காதலும் கடத்தப்படும் – 30

காதலும் கடத்தப்படும் – 30
Advertisement
இசை நிகழ்ச்சி முடிவாகி, தேதியும் முடிவான பிறகு, அதற்கு தயாராகத் தொடங்கினர், அர்ஜுன் மற்றும் குழுவினர். பல முறை நிகழ்ச்சி நடத்துவோரிடம் கலந்தாய்வு நடந்தது. நிகழ்த்தி நிரல் முடிவானது. பாடல்களும் முடிவானது.
குழுவினர் அனைவருமே, மிகவும் ஆர்வமாகினர். தினமும் ஸ்டூடியோவில் ஒத்திகை நடந்தது. அவ்வொருவரின் கருத்துக்களும் எடுத்துக்கொள்ளப்பட்டு, பயிற்சிகள் மேலும் மெருகேற்றப்பட்டது. அஞ்சலி அமைதியாக அனைத்தையும் பார்த்திருந்தாள். அர்ஜுனின் ஆர்வமும், வேட்கையும் அவள் உணர்ந்ததே. இந்த நிகழ்ச்சி வெற்றிபெற வேண்டும் என்று தெய்வத்திடம் சதா வேண்டிக்கொண்டே இருந்தாள்.
Advertisement
Advertisement
“அஞ்சலி…” குழுவினர் இசையைக் குறித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, எழுந்து வெளியே வந்த அஞ்சலி, தன்னை மறந்து வேடிக்கை பார்ததுக்கொண்டு நிற்க, அவளை அழைத்தபடி அவள் அருகே வந்து நின்றான், அர்ஜுன்.
“சொல்லு அர்ஜுன்”
“ஏன் இங்க வந்து நிக்கற?”
Advertisement
“ஒண்ணுமில்ல… சும்மாதான்…”
“நான் கொஞ்ச நாளா கவனிச்சுட்டு தான் இருக்கேன்… ஏன் ‘நாளை நமதே’ பாட்டு பாடும்போது கொஞ்சம் டென்ஷன் ஆயிடற?”
“அது… நாம அந்த பாட்டு வீடியோ பண்ணதை ஒரு முறை சித்தப்பாகிட்ட காண்பிச்சேன். அவர் கண்கலங்கிட்டார், அஜூ. சின்ன வயசுல, அப்பாவும், அவரும் தியேட்டர்ல பார்த்த முதல் படம் இது தானாம். அப்புறம் வளர்ந்து பெரியவங்க ஆகுற வரை தியேட்டருக்கே போனதில்லையாம். அதுமட்டுமில்லாம ஏதோ ஸ்கூல்ல பாட்டு போட்டில, சித்தப்பா இந்த பாட்டை பாடியிருக்காங்க. பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்களாம். அப்புறம் அப்பா கூட சேர்ந்து பாட, ரெண்டு பேரும் ஒண்ணா பாடி முடிச்சிருக்காங்க. அதுக்கு பரிசும் கிடைச்சதுன்னு சித்தப்பா சொன்னாங்க. அவ்வளவு ஒத்துமையா இருந்த ரெண்டு பேரும் இப்ப இரு துருவமா இருக்கறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அர்ஜு…”
“நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு…”
“என்னது?”
“ஒரு தடவை நம்ம வீட்ல ராத்திரி பார்ட்டில இந்த பாட்டை பாடினேன். உன் அப்பா பாதியிலேயே நிறுத்த சொல்லிட்டாரு. அவ்வளவு நேரமும் சிரிச்சுக்கிட்டு என்ஜாய் பண்ணவரு, திடீர்னு முகம் தொங்கிப் போய் உள்ள எழுந்து போயிட்டாரு… அப்பவே எனக்கு ஒரு சந்தேகம்…”
“ம்ம்… நம்ம ப்ரோக்ராமுக்கு அப்பா கண்டிப்பா வருவாங்க. இந்த பாட்டை கேட்டா என்ன பண்ணுவாங்களோன்னு கவலையா இருக்கு அஜூ”
“அதெல்லாம் ஒன்னும் பண்ணமாட்டாங்க. ரெண்டாயிரம் பேர் இருக்கற இடத்துல, அந்த சத்தத்துக்கும், லைட்டுக்கும், எல்லாமே வேற வைப்’ல இருக்கும். நீ தேவையில்லாம பயப்படாத…”
அர்ஜுனிடம் பேசும்போதெல்லாம் தனது மனம் தெளிவு பெற்று, பயம் விலகிச் செல்வதை அவளால் உணர முடிந்தது.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்னமே அரங்கத்தில் ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. இறுதியாய் ஒரு ஒத்திகைக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திலிருந்து பலரும் வந்திருக்க, ஒளி / ஒலி சோதனைகள் நடத்தப்பட்டன.
குழுவினர் அனைவரும் பதைபதைப்போடு இருக்க, அர்ஜுனுக்கோ வியர்வை வழிந்தது.
“அஜூ, என்ன ஆச்சு?” என்றாள் அஞ்சலி, கவலையாக.
“ரொம்ப டென்ஷனா இருக்கு அஞ்சலி. இவ்வளவு நாளா நம்ம ஸ்டூடியோல பாடும்போது ஒன்னும் தோணல. இப்ப இவ்வளவு பெரிய இடத்துல, இந்த பிரம்மாண்டமான ஏற்பாடெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பயமாவும், கவலையாவும் இருக்கு”
“என்ன அஜூ, நீயே பயந்தா எப்படி? நீ இதுக்கு முன்னாடி எத்தனையோ ப்ரோக்ராம் பண்ணியிருக்கல?”
“அதெல்லாம் வேற அஞ்சலி. இவ்வளவு பெரிய மேடையை என் வாழ்க்கையில இப்பதான் முதல்முறையா ஏறப்போறேன்… எல்லாம் சரியா நடக்கணும்… அதான் ரொம்ப பதட்டமா இருக்கு…”
அவனால் நிதானமாக நின்று கூட பேசமுடியாமல், அலைந்து கொண்டிருந்தான். அவன் துடைக்கத் துடைக்க நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்தன.
“அஜூ என்னை பாரு… நீ உன்னை பத்தி என்ன நினைக்கறன்னு எனக்கு தெரியாது, ஆனா என்னை பொறுத்தவரை நீ பெரிய திறமைசாலி, உன் மேல அதீத நம்பிக்கை எங்க எல்லாருக்குமே இருக்கு. இது நீயா வளர்த்துக்கிட்ட திறமை இல்லை. உன் ரத்தத்துல கலந்து உன் அப்பா உனக்கு கொடுத்தது. நீ பாடப்போறது எனக்காக, நம்ம நண்பர்களுக்காக, உன் மேல பிரியம் வச்சு நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டு வரப்போற உன்னோட ஃபேன்ஸ்’காக மட்டுமில்ல. அந்த நிலாவிலேர்ந்து ஆசையாசையா ரசிக்கப்போற உன் அம்மா, அப்பாவுக்காகவும் தான். அத்தனை பேருமே உன் மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்கறவங்க அஜூ. நீ எதுக்கு பயப்படணும்? எதுக்கு டென்ஷன்? நீ அனுபவிச்சு உன்னை மறந்து சந்தோஷமா பாடறத பார்க்கத்தான் நாங்க எல்லாருமே காத்துக்கிட்டு இருக்கோம். யாரையும் பார்த்து நீ பயப்பட வேண்டாம் அஜூ. உன்னை மாதிரி எத்தனையோ கலைஞர்கள் முதல் மேடையை கடந்துதான் பல நூறு மேடைகள் ஏறி சாதனை பண்ணியிருக்காங்க, உன் அப்பா உட்பட. இது முதல் மேடை மட்டுமில்ல, உன் எதிர்காலத்திற்கான முதல் படி. நாங்க எல்லாருமே நீ அடுத்தடுத்த படி ஏறி உயரத்துக்கு போகணும்னு தான் முழுமனசோட ஆசைப்படறோம் அஜூ. எங்க எல்லாரோட கை தட்டும் உனக்குத்தான். தைரியமா பண்ணு” என்றாள், அவனது விழிகளை ஊடுருவி நோக்கியபடி.
அவளது விழிகளை பார்த்தான். இதழ்களில் படர்ந்திருக்கும் புன்னகையைக் கண்டான். கண்களில் ஒளிரும் உறுதியைக் கண்டான். தெளிவு பெற்றான்! அமைதி கொண்டான்! மேடை ஏறினான். ஒத்திகை செய்ததெல்லாம் பிழையில்லாமல் பாடினான். அவனது உறுதி மற்றவருக்கும் தொற்றிக்கொண்டது போல், குழுவினரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். ஏற்பாட்டாளர்கள் மன நிறைவோடு கிளம்பிச் சென்றனர்.
நிகழ்ச்சியன்று, குழுவினர் தங்களை தயார் செய்துகொண்டிருக்க, பரபரப்பாக வந்து நின்றாள், அஞ்சலி. சில தினங்களுக்கு முன் அர்ஜுன் பரிசளித்திருந்த மஞ்சள் புடவையினைக் கட்டிக்கொண்டு மஞ்சள் மலரென அவன் முன் வந்து நின்றாள்.
“அஜூ, எல்லாரும் ரெடியா?” என்றவள், அந்த அறையில் அங்கங்கே அமர்ந்திருந்த குழிவினருக்கும் அதே வினா எழுப்பினாள். அனைவரும் அவள் முன்னே வந்து சூழ்ந்து நிற்க,
“எல்லாரும் பார்க்க செமயா இருக்கீங்க…” என்றாள்.
“ஆமா அஞ்சலி, காஸ்ட்யூம் எல்லாம் ரொம்ப அற்புதமா இருக்கு… வேற லெவல்” என்று தோழி ஒருவள் கூற, ‘ஆம்’ என்று தலையாட்டினாள். அனைவரும் ஓரிரு வார்த்தைகள் அவளிடம் பேசிவிட்டு தத்தம் பணியைக் காண செல்ல, அர்ஜுன் மட்டும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துக்கொண்டு, ரசித்தபடி நின்றான். அவனது பார்வை புரிந்தவளுக்கு, உள்ளுக்குள் குறுகுறுத்தது.
“அஜூ… ஒன்னும் சொல்ல மாட்டேங்கற?”
அவன் பதில் கூறாது நிற்பதை பார்த்த மதன், அவன் அவளது அழகில் மெய்மறந்து நிற்பதை உணர்ந்தவனாய்,
“அது ஒண்ணுமில்ல அஞ்சலி, பார்க்க பொண்ணு மாதிரி இருக்கல, அதான் வாயடைச்சு போயிருக்கான்…” என்றான்.
“அப்போ இவ்வளவு நாள் எப்படி இருந்தேனாம்?”
“அந்த கொடுமையெல்லாம் கேட்காத” என்றவன் கூற, அவனை செல்லமாய்த் தட்டி, “பாரு அஜூ இவன…” என்றாள், செல்லமாய் சிணுங்கியபடி.
“மதனா சும்மா இருடா” என்ற அர்ஜுன்,
“தேவதை மாதிரி இருக்க…” என்றான் அவளிடம். அவள் கன்னங்கள் சிகப்பேற, அரும்பாடு பட்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.
“சரி எல்லாரும் தயாராகுங்க… நான் வி.ஐ.பி. எல்லாரையும் கவனிக்கறேன்… அப்புறம் நம்ம ஏரியாலேர்ந்து வந்திருக்காங்க. இட்லி கடை அக்கா, பாப்பாவை பார்த்து பேசிட்டு தான் வந்தேன். பாப்பாவை அப்பாகிட்ட அறிமுகம் செஞ்சு வச்சேன்… வரேன்…” என்றுவிட்டு அவள் செல்ல எத்தனிக்க,
“அஞ்சலி, நான் ஒரு வி.ஐ.பி.யை அழைச்சிருந்தேன். இன்னைக்கு காலைல தான் வரேன்னு உறுதி செஞ்சாரு… அவர கவனிச்சுக்கோ… என்னால வரமுடியாது… முன் சீட்டுல உட்கார வச்சிடு…”
“கண்டிப்பா அஜூ, யாரது?”
“அவரை பார்த்தாலே நீ அடையாளம் கண்டுபிடிச்சுடுவ…”
“சரி நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு அவள் செல்ல,
“அஞ்சலி” என்று அழைத்தபடி அவள் எதிரே ஓடி வந்து நின்றான்.
“என்ன அஜூ?”
“ப்ரோக்ராம் முடியற வரை என் கண் பார்வையிலேயே இரு”
அழகாய் சிரித்தவள், “சரி அஜூ” என்றாள் நாணத்தோடு.
அஞ்சலி அவளது தந்தையின் அருகே சென்றாள். முன் வரிசையில் வேதநாயகமும், அருகில் அவரது அரசியல் நண்பரும் அமர்ந்திருந்தனர்.
“என்னமா, எல்லாம் ஓகே’வா?” என்றார் வேதநாயகம்.
“ஓகே தான்பா. எல்லாம் டைம்படி நடக்குது”
“வணக்கம் தல” என்றபடி கஜேந்திரன் வந்து நின்றான்.
“என்ன கஜா இங்க?”
“நமக்கு ட்யூட்டி போட்டிருக்காங்க…”
அவர்கள் உரையாடிக்கொண்டிருக்க, மருதநாயம், தனது மனைவி, இரு பிள்ளைகளோடு உள்ளே நுழைந்தார். அதிர்ந்து நின்ற அஞ்சலி, கவலையாய் தந்தையைக் கண்டாள். மருதநாயகத்தை எதிர்பார்த்திராத அவரும், சற்று திடுக்கிட்டாலும், தயங்கியபடி வேறு எங்கோ நோக்கியபடி, அமர்ந்திருந்தார்.
மருதநாயகத்தின் எதிரே சென்று வரவேற்ற அஞ்சலி,
“வாங்க சித்தப்பா!” என்றாள், புதிராக.
“அஞ்சலி ஏற்பாடெல்லாம் பிரமாதமா இருக்கு” என்றார் மனதார.
“தேங்க்ஸ் சித்தப்பா” என்றவள், சித்தியையும், தங்கை தம்பியையும் வரவேற்றாள்.
“நீங்க வருவீங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவே இல்லை… சாரி சித்தப்பா நான் உங்களை சரியா அழைக்க கூட இல்லை”
“உன் நிலைமை எனக்கு புரியாம இல்ல… ரெண்டு நாளைக்கு முன்னாடி, இந்த பயலுக ராமனும், லட்சுமணனும் வீட்டுக்கு வந்தானுங்க”
“ராமன், லட்சுமணனா?”
“அதான் உன்கூட எப்பவுமே சுத்துவானுங்களே…”
“ஓ! அர்ஜுன் மதனா?”
“ஆங், அர்ஜுன்… பேரு மறந்துட்டேன். அந்த பய தான். நீங்க வந்தாலே போச்சுன்னு ரொம்ப கெஞ்சுனான். யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். விடாம ஃபோன் பண்ணான். இன்னைக்கு காலைலயே ரெண்டு பேரும் ஃபோன் பண்ணிட்டாங்க. போனா போகுதுன்னு வரேன்னு சொல்லிட்டேன்… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?!”
“பிரச்சனையா? நீங்க வந்தது எனக்கு எவ்வ்ளவு சந்தோஷமா இருக்குனு தெரியுமா?”
“அந்த பயலும் அதே தான் சொன்னான். ‘கண்டிப்பா வாங்க சார், அஞ்சலி சந்தோஷப்படுவா. அவளுக்காக வாங்க சார்’னு சொன்னான். அதான் கிளம்பி வந்துட்டேன்”
அர்ஜுனை எண்ணி அவள் மனம் கர்வம் கொண்டது.
முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த நான்கு இருக்கைகளை அவள் சுட்டிக்காட்ட,
“மேடம் இந்த நாலு சீட் தான், மருதநாயகம் சார்’காக அர்ஜுன் சார் ரிசெர்வ் பண்ணியிருக்கார்” என்று ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் ஒருவர் கூற, மனதினுள் நடுங்கிக்கொண்டே, தந்தையின் நண்பருக்கருகே வரிசையாக போடப்பட்டிருந்த நான்கு இருக்கைகளில் அவர்களை அமரச்செய்தாள்.
‘ஐயோ அஜூ, என்னடா பண்ணிவச்சிருக்க? பயத்துல எனக்கு நெஞ்சு வலி வந்துடும் போல இருக்கே’ என்று எண்ணியபடி தந்தையின் அருகே வந்து அமர்ந்தாள்.
