Skip to content
Post Views: 31
கண்ணாமூச்சி 16
மறுநாள் காலை, ‘மௌனம் பேசிய மொழியே’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளம் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அங்கு நிலவிய காற்று ஏதோ ஒரு விவரிக்க முடியாத பதற்றத்தைச் சுமந்திருந்தது.
விஷ்வா தன் காரிலிருந்து இறங்கி செட்டுக்குள் நுழைந்தபோதே, அங்கிருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களின் பார்வைகள் அவன் மீது விசித்திரமாகப் பதிவதை உணர்ந்தான். ஆங்காங்கே சிறு குழுக்களாக நின்று மொபைல் திரைகளைப் பார்த்தபடி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். விஷ்வாவின் அசாத்தியமான கூர்மைத் திறன், ஏதோ ஒரு தவறு நடந்திருப்பதை அவனுக்கு எச்சரித்தது.
ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பினால், அதன் பிறகு சமூக ஊடகங்களையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ பார்க்கும் பழக்கம் இல்லாதவன் விஷ்வா. அவனுடைய தனிப்பட்ட நேரத்தில் அவனுடன் இருப்பது இசை மட்டுமே, அதனாலேயே அவனைச் சுற்றி வெடித்திருந்த மீடியா எரிமலை குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை விஷ்வா. அரவிந்துக்கு இந்த விஷயம் இரவே தெரிந்திருந்தாலும், விஷ்வாவைத் தொந்தரவு செய்து அவன் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று நினைத்தான் அவன்.
Advertisement
விஷ்வா தன் கேரவனுக்குள் நுழைந்த உடனேயே அரவிந்தை அழைத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம், அரவிந்த் பதற்றத்தில் மூச்சிரைக்க உள்ளே ஓடிவந்தான். அவனது கைகளில் இருந்த டேப்லெட் திரை ஆன்லைனில் இருந்த முன்னணி சினிமா இணையதளம் ஒன்றின் பக்கத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
“விஷ்வா! பெரிய பிராப்ளம் ஆயிடுச்சு. அந்த நயனிகா டீம் அவங்களோட அடுத்த அசிங்கமான வேலையைக் காட்டிட்டாங்க!” என்றான் அரவிந்த் கோபமாக.
விஷ்வா அமைதியாக அவனிடமிருந்து டேப்லெட்டை வாங்கிப் பார்த்தான். அவனது கண்கள் கோபத்தில் சுருங்கின. இணையதளம் முழுக்க, ‘சூப்பர் ஸ்டார் விஷ்வநாத் – நயனிகா ரகசியக் காதல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது: வைரலாகும் பிரத்யேக வீடியோ!’ என்ற தலைப்பில் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. தீபக் திட்டமிட்டபடியே, முந்தைய ஷெட்யூலில் எடுக்கப்பட்ட எடிட் செய்யப்படாத காதல் காட்சியின் பின்னணியை கிராபிக்ஸ் மூலம் மாற்றி, அது ஏதோ ஒரு சொகுசு விடுமுறையில் எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோ போல லீக் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
அதோடு நிறுத்தாமல், விஷ்வா அவளுக்குப் பல கோடிகள் மதிப்புள்ள வைர மோதிரத்தைப் பரிசளித்திருப்பதாகவும், அடுத்த மாதமே இருவருக்கும் பிரம்மாண்டமாகத் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ‘நம்பத்தகுந்த வட்டாரங்கள்’ மூலம் செய்திகள் பரப்பப்பட்டிருந்தன. ஏற்கனவே வெளியிடப்பட்ட புகைப்படங்களின் பாதிப்பில் இருந்து மீளாத அவனது ரசிகர்கள், இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்டுகளைக் குவித்துக்கொண்டிருந்தனர்.
Advertisement
“விஷ்வா, இப்போவே நாம பிரஸ் மீட் வச்சே ஆகணும். இல்லைனா மீடியா இதை உண்மைனு நம்பி இன்னும் பெருசாக்கும். நயனிகா கேரவன் வெளிய இப்போவே ஏகப்பட்ட லோக்கல் கேமராமேன் வந்து நின்னுட்டாங்க,” என்று அரவிந்த் அவசரப்படுத்தினான்.
விஷ்வா அந்த டேப்லெட்டை மேஜை மீது வீசி எறிந்தான். அவனது முகம் எரிமலையின் குழம்பாக மாறியிருந்தது. ஆனால், அவன் உடனடியாகக் கோபத்தைக் காட்டவில்லை. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அரவிந்த்… இப்போ நாம அவசரப்பட்டு ரியாக்ட் பண்ணா, அது அவங்க விரிச்ச வலைக்கு நாமளே பலியாகுற மாதிரி ஆயிடும். நயனிகாவுக்குத் தேவை என் வாயால வர்ற ஏதோ ஒரு வார்த்தை. அதை வச்சு அவ இன்னும் பப்ளிசிட்டி தேடுவா. அவளுக்கு நான் குடுக்குற பெரிய்ய தண்டனை என் மௌனம் தான். ஆனா… இந்த விளையாட்டை இதோட முடிக்கணும். செய்றேன். இப்போ ஷாட்டுக்கு டைம் ஆயிடுச்சு, வா,” என்று மிகக் கடுமையான குரலில் கூறிவிட்டு கேரவனையை விட்டு வெளியேறினான்.
ஷூட்டிங் ஸ்பாட்டில், நயனிகா தன் முகத்தில் ஒரு நயவஞ்சகமான வெற்றிப் புன்னகையோடு அமர்ந்திருந்தாள். சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்திகளும், வெளியே குவியும் மீடியா வெளிச்சமும் அவளது அகந்தைக்குத் தீனி போட்டிருந்தன. விஷ்வா இப்போது அலறி அடித்துக் கொண்டு தன்னிடம் பேசுவான், அல்லது கெஞ்சுவான் என்று அவள் எதிர்பார்த்தாள்.
Advertisement
இயக்குநர் காட்சியை விவரிக்க, விஷ்வாவும் நயனிகாவும் கேமராவின் முன்னால் வந்து நின்றனர். நயனிகா விஷ்வாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “ஹாய் விஷ்வா… மார்னிங் நியூஸ் பார்த்தீங்களா? ஏதோ தப்பா நியூஸ் பரவியிருக்கு போல…” என்று நரித்தனமான அனுதாபத்தோடு பேச்சை ஆரம்பிக்க முயன்றாள்.
ஆனால், விஷ்வாவின் கண்கள் அவளை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்கவில்லை. அவன் அவளது முகத்தைக் கூடப் பார்க்காமல், நேராக இயக்குநரைப் பார்த்து, “சார், நான் ரெடி. ரோலிங் போலாமா?” என்றான்.
அந்த நொடி, ஒட்டுமொத்த செட்டின் முன்னிலையிலும் நயனிகாவின் முகம் அப்படியே சுணங்கிப் போனது. விஷ்வாவின் அந்த அசாத்தியமான, பாறை போன்ற புறக்கணிப்பு அவளை நிலைகுலைய வைத்தது. ஷாட் தொடங்கி, விஷ்வா தன் அசாத்திய நடிப்பை வழங்கிவிட்டு, கட் சொன்ன அடுத்த மில்லிசெகண்டில் அவளிடமிருந்து விலகி நடந்தான். அவனது இந்தத் தீவிரமான மௌன யுத்தம், நயனிகாவிற்குள் அவமானத்தின் உச்சக்கட்ட ஆத்திரத்தை மூட்டியது.
அதே நேரத்தில், டைடல் பார்க்கின் சோல்மேட் லேபில், பிரவீனும் அனன்யாவும் கணினியில் லோடாகி இருந்த அந்த விர்ச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ் தரவுகளை மேலும் ஆழமாகத் தோண்டிக் கொண்டிருந்தனர். அனுபவங்களின் படங்களைப் பார்த்த பின், அனன்யா கொடுத்த அந்த வாக்குமூலத்திற்குப் பிறகு, பிரவீன் சிஸ்டத்தின் மெயின் கோர் அல்காரிதத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்தான்.
“அனன்யா, நீ பண்ணின வேலை ஒரு சின்ன ஸ்பார்க் தான். ஆனா, இந்த மாடல்ல நடந்திருக்கிற தப்பு அதைவிடப் பெருசு,” பிரவீன் லேப்டாப்பில் இருந்த ஒரு கோடிங் பிளாக்கைக் சுட்டிக்காட்டினான். “நம்ம சோல்மேட் செயலியோட பீட்டா வெர்ஷன்ல, சர்வர் லோடைக் குறைக்கிறதுக்காக ‘நியூரல் ப்ராக்ஸி ஷேரிங்’ அப்படிங்குற ஒரு அல்காரிதத்தை நாம பயன்படுத்தியிருக்கோம். விஷ்வாவும் நிலாவும்… இவங்க ரெண்டு பேரோட நியூரல் அலைவரிசையும், சிந்தனைகளும் அச்சு அசலா ஒரே எனர்ஜி லெவல்ல இருந்திருக்கு. சிஸ்டம் என்ன நினைச்சிருக்குனா, இருவேறு யூசர்களுக்குத் தனித்தனி விர்ச்சுவல் உலகத்தை உருவாக்குறதுக்கு பதிலா, ஒரே உலகத்தோட ரெண்டு கோணங்களை இவங்களுக்கு ஷேர் பண்ணிக் கொடுத்தா மெமரி மிச்சமாகும்னு தப்பா கணக்கு போட்டு, ரெண்டு பேரோட உணர்வுகளையும் விர்ச்சுவல் உலகத்துல ஒண்ணா இணைச்சிருக்கு!”
அனன்யா தன் வாயை மூடிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்தாள். “அப்போ… விஷ்வா சார் விர்ச்சுவல் உலகத்துல நிலானு நினைச்சுக் காதலிச்சது… நிஜ நிலாவோட உணர்வுகளைத் தானா பிரவீன்?”
“ஆமாம் அனன்யா! இது வெறும் ஏஐ கிரியேட் பண்ணின இல்யூஷன் கிடையாது. ரெண்டு நிஜ மனிதர்களோட ஆன்மாக்கள் விர்ச்சுவல் உலகத்துல ஒன்னா சேர்ந்து வாழ்ந்திருக்கு. தொழில்நுட்ப ரீதியா இது ஒரு உலக மகா அதிசயம், ஆனா எதார்த்த வாழ்க்கையில இது ஒரு பேராபத்தான விஷயம்!” என்று பிரவீன் எச்சரித்தான்.
“பிரவீன், விஷ்வா சார் இப்போ நிலாவைத் தேடிட்டு இருக்கார். நிலாவும் விஷ்வாவோட நினைவால இங்க வாடிக்கிட்டு இருக்கா. ஆனா, சோஷியல் மீடியாவுல இப்போ விஷ்வாவைப் பத்தி வர்ற நியூஸைப் பாருங்க…” அனன்யா தன் மொபைலில் நயனிகா லீக் செய்திருந்த அந்தப் போலித் திருமணச் செய்தியைக் காட்டினாள்.
“இது மாதிரியான சூழ்நிலையில நிலாவால இந்த வதந்தி, கிசுகிசுவை எல்லாம் தாங்கவே முடியாது, விஷ்வா மாதிரி வாழ்க்கையிலே பிரைவசியே இல்லாத ஒருத்தரை அவளோட ஃபேமிலியும் ஏத்துக்காது, அதனால இந்த உண்மை அவங்களுக்குத் தெரியாமலே இருக்கறதுதான் நல்லது, நிலா இந்த ஆஃபீஸ்ல இதுக்கு மேலயும் வேலை பார்க்குறது அவ்ளோ பாதுகாப்பில்லை, எப்போ வேண்டுமானாலும் அவ விஷ்வா கண்ணுல மறுபடியும் படலாம், அதனால அவளை வேற பிராஞ்சுக்கு மாத்துங்க பிரவீன்” என்றாள் அனன்யா கெஞ்சலாக.
“விஷ்வா சாருக்கு நாம வேற ஏதாச்சும் சொல்லி இந்த மேட்டரை டைவர்ட் பண்ணணும்,” என்று அனன்யா தன் தோழியின் நிம்மதிக்காக மீண்டும் உறுதியாகப் பேசினாள்.
பிரவீன் அனன்யாவின் தோழமையைப் புரிந்து கொண்டாலும், தன நண்பன் இதனால் ஏக்கமடைவானே என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும், அந்த சமயத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று பிரவீன் அமைதியானான்.
மதிய உணவு இடைவேளையின் போது, சோல்மேட் நிறுவனத்தின் பின்தள கேபினில் அமர்ந்து நிலா தன் லேப்டாப்பில் டேட்டாக்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் லேப்டாப்பில் இருந்தாலும், அவளது கவனம் முழுவதும் அவளது மொபைலில் வந்து விழுந்த விஷ்வாவின் அந்தப் போலித் திருமணச் செய்திகளின் மீதே இருந்தது.
நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பாரம் அவளை அமுக்கியது. ‘விர்ச்சுவல் உலகத்துல எனக்காக உருகின என் விஷ்வா… நிஜ உலகத்துல நயனிகாவோட சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நான் வெறும் சாதாரண நிலா. விர்ச்சுவல் காதல் என்கிறது வெறும் மாயைனு என் புத்திக்குத் தெரிஞ்சாலும், ஏன் இந்த இதயம் இவ்வளவு வலிக்குது?’ என்று நினைத்து அவளது கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் லேப்டாப் கீபோர்டில் விழுந்தது.
அவள் அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இனி விஷ்வாவைப் பற்றிய எந்தவொரு நினைவும் தன் நிஜ வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.
ஆனால், அதே நேரத்தில்… ‘சிகண்டி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், நயனிகாவின் போலி நாடகங்களால் ஒட்டுமொத்தமாக வெறுத்துப் போயிருந்த விஷ்வா, தன் அரவிந்தைப் பார்த்து ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தான்.
“அரவிந்த்… வண்டியை எடு. நாம இப்போவே டைடல் பார்க் போறோம். பிரவீன் ஹெச்ஆர் அப்ரூவல் வாங்குற வரைக்கும் என்னால காத்துட்டு இருக்க முடியாது. என் நிலா அந்த ஆபீஸ்ல தான் இருக்கான்னு என் இதயம் சொல்லுது. நானே நேரா போய் அவளைத் தேடப் போறேன்!” என்று விஷ்வா ஆக்ரோஷமாகக் கிளம்பினான்.
விதி இரு துருவங்களையும் மீண்டும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கத் தன் பகடைக் காய்களை நகர்த்தத் தொடங்கியது!
அதற்கேத்தாற்போல்…
டைடல் பார்க்கின் பிரம்மாண்டமான கண்ணாடி முகப்பில் மதிய வெயில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஷ்வாவின் கண்கள் அந்த பல மாடிக் கட்டிடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனது கைகள் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றியிருந்தன.
“விஷ்வா… நீங்க உள்ள போறது இப்போ சேஃப் இல்லை. நயனிகா லீக் பண்ணின அந்தப் போலி வீடியோவால மீடியா ஆளுங்க உங்களைத்தான் தேடிட்டு இருக்காங்க. இங்க ஏதாச்சும் ஒரு லோக்கல் பிரஸ்காரன் உங்களைப் பார்த்துட்டா, ஸ்பாட்லயே விஸ்வநாத் டைடல் பார்க்ல எதுக்கு வந்தார்னு லைவ் போட ஆரம்பிச்சுடுவான்,” என்று பின்சீட்டில் இருந்து பதற்றத்துடன் எச்சரித்தான் அரவிந்த்.
“அரவிந்த், யார் வேணா என்ன வேணா நியூஸ் போடட்டும், எனக்குக் கவலை இல்லை. என் நிலா இங்கதான் இருக்கா. அவளைப் பார்க்காம, அவகிட்ட பேசாம நான் இன்னைக்கு இங்கிருந்து நகர மாட்டேன்,” என்று கறாராகக் கூறிவிட்டு, தன் கறுப்புத் தொப்பியையும் கூலிங் கிளாஸையும் மாட்டிக்கொண்டு காரை விட்டு இறங்கினான் விஷ்வா.
அரவிந்த் வேறு வழியின்றி அவசர அவசரமாக அவனுக்குப் பின்னால் ஓடினான். விஷ்வாவின் அசாத்தியமான கம்பீரமும், நடையும் அங்கிருந்த செக்யூரிட்டிகளின் கவனத்தை ஈர்த்தாலும், அவன் விஐபி நுழைவாயில் வழியாக நேராக பிரவீனின் பிரத்யேக லிஃப்ட்டை நோக்கி விரைந்தான்.
அவனது ஒரே நோக்கம், தன் மெய்நிகர் உலகை ஆக்கிரமித்திருந்த தன் நிலாவை நேரில் தேடிக் கண்டுபிடிப்பது மட்டும்தான்.
அதே நேரத்தில், முக்கிய ஆய்வகத்திற்குள் பிரவீன் தன் லேப்டாப்பில் ‘நியூரல் ப்ராக்ஸி ஷேரிங்’ அல்காரிதத்தின் தரவுகளை அவசரமாக லாக் செய்து கொண்டிருந்தான்.
“பிரவீன், விஷ்வா சார் இங்கதான் வந்துட்டு இருக்காராம்! ரிசப்ஷன்ல இருந்து செக்யூரிட்டி மேனேஜர் இப்போதான் போன் பண்ணிச் சொன்னார்,” என்று பதற்றத்துடன் கூறினாள் அனன்யா.
“அனன்யா, நிலா இப்போ எங்க இருக்கா?” என்று பிரவீன் கேட்கும்போதே, சர்வர் அறையிலிருந்து சில பிரிண்ட்-அவுட் தாள்களுடன் வெளியே வந்தாள் நிலா. அவளது காதுகளில் வழக்கம்போல ஹெட்போன் மாட்டியிருந்தது. ஆபீஸில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், உலகத்தையே மறந்து தன் வேலையில் மூழ்கியிருந்தாள் அவள்.
“நிலா! நீ உடனே பேக்-டோர் வழியா லேபை விட்டு வெளிய போயிடு. ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு,” என்று அனன்யா அவசர அவசரமாக நிலாவின் கையைப் பிடித்து இழுத்து, மெயின் காரிடார் வழியாகச் செல்லாமல், ஆபீஸின் பின்பக்கமிருந்த அவசரகால படிக்கட்டு மற்றும் மொட்டை மாடிப் பகுதிக்குச் செல்லும் பாதையை நோக்கித் தள்ளினாள்.
குழப்பமடைந்த நிலா, “என்னாச்சு அனன்யா? ஏன் ரெண்டு பேரும் இவ்வளவு பதற்றமா இருக்கீங்க?” என்று கேட்டபடியே அனன்யா காட்டிய திசையில் செல்லத் தொடங்கினாள்.
லிஃப்டில் இருந்து வெளியே வந்த விஷ்வா, நேராக பிரவீனின் கேபினை நோக்கிச் செல்ல முற்பட்டபோது, தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு வேறு திசையில் சோல்மேட் ஆபீஸின் பின்பக்கக் காரிடாரில் வேகமாக நடந்தான். ஊழியர்கள் அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்க்க, அவன் ஒரு கண்ணாடி கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தபோது, அங்கே அனன்யா மட்டும் தனியாக நிற்பதைக் கண்டான்.
“விஷ்வா சார்… நீங்க இங்க…” என்று அனன்யா தடுமாறினாள்.
விஷ்வா அவளது பதற்றத்தையும், அவள் பார்த்துக் கொண்டிருந்த பின்பக்கக் கதவையும் கவனித்துவிட்டான். “நிலா இங்கதானே இருந்தா… இப்போ எங்க அவ?” என்று கம்பீரமான, ஆனால் ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டான்.
பதில் சொல்லாமல் அனன்யா மௌனமாக நிற்க, விஷ்வா நொடியும் தாமதிக்காமல் அந்தப் பின்பக்கக் கதவைத் தள்ளிக்கொண்டு அவசரக்கால படிக்கட்டுகள் வழியே மேலே ஓடினான்.
சோல்மேட் அலுவலகத்தின் இருபத்தி ஏழாவது தளம், திறந்தவெளி மொட்டை மாடி.
திடீரென வானம் இருண்டு, சென்னையில் எப்போதாவது வரும் மழைகாலத்துக்கே உரிய அந்தப் பிரத்யேக மதிய நேரத்து மழை பெய்யத் தொடங்கியிருந்தது. பலத்த காற்றுடன் மழைத்துளிகள் நிலாவின் முகத்தில் வந்து விழுந்தன. அவள் மாடியின் மையப்பகுதியில் நின்று, சுற்றிலும் இருந்த கண்ணாடித் தடுப்புகளின் வழியே சென்னையின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலாவுக்கு மழை பிடிக்கும், அதனால்தானோ என்னவோ, மழைத் துளிகள் விழத் தொடங்கிய நொடியில், அனன்யாவின் அவசரம், பதற்றம், அதற்கான காரணம் என எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தன முகத்தை வான் நோக்கி உயர்த்தி, மேகம் தூதாக அனுப்பிய மழைத்துளிகளை ரசித்து அனுபவிக்கத் தொடங்கினாள்.
மூச்சிரைக்க மொட்டைமாடிக்கு ஓடிவந்த விஷ்வா பார்த்ததும் இதே காட்சியைத்தான். இளநீல நிற ஆர்கன்சா அனார்க்கலி அணிந்து, தனது அடர்ந்த கூந்தலை ஃபிரெஞ்சு பின்னலில் அடக்கியிருந்தும் அவள் முகத்தைச் சுற்றி சிறுசிறு கூந்தல்கற்றைகள் சில விடுபட்டு காற்றில் லேசாக அசைய, இரு கைகளையும் விரித்தபடி, வானம் அள்ளித் தெளித்த பன்னீர் மழையை கண்மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள் நிலா.
கனவில் கண்ட காதலியை, தன் மனம் கவர்ந்தவளை, இப்படி ஒரு அழகான சூழலில் பார்ப்பது விஷ்வாவின் மனதை மயக்கங்கொள்ளச் செய்தது.
இதுநாள் வரை நிழலாய்த் தோன்றியவள், இப்போது நிஜமாகத் தன் முன் நிற்பதைத் தன்னையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள், மெல்லிய மயிலிறகால் வருடுவது போன்ற மென்மையுடன் “நிலா” என்று அவள் பெயரை உச்சரித்தது.
தன பெயரையே ஓர் உணர்வாய் உணர்வதுபோல் யாரோ அழைப்பதைக் கேட்ட நிலா மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். மழையில் நனைந்தபடி, தலையில் இருந்த கறுப்புத் தொப்பியைக் கழற்றி எறிந்துவிட்டு, கலைந்த முடிகளுடன் நின்றிருந்தான் விஷ்வா. அவனது கூலிங் கிளாஸ் ஏற்கனவே கழன்றிருந்தது.
இருவரின் பார்வைகளும் மழையின் பின்னணியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
நிலாவின் கண்கள் அகல விரிந்தன. அவளது கையில் இருந்த தாள்கள் காற்றில் பறந்து மழையில் நனைந்தன. அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஸ்டார், தன் மெய்நிகர் உலகத்துக் காதலன்… இதோ நிஜமாகவே தன் முன்னால் மழையில் நனைந்து கொண்டு நிற்கிறான்!
நிலா மூச்சு விடவும் மறந்து அவனையே பார்த்தபடி நின்றாள். எண்ணங்கள் எதையும் தோன்ற விடாமல், அவளது மனம் திடீரென்று வேலை நிறுத்தத்தில் இறங்கியது, நொடிப் பொழுதும் வேறு எந்த எண்ணமும் தோன்றி நேரத்தை விரயம் செய்துவிட்டால், கண்முன் நிற்பவனை, மனதில் நிறைத்துக்கொள்ளும் நேரத்தில் அந்த ஒரு நொடி குறைந்துவிடுமே… இனி ஒருமுறை தன் மனதின் நாயகனை, இப்படியொரு இத்தனை அருகில், இத்தனை தனிமையில் பார்க்க முடியுமா?
விரிந்திருந்த அவளது கைகள் மெதுவாகச் சுருங்கி, நெஞ்சோடு சேர்த்துச் சுருக்கிக் கொண்டாள் தன்னையே, ஆனால் அவள் விழிகளோ இமைக்க மறந்து, எதிரில் இருப்பவனைப் பார்வையால் விழுங்கி இதயச் சுவர்களில் அவன் பிம்பங்களைப் பதித்துக் கொண்டிருந்தன…
விஷ்வா மெதுவாக அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவனது இதயம் விநாடிக்கு நூறு முறை அடித்துக் கொண்டது. ஐஸ்லாந்தின் பனிமலையில், கிராமத்து வயல்வெளியில் தன் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்த அதே நிலா! அவளது கன்னத்தில் வழிந்தோடிய மழைத்துளிகள் அவளது அழகைக் கூட்டியிருந்தன.
“நிலா…” என்றான் விஷ்வா மறுபடியும். அவனது குரலில் மெய்நிகர் உலகத்தில் அவள் கேட்ட அதே காந்தக் குரலின் நிஜமான அதிர்வு இருந்தது. அதக் கேட்டு அவள் உடல் ஆதி முதல் அந்தம் வரை ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
நிலாவும் தன் கட்டுபாட்டை இழந்து, “விஷ்வா…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.
அன்று காலையில் லிஃப்ட் வாசலில் கடந்து சென்றபோது உணர்ந்த அதே உணர்வு, அதே ஏக்கம் தோன்றியது அவளுக்குள்! அதற்குள் வலுத்திருந்த மழையின் சத்தத்திற்கு நடுவே, இரு இதயங்களின் துடிப்பும் ஒரே சீராக ஒலித்தது. மெய்நிகர் உலகின் ஏகாந்த அமைதியைத் தாண்டி, நிஜ உலகத்துப் பெருமழை அவர்களின் காதலை அந்த மொட்டை மாடியில் சாட்சியாய் நின்று வாழ்த்தியது போலிருந்தது!
error: Content is protected !!