Skip to content
Post Views: 127
அத்தியாயம்: 12
அழகென்ற சொல்லுக்கு முருகா – உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா
Advertisement
என்று பக்திக் கனிச் சுவை பொங்க பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். அவரின் கணீர் குரல் விடிந்து விட்டதாகச் சொல்ல, புருவங்களை நெறித்தபடி, உடலை முறுக்கினான் பத்ரி.
Advertisement
அந்தப் பாடல் அவனுக்குப் பக்தியைத் தரவில்லை. இறைபக்தி இல்லாதவன் அல்ல அவன்.
Advertisement
இது போன்ற பாடல்களைச் சத்தமா ஒலிக்க விட்டுத்தான் பக்தியை வெளிப்படுத்த வேண்டுமா? அதுவும் காலைவேளையில்! என்ற கடுப்புத் தான்.
Advertisement
காலை நேரம் எப்பொழுதும் சத்தமில்லாது அமைதியாக, இயற்கையின் குயில் கானத்தோடு விடிய வேண்டும் என்பான். அது தான் அவனுக்கு உற்சாக மனநிலையைத் தருமாம். இல்லையேல் கடுவன் பூனையாக மாறி விடுவானாம்.
அவனின் சுபாவம் தெரிந்த சுதா, அவன் எழும் சமயம் மிக்ஸி, டிவி உள்ளிட்ட சத்தமிடும் மின் சாதனங்களைப் பயன்படுத்த மாட்டார். நிசப்தமாக இருக்கும் வீடு.
ஆதலால் பக்திப் பாடல் அவன் வீட்டில் ஒலிக்கவில்லை. அதே நேரம் அது தெருவிலும் பாடவில்லை. இரைச்சலாக அல்லாது சத்தமாக மாடி வீட்டில் இருந்து இசை வந்து கொண்டிருந்தது.
ரேடியோ, முருகா!! முருகா!! என்றது. காதை மூடியபடி அறையை விட்டு வெளியே வந்தவன், தன் மருமகளின் குரலில், உண்டான எரிச்சலைப் போக்க நினைத்து, எதிர் அறையின் கதவைத் திறக்க, அது லாக் போடப்பட்டிருந்தது. எப்பொழுதும் தாழ்ப் போடாதவள் இன்று போட்டிருக்கிறாள் என்றால் அது அவள் கோபமாக உள்ளதற்கான எதிரொலி.
“அதிம்மா… அதி…” என்று அவன் தட்ட,
“எனக்கு உங்க கூட பேச பிடிக்கல மாவய்யா. நேத்து நீங்க நடந்துக்கிட்டது ரொம்ப ரொம்ப தப்பு. நீங்க ஏன் வந்தீங்க? உங்களை யாரு வரச் சொன்னது. ஐ ஹேட் யூ. ஐ ஹேட் யூ லாட்…” என்று அவனின் பட்டர் பன், எண்ணெயாகக் கொதித்தாள்.
அவளின் கோபத்தோடு சேர்ந்து முருகனும் அவனின் எரிச்சலுக்குத் துபாம் போட,
“ம்மா…” என்று உறக்க அழைத்தான்.
“என்ன தம்பி?” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் சுதா.
“என்னம்மா இது?”
“சத்து மாவு கஞ்சி டா. காலைல சாப்பாட்டுக்கு. மாடி வீட்டுப் பொண்ணு ரிது அரைச்சிக் குடுத்தா. உனக்கும் அம்மாயிக்கும் சேத்தே வச்சிருக்கேன். அம்மாயி வேண்டாம்பா. உடனே கடைலலாம் ஆர்டர் போட்டிடாத. எடுத்துச் சொல்லி சாப்பிட வை. இப்படிலாம் சாப்பிட்டாத்தான் உடம்புல கறி வைக்கும். ரொம்ப ஒல்லியா இருக்கா… சத்தானதா சாப்பிட மாட்டாளான்னு ரிது அக்கறையோட கேட்டா.”
“ம்ச்… நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசுறீங்க?”
“எதைக் கேக்குற?”
“பாட்டுச் சத்தத்தைக் கேக்குறேன்.”
“அது சாமி பாட்டு…”
“இவ்ளோ சத்தமாத்தான் கேட்கணுமா? வயசானவங்க இருக்குற இடத்துல இதெல்லாம் கூடாதுன்னு சொல்ல மாட்டிங்களா?” என்று கடிய,
“ஒரு பாட்டு தான் தம்பி. அதுவும் ஸ்கூல் கிளம்புற வரைக்கும் தான். ஒம்போது மணிக்கு மேல சத்தமே கேக்காது.” எனும் போதே, திடும் திடுமென சத்தம் கேட்டது.
மாடியில் அம்மாவும் மகளும் ஓடிப் பிடித்து விளையாடுகின்றனர் போலும். அவர்களின் காலடிச் சத்தம், தலையில் யாரோ ஆணி அடித்தது போல் இருக்க, நெற்றிப் பொட்டை அழுத்தியபடி புருவங்களை நெறித்தான் பத்ரி.
அதைக் கண்டவர், “அந்தச் சின்னப் பொண்ணு கொஞ்சம் சேட்டைக்காரி தம்பி. நம்ம அதி மாதிரி கிடையாது. என்னேரமும் எதையாவது செஞ்சிட்டே இருப்பா. அவ அம்மாக்கிட்ட சதா சர்வமும் பேசிக்கிட்டே இருப்பா. ரிதுவையும் சும்மாச் சொல்லக் கூடாது. பொண்ணு கேக்குற எல்லாக் கேள்விக்கும் சலிக்காம பதில் சொல்லிக்கிட்டே இருப்பா. இந்த அம்மா பொண்ணால தான் இந்த மூணு மாசமும் வீடு கலகலன்னு இருக்கு. நம்ம அம்மாயிக்கும் இந்த லீவ் நல்லா போச்சு தெரியுமா! இல்லன்னா அவளுக்கும் உனக்கும் இடைல நான் தான் இடி பட்டிருப்பேன். எல்லாத்துக்கும் காரணம் அந்த ரிது பொண்ணு தான்.” என்று அவர் ரிதன்யாவைப் புகழ, பத்ரிக்குத் தான் பற்றிக் கொண்டு வந்தது.
“ரிது…” என்று பற்களுக்குள் அவளின் பெயரைக் கடித்தவன், அவளை நேரில் பார்க்காமலேயே வெறுத்தான். இன்றல்ல நேற்றல்ல மூன்று மாதங்களாகவே அவன் கேட்கும் ரிது என்ற பெயர் அவனுள் இனம் புரியாத வெறுப்பைத் தான் தந்தது.
காரணம்…
யாரென்று தெரியாது… அவன் அனுமதி ஏதும் இல்லாமல் அவனின் குடும்பத்தாரின் மனத்தில் இடம்பிடித்திருக்கிறாள் அல்லவா.
பத்ரிக்கு, அவனின் குடும்பத்தாரின் பாதுகாப்புத் தான் முக்கியமானது. இருவரும் யார் யாருடன் பழக வேண்டும். எவர் எவருடன் எந்த அளவு பேச வேண்டும் என்று அனைத்தையும் அளவுகோலில் அளந்து கொடுப்பவன் அவன். யார் எவர் என்று குணம் தெரியாது பழகிவிட்டு பின்னால் அவதிப்படக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அவனுக்கு எப்பொழுதுமே இருக்கும்.
ஆனால் ரிதன்யா… அந்த எச்சரிக்கையை உடைத்து விட்டு இருவரையும் நெருங்கியிருக்கிறாள்.
சுதாவிடம் ஒன்றுவதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் வீட்டைக் காலி செய்து, கண்ணில் இருந்து மறைந்து விட்டாள் சுதாவின் கருத்திலும் பேச்சிலும் நிற்க மாட்டாள் என்று.
ஆனால் அதிதி…
அவள் ஏதும் அறியா சிறுமி என்ற வரையறைக்கும், யுவதி என்ற முதிர் நிலைக்கும் இடையில் இருக்கும் மடந்தை. உடலிலும் உள்ளத்திலும் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை ஏற்கவும் முடியாமல் கையாளவும் தெரியாமல், நிலையற்று ஆடும் ஓடத்தை ஒத்த மனம் கொண்டவள்.
அவள் மனத்தில் நல்ல தாயாக ரிதன்யா ஆழமாகப் பதிந்து விட்டாள். மாமனின் கண்டிப்பிலும், சுதாவின் வெகுளித்தனமான கண்காணிப்பிலும் வளர்ந்தவளுக்கு ரிதன்யாவின் தாய்மை மீது பிடித்தம் வந்தது. சரிகாவின் மீது காட்டும் அளவற்ற அன்பு அம்மடந்தையை வெகுவாக ஈர்த்தது.
தயங்கித் தயங்கி பழகத் தொடங்கியவள், பின் நாட்களில் ரிதன்யாவின் வீடே கதி என்றாகிவிட்டாள்.
மாலை நேரங்களில் மூவருமாய் ஊர் சுற்றுவது தொடங்கி, இரவு வேளை படம் பார்ப்பது, சுருதியைப் பார்க்கச் செல்வது என்று தாயிடனும் மகளுடனும் சேர்ந்தே திரிந்தாள்.
ரிதன்யா, அன்பிற்காக ஏங்கும், தாய் தந்தையில்லா பெண் என்று அதிதியின் பால் அன்பைப் பொழிந்தாள்.
விடுமுறை காலம் என்பதால் பத்ரி எதுவும் சொல்லாது இருந்தான். ஆனால் பள்ளித் தொடங்கியப் பின், படிப்பில் கவனம் வைக்காது, ‘ரிது ஆன்டி…’ ‘ரிது ஆன்டி…’ என்றது கோபத்தைத்தான் தந்தது. அதிலும் அதிதிக்கு அது பத்தாம் வகுப்பு. பொது தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்பதால் பலபல சிறப்பு வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தான் பத்ரி.
ஆனால் வழமை போல் அவன் சேர்த்து விடும் எந்த ஒரு வகுப்பிற்கும் செல்லாது டிமிக்கி கொடுத்து விட்டு ரிதன்யாவின் பின்னால் சென்று விட்டுவாள்.
அன்றும் அப்படித்தான்…
“அதிதி டூ வீக்ஸ்ஸா ஸ்பெசல் க்ளாஸ் அட்டன் பண்ணல. வேற எங்கயும் சேத்து விட்டிருக்கீங்களா?” என்று பள்ளியில் இருந்து கால் வந்தது பத்ரிக்கு. உடனே மருமகளுக்கு அழைக்க, எடுத்தது சுதா.
“ஸ்கூல்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க. அதி எங்க?
“அம்மாயி வீட்டுல இருக்கா டா.”
“டியூஷன் போகாம அங்க எதுக்கு வந்தா? கூப்பிடுங்க நான் பேசுறேன்.”
“டியூஷனா? அதெல்லாம் வேண்டாம். ரிது கிட்ட படிச்சிக்கிறேன்னு சொல்லி புத்தகத்தெல்லாம் தூக்கிட்டு போயிருக்கா. நீ கவலப்படாத. ரிது பாத்துப்பா. உன்ன மாதிரி இல்லை. பொறுமையா சொல்லித் தர்றாளாம். அம்மாயி சொன்னா. ஸ்கூல் வேன்ல கூட வர்றது இல்ல. ரிதுவே கூட்டீட்டுப் போய்ட்டு கொண்டு வந்து விட்டுடுறா. இப்பெல்லாம் அம்மாயிய நினைச்சி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.”
‘என்ன!! ஸ்கூலுக்குக் கூட்டீட்டு போறாளா!’ என்று உள்ளுக்குள் வெந்தவன், அடுத்த நாளை அத்தனை வேலைகளையும் உதறித் தள்ளி விட்டு, சென்னை வந்து சேர்ந்தான்.
அதிதி, ரிதன்யா வீட்டில் இருப்பதாக சுதா சொல்ல, இரண்டிண்டு படிகளாக ஏறிச் சென்றான்.
அங்கு கிங்கினியாய் மூன்று பெண்களும் சிரிக்கும் சத்தம் கேட்டது. அதிலும் அவன் மருமகளின் சத்தமான சிரிப்பு தனியாகக் கேட்க, கதவையும் அழைப்பு மணியையும் வேகமாகத் அழுத்தினான்.
அதில் பயந்து போனது ரிதன்யா தான்.
புது ஊர்… புது ஜனம்…
அதுவும் இரவு 10 மணிக்கு, யார் வந்து இவ்வாறு தட்டுவது? என்று சிறு பயத்துடன் தான் தலையை நீட்டினாள்.
“அதிதி.” என்ற உருவத்தை ஒரு நொடி கூட அவளால் பார்க்க முடியவில்லை. இரு கரத்தையும் கட்டிக் கொண்டு நின்றவன் கண்களில் தெரிந்த வெறுப்பிலும், குரலில் தெரிந்த கடுப்பிலும் ஒரு கணம் யோசித்தவள்
“நீங்க யாரு?” என்று மிடுக்காக, மிரட்டலாகவே வினவினாள்.
அவளை ஏற இறங்கப் பார்த்தவன், பதில் தர விரும்பாது, “அதிதி… அதிதி…” என்று உறக்க அழைத்து, கதவைத் தட்ட, மாமனின் குரலில் பதறி அடித்து வெளியே வந்தாள் அதிதி.
“மாவய்யா!!”
”கம்…”
“மாமா! ஒரு பத்து நிமிசம்… ஷோ முடியப் போது.”
“நம்ம வீட்டுல டிவி இல்லையா?”
“இருக்கு மாமா… ஆனா…” என்று இழுத்தவளைப் பேசவே விடாது, கரம் பற்றி இழுத்துச் சென்றான்.
அவனின் வேகம் கண்ட ரிதன்யா, எதுவோ சொல்ல வாய்த் திறக்க, திரும்பி ரிதன்யாவைப் பார்த்து முறைத்த விதம் சரியாகப் படவில்லை அவளுக்கு.
எதற்கு வீண் வம்பு… அவன் பாடு அவனின் மருமகள் பாடு… நமக்கு என்ன வந்தது. என்று நினைத்துக் கொண்டு கதவை அடைத்தாள்.
ஆனாலும் கீழே மாமனும் மருமகளும் சண்டை போடுவது தெளிவாகக் கேட்டது.
“பாருங்க அம்மம்மா… கையப் பிடிச்சி தரதரன்னு இழுத்திட்டு வாறாரு. பத்து நிமிஷம் தான கேட்டேன். அந்த ஷோ முடியவும் நானே வந்திருப்பேன். பாதில கதவத் தட்டி கூப்பிட்டதோட மட்டுமில்லாம, சண்ட போடுற மாதிரி நடந்துக்கிட்டாரு. ஆன்டி என்ன நினைப்பாங்க?” என்று வருத்தக் குரலில் கூற,
“யாரும் என்ன வேண்ணாலும் நினைச்சிட்டு போட்டும். நீ எதுக்கு அங்க போன?” என்று கத்த, அரண்டு தான் போனாள் அதிதி.
“அது… டிவி…” என்று சின்னக் குரலில் சொன்னவள், சுதாவைப் பார்த்தாள் உதவி வேண்டும் என்பது போல்.
“உனக்கு இந்த வீட்டுல என்ன குறை? 55 இன்ச் ல உன்னோட ரூம்ல ஒன்னு, 75 இன்ச்ல ஹால் ஒன்னுன்னு ரெண்டு டிவி இருக்கு. 24 மணி நேரமும் நெட் கனெக்ஷன். இதெல்லாத்தையும் விட்டுட்டு, நைட் நேரம், அடுத்தாள் வீட்டுல உக்காந்து ஷோ பாக்கப் போறேன்னு கிளம்பி போயிருக்க! என்ன பழக்கம் அதி இது?”
“அடுத்தாள் இல்ல டா. நம்ம ரிது வீடு தான்.” என்ற தாயை உக்கிரப் பார்வை பார்க்க,
“ம்மா… இந்தக் காலத்துல யாரையும் நம்பக் கூடாது. நம்ம வீட்டு பொண்ண நாம தான் பாதுக்காப்பா பாத்துக்கணும். இப்படிக் கண்டவ வீட்டுக்கு விட்டுட்டு வேடிக்க பாக்கக் கூடாது. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சின்னா! என்ன பண்ணுவீங்க?”
“நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது. ஆம்பளையாள்னு யாரும் வர மாட்டாங்க. அம்மாவும் மகளும் தான். இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு ஆச்சர்யப்படுற அளவுக்கு நல்ல சாந்தமான குணம். தன்மையான பேச்சு. நீ ஓவரா சிந்திக்காம அமைதியா இரு.” என்று மகனை அடக்க முயல, அது முடியாது போனது.
“இனி நீ மாடி வீட்டுக்குப் போகக் கூடாது. வீட்டுல தான் இருக்கணும். நான் கால் பண்ணா எடுக்கணும். ஒழுங்கா ஸ்கூலுக்கு, அரேஜ் பண்ணிக் குடுத்த வேன்ல தான் போகணும். ஸ்பெசல் க்ளாஸஸ்ஸ அட்டன் பண்ணணும்.” என்று கட்டளை இட,
உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, ”ஐ ஹெட் யூ மாமா…” என்று கோவித்துக் கொண்டு கதவைச் சாத்தியவள் தான். விடிந்த பின்னும் திறக்கவே இல்லை.
உணவு நேரம் நெருங்கியும் மருமகள் தலை காட்டாததால், மீண்டும் தட்டிப் பார்த்தான்.
“எனக்கு எதுவும் வேண்டாம் அம்மம்மா…. நான் யார் கூடவும் உக்காந்து சாப்பிட மாட்டேன்.” என்று கத்தினாள்.
ஒரு பக்கம் மருமகள் கோபத்தில் குத்த, மறுபக்கம் முருகர் வேறு காதில் குத்த, வேக நடையுடன் மாடிப் படிகளை அடைந்தான்.
படியில் வெள்ளை நிறத்தில் கம்பிக் கோலமாய் விளக்குகள் வரையப்பட்டிருந்தன. சிலவை அச்சு வார்த்தார் போல் அழகாய் வடிவாய் இருந்தன. பலது, ஒழுங்கற்ற கம்பிகளால் வரையப்பட்டிருந்தன.
அந்த அலங்கோலங்களில் தன் மருமகளின் கை வண்ணமும் அடக்கம் என்பது, சின்னச் சிரிப்பை உண்டு பண்ணியது பத்ரிக்கு.
அந்தச் சிரிப்பு, ரிதன்யா கதவைத் திறந்ததும் காணது போயிருந்தது.
ஈரம் வடிந்த கூந்தலை அப்பொழுது தான் துவட்டி இருப்பாள் போலும். அலை அலையாக சுருண்டு வளைந்திருந்த கேசத்திற்கு மத்தியில் மதியெனத் தெரிந்தது அவள் முகம்.
வேலை பார்க்கும் இடங்களில் பணிப் பெண்கள், மற்றும் அவன் நட்பு வட்டங்களில் அதீத அலங்காரங்களுடன் வளம் வரும் பெண்களைப் பார்த்து பழகியவனுக்கு எவ்வித ஒப்பனைகளும் இல்லாத ரிதன்யாவின் முகம் நிச்சயம் நிலவாகப் பளிச்சிட்டது.
மஞ்சள் பூசியிருப்பால் போலும். மெல்லிய லேயராக மஞ்சள் நிறம் அவளின் கோதுமை நிறத்தை டாலரிக்க வைத்தது. கருப்பில் வைக்கப்பட்டிருந்த, சின்ன வட்டப் பொட்டு நூதல் பாளத்தில் தொடுக்கிக் கொண்டு, அவளின் குழப்ப ரேகைகளுக்கு மத்தியில் மிதந்தது.
சாயம் பூசாது சிவந்திருந்த அதரங்களால், “நீங்க தான் சுதா ஆன்டி பையனா? வாங்க… இதுவரை பார்த்தது இல்லையா! அதான் நேத்து அடையாளம் தெரியல. உக்காருங்க… குடிக்க என்ன கொண்டு வர?” என்று ரேடியோவை அணைத்துவிட்டு, இயல்பாகக் கேட்டபடி வரவேற்றாள் ரிதன்யா.
அவளின் குரலிலும், முகத்திலும் மயங்கி நின்றது என்னவோ அரை நொடிக்கும் குறைவான நேரம் தான். அதற்குள் சுதாரித்துக் கொண்டவன், உள்ளே சென்று, நீளிருக்கையில் சாய்வாக அமர்ந்து கால்களைப் பின்னிக் கொண்டான்.
‘மூணு மாசத்துக்கு ஒருக்க, வீட்ட எப்படி வச்சிருக்கோம்னு பாக்க பத்ரி சார் வீட்டுக்குள்ள வருவேன்னு சொல்லிருக்காரு.’ என்று சுருதி சொல்லும் போதே ரிதன்யா,
‘கண்டவனெல்லாம் நான் வீட்டுக்குள்ள விட மாட்டேன்.’ என்று முரண்டு பிடித்தாள். ஆனால் சுருதி தான் கெஞ்சி கூத்தாடி,
‘வந்தானுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுத்து அனுப்பி வை. வீட்டப் பாத்திட்டு உடனே போய்டுவான். இல்லன்னா சுதா ஆன்டிட்ட சொல்லு. அவங்க நல்லவங்க.’ என்றிருந்தாள்.
அவளின் இறைஞ்சலுக்கும், சுதாவின் மீதிருக்கும் மரியாதைக்காகவும் தான் உள்ளே அனுமதித்தாள். இல்லையேல் நேற்று அவன் பார்த்த பார்வைக்கும், கண்டவள் என்று ஏசியதற்கும், மாடி வீட்டிற்குச் செல்லக் கூடாது என்று மருமகளுக்கு வழங்கிய உத்தரவிற்கும், பிடித்துத் திட்டுயிருப்பாள்.
அமைதியாக, மகளுக்காக ஆற்றி வைத்திருந்த காபியை டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்ட, புன்னகை ஏதும் சிந்தாமல் வாங்கிக் கொண்டான்.
‘பேச வேண்டும்.’ என்பது போல் எதிரில் இருந்த நாற்காலியைக் கைக் காட்டி அமரும் படி சைகை செய்ய, அதற்கு பணியத் தோன்றவில்லை ரிதன்யாவிற்கு. உறிஞ்சிக் குடித்தவன், டம்ளரை காலுக்கு அடியில் வைத்து விட்டு,
“காபி நல்லா இருக்கு. வீட்டையும் நல்லாத்தான் வச்சிருக்கீங்க.” என்றவனின் பார்வை சுவரில் சரிகா தீட்டி வைத்திருந்த பென்சில் ஓவியத்தின் மீது பட்டது. வேகமாக அதை அவள் மறைக்க முயல, அவன் நிமிர்ந்து சீலிங்கைப் பார்த்தான்.
சென்ற வாரம் தான் அம்மையும் மகளும் சேர்ந்து, இரவில் மிளிரும் நட்சத்திர ஸ்டிக்கர்களை வாங்கி வந்து ஒட்டியிருந்தனர்.
இதை எப்படி மறைப்பாய்? என்பது போன்ற நக்கல் பார்வைப் பார்க்க,
“அது வெறும் ஸ்டிக்கர் தான். பெயிண்ட் பண்ணும் போது எடுத்திடலாம்.” என்று விளக்கம் கொடுக்க,
“இட்ஸ் ஓகே… அது இருந்தா இருந்திட்டு போட்டும். நான் வந்தது வீட்டப் பாக்க இல்லை. வீட்ட காலி பண்ணச் சொல்ல.” என்றதும், “என்ன?” என்பது போல் அதிர்ந்து விழித்தாள் ரிதன்யா.
“ஒரு மாசம் டயம் தர்றேன். அதுக்குள்ள நீயா காலி பண்ணிட்டா நல்லது.” என்று விட்டு செல்ல, ரிதன்யா கோபமாக சுருதிக்கு அழைத்தாள்.
error: Content is protected !!