Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 14

அத்தியாயம் 14

அந்தகார இருளில் நெஞ்சை அழுத்திய நினைவலைகள் நீண்டாலும், நால்வரின் மனதிலும் பூபாளம் இசைக்க அருணோதயம் தொடங்கியது.



Advertisement

எப்போதும் போல் துர்க்காவிற்கு அதிகாலையே முழிப்பு வந்துவிட்டது. கண்ணை கசக்கி எழுந்தவளுக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் ஓடி வந்து நெஞ்சில் ஒட்டிக்கொள்ள, உடனே குனிந்து தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை பார்த்தாள்.

என்றும் இல்லாமல் இத்தனை வருடங்கள் கழித்து அவள் உதட்டில் ஆத்மார்த்தமான, நிம்மதியான அழகிய புன்னகை.

Advertisement

Advertisement

அது அந்த மாங்கல்யத்தை பார்த்ததாலா! இல்லை அதை அணிவித்தவன் யார் என்பதாலா! இரண்டுமாக கூட இருக்கலாம்.

நேற்று இரவு நித்தியா திட்டம் போட்டு தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தேன் என்று கூறியதும் ஒரு நொடி ஏன் எதற்கு என்று கோபமும் ஆதங்கமும் வந்ததுதான்.

Advertisement

ஆனால் அடுத்த நொடியே அவள் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால் தன் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை என்பது துர்க்காவிற்கு நன்றாகவே புரிந்தது.

இப்போது நித்தியாவை நினைக்கும் போது அவளையும் அறியாமல் உதட்டில் மெல்லிய சிரிப்பு, என்னதான் தன்னை பொல்லாதவளாக அவள் காட்டிக் கொண்டாலும் அவளுக்குள் இருப்பது என்னவோ சிறு குறும்பான குழந்தைதான்.

அதுவும் இவள் மீது அதிக அன்பை கொண்ட ஒரு குழந்தைதான். அவளுக்கு கிடைக்காத அன்பு கணவனின் அரவணைப்பு அதைப்பற்றி கூட அவள் பெரிதாக கவலை கொள்ளவில்லை, தன் சந்தோஷம் மட்டும் முக்கியம் என்று தன் கணவனின் மனதை மட்டும் மாற்றி, தன் வாழ்க்கை மட்டும் தான் முக்கியம் என்று அவள் எண்ணவில்லை.

அவள் கணவன் முழுமனதாக ஆத்மார்த்தமாக அவளுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றால் அவன் மனதில் இருக்கும் நெருடல் தன் தங்கையை பற்றியது.

அப்படிப்பட்ட தங்கையின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடங்கள் போராடியது இவளுக்கு தெரியாமல் இல்லை. இப்போது எல்லாமே அவளுக்கு மேகம் மறைக்காத வானாக தெளிவாக புரிந்தது.

இதோ இனி தன் கையில் தான் எல்லாம். தான் நன்றாக வாழ்ந்தால் அண்ணன்களும் சந்தோஷமாக தன் மனைவிகளுடன் வாழ்வார்கள். ஆனால் இப்படி நினைக்கும் போதே ஏதோ ஒரு நெருடல் அது என்னவென்று தான் அவளுக்கும் புரியவில்லை.

ஒருவேளை நீ இன்னொரு வாழ்க்கை வாழ தகுதி இல்லாதவள் என்று திரும்பத் திரும்ப பத்து வருடங்கள் கூறிய பிரேமாவதியின் வாயினால், உனக்கு அனைத்து வித தகுதிகளும் உள்ளது இன்னொரு வீட்டிற்கு மருமகளாக செல்ல என்று சொன்னால் இந்த நெருடல் தீர்ந்து விடுமோ என்னவோ.

தன் இருண்ட இறந்த காலத்திற்கும் தன் முன் பசுமையாக தெரியும் எதிர்காலத்துக்கும் இடையே நின்று தடுமாறிக் கொண்டிருக்கின்றது துர்க்காவின் மனது.

மீண்டும் ஒருமுறை தாய் தந்தைக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ய முடியாமல் தடுமாறி நிற்கின்றாள்.

ஆனால் அவளுக்கு ஒன்று புரியவில்லை அவள் அப்போது செய்ததும் தவறு தான், இப்போது செய்வதும் தவறுதான் தவறுகள் திருத்தப்படலாம் காத்திருப்போம்.

தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை கையில் எடுத்து ஆசை தீர பார்த்தவள் பெருமூச்சை இழுத்துவிட்டு தன் அன்றைய நாளை தொடங்கினாள்.

****

அஞ்சனாவோ வாசலில் கோலம் போட ஆயத்தமாகவும், எழுந்து வந்த பரணி “அஞ்சு சங்கு கோலம் போடுறியா.. அம்மா இருக்கும்போது போடுவாங்களே வீட்டுக்கு தனி பொலிவு வந்த மாதிரி அவ்வளவு லட்சணமா இருக்கும்…” என்று பழைய நினைவில் அவன் சொல்ல

அவனைப் பார்த்து முறைத்தவள் “உங்களுக்கு புடிச்ச மாதிரி கோலம் வேணும்னா உங்க பொண்டாட்டிய கூட்டி வந்து போட சொல்லுங்க…” என்று சொல்ல

அவனுக்கோ ஒரு நொடி நேற்று தாலியுடன் பார்த்த துர்க்கா முகம் வந்து போக, “கோலம் போடுறதுக்கு கோல பொடி இருந்தா போதும்.. இதுக்கு எதுக்கு பொண்டாட்டிய கூட்டி வர.. கோலம் போட எனக்கு கால மடிச்சு உக்காந்தா, எந்திரிக்க முடியாதுன்னு உன்கிட்ட சொன்னேன்.. முடிஞ்சா போடு இல்லன்னா விடு…”

அஞ்சனாவோ கோலம் போட்டுக் கொண்டே “முடியாதுன்னு சொல்லல.. இன்னைக்கு நான் போடுவேன் நாளைக்கு…!”

“நாளைக்கெல்லாம் தேவையில்ல நீ வரும் போது போட்டா போதும்…”

“ஏன் உங்க புது பொண்டாட்டி கோலம் போட்டா கோடு நீளாதா இல்ல வளையாதா…” என்று அஞ்சனா விடாமல் வம்பு வளர்க்க

“அஞ்சு ப்ளீஸ்.. அவ கழுத்துல அந்த தாலி இருக்கப் போறது மூணு மாசம் தான்.. அதுவரைக்கும் பொண்டாட்டின்னு சொல்லாத…”

“மூணு மாசமோ, மூணு நாளோ, இல்ல மூணு மணி நேரமோ பொண்டாட்டி தான்.. அந்த தாலி மூணு மாசம் அவ கழுத்துல இருக்கனுமா இல்ல இந்த முழு ஜென்மத்துக்குன்னு இருக்கணுமா என்றது உங்க கையில தான் இருக்கு.. கடவுள் வாழ்க்கைக்கு வழிகாட்டத் தான் முடியும் விளக்கு புடிச்சிட்டு கூடவே எல்லாம் வரமாட்டாரு.. உங்களுக்கான வாழ்க்கை உங்க கையிலேயே இருக்கு ண்ணா…” என்று அஞ்சனா சொல்ல

“அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத அஞ்சு…”

“அதைத்தான் நானும் சொல்றேன்.. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீங்களும் ஒரு முடிவு எடுக்காதீங்க ண்ணா.. திடீர்னு கழுத்துல தாலி விழுந்தா எந்த பொண்ணா இருந்தாலும் அதிர்ச்சியில அழத்தான் செய்வாள்.. உடனே உங்க கைய புடிச்சிட்டு வாரத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே காதலிச்சவங்க கிடையாது.. மிஞ்சி மிஞ்சி போனா அங்க ரெண்டு மணி நேரம் அவ இருந்து இருப்பாளா.. அந்த ரெண்டு மணி நேரத்துல அவ மனச எப்படி புரிஞ்சுக்க முடியும்..

…முதல்ல அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க.. ஒருவேள அவ மனசுல அப்படி ஒரு அபிப்பிராயம் இல்லைன்னாலும் அத வர வைக்க முயற்சி பண்ணுங்க.. நமக்கான வாழ்க்கைய தக்க வச்சிக்கிறதுக்கு போராடலாம்.. நீங்கதானே சொன்னீங்க துர்க்கா நல்லா வாழனும்னு ஆசைப்பட்டதா.. நான் கூட பாத்து இருக்கேன் அவ பொறந்த நாளுக்கு நீங்க அர்ச்சனை பண்ணுவீங்க இல்ல.. நீங்க அந்த கடவுள் கிட்ட கேட்ட நல்ல வாழ்க்கைய உங்களால அவளுக்கு கொடுக்க முடியும்.. அப்புறம் எதுக்கு இந்த தயக்கம்..

…இதுவரைக்கும் அவள நீங்க நெருங்கினது இல்ல, அவ மனச புரிஞ்சுக்க முயற்சி பண்ணதும் இல்ல.. அவள் இப்படி இருக்காளேன்னு நீங்க கவலபட்டு இருக்கீங்க எனக்கு நல்லா தெரியும்.. நீங்களும் பிரபாவும் ஊருக்கு வேணும்னா பேசாம இருக்கலாம்.. ஆனா மறைமுகமா நீங்க ரெண்டு பேரும் ஒத்த வார்த்தையில பேசிக்கிறது எனக்கு தெரியும்..

…கடைசியா நீங்க பேசிக்கிட்டதும் எனக்கு தெரியும் துர்க்கா இப்படியே இருக்காள்னு கவலப்பட்டிங்க..ஆனா நீங்க யாருமே அவள மாத்த முயற்சி பண்ணல.. இப்பவாச்சும் முயற்சி பண்ணுங்க ண்ணா…” என்று அஞ்சனா சொல்ல

பரணியின் மனதும் யோசிக்க ஆரம்பித்தது. அவள் மனதை மாற்றி அவளுக்கான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க சொல்லி கடவுளிடம் இவனும் வேண்டாத நாட்கள் இல்லை,

ஆனால் இவன் எந்த முயற்சியும் இதுவரை செய்ததில்லை. அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்ததில்லை, இப்போது செய்தால் என்ன என்று தோன்றியது.

“சரி, சரி.. நான் இதப் பத்தி யோசிக்கிறேன்.. நீ எப்ப வீட்ட போற.. நான் கொண்டு வந்து விட்டுட்டு வரவா?…”

“என்ன ண்ணா ஒரே நச்சரிக்கேன்னு என்ன விரட்ட பாக்குறிங்களோ!…” என்று இடுப்பில் கையை வைத்து அஞ்சனா கேட்க

“விடிஞ்சா உனக்கு யார்ட்டயாச்சும் சண்டை போடணுமா? மாப்பிள்ள நேத்து கோவிச்சுட்டு போனாரு நீ போய் சமாதானம் பண்ணனும் இல்லையா?…” என்று கேட்க

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அப்படியே சமாதானம் பண்ணனும்னாலும் பிரபா வீட்டுக்கு தான் போகணும்.. எப்படியும் ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு வர மாட்டார் அதுவரைக்கும் நான் இங்கேயே இருக்கேன் ண்ணா.. அவர் போகும் போது என்ன கூட்டிட்டு போகட்டும்.. எங்க வீட்டுக்கு போய் நான் அவர சமாதானப்படுத்துறேன்…” என்று சொல்ல

அவனுக்கும் தெரியுமே அகிலன் இங்கு வந்தான் என்றால் ஒரு வாரம் பத்து நாள் ஆகும் அவன் திரும்பி தன் வீட்டுக்கு செல்வதற்கு.

“சரி வா!.. இன்னைக்கு நான் சமைக்கிறேன்…” என்று பரணி உள்ளே போக

அஞ்சனாவும் தனக்கு என்ன வேண்டும் என்று கூறிக்கொண்டு அவன் பின்னோடு சென்றாள்.

****

துர்க்காவும் குளித்து முடித்து பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, பூஜை அறையில் அமர்ந்து இருக்க என்றும் இல்லாத திருநாளாக நித்தியாவும் அவள் முன்பு வந்து அமர்ந்தாள்.

அவளை அதிசயமாக பார்த்த துர்க்கா “அண்ணி இன்னைக்கு நீங்க பூஜை பண்ண போறீங்களா?…” என்று கேட்க

“அதெல்லாம் இல்ல.. நீயே பண்ணு…” என்று சொல்லி முகத்தை வெட்டிக்கொள்ள,

மெலிதாக சிரித்த துர்க்கா குத்துவிளக்குக்கு எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்ற, அவளை ஆழ்ந்து பார்த்த நித்தியாவிற்கு அந்த குத்துவிளக்கை தூக்கி அவள் மண்டையில் நங்கு நங்கு என்று அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை .

ஏனென்றால் எப்போதும் போல் காவி நிறத்தில் சேலை உடுத்தி, நெற்றியில் எப்போதும் வைக்கும் கண்ணுக்கு தெரியாத சிறிய கருப்பு போட்டு மட்டும் வைத்திருந்தாள்.

சரி அவளிடம் வேறு சேலை இல்லை இருப்பதைத்தான் உடுத்த வேண்டும். ஆனால் நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க கூடவா தோன்றவில்லை என்று காண்டாக இருந்தது.

சொல்லப்போனால் கறுப்பு பொட்டை வைக்க துர்க்காவிற்கே பிடிக்கவில்லை, கை நடுங்கியது, ஆனாலும் குங்குமம் வைக்க தைரியம் வரவில்லை.

காரணம் சகுந்தலா அங்கு தானே இருக்கின்றார். அவர் மட்டும் குங்குமத்துடன் இவளை பார்த்தால் வார்த்தையால் குத்தி கிழித்து அவள் குருதியை குடித்து விடுவாரே அந்த பயம்தான்.

நித்தியாவோ துர்க்காவை ஒருவழியாக்க வேண்டும் என்ற நோக்கோடு, தன் தாலியை எடுத்து வெளியே போட்டாள்.

துர்க்கா பூஜை செய்து முடிய, தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து “ஆத்தா மகமாயி! நான் சாகுற வரைக்கும் தீர்க்க சுமங்கலியா இருக்கணும்மா.. என் புருஷனுக்கு நீண்ட ஆயுள குடும்மா!…” என்று வாய் விட்டே வேண்டிக் கொண்டவள்

நெற்றி வகுட்டில் அவள் சுண்டுவிரல் நீளத்திற்கு குங்குமம் வைத்து, புருவ மத்தியிலும் நல்ல பெரிய வட்ட வடிவில் வைத்துக்கொண்டு, தாலியிலும் வைத்தாள்.

என்றும் இல்லாமல் நித்தியா இன்று செய்யும் செயலை துர்க்கா புருவம் சுருக்கி பார்க்க,

அவளைப் பார்த்த நித்தியா “என்ன பாக்குறீங்க.. உங்கள மாதிரி மூணு மாசத்துல தாலிய கலட்ட போறவங்க எல்லாம் பண்ண கூடாது.. நான் பண்ணலாம்…” என்றவள்

அங்கிருந்த பூவையும் எடுத்து தலை நிறைய வைத்துக் கொண்டு “பூவும் பொட்டும் வைக்கிறதுக்கு ஒரு கொடுப்பினை வேணும்.. உங்கள பாருங்க புருஷன் இருந்தும் அந்த கொடுப்பினை இல்ல…” என்று சொல்ல

துர்க்காவின் முகம் வாடி விட, வந்த வேலை சிறப்பாக முடிந்த திருப்தியில் எழுந்து அவள் வெளியே வர, அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் கிருபாகரன்.

அவனை கண்டதும் சற்று ஜர்கானாலும் உள்ளுக்குள் மனதை திடப்படுத்திக் கொண்டு “என்ன?…” என்றாள் தோரணையாக

“அவள கஷ்டப்படுத்தனும்னே இப்படி எல்லாம் பண்ற இல்ல…” என்று அவன் கோவமாக கேட்க

“உண்மையாவே நீங்க நீண்ட ஆயுளோட இருக்கணும்னு வேண்டிகிட்டேன் இது ஒரு குத்தமா…”

“இவ்வளவு நாள் இல்லாம என்ன இப்ப திடீர்னு.. இத்தன நாள் நீ வேண்டிக்கலன்னாலும் நான் நல்லா தானே இருக்கேன்…” என்று அவன் கேட்க

“இத்தன நாள் நான் உங்கள டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கலையே.. இனி தானே இருக்கு.. நான் பண்ற டார்ச்சர்ல வாழ்க்கையே வெறுத்து போயி.. நீங்க ஏதாவது பண்ணிக்கிட கூடாது இல்ல.. அதுதான் இப்பவே பலமா வேண்டுதல் வச்சுட்டேன்…” என்று கண்சிமிட்டி அவள் சொல்ல

“அடிப்பாவி!.. இன்னும் என்னதான்டி பண்ண போற…?” என்று அவன் சற்று உதறலுடனே தான் கேட்டான்.

அவளோ “இன்னும் என்ன வா!.. இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனி தான் இருக்கு.. நீங்க பண்ணுன வேலைக்கு பத்து நாள் படுக்கைய தள்ளி போட்டுட்டு விட்டுடுவேன்னு நினைச்சிங்களோ.. இனிதான் வெச்சு செய்ய போறேன்…” என்றவள் அவனை இடித்து விட்டு, சமையல் அறையினுள் நுழைந்துகொள்ள, வாயை பொத்தி அப்படியே நின்று விட்டான் கிருபாகரன்.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 14

  • Gayathri Sgh

    நித்தியா நீங்க வேற லெவல் 👌👌🤣🤣🤣🤣🤣🤣..
    அண்ணன் தம்பி 2பேருக்கும் என் சகுந்தலா பண்றது தெரிய மாட்டுது 🤦‍♀️.. டேய் 2பேரும் கொஞ்சம் அங்க என்ன நடக்குதுன்னு கனிங்க அப்பாயாவது அந்த சகுந்தலா கிட்ட இருந்து துர்கா தப்பிக்கலாம். பரணிகூட சேர்த்து வாழுறத பத்தியாவது கொஞ்சம் யோசிப்ப….

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!