Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதி முகம்-1

 

அத்தியாயம்-1

சென்னை மாநகரத்தின்  வழக்கமான பரபரப்பான காலைவேளை. வாகனங்களின் இடைவிடாத இரைச்சல், சிக்னலில் கேட்ட பொறுமையற்ற ஹாரன் சத்தங்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் என நிரம்பி வழிந்த பொதுப்போக்குவத்துகள் என்று  அது ஒரு ‘பீக் ஹவர்’ (peak hour).



Advertisement

 ஓஎம்ஆரின் (OMR) ஒரு பிரதான  பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த தண்மதி, “இந்தப் பாழாய்ப்போன பஸ் எப்ப வருமோ..” என்று முணுமுணுத்தபடியே  நொடிக்கொரு முறை நேரத்தைப் பார்ப்பதும் பின் சாலையில் பேருந்து வரும் வழியைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

காலையிலிருந்து நூத்தியெட்டாவது முறையாக அன்று தாமதமாக எழுந்ததற்காகத் தன்னைத்தானே மனதிற்குள் அர்ச்சித்துகொண்டிருந்தாள்.

“கொஞ்சம் சீக்கிரமா எழுந்திருந்தா இவ்வளோ பிராப்ளம் வந்திருக்குமா… நேத்து பார்த்து தான் அந்த வீணாப்போன வெப்  சீரீஸைப் பார்த்துத்தொலையனுமா..? பிஞ்ச்வாட்ச்(binge watch) பண்ணிட்டு தூங்கும் போதே கோழிகூவுற நேரம் ஆகிடுச்சி.. இந்த லட்சணத்துல அலாரத்தை வேற ஸ்னூஸ்ல போட்டு போட்டு.. தூங்கி லேட்டா எழுந்து அரக்கப்பறக்க கெளம்பி வர்றதுக்குள்ள இவ்ளோநேரம் ஆகிடுச்சி.. பஸ் வேற வரமாட்டேங்குது.. வர்ற பஸ்ஸும் ஜாம் பேக்டு (jam packed) ஆ இருக்கு..” என்று அலுத்துக்கொண்டாள்.

Advertisement

“போச்சு.. இன்னைக்கு இன்டர்வியூ கோவிந்தா தான்.. கடவுளே, இன்டர்வியூக்கே லேட்டா போனா.. யாரு வேலை கொடுப்பா? ‘உன்னால ஒரு இன்டர்வியூக்கே நேரத்துக்கு வர முடியலன்னா, வேலையை எப்படி நேரத்துக்கு முடிப்ப?’னு நாக்கைப்புடுங்கிக்கிற மாதிரி கேட்பாங்களே… நான் என்ன சொல்றது..? திரும்ப அதே பாடாவதி ஆபீஸ்தான் என் தலையெழுத்தா..?” என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.

Advertisement

அவள் பெயர் தண்மதி.. சரியான.. சாட்டர் பாக்ஸ்( chatter box), பேச ஆரம்பித்தால் வாய்மூடாது.. யாராவது அவளை ஐந்து நிமிடம் பேச வேண்டாம் என்று சொன்னால் இரண்டாவது நிமிடத்திலேயே போர் அடித்துப்போய் அயர்ந்து தூங்கிவிடுவாள் அப்படிப்பட்ட தனிப்பிறவி அவள்.

ஒரு சுமாரான எஞ்சினியரிங் காலேஜில் படித்துவிட்டு, தற்போது ரொம்ப சுமாரான கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக வேலை பார்த்துக்கொண்டே, எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டுமென்று வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டிருந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடியே இன்று நெக்சஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ்(nexus info systems) நிறுவனத்தில் இன்னும் அரை மணி நேரத்தில் அவளுக்கு இன்டர்வியூ, இந்த வேலை ஒன்றுதான் இப்போது அவள் இருக்கும் எலி வலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று மலைபோல் நம்பியிருக்கிறாள்.

Advertisement

தண்மதி பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண் எடுத்தும் அவளது அப்பா வெளியூரில் ஹாஸ்டலில் சேர்க்கமாட்டேன் என்று உள்ளூரிலேயே ஒரு சுமாரான காலேஜில் பீஈ படிக்கவைத்தார். பெரிதாக கேம்பஸ் எதுவும் வராமல் ஒரு பாடாவதி கம்பெனியில் சேர்ந்திருந்தாள்.

எப்படியோ அப்பாவிடம் தாஜா செய்து அவரை சம்மதிக்கவைத்து வேலைக்கென்று தனது கனவு நகரமான சென்னை வந்துவிட்டாள். வந்த பிறகுதான் தெரிந்தது அவளது சொற்ப சம்பளத்தில் சென்னை மாதிரியான பெருநகரத்தில் காலம்தள்ள முடியாதென்று, மாசக்கடைசியில் கஷ்டப்பட்டுதான் சமாளித்தாள்.

வீட்டில் செலவுக்குக் காசு கேட்டால்

“அங்க போயும் உன் செலவுக்கு நான்தான் பணம் அனுப்பனுமா? எதுக்கு தண்டசெலவு நீ ஊருக்கே வந்துடு” என்று அவளது அப்பா சொல்லிவிடுவாரோ என்று பயந்தே அவள் வீட்டில் எதுவும் சொல்வதில்லை.

நேரம் செல்லச் செல்ல அவள் பதற்றம் அதிகமானது. ஷேர் ஆட்டோக்கள் அனைத்திலும் ஆடுகளைப் போல ஆட்களை ஏற்றிச் சென்றனர்.

பைக் டாக்ஸிக்கு ரொம்ப நேரமாக முயற்சித்தும் புக் ஆகவில்லை..

இருக்கும் பணத்தில் டாக்ஸியெல்லாம் புக் பண்ணிப் போக முடியாது. வேறு வழியின்றி, யாரிடமாவது ‘லிப்ட்’ கேட்கலாம் என்று முடிவெடுத்தாள். தயக்கத்துடன் சாலையை நோக்கி அடி எடுத்துவைத்து, லிஃப்ட் கேட்பதற்காக கையைக்காட்டினாள்.

அதிர்ஷ்டவசமாக அவள் கைகாட்டிய முதல் பைக்கே நின்றது. பைக்கில் இருந்தவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

“சார் ப்ளீஸ், என்னை கொஞ்சம் டெக் பார்க்ல ( TECH Park) இறக்கிவிட முடியுமா?எனக்கு ரொம்ப அவசரம் சார்..” என்று தணிந்த குரலில் பணிவாகக் கேட்டாள். அவன் அவளை ஏறும்படி தலையசைப்பில் சைகை காட்டினான்.

அவள் ஏறியதும், அந்தப் பரபரப்பான சாலையில் பைக் சீரான வேகத்தில் சென்றது,ஏற்கனவே நேரமாகிவிட்டது  என்று பரபரத்துக்கொண்டிருந்தவள், இவன் ஆமை வேகத்தில் செல்வதைப்பார்த்து, கடுப்படைந்தாள்.

“சார்.. கொஞ்சம் வேகமா போங்களேன், எனக்கு இன்டர்வியூக்கு நேரமாகுது..”என்று அவனை அவசரப்படுத்த,

“என் பைக் இவ்ளோ ஸ்பீட்தான் போகும், நீங்க வேணா இறங்கிக்கோங்க..” என்றான் சற்றும் கருணையின்றி..

அவள் முதுகுக்குப் பின்னால் நாக்கை நீட்டி அழகுகாட்டிவிட்டு உதட்டைச்சுளித்தாள்.

அடுத்து ஒரு சிக்னலில் பச்சைவிளக்கு இன்னும் சிலவினாடிகளில் மாறிவிடும் என்று டிஜிட்டல் திரையில்காட்ட.. அவள் அவசரமாக அவன் தோளைத்தட்டி,

“சார்.. சார்..சிக்னல் மாறப்போகுது சீக்கிரம்போங்க..ஃபார்ஸ்ட்..”என்று உந்தினாள்.

அவன் எதற்கும் அசைந்து கொடுக்காமல், அதே அளவான வேகத்தில் சென்று, சிக்னலில்  முதல் ஆளாக வண்டியை நிறுத்தினான். இவர்களைக் கடந்தும் சில வாகனங்கள் சிவப்பு விளக்கையும் மதிக்காமல் கடைசி நொடியில் மயிரிழையில் தப்பித்து போல அந்தப்பக்கம் சென்றுவிட, இவள் ஏமாற்றத்தில் உதட்டைப்பிதுக்கினாள்.

“ஏன் சார், கொஞ்சம் வேகமா போயிருந்தா சிக்னலைத் தாண்டியிருக்கலாம், மத்தவங்கல்லாம் போறாங்க பாருங்க..”என்று அங்கலாய்ப்பாக கேட்காமல் இருக்க முடியவில்லை,

“ட்ராபிக் ரூல்ஸ்ச மதிக்கிறது  ஏமாளித்தனமா தெரியுதா ?” அவன் குரல் காட்டமாக வந்தது.

“இல்ல சார், எனக்கு கொஞ்சம் அவசரம்ன்னு சொன்னேன்ல..?”

“அப்போ அதுக்கு தகுந்த மாதிரி ஃப்ளான் பண்ணி சீக்கிரம் கிளம்பியிருக்கனும், அதைவிட்டுட்டு  என்னை ட்ராபிக் ரூல்ஸ்ச மீறுறதுக்கு தூண்டக்கூடாது..”

“என்ன சார் ஏதோ கொலைப்பண்ண தூண்டுன மாதிரி சொல்றீங்க..?கடைசி நேரத்துல சிக்னல் கிராஸ் பண்ணவங்க என்ன செத்தாப்போயிட்டாங்க..?”

“சாலை விதியை மீறுறதுதான் நிறைய விபத்துகள் நடக்க காரணமா இருக்கு. இந்த மாதிரி சிலரால தான் ஒழுங்காப்போறவங்களுக்கும் ஆக்சிடெண்ட் ஆகுது.” என்று அவன் இறுகிப்போன குரலில் கூற,

“இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆக்சிடெண்ட் ஆகுமா.. போங்க சார்..” என்று சொல்லி அவள் சிரிக்க,

அவன் முதுகு விரைத்தது,

பைக்கின் ஆக்சிலரேட்டரை சத்தம் வரும்படி முறுக்கிவிட்டு, சிக்னல் விழுந்ததும் வண்டியைக்கிளப்பினான்.

எதோ தொடக்கூடாத இடத்தைத் தொட்டுவிட்டோம் என்று உறைக்க மதி அமைதியானாள்.

அவளை டெக்பார்க்கின் நுழைவாயிலில் இறக்கிவிட்டுவிட்டு,

“டெக் பார்க்ல எங்க போகணும்?” என்று ஒரு தட்டையான குரலில் கேட்டான்.

“நெக்சஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ்… இன்டர்வியூக்காகப் போறேன்..” என்று பெருமையுடன் சொன்னாள்.

“ஓ.. ஆல் தி பெஸ்ட்…” என்றுவிட்டு, அவள் ஒரு வார்த்தைக்கூட சொல்ல இடம்கொடுக்காமல் பைக்கை கிளப்பிக்கொண்டு போனான்.

ஆனால் அப்படியே அவனைப் போகவிட்டுவிட்டால் அவள் தண்மதி அல்லவே..

“ஹலோ பைக் சார், ரொம்ப தேங்க்ஸ்!” என்று அவனுக்கு கேட்குமாறு தன் முழு பலத்துடன் கத்திவிட்டு.

“நல்லவேளை, நேரத்துக்கு வந்துட்டேன்..” என்ற நிம்மதி பெருமூச்சுடன் வேகவேகமாக உள்ளே சென்றாள்.

அந்த 20 மாடி பிரம்மாண்டமான டெக் பார்க் கட்டிடத்தில் நிறைய ஐடி கம்பெனிகள் இருந்தன.அதில் 18வது மாடியில் இருந்தது நெக்சஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ்.

நெக்சஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் அலுவலகம்:

ஆதித்யாவின் மூட் (mood) முற்றிலும் கெட்டுப் போயிருந்தது. அவன் புருவமத்தியில் விழுந்த முடிச்சு அதை அப்பட்டமாகத் திரையிட்டுக் காட்டியது.

“அந்த முட்டாள் பெண்ணுக்கு ஏன் தான் லிப்ட் கொடுத்தேனோ?விபத்து என்பதெல்லாம் அவளுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா..?”

அவன் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தான்.

“இங்க தான் இன்டர்வியூக்கு வேற வரபோறாளாம்.. கடவுளே அந்த அதிகப்பிரசங்கி மட்டும் என் டீமுக்கு வேலைக்கு வந்தான்னா அவ்ளோதான்.. விளங்கிடும்? அவ மட்டும் இன்டர்வியூக்கு வரட்டும், கண்ணை மூடிக்கிட்டு ரிஜெக்ட் பண்ணிடறேன்.. மொதல்லயே அவ பேர் தெரிஞ்சிருந்தா, இன்டர்வியூ எடுக்கறதுக்கு முன்னாடியே ரிஜெக்ட் பண்ணியிருக்கலாம்.”

இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டே தன் கேபினை நோக்கி நடந்தான் ஆதி என்கிற ஆதித்யா.

“ஆதி நீ ஓகேவா?” என்று அவன் நண்பன் நவீன் அவன் முகத்தைப் பார்த்து கவலையுடன் கேட்டான்.

“யா ஐ அம் ஓகே,” என்று பொய்சொல்லி வைத்தான்.

யாரென்றே தெரியாத அந்தப்பொண்ணின் அலட்சிய வார்த்தைகள் அவன் இதயத்தின் ஆழத்தில் புதைந்துகிடந்த ரணங்களையெல்லாம் கிளறிவிட்டு அவன் வலியை மீண்டும் மேலெழும்பியது. அந்த சம்பவத்தை மறந்து வாழ்க்கையில் முன்னோக்கிப் போய்விட அவன் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், ஒரு சின்ன வார்த்தைக்கூட அவன் பல வருட முயற்சியைக் காற்றில் பறக்கவிடப் போதுமானதாக இருந்தது.

“இல்லை.. இது கடந்த காலத்திற்குள் மூழ்கும் நேரமல்ல.. நான் நிகழ்காலத்தில் நிற்க வேண்டிய தருணம்.. குறைந்தபட்சம் என் தொலைந்து போன சந்தோஷத்தைத் தேடவாவது நான் திடமாக இருக்க வேண்டும்…”

அவன் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு வேலையைத் தொடங்கினான்.

அந்த பெரிய ரிசப்ஷன் அறையில் போடப்பட்டிருந்த சோஃபாக்களில் இன்டர்வியூவிற்கு வந்தவர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி அமர்ந்திருந்தனர். அந்த அறையில் அலங்காரத்திற்காக மாட்டியிருந்த கிரேக்க டிசைன் கடிகாரத்தின் டிக்டிக் சத்தம் கேட்குமளவிற்கு அறையில் நிசப்தம் நிலவியது,

தண்மதி தன் பெயர் அழைக்கப்படுவதற்காகப் பொறுமையின்றி காத்திருந்தாள்.. ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்திருப்பதே அவளுக்குப் போர் அடித்தது. அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து ஓர் அழகான புன்னகையுடன்

“ஹாய் ஐ அம் தண்மதி.” என்று கை நீட்டினாள்..

அந்தப் பெண் அவள் திடீர் குரலைக் கேட்டுச் சற்று அதிர்ச்சியடைந்தாலும், பின்  அவளும் புன்னகையுடன் கை குலுக்கினாள்.

“ஹாய், ஐ அம் ஶ்ரீநிதி.. நைஸ் டு மீட் யூ.” என்றாள்.

“ரொம்ப போர் அடிக்குது.. சீக்கிரம் கூப்பிட்டா நல்லா இருக்கும்,” என்றாள் தண்மதி.

“நான் கூப்பிட்டுடுவாங்களோனு ரொம்ப டென்ஷனா இருக்கேன்.. நீங்க இப்படிச் சொல்றீங்களே?” என்று ஶ்ரீநிதி வியப்புடன் கேட்டாள்.

“வெயிட் பண்றது ரொம்ப கடியா இருக்கு.. சீக்கிரம் முடிச்சிட்டா வெளிய போய் பிரியாணி சாப்பிடலாம்.. எனக்கு இப்பவே கொஞ்சம் பசிக்குது..” என்றவளை ஶ்ரீநிதி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

இருவரும் இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தண்மதியிடம் பேசிய பிறகு ஶ்ரீநிதியும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். அந்த குறுகிய காலத்திலேயே இருவருக்குள்ளும் ஒரு வைப் செட் ஆகிவிட தங்கள் ஃபோன் எண்கள், இன்ஸ்டா ஐடிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தண்மதியின் இயல்பே அதுதான், அவள் அருகில் இருந்தால் அவளது எனர்ஜியும் உற்சாகமும் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும்.

சற்று நேரத்தில் அவள் பெயர் அழைக்கப்பட்டதும், தனது இஷ்ட தெய்வத்தை ஒருமுறை வேண்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் தண்மதி.

ஆதித்யா அங்கு புராஜெக்ட் மேனேஜர் (Project Manager)ஆக இருந்தான். புதிய புராஜெக்டிற்காக ஆட்களைத் தேர்வு செய்யும் இன்டர்வியூ பேனலில் அவனும் ஒருவன். அவனுக்குக் கீழ் டீம் லீடராக இருக்கும் அவன் நண்பன் நவீனும் அவனுடன் இருந்தான்.

இன்டர்வியூ தொடங்கியதும் அவன் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். சில கேண்டிடேட்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்க, சிலரோ வாயாலேயே வடை சுடுபவர்களாக இருந்தனர். அடுத்த நபரை அழைப்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை எடுத்தனர். அப்போது ஆதித்யாவிற்கு அவனது மேலதிகாரியிடமிருந்து அவசர அழைப்பு வர, நவீனைத் தொடரச் சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றான்.

தண்மதி பதற்றமான முகத்துடன் நேர்காணல் அறைக்குள் நுழைந்தாள். திடீரென்று அவள் கைகள் நடுங்கின, மயக்கம் வருவது போல உணர்ந்தாள். இது அவளது தேர்வு மற்றும் இன்டர்வியூ பயம். எவ்வளவு முயன்றாலும் அவளால் இந்த பயத்திலிருந்து வெளிவர முடியவில்லை.

ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். கண்களை மூடி ஓர் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, தனக்குப் பிடித்தமான அந்த முகத்தை மனதில் நினைத்துப் பார்த்தாள். எப்போதும் போல அந்த நினைவே அவளுக்குத் தெம்பைக் கொடுத்தது. மெல்லத் தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு பேனலை எதிர்கொண்டாள்.

கேள்விகளுக்கு மிகச் சிறப்பாகப் பதிலளித்தாள். இன்டர்வியூ எடுப்பவர்களின் முகபாவனையை வைத்து அவர்கள் திருப்தியாக இருப்பது தெரிந்தது.

“ஓகே மிஸ் தண்மதி, உங்க இன்டர்வியூ இதோட முடியுது.. உங்க பெர்பாமன்ஸ்ல எங்களுக்குத் திருப்திதான். ஆனா எங்க பிஎம் மும் உங்களை ஒருமுறை பார்த்து ஓகே பண்ணிட்டா ஆல் கிளியர் ஆகிடும்.. ஆல் தி பெஸ்ட்,” என்று நவீன் அவளுக்குக் கைகொடுத்தான்.

நவீன் மிகவும் கேஷுவலாக நட்புடன் பேசியது அவளுக்கு ரொம்பப் பிடித்தது.

“பரவால்ல நல்ல மனுஷனா இருக்காரு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவனிடம் மனதாரப் புன்னகைத்தாள். அடுத்து நவீன் அவளை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.

ஆதித்யா மேஜை மீது இருந்த ரெஸ்யூமேவை (resume) எடுத்துப் பார்த்தான். தான் யாரைத் திரும்பப் பார்க்கக்கூடாது என்று நினைத்தானோ அதே முகம் ரெஸ்யூமேவின் புகைப்படத்திலிருந்து அவனைப் பார்த்து கேலி செய்வது போல நகைத்தது.

“கடவுளே, மறுபடியுமா?”

தன் தலைவிதியை நொந்து கொண்டான்.

இன்டர்வியூ தொடங்குவதற்கு முன்பே முடிவை அவன் எடுத்துவிட்டான்.

தண்மதி புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தாள், ஆனால் எதிரே இருப்பவனைப் பார்த்ததும் அவள் புன்னகை உதட்டிலேயே உறைந்தது, கால்கள் அப்படியே வேரோடிப்போயின, இதயம் படபடக்க, தலைசுற்றியது.. உணர்வு தப்பாமல் இருக்கப் போராடினாள்.

பலமுறை தான் கற்பனை செய்தது போல இதுவும் கற்பனையாக இருந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள்.

“கடவுளே.. இது நிஜமாக இருக்கணும்.. இது நிஜமாக இருக்கணும்..” என்று அவள் மனம் பதைத்தது. திடீர் மகிழ்ச்சியில் அவள் கண்கள் பனித்தது.

அவள் ஏன் இப்படி எமோஷனல் டிராமா செய்கிறாள் என்று ஆதித்யா குழம்பிப்போனான். முதலில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் அதன் பிறகு ஆச்சரியம், மகிழ்ச்சி, நிம்மதி எனத் தெரிந்த அந்த உணர்வுகள் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவளுக்கு மிகவும் அழகான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்கள். அவை அவள் இதயத்தின் கண்ணாடி போல ஒவ்வொரு உணர்வையும் அப்பட்டமாக பிரதிபலித்தன. ஆச்சரியத்தக்க விதமாக அவனால் அதை எளிதாகப் படிக்கமுடிந்தது. ஆனால் அவளது இந்த எதிர்வினைகள் அவனுக்குள் ஏதோ ஒரு விசித்திர மாற்றத்தை ஏற்படுத்துவதைத்தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“ஓகே, காலையில நான் லிப்ட் கொடுத்தப்போ என்னைப் பார்த்திருக்கலாம், அதனால அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஓகே.. ஆனா இந்த மத்த ஓவர் ஆக்டிங் உணர்வுகள் எதுக்கு? நான் அவளுக்குத் தெரிஞ்சவங்கறதால, கண்டிப்பா செலக்ட் பண்ணிடுவேன்னு நினைச்சு நிம்மதி அடையுறாளோ? அப்படி இருந்தா நீ தப்பு கணக்குப் போட்டுட்ட ‘மிஸ் டிராமா குயின்’.. நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன்,” என்று ஒரு இளக்காரமான புன்னகையுடன் நினைத்துக் கொண்டான்.

“சோ, யூ ஆர் மிஸ் தண்மதி ரைட்?” என்று கேட்டான்.

அவளோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. என்ன முயன்றும் தொண்டை வறண்டு வார்த்தை வரவில்லை. உணர்ச்சிகளின் சுழலில் சிக்கியிருந்தாள்.

பொறுமையிழந்து கத்தப்போனவன், உள்ளத்தின் அத்தனை உணர்ச்சிகளையும் தேக்கி நின்ற அந்த அகன்ற விழிகளைப் பார்த்ததும் நிறுத்திவிட்டான்.

ஒரு பெருமூச்சுடன்

“வேணும்னா கொஞ்சம் தண்ணி குடிங்க.” என்றான்.

அவள் நன்றியுடன் அவனைப் பார்த்து, மேஜையில் இருந்த கிளாஸ் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தாள்.அவளுக்கு அது இப்போது மிகத் தேவையாக இருந்தது.

இதற்கிடையில் அவள் மனமோ.. “ஏன் இவரு என்னைத் தெரியாத மாதிரி நடந்துக்கிறாரு? ஒருவேளை ஆபீஸ்ங்கறதால புரொஃபஷனலா நடந்துக்கிறாரோ?” என்ற சிந்தனையில் குழம்ப

அவள் யோசித்து முடிப்பதற்குள் அவன் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினான்.

“மிஸ் தண்மதி, நீங்க  இப்ப இருக்கற கம்பெனில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுது, அதுக்குள்ள வேற கம்பெனிக்கு தாவுறது உங்க நம்பகத்தன்மைய குறைக்கற மாதிரி இல்லையா? இப்படி அடிக்கடி வேலையை மாத்துற உங்கள நாங்க ஏன் ஹயர் பண்ணனும்?” என்றான் கழுகுப்பார்வையுடன்..

‘என்ன இப்படி கேக்குறாரு.. நிஜத்தைச் சொல்லப்போனால் அங்க எனக்கு கத்துக்க எதுவுமே இல்லைனு அவங்களுக்கு எப்படி புரியவைக்கிறது?

ஆனா என் பழைய கம்பெனிய பத்தி தப்பா எதுவும் சொல்லகூடாது. அதே சமயம் எனக்கு ஏன் இந்த வேலை முக்கியம்ங்கறதையும் ஏத்துகற விதத்துல பக்குவமா எடுத்து சொல்லனும்’ என்று நொடிக்குள் முடிவெடுத்து.. அவனை திடத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“இப்ப நான் வொர்க் பண்ற கம்பெனி எனக்கு குடுத்திருக்கற வாய்பையும் அதுல கிடைச்ச அனுபவத்தையும் நான் மதிக்கறேன்.  ஆறு மாசம்ங்கிறது கம்மிதான், ஒத்துக்கிறேன். ஆனா இந்த ஆறு மாசத்துல ஒரு விஷயத்தை நான் தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்திலேயே சரியான இடத்துல இருந்தாதான் என்னோட ஃபவுண்டேஷன்  பலமா இருக்கும். இப்போ இருக்குற கம்பெனில வேலை இருக்கு, ஆனா வளர்ச்சி இல்லை. நெக்சஸ்  மாதிரி ஒரு பெரிய நிறுவனத்துல வேலைப்பார்க்கறதும், உங்கள மாதிரி அனுபவம் வாய்ந்தவங்க கிட்ட வேலை கத்துக்கறதும் எனக்கு ஒரு நல்ல அடித்தளமா அமையும்ன்னு நெனைக்கறேன். நான் அடிக்கடி கம்பெனி மாறுறதுக்காக இங்க வரல, என்னோட கரியரை சரியா ஆரம்பிக்கணும்னு தான்  வந்திருக்கேன்.”

என்று அவள் மிகத் தன்னம்பிக்கையுடன் பதிலளித்தாள்.

அவள் குரலில் இருந்த திடம், பதிலில் இருந்த தெளிவு, அவளது நிமிர்வில் இருந்த மிடுக்கு எல்லாம் பார்த்து ஆதித்யா அவள் தகுதியான கேண்டிடேட்தான்  என்று உணர்ந்தான்.

ஏற்கனவே டெக்னிக்கல் இண்ட்டர்வியூவையும் பாஸ் செய்திருக்கிறாள். அவளைத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும், அலுவலக விஷயங்களில் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கலக்க அவன் விரும்பவில்லை. அதனால் அவளைத் தேர்வு செய்ய முடிவு செய்தான்.

“மிஸ் தண்மதி… உங்களை நான் ட்ரெய்னியா (trainee) செலக்ட் பண்றேன்.. மத்த ஃபார்மாலிட்டீஸ்க்கு  ஹெச்ஆர்ல இருந்து  உங்களை கான்டாக்ட் பண்ணுவாங்க..” என்று விட்டு பேருக்கு  உதட்டை லேசாக விரித்து எந்திரத்தனமான புன்னகை ஒன்றை உதிர்த்தான். ஆனால் அவளோ தன் முத்துப்பற்கள் அத்தனையும் காட்டி பிரகாசமாகச் சிரித்து..

“தேங்க்யூ சார்!” என்றாள்..

“சாரா?” அவள் சார் என்று கூப்பிட்டது அவனுக்கு உள்ளுக்குள் ஒரு மாதிரியாக ஏதோ பண்ண..

“சார் எல்லாம் வேண்டாம், என் பேர சொல்லியே கூப்பிடுங்க..’ஆதித்யான்னு சொன்னாப் போதும் ஓகேவா?” என்றான் கண்டிப்புடன்..

“ஓகே சார்..” என்று மீண்டும்  ராகமிழுத்துக் கூறிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளலுடன் வெளியே சென்றாள்.

அவள் போவதையே விழிவிரித்து ஆச்சரியமாக பார்த்தவன்

“ஹுச்சி(பைத்தியம்)..” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.

சம்பந்தமே இல்லாமல் அந்த கன்னட  வார்த்தை அப்போது ஏன் அவனுக்கு தோன்றியது என்று புரியாமல் திகைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!