Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 11.2

“அவங்க கிட்ட என்ன சொல்லி வச்சிருக்க சுருதி?” என்று காட்டமாக கேட்டாள் ரிதன்யா.

“சொல்ல வேண்டியத மட்டும் தான் சொல்லிருக்கேன்.”



Advertisement

“என்னென்ன சொன்னன்னு கேக்குறேன்?”

“எல்லாத்தையும். ஆனா, ஒரே ஒரு விசயத்த மட்டும் மாத்தி சொல்லிருக்கேன். நீ டிவோசி இல்லை விடோன்னு.”

Advertisement

Advertisement

“விடோ வா! நான் விடோ வா?” என்றாள் கோபமாக. விவாகத்தானவள் என்ற வார்த்தையை விட கைம்பெண் என்ற வார்த்தைச் சுட்டது அவளை.

“வேற என்ன சொல்லச் சொல்ற?”

Advertisement

“என்னோட வாழ்க்கைல எதாவது குளறுபடி பண்றதையே நீ வேலையா வச்சிருக்கியா! ஏன் இப்படி பண்ற சுருதி?”

“நான் நல்லதுக்குத் தான் சொன்னேன்.”

“நல்லது நினைக்கிறவ உண்மைய பேசிருக்கணும்.”

“எந்த உண்மைச் சொல்லச் சொல்ற ரிது? நீ விவாகரத்து ஆன கதையையா! கதை எல்லாருமே நல்லா கேப்பாங்க. ரெண்டு சொட்டு கண்ணீர் வடிச்சி, பரிதாபம் கூட படுவாங்க. ஆனா எதுக்கும் உதவ மாட்டாங்க. நெஞ்சுல ஈரமே இல்லாம நடந்துப்பாங்க. ‘தலையெழுத்து படி தான் எல்லாம் நடக்கும். அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்’னு நகர்ந்து அவங்க வேலைய பாத்திட்டு போய்ட்டே இருப்பாங்க.”

“அதுக்குன்னு நீ பொய் சொல்லிருக்க கூடாது சுருதி. அந்தம்மா என்னைப் பரிதாபமா பாத்தாங்க.”

“பாக்கட்டுமே! அதுல என்ன தப்பு இருக்கு?” என்றவளை ரிதன்யா முறைக்க,

“நீ என்ன நினைச்சிட்டு இருக்க! அம்மா பொண்ணுன்னு ரெண்டு பேர்ன்னு சொல்லி, காச நீட்டுனதும் உடனே வீட்ட குடுத்திடுவாங்கன்னா! ஹவுஸ் ஓனருங்க எல்லாம் ரொம்பவே விவரம். அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்திடக்கூடாதுன்னு சுயநலமா தெளிவாத்தான் இருப்பாங்க. பொதுநலமா கருணைக் கடலா இருக்கபாங்கன்னு எதிர்பாத்தா அது உன் தப்பு.

இந்தச் சமூகத்துல குடும்பம் துணைக்கு நின்னாலும், ஆம்பளைத் துணை இல்லன்னா அவள அடிமட்டமா பாப்பாங்க.

புருஷன் செத்திட்டான்னு சொன்னாக் கூட கடுகளவாவது கருணை கிடைக்கும். ஐயோ! விதி அவங்க பிரிச்சிடுச்சின்னு கொஞ்சோண்டு… கொஞ்சம் தான்… இரக்கம் காட்டுவாங்க. ஆனா, விவாகரத்து ஆகிடுச்சி. அதுவும் நீ தான் புருஷ வேண்டாம்னு உறவ முறிச்சிட்டு வந்தன்னு சொன்னா! எதுவும் கிடைக்காது.

வாழா வெட்டின்னு மட்டுமில்ல, புருஷன அனுசரிக்கத் தெரியாத ராச்சஸின்னு தான் பேரு வைப்பாங்க. புடவைய மாத்து மாதிரி புருஷன மாத்திக்க நினைக்கிற அற்ப பொம்பளம்பாங்க. அடுத்த புருஷன அபகரிக்க நிறைக்கிற விபச்சாரிங்கன்னு வசபாடுவாங்க. இத தான் எதிர் பாக்குறியா?” என்றதும் தலை தானாக ஆடியது இல்லை என்று.

அதிலும் விவாகரத்தானவர்களை விபச்சாரி என்றதில் உள்ளுக்குள் குத்தியது. அவளும் அறிவாள் நகைக்கடையில் வேலை பார்த்த சமயம் அவளுக்கு சக ஊழியர்கள் வைத்த பெயரை.

“இந்தப் பேருங்கெல்லாம் உன்னை மட்டுமில்ல, உம்பொண்ணையும் தொடர்ந்தா அவளோட நிலைமை என்ன?” என்றபோது ரிதன்யாவிற்கு வீட்டில் நடந்தது நினைவு வந்தது.

தாயின் அறிவுரைகள் கேட்டதும், சுருதியை வீடு பார்க்கச் சொல்லியிருந்தாள். மறுநாள் மகள் கன்னம் வீங்கிய நிலையில் இருந்தாள்.

என்னானது என்று விசாரித்த போது, அண்ணாமலை அடித்தது தெரியவந்தது.

ஏன் என்ற போது, மகளின் ஆடை விமர்சிக்கப்பட்டிருந்தது. மகள் துறுதுறுப்பான பெண் என்று ரிதன்யாவிற்கு தெரியும். ஆதலால் அவள் விளையாட ஏதுவாய் தொடையை இறுக்கிப் பிடித்த சாட்ஸ்ஸை அணிவித்து விடுவாள். பள்ளியில் கவுன் அணிந்து கொண்டு விளையாடும் போது உள்ளாடை தெரிய ஆடுகிறாள் என்ற விமர்சனத்தைத் தவிர்க்க.

எப்பொழுதும் அறைக்குள் அது தான் சிறுமியின் உடை. அன்று விளையாட்டு மும்மரத்தில் சாட்ஸ்ஸோடு வெளியே வர, பெண் பிள்ளை அணியும் ஆடையா இது என்று அடித்திருந்தார் அவர்.

“அவ பத்து வயசு குழந்தைப்பா!”

“கூடாது பாப்பா. இந்த மாதிரிலாம் ட்ரெஸ் போடவே கூடாது. அப்பெ இல்லாத பொண்ணு. இப்பவே கண்டிச்சி அடிச்சி வளத்திடணும். அப்பத்தான் தப்பா வளத்திட்டோம்னு நாளைக்கி யாரும் நம்மல ஒரு சொல் சொல்ல மாட்டாங்க.” என்றவர் தான் செய்யது சரி என்று வாதிட,

“எதுக்கு இவ்ளோ கோபப்படுற! நாளைக்கி உனக்கு புதுசா வரப்போற புருஷன், உன்னை மட்டும் தான் பொண்டாட்டியா பாப்பானாக்கும். அவன் ரத்தம் இல்லன்னு பிள்ளை மேல கூட கை வச்சா உன்னால என்ன பண்ண முடியும். அதப் பத்தியெல்லாம்‌ நீ எதுக்கு யோசிக்கிற. போய் உன் உல்லாச வாழ்க்கைய பாரு. உங்கண்ணே உனக்கு மாப்ள பாத்திட்டாரு.” என்ற தேன்மொழியிடம் சண்டைக்குப் செல்ல,

அது கலவரமாக மாறி வீட்டே அல்லோலப் பட்டது.

ஒரே கருவறையில், ஒரே உதிரத்தில் உடன் பிறந்தவனே, உடன்பிறந்தவள் மீதிருக்கும் பாசத்தை மறந்து நிறம் மாறும் போது. முன்பின் தெரியாதவர் ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்று எப்படி கூற முடியும்?

ஆனாலும் உண்மையை மறைத்தது தவறாகப் பட,

“ஒருத்தரோட குணம் என்னென்னு தெரியாம நீயே முடிவு பண்ணாத ரிது. கொஞ்ச நாள் போட்டும். அந்தம்மா கூட பழகிப் பாத்திட்டு உண்மைய சொல்வோம். நாம ஒன்னும் அவங்க சொத்த எழுதி வாங்க நாடகம் போடல. உங்க ரெண்டு பேரோட பாதுகாப்புக்குத் தான் இது.” என்றாள்.

அவளுக்குள்ளும் சிறு நடுக்கம் இருந்தது. ஏனெனில் பத்ரி தன் வீட்டின் முன் எந்தச் சண்டை சச்சரவும் கூடாது என்று உறுதியாகச் சொல்லியிருந்தான். அத்தோடு அவனுக்குப் பொய் அறவே பிடிக்காது என்பதையும், அவனின் குடும்பம் என்று வரும் போது அவனுக்குள் உறங்கும் பூதம் விழித்தெழுவதையும் அவனுடன் பழகத் தொடங்கிய இரண்டே மாதத்தில் அறிந்து கொண்டாள்.

தனபாலனும் அண்ணாமலையாரும் வந்திறங்கி விட்டால்… அதற்கும் மேலாக விக்ரம் மனைவி மகளை வந்து பார்த்து ரகளை செய்தால்! என்ன செய்வது என்று தோன்றாமல் இல்லை.

ஆனாலும் இப்போதைக்கு இருக்கும் சூழலை சமாளிக்கலாம் என்று நினைத்தாள்.

நினைத்ததை ரிதன்யாவிடமும் சொல்லி விட்டு சென்றிருக்கலாம்.

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!