Skip to content
Post Views: 76
எல்.எம். ஃபெர்டிலிட்டி சென்டர், என்று தங்க நிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்த பலகையை தாங்கி நின்ற மருத்துவமனைக்குள் செவிலியர் வாணியுடன் நுழைந்த ஆழினியின் வயிற்றில் பயப்பந்துகள் உருண்டோடத் தொடங்கிவிட்டது.
டாக்டர் ஆஷிகா பேகம் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (ஒபிஜி), என்று பொறிக்கப்பட்டிருக்கும் சிறு பலகையை சுமந்திருந்த அறைக்கதவிற்கு அருகில் ஆழினியை அழைத்து வந்தவர்
Advertisement
“நீ இங்கேயே இரும்மா, நான் போய் டாக்டர் பார்த்துட்டு வரேன்….” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்ற வாணி அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆழினியை அவருடன் அழைத்து சென்றார்.
அறைக்குள் முப்பது வயது தொடக்கத்தில் அமர்ந்திருந்த மருந்துவரின் எதிரில் ஆழினியை அமர செய்து அவளருகில் அமர்ந்தவர்
Advertisement
Advertisement
“டாக்டர், இவங்க பெயர் ஆழினி, நான் சொன்ன சர்ரோகேசி மதர்….” என்று வாணி கூற, ஆழினியை கண்டு மெலிதாக புன்னகைத்தவர்
“ஹாய் ஆழினி, நான் ஆஷிகா…. நீங்க நர்ஸ்னு வாணி சிஸ்டர் சொன்னாங்க…. ஆமா, உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா? எத்தனை குழந்தைங்க இருக்கு?” என்று வினவிய ஆஷிகாவை கண்டு திருதிருவென முழித்தவாறு இல்லையென்பதை போல் தலையசைத்த ஆழினியின் பதிலை கேட்டவர் அதிர்ச்சயடைந்திருந்தார்.
Advertisement
“என்ன வாணி சிஸ்டர்? கல்யாணமாகாத பொண்ணை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க? உங்களுக்கு ரூல்ஸ் தெரியுமா தெரியாதா? முதல் வேலையா அவங்களை இங்கிருந்து கூட்டிட்டு போங்க, நான் வேற யாரையாவது இதுக்கு ஏற்பாடு பண்ணிக்குறேன்….” என்று ஆஷிகா கோபமாக கூற, அவரிடம் வாணி ஏதோ கூற வருவதற்குள்
“பிளீஸ் டாக்டர், என் தம்பி ஆப்ரேஷனுக்கு முப்பது லட்சம் வரை பணம் தேவைப்படுது…. எங்கெங்கோ ட்ரை பண்ணிட்டேன் ஆனா பணம் கிடைக்கல…. நாளைக்குள்ள பணம் கட்டலன்னா என் தம்பியோட உயிரை காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க…. உங்களை நம்பி தான் வந்திருக்கேன்…. பிளீஸ், எனக்கு உதவி பண்ணுங்க….” என்று ஆழினி கண்ணீர் மல்க கூற, அவள் நிலையை எண்ணி மனம் கலங்கியவர் முதலில் மறுத்தாலும் பின் அவளுக்காக சம்மதித்திருந்தார்.
ஆஷிகாவின் சம்மதத்தை பெற்றவுடன் அடுத்த முப்பதாவது நிமிடத்தில் ஆழினிக்கு பலவித பரிசோதனைகள் நடைப்பெற தொடங்கியிருந்தது. அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு மருத்துவரின் எதிரில் ஆழினியும் வாணியும் அமர்ந்திருக்க, அவர்களை கண்டு மெலிதாக புன்னகைத்தவர்
“அடுத்த வாரம் உங்களுக்கு சர்ரோகேசி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுவோம் ஆழினி…. உங்களுக்கு தெரிஞ்சது தான் பட் சொல்லவேண்டியது என் கடமை…. எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு தான் நீங்க சர்ரோகேட் மதராகப் போறீங்க…. உங்களுக்கு தேவையான பணம், பிரெக்னென்சி மெடிக்கல் காஸ்ட்ஸ் எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க…. நீங்க யாரு என்னென்னு அவங்களுக்கு தெரியாது, அதேமாதிரி அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியாது….
குழந்தை பிறந்தவுடனே நாங்க அவங்க கிட்ட குழந்தையை கொடுத்துடுவோம், உங்களுக்கும் குழந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது…. இன்னிலிருந்து உங்களுக்கு மெடிக்கல் பிரொஸிஜர்ஸ் நான் ஸ்டார்ட் பண்ணப்போறேன்…. இதெல்லாத்துக்கும் உங்களுக்கு சம்மதம்னா நீங்க இந்த அக்ரிமென்ட்ல சைன் பண்ணலாம்…. வேறெதாவது என் கிட்ட கேட்கனுமா ஆழினி?” என்று வினவிய ஆஷிகாவை கண்டு ஆமென்பதை போல் தலையசைத்தவள்
“ஆப்ரேஷனுக்கு நான் கேட்ட பணம்….” என்று கூறிய ஆழினியிடம்
“நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நீங்க கேட்ட பணம் உங்க கையிலிருக்கும்….” என்று ஆஷிகா உறுதியாக கூற, அவள் கூறியதை கேட்டவள் அவர் அளித்த ஒப்பந்த தாள்களில் கையெழுத்திட்டிருந்தாள்.
ஆஷிகா கூறியபடியே, அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முப்பது லட்ச ரூபாய் பணத்தாள்கள் அடங்கிய பெட்டியை செவிலியர் வாணி ஆழினியிடம் ஒப்படைத்திருந்தார். அடுத்த அரைமணிநேரத்திலேயே இன்பனுக்கு அறுவை சிகிச்சைகளும் ஆரம்பித்திருக்க, அதற்கு அடுத்து வந்த நாட்களில் ஆழினிக்கும் வாடகை தாயாகும் சிகிச்சைகளும் தொடங்கியிருந்தது.
சரியாக ஒருவாரம் கழித்து மயக்கத்திலிருந்து கண் விழித்திருந்தான் இன்பன். ஆனால் அவன் நினைவலைகளில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கண்களை எட்டுத்திக்கும் சுழலவிட்டு அங்குமிங்கும் பார்ப்பதும், அமைதியாய் அமர்ந்திருப்பதும், யாரேனும் ஏதாவது பேசினால் முகத்தை திருப்பி கொள்வதுமாய் இன்பனின் நடவடிக்கைகள் இருக்க, அவனது நிலையை கண்டு பயந்தவள் மருத்துவரிடம் விசாரிக்க
“பயப்படாதீங்கம்மா, இப்போத்தான கண் முழிச்சிருக்காங்க? கொஞ்சம் கொஞ்சமா எல்லா ஞாபகமும் வந்துடும்….” என்று மருத்துவர் கூற, அவர் கூறியதை கேட்ட பிறகு தான் ஆழினி, ஆறுமுகம், ராணி மற்றும் நீலவேணியின் மனம் சற்று நிம்மதியடைந்திருந்தது.
ஒருமாதம் கழித்து ஆழினிக்கு இரத்த பரிசோதனைகளை செய்தவர் அவள் கர்ப்பம் தரித்திருப்பதாக கூற, அவர் கூறியதை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தவளின் கரங்கள் அன்னிச்சையாக அவளது வயிற்றை வருட தொடங்கிவிட்டது.
“நாலு வாரமாகியிருக்கு ஆழினி…. யு ஆர் ஃபோர் வீக்ஸ் பிரெக்னென்ட் நவ்…. மூணு மாசத்துக்கு நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்….” என்ற கூறி பல ஆலோசனைகளை வழங்கிய ஆஷிகாவிடமிருந்து விடைப்பெற்ற ஆழினி நேராக இன்பனை காண சென்றிருந்தாள்.
மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்றுக்கொண்டு தன் தம்பியை காண வந்தவளின் செவிகளில்
“அக்கா….” என்று பல நாட்கள் கழித்து ஒலிக்கும் இன்பனின் குரலை கேட்டு ஆழினியின் கால்கள் இரண்டும் சில்லிட்டு அவ்விடத்திலேயே நின்றுவிட்டது.
இன்பனின் கைகளை பற்றி நின்றிருந்தவள் ஆழினியை கண்டதும் அவளருகில் வேகமாக சென்று
“ஆழினி அக்கா, இன்பாவுக்கு எல்லா ஞாபகமும் வந்துடுச்சு…. எங்க எல்லாரோட பெயரையும் சொன்னான் அக்கா….” என்று நீலவேணி நாதழுதழுக்க கூற, தன் தம்பியின் அருகில் மகிழ்ச்சியுடன் சென்றவளிடம்
“அப்பாவும் அம்மாவும் எங்க?” என்று வினவிய இன்பனது கேள்வியில் ஆழினியின் முகத்திலிருந்த புன்னகை மட்டுமல்லாது மற்ற மூவரது முகத்திலிருந்த புன்னகையும் காணாமல் போயிருந்தது.
இன்பனிடம் உண்மையை கூறினால் அதிர்ச்சியில் அவனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து பயந்தவள்
“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல இன்பா, வீட்ல இருக்காங்க…. நாளைக்கு கூட்டிட்டு வரேன்….” என்று ஆழினி கூறியதை கேட்டு சமாதானம் அடைந்தவன் சிறிது நேரம் கழித்து வேறு சில கேள்விகளை கேட்க தொடங்கிவிட்டான்.
இன்பன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சில உண்மைகளையும் பல பொய்களையும் உரைத்தவர்கள் அவன் தூங்கிய பிறகே சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
“நாம கும்பிட்ட தெய்வம் நம்மள கைவிடலம்மா, இன்பன் நல்லபடியா வீட்டுக்கு வந்ததும் எல்லா வேண்டுதலையும் சீக்கிரமே முடிச்சிடனும்…. ஆழினி, காலையில டெஸ்ட் எடுக்க போனியே என்னம்மா சொன்னாங்க?” என்று வினவிய ராணியிடம்
“கன்ஃபார்மாகிடுச்சு அத்தை….” என்று ஆழினி உள்சென்ற குரலில் கூற, அவள் கூறியதை கேட்டு மற்ற மூவரும் ஆழினியின் மனநிலையில் தான் அமர்ந்திருந்தனர்.
நாட்களும் யாருக்கும் காத்திராமல் வேகமாக உருண்டோடியது. தனக்கு உணவினை ஊட்டி கொண்டிருந்த ஆழினியை இமைக்காமல் பார்த்த இன்பனை கண்டு சிரித்தவள்
“என்ன இன்பா? ஏதாவது வேணுமா?” என்று வினவிய ஆழினியிடம்
“அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்களா?” என்று இன்பன் கேட்ட கேள்வியில் ஆழினியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் மடைத்திறந்த வெள்ளம் போல் வழிய தொடங்கிவிட்டது.
ஆழினியின் கண்களில் வழியும் கண்ணீரை கண்டவன்
“அப்போ நான் சொன்னது உண்மை தான் இல்ல? கடைசியா அப்பா அம்மாவோட ஆட்டோவுல போனது மட்டும் தான் ஞாபகமிருக்கு…. ஆனா அதுக்கு அப்புறம்…. ஏன் அக்கா நமக்கு இப்படி…. நம்ம என்ன அக்கா பாவம் பண்ணோம்…. ஏன் அப்பாவும் அம்மாவும்….” என்று அடுத்த வார்த்தை கூற முடியாமல் கதறி அழுதவனை அணைத்தவள்
“பிளீஸ் இன்பா, அமைதியா இரு…. ஆப்ரேஷன் நடந்து ரெண்டு மாசம் தான் முடிஞ்சிருக்கு…. இப்போ நீ அழுதா உனக்கு தலைவலி வரும்…. பிளீஸ் அழாத இன்பா….” என்று கூறிய ஆழினி தன்னருகில் நின்று அழுது கொண்டிருந்த நீலவேணியிடம் கண்ணை காட்ட, அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் இன்பனின் தூக்க மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அவனை பருக செய்திருந்தாள்.
சிறிது நேரத்தில் இன்பன் உறங்கிவிட, அவனது கைகளை பற்றியிருந்தவள் தன்னெதிரில் நின்றிருந்தவளிடம்
“இன்பாவுக்கு எல்லா ஞாபகமும் வந்துடுச்சு ஆழினி அக்கா…. நல்லவேளை இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு நீங்க முன்னாடியே கெஸ் பண்ணிட்டீங்க…. இல்லன்னா என்னாகியிருக்கும்?” என்று வினவிய நீலவேணியிடம் ஆழினி ஏதோ கூற வருவதற்குள் ஆஷிகாவிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறி அவளது அலைபேசி சிணுங்கி கொண்டிருந்தது.
தன் அலைபேசியின் அழைப்பை ஏற்றவள்
“ஹலோ, சொல்லுங்க டாக்டர்?” என்று வினவிய ஆழினியிடம்
“ஆழினி, நான் உங்களை உடனே பார்க்கனும்…. நம்ம ஹாஸ்பிடல் வரீங்களா?” என்று ஆஷிகா வினவ, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவர் முன் அமர்ந்திருந்தாள் ஆழினி.
தன்னெதிரில் அமர்ந்திருந்த ஆழினியை கலக்கமாக பார்த்தவர் அவளிடம் ஓர் காசோலையை நீட்டியவாறு
“ஆழினி, இதுல இருபது லட்ச ரூபாய்க்கு செக் இருக்கு….” என்று கூறிய ஆஷிகாவை புரியாமல் பார்த்தவள்
“எதுக்கு டாக்டர்? அதான் நான் கேட்ட பணத்தை கொடுத்துட்டீங்களே? அப்புறம் எதுக்கு இது?” என்று ஆழினி வினவ, தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டவர்
“என் க்ளைன்ட் இந்த குழந்தையை வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஆழினி…. இந்த பணம் குழந்தையை ஆபார்ட் பண்றதுக்காக கொடுத்தது….” என்று ஆஷிகா கூற, அவர் கூறியதை கேட்டவள் அதிர்ச்சியில் முற்றிலுமாய் உறைந்திருந்தாள்.
“என்ன? என்ன சொல்றீங்க?” என்று வார்த்தை வராமல் தடுமாறியவளின் கரங்கள் அன்னிச்சையாக அவளது வயிற்றை அழுந்த பற்றிக்கொள்ள, ஆழினியின் மனநிலையை உணர்ந்தவர்
“உன் நிலைமை எனக்கு புரியுது ஆழினி…. பட், அவங்க இந்த குழந்தையை வேண்டாம்னு சொல்லிட்டாங்க…. அது…. அவங்க நேச்சுரலாவே கன்சீவாகிட்டாங்க அதான் இந்த குழந்தையை வேண்டாம்னு சொல்லிட்டாங்க….” என்று கூறியவர் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளிடம்
“உனக்கு இது ஒன்பதாவது வாரம் தான் ஆழினி…. இந்த கருவை நீ ஆபார்ட் பண்ணிட்டா உன் லைஃப் பழைய மாதிரி மாறிடும்…. இது கடவுள் உனக்கு கொடுத்த ரெண்டாவது வாய்ப்பா நினைச்சிக்கோ, உனக்குன்னு ஒரு வாழ்க்கையை பார்த்துட்டு சந்தோஷமாயிருக்க பாரு…. நான் அபார்ஷன் பிராஸஸ் ஸ்டார்ட் பண்றேன்….” என்று ஆஷிகா கூறியதை கேட்டவள்
“முடியாது டாக்டர், நான் அபார்ஷன் பண்ணிக்கமாட்டேன்….” என்று உறுதியுடன் கூறிய ஆழினியை அவளெதிரில் அமர்ந்திருந்த ஆஷிகா அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தார்.
“ஆழினி, இது விளையாட்டில்ல…. நான் சொல்றதை கேளும்மா….” என்று ஆஷிகா ஏதோ கூற வருவதற்குள்
“ஒரு உயிரை என்னால கொல்ல முடியாது டாக்டர்…. இந்த நிமிஷத்திலிருந்து என் வயித்திலிருக்கிறது என் குழந்தை, இந்த குழந்தைக்கு நான் தான் அம்மா….” என்று முடிவாக கூறியவள் அவ்விடத்திலிருந்து வெளியில் செல்ல எத்தனிக்க, அவளை தடுத்தவர்
“ஆழினி இந்த செக்…. இதையாவது வாங்கிக்கோம்மா, இது உனக்கு சேரவேண்டியது….” என்று கூறிய ஆஷிகாவை கண்டு வலிகளுடன் சிரித்தவள்
“ஒரு உயிரை கொல்றதுக்கு கொடுத்த பணம் எனக்கு வேண்டாம்….” என்று தீர்க்கமாக கூறிவிட்டு செல்லும் ஆழினியை அவளின் மருத்துவரான ஆஷிகா விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்களும் வாரங்களாய், வாரங்களும் மாதங்களாக உருண்டோடியது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஆறுமுகத்தின் கட்டாயத்தினால் இன்பனை மருத்துவமனையிலிருந்து நேராக நீலவேணியின் இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். அவர்களுக்கு பாரமாய் இருக்க கூடாதென்று முடிவெடுத்தவராகள் ஆறுமுகத்தின் பேச்சை மீறி அவரது இல்லத்தின் மேல்மாடியிலேயே ஆழினியும் இன்பனும் வாடகைக்கு குடி பெயர்ந்துவிட்டனர்.
சிறிது நாட்கள் சென்ற பிறகே மருத்துவரிடம் நடந்த அனைத்து உரையாடல்களையும் ஆறுமுகம், ராணி மற்றும் நீலவேணியிடம் ஆழினி கூறியிருந்தாள். ஆழினியின் நலனை எண்ணிய அவர்களும் குழந்தையை கருவிலேயே அழிக்க சொல்ல, மருத்துவரிடம் கூறிய அதே பதிலை அவர்களிமும் உறுதியாய் கூறிய ஆழினியின் பதிலை எதேச்சையாக அவ்வழியில் சென்ற இன்பனும் கேட்க நேர்ந்துவிட்டது. அந்நிமிடமே ஆழினியிடம் மட்டுமல்லாது மற்ற மூவரிடமும் நடந்ததை பற்றி முழுவதுமாய் அறிவதற்கு சண்டையிட்டவன் அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்ட பின்பு முற்றிலுமாய் உடைந்துவிட்டான்.
தன்னை காப்பாற்ற தன் வாழ்க்கையை பணயம் வைத்த அவனது தமக்கையின் செயலில் மனமுடைந்து குற்றவுணர்வில் தள்ளப்பட்டவன் ஆழினிக்கு திருமணமாகாமல் தனக்கும் நீலவேணிக்கும் திருமணமாகாது என்று அந்நொடியே சபதமெடுத்து கொண்டான்.
ஆழினியின் வாழ்வில் மட்டுமல்லாது தன்னை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் ஒளி வீசும் தீபமாய் அவதரித்திருந்தான் அவன். சிரிப்பென்பதையே மறந்திருந்தவர்கள் அவனது கன்னக்குழி சிரிப்பில் தங்களை மறந்து அவனை இரசித்து சிரித்தனர். எங்கு திரும்பினாலும் அவனது மழலை பேச்சும் சிரிப்பொலியும் மட்டும் தான் இல்லத்தின் எட்டுத்திசைகளிலும் ஒலிக்க தொடங்கியிருந்தது.
தன் தாயும் தந்தையும் ஒரே உருவாக தன்னிடமே வந்துவிட்டனர் என்று நினைத்து மகிழ்ந்தவள் ஆதிலட்சுமி மற்றும் சந்தான கிருஷ்ணன் பெயரிலிருந்து தன் மகனுக்கு ஆதவ் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டியிருந்தாள். ஆழினி மற்றும் இன்பனின் குறும்பு தனத்தை தன் கன்னக்குழி குறும்பு சிரிப்பினால் மீட்டெடுத்த நீலநிற கண்கள் கொண்ட மாயக்கண்ணன், ஆழினியின் ஆதவ் கிருஷ்ணன்.
அவன் ஒருவனுக்காக மட்டும் தான் தன் மீதி வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருப்பவளின் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் விஜய சிவமாறனிடம் ஆழினி கூறி முடிக்க, அங்கு இன்பனும் பருவதம்மாவிடம் அனைத்தையும் கூறியிருந்தான்.
தன்னெதிரில் அமர்ந்திருந்தவனை தீர்க்கமாக நோக்கியவள்
“எனக்கு என் ஆதவ் போதும்…. அவனுக்கு அப்பாவும் வேண்டாம், எனக்கு புருஷனும் வேண்டாம்…. இன்பன் கிட்டயும் பருவதம்மா கிட்டயும் நீங்க சொல்றீங்களா? இல்ல நானே அவங்க கிட்ட….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“ஐ லவ் யூ….” என்று அழகான குறுநகையுடன் கூறிய விஜய சிவமாறனை நெற்றிக்கண் திறந்துவிடும் அளவிற்கு தீயாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆழினி.
ஒளி வீசும்….
error: Content is protected !!