Skip to content
Post Views: 544
மணமக்கள் வீட்டை அடைந்ததும், “ரஞ்சனி போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வாம்மா” என்று நடராஜன் மகளிடம் சொல்ல, அவளும் கரைத்து எடுத்து வந்தாள்.
“அலமு, என்ன பராக்கு பாத்துட்டு இருக்கே, வீட்டு பொம்பளைங்க மூணு பேரும் சேர்ந்து ஆரத்தி எடுங்க. லதா போம்மா” என்று நடராஜன் கூறவும் கடுப்பை மறைத்துக் கொண்டு ரஞ்சனியிடமிருந்து தட்டை வாங்கினாள்.
Advertisement
லதா அன்று குழந்தையோடு வந்தபோது சின்னபொண்ணு ஒரு வேலைக்காரியாய் வந்து நின்ற கோலமும் இன்று அவள் இந்த வீட்டு மருமகளாய் வசீகரனுடன் நின்றிருக்கும் கோலமும் மாறி மாறி காட்சிகளாக தோன்றியது.
Advertisement
சின்னபொண்ணுவிற்கும் அதே நினைவு தான், அன்று இதே காரில் சரவணன் லதாவுடன் வந்து இறங்கிய போது அலமேலுவை கண்டதும் எப்படி கலங்கி நின்றாளோ இப்போதும் அதே கலக்கம் தான். என்னதான் அலமேலு அவளை அழைத்து மணமேடையில் ஏற சொல்லியிருந்தாலும் அது சூழ்நிலையினால் நடந்ததே தவிர. முழு மனதோடு அல்லவே. லதாவிற்கு தன் வருகை விருப்பமில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
Advertisement
இனி இவர்களோடு என் வாழ்க்கை பயணம் எப்படி இருக்க போகிறது? வேண்டா இப்போது வேண்டாத மருமகளாக அந்த வீட்டிற்குள் நுழையப்போகிறாள். வசீகரன் அவளின் மனபோக்கை உணர்ந்தானோ என்னவோ, அவள் தோளை அழுத்தி தன்னோடு நெருக்கமாக அவளை நிறுத்திக் கொண்டான். அவனின் கதகதப்பு அவள் நடுக்கத்தை சற்றே குறைக்கவும், அண்ணாந்து அவனை பார்த்தாள். கண் இமைகளை மூடி திறந்து நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லவும் தலை கவிழ்ந்தாள்.
Advertisement
‘என் வீட்டு வேலைக்காரி, எனக்கு ஓரகத்தி, நான் அவளுக்கு ஆரத்தி எடுக்கணுமா?’ என்று லதாவிற்கு உள்ளுக்குள் புகைந்தது. ஆனாலும் அதை காட்டினால் சரவணன் கோவித்து கொள்வான். அவனுடைய அன்பும் அலாதியான பிரியமும் கெட்டு விடக்கூடாது என்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஆரத்தி எடுத்தாள், அலமேலு யாருக்கு வந்த விருந்தோ என்பது போல நின்றிருக்க, “டேய் அண்ணா, காசு கொடுடா” என்று ரஞ்சனி வசியை மிரட்டினாள்.
“சின்னு, ரஞ்சனி காசு கேக்கறா கொடுக்கட்டுமா வேணாமா?” என்றான் மனைவியிடம்
அவள் அதிர்ந்து விழிக்க, “டேய் உன் பொண்டாட்டி சொன்னா தான் காசு போடுவியா?” என்று நடராஜன் சிரித்தார்.
“ஆமாப்பா, கார்ல வரும்போது நமக்கு கல்யாணமாயிடுச்சு, இதுக்கு மேல வீண் செலவெல்லாம் பண்ணக்கூடாதுனு சொன்னா. அதான் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு கேட்டேன், அப்புறம் சண்டை போட்டா என்ன பண்றது?”
“ஐயோ நான் எதுவுமே பேசல” என்றாள் சின்னபொண்ணு பதறிக் கொண்டு
“அண்ணி, நீங்க பதறாதீங்க. அவன் எப்பவுமே இப்படித்தான் எதாச்சும் வம்பு பண்ணிட்டு இருப்பான். நானும் கார்ல உங்க கூட தானே வந்தேன்” என்றாள் ரஞ்சனி
இருவரும் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்ததும், முதன்முறையாக அந்த வீட்டின் பூஜையறைக்குள் நுழைந்தாள். இருவரும் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டதும், சின்னபொண்ணு சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி அனைவரிடமும் கொண்டு சென்று கொடுத்தாள்
வசியிடம் சென்றபோது அவளை முறைத்தான். “பாலை காய்ச்சினதோட வரவேண்டியது தானே” பற்களுக்கிடையே முணுமுணுத்துவிட்டு அவன் அருகில் அமரும்படி கண்களால் காட்ட, அவளோ தயங்கினாள். ஹாலில் குடும்பமே வட்ட வடிவ நீள் இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு சரியாக வசீகரனுடன் சேர்ந்து அமர்வதா?
“நீயா உட்கார்றீயா, நான் இழுத்து என் மடியில உட்கார வைக்கவா?” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் கூற, பட்டென்று அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் அலமேலு, லதா இருவருமே சொல்லி வைத்தாற் போல எழவும், தான் அமர்ந்ததால் தான் அவர்கள் எழுந்துவிட்டார்கள் என்று சின்னபொண்ணு எழ முயற்சிக்க, அவளால் எழ முடியவில்லை. வசீகரன் அவளின் இடுப்பை தன் கரங்களால் சுற்றி வளைத்திருந்தான்.
“ஏன் எழற? உட்காரு” கண்களால் மிரட்ட, அவள் அலமேலுவையும் லதாவையும் பார்த்தாள்.
“அம்மா, அண்ணி ரெண்டு பேரும் ஏன் எழுந்துட்டீங்க?” என்றான்
“எனக்கு டயர்டா இருக்கு நான் போய் படுக்கறேன்” அலமேலு சொல்ல, “நானும் குழந்தைய தூங்க வைக்கணும்” என்றாள் லதா.
“சின்னு நாமளும் நம்ம ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுப்போமா? எனக்கும் டயர்டா இருக்கு” என்றான் மனைவியை பார்த்து
“டேய், ராத்திரி வரைக்கும் கொஞ்சம் பொறுடா” சரவணன் கிண்டலடித்தான்.
“நிஜமாவே டயர்டா இருக்குடா”
“அப்போ நீமட்டும் போய் தூங்கு”
“இல்ல நான் இங்கேயே இருக்கேன்” என்றவன் சின்னபொண்ணுவின் இடையை தன்னோடு நெருக்கி கொண்டான். அவள் சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தாள். அவன் விரல்கள் இடையை சுற்றியிருந்த புடவையை விலக்கி ஒற்றை விரலால் அவளின் வெற்றிடையை வருடவும் மூச்சு முட்டியது, பதறி எழ முயற்சித்தாள். அவன் கரங்கள் அவளை உடும்புபிடியாய் பிடித்திருந்ததில் அவளால் அசைய முடியவில்லை.
அதிர்ச்சியோடு அவனை பார்க்க, அவனோ சீரியசாக தங்கையிடம் “ரஞ்சு காலேஜ் லீவு தானே?” என்றான்.
“இல்லடா, இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு, நான் காலேஜ்க்கு கிளம்பணும்” என்று ரஞ்சனி எழுந்து மாடிக்கு சென்றாள்.
லதா தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு அறைக்குள் செல்ல எத்தனிக்கவும்
“லதா, ஆளாளுக்கு போயிட்டா புதுசா கல்யாணமாகி வந்தவங்களுக்கு யார் சாப்பாடு போடறது? குழந்தைய என்கிட்ட கொடு நான் பாத்துக்கறேன். நீ சமையல் ஆயிடுச்சானு பாத்து கூட இருந்து அவங்களுக்கு சாப்பாடு போட்டு, நீயும் சாப்பிடு” என்றான் சரவணன்
“நானும் பாத்துட்டே இருக்கேன், இந்த வீட்ல என்னை வேலை வாங்கிட்டே இருக்கீங்க? நான் யாருனு தெரியுமில்ல? எம்எல்ஏவோட பொண்ணு, என் வீட்ல நான் ஒருவேலை கூட செஞ்சதில்ல தெரியுமா? நான் ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி இல்ல”
“நம்ம வீட்டு ஆளுங்களுக்கு கிட்ட இருந்து சாப்பாடு போடறது வேலையா? சமையல்காரர் செஞ்சு எடுத்துட்டு வந்து டேபிள்ல வச்ச சாப்பாட தானே போட சொல்றேன். சமைக்கவா சொன்னேன்?” சரவணன் எரிச்சலாக கேட்டான்.
“ஓ சமைக்க வேற சொல்லுவீங்களா?”
“சார், சாரி மாமா. நீங்க எல்லாரும் உட்காருங்க நான் எல்லாருக்கும் சாப்பாடு பறிமாறேன்” என்று அவசரமாக எழ முயற்சித்தாள். அவன் விட்டால் தானே! இடையை வளைத்திருந்தவனின் பிடி இறுகியது. அவள் கால்மீது தன் உள்ளங்காலை வைத்து அழுத்திக் கொண்டிருந்தான்.
வசியின் செயலை சின்னபொண்ணுவின் பட்டுப்புடவையும், அவனின் பட்டுவேட்டியும் மறைத்திருந்தது. லதாவும் சின்னபொண்ணு எழுந்து சமையலறைக்கு சென்றால் தானும் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்கு செல்லலாம் என்று பார்த்தாள். ஆனால் சொன்னாளே தவிர அசைவதாக தெரியவில்லையே என்று சின்னபொண்ணுவையே பார்த்தாள்.
“லதா, புதுசா கல்யாணமாகி வந்த பொண்ணே நான் சாப்பாடு போடறேன்னு சொல்றா, நீயேன் இப்படி இருக்கே?” என்று சரவணன் பேச்சை வளர்க்கவும்
“சரவணா, அண்ணிய திட்டாதே. அவங்களும் எவ்வளவு வேலை பாத்தாங்க. டயர்டா இருக்குமில்ல? நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அண்ணி” என்றான் வசீகரன்
சரவணனுக்கு கோபம் வந்திருந்தது. அங்கேயே நின்றால் பேச்சு வளர்ந்து நல்ல நாளில் சண்டை ஆகிவிடும் என்று வெளியே சென்று விட்டான். அனைவரும் சென்றதும் ஹாலில் வசீகரனும் சின்னபொண்ணுவும் மட்டும் தனியே இருக்கவும், “ஏங்க இப்படி பண்றீங்க?” என்றாள் ஆதங்கத்தோடு
“நான் என்ன பண்ணேன் சின்னு? எதுவுமே பண்ணலயே”
“என்னை எழவிடாம பிடிச்சுக்கிட்டீங்களே”
“நீ இந்த வீட்டு மருமக, வேலைக்காரி இல்ல. அத நல்லா மனசுல பதிஞ்சுக்கோ”
“மருமக வீட்ல வேலை செய்யக்கூடாதா?”
“எங்க அண்ணி செய்யறாங்களா?”
“அவங்க வீட்ல அவங்க வேலை செய்யாம வளர்ந்திருக்காங்க. நான் என்வீட்ல அப்படி வளரல. நான் சாப்பாடு போட்டிருந்தா சரவணன் மாமா லதா அக்கா எல்லாருமே சாப்பிட்டு இருப்பாங்க. உங்களால தான் சாப்பிடாமலே போயிட்டாங்க” என்றாள் குற்றம் சாட்டும் விதமாக
“பசிச்சா அவங்களே போட்டு சாப்பிடுவாங்க விடு. ரஞ்சனி காலேஜ்க்கு கிளம்பிட்டா. மேலே வர்றீயா என் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்” என்றான் ஒரு மாதிரி குரலில்
“ம்ஹூம்”
அவளை முறைத்துவிட்டு டிவியை ஆன் செய்தான். “அம்மு குட்டியே அழகே” என்ற பாடலை சத்தமாக ஒலிக்க விட்டு அவளை பார்த்து கண் சிமிட்டினான். அவள் நாணத்துடன் தலைகவிழ அவள் கன்னத்தில் முதன்முறையாக இதழ்பதித்திருந்தான். அவள் உடல் சிலிர்த்து அடங்கியதை கவனித்தவன் “சின்னு” என்று அவள் காதுமடலில் மீசை உரச மெல்லிய குரலில் அழைத்தான்.
“ம்”
“நான் உனக்கு யாரு”
“மாமு” நாணத்துடன் தலைகவிழ்ந்தாள்
“மாமானு சொல்லாம அதென்ன மாமு? நான் உன்னை சின்னுனு சொல்ற மாதிரி ஷார்ட் பார்மா?”
“என் அக்கா வீட்டுக்காரங்க நாலு பேரில்லாம எனக்கு நிறைய மாமா இருக்காங்க. உங்களையும் மாமானு கூப்பிட்டா ஒரே மாதிரி இருக்கும். வேற எப்படி கூப்பிடறதுனு தெரியல, அதான்”
“ஓ, ஸ்பெஷலா கூப்பிட நினைச்சியா? அம்புட்டு பாசமா உன் மாமு மேல” என்று அவள் காதுமடல்களை இதழ்களால் உரசினான்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கட்டுமா?”
“ஒண்ணு என்ன பத்து கேளு சொல்றேன்”
“லீவு முடிஞ்சதும் காலேஜ் போகலாமில்ல?”
“இதென்ன கேள்வி, போய் தான் ஆகணும். நானும் உன் படிப்பு முடியட்டும்னு தான் இருந்தேன். நீ படிச்சு உனக்குனு ஒரு இடத்தை பிடிக்கணும், நானும் தொழில்ல நல்லா வளரணும், அதுக்கப்புறம் தான் கல்யாணம்னு முடிவு பண்ணியிருந்தேன். இவங்க பிரச்சனை பண்ணி என்னை சிக்க வச்சிட்டாங்க, வேற வழியில்லாம நம்ம கல்யாணத்தை நடத்த வேண்டியதா போயிடுச்சு. அதுக்காக நாம செய்ய நினைச்சத செய்யாம இருக்க முடியுமா? ஒரு வாரத்துக்கு அப்புறம் நீ காலேஜூக்கு கிளம்பு”
“படிப்பு முடியறவரைக்கும் இதெல்லாம் தள்ளி வைக்கலாமா?” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
“எதெல்லாம்” என்றான் வேண்டுமென்றே
“இப்படி நீங்க என்னை” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் தத்தளிக்க
“உன்னை நான் என்ன பண்ணேன் சின்னு?” என்றான் புருவம் உயர்த்தி
“சொல்லு சின்னு, நான் எதாவது பண்ணனா?” என்றான் அதட்டல் போல
மிடறு விழுங்கியவள், தலையை இடமும் வலமாக அசைத்து இல்லையென தலையசைத்தாள்.
நடராஜன் தொண்டையை கனைத்தபடி ஹாலுக்கு வந்தபின்பு தான் அவளின் மீதிருந்த தன் பிடியை தளர்த்தினான். சின்னு எழுந்து கொண்டு, “சாப்பிடறீங்களா மாமா?” என்று கேட்டாள்.
“ஆமாம்மா, சாப்பிட்டு ஆபிசுக்கு போகணும்”
“உட்காருங்க மாமா” என்றவள் திரும்பி வசியை கண்களால் அழைக்கவும் அவனும் எழுந்து சென்றான். சமையலறைக்கு சென்று காளியப்பா சமைத்திருந்த உணவுகளை எடுத்து வைத்தபோது சரவணனும் வந்தான். அவனையும் அழைத்து அமர வைத்து மூவருக்கும் சாப்பாடு பறிமாறினாள்.
“நீயும் வசி கூடவே உட்கார்ந்து சாப்பிடும்மா” என்றார் நடராஜன்
அவள் தயங்கவும் மூவருமே அவளை அமர சொல்லவும் வேறு வழியின்றி அமர்ந்து அவர்களோடு சாப்பிட தொடங்கினாள்.
“வேண்டா, நீ இந்த வீட்டோட மருமக. உரிமையோட உனக்கு என்ன வேணுமோ காளியப்பா கிட்ட செய்ய சொல்லி சாப்பிடணும். யாருக்காகவும் பாக்காதே சரியா?” என்றார் நடராஜன்.
“சரி மாமா” என்றவள் சாப்பிட தொடங்கவும் ஆண்கள் மூவரும் தங்கள் வேலையை பற்றி பேசிக் கொண்டே சாப்பிடனர், இடையிடையே சின்னபொண்ணுவையும் தங்கள் பேச்சில் ஈடுபட வைத்து அவளை சகஜமாக சாப்பிட வைத்தனர்.
லதா அறையின் கதவோரம் நின்றபடி சாப்பாட்டு மேஜையை பார்த்துக் கொண்டிருந்தனர். சின்னபொண்ணு வீட்டு ஆண்களுக்கு சரியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறாள் என்று லதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இதற்கெல்லாம் காரணமான அலமேலுவை நினைத்து கோபம் தான் வந்தது. பசி வேறு வயிற்றை கிள்ளியது ஆனால் இப்போது சென்றால் சின்னபொண்ணுவுடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று உள்ளேயே இருந்தாள்.
நால்வரும் சாப்பிட்டு முடித்ததும், “வேண்டா, மேலே ரஞ்சனி ரூம் ப்ரீயா தான் இருக்கு, கொஞ்ச நேரம் போய் தூங்கி ரெஸ்ட் எடும்மா, வசி நீ போய் அவளுக்கு ரூமை காட்டு” என்றார் நடராஜன்.
“சரிப்பா” என்றவன் தன் சின்னுவை கண்டு மர்ம புன்னகை செய்தான். அவள் புரியாமல் விழிக்கவும், “வா சின்னு, கொஞ்ச நேரம் ரஞ்சனி ரூம்ல ரெஸ்ட் எடு” என்றான் நல்ல பிள்ளையாக
அவளும் அவனுடன் படிகளில் ஏறி சென்றாள். அதற்கு பின்பே அலமேலுவும் லதாவும் சாப்பாட்டு மேஜைக்கு வந்து சாப்பிட தொடங்கினார்கள்.
முதலில் இருந்த அறைக்குள் நுழைய போனவளை தடுத்தான், “சின்னு அது என் ரூம், உனக்கு இப்பவே ஓகேனா எனக்கும் ஓகே” என்றான் ஒரு மாதிரி குரலில்.
அவசரமாக அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள். வீட்டிற்குள் இருக்கும் மாடியில் இருவரின் அறை இருக்கிறது என்பது வரை தான் அவளுக்கு தெரியும். வசீகரன் இருப்பதாலேயே அவள் இதுவரை மாடிக்கு சென்றதே இல்லை. அதனால் இருவரின் அறையும் தெரியாது.
“சரிங்க மாமு, நீங்க உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க, நான் அந்த ரூம்ல இருக்கேன்” என்றவள் மரத்திலான வளைவை தாண்டி கடைசியாக இருந்த அறைக்குள் நுழைந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அறைக்குள் பெண்கள் உபயோகிக்கும் எந்த பொருட்களும் இல்லை.
அறையில் ஆண்கள் அணியும் ஆடைகளும் ஷூக்களுமே இருந்தது. அறைக்குள் வேறு வசீகரன் உபயோகிக்கும் வாசனை திரவியத்தின் மணம் வேறு வரவும் சந்தேகத்துடன் திரும்பி பார்த்தாள். வசீகரன் சத்தமில்லாமல் கதவை தாழிட்டு முடித்திருந்தான்.
“ஐயோ” என்று கத்தப்போனவளின் வாயை பொத்தி “கத்தாதடி” என்றான்
“நான் முதல்ல போனது தான் ரஞ்சனி ரூமா?”
“ஆமா”
“அப்புறம் ஏன் அது உங்களோடதுனு பொய் சொன்னீங்க? மாமா, ரஞ்சனி ரூம்ல தானே ரெஸ்ட் எடுக்க சொன்னாரு”
“அவர் அப்படி தான் சொல்லுவாரு சின்னு, நான் என் ரூமுக்கு தான் கூட்டிட்டு போவேன்னு அவங்க எல்லாருக்கும் தெரியும்” என்று அவளின் இடைப்பற்றி தன் உயரத்திற்கு தூக்கினான்.
“கீழே இறக்கி விடுங்க” அவன் கைகளில் மீனாய் துள்ளினாள்
“உன்னை இப்படி தூக்கி கொஞ்சணும்னு எவ்ளோ நாளா ஆசை தெரியுமா?”
“எவ்வளவு நாளா?”
“நீ ஒரு கன்னுகுட்டிய தூக்கி வச்சிட்டு பாவாடை சட்டை போட்டுட்டு இருந்தியே, அந்த போட்டோவ பாத்ததுல இருந்து, கன்னுகுட்டியோட என் சின்னுவையும் சேர்த்து அப்பவே தூக்கி கொஞ்சணும் போல இருந்துச்சு”
“நானும் உங்க கிட்ட நிறைய விஷயம் கேக்கணும்னு நினைச்சேன். என் அப்பாவ நீங்க முன்னாடியே பார்த்து பேசியிருக்கீங்களா? என்னோட போட்டோ எப்படி உங்க கிட்ட வந்துச்சு?”
“இப்போ கேளுடி, இதையெல்லாம் உன்கிட்ட பேசலாம்னு தான் நீ இந்த வீட்டுக்கு வந்த புதுசுல கீழே தங்கியிருந்த ரூம் பக்கம் நான் வந்தேன். கதவை திறந்துட்டு என்னை பாத்ததும் கதவ சாத்திட்டு போயிட்டே. சரி காலேஜ்ல டிராப் பண்றதா சொல்லி அழைச்சிட்டு போய் பேசலாம்னு பார்த்தா முகத்தை திருப்பற, பாக்கறப்ப எல்லாம் ஓடி ஒளிஞ்சா என்னடி பண்றது? அதான் எதுவும் சொல்லாமலே உன்னை சீண்டி விளையாடி உன் மனசுக்குள்ள நுழைய நினைச்சேன், நுழைஞ்சிட்டேன்”
“சரி இப்பவாச்சும் சொல்லுங்க”
“நான் வேற மூட்ல இருக்கேனே”
“ப்ளீஸ் மாமு” என்று அவள் கெஞ்சவும், அவளின் மாமு என்ற அழைப்பில் கரைந்தவன் அவளை கீழே இறக்கி விட்டான்.
அங்கிருந்த நீள் இருக்கையில் அமர்ந்தான். அவளை அமரச் சொல்லி தன் தொடையை காட்டினான். அவள் மறுப்பாக தலையசைக்கவும், “இங்கே உட்கார்ந்து கேட்டா தான் சொல்லுவேன், இல்லனா சொல்ல மாட்டேன்” என்று மிரட்டினான்.
வேறு வழியின்றி பட்டும் படாமல் அவன் மடியில் அமர்ந்தாள். அவளின் இடையை இருகரங்களால் பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
(தொடரும்)
error: Content is protected !!