Skip to content
Post Views: 104
காவ்யா அவளையே குறுகுறுவென பார்க்க,அது வேறு அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவளின் முகம் ஒரு மாதிரி கறுத்து சிவந்துவிட்டது.
Advertisement
அங்கிருந்து சென்றுவிடலாம் என்றால்,தன் மகளை அங்கு தனியே விட்டு செல்ல அவளிற்கு விருப்பமில்லை.
அத்துடன் அவன் அங்கு வந்து குழந்தையை விட்டால் அனைவரும் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் அவளின் மேனியில் உதறல் எடுத்தது.
Advertisement
Advertisement
அவளிற்கு ஒரு மாதிரி அழுகையே வந்துவிடும் போல் இருக்க கூனிக் குறுகி நின்றாள்.
ஆனால் காவ்யா ஒரு பெண்ணாக அவளின் உணர்வுகளைப் படித்தவளாய் அவளிடம் எவ்வித கேள்வியும் எழுப்பாமல் “தேவி உட்காருங்க…தண்ணீ குடிங்க” என அவளிடம் நீர்க் குவளையை நீட்டினாள்.
Advertisement
தேவியோ நிமிர்ந்து அவளை கண்கள் கலங்கப் பார்க்க,அவளோ “ஈஸி தேவி…தண்ணீர் குடிங்க…இல்லை…வேற ஏதாவது டிரிங்க் வேணுமா?” என இதமான குரலில் கேட்டு,அவளின் தோளில் கை வைத்து அழுத்தினாள்.
“தண்ணீர் போதும்” என குவளையை வாங்கி நீரை பருகினாள் தேவி.
“உட்காருங்க” என அவளை அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவளருகே தானும் அமர்ந்து அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
அவள் தன்னை தவறாக நினைக்காமல் தோழமையுடன் பழகியப்பிறகே அவளின் இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.
தேவி அமைதியாக இருந்தாலும் காவ்யா ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
ஆனால் தேவியின் விழிகள் மட்டும் தவிப்புடன் அவ்வப்போது சேரனின் அறையைத் தொட்டு மீண்டன.
அவளிற்கு ஒரு கட்டத்தில் ‘அது என் குழந்தை?நான் எதுக்காக தயங்கணும்…உள்ளே போய் தூக்கிட்டு வந்திடலாமா?’ என்று கூட தோன்றியது.
ஆயினும்,அவனை கண்டதும் மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவளை நிதானிக்க வைத்தது.
ஏனெனில்,காலையில் நிகழ்ந்த சம்பவத்தால் பாதிப்புற்றிருந்த குழந்தை அதன் பிறகு சிரிக்கவே இல்லை.
அவனை பார்த்ததும் மலர்ந்த அந்த பிஞ்சு மனதினை உடைக்க விருப்பமின்றி அவள் காத்திருந்தாள்.
சூர்யகுமாருக்கு அழைத்து “சார் இங்க இன்னும் வேலை முடியலை…நான் கொஞ்ச நேரத்திலே வந்திடட்டுமா?” என நலிந்த குரலில் அனுமதி வேண்ட,அவருமே “சரிம்மா…பொறுமையா வா…முடிஞ்சா குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுத்து சாப்பிட வைச்சு கூட்டிட்டு வா…இன்னைக்கு என்னோட ட்ரீட்” என பெருந்தன்மையுடன் கூறி வைத்துவிட்டார்.
அவரின் இந்த நற்குணங்களை பற்றி எண்ணும் போதே அவளின் முகம் கனிந்தது.
அதற்குள் காவ்யாவிற்கு சேரனிடமிருந்து அழைப்பு வந்தது.
அதனை தேவி புரியாமல் பார்க்க,காவ்யாவோ அலைப்பேசியை எடுத்துப் பேசினாள்.
“ஹான் ஓகேங்க சார்…ஓகே…” என தேவியைப் பார்த்து தலையாட்டி பேசியவாறே அலைப்பேசியை வைத்தாள்.
தேவி ‘என்ன?’ என்பது போல் பார்க்க,
காவ்யாவோ “யாரும் அவரை அரை மணி நேரத்துக்கு டிஸ்ட்ர்ப் பண்ணக்கூடாதாம்…பிளஸ் பாப்பாவுக்கு பூரி ஆர்டர் பண்ணிட்டு அப்படியே உங்களுக்கும் என்ன வேணும்னு கேட்டு ஆர்டர் பண்ணச்சொன்னாரு” என சிரித்துக்கொண்டே சொன்னாள்.
‘ஏதே அரைமணி நேரமா?’ என தேவி மலைத்துப்போய் அமர்ந்திருக்க,
“உங்களுக்கு என்ன வேணும் தேவி?” என கேட்டுக்கொண்டே சோமெட்டோ செயலியை திறந்தாள்.
தேவியோ மறுப்பாக தலையசைத்து “எனக்கெல்லாம் எதுவும் வேணாம் காவ்யா…நான் ஆபிஸுக்கு போகணும்…நேராமாச்சு…நீங்க போய் பாப்பாவை கூட்டிட்டு வரமுடியுமா?” என தயக்கத்துடன் அவளிடம் கோரிக்கை வைக்க,
“ஐய்யோ நானா மாட்டேன்ப்பா…இப்போ மட்டும் நான் உள்ளே போனேன்…சார் என்னை கடிச்சு குதறிடுவாரு” என பதறிப்போய் பின்வாங்கினாள் காவ்யா.
“அப்போ நான் போகட்டுமா?” என அவளிடம் அனுமதி வேண்ட,
“ஐ திங்க் உங்களை எதுவும் சொல்லமாட்டாருனு நினைக்கிறேன்…நீங்க வேணா போய் பேசி பாருங்களேன்” என்றாள் இதழோரம் தோன்றிய முறுவலை மறைத்துக்கொண்டே…
தேவியோ “நானா?” என தடுமாற,
“நீங்க தான்…தைரியமா உள்ளம் போய் எங்க சார்கிட்ட பேசி பேபிய தூக்கிட்டு வந்திடுங்க…பயமா இருந்தால் இங்கியே இருங்க” என சாவகாசமாக சொல்லி,அலைப்பேசியில் உணவை ஆர்டர் செய்து முடித்திருந்தாள்.
தேவியோ ‘உள்ளே போவாதா வேண்டாமா?’ என கைகளை பிசைந்தப்படி அமர்ந்திருந்தாள்.
பின்பு பெண் குழந்தையை ஒரு அந்நிய ஆடவனுடன் வெகு நேரம் தனிமையில் இருக்க விட்டு,வெளியில் அமர்ந்திருப்பது சரியில்லை என்று அவளிற்கு தோன்றியது.
அதனால் தன் அச்சத்தை எல்லாம் தூக்கி தூர வீசிவிட்டு எழுந்துக்கொண்டாள்.
அவள் எழுந்த வேகம் கண்டு “என்னாச்சு?” என காவ்யா புரியாமல் கேட்க,
தேவியோ “அம்முவை போய் கூட்டிட்டு வர்றேன்” என திடமாக உரைத்து அவனது அறை நோக்கி விடுவிடுவென்று சென்றாள்.
காவ்யாவோ அவளை தடுக்க முனையாமல் சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
இவர்களுக்கிடையே என்ன உறவு?எப்படி சந்தித்தார்கள்? என்று அவளிற்கு தெரியாது.
ஆனால் சேரனுக்கும் ஸ்ருதிக்குமான நெருக்கம் அவளிற்கு எதையோ உணர்த்தியது.
அத்துடன் தேவியின் கணவன் இறந்துவிட்டான் என்று அவளுடன் பேசியதில் இருந்து அறிந்துக்கொண்ட காவ்யா ‘என்ன தான் நடக்குதுனு பார்ப்போம்’ என தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.
தேவியோ கதவை தட்டிவிட்டு அவனிடம் அனுமதிப் பெறாமலே வேகமாக உள்ளே நுழைந்தாள்.
உள்ளே சென்ற தேவியோ ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டாள்.
ஏனெனில்,சற்று முன்பு சட்டப்புத்தகம்,மடிக்கணிணி,கோப்புகள் என்று நிறைந்திருந்த அவனது மேசையில் இப்போது அவளது மகள் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள்.
அதுவும்,வாய்க்கொள்ள சிரிப்புடன்..
அதேப்போல் விறைப்புடன் சிடுசிடுப்பாக பேசிய மனிதனின் இதழ்களிலும் ஒரு விரிந்த புன்னகை குடியேறியிருந்தது.
அவளது மகளோ அவனுடைய கண்ணாடியை எடுத்து அணிந்திருந்தாள்.
பெரிய தங்க நிற சட்டம் வைத்த வைத்த கண்ணாடி அது!
அது அவளின் முகத்தின் பாதியை மறைப்பது போல் இருந்தது.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் அவளை நோக்கி திரும்பி பார்க்க,அவளின் மகளோ அன்னையை கண்டதும் “அம்மா அம்மு கண்ணாடி போதிருக்கேன்…நல்லாயிருக்கா?” என்று வெள்ளந்தியாய் சிரித்தப்படி கேட்க,
அவளோ ‘என்ன பேசுவது’ என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.
அவள் விழிப்பதைப் பார்த்த சேரனின் மனதில் மிக மெல்லியதாய் ஒரு சலனம்!
அவளின் விழிகளையே தன்னை மீறி சில கணங்கள் பார்த்திருந்தவன்,உடனே தன் தலையை உலுக்கிக்கொண்டான்.
அவளோ அப்போதும் தனது விழியசைவை மாற்றாமல் நின்றிருக்கவும்,அந்த கயல்விழிகளை ஆழ்ந்து நோக்கி ‘பேபி கேர்ளுக்கு அப்படியே அவங்க அம்மா கண்ணு போலே’ என பெருமூச்சை வெளியேற்றினான்.
குழந்தையின் புறம் பார்வையை திருப்பிய சேரன் “பேபி கேர்ள் போதும் கண்ணாடிய கழட்டுங்க…பவர் கிளாஸ் இது…ரொம்ப நேரம் போடக்கூடாது…கழட்டுங்க” என கண்டிப்புடன் கூறி கண்ணாடியை கழட்டியிருந்தான்.
சிறியவளோ “அங்கிள் இன்னும் கொஞ்ச நேதம் பிளீஸ்…” என கொஞ்சலாய் சிணுங்க,
“நோ பேபி…உனக்கு வேணும்னா அங்கிள் வேற கண்ணாடி வாங்கி தர்றேன்” என பிடிவாதமாக கூறிவிட,குழந்தையும் அவனிடம் அடம்பிடிக்கவில்லை.
ஸ்ருதியும் அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை இல்லை என்பதால் அவன் கூறியதும் ஏற்றுக்கொண்டது.
சேரனோ கண்ணாடியை அதன் பெட்டியில் வைத்து மூடிவிட்டு, வாசலருகே நின்றிருந்த தேவியைப் பார்த்து “என்ன விஷயம்?” என்று புருவம் உயர்த்தினான்.
அதன்பிறகே அவள் உள்ளே வந்ததற்கான காரணமே நினைவில் எழ “பாப்பாவை கூட்டிட்டுப்போகலாம்னு வந்தேன்” என்றதும் அவனின் முகம் அப்படியே மாறிப்போனது.
அதைப்பார்த்து அவள் எச்சிலை கூட்டி விழுங்க,அவளின் மகளோ “அம்மா இதுங்க…நாம்ப பூரி சாப்பிட்டு போகலாம்” என்றாள் குதூகலமாக..
தேவி மறுக்க வாயைத் திறக்கும் நேரம் “சார்” என காவ்யா கதவை தட்டியிருந்தாள்.
“உள்ள வா” என அவன் அனுமதி வழங்கியதும் உள்ளே வந்த காவ்யா,தேவி இப்போதும் வாசலுக்கு அருகே நின்றிருப்பதை பார்த்துவிட்டு “வாங்க தேவி சாப்பிடலாம்” என அவளை கையோடு அழைத்து வந்திருந்தாள்.
காவ்யாவின் கையில் ஒரு உணவுப் பொட்டலம் இருந்தது.
அதைப்பார்த்த தேவியோ “இல்லை எனக்கு வேணாம்” என மறுக்க,
“அட வாங்க” என அவளை அங்கிருந்த நீள் விரிக்கையில் அமர வைத்து பொட்டலத்தை பிரித்தாள் காவ்யா.
“இல்லை வேணாம்” என மீண்டும் தேவி மறுக்க,
அதற்குள் “அங்கிள் என்னை கீழே இதக்கி விடுங்க” என ஸ்ருதி கையை நீட்ட,அவனும் சிரித்தப்படி அவளை தூக்கி இறக்கிவிட்டான்.
உடனே தாயின் அருகே ஓடி வந்த குழந்தையோ “அம்மா பசிக்குது..” என அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.
அதுவரை உணவில் கை வைக்க மறுத்து அமர்ந்திருந்த தேவியோ குழந்தை பசி என்றதும் வேறு வழியின்றி அவளை தன் மடியில் அமர வைத்து உணவை ஊட்டிவிட்டாள்.
“அம்மா பூரி நல்லாயிருக்கில்லை” என நாக்குச் சொட்டி குழந்தை சுவைப்பதை கண்டு தேவியின் இதயம் கனத்தது.
வீட்டில் மகளிற்கு பூரி செய்துக்கொடுக்க வேண்டும் என்று அவளிற்கு ஆசையாக இருக்கும்.
ஆனால் ஜமுனா “ஏய் இது என்ன உன் அப்பன் வீட்டு காசா?எண்ணெய் எல்லாம் என்ன வேலை விக்குது…இப்போ போய் பூரி சுடறேன் அது சுடறேன்னு நிக்கிற…சிக்கனமா செய்…இல்லை வீட்டை விட்டு கிளம்புடி” என தேளாய் கொட்டுவாள்.
அதற்கு அஞ்சியே வீட்டில் பூரி செய்வதே இல்லை.
மகள் எப்போதாவது கேட்டால் வெளியில் வாங்கி தருவாள்.
என்ன தான் கடையில் வாங்கி உண்டாலும் வீட்டில் சமைத்து சாப்பிடுவது போல் ஒரு திருப்தி உண்டாகாது.
மகளிற்கு மட்டுமில்லை…அவளிற்கும் மிகவும் பிடித்தமான உணவு அது!
ஆனால் பிறந்த வீட்டிலும் சரி…புகுந்த வீட்டிலும் சரி குடும்ப சூழ்நிலை அவளின் ஆசையனைத்தையும் குழித்தோண்டி புதைக்க வைத்திருந்தது.
அவள் ருசியறிந்து சாப்பிட்டு பல மாதங்களாகிறது.
ம்ஹும்…பல வருடங்களாகியிருந்தது.
தன்னுடைய பசிக்காக மட்டுமே சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் தாம் அனுபவித்திராத சுகத்தை எல்லாம் மகள் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணியே,தன்னுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாள்.
அவளால் நினைத்த நேரமெல்லாம் இதை வாங்கி தரமுடியாது.
மாதத்தில் ஒரு முறை அவளிற்கு வாங்கி தருவாள்.
அவளின் நிதி நிலைமை அத்தகைய நிலையில் தான் இருந்தது.
அதனால் இன்று மகள் ஆசையாக பூரி உண்பதை கண்டு அவளிற்கு கண்கள் கரித்தது.
ஆனால் அதனை அடக்கிக்கொண்டாள்.
குழந்தை பசியாற உண்பதை கனிவுடன் நோக்கிய சேரன் “வாட் அபவுட் யூ காவ்யா?” என அவளை விசாரிக்க,
“இல்லைங்க சார் எனக்கு வேணாம்…காலையிலே வீட்டுலே நான் பொங்கல் சாப்பிட்டு தான் வந்தேன்…திம்முனு இருக்கு” என்று சொல்ல,
“ஓகே ஃபைன்…மதியம் வேணும்னா உனக்கு பிடிச்சது எதையாவது ஆர்டர் பண்ணிக்கோ” என்றான் இயல்பான குரலில்..
அதைக்கேட்டவளின் முகம் பளீச்சிட “ம்…தேங்க்ஸ் சார்” என கண்கள் மின்ன சந்தோஷமாக தலையாட்டினாள்.
திடீரென்று ஞாபகம் வந்தவளாய் “சார் நீங்க?” என்று வினவ,
“காலையிலே நானும் சாப்பிட்டு தான் வந்தேன்…எனக்கு வேணாம்” என்றவன்,
“மிசஸ் கிளாரா ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க…என்ன விஷயம்னு கேளு…என்னை மீட் பண்ணனும்னு கேட்டால் நாளைக்கு காலையிலே பதினொரு மணிக்கு அப்பாய்மெண்ட் கொடு” என்று காவ்யாவிடம் வேலை விஷயம் பேசி வெளியே அனுப்பினான்.
தேவியோ அனைத்தையும் மௌனமாக கேட்டப்படி மகளின் வயிற்றை நிரப்பியிருந்தாள்.
அவள் உண்டதும் வாயை துடைத்துவிட்டு எழ முயற்சிக்க “எங்க கிளம்பறே?உனக்கும் சேர்த்து தான் ஆர்டர் பண்ணியிருக்கு…உட்கார்ந்து சாப்பிடு” என உத்தரவிட்டான்.
அவளோ சங்கடமாக “இல்லை எனக்கு…” என மறுக்க ஆரம்பிக்கும் போதே,
“வேணாம்னு சொல்லாமல் ஒழுங்கா சாப்பிடு…காலையில் இருந்து சாப்பிடலைனு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது…சாப்பிடாமல் இருந்து எங்கியாவது மயங்கி விழுந்து வைக்காதே…கூட பேபி கேர்ள் வேற இருக்காள்” என அதட்டினான்.
அவளோ பிடிவாதமாக அமர்ந்திருக்க ‘நெஞ்சழுத்தம் பிடிச்சவ’ என மீண்டும் மனதிற்குள் திட்டிக்கொண்டான் சேரன்.
அன்னை உண்ணாமல் இருப்பதை கண்டுவிட்டு “அம்மா உனக்கும் பூரி புடிக்குமில்லை…நான் தான் அங்கிள்கிட்ட சொன்னே…சாப்பிடும் மா” என அறிவுறுத்திய குழந்தையோ அவளாகவே ஒரு துண்டு பூரியை பிய்த்து அவளின் வாயருகே நீட்டினாள்.
தன் இதழ் முன்னே பிஞ்சுக்கரம் நீண்டதும் அவளின் இதயம் அப்படியே உருகிப்போனது.
அப்போதும் “வேணா..” என வாயை திறக்க ஆயுத்தமானவளின் இதழில் பூரியைத் திணித்திருந்தாள் மகள்.
அவளாக அதனை திணிக்கவில்லை.சேரன் தான் அவளின் கரத்தைப் பற்றி இயக்கியிருந்தான்.
தேவியோ ‘இவரு அங்க சேரிலே தானே இருந்தாரு…எப்போ இங்க வந்தாரு’ என திகைப்புடன் ஏறிட,
அவனோ “ஒழுங்கா சாப்பிடு…குழந்தைய வளர்க்காவது தெம்பு வேணுமில்லை…” என குரலுயர்த்தி அதட்ட,வேறுவழியின்றி வாயிலிருந்த உணவை மென்று தின்ன ஆரம்பித்தாள்.
அதேப்போல் அடுத்தடுத்த பூரி துண்டு அவளின் வாயிற்குள் செல்ல,ஒரு வழியாக அவனது இயக்கத்தில் மகள் முழுமையாக உணவை ஊட்டி முடித்திருந்தாள்.
அவள் மறுக்கலாம் என்றால் அவனோ அவளிற்கு மறுக்க வாய்ப்பளிக்கவே இல்லை.
தேவியோ பயத்தில் அவளையும் அறியாமல் நான்கு பூரி உண்டிருக்க, அவளிற்கு வயிறு நிரம்பிப்போனது.
காலியாக இருந்த பொட்டலத்தை பார்த்த தேவியோ ‘நானா எல்லாம் சாப்பிட்டது’ என
அதிர்ந்துப்போனாள்.
ஸ்ருதியோ “ஐய் அம்மாவுக்கு நான் முழுசா ஊத்திவிட்டேன்…அங்கிள் அம்மா சாப்பித்தாங்க…நான் குத் கேர்ள் தானே?” என கைதட்டி ஆர்ப்பரிக்க,
சேரனோ குறுநகையுடன் “ஆமா பேபி கேர்ள்…நீயும் குட் கேர்ள் தான்…சமத்தா சாப்பிட்ட உன் அம்மாவும் குட் கேர்ள் தான்…” என தேவியைப் பார்த்தவாறே பதில் கூறியவன் “நீ உங்க அம்மாவுக்கு கிடைச்ச ஏஞ்சல் பேபி கேர்ள்” என அவளை தன் கையில் அள்ளிக்கொண்டான்.
அவன் கூறியது அனைத்தும் நிஜம்…
இருண்டிருந்த அவளின் வாழ்வில் ஒளியேற்றிய தேவதை அவளின் மகள் ஸ்ருதி தான்..
அதை எண்ணியவுடன் அவளின் நெஞ்சம் பனித்திட,சேரனோ குழந்தையை அழைத்துச்சென்று அவளின் கரத்தை சுத்தம் செய்து அழைத்து வந்தான்.
வெகு நாட்களுக்கு பிறகு தேவியின் மனமும் வயிறும் நிரம்பிப்போயிருந்தது.
அவை அனைத்திற்கும் காரணமான சேரனை அவள் இமைக்கவும் மறந்துப்பார்த்தாள்.
சேரனோ அவளின் பார்வை அறியாமல் தனது கைக்குட்டை கொண்டு ஸ்ருதியின் முகத்தை துடைத்துவிட்டு,அவளின் உடையை சரி செய்துவிட்டான்.
அவன் எவ்வித சுணக்கமும் இல்லாமல் குழந்தைக்கான பணிவிடைகளை செய்வதை பார்க்கும் போது அவளின் இதயம் கனிந்தது.
எந்த
வொரு இரத்தச்சொந்தமும் இல்லாதவனின் இந்த அக்கறை அவளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதை அவள் உணர்ந்தாலும் அவளின் காயப்பட்ட மனம் அதனை ஏற்க மறுத்தன.
அதனால் விரைவாக குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.
error: Content is protected !!