Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 18

“சரவணன் கல்யாண ரிசப்ஷன்ல நான் உன் அப்பாவ முதன்முதலா பாத்தேன். நான் எங்கே போனாலும் என்னை அவர் குறுகுறுனு பார்த்துட்டு இருந்தாரு. பிரெண்ட்ஸ் எல்லாம் பேச்சிலர் பார்ட்டி கேட்டாங்கனு, நான் அவங்கள கூட்டிட்டு போய் டிரிங்க்ஸ் எடுத்து கொடுத்திட்டு இருந்தப்போ, என் பின்னாடியே வந்து ‘தம்பி நீங்க குடிப்பீங்களானு’ கேட்டாரு” என்று அன்றைய நிகழ்வை விளக்கினான்
தன்னை வேவு பார்ப்பது போல வந்த பெரியவரை பார்த்து வசீகரனுக்கு முதலில் கோபம் வந்தது “நீங்க ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க?” 


Advertisement

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, சும்மா தான் கேட்டேன்”

Advertisement

“நான் குடிக்கமாட்டேன், அப்படியே குடிச்சாலும் உங்களுக்கென்ன?” என்றவனின் கேள்வியில் அவர் முகமே வாடிப் போனது.

Advertisement

அவர் பதில் பேசாமல் அமைதியாக திரும்பி செல்லவும் வசீகரனுக்கு என்னவோ போலாகிவிட அவர் பின்னால் சென்றான். “அங்கிள், கோபப்பட்டதுக்கு சாரி, நீங்க அப்போ இருந்து என்னை ஏதோ வாட்ச் பண்றமாதிரி பீல் ஆச்சு, அதான் கோபமா பேசிட்டேன்”

Advertisement

“பரவால்லப்பா, நீங்க குடிக்க மாட்டீங்க இல்ல” என்றார் மீண்டும்
“இல்ல அங்கிள், நான் மட்டுமில்ல என் அப்பா அண்ணன் யாரும் குடிக்க மாட்டாங்க, பிரெண்ட்ஸ் கேட்டாங்கனு தான் அரேன்ஜ் பண்ணியிருந்தோம்”
“சந்தோசம் பா, எனக்கு அது போதும்” என்று சென்று விட்டார்.
மீண்டும் இருவரும் சாப்பிடும் போது எதிர்பாராத விதமாக அருகருகே அமர்ந்து இருந்தனர். முத்துமாணிக்கம் வசீகரனின் படிப்பு, வேலை என்று அவனின் மொத்த விவரத்தையும் கேட்டார். அவனும் சாப்பிட்டுக் கொண்டே பதில் சொன்னான்.
சாப்பிட்டு முடித்ததும் மற்ற சொந்தக்காரர்களிடம் வசீகரன் எப்படிப்பட்டவன் என்று அவர் விசாரித்துக் கொண்டிருந்ததை எதேச்சையாக கவனித்து விட்டான்.
கோபத்துடன் அவரருகே சென்று, “எதுக்கு என்னை பத்தி எல்லார்கிட்டயும் விசாரிச்சுட்டு இருக்கீங்க? என்ன தெரியணும் உங்களுக்கு?” என்றான் லேசான கோபத்துடன்
“இல்ல தம்பி, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் விசாரிக்காம கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். அவனுங்க குடிகாரனா இருக்கானுங்க. சின்ன பொண்ணோட வாழ்க்கையும் அப்படி ஆயிடக்கூடாதுனு தான் விசாரிச்சுட்டு இருந்தேன்.
“உங்க சின்ன பொண்ணோட வாழ்க்கைக்கும் எனக்கும் என்ன சார் சம்மந்தம்?”
“உங்கம்மா அலமேலு உங்ககிட்ட எதுவும் சொல்லலயாப்பா?”
“இல்லயே”
“அப்படியா? சரிப்பா” என்று அவர் ஏதோ யோசனையோடு வேறு பக்கம் செல்ல எத்தனிக்க
“என்னனு தெளிவா சொல்லிட்டு போங்க”
“உங்கம்மா உங்ககிட்ட விசயத்தை இன்னும் சொல்லாதப்போ நான் சொல்றது சரியானு எனக்கு தெரியல. நீங்க வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்கறதால இன்னும் சொல்லியிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்”
“பரவால்ல என்ன விஷயம்னு நீங்க சொல்லுங்க, அம்மா சொல்றவரைக்கும் நான் தெரியாத மாதிரி இருந்துக்கறேன்”
முத்துமாணிக்கம் தயக்கத்துடன் எதுவும் பேசாமல் இருக்கவும், “ப்ளீஸ் சொல்லுங்க” என்று அவரை ஊக்கினான்.
“அலமேலு எனக்கு தங்கச்சி முறை, எங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வந்தப்போ என் மகன் வசீகரனுக்கு உங்க சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பியானு கேட்டுச்சு, இது நாம ரெண்டு பேரும் எடுக்கற முடிவில்லயேம்மானு நானும் சொன்னேன். உங்க போட்டாவ காட்டினதும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எம்மவளுக்கு கண்ணுக்கு நிறைவா புருசன் கிடைக்க போவுதேனு மனசுக்குள்ளாற ஒரு ஆச வந்துடுச்சு. ஆனாலும் தயங்கினேன். என் மகன் எனக்கு வாக்கு கொடுத்திருக்கான், நான் சொல்ற பொண்ணை கட்டிப்பான்னு நம்பிக்கையா சொல்லிட்டு தாம்பூலமும் மாத்தி என் மவ தலையில பூவும் வைச்சுட்டு போச்சு. உங்க ரெண்டு பேருக்கும் படிப்பு முடிஞ்சதும் கண்ணாலம் வச்சுக்கலாம்னு சொல்லுச்சு. 
உங்களப்பத்தி எதுவும் தெரியாம அலமேலு மேல இருந்த நம்பிக்கையில சரிண்ணுட்டேன்.  இருந்தாலும் மாப்பிள்ளை எப்படிப்பட்டவரோனு மனசுல ஒரு கலக்கம். அதான் கல்யாணத்துல உங்கள பத்தி விசாரிச்சேன். தப்பா எடுத்துக்காதப்பா. எங்க ஊர்பக்கம் மாப்பிள்ளை எப்படினு கல்யாணத்துக்கு முன்னாடி விசாரிக்கறது வழக்கம். நீங்க வேணும்னா என் பொண்ணு எப்படினு ஊருக்குள்ளாற விசாரிச்சுக்கோங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”
இதைக் கேட்டதும் வசீகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, தனக்கு தெரியாமல் கல்யாண சம்மந்தத்தை முடித்து விட்ட தாயின் மேல் கோபம் வந்தாலும் கிராமத்து மனிதரான அவரின் நேர்மையான பேச்சும் வெள்ளந்தியான குணமும் அவனுக்கு பிடித்திருந்தது. 
“நீங்க எல்லாம் இன்னும் அந்த காலத்துல இருந்து வெளிய வரவே இல்லையா? பொண்ணு மாப்பிள்ளைக்கு தெரியாம ரெண்டு பேருமா கல்யாணத்த பேசி முடிச்சிருக்கீங்க? எங்கம்மா என்கிட்ட சொல்லாத மாதிரி, நீங்களும் உங்க பொண்ணுகிட்ட விஷயத்தை சொல்லல தானே? நாங்க ரெண்டு பேரும் கல்யாண மேடையில தாலி கட்றப்போ பாத்துக்கணுமா?” என்றான் நக்கலாக
“அலமேலு சம்மந்தம் பேசினப்பவே நான் என்மவகிட்ட படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்லிட்டேன், உங்க போட்டோவ தான் இன்னும் காட்டல, பொண்ணு பாக்க வரும் போது நேர்ல பாத்துக்கட்டும்னு விட்டுட்டேன்”
“அப்படியா? என்னை பாக்காமலே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களா?” ஆச்சரியத்துடன் கேட்டான்
“நீங்க எப்படி இருப்பீங்கனு மட்டும் தான் சொன்னேன். படிக்கற பொண்ணு இல்லயா, மனச கெடுக்க வேணாம், பொறவு பாத்துக்கட்டும்னு நினைச்சேன். அவளும் உங்கள பாக்கணும்னு கேக்கல. ஆனா உங்கள கட்டிக்க மாட்டேன்னும் சொல்லல”
“அதவச்சு அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கனு எப்படி நினைக்கறீங்க?
“என் பொண்ணு மனசுல என்ன நினைக்கிறானு எனக்கு தெரியாதா? உங்க பேரை சொன்னாலே வெக்கப்பட்டுட்டு ஓடுவா, உன் மாமன் வசீகரனுக்கு தான் உன்னை பேசியிருக்குனு சொன்னா போதும் போங்கப்பானு சொல்லிட்டு வெக்கப்பட்டுனு உள்ளாற ஓடிடுவா” என்றார் முறுவலுடன்
“என்னை பாக்காமலே என்னை நினைச்சு வெக்கப்படறாங்களா? இன்ட்ரஸ்டிங். ஆனா எனக்கு அவங்கள பாக்கணும் போல இருக்கு, போட்டோ இருந்தா கொடுங்க, பாக்கலாம்”
“மாடு கன்னுக்குட்டி போட்டப்போ எடுத்த போட்டோ தான் போன்ல இருக்கு, அவ பாவாடை சட்டையில இருப்பாளே” என்றார் யோசனையுடன்
“பரவால்ல கொடுங்க” என்றான்
முத்துமாணிக்கம் கொடுத்த புகைப்படத்தில் சின்னபொண்ணு கன்னுக்குட்டியோடு நின்றிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு குழந்தை தனம். கன்னுகுட்டியோடு சேர்த்து அவளையும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல இருந்தது அவனுக்கு. 
இருபுறமும் தலைமுடியை பின்னலிட்டு மடித்து ரிப்பன் போட்டு கட்டியிருந்தாள். முகத்தில் எந்த ஒப்பனையுமில்லை. மாசற்ற முகத்தில் அகன்ற கண்களும், வளைந்த புருவமும், சிவந்த உதடுகளும், குழந்தை சிரிப்பும் என அவளை சிறு பெண்ணாகவே ரசித்தான். ‘இத்தணூன்டு இருந்துட்டு என் பேரை கேட்டு வெக்கப்படறீயா?’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டான். இவ்வளவு சின்னவளாக இருக்கிறாளே என்றும் யோசித்தான்.
“நீங்க என்ன யோசிக்கறீங்கனு தெரியுது தம்பி. இப்போ தான் பிளஸ்டூ படிக்கறா. புடவை கட்டினா பெரிய மனுஷி மாதிரி தெரிவா. நீங்களும் அவளும் படிச்சு முடிக்கறதுக்குள்ள உங்க உசரத்துக்கு வளர்ந்து நிப்பா பாருங்க. பொண்ணுங்களுக்கு வளர்ச்சி அதிகம். 
அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு. என் வீட்ல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா, எனக்கும் வயசாயிடுச்சு. முன்ன மாதிரி உடம்பும் இருக்கறதில்ல. நான் உசுரோட இருக்கறப்பவே ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டா நிம்மதியா போயிடுவேன். வாழப்போற இடத்துலயாவது சந்தோசமா இருக்கணும்னு தான் அலமேலு கேட்டதும் சரின்னுட்டேன்”
ஏனோ அந்த நிமிஷம் அவரின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து, “கவலப்படாதீங்க, உங்க பொண்ணு சந்தோசமா இருப்பா” என்றவன் புகைப்படத்தில் இருந்த சின்னபொண்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு சின்னுவ பிடிக்கலையா தம்பி” என்றார் ஏமாற்றத்துடன்
அவளை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு அவனுக்கு எந்த காரணமும் இல்லை. அவர் சொன்னது போல அவர்கள் திருமணம் இப்போதல்லவே, மூன்று நான்கு வருடங்கள் கழித்து தானே, அதற்குள் அவளும் வளர்ந்து விடுவாள். அதுமட்டுமில்லாமல் அவனுக்கு முத்துமாணிக்கத்தை மிகவும் பிடித்து விட்டது. அவரை போலவே அவரின் மகளும் வெள்ளந்தியான குணத்தோடு தான் இருப்பாள் என்று தோன்றியது. 
வெளிநாட்டில் ஆண்பெண் உறவை பார்த்திருந்தவனுக்கு காதல் மேல் நம்பிக்கையே போய் விட்டிருந்தது. ஆனால் இங்கே ஒருத்தி அவன் முகத்தை பார்க்காமலே, அவன் யார்? எப்படியிருப்பான் நல்லவனா? கெட்டவனா? என்று தெரியாமல் தந்தை சொன்ன வார்த்தைக்காக திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள். அது அவள் தந்தை மேல் வைத்த நம்பிக்கை என்றால் அவள் தந்தையோ பெண்ணின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக அவனை பற்றி அவனிடமே விசாரிக்கிறார்.
வசீகரன் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டே இருக்கவும், “புரியுது தம்பி, நீங்க வெளிநாட்டுல படிச்சிருக்கீங்க? பாக்கவும் ஹீரோ போல இருக்கீங்க, என் பொண்ணு பாக்க சுமாரா தான் இருப்பா. நான் கொஞ்சம் பெரிசா ஆசப்பட்டுட்டேன்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுங்கிற மாதிரி என் மவ எனக்கு அழகியா தான் தெரிவா. ஆனா உங்களுக்கும் அப்படியே தெரியணும்னு அவசியமில்லயே. பரவால்லப்பா, நான் என் மவகிட்ட இந்த சம்மந்தம் சரிவராதுனு சொல்லிக்கிறேன்” 
“ஐயோ மாமா. எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு, இந்த போட்டோவ எனக்கு அனுப்பறீங்களானு கேக்கறதுக்கு தான் தயங்கிட்டு இருந்தேன்?” அவன் சட்டென மாமா என்று அழைத்ததும் முத்துமாணிக்கத்தின் உச்சி குளிர்ந்து போனது. 
புன்னகையுடன் “அதுக்கென்ன மாப்பிள்ள, போட்டோவ உங்க போனுக்கு அனுப்பிக்கோங்க, அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று அவரின் போனை அவன் கையில் கொடுத்தார்.
அதை வாங்கி தன் கைப்பேசிக்கு அனுப்பி கொண்டான். அப்படியே அவர் கைப்பேசியிலிருந்து தன் எண்ணை அழுத்தி தன் போனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டான்.
 
“தேங்க்ஸ் மாமா. அம்மாவே என்கிட்ட சொல்றவரைக்கும் நான் தெரியாத மாதிரி தான் இருக்க போறேன், நீங்களும் அம்மாகிட்ட சொல்லாதீங்க” என்றவன் வெகுநேரம் முத்துமாணிக்கத்துடன் பேசி கொண்டு இருந்துவிட்டு இறுதியாக தூங்க செல்லும் முன் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டான். சட்டென புதியவர்களிடம் பழகி அவர்களை தன் பேச்சால் நெருங்கி விடும் வசீகரம் அவனிடம் இயற்கையிலேயே இருந்தது. வசீகரனின் பேச்சால் வசீகரிக்கப்பட்டிருந்த முத்து மாணிக்கம் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஒற்றை கண்ணை அடித்து அதை க்ளிக் செய்திருந்தான்.
மறுநாள் காலை சரவணன் திருமணம் முடிந்து அவன் அவசரமாக பிளைட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான். முத்துமாணிக்கத்திடம் வந்து, “மாமா, இந்த காலத்துல போட்டோவ கூட காட்டாம கல்யாணம் பண்ணிக்கறது சரிவராது. இந்தாங்க இதுல என் போட்டோ இருக்கு. உங்க பொண்ணுகிட்ட கொடுங்க, பிடிச்சிருக்கானு கேட்டுட்டு எனக்கு போன் பண்ணி சொல்லுங்க” என்று புகைப்படத்தை நீட்டினான்.
பின்பு, “பேரு என்ன சொன்னீங்க?”
“வேண்டா” 
அந்த நேரம் அவளின் பேரை பற்றிய பின்னனியை அவன் விசாரிக்கவில்லை, அவசரமாக VV என்று எழுதி அதை சுற்றி இதயம் வரைந்து ‘வித் லவ் வசி’ என்று எழுதி கொடுத்தான்.
“இந்த போட்டோவ இப்போ கொடுக்காதீங்க, ஏன்னா அவ மேஜர் இல்ல. இப்போ அவளுக்கு முடிவெடுக்கற பக்குவம் வந்திருக்காது. ப்ளஸ்டூ பரிட்சை முடிஞ்சதும் பதினெட்டு வயசு கம்ளீட் ஆன பின்னாடி போட்டோவ காட்டுங்க. அவ டிகிரியும் படிக்கட்டும், நானும் அதுக்குள்ள பிசினஸ்ஸ தொடங்கி செட்டில் ஆயிடுவேன். அதுக்கப்புறம் நீங்களும் அம்மாவும் முடிவெடுத்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறோம்”
தன்னைவிட சின்னவனான வசீகரனின் முதிர்ந்த பேச்சில் முத்துமாணிக்கம் மகிழ்ந்து போனார். 
தன் பெண்ணுக்கு வசீகரனை விட பொருத்தமானவன் யாரும் இருக்க முடியாது என்று எண்ணினார், அதை அவனிடமும் கூறினார்.
“என் சின்ன பொண்ணை பயந்த சுபாவம், நிறைய பேச மாட்டா. அக்காங்க கிட்ட கூட தன் உரிமைக்காக சண்டை போட மாட்டா. அவங்களும் அவளோட சுபாவத்துக்கு அவள ஈசியா ஏமாத்திடுவாங்க. ஆனா நீங்க ரொம்ப பொறுப்பா பேசறீங்க, பார்த்த ஒரே நாள்ல என்கிட்ட இவ்வளவு உரிமையோட பாசத்தோட நடந்துக்கறீங்க. என் மனசுல இருந்த கலக்கம் எல்லாம் போயிடுச்சுங்க மாப்பிள்ள. என் பொண்ணுக்கு உங்களவிட பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இருக்க முடியாது”
“அத நீங்க மட்டும் சொல்லக்கூடாது மாமா, உங்க பொண்ணும் சொல்லணும். இன்னும் ஒரு வருஷத்துல யுஎஸ்ல என் படிப்பு முடிஞ்சுடும், அப்புறம் இந்தியா வந்துடுவேன். அப்புறம் வந்து நான் உங்கள மீட் பண்றேன்” என்று அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்றிருந்தான்.
ஆனால் அது தான் அவருக்கும் அவனுக்குமான முதலும் கடைசியுமான சந்திப்பு என்பதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை
(தொடரும்)

One thought on “மெளனம் 18

  • Keerthana

    Super 😊story. Vasi character ultimate

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!