அலுவலக அறைக்குள் நுழைந்தவளின் மனத்தில் பல இனம்புரியாத உணர்வுகள் முட்டிமோதி வாட்டியெடுத்தது.
தன் இரண்டு மகன்கள் மட்டும் அல்லாது, வரவிருகும் மருமகள்களும் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் அலுவலக அறைகளை வடிவமைத்திருந்தார் தாமோதரன். கணவன் மனைவி இருவரும் ஒரே அறையில் இருந்தபடி வேலை செய்ய ஏதுவாக அறைகளை அத்தனை விசாலமாக அமைத்திருந்தார்.
கட்டிடக்கலையை உயிர் மூச்சாகச் சுவாசித்த ஷ்ரவன் தந்தைக்கும் ஒருபடி மேலிருந்தான். ரம்யாவுடன் திருமணம் நிச்சயமான கையோடு, தங்கள் அலுவலக அறையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அவளுக்குப் பிடித்த வண்ணம் உருமாற்றினான்.
Advertisement
கண்ணெதிரில் இருக்கப்போகும் மனைவி கைக்கெட்டும் தூரத்திலும் இருக்க வேண்டுமென இருவருக்குமான நீள் பணி மேஜை ஒன்றை அளவு கொடுத்து செய்துகொண்டான். அதில் தங்கள் குடும்பம் மற்றும் திருமண புகைப்படங்கள், தினம் ஒரு பொன்மொழி சொல்லும் தேதி நாள்காட்டி, அவளுக்குப் பிடித்த பேஸ்டல் நிறங்களில் ஸ்டேஷனரி என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அலங்கரித்தான்.
தேக்கு மரத்தினாலான மூன்றடுக்கு அலமாரி ஒன்றினை சுவற்றில் பொருத்தி, அதில் அவள் இஷ்ட தெய்வங்களின் தஞ்சாவூர் வடிவ சித்திரங்களை மாட்டினான்.
அவள் இருக்கையின் இடது பக்கத்தில் மற்றொரு கண்ணாடி அலமாரியை பொருத்தினான். கணக்கியலில் தேர்ச்சிப் பெற்றிருந்தவளின் பணியும், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைச் சார்ந்திருக்கும் என உணர்ந்து, அவள் துறை சார்ந்த புத்தகங்களையும், அவள் திறமையைப் பறைசாற்றிய கோப்பைகள், சட்டமடிக்கப்பட்ட சான்றிதழ்களையும் பெருமிதம் பொங்க குவித்தான்.
மதிய உணவை அலுவல் வேலைகளுக்கு இடையில் உட்கொள்ளும் ரகம் அவன்; ஆனால் பணி மேஜை என்பது கோவிலின் கருவறைக்குச் சமம் எனக் காபி கூடப் பருக அனுமதிக்காத ரகம் அவள். அதனால், அறையின் ஒரு ஜன்னலை ஒட்டிய பத்துக்குப் பத்து அடி அளவிலான பரப்பளவிற்கு செயற்கை பார்டீஷன் பொருத்தி, இருவர் அமர்ந்து உண்ண மேஜையும், நாற்காலிகளும், சின்ன மைக்ரோவேவ், மினி ஃப்ரிட்ஜ், சிங்க் என அதை ஒரு குட்டி உணவருந்தும் கூடமாகவே உருமாற்றியிருந்தான்.
“நீ இழந்ததை நினைத்து வருந்தினால், இருப்பதையும் இழந்து விடுவாய்; நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால், இழந்ததையும் அடைந்து விடுவாய்;”
படித்தவளுக்குக் கண்களில் கண்ணீர் கோத்துக்கொண்டது. இழந்தது பணமா, பொருளா வருந்தாமல் இருப்பதற்கு எனத் துக்கம் தொண்டையை அடைத்தது.
பூஜை அலமாரியின் கதவுகளை ஆவேசமாகத் திறந்தாள்.
கதவுகளின் இடுக்கில் தொங்கிய பித்தளை மணிகளும் அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்து அசைந்தாட, அந்த அறையே மணியோசையில் நிரம்பியது.
Advertisement
சீதா கல்யாணம், சிவ குடும்பம், ராதா கிருஷ்ணர், பெருமாள் தாயார் எனத் தம்பதி சமேதராகத் தரிசனம் தந்த தெய்வங்களின் தஞ்சை ஓவியங்களைக் கண்டதும் அவள் மனபாரம் கூடியது.
‘கண்கண்ட கணவனைக் கொடுத்துவிட்டு அவரிடம் உரிமையுடன் உறவாட விடாமல் சோதிக்கிறாயே!’ தெய்வங்களிடம் சண்டையிட்டு பணி மேஜைக்கு வந்தமர்ந்தாள்.
மாலையும் கழுத்துமாகத் தன் தோள்சுற்றி இறுக்க அணைத்துக்கொண்டிருக்கும் கணவனின் பளிங்கு முகத்தைத் தாங்கிய புகைப்படத்தை அவள் வருட,
“அவன் நியாபகமாவே இருக்குதா ரம்யா! நாம வேணும்னா வீட்டுக்குப் போகலாமா,” கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி கதவருகிலிருந்து குரல் கொடுத்தான் தருண்.
மடமடவெனக் கண்களைத் துடைத்துக்கொண்டாளே ஒழிய, நண்பனிடம் தன் உண்மை உணர்வுகளை மறைக்க முடியவில்லை.
“சரி விடு,” என அவள் தோளினைச் சுற்றி அரவணைத்து தேற்றியவன்,
“அவனையும் ஆபீஸுக்கு வரச்சொல்லி நீ கொஞ்சம் தைரியம் கொடுத்திருக்கலாம்ல,” கவலையுடன் வினவினான்.
“சொல்லியிருக்கேன்டா. எனக்குக் கொஞ்சம் பழகினதும் வரேன்னு சொல்லிருக்காரு,” மெல்லியப் புன்னகையுடன் பதிலுரைத்தாள்.
“இவ்வளவுதானே மேட்டர்!” என்றவன், அவளை ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க கையோடு அழைத்துச் சென்றான்.
ஊழியர்களின் பெயர்கள், அவர்கள் கையாண்டு வந்த பணிகள், அலுவலகத்தின் பணித் திட்டங்கள் என அனைத்தும் அவளுக்கு ஒரே வாரத்தில் பரிச்சயமானது. அதேசமயத்தில், வீட்டிலிருந்தபடி அலுவல் பணிகளைச் செய்து வந்தவனுக்கு உத்ரா தகவல் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்களைக் கற்றுத்தர, மாய உலகத்தில் மிதப்பதுபோல, மடிக்கணினியே கதியென்று இருந்தான்.
அவனது அந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இரவு வழக்கத்தை விழுங்கத் தொடங்கியதில் பெண்ணவளின் பொறுமையும் சரியத் தொடங்கியது.
“இன்னையோட நாலு நாள் ஆச்சு ஷ்ரவன், நீங்க என்னோட சேர்ந்து க்ராஸ்வர்ட் ஸால்வ் பண்ணி,” தினசரியைப் பக்கமேஜையில் வீசி எறிந்து படுத்துக்கொண்டாள்.
முதுகைக் காட்டியபடி பணிமேஜையில் மடிக்கணினியில் மூழ்கி இருந்தவனுக்கு, அவள் முகத்தில் பூத்த கோபத்தின் வீரியம் தெரியவில்லை.
“இன்னைக்குத்தான் ரம்யா இந்த புது சாஃப்ட்வேர் பற்றி உத்ரா கத்துக்கொடுத்தா,” என்றவனுக்கு, அத்தனை நேரம் மெனெக்கெட்டுத் தேடிக்கொண்டிருந்த ஒன்று கண்ணில் தென்பட,
“நீ வேற! வேலையின்னு வந்துட்டா, என் பொண்டாட்டிக்கு சுத்தி நடக்குறது எதுவும் தெரியாது. இதுல என்னை எங்க கண்டுக்கப்போகுறா,” மனையாளைப் பாராட்டுவதாக நினைத்து அவளைக் கடுப்பேத்தினான் ஷ்ரவன்.
கட்டிட அமைப்பின் நிழற்பட அச்சுகளை வடிவமைப்பது, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் என ஷ்ரவன் ஒரு பக்கம்; பணித்திட்டம் முதல் விளம்பரங்கள் வரை எனத் தொழில் நுட்பம் சார்ந்த வேலைகளில் உத்ரா ஒரு பக்கம்; சகலத்தையும் அவர்கள் இணையத்தின் வாயிலாகச் செய்துமுடிக்க, வீட்டின் விருந்தாளிகளின் அறை, நாளடைவில் அலுவலக அறையாக மாறியிருந்தது.
இரண்டு மாதங்களாகியும் கணவன் அலுவலகம் வர லட்சியம் செய்யாதது; தங்கள் கடந்தகாலக் கதைகளைக் கேட்க ஆர்வம் காட்டாதது; என அனைத்தும் ரம்யாவை உறுத்தியது. வாய்விட்டுக் கேட்கவிடாமல் அவள் தன்மானம் குறுக்கே நின்றது.
போதாக்குறைக்கு, நான்கு மாதங்களான விரூபா, தனக்குப் பரிச்சயமானவர்களின் முகம் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொண்டிருந்தாள்.
பெற்றவர்களைத் தாண்டி, அவள் பொழுதுக்கும் ஷ்ரவனுடனும், திலகாவுடனும் இருந்ததால், அவர்களைக் கண்டதும் பொக்கை வாய் விரிய தாவிக்கொண்டு விடுவாள்.
குழந்தையைத் தூக்கவே பயந்து தள்ளிநின்று கொஞ்சி விளையாடிய தாமோதரன், பேத்தி தன்னிடம் ஒட்டிக்கொள்ளாததை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ரம்யாவின் மனத்தில் பல இனம்புரியாத கற்பனைகள் தோன்றி அவளை உலுக்கியது.
தனக்குத் தாயாகும் தகுதியில்லை என அறிந்து விரூபா கூடத் தன்னைத் தவிர்ப்பதாக சுய பச்சாதாபம் கொண்டாள். குறிப்பாக, மற்றவர்களிடம் செல்ல மறுத்து, விரூபா, ஷ்ரவன் தோளில் அழுந்த முகம் புதைத்துக்கொள்ளும் போது, ஏதோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றதுபோல முகமெல்லாம் பற்களாக இளிப்பான் ஷ்ரவன்.
அதைக் காணும்போதெல்லாம் பெண்ணவளின் இதயம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்கும். மலடியான தன்னை கணவன் முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடப்போகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தில் எரிமலையாய் கொப்பளிக்கத் துவங்கியது.
ஓடும்வரை ஓடட்டும் எனக் கண்டும்காணாமல் இருந்தவளின் பொறுமையைச் சோதிக்க விடிந்தது அந்தநாள்.
“நான் வீட்டுலதானே இருக்கேன். அதான் நானே அழைச்சிட்டுப் போகுறேன்னு சொன்னேன் ரம்யா,” ஷ்ரவன் தம்பிக்கு முன் பதில் கூறவும், பொத்திக்கொண்டு வந்தது அவளுக்கு.
“உன்னை நம்பி வந்தவளுக்காக ஒருமணி நேரம் கூடச் செலவிட முடியாத அளவுக்கு ஆபீஸ் வேலை முக்கியமா போச்சா உனக்கு,” நண்பனைக் கண்டிக்கும் சாக்கில், மறைமுகமாகத் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
“அப்பாவா லட்சணமா நீயும் குழந்தைக்கு என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமாடா,” மகனைக் கடிந்தார் திலகா.
“அம்மா! ஷ்ரவன்தான்…” தருண் தொடங்கவும், ரம்யாவின் அனல்பார்வை கணவன் பக்கம் திரும்பியது.
பத்தாவது நிமிடம் தருண் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மாமனாருடன் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள் ரம்யா.
தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட, அம்மாவே கதியென்று இருந்தாள். வாரம் மெல்ல ஞாயிற்றுக்கிழமையை நோக்கி நகர்ந்தது.
குழந்தைக்கு உடை மாற்றிக்கொண்டிருந்த தருணின் செவிகளில், ‘உன்னை நம்பி வந்தவளுக்காக ஒருமணி நேரம் கூடச் செலவிட முடியாதா!’ ரம்யாவின் மொழிகள் ரீங்காரமிட,
“எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா உத்ரா,” வாஞ்சையாகக் கேட்டான்.
“இங்கபாருடா! ஃப்ரெண்டு திட்டினதும் சாருக்கு ஞானம் வந்துடுச்சு,” கிண்டல் செய்தாள்.
“அப்படியெல்லாம் இல்லடி. நான் அவக்கூட ஆபீஸுக்கு போனா அவ கொஞ்சம் கம்ஃபர்டபலா ஃபீல் பண்ணுவாளேன்னு ஷ்ரவன் யோசிச்சான்,” தருண் தொடங்க,
தந்தை கையில் இளித்துக்கொண்டிருந்த தாரகையின் கன்னத்தைக் கிள்ளிய உத்ரா, “மணிக்கொரு முறை பால் கேட்டு அழுற இந்த மேடத்தை வச்சிட்டு எங்கேயும் போகமுடியாது,” எனக் கண்சிமிட்டி,
“ஆனா தலைவரோட புதுப்படம் நெட்ஃப்லிக்ஸ் ரென்டல்ல வந்திருக்கு. டி.வி.டி எடுத்துட்டுவா. நைட் பார்க்கலாம்,” எனக் குழைந்தாள்.
“டபுள் ஓகே!” என மனையாளின் நெற்றி முட்டி, குழந்தையுடன் விளையாடத் துவங்கினான் தருண்.
பத்து மணியளவில் குழந்தை உறங்கிட, தங்கள் அறையின் தொலைக்காட்சி பெட்டியில் திரைப்படத்தை ஓட்டினார்கள். தொடக்கத்திலேயே திரைப்படத்தின் பின்னனி இசை காதுகளைக் கிழிக்க, அசௌகரியத்தில் சிணுங்கினாள் விரூபா.
“இந்த வால்யூம்ல படம் பாக்குறதுக்குப் பார்க்காமலே இருக்கலாம்டா,” சிணுங்கினாள் அவன் தோள் சாய்ந்துகொண்டிருந்த வயதில் வளர்ந்த பிள்ளை.
“பாப்புக்குத் தூக்கிப்போடுதே,” அவன் சுட்டிக்காட்ட,
“ஒரு நிமிஷம் இருடா,” என குழந்தையை அலேக்காய்த் தூக்கிக்கொண்டு வெளியேறினாள் உத்ரா.
“என்னடி பண்ணற?” தருண் பதற்றத்துடன் அவளைப் பின்தொடர,
அதற்குள் அவள் எதிர் அறையின் கதவைத் தட்டி ரம்யாவும் வெளியே வந்திருந்தாள்.
“அக்கா! நாங்க சினிமா பாத்துட்டு இருக்கோம். சத்தத்துல இவளுக்குத் தூக்கிப்போடுது. இவ அழுதா குரல் குடுங்க,” குழந்தையை ரம்யாவின் கையில் திணித்தாள்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டவள், “குழந்தையை விட உங்களுக்கு சினிமா தான் முக்கியமா!” கடிந்தாள்.
தோழி எந்நேரமும் வெடிப்பாள் என யூகித்து தருண் பம்ம,
“உன்னை நம்பி வந்தவளுக்காக ஒருமணி நேரம் கூடச் செலவிட முடியாதான்னு நீங்க செஞ்ச அர்ச்சனையில்தான் உங்க ஃப்ரெண்டுக்கு ஞானம் வந்து டிவிடி எடுத்துட்டு வந்திருக்காரு,” உத்ரா முகத்தை அப்பாவியாக வைத்துக் குழைந்தாள்.
அதற்கு மேல் ரம்யாவால் எதுவும் சொல்லமுடியவில்லை. குழந்தை அழும்போது கூப்பிடுகிறேன் என்றாள்.
பத்தே நிமிடத்தில் உத்ரா மீண்டும் கதவைத் தட்ட,
“தூங்கிட்டு இருக்காடி,” என்றாள் ரம்யா.
“தெரியும் ‘க்கா. படம் மூணுமணி நேரம்.” கண்சிமிட்டி, பால் பாட்டிலை நீட்டினாள்.
“தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்குப் படம் முக்கியமா,” எகிறினாள் ரம்யா.
“ஷு! ஷு! அம்மா எழுந்திடப்போகுறாங்க ‘க்கா. இதுவும் தாய்ப்பால் தான்,” எனக் கிசுகிசுத்தாள்.
“அது சரி! குழந்தை கண்விழிச்சா உன்னைத் தேடுவாளே,” மடக்கினாள் ரம்யா.
“அழுதா, அண்ணாவை எழுப்பிவிடுங்க. அவர் சமாளிச்சுப்பாரு,” கூறி, ரம்யா அடுத்த கேள்வி கேட்கும் முன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு சிட்டென பறந்தாள்.
அறைக்குள் வந்த ரம்யா, குழந்தையை அரவணைக்க ஏதுவாய் உடம்பை வளைத்துப் படுத்திருக்கும் கணவனின் கோலத்தைக் கண்டு தவிப்புடன் நின்றாள்.
“சூப்பர் படம்னு கேள்விப்பட்டேன். நாளைக்கு நைட் நாம பாக்கலாம்,” அவன் சர்வ சாதாரணமாகக் கூற,
“ஃபோர் யுர் கைண்ட் இன்ஃபர்மேஷன், எனக்கு மூணு மணி நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்து சினிமா பாக்குற அளவுக்குப் பொறுமையில்ல ஷ்ரவன்,” என்றாள் அழுத்தமாக.
அப்போதும் அவள் மனப்போராட்டத்தைக் கவனிக்க மறந்தான்.
“ஓ! அப்படியா,” என்றவன், “சீக்கிரம் தூங்கு! மேடம் ஒருமணி நேரத்துக்கு மேல தூங்க மாட்டாங்க. கோழித்தூக்கத்துக்குப் பேர்போனவ,” எனச் செல்லமாக குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.
“எல்லாம் நீங்க கொடுக்கும் செல்லம்தான் ஷ்ரவன்,” முணுமுணுத்தாள் ரம்யா.
“ம்ப்ச்… நானும் குழந்தையைச் சொல்லல. உத்ராவைச் சொல்றேன்… குழந்தை உங்ககிட்ட ஒட்டிக்கிட்டான்ற ஒரே காரணத்துக்காக எல்லா வேலையையும் உங்க தலையில் திணிக்குறா. நீங்களும் இனிமேல் அவகிட்ட கொஞ்சம் கறாரா இருங்க,” தெளிவுபடுத்தினாள்.
“இருந்தாலும் ரம்யா…” அவன் தொடங்க,
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் ஷ்ரவன். குழந்தையை நம்மகிட்ட விடுறது இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்,” கூறி அறையின் விளக்குகளை அணைத்தாள்.
அதிகாலையிலேயே திலகாவும், தாமோதரனும் அவரது நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ள ஹைதரபாதிற்குப் புறப்பட்டிருக்க, மூன்று நாட்களுக்கு சமையலறை மருமகள்களின் கைகளுக்கு இடம் மாறியிருந்தது.
அலுவலகம் புறப்பட தயாராகி வந்த தருண்,
“டிஃபென் ரெடியா ரம்யா. ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ் போகணும்,” என உணவு மேஜையில் வந்தமர்ந்தான்.
எல்லாம் தயார் என்றவள், “உங்களுக்கும் சேர்த்து தோசை செஞ்சிடறேன் ஷ்ரவன். சாப்பிட வாங்க,” கூறி, கல்லை அடுப்பில் வைத்தாள்.
சரி என்றவனோ, தருண் உண்டு முடிக்கும் வரை தலைகாட்டாமல் இருக்க, அடுப்பை அணைத்துவிட்டு வசிப்பறைக்கு வந்தாள்.
குழந்தையும் கையுமாக நடைப்பயின்று கொண்டிருப்பவனைக் கண்டதும் கோபம் தலைக்கேறியது அவளுக்கு. நேற்று வாய்விட்டுச் சொல்லியும் தன் போக்கிலே செல்கிறானே எனக் கடுப்பானாள்.
‘கல்லிலிருந்து தட்டிற்கு என்ற ரீதியில் ஒவ்வொரு தோசையையும் மொறுமொறுவென்று சாப்பிட விரும்பும் இவரிடம் எத்தனை மாற்றம்,’ என யோசித்தவளின் கோபம் எல்லையைக் கடந்தது.
“இப்படி உங்க தம்பி பொண்ணையே சீராட்டிப் பாராட்டிட்டு இருந்தா போதுமா. ஆபீஸ்க்கு வர உத்தேசம் இருக்கா இல்லையா?” சீறினாள் பெண்.
“ரம்யா… என் நிலைமை தெரிஞ்சுமா இப்படிச்சொல்ற,” உறைந்து நின்றான் ஷ்ரவன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணப்போறீங்க ஷ்ரவன்?” மனமுடைந்து மாடி ஏறினாள்.
சத்தம் கேட்டு அங்கு வந்த தருண், “நீ போய் அவளைச் சமாதானம் பண்ணு,” என அண்ணனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டான்.
அவன் மாடியேற, அதிரிச்சியிலிருந்து மீளாதவளாய் கீழே இறங்கி வந்தாள் உத்ரா.
“தருண்! திடீர்னு பீரியட்ஸ் வந்துடுச்சு. அதான் அண்ணாகிட்ட குழந்தையை…” கண்ணீர் மல்க விளக்க முயன்றவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு,
“உன்மேல எந்த தப்புமில்ல உத்ரா. கால்ம் டவுன்,” எனத் தேற்றினான்.
“ரம்யா! எனக்கு… ” அவன் தொடங்கியதுதான் தாமதம்.
“எனக்கும்தான் அபார்ஷனாகி அடிவயிறெல்லாம் நெருப்பைக் கொட்டின மாதிரி எரியுது ஷ்ரவன். நான் என்ன நித்தியம் சொல்லியா காட்டுறேன். பல்லைக் கடிச்சிட்டு எல்லா வேலையும் இழுத்துப்போட்டுட்டுச் செய்யல,” கொந்தளித்தாள் பாவை.
எரிமலையாக வெடிக்கும் அவளிடம் எந்த விளக்கமும் செல்லுபடியாகாது என அவன் தலைகுனிந்து மெத்தையில் அமர, அதுவே அவள் எரிச்சலை கிளப்பியது.
“வெளிஉலகத்துக்கு முகத்தைக் காட்ட பயந்துட்டு இப்படியே வீட்டுலேயே அடைஞ்சுகிடங்க,” சபித்துத் தோள்பையுடன் புறப்பட்டாள்.
“பயம் வெளிஉலகத்தைப் பார்க்க இல்ல ரம்யா. உன்னை நெனச்சு,” அவன் குனிந்த தலை நிமிராமல் பேச,
“வாட்?” சிடுசிடுத்தாள் பாவை.
“நான் ஆபீஸுக்கு வந்துட்டா நீ கிளம்பிடுவன்ற பயம்,” அவன் கண்ணீர் மல்க உரைக்க,
“நான் ஏன் கிளம்பப்போகுறேன். நீங்க வரணும்னு தானே காத்துட்டு இருக்கேன்,” இறுகிய குரலில் உரைத்தாள்.
“பால்கோவா பிடிக்கும்னு அதையே நாள் முழுக்க சாப்பிட்டிட்டு இருக்க முடியுமான்னு சொன்னது நீதானே,” மென்மையிலும் மென்மையாக அவன் கேட்க,
காதில் விழுந்தது நிஜம்தானா என இமைக்கும் நொடியில் அவன் காலடியில் மண்டியிட்டு,
“ஷ்ரவன்! உங்களுக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சா? இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்ல?” அவன் தோள்களை உலுக்கி கதறினாள்.
“இல்ல ரம்யா! அம்மா சொல்லி தெரிஞ்சுகிட்டேன்,” அவன் கூறவும் ஏமாற்றத்தில் வலுவிழந்தது அவள் பிடி.
“கம்பனி பக்கமே வரமாட்டேன்னு சொன்ன நீயே முன்வந்து ஜாயின் பண்ணதுல அப்பாக்கும் தருணுக்கும் அத்தனை சந்தோஷம். அந்த சந்தோஷம் இன்னும் கொஞ்சம் நாள் நீடிக்கட்டுமேன்னுதான் வராம இருக்கேன்;
உன்னோட ஆபீஸ் விஷயங்கள பேசணும்னு ஆசை. ஆனால் ஆபீஸ் விஷயங்களை வீட்டுல பேசுறது உனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சதுனாலதான் எதையும் கேட்டுகல.” அவன் மனம்திறந்து பேச, கூனிக்குறுகிப் போனாள் பாவை.