Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 13

அத்தியாயம் 13

துர்க்கா ஃபோனில் கூட அஞ்சனாவுடன் பேச விரும்பவில்லை என்று கரராக சொல்லிவிட்டாள். சரி அவள் எப்போதாவது வெளியே வரும்போது பார்த்துக்கொள்ளலாம், அல்லது கோயிலுக்காவது வருவாள் தானே என்று அஞ்சனாவும் எதிர்பார்த்து காத்திருக்க, ஒரு வருடமாக துர்க்கா வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை.



Advertisement

அந்த ஒரு வருடங்களில் தான் துர்க்காவிடம் அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் அவள் வீட்டை விட்டு வெளியே வர கூட விரும்பாதது பிரபாகரனுக்கு ஏதோ அவளை தங்க கூண்டில் அடைத்தது போன்று தெரிய, அவன் துருவி துருவி கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

அதன் பின்னர் தான், மாதம் ஒரு முறை சகுந்தலாவுடன் துர்க்கா கோயிலுக்கு மட்டும் சென்று வந்தாள்.

Advertisement

Advertisement

அதுவும் முறையாக ஒவ்வொரு மாதமும் என்று இருக்கவில்லை சகுந்தலா மனது வைத்தால் மட்டுமே துர்க்காவால் கோயில் சொல்ல முடியும்.

கோயிலில் பெரிதாக ஆட்கள் இல்லாத நேரம் முன்கூட்டியே சொல்லி வைத்து விட்டு சகுந்தலா துர்க்காவை அழைத்து வந்து தன்னுடனே வைத்திருந்து, பூஜை முடிந்தவுடன் தன்னுடனே அழைத்துச் சென்று விடுவார்.

Advertisement

அதனால் அஞ்சனாவிற்கு இரண்டு மூன்று முறை துர்க்காவை தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு அமையாமல் போனது.

அதை தன் கண்ணாளனிடம் கவலையாக சொல்ல, பிரபாகரனோ அன்றும் கோயில் வந்திருந்த சகுந்தலா பூஜைக்காக மண்டபத்தில் காத்திருக்க, பூசாரியை பிடித்து வைத்துக் கொண்டான் இவன்.

“பூஜைக்கான பொருட்கள எடுத்துட்டு வாரன்னு போன பூசாரிய இன்னும் காணோம்.. நீ எங்கேயும் ஓடிடாதா இங்கேயே இரு…” என்று துர்க்காவின் மனதில் ஊசியை குத்தி விட்டு எழுந்து கோயிலின் மற்றைய பக்கம் சென்று விட ,

அவர் எப்போது செல்வார் என்று காத்திருந்த அஞ்சனா வேகமாக துர்க்காவின் முன்பு வந்தவள் “துர்க்கா எப்படி இருக்க?…” என்று அன்பாக கேட்டாலும் அவள் உடல் தோற்றமும் உடை அலங்காரமும் அடுத்த நொடியே “ஏன்டி இப்படி இருக்க?…” என்று ஆதங்கமாக கேட்க வைத்தது.

துர்க்காவோ தான் கோயில் வர ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே தூரமாக நின்று தன்னை ஏக்கமாக பார்க்கும் தோழியை கண்டு கொண்டு தான் இருந்தாள். ஆனால் தன் அத்தையை தாண்டி அதிரடியாக தன்னிடம் வந்து நிற்பாள் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அஞ்சனா தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து உள்ளம் நெகிழந்தாலும், அவளின் அன்பை ஏற்றுக் கொள்ளும் துணிவு ஏனோ வரவில்லை. அதற்கு காரணம் தவறி போன அவள் வாழ்க்கையும், தாயும் அத்தையும் போட்ட நிபந்தனைகளும்.

எனவே அத்தை வரும்போது அவளை அவ்விடம் விட்டு நகர்த்த வேண்டும் என்று “அஞ்சு எனக்கு புடிச்ச மாதிரி நான் இருக்கேன்.. என்ன கேட்ட, எப்படி இருக்கேன்னா.. நான் சந்தோஷமா இருக்கணும் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சா தயவு செஞ்சு இந்த மாதிரி என்ன தொந்தரவு பண்றத நிப்பாட்டு.. உன்ன பாக்க பிடிக்கல, உன் கூட பேச பிடிக்கலன்னு சொல்லிட்டேன் தானே திரும்பவும் எதுக்கு என்ன தொந்தரவு பண்ற.. என் வாழ்க்கையில இனிமேல் சாதாரண ஆசா பாசங்களுக்கு எந்த இடமும் கிடையாது.. அது நட்பு உட்பட.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. தயவு செஞ்சு கிளம்பு…” என்று முகத்தில் அடித்தது போல் கூறி விட

அஞ்சனாவின் கண்கள் கலங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரபாகரன் இதை சொல்லித்தானே வருந்துகின்றான் .

இவளும் எத்தனையோ அறிவுரைகள் கூறி, அவளை மாற்றுவதற்கான சில முயற்சிகள் கூறி. அது எல்லாம் செயல்படுத்தி எந்த பலனும் இல்லாமல் தோற்றுப் போனதுதான் மிச்சம்.

இப்போது மட்டும் இவள் என்ன பேசி என்ன பயன், ஒரு வேளை தன்னை நேரில் பார்த்தாலாவது தனிமையில் ஏதேனும் சொல்வாள் என்று தான் நினைத்திருந்தாள். அப்படி இருக்க உண்மையாகவே வாழ்க்கையை வெறுத்து விட்டது போல் துர்க்கா பேசியது அஞ்சனாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அஞ்சனா ஏதோ பேசுவதற்கு முன்பே துர்க்கா சகுந்தலாவை தேடி செல்ல, அவளை தடுக்கவும் முடியாமல், இழுத்துப் பிடித்து அவள் மனதை எப்படி மாற்றுவது என்றும் விளங்காமல் விக்கிது அவ்விடமே நின்று விட்டாள்.

****

பின்னர் தனிமையில் இருவரும் அமைதியாக இருக்கும்போது பிரபாகரன் தான் “செல்லம்மா ரொம்ப யோசிக்காத.. அவள் நிறைய வாழ்க்கையில பாத்துட்டாள் , அதுவும் எல்லாரும் சந்தோஷமா ஆசையா அனுபவிக்க கூடிய இளமை வயசுல.. அவ இப்படி இருக்கிறது தப்பு இல்ல.. ஆனா காலம் எல்லாத்தையும் மாத்தும்.. இப்பதான் 19 வயசு இன்னும் காலம் இருக்கு கண்டிப்பா அவ மனசு மாறும்.. இந்த விரக்தி நிலையில இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருவா.. இல்லனா நீயும் நானும் சேந்து அவள வெளிய கொண்டு வரலாம்.. கவலைப்படாத…” என்று அவன் தான் ஆறுதல் கூறினான்.

பிரபாகரன் அஞ்சனா இருவருக்கிடையிலான காதல் என்பது ஆறுதலாகவும் அன்பாகவும் தான் அதிகமான நேரங்களில் இருந்தது.

தன் தங்கை ஒருத்தி வாழ்க்கையை வெறுத்து உணர்வுகளை தொலைத்து வீட்டில் இருக்க, காதலின் உணர்வு நிலைகளை மேற் கொண்டு அவனால் வெளிப்படுத்தவோ இல்லை உல்லாசமாக கதை பேசவோ, காதலியிடம் சில்மிஷங்கள் செய்யவோ அவனுக்கு மனது வரவில்லை.

அதனால் எப்போதாவது ஒரு ஆறுதல் அணைப்பு, அதிகப்படியாக கைகளை கோர்த்துக்கொண்டு அவள் தோளில் சாய்வது, இல்லை அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்வது, அதற்கு மேல் அவர்களுக்கிடையில் எந்தவித நெருக்கமும் இருந்தது இல்லை.

அஞ்சனாவிற்கும் துர்க்கா கூடவே இருந்தால் அவள் மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை. எப்படியாவது பிரபாகரனை திருமணம் செய்து அவன் வீட்டிற்கு சென்று விடத்தான் ஆசையாக இருந்தது.

ஆனால் பிரபாகரன் கண்டிப்பாக கூறிவிட்டான் கல்லூரி படிப்பை முடித்தாக வேண்டும் என்று, 21 வயதில் தான் அவளது கல்லூரி படிப்பு முடியும்.

ஆனால் அதற்கு முன் தன் 20 வயதிலேயே பிரபாகரன் சற்றும் எதிர்பார்க்காத நேரம் அகிலன் வீட்டினரால் பெண் கேட்டு சென்றிருக்க, இவள் ஒழிவு மறைவு இன்றி பிரபாகரனை காதலிப்பதை கூறி விட, முருகானந்தம் பரணிக்கு என்னவெல்லாம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியுமே அப்படி இருக்க இவளை எப்படி மருமகளாக ஏற்றுக் கொள்வார்.

அவருக்கு தெரியாமல், அவரை எதிர்த்து திருமணம் செய்தால் , தன்மகளை எப்படியும் நிம்மதியாக வாழ விட மாட்டார் என்பது பெற்றவர்களுக்கு பயத்தை கொடுத்தது. அதனாலேயே காதலுக்கு வீட்டினர் மறுப்பு தெரிவித்து விட,

அஞ்சனவோ எதற்கும் துணிந்தவளாக உங்கள் சம்மதம் தேவை இல்லை என் திருமணத்திற்கு என்று ஒற்றை காலில் நிற்க,

அவள் தாயோ எல்லா பெற்றோர்களையும் போல் கையில் எடுத்த ஆயுதம் தான் தற்கொலை முயற்சி “போடி.. போ.. கண்டிப்பா அந்த பெரிய மனுஷனும் உங்கள ஏத்துக்க மாட்டாரு.. எங்களையும் எதிர்த்துகிட்டு வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி நீ எப்படி வேணாலும் வாழு..

…உன்கூட பிறந்த பாவத்துக்கு இதோ கண் சரி இல்லாம இருக்குற உன் தங்கச்சி அவளுக்கு அடுத்தது ஒரு கல்யாணம் என்றது கனவுலயும் நடக்காது..சும்மாவே இவள கட்டிக்க யோசிப்பாங்க.. இதுல அக்கா ஓடிப்போயிட்டானு தெரிஞ்சா இவ வாழ்க்கை அவ்வளவுதான்.. எப்படியும் உன்னையும் அந்த பெரிய மனுஷன் நிம்மதியா வாழ விடப்போறதில்ல.. ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் எங்க கண்ணு முன்னாடி நாசமா போறதுக்கு நாங்க முதல்ல போய் சேந்திடுறோம்…” என்று விஷத்தை குடிக்க போக

அதை தடுத்து பிடித்தவள், தன் தங்கைக்காகவும் தன் பெற்றோரின் நிம்மதிக்காகவும் தன்னவனைப் பற்றி சற்றும் யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டாள்.

இதுபோன்று நடக்கும் என்று அவன் காதல் மனது கட்டியம் கூறியதுவோ என்னவோ, எப்போதும் அவள் தோளில் சாய்ந்திருக்கும் போது அவளிடம் கேட்பான் “செல்லம்மா என்ன நடந்தாலும் என்ன தனியா தவிக்க விட்டுட்டு போயிட மாட்டியே…” என்று பரிதவிப்புடன்.

” இந்த செல்லம்மா உங்க பொண்டாட்டி தான்..நம்புங்க மாமா!…” என்று நம்பிக்கை குடுப்பாள்,

இதோ அதே மாரியம்மன் கோயில், அதே வேப்பமரத்தடியில் அவன் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்க காத்திருந்தாள். பிரபாகரனோ ஆசையாக காதலியை சந்திக்க கையில் பூச்சரத்துடன் வந்து அவள் முன்பு நிற்க,

அவன் காதல் ததும்பும் கண்களை நேர் கொண்டு பார்க்க முடியாமல் பார்வையை வேறு புறம் திருப்பியவள் “எனக்கு வீட்ட கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க…” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கூற

சற்றும் அதிராமல் “நான் வந்து வீட்ட பேசுறேன்…” என்று அவன் சொல்ல

“வேணாம்.. எப்படியும் நீங்க மட்டும் தான் வந்து என் வீட்டுல பேசுவீங்க.. உங்க அப்பா அம்மா சம்மதம் இல்லாம எங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க.. ஒருவேள உங்க வீட்டுல சமாதிச்சாலும் எங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.. ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோங்க உங்கள விட்டுட்டு இன்னொருத்தர் கூட எப்படி.. எனக்கு தெரியல.. ஆனா ஏற்கனவே உங்க தங்கச்சி வாழ்க்க தடம் மாறி போனதால அத எப்படி சரி பண்றதுன்னு தெரியாம மன கஷ்டத்துல இருக்கோம்..

…ஒருவேள நான் இப்படியே உங்க கைய புடிச்சிட்டு வந்துட்டேனா என் தங்கச்சி வாழ்க்கையும் திசை மாறி நின்னுடும்.. அதையும் பாத்து என்னால கண்ணீர் வடிக்க முடியாது.. அட்லீஸ்ட் என் குடும்பமாவது நிம்மதியா இருக்கட்டும்.. உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை…” என்று சொல்லும்போதே கையை நீட்டி அவளை பேச வேண்டாம் என்று தடுத்தவன்

“முடிவா என்ன சொல்ற செல்லம்மா.. இப்படியே வா.. இங்கேயே தாலிய கட்டி உன்ன கூட்டிட்டு போக நான் தயாரா இருக்கேன்.. இல்ல உன் அப்பா அம்மாவ பேசி சம்மதிக்க வைக்கணும்னாலும் அதையும் பண்றேன்.. என்ன எதுவுமே பண்ண விடாம இப்படி கைய கட்டி போடாத…” என்று அவன் உயிர் மருக, வார்த்தை துடிக்க கேட்கவும்

கையெடுத்துக் கும்பிட்டவள் “என்ன மன்னிச்சிடுங்க.. தயவு பண்ணி இந்த விஷயத்துல எதுவும் பண்ணாதீங்க.. என்ன மறந்துட்டு உங்களுக்குனு இன்னொரு வாழ்க்கைய அமைச்சுக்கோங்க…” என்றவள் விறுவிறுவென்று அவ்விடம் விட்டு சென்று விட்டாள்.

வெகுநேரமாக அவ்விடாமே நின்றவன் கைகளில் இருந்த பூ உதிர்ந்து கீழே விழும் வரை அவன் உணர்வுக்கு திரும்பவே இல்லை.

அதன் பிறகு ஏன் வாழ்கின்றோம் என்று புரியாமல் அவனது வாழ்க்கை நகர, அகிலன் அஞ்சனாவின் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர், முருகானந்தம் அவரது கௌரவத்திற்கு ஈடாக பார்த்து பூர்ணாவை பிரபாகரனை மிரட்டி கண்டித்து திருமணம் செய்து வைத்தார்.

பூர்ணா ஜமீன் பரம்பரையை சேர்ந்த பெண், பிரபாகரனை மிகவும் பிடித்து போய் பூர்ணாவின் தந்தை பெண் கேட்க,

ஜமீன் சம்பந்தத்தை விட்டு கொடுக்க முடியாமல், வேண்டாம் என்று அடம் பிடித்த மகனின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் அவனை விட்டுவிட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று,

அதன் பின்னரே அவனுக்கு விடயம் சொல்லப்பட்டது. அவன் ஒன்றும் தந்தையின் கௌரவத்துக்காக அந்த திருமணத்தை செய்து கொள்ளவில்லை நிச்சயம் வரை வந்து நின்ற ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காகவே அந்த திருமணத்தை செய்து கொண்டான்.

அதே எண்ணத்தில் தான் திருமணமான முதல் இரவே என் மனதில் ஒருத்தி இருக்கின்றாள் அவளை மறந்து விட்டு இயல்பான வாழ்க்கையை அமைக்க கால அவகாசம் வேண்டும் என்று தன் மனதையும் வெளிப்படையாக கூறிவிட்டான்.

அங்கு தான் அவனுக்கான சோதனை காலம் ஆரம்பமாகியது. பூர்ணா செல்வ செழிப்பில் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு எல்லாமே அவளுக்காக பிரத்தியேகமாக தயாரித்தவைகளாக இருக்க வேண்டும், அப்படி இருக்க தன் கணவன் மனதில் இன்னொருத்தி இருக்கின்றாள் என்பதை கேட்டுவிட்டு அவள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை.

சொல்லப்போனால் மாற்றான் மனைவியை நினைக்கும் அளவிற்கு பிரபாகரன் ஒன்றும் கேடுகெட்டவன் கிடையாது. ஆனாலும் அவள் தந்து விட்டுப் போன வடுவு அதை ஆற்ற தெரியாமல் அவன் உலாத்திக் கொண்டிருந்தான்.

மனைவியாக சிறிது தட்டிக் கொடுத்து, ஆறுதல் என்ற ஒரு விடயத்தை பூர்ணா கொடுத்து இருந்தால், அவர்கள் வாழ்வு சிறத்து இருக்குமோ என்னவோ.

பணத்தில் வளர்ந்த ஆணவமும் திமிரும் அவளை அன்பான மனைவியாக குடும்பம் நடத்த விடவில்லை.

எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று வாழ்க்கை சென்று, இதோ ஒரு வருடங்கள் முன்பு எப்போதும் போல் பிரபாகரனுடன் சண்டை போட்டுவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்று அவள் உயிரை அவளே அவள் முற்கோபத்திற்கு ஈடாக கொடுத்திருந்தாள்.

இத்தனை வருடங்களில் கொடுமை என்னவென்றால் துர்க்கா மேலும் இறுகிப்போனதுதான். அதற்கு ஏற்றால் போல் இரு அண்ணன்களின் திருமணத்திலும் அவள் கலந்து கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்த பின்னர் தான் கண் குளிர் பார்த்துக் கொண்டாள்.

ஆனால் அதன் பின்னிருந்தது தன் தாயும் அத்தையும் என்பது பிரபாகரனும் கிருபாகரனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அஞ்சனாவோ என்ன தான் திருமணம் செய்து கொண்டு வந்து விட்டாலும், துர்க்காவை பற்றியோ இல்லை பிரபாகரனின் நலனை பற்றியோ யோசிக்காமல் இருந்ததில்லை.

அவனுக்கு திருமணமானவரை அவளுக்கு நிம்மதியே, ஆனால் துர்க்காவை எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனத்தாங்கல் இருந்து கொண்டே இருந்தது.

அவளால் பிரபாகரனுக்கு செய்த துரோகத்தால் இலகுவாக அவன் வீட்டிற்கு சென்று வரவும் முடியவில்லை. துர்க்காவை நெருங்கி பேச முடியவில்லை, எனவே தான் ஏதேனும் வழி கிடைக்குமா என்று காத்திருந்தவளுக்கு கிருபாகரனுக்கு நித்தியாவை பெண் கேட்டு வரவும்,

நித்தியா அதே ஊர் என்பதால் இவளாக தானாக சென்று நட்பு வளர்த்துக் கொண்டு, துர்க்காவை பற்றி எல்லா விவரமும் கூறி அவளுக்கு சற்று துணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாள்.

நித்தியாவிற்கும் துர்க்காவை மிகவும் பிடித்திருந்தது. எனவேதான் அஞ்சனா சொல்வதைக் கேட்டுக் கொண்டாள். இருந்தாலும் துர்க்காவிடம் முழுதாக நெருங்க முடிவதில்லை. அதற்கு காரணம் பிரேமாவதி எப்போதும் அவளை கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்.

அவளது உணவிலிருந்து உடைவரை எல்லாமே அவரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் என்னவோ நித்தியாவால் நெருங்க முடியவில்லை.

அது மட்டும் இல்லாமல் திருமணமான அடுத்த மதமே அவள் கர்ப்பமாகி விட ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து தாய் வீடு சென்றவள் குழந்தைக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதுதான் கணவன் வீடு திரும்பினாள்.

எனவே கர்ப்பமானதிலிருந்து உடல் உபாதை என்று அதன் பிறகு வீட்டில் இல்லாமல் என்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் துர்க்காவை அவளால் நெருங்க கூட முடியவில்லை. சரி அடுத்து என்ன செய்யலாம் என்று அஞ்சனாவும் அவளும் பேசி ஒரு முடிவுக்கு வரும்போது,

நித்தியாவின் தாய், நோயினால் படுக்கையில் விழுந்து விட, ஒரே ஒரு பெண் பிள்ளை என்பதால் இவள் தான் தாயை கவனிக்க வேண்டியதாக இருந்தது. மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றவள் அவரது உடல்நிலை தேராமல் இருந்து, அப்படியே அவர் இறந்தும் விட, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அங்கேயே இருந்தாக வேண்டிய சூழ்நிலை.

இப்படியாக இரண்டு வருடங்கள் ஓடிவிட இறுதியாக இருந்த இரண்டு வருடங்களில் தான் ஓரளவு பேசி பேசி துர்க்காவின் மனதில் நீயும் பெண்தான் உனக்குள்ளும் ஆசைகள் இருக்கின்றது என்று தூண்டி விட்டதெல்லாம் நித்தியாவையே சாரும்.

இதோ இரண்டு வருடங்கள் ஆமை வேகத்தில் சென்ற அவர்களது திட்டம் வேலைக்காகவில்லை என்பதால் முயல் போல் ஒரே தாவல் தான் சரி என்று திட்டம் போட்டு துர்க்காவின் கழுத்தில் தாலியை விழ வைத்தாயிற்று.

என்ன ஒன்று எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று நினைத்திருக்க, இருவருமே மற்றவரின் மனது தெரியாமல் மறுபக்கம் திரும்பி நின்று கொண்டதால், இப்போது மற்றுமொரு திட்டத்தை தீட்ட வேண்டிய சூழ்நிலை அஞ்சனா மற்றும் நித்தியாவிற்கு.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 13

  • Gayathri Sgh

    நித்தியா நல்லது பண்ணத்தான் பாபி பேசுறல.. இருந்தாலிம் திட்டமா அனுசுரணைய சொல்லிருக்கலாம்.. அவ அண்ணி தானே அதுனால பக்குவமா சொல்லிருந்தாலும் அவள் கேட்டிருப்பா..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!