தில் அவன் இவளை எதிர்பார்க்கவில்லை என்பது முகத்தின் அதிர்ச்சியிலேயே தெரிந்தது. ஜானகிக்கு மனதின் உள்ளே ஆச்சர்யம். ‘குளோபல் வில்லேஜ் ‘ என்று சொல்லிக் கொண்டாள் . அவனுக்கோ தயக்கம்.அவன் அம்மாவோ ஆச்சர்யத்தை குரலிலேயே காண்பித்து விட்டார்.
Advertisement
” நீ இங்கேயா வேலை பாக்குறம்மா? எவ்ளோ வருஷமாச்சு இங்கே சேர்ந்து…என்றெல்லாம் விசாரணையை அவர் ஆரம்பிக்க இவள் பக்கத்தில் அமர்ந்திருந்த அமர்,’உங்களுக்கு தெரிஞ்சவங்களா ஜானகி?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டார். ‘ஆமாம்’ என்று மட்டும் தலையாட்டிவிட்டு நோயாளியின் பைலில் கவனமானாள் ஜானகி.மறந்தும் தெரிந்தவரை பார்க்கும் பாவனை அவள் முகத்தில் இல்லை. அப்பட்டமாய் முகத்தில் அறை வாங்கிய உணர்வு அந்த பையனுக்கு. இவள் மருத்துவரின் குறிப்புகளை படித்துக் கொண்டிருக்க, அவனோ “ரியலி சாரி. நேத்து ..நா…என்று இழுக்க நிமிர்ந்து பார்த்தவள்,”டோன்ட் செ லைக் திஸ். உங்களுக்கு ஈர்ப்பு வரலைன்னா அதுல என்ன தப்பு? பரஸ்பரம் பிடித்தம் இல்லாம கல்யாணம் செஞ்சுகிட்டு கஷ்டப் படுறதை விட டைரெக்ட்டா நீங்க சொன்னது கரெக்ட் தான். பீல் பண்ணாதீங்க.அண்ட், இது ஹாஸ்பிடல் .பர்சனல் பேச வேணாம். இங்கே நீங்க பேஷண்ட்.அவ்ளோதான்!என்று மெல்லிய குரலில் முடித்துவிட்டாள் .
Advertisement
அவளுக்கு இந்த பையன் மீது நிஜமாகவே எந்த உணர்வுகளும் உருவாகவில்லை எனும் பொழுது எதற்க்காக உருகுவது?அவளுக்கு இந்த பையன் மீது நிஜமாகவே எந்த உணர்வுகளும் உருவாகவில்லை எனும் பொழுது எதற்க்காக உருகுவது? அதற்குப் பிறகு அம்மா,மகன் இருவருமே வாய் திறந்து பேசவில்லை. மருத்துவ குறிப்புகளுக்கு ஏற்ற உணவு சார்ட் தயார் செய்து பிரண்ட் எடுத்து அவர்களின் பைலில் வைத்து ,”இதை கொண்டுபோய் டாக்டர்கிட்டே காண்பித்து கையெழுத்து வாங்கிடுங்க. ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க.எக்ஸ்பிளேன் பண்றேன்.”என்றுவிட்டாள் அவர்களும் மருத்துவரை பார்க்க சென்று விட்டார்கள்.
மறுநாள் ஜானகி விடுப்பு எடுத்துக் கொண்டாள் .யாராவது வந்தாலும் சரி,இல்லையென்றாலும் சரி.இன்று அவளுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. இதுவரை வீட்டுக்கு யாரும் வருவதாக சொல்லவில்லை.நிதானமாக தேங்காய் எண்ணையை லேசாக சூடு செய்து தலைக்கு தடவி மசாஜ் செய்தாள் . சுகமாக இருந்தது. முடியை தூக்கி கொண்டையிட்டு கிளிப் குத்தியவள் தனது அறையை சுத்தப்படுத்தினாள் .அவளது துவைத்து வந்த ஜீன்ஸ் மற்றும் சோர்ட் குர்திக்களை எடுத்து ஐயன் செய்து அலமாரியில் அடுக்கி வைத்தாள் . அடுத்த வாரத்திற்கு தேவையானவற்றை அடுக்கி வைத்தாள் . பிறகு போய் நன்றாக குளித்துவிட்டு வந்தவள் நைட்டிக்குள் புகுந்துகொண்டாள்.
Advertisement
மிளகுக்குழம்பு, பூண்டு ரசம், உருளை காரக்கறி என்று அம்மாவின் இன்றைய மெனு அவளுக்குள் பசியை தூண்ட சாப்பிட வந்துவிட்டாள் . தினமும் அவசரகதியில் விழுங்குவது.இன்று ரசித்து சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி. அவர்கள் வீட்டு அலைபேசி அடித்ததில் ராதா போனை எடுத்து பேசினாள் .
பெண் பார்க்க இன்று மதியம் வரலாமா என்று பையனின் அம்மாவின் குரல் ஒலித்தது. ராதா கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாள் .”தாராளமா வாங்க.பொண்ணு இன்னிக்கு லீவுல தான் இருக்கா. எப்போ வருவீங்க?–ராதா.
எதிர்முனையில் என்ன சொல்லப் பட்டதோ…”ஓஹ் ,சரி. ராகு காலத்துக்கு முன்னால இல்ல…ஆறு மணிக்கு அப்புறமா வாங்க ” என்றுவிட்டு வைத்துவிட்டாள் . சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஜானகிக்கு புரை ஏறியது.அந்த சிஏ வரனா..என்று அம்மாவிடம் கேட்க வேண்டும் போல இருந்தது.ஆனால் அடக்கிக் கொண்டாள் .அம்மா ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவிட்டால் மூடே போய்விடும் என்று எடுத்து சொன்னது அவளது மூளை. கவனிக்காதது போல உணவில் கவனம் வைத்தாள் .
ராதாவே மகளின் அருகில் வந்து ,”இன்னிக்கு வெளியே எங்கேயும் போயிடாதே. உன்னை பொண்ணு பார்க்க வராங்க.எப்போ வருவாங்கன்னு தெரியாது.மதியம் வரலாம்.இல்லைனா ஈவினிங் வர வாய்ப்பு இருக்கு.வரதுக்கு முன்னால போன் பண்ணுவாங்க. நல்ல புடவையா எடுத்து வச்சிக்கோ”என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள் .
லேசாக மனதில் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று இருந்துகொண்டாள். செய்வதற்கு என்று பெரியதாக ஒன்றும் இல்லை. கண்மூடி படுத்துகொண்டாள்.எப்படியும் அவர்கள் வரும்பொழுது தூங்கி எழுந்தால் முகம் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஏதோ யோசனைகள் செய்துகொண்டே உறங்கியவளை இரண்டு மணி சுமாருக்கு ராதா வந்து எழுப்பினாள் .
“டீ, ஜானு எழுந்திரு. மாப்பிள்ளை வீட்டுலேந்து இன்னும் ஒரு மணி நேரத்துல இங்கே வந்துருவாங்க. இப்போதான் போன் வந்துச்சு. சீக்கிரம் தயாராகு.”என்றுவிட்டு எழுப்பிவிட்டு அவசரமாக அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். எழுந்திருந்த பெண்ணுக்கோ முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு நிதானமாக எழுந்தவள் தூக்கம் தள்ள திரும்பவும் படுத்துக்கொண்டாள்.
பெண்ணரசி மீண்டும் உறங்கியது தெரியாமல் அவசரமாக கேசரியும், பஜ்ஜியும் போட்டு ஹாட்கேஸில் எடுத்துவைத்துவிட்டு ஒரு பெரிய பித்தளை பில்டரில் கும்பகோணம் காபிப் பொடியை நன்றாக ஐந்து ஸ்பூன்கள் போட்டு,அதன்மேல் லேசாக சர்க்கரையை தூவி முதலில் கொஞ்சம் வெண்ணீர் விட்டு ,பொடி சமன் ஆனதும் மீண்டும் வெந்நீர் விட்டு டிகாக்ஷன் இறக்கினாள் . வீடே மணத்தது . சூடான காபியின் மணத்தில் ஜானகியின் தூக்கம் கலைந்தது. அதில் சோம்பலுடன் கண் விழித்தவள் தனது அறையில் இருக்கும் குளியலறை சென்று நனறாக முகம் கழுவிக்கொண்டு வந்தாள் . அவளது அணிந்திருந்த நைட்டி முன்பக்கம் முழுவதும் ஈரமாகிவிட்டது.
பெண் தயாராகி விட்டாளா என்று பார்த்துவிட்டு அப்படியே மல்லிகை பூவையும் கொடுக்கலாம் என்று வந்த ராதைக்கு கோவத்தில் கண்கள் சிவந்தது.இன்னமும் அரைகுறையாக தூக்கம் சரியாக கலையாமல் கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஜானகி. அவளை திட்டிக்கொண்டே அவள் கட்டிக்கொள்ள புடவை ,ரவிக்கை பெட்டிகோட் எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து, முத்து மாலை செட்டையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் தங்களது அறைக்கு சென்றால் அங்கே கிருஷ்ணன் தூங்கிக் கொண்டு இருந்தார்.
பல்லை கடித்து கோவத்தை அடக்கிய ராதா ஒரு குவளையில் நீர் எடுத்துவந்து கணவரது முகத்தில் தெளித்தாள் . முகத்தை துடைத்துக்கொண்டே எழுந்த கணவரிடம்,”ப்ச்..என்னங்க பொறுப்பே இல்லாம தூங்கறீங்க.மாப்பிள்ளை வீட்டுலேந்து இங்கே வர கிளம்பிட்டாங்க.சீக்கிரம் ரெடி ஆகுங்க “என்று இரைந்த்துவிட்டு தனக்கான புடவையை எடுத்துக்கொண்டு மகளின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
இரண்டு பெண்களும் அவசரகதியில் தயாராகவும் கிருஷ்னன் ஹாலில் வந்து அமரவும் சரியாக இருந்தது. சமையலறை சென்று மூவருக்குமான காபியை கலந்துவந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தாள் ராதா.மனம் கொஞ்சம் லேசானது போல் உணர்வு.
சற்றைக்கெல்லாம் மாப்பிளை வீட்டிலேந்து பெண் பார்க்க வந்தார்கள். ராகவனை பார்த்தவுடனே கிருஷ்ணனுக்கு பிடித்துவிட்டது. ஆறடிக்கு கூடுதலான உயரம். நல்ல சிவந்த நிறம். சிஏ படிப்பு. அன்றைய திகதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிலான சம்பளம். மாப்பிள்ளையாக இருப்பதற்கு தேவையான தகுதிகள் அன்றைக்கு எவ்வளவு இருக்க வேண்டுமோ அந்த அளவில் அவனுக்கு இருந்தது. வெளியே காபி கொண்டு வந்து கொடுக்கும் சாக்கில் ஜானகி பார்த்துக்கொண்டாள். பார்த்த நொடியில் அவளுக்குள் புகுந்தான் ராகவன்.
அவனது அழகில் மயங்கியவளுக்கு தான் அவனுக்கு பொருத்தம் இல்லையோ…வேண்டாம் என்று விடுவானோ என்று தோன்றியது.(இது அந்த கால கட்டத்தில் பெண்ணின் மனம் எப்படி இருந்தது என்பதற்க்காக சொல்லியிருக்கிறேன். மற்றபடிக்கு எனக்கு இந்த அழகு என்பதில் பெரியதாக கவனம் இல்லை) மனதுள் பதைபதைக்க உள்ளே சென்றுவிட்டாள்.
ராகவனுக்கு பெண்ணுடன் தனியாக பேசவேண்டும் என்று விருப்பம்.அம்மாவின் முகத்தை பார்க்க அவர்,”ராகவனுக்கு ஜானகிகிட்டே தனியா பேச வேணுமாம். இந்த காலத்து பசங்க.பேசி பிடிச்சிருக்கான்னு சொல்லட்டுமே!என்றார். அதற்குள் ஜானகியின் மாமாவும் அத்தையும் வந்துவிட, ராகவனுக்கு அம்பத்தூரில் இருக்கும் அவனது மாமா,மாமி,சித்தி என்று மூவரும் வந்து சேர்ந்தார்கள்.
வந்தவர்களுடன் கொஞ்சநேரம் பேச்சு.அதற்குப் பிறகு மீண்டும் காபி கப்புகளுடன் வெளியே வந்தாள் ஜானகி. பெண் உள்ளே சென்றவுடன் ராகவனின் மாமி,அவன் அம்மாவிடம்,”நம்ம ராகவன் அழகுக்கு இந்த பெண் ரொம்ப சுமார். அவசரப் பட்டு சரின்னு சொல்லிடாதீங்க “என்று காதை கடிக்க ராகவன் ஒரு உஷ்ண பார்வை வீசினான்.
வீட்டில் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான்.”ம்மா..ஜாதகம்,ஜோசியம்னு எவ்ளோ வேணும்னாலும் பாருங்க. நீங்க,மொத்த குடும்பமும் கூட போய் பொண்ணை பார்த்துட்டு வாங்க.எனக்கு கவலை இல்ல.நா வந்தா ஒரே பொண்ணுதான் பார்ப்பேன். பொண்ணுக்கு பிடிச்சிருந்தா அவ தான் என்னோட மனைவி. இதுல மாற்றம் இல்ல.” என்று.
ஜானகி அறை வாயிலில் நிற்க ,ராகவன் அவளது அறைக்குள் நுழைந்தான். அறை நல்ல விசாலமாகவும்,தூய்மையாகவும் இருந்தது. பெரியதாக அலங்காரம் ஒன்றும் இல்லை.எப்படி ஆரம்பிப்பது என்று ராகவன் தயங்கி நின்று கொண்டிருக்க “என்னை பிடிச்சிருக்கும்னு சொல்லணும் கடவுளே!”என்று மனதில் ஜானகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.ஏனெனில் ராகவனை அவளுக்கு அவ்வளவு பிடித்தமாக இருந்தது.
error: Content is protected !!