Skip to content
Post Views: 93
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நிழலாடும் நினைவுகள்
தருணுக்கு பெங்களூரில் இன்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்க, இரவு ரயிலில் பயணிக்க இருந்தவனுக்கு குடும்பமே சேர்ந்து பெட்டி படுக்கை கட்டிக்கொண்டிருந்தனர்.
ரம்யா அவன் துணிமணிகளை அடுக்க, பெட்டியில் எஞ்சியிருந்த இடங்களில், பருப்புப் பொடி, புளிக்காய்ச்சல் எனப் பொட்டலங்களைச் சொருகிக்கொண்டிருந்தார் திலகா.
Advertisement
“அங்க கிடைக்காத பொருளா. ட்ரெஸ்ல எண்ணெய் கசியப்போகுது,” மனையாளைக் கடிந்துகொண்டபடி, “இந்தப் பணத்தையும் மறைவான இடத்தில் வைம்மா,” மருமகளிடம் கத்தை நோட்டுகள் அடங்கிய என்வெலப் ஒன்றை தந்தார் தாமோதரன்.
“மழை வரமாதிரி இருக்கு! ஸ்டேஷனுக்கு சீக்கிரம் கிளம்பிடலாம்,” கார் சாவியை காற்றில் சுண்டிவிட்டு விளையாடியபடி ஷ்ரவன் மாடியிலிருந்து இறங்கி வர,
“பத்து நிமிஷம் டா; ஃபோன்ல சார்ஜ் ஏறட்டும்,” பதிலுரைத்த தருணினின் விழிகள் மட்டும் அலைபேசியை விட்டு அகலவில்லை.
Advertisement
“எல்லாத்தையும் லாஸ்ட் மினிட்ல தான் பண்ணுவீயா,” சிடுசிடுத்த ஷ்ரவன்,
Advertisement
“எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்தான்,” பெட்டியைத் தூக்கமுடியாமல் தூக்கி தரையில் நிறுத்தும் பெண்களை முறைத்தான்.
கடைசி ஆளாகப் பதறியடித்து ஓடுவது இளையவைனின் வழக்கம் என்றால், முதல் ஆளாக வரிசையில் கால்கடுக்கக் காத்திருப்பது மூத்தவனின் சுபாவம் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட தாமோதரன்,
“ஃபோன் சார்ஜ் ஏறட்டும்; எல்லாரும் இங்க வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” மென்னகையுடன் அழைத்தார்.
Advertisement
அவருக்கு இடதுபுறம் அமைந்திருந்த சோஃபாவில் திலகாவும் தருணும் அமர, புதுமணத் தம்பதிகள் வலப்புறத்தில் அமர்ந்துகொண்டனர்.
ஜோடிகள் பக்கம் திரும்பியவர், “உங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டு மாசமாகப்போகுது. இப்ப ஓரளவுக்கு உனக்கு இந்த குடும்பத்தோட பழக்கவழக்கங்கள் எல்லாம் பரிச்சயமாகி இருக்கும்னு நம்புறேன் ரம்யா. ஷ்ரவனோட டிஸ்கஸ் பண்ணிட்டு, சீக்கிரம் நம்ம பிஸினஸ்ல பொறுப்பு ஏத்துக்கோம்மா,” என்றார்.
“இதுல டிஸ்கஸ் பண்ண என்ன இருக்குப்பா. ரம்யா நாளைக்கே ஜாயின் பண்ணட்டும். எல்லாத்தையும் நான் சொல்லித்தரேன்,” ஷ்ரவன் தலைகால் புரியாத சந்தோஷத்தில் பேசினான்.
“சூப்பர் ஐடியாடா,” அண்ணனுக்கு காற்றில் ஹைஃபை தந்து துள்ளிகுதித்த தருண்,
“ரம்யா! நான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு வரதுக்குள்ள நீ எல்லாத்தையும் கத்துட்டேனா, எனக்குச் சொல்லித்தர வசதியா இருக்கும்,” என்றான் உற்சாகமாக.
“அப்பா.. அது… என் காலேஜ் வர்க்…” இழுத்தாள் ரம்யா.
“புரியுதுமா. நோட்டீஸ் பீரியட் சர்வ் பண்ணிட்டுக் கூட ஜாயின் பண்ணு,” எடுத்துக்கொடுத்தார் தாமோதரன்.
“அதுக்கில்லப்பா. எனக்கு டீச் பண்ணத்தான் பிடிச்சிருக்கு,” ரம்யா கூறவும், தாமோதரனின் முகம் நொடியில் சுருங்கியது.
தந்தையின் கனவுகளை அறிந்திருந்த ஷ்ரவன், மனையாளின் விரல்களில் பின்னிக்கொண்டு, “இது நம்ம ஃபேமிலி பிஸினஸ் ரம்யா. நாம எல்லாரும் இதில் சரிசமமான பங்கு எடுத்துக்கணும்ன்றது அப்பாவோட நீண்டநாள் ஆசை,” விளக்கினான்.
“ஆமாம் ரம்யா. உனக்கிருக்குற டேலன்ட்டுக்கு, நீ நம்ம கம்பனிய முதல் இடத்துக்குக் கொண்டுபோயிடுவ,” தருணின் நம்பிக்கையில் துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
“நீங்க எல்லாரும் இவ்வளவு ஆசையா கூப்பிட்டும் நான் மறுத்துப் பேசுறேன்னு நினைக்காதீங்க,” என மூவரையும் விழி உயர்த்திப் பார்த்தவள்,
“டீச்சிங்க் ப்ரொஃபெஷன் எனக்கு ரொம்ப் பிடிக்கும்தான். அதுல என் சுயநலமும் கொஞ்சம் அடங்கியிருக்கு,” கூற, அனைவரும் அவளை கேள்வியாக ஏறிட்டனர்.
“ப்ரொஃபெஷன் அன்ட் ஃபேமிலி ரெண்டுத்தையும் பேலன்ஸ் பண்ணணும்ன்றதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன். அதுக்காக எனக்கு நானே ரெண்டு ரூல்ஸ் வச்சிருக்கேன்.
எந்த வேலைக்குப் போனாலும், புருஷன் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நான் வீட்டுக்கு வந்து அவருக்குச் சமைச்சு வச்சிருக்கணும்;
எக்காரணத்துக்கொண்டும், வர்க் ரிலேடட் சுமைகளை தலையில் ஏத்திக்கிட்டு வீட்டுக்கு வரவேகூடாது. வீட்டுக்கு வந்ததும் அது ஒன்லி ஃபேமிலி டைம்மா இருக்கணும்.
இதை எல்லாம் என்னால இப்போ பார்த்துட்டிருக்குற லெக்சரர் வேலையில் செய்யமுடியுது,” நீண்ட விளக்கம் தர,
“இவ்வளவுதானே ரம்யா. இது நம்ம கம்பனி. வர்க் டைம்; வர்க் லோட எல்லாம் உனக்கு நீயே டிசைட் பண்ணிக்கலாமே. உன்னை யாரு தடுக்கப்போகுறாங்க,” படபடவென வழிசொன்னான் தருண்.
அனுபவத்தில் கைதேர்ந்த தாமோதரனுக்கு, அது நடைமுறையில் சாத்தியமில்லை எனத் தெரிய அமைதியாக இருந்தார்.
“நீ நினக்குற அளவுக்கு அது சுலபமில்லடா,” மென்னகைத்த ரம்யா,
“வெளியிடத்தில் கூட முடியும் முடியாதுன்னு எல்லைக்கோடு வரைஞ்சிடுலாம். ஆனால் நம்ம கம்பனின்னு வரும்போது தட்டிக்கழிக்க முடியாது. அப்படியே சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டாலும், பிஸினிஸ் விஷயம் மண்டையில் குடைய, நாம ஃபேமிலி டைம்ன்ற பேருல தொழில் ரீதியா மட்டும்தான் பேசுவோம்.
இதுல் இன்னொரு பிரச்சனை என்னன்னா, சகஜமா டிஸ்கஸ் பண்ணிக்குற நமக்குள்ள கருத்து வேறுபாடுகள் வரலாம். அதுவே நாளிடைவில் மனஸ்தாபமா மாறி, நம்ம ஃபேமிலி லைஃபை பாதிக்க ரொம்பநாள் எடுக்காது,” சிக்கல்களை எடுத்துரைக்க,
தாமோதரனின் விழிகள் மனையாளை ஏறிட்டது. தன்னைப் போலவே மறுத்துப் பேசும் மருமகளின் குணத்தை மெச்சி, கணவரை பெருமிதம் பொங்க ஏறிட்டார் திலகா.
“உன் எண்ணம் புரியுது ரம்யா. உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா உனக்காக நம்ம கம்பனி கதவுகள் எப்பவுமே திறந்திருக்கும்,” மென்னகைத்தார் தாமோதரன்.
“தேங்க்ஸ் ‘ப்பா,” நிம்மதியுடன் புன்னகைத்தாள் ரம்யா.
இரயிலுக்கு நேரமாகிறது என திலகா விரட்ட, மனையாளின் முடிவில் அதிருப்தி கொண்ட ஷ்ரவன்,
“நீ என்னோட ஆபீஸுக்கு வந்தீன்னா, நாள் முழுக்க என் பக்கத்துலேயே இருக்கலாமே ரம்யா,” காதல் வழிய நினைவூட்டினான்.
அவன் கன்னத்தைக் கிள்ளியவள், “பால்கோவா பிடிக்கும்னு அதையே நாள் முழுக்க சாப்பிட்டிட்டு இருக்கமுடியுமா சொல்லுங்க,” எனச் சீண்டினாள்.
திலகாவும் தாமோதரனும் கள்ளென்று சிரிக்க, அவர்களை வெட்டும் பார்வையில் முறைத்தவன்,
“அப்போ என்னைப் பார்த்துட்டே இருந்தா திகட்டும்னு சொல்றீயா டி,” உரிமை பொங்க சண்டையிட்டான்.
“இதுல என்னடா சந்தேகம்?” கிளுகிளுத்த தருணை அனல்பார்வையில் மிரட்டிய ரம்யா,
“ஏன் குதர்க்கமா யோசிக்குறீங்க ஷ்ரவன்,” என உம்மென்ற கணவனின் முகத்தை இரு கரங்களில் தாங்கியபடி, “வேலை முடிச்சிட்டு அசதியா வீட்டுக்கு வரும் கணவனுக்குப் பிடிச்சத சுடச்சுட சமைச்சு வச்சிட்டு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறதும் ஒரு தனி சுகம்ன்னு சொல்ல வந்தேன்,” யாசிக்கும் குரலில் பேசினாள்.
“நல்லா சமாளிக்குற டி,” என அசடுவழிந்தான் ஷ்ரவன்.
“சரி! சரி! என்னை ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிட்டு வந்து உங்க ரொமான்ஸ கன்டின்யூ பண்ணுங்க,” இருவருக்கும் நடுவில் முகத்தை நீட்டி செல்லமாகக் கண்டித்தான் தருண்.
பிள்ளைகள் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக்கொண்டு காரில் ஏறிச்செல்லும் அழகை உளமார ரசித்து வீட்டிற்குள் வந்த திலகா,
“ரம்யா மறுத்துப் பேசினவுடன என்ன யோசிச்சீங்க,” கணவரிடம் புருவங்களை வளைத்துக் கேட்டார்.
“ஏன் உனக்குத் தெரியாதா,” வேண்டுமென்றே முகத்தைத் திருப்பிக்கொண்டார் தாமோதரன்.
“அதை உங்க வாயால கேட்கணும்னு ஆசைப்படுறேன்,” வம்படியாக எதிரில் வந்தார் திலகா.
முப்பது வயதில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கிய கையோடு, தன் சரிபாதி தொழிலிலும் சரிபங்கு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று பக்கத்துலேயே இருக்கவேண்டும் என ஏங்கியவர் அல்லவா அவர்!
“ம்ம்ம்…” ராகம் பாடியவர், “அத்தனை திறமை இருந்தும் மாமியார் மாதிரியே குடும்பம் குடும்பம்னு கொடிப்பிடிக்குறாளேன்னு யோசிச்சேன்,” சலித்துக்கொண்டார்.
“அந்த பிடிவாதத்தால் தான் நம்ம குடும்பத்துல சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைஞ்சியிருக்கு. இனி என் மருமகளால அது நீடிச்சு நிலைக்கப்போகுது,” திலகா அழுத்தமாகச் சுட்டிக்காட்ட,
“தெரியும்மா,” என மனையாளை வாஞ்சையாகத் தன்னருகில் அமர வைத்துக்கொண்டவர்,
“சின்னவன், வாழ்க்கையிலேயே உருப்படியா செஞ்சிருக்கு ஒரே விஷயம்… ரம்யாவை நம்ம வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வந்ததுதான்,” என்றார்.
“உண்மைதாங்க,” ஆமோதித்த திலகா, “சொல்லப்போனா, விளையாட்டுப் பிள்ளையா சுத்திட்டு இருந்த நம்ம தருண், அவ ஒரு ஃப்ரெண்டா டீச்சரா வழிகாட்டினதுனால தான் இத்தனை குறுகிய காலத்துல C.W.A, M.B.Aன்னு ரெண்டு கோர்ஸ் ஒரே சமயத்துல முடிச்சு நம்ம கம்பனி பொறுப்பு ஏத்துக்குற அளவுக்குப் பக்குவமா வளர்ந்து நிக்குறான்,” நினைவூட்டினார்.
“ம்ம்ம்,” என்றவர், “அவளுடைய இந்த பண்பை அவ நம்ம கம்பனியோட வளர்ச்சியில் செலுத்தினால் எவ்வளவு நல்லா இருக்கும்,” தாமோதரன் பெருமூச்சுவிட,
“இல்லன்னு சொல்லலீங்க. ஆனால் ரம்யா ஒரு காலேஜ் லெக்ச்சரரா சேவை செய்யறதுனால, நம்ம தருண் மாதிரியான ஆயிரக் கணக்கான மாணவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவாங்க,” அவள் முடிவை நேர்மறையான கோணத்தில் சிந்திக்குமாறு வலியுறுத்தினார் திலகா.
உறவாடி உணர வேண்டிய இல்லற சுகதுக்கங்களை,
உரையாடி பாடம் நடத்துகிறாள் உற்றதுணை அவள்;
உரைநடையாகப் போதிக்கிறார் உற்றார் உறவினர்;
உத்தமியே! உன்னுள் உயிர்மெய்யாய் ஒன்றிவிட – விடை தேடுகிறேன்
உள்ளத்தில் நிழலாடும் நின் நினைவில்…
error: Content is protected !!