Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 9.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

சாணக்கியனோ அப்படியே இறுகிப் போனான். எட்டு மாத இறந்த குழந்தையை அவன் கையில் வந்து நர்ஸ் கொடுக்க அதை கையில் வாங்கியவனுக்கு கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. மரக்கட்டை பொம்மையாக அதன் உடல் இருக்க பெற்றவனுக்கு எப்படி இருக்குமாம்?

 

இறந்த மனைவிக்காகவும் அவன் கண்கள் கண்ணீர் வடிக்க சகுந்தலா தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தாள். கணவனுக்கான ஆபத்து தான் மருமகளை காவு வாங்கி விட்டது என்று எண்ணி கணவர் மேல் வருத்தம் தான். ஆனால் என்ன செய்ய முடியும்.

 



Advertisement

அமருக்கு தகவல் சொல்ல அவனுக்கும் இந்த செய்தி இடியாக தான் இருந்தது, அவனுக்கு அனைத்து கோபமும் தந்தை மீது தான் திரும்பியது. அந்த ஆளை சுத்தமாக வெறுத்தான்.

 

ஸ்னேகாவின் குடும்பமும் அவரசமாக கிளம்பி வந்து விட்டார்கள். அடுத்த நாள் காரியத்துக்கு அவள் தங்கை உட்பட அனைவரும் வந்து விட்டார்கள். செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி செய்த சதி என்று அவர் ஆதாயம் தேட முயன்றார். பத்திரிக்கைகளும் அப்படியே தான் எழுதினார்கள். நிச்சயம் தேர்தலில் ஜெயிப்பேன் என்று நம்பிக்கையில் இருந்தார்.

Advertisement

 

Advertisement

கடைசி காரியம் எல்லாம் முடிய சாணக்கியன் அமைதியாக இருந்தான். அவன் மனதில் பல போராட்டம். ஸ்னேகாவுடன் மனம் ஒத்து மன நிறைவான வாழ்க்கையை வாழ வில்லை தான். எந்நேரமும் சண்டை பிரச்சனைகள் தான். அவர்களுக்குள் நெருக்கானமான உறவு கூட அதிகம் இருந்தது இல்லை. அதுவும் குழந்தை தங்கிய பிறகு அப்படியே ஒதுங்கிக் கொண்டான். அதனால் அவனை மனைவியின் இறப்பை விட குழந்தையின் இறப்பு தான் பாதித்தது.

 

கையில் வாங்கிய குழந்தையின் நினைவில் இப்போதும் அவன் உடல் சிலிர்த்துக் கொள்ளும். அதை எண்ணி தான் அதிகம் துவண்டான்.

Advertisement

 

அண்ணனுக்கு துணையாக அமரும் அவனுடனே இருந்தான். அடுத்து வந்த நாட்களில் வேறு வழி இல்லாமல் அமர் தொழிலை கவனிக்க சாணக்கியன் ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான். தந்தை சொன்னால் கேட்பான், அமர் சொன்னால் அதை செய்வான். இப்படியே தான் சென்றது அவன் வாழ்க்கை.

 

இவ்வளவு பிரச்சனையிலும் தருமருக்கு இடியாக விழுந்த செய்தி தருமர் அந்த தேர்தலில் தோற்று போனது தான். என்ன காரணம் என்று கூட யாருக்குமே தெரிய வில்லை. அவர் வீட்டில் இரண்டு இறப்பு வேறு விழுந்திருக்க அது கூட அவருக்கு சாதகமாக வர வில்லை.

 

ஸ்னேகாவின் தந்தையே தருமரிடம் “உங்களுக்கு ராசி இல்லை போல சம்பந்தி. நம்ம பெரிய மாப்பிள்ளை இல்லைன்னா சின்ன மாப்பிள்ளையை அடுத்த தேர்தலில் நிக்க வைப்போம். அதுக்கு முன்னாடி என் சின்ன மகளை உங்க வீட்டுக்கு மருமகளா கொடுக்கணும்”, என்றார்.

 

தருமருக்கு கசக்குமா என்ன? தருமர் சாணக்கியனிடம் பேச “அப்பா வேற என்ன வேணும்னாலும் சொல்லு கேக்குறேன். இதை ரெண்டு மட்டும் என்னை செய்ய சொல்லாத. எனக்கும் அரசியலுக்கும் ஆகாது. அடுத்து ஸ்னேகாவோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி மாதிரி. இந்த பேச்சு இனி பேசாதப்பா”, என்று சொல்லி விட்டான். அதில் இருந்து தான் அமரிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருக்க அவனோ எப்போதும் அவரை அலட்சியம் மட்டும் தான் படுத்துவான்.

 

ஒரு வழியாக நாட்கள் கடக்க அன்று ரதியை ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்திருந்தார்கள்.

 

நார்மல் டெலிவரி தான் என்றாலும் பெரும் சோகமாக ஒரு பெண் குழந்தை மட்டும் இறந்தே பிறந்தது. ஒரு ஆண் ஒரு பெண் நல்ல எடையில் சரியாக இருக்க மூன்றாவது குழந்தை அப்படி இருந்தாலும் அதற்கு இதயம் பலவீனமாக இருந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

 

எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெற்றவளுக்கு வலிக்கும் தானே? அதை கையில் வைத்து கண்ணீர் விட அப்போது கூட மஞ்சு இறுகி தான் நின்றாள். மகளுக்கு ஆறுதல் கூட சொல்ல வில்லை. மற்ற பணிவிடைகள் செய்தாள் தான். ஆனால் அன்பாக அனுசரணையாக ஒரு வார்த்தை கூட மஞ்சுவுக்கு பேச மனதில்லை. அரவிந்த் தான் ரதிக்கு ஆறுதலாக இருந்தான்.

 

டாக்டர் வேறு அவளை அழக் கூடாது என்று சொல்லி விட ரதிக்கு கஷ்டமாக இருந்தது. மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்து சந்தோஷப் பட்டாலும் உள்ளுக்குள் ஒரு வலி.

 

மகளின்  முகம் திவ்யா போல இருக்க மகனின் முகமோ அவளது அமரை உரித்து வைத்திருந்தது. ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்க மறுபடியும் வார்த்தையால் வதைக்க ஆரம்பித்தாள் மஞ்சு.

 

“உனக்கே வெட்டிச் சோறு. இதுல இன்னும் ரெண்டு. படிச்சு நல்ல பதவிக்கு போய் எங்களை உக்கார வச்சு சோறு போடுவன்னு பாத்தா நல்லா இருக்கு டி”, என்று பேச முதல் முறையாக ரதிக்கு தன்மானம் அடி வாங்குவது போல இருந்தது.

 

தான் பேச்சு வாங்கலாம். தன்னால் தன்னுடைய குழந்தைகள் பேச்சு வாங்க கூடாதே. அது மட்டும் அல்ல. அவளுக்கு நன்கு தெரியும். அமர் வேறு ஒரு வாழ்க்கையை தேடி இருக்க மாட்டான் என்று. அதனால் வேறு ஒரு முடிவு எடுத்தவள் அன்னையிடம் மகனைக் கொடுத்து விட்டு அரவிந்துடன் சென்னை கிளம்பினாள்.

 

மஞ்சுவும் தாமோதரனும் கேள்வி எழுப்ப “பெத்துட்டாலும் என்னால ஒண்ணு தான் வளக்க முடியும்; அவருக்கும் இதுல பங்கு இருக்கு தானே? பெண் குழந்தை பொறுப்பை அவரே ஏத்துக்கட்டும். அவர் கிட்ட கொடுக்க போறேன்”, என்றாள்.

 

அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த மஞ்சு “நீ போனதும் வா மா மருமகளேன்னு சொல்லுவான் அந்த ஆள். போய் அசிங்க பட்டு வரப் போற?”, என்றாள்.

 

அதற்கு அன்னைக்கு எந்த பதிலும் கொடுக்காமல் சென்று விட்டாள் ரதி. இப்போது நேராக அமர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். காவலாளி யாரென்று விசாரிக்க அரவிந்த் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாற “வக்கீல் சகுந்தலா தேவியை பாக்கணும். ஒரு கேஸ் விஷயமா?”, என்றாள் ரதி.

 

அவனும் உள்ளே அனுப்பி விட அப்போது வீட்டில் இருந்தது தருமரும் சகுந்தலாவும் தான்.

 

இவர்களைப் பார்த்ததும் தருமர் அதிர்ந்து எழும்பி நிற்க சகுந்தலாவுக்கு திகைப்பு தான். அவள் வரவை அவள் எதிர் பார்க்கவே இல்லையே.

 

“ஏய் நீயா? நீ இன்னுமா உயிரோட இருக்க? செத்து ஒழிஞ்சுருப்பேன்னு நினைச்சேன்”, என்றார் தருமர். தருமருக்கும் சரி சகுந்தலாவுக்கும் சரி அவள் கையில் இருந்த குழந்தை மனதுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பை உருவாக்கியது. ஆனாலும் அரவிந்தை திருமணம் செய்து அதனால் வந்த குழந்தையோ என்றும் எண்ணிக் கொண்டார்கள்.

 

தருமரைக் கண்டு கொள்ளாமல் “மேடம் உங்க மூலமா ஒரு கேஸ் நடத்தலாம்னு வந்துருக்கேன். என் கேசை நீங்க தான் எடுத்து நடத்தனும்”, என்றாள் சகுந்தலாவைப் பார்த்து.

 

கேஸ் என்றதும் சகுந்தலா “வா மா, உக்காரு. நீயும் வா பா”, என்று சொல்ல “ஏய் அவங்களை எதுக்கு உக்கார சொல்ற?”,. என்று கேட்டார் தருமர். அதற்கு ஒரு பார்வை சகுந்தலா பார்க்க “இவ ஒருத்தி வேலை விஷயம்னு வந்தா என்னை வில்லன் போல பாப்பா”, என்று எண்ணி அமைதி காத்தார்.

 

“சொல்லு மா, என்ன விஷயம்? யார் மேல கேஸ் கொடுக்கணும்?”, என்று கேட்டாள் சகுந்தலா.

 

“கேஸ் கொடுக்கணுமா வேண்டாமானு அவங்க சொல்ல போற முடிவுல தான் மேடம் இருக்கு. நான் அமர்ன்னு ஒருத்தரை காதலிச்சேன். அவர் மூலமா எனக்கு குழந்தை உருவாச்சு. அதை கலைக்க எனக்கு மனசு இல்லை. அதனால பெத்துகிட்டேன். இதோ அது தான் இந்த குழந்தை”, என்று சொல்ல “என்னது அமர் குழந்தையா?”, என்று ஆனந்த அதிர்ச்சியாக கேட்டாள் சகுந்தலா.

 

“ஆமா மேடம். இது அவர் குழந்தை தான். வேணும்னா டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க கூட நான் தயார் தான். குழந்தை உருவாகிருச்சு. பழி பாவம் ஏச்சு பேச்சு எல்லாம் வாங்கி பெத்து எடுத்துட்டேன். எனக்கு என் கடமை முடிஞ்ச மாதிரி தான் தோணுது. இந்த குழந்தை விஷயத்துல அவருக்கும் பொறுப்பு இருக்குல்ல. இனி இந்த குழந்தையை அவர் தான் வளக்கணும். இந்த குழந்தையை அவங்க குடும்பம் ஏத்துக்கலைனா அந்த குடும்பத்துல இருக்குற எல்லார் மேலயும் கேஸ் போடணும். அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்”, என்று சொல்ல கணவனை ஒரு பார்வை பார்த்தாள்.

 

“அதெல்லாம் முடியாது. என் மகனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன். இப்ப வந்து குழந்தையை நீட்டினா என்ன பண்ண? உன்னால வளக்க முடியலைனா அநாதை ஆஸ்ரமத்துல போய் சேரு. அதுக்கான பணம் வேணா கொடுத்துறேன்”, என்றார் தருமர்.

 

“அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பான்னு எல்லாரும் இருந்தும் எதுக்கு என் பிள்ளை அநாதை ஆஸ்ரமத்துல வளரணும்? இங்க தான் இருப்பா. இங்க தான் வளருவா என் மக”, என்று சொல்ல அவள் பேச்சை அரவிந்தே அதிர்ந்து தான் கேட்டான். அவனுக்கு தெரிந்து ரதி அமைதியானவள் மென்மையானவள் அதிர்ந்து கூட பேச தெரியாது. அவளா இப்படி பேசுவது என்று ஆச்சரியமாக இருந்தது.

 

“முடியாது, இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நீ பெத்த பிள்ளை இந்த வீட்டு வாரிசா? ஒழுங்கா வெளிய போ”, என்றார் தருமர்.

 

“என்னங்க? குழந்தை அமரோடதுங்க”, என்றாள் சகுந்தலா.

 

“இவ தான் இந்த வீட்டுக்கு வாரிசு. சொத்துக்காக வந்தோம்ன்னு நீங்க நினைச்சாலும் சரி. ஆனா இவ இங்க தான் இருப்பா. அவங்க அப்பா கூட தான் இருப்பா. அப்படி இல்லைன்னா நான் இப்பவே பிரஸ் மீடியான்னு போவேன். என்னை தப்பா பேசினா கூட பயப்பட மாட்டேன். அதுவும் பேமஸ் லாயர் சகுந்தலா தேவி இருக்கும் போது இனி எனக்கு என்ன பயம்?”, என்று திமிராகவே கேட்க தருமருக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

 

“நீங்க ஒத்துக்கலைனா இந்த கேசை நானே எடுப்பேன். உங்க மேலயும் உங்க பையன் மேலயும் நான் நாளைக்கே பெட்டிசன் போடுவேன்”, என்று சகுந்தலா சொல்ல அதற்கு மேல் தருமரால் எதுவுமே செய்ய இயலவில்லை.

 

அவர் அமைதியாக இருக்கவும் “என் பேத்தியை என் கிட்ட கொடு மா”, என்று சகுந்தலாதேவி கேட்க “சகு”, என்று எரிச்சலுடன்  கத்தினார் தருமர்.

 

“சும்மா இருங்க. இப்ப பிரச்சனை பண்ணா இந்த பொண்ணு வெளிய போய் சொல்லும். அப்புறம் உங்களுக்கும் கெட்ட பேர். எனக்கும் கெட்ட பேர். உங்களுக்கு ஒரு வேளை சந்தேகம்னா நம்ம வேணும்னா டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கலாம்”, என்று சொல்ல அவரால் என்ன சொல்ல முடியும்?

 

சகுந்தலா குழந்தையை கொஞ்ச ஆரம்பிக்க ரதி கண்களில் கண்ணீர் வடிந்தது. “நீ கவலை படாத மா. என்னைக்கு இருந்தாலும் நீ தான் அமர் பொண்டாட்டி. இந்த குழந்தை உங்களை சேத்து வைக்கும்”, என்றாள் சகுந்தலா.

 

“இல்லை மேடம், அவர் வேண்டாம்னு சொன்னது அப்படியே இருக்கட்டும். என்னால தனியா இந்த குழந்தையை வளக்க முடியாதுன்னு தான் உங்க கிட்ட கொடுக்குறேன். இவளை நல்லா பாத்துக்கோங்க. அப்புறம் நான் என் அரவிந்த் மாமாவை கல்யாணம் பண்ணிக்க போறேன். உங்க வீட்டுக்காரர் யோசனை படி பாத்தா என் சந்தோஷத்துக்கு உங்க வீட்டு குழந்தை எதுக்கு இடைஞ்சலா இருக்கணும்? அதான் இங்க ஒப்படைச்சிட்டு போறேன். ஆனா இந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ அப்பனை சட்டையை பிடிச்சு கேப்பேன். நீங்க தான் இதுக்கு சாட்சி”, என்று சொன்னவள் தருமரை முறைத்து விட்டு குழந்தையை வாங்கி அங்கேயே பசியாற்றி விட்டு ஆசை தீர முத்தமிட்டாள்.

 

மீண்டும் சகுந்தலாவிடம் கொடுத்து விட்டு தன்னுடைய மொபைல் எண்ணையும் சகுந்தலாவிடம் தந்து விட்டு அவசரமாக வெளியே வந்து விட்டாள்.

 

வரும் போதெல்லாம் ரதி ஒரே அழுகை தான். அரவிந்தின் தோளில் சாய்ந்து வேறு அழ அவனுக்கு தான் கஷ்டமாக இருந்தது.

 

அவள் தன்னை திருமணம் செய்வேன் என்று சொன்னது எல்லாம் பொய் என்று அவனுக்கும் தெரியும். ஒரு குழந்தையை கொடுத்தாலும் இன்னொரு குழந்தைக்காக தான் அவள் வாழ போகிறாள் என்றும் அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன்னை ஏற்க மாட்டாளா என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

 

அன்று இரவு அமர் சாணக்கியன் இருவரும் ஒன்றாக தான் வீட்டுக்கு வந்தார்கள். தந்தை ஹாலில் அமர்ந்திருக்க வீட்டில் வேறு அரவமே இல்லை.

 

அம்மா எங்க என்று எண்ணிக் கொண்டே இருவரும் உள்ளே வர அவன் வரவை உணர்ந்தோ என்னவோ குழந்தை வீறிட்டு அழுதாள்.

 

அமைதியாக இருந்த வீட்டுக்குள் இருந்து திடீரென்று குழந்தை சத்தம் வந்தால் அவர்கள் என்ன நினைக்கவாம்? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களுக்கு ஒரு நொடி பிரம்மை என்று கூட தோன்றியது.

 

“சரி டா பட்டு. சரி டா, இதோ வரேன் தங்கம். அழாதீங்க. அம்மா விட்டுட்டு போய்ட்டாளோ? திரும்பி வரட்டும் அடி கொடுத்துறலாம்?”, என்று சகுந்தலா கொஞ்சும் சத்தம் வேறு கேட்க அமர் சாணக்கியன் முகத்தைப் பார்த்தான். அவனும் ஒரு நொடி பார்த்து விட்டு “அப்பா நம்ம வீட்டுக்கு கெஸ்ட் யாரும் வந்துருக்காங்களா?”, என்று கேட்டான்.

 

“கெஸ்ட் எல்லாம் வரலை. இந்த வீட்டு வாரிசு தான் வந்துருக்கு”, என்று எரிச்சலுடன் சொன்னார்.

 

“அடப்பாவி அப்பா, சித்தின்னு பல பேர் இருக்காங்கன்னு தெரியும். அதுக்குன்னு பிள்ளையோட வந்துட்டியா?”, என்று அதிர்வுடன் கேட்டான் சாணக்கியன்.

 

அமர் அதைக் கேட்டு நமட்டு சிரிப்பு சிரிக்க “நீ வேற கடுப்பை கிளப்பாத டா. இது உன் தொம்பியோட வாரிசு. மகாபலிபுரத்துல போய் கூத்து அடிச்சிருக்கான்ல அதுல வந்தது”, என்று சொல்ல இருவருக்கும் அப்படி ஒரு பேரதிர்ச்சி.

 

அமர் அப்படியே அசையாமல் நிற்க “என்னப்பா சொல்ற?”, என்று கேட்டான் சாணக்கியன்.

 

“உன் தம்பி குழந்தை தான். அவளை வேண்டாம்னு சொன்னான்ல. அவ இவ்வளவு நாள் மறைச்சு பிள்ளையை பெத்துட்டு வந்து இதுக்கு அவனும் தானே பொறுப்பு? இனி என்னால வளக்க முடியாது. நான் வேற கல்யாணம் பண்ணிக்க போறேன். இனி குழந்தையோட அப்பா வளக்கட்டும்ன்னு கொடுத்துட்டு போய்ட்டா”, என்று சொல்ல அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல அந்த அறைக்குள் பாய்ந்திருந்தான் அமர்.

 

சாணக்கியனும் தம்பியின் பின்னே செல்ல அங்கே அவர்களின் செல்ல மகளோ சகுந்தலாவின் மடியில் படுத்துக் கொண்டு பால் பாட்டிலை வாயில் வைத்த படி அவர்களைப் பார்த்தாள்.

 

இருவர் முகத்திலும் அந்த மழலையைப் பார்த்து அப்படி ஒரு சந்தோஷமும் புன்னகையும். “அம்மா, ரதி வந்தாளா இங்க? எப்ப வந்தா மா? என்னை கூப்பிட்டுருக்கலாம்ல? எப்படி இருக்கா மா? இது என் பாப்பாவா? என் குழந்தையா மா?”, என்று கண்ணீருடன் கேட்ட அமரின் குரல் அவ்வளவு மென்மையாக வர அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் சகுந்தலா.

 

அந்த சத்தத்தில் குழந்தை மீண்டும் வீறிட்டு அழ “என்ன டி சின்ன கழுதை? உன் அப்பனை அடிச்சதுக்கா அழுற?”, என்று குழந்தையை மிரட்டியவள் “ஒழுங்கா ரெண்டு பேரும் இவளை சமாதானபடுத்தி இதை பாலை குடிக்க வச்சு தூங்க வச்சிட்டு வெளிய வாங்க, கொஞ்சம் பேசணும்”, என்று சொல்லி குழந்தையை அமர் கையில் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

 

முதலில் அழுத குழந்தை அமர் கொஞ்சியதும் அழுகையை அடக்கி பாலைக் குடிக்க அவன் கைகள் அப்படி நடுங்கியது. அவன் கண்ணீர் குழந்தையின் மீது பட்டு தெரித்தது.

 

திவ்யா போல இருந்ததால் அமருக்கு ரதி ஜாடை தெரிய சாணக்கியனுக்கோ திவ்யா நினைவு வந்தது. கூடவே அவனது இறந்த குழங்கதையின்  நினைவும் வர “பாப்பாவ என் கிட்ட தா டா அமரா. ஆசையா இருக்கு”, என்றான்.

 

“அவ உனக்கும் பொண்ணு தான், இந்தா”, என்றவன் அண்ணனை அமர வைத்து அவன் மடியில் குழந்தையை வைத்து விட்டு அருகில் அமர்ந்து குழந்தையின் காலை வருடி விட்டான்.

 

குழந்தை கிளுக்கி சிரித்த படி காலை கையை ஆட்டி பாலைக் குடிக்க தந்தைகள் இருவரும் தான் கண்ணீர் விட்ட படி நெகிழ்ந்து போய் இருந்தார்கள்.

 

இருவரின் மனமும் ஆயிரம் கதைகள் பேச அந்த நெகிழ்ச்சியை தாங்கவே முடிய வில்லை.

 

சாணக்கியனுக்கு தன்னுடைய இழந்த வாழ்க்கை திரும்ப கிடைத்தது போல இருந்தது என்றால் அமருக்கோ பல விஷயம் மனதை அழுத்தியது.

 

குழந்தை வந்தது சந்தோஷம் பூரிப்பு என்றாலும் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணின் கற்பை அழித்து அவளுக்கு குழந்தையையும் கொடுத்து கை விட்டு வந்த தன்னை நினைத்தே அப்படி ஒரு அவமானமாக இருந்தது.

 

தன்னுடைய காதலில் வளர வேண்டியது. இப்போது அவமானத்தால் வளர்ந்திருக்கிறது. இந்த குழந்தையால் ரதி எவ்வளவு அவமானப் பட்டிருப்பாள்? அவர்கள் வீட்டில் என்ன எல்லாம் சொல்லி இருப்பார்கள்  என்று பல கவலை அவனை ஆட்கொண்டது.

 

சாணக்கியன் குழந்தையை அமருக்கு கொடுக்க வில்லை. அமரும் கேட்க வில்லை. ஆனால் குழந்தையின் காலை பற்றிய படி தான் இருந்தான் அமர். ரதியிடம் கேட்க வேண்டிய மன்னிப்பை அவள் மகளிடம் கேட்டானோ என்னவோ?

 

சிறிது நேரத்தில் அவன் மடியிலே குழந்தை தூங்கி விட குழந்தையை கட்டிலில் கிடத்தி நான்கு பக்கமும் தலையணையை வைத்தவர்கள் அன்னையை தேடி வெளியே வர சகுந்தலா அமரை முறைத்துப் பார்த்தாள். தருமர் எரிச்சலுடன் பார்த்தார்.

 

“அம்மா என்ன மா அச்சு? எப்படி மா? எனக்கு தெரியாது மா. நான் செஞ்சது தப்பு தான் மா. அவளுக்கு பெரும் பாவத்தை செஞ்சிட்டேன். ஒரு சின்ன பொண்ணோட எதிர்காலத்தை குழி தோண்டி புதைச்சிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை மா”, என்று அழுது புலம்பினான்.

 

அவன் தலையை வருடி விட்டாள் சகுந்தலா. “ரதி எப்படி மா இருக்கா? அவளே ஒரு பாப்பா மா. அவளுக்கு ஒரு பாப்பா பாருங்களேன். என்ன கஷ்டப் பட்டாளோ? எல்லாரும் அவளை என்ன எல்லாம் பேசினாங்களோ?”, என்று அழுதான்.

 

“சொல்லு மா, ரதி என்ன சொன்னா?”, என்று கேட்டதும் சகுந்தலா நடந்ததைச் சொன்னாள். “ஓ”, என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.

 

“ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வாழப் பாரு அமர். இந்த குழந்தைக்காக”, என்றாள்.

 

“அவன் சரி மா”, என்று சொல்ல “அது ஒரு காலமும் நடக்காது. என்ன குளிர் விட்டு போச்சா எல்லாருக்கும்? அவ எல்லாம் இந்த வீட்டு மருமகளா ஆக முடியாது. ஸ்வேதா தான் இந்த வீட்டுக்கு மருமக. அவ கேஸ்ன்னு சொன்னதுனால தான் குழந்தையை ஏத்துக்கிட்டேன்”, என்றார் தருமர்.

 

“என்னங்க?”, என்றாள் சகுந்தலா.

 

“என்ன என்னங்க? நான் சொன்னா சொன்னது தான். இங்க பாரு சகு. நீ என்னோட பொண்டாட்டி தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா எனக்குனு ஒரு கௌரவம் இருக்கு. அவ ஒதுங்கி போனதுனால தான் அப்பவே உயிரோட விட்டேன். இப்படி பெத்துட்டு வருவான்னு தெரியாது. அவளே வேற கல்யாணம் பண்ண போறேன்னு ஒதுங்கி போய்ட்டா. இனி அம்மையும் மகனும் ஏதாவது நினைச்சா ரதின்னு ஒருத்தி இந்த உலகத்துல வாழ்ந்த அடையாளமே இல்லாம பண்ணிருவேன்”, என்றார்.

 

சகுந்தலா அவரை வெறுப்பாக பார்க்க “அவர் சொல்றதும் சரி தான் மா. அவளுக்கு அரவிந்த் தான் சரி. இப்ப தான் குழந்தையும் இங்க வந்துட்டே. இனியாவது அவ சந்தோஷமா இருக்கட்டும். இத்தனை நாள் எங்க குழந்தையை அவ வயித்துல சுமந்தா. இனி என் மகளை நான் நெஞ்சில சுமப்பேன். ஆனா இவர் சொன்ன மாதிரி என் ரதிக்கு ஒரு கீறல் விழுந்தா கூட இந்த ஆளை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன்”, என்றவன் அறைக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான்.

 

அன்றில் இருந்து அவனுக்கு அவன் மகள் தான் உலகம். சாணக்கியனுக்கும் தான். அவந்திகாவுக்கு இரண்டு தந்தைகள் என்றால் அவ்வளவு உயிர். அவர்களை வைத்து தான் அவள் உலகம் சுழன்றது.

 

அதே போல தான் ரதிக்கு அவள் மகன் உலகம். குழந்தையை விட்டுச் சென்றது வலி தான். ஆனால் மகள் அவள் தந்தையுடன் இருப்பது நல்லது தானே என்ற நிறைவு. மகனை பார்த்து இரண்டு குழந்தைகள் இழப்பில் இருந்து மீண்டு வந்தாள்.

 

மஞ்சு என்ன பேசினாலும் அமைதியாக கேட்டுக் கொள்வாள். மஞ்சு அவளது மகனை நன்றாக பார்த்துக் கொள்வதால் அன்னையின் பொறுப்பிலே விட்டாள். ஓசி சோறு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவளை குடைய அரவிந்தை அழைத்து லோன் விஷயம் பேசினாள்.

 

அவனோ அவளை ஆடியாலஜிஸ்ட் துறையில் சேர்த்து படிக்க வைத்தான். அது கூடவே அவள் முடிக்காமல் விட்ட டிகிரியையும் முடிக்க வைத்தான். அதற்கு பிறகு அவள் லோன் விஷயம் பேச மஞ்சு சொல்லியும் கேட்காமல் ரதிக்கு என்று சேர்த்து வைத்த நகையை அவளிடம் கொடுத்தார் தாமோதரன்.

 

வாங்க தயங்கினாள் தான். ஆனால் முன்னேற வழி வேண்டுமே. அதனால் வாங்கிக் கொண்டாள். அதற்கு பின் நாட்கள் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

 

சகுந்தலா அடிக்கடி ரதியை அழைப்பாள். குழந்தை விஷயம் தவிர வேறு எந்த கேள்விக்கும் ரதி வாயை திறக்க மாட்டாள்.

 

“அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டியா?”, என்று கேட்டால் கூட ரதியிடம் இருந்து பதில் வராது.

 

“கல்யாணம் முடியலைனா அமர் கூட சேர்ந்து வாழு மா. நீ இங்க வா. அவன் அப்பாவை நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னாலும் ரதியிடம் பதில் வராது.

 

அதற்கு பிறகு சகுந்தலாவும் குழந்தையைப் பற்றி மட்டுமே பேசுவாள். அமர் பற்றி பேசும் போதும் சந்தோஷமாக கேட்டு கொள்வாள். ஆனால் அவனைப் பற்றி ஆவலாக எதுவும் கேட்க மாட்டாள்.

 

அமர், சாணக்கியன், அவந்திகா மூவரின் போட்டோ மட்டும் அடிக்கடி ரதி மொபைலுக்கு வரும்.

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையை காண சென்னைக்கு சென்று விடுவாள் ரதி. ஒரு இடம் முடிவு செய்து சகுந்தலா குழந்தையை தூக்கி வருவாள். அன்று மட்டும் அவ்வளவு சந்தோஷமாக இருப்பாள் ரதி. குழந்தையை கையிலே வைத்திருப்பாள்.

 

அவந்திகாவுக்கும் என்ன தெரியுமோ தெரியாது அவளுடன் நன்கு ஒட்டிக் கொள்ளும். அதற்கு பின் அரவிந்துக்கு அரசாங்க வேலையும் கிடைத்து விட ரதிக்கும் தொழிலில் ஏறுமுகம் தான்.

 

இப்படியே தான் நாட்கள் கடந்தது. இந்த பழைய விஷயங்களைத் தான் அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். திவ்யா வாழ்வு மட்டும் தான் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது.

 

தொடரும்..

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!