காதலும் கடத்தப்படும் – 34

காதலும் கடத்தப்படும் – 34
முன் மாலை பொழுது, வீட்டின் வரவேற்பறையில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார், வேதநாயகம். அஞ்சலி வீட்டினுள் நுழைவதைக் கண்டவர், செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு,
Advertisement
“அஞ்சலி இங்க வா” என்றார்.
அவளும் அவர் எதிரே சென்று நின்றாள்.
“உட்காரு அஞ்சலி”
Advertisement
சில தினங்களுக்கு முன் தன்னை கடிந்துகொண்ட தந்தை தற்பொழுது பிரியமுடன் பேசுவது அவளுக்கு வியப்பாக இருந்தது. அவர் எதிரே அமர்ந்தாள்.
Advertisement
“ராத்திரி ப்ரோக்ராம் முடிச்சுட்டு வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆயிடுச்சுனு சமையல் கார பொண்ணு சொன்னா. இன்னைக்கு ரெஸ்ட் எடுக்காம எங்க போய்ட்டு வர?”
“நம்ம ஸ்டூடியோல இன்னைக்கு ஒரு ரெக்கார்டிங் புக் ஆகியிருந்தது. அதான் போயிட்டு வரேன்…”
Advertisement
“ஓ! ரொம்ப வேலையா இருந்தா சொல்லு, நாம ஒரு ஆள் போட்டு பார்த்துக்கலாம்…”
“இப்போதைக்கு வேண்டாம்பா, நானே சமாளிச்சுக்கறேன்…”
மெலிதாய் சிரித்தவாறு,
“அஞ்சலி உனக்கு என் மேல வருத்தமா?” என்றார்.
“எதுக்கு பா?”
“எல்லாத்துக்கும்…”, ஆழ்ந்த பெருமூச்சு எடுத்தவர், “உன்னை நான் திட்டியிருக்க கூடாது! எவ்வளவு பேர் உன்னை பத்தி என்கிட்ட புகழ்ந்து தள்ளிட்டாங்க தெரியுமா? நேத்து கண்கூட பார்த்த பிறகுதான் உன் திறமை எனக்கு புரிஞ்சது. எவ்வளவு நேர்த்தியா எல்லா ஏற்பாடும் பண்ணியிருந்த!! இன்னைக்கு எனக்கு எத்தனை பேர் ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க தெரியுமா? நான் தான் என் பொண்ண சரியா புரிஞ்சுக்கல. கோவப்பட்டுட்டேன்…” என்று கூற, இறுக்கம் நீங்கி புன்னகைத்தவள்,
“இல்லபா, தப்பு என் மேல தான்… நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்… சாரி பா…” என்றாள்.
“ச்ச என்னமா சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு… என்ன பெரிய காசு, போனா போகுது… நான் தான் அவசரப்பட்டுட்டேன். அது உன் அம்மா ஆசையாசையா வாங்குன வீடு. அதான் புத்தி தடுமாறிட்டேன். இனிமேல் உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட கேளு, அஞ்சலி. நீ இந்த உலகத்துல எது ஆசைப்பட்டாலும் நான் உனக்கு செய்யறேன். ஒரு அப்பாவா நான் எதுவுமே உனக்கு செய்யல. காலம் போன காலத்துல தான் எல்லா தப்பும் உணர்றேன்…”
“அப்பா…”
“உண்மைதான் மா, இப்பயாவது திருந்தனும். உன்னோட சந்தோஷம் தான் இனிமேல் எனக்கு எல்லாம். இந்த உலகத்துல உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா?” என்றவர் கண்கலங்க, அஞ்சலி அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.
“உன் அம்மா இருந்திருந்தா இந்நேரம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பா தெரியுமா? அவளுக்கும் நான் எதுவும் செஞ்சதில்லை. இத்தனை நாளா ஓடிக்கிட்டே இருந்துட்டேன். ஒன்னும் தெரியல. இப்போ அவ இல்லாம போனது ரொம்ப கஷ்டமா இருக்கு”
“அம்மா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க பா. வருத்தப்படாதீங்க…”
“ஆமா… கூடவே தான் இருக்கா… எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு… மருது கூட பேசினதை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பா. மனசுல இருந்த கணம் குறைஞ்சுடுச்சு அஞ்சலி. உன்னால தான்…”
“நான் எதுவுமே பண்ணல பா. இன்னும் சொல்லப்போனா நான் சித்தப்பாவை கூப்பிட கூட இல்லை. அர்ஜுன் தான் அவரை நேர்ல சந்திச்சு, ப்ரோக்ராமுக்கு வந்தாலே போச்சுன்னு வம்படியா வரவச்சிருக்கான்… எனக்கே இது பெரிய சர்ப்ரைஸ் தான் பா…”
சிரித்துக்கொண்டவர், “நல்ல பசங்க… திறமையான பசங்க…. அப்புறம் சாயங்காலம் மருது எல்லாரையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வரேன்னு ஃபோன் பண்ணான், விருந்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கேன்” என்றார்.
“நிஜமாவா பா? நான் எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுக்கறேன். எனக்கு சந்தோஷத்துல தலை கால் புரியல. நான் ரெடி ஆகிட்டு வந்துடறேன்…” என்றவள் எழ,
“அஞ்சலி, உனக்கு இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு, அப்பா உனக்கு செய்யறேன்” என்றார். அழகாய் புன்னகை பூத்தவள், துள்ளிக்குதித்து தனது அறைக்குச் சென்றாள்.
தனது கைப்பையில் அர்ஜுனுக்காக வாங்கி வைத்திருந்த பரிசினைக் கண்டாள். நேற்று கிடைத்த மலரினைக் கண்டாள். நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். ‘உனக்கு இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு, அப்பா உனக்கு செய்யறேன்’ என்று வேதநாயகம் கூறியது நினைவிற்கு வர, “அர்ஜுன் மட்டும் போதும்பா, உலகமே எனக்கு கிடைச்சுடும்” என்று தன்னுள் பேசிக்கொண்டவள், அப்பொருட்களை கைப்பையில் வைத்து தனது அலமாரியில் பத்திரப்படுத்தினாள்.
மறுநாள் காலை எழுந்து தயாரானவள், இன்று அர்ஜுனிடம் தனது மனதின் அபிலாஷைகளை சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தாள். முன்பொரு முறை கூற நினைத்து அது முடியாமல் போக, இன்று எப்படியும் சொல்லிவிடுவது என்று தீர்மானித்திருந்தாள். தனது தாயின் புகைப்படத்தின் முன் நின்று வணங்கினாள். அர்ஜுனும் மதனும் எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுப்பதாக மதன் மூலம் அறிந்துகொண்டவள், அர்ஜுனைக் காண அவனது வீட்டிற்கு விரைந்தாள்.
“வா அஞ்சலி, எப்படி இருக்க?”
அவளை சற்றும் எதிர்பார்த்திராத மதன், திகைப்புடன் அவளை வரவேற்றான்.
“நல்லா இருக்கேன். என்ன ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுக்கறீங்களா?”
மெலிதாய் சிரித்துக்கொண்டான், மதன்.
“அஜூ எங்க?”
“உள்ள, ரூம்ல”
புன்னகைத்தவள், “நான் அஜூ கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“போ அஞ்சலி. நான் இங்க வாசல்ல தான் இருப்பேன். உனக்கு ஏதாவது வேணும்னா கூப்பிடு…” என்றான் மதன், மனம் முழுதும் கவலையாக.
அழகாய் சிரித்தவள், அறையின் அருகே சென்றாள். கதவு திறந்திருந்தது. அர்ஜுன் அவள் வந்ததை அறியாமல், சுவரில் சாய்ந்தபடி, கண்மூடி தரையில் அமர்ந்திருந்தான்.
“அஜூ” என்றாள், மென்மையாக. கண்களைத் திறந்தவன், அவள் நிற்பதை சற்றும் எதிர்பார்த்திராதவனாய், அதிர்ச்சி குறையாமல் எழுந்து நின்றான்.
“என்ன அஜூ அப்படி பார்க்கற?” என்றபடி உள்ளே சென்றாள்.
“நீ??”
“நானேதான்… ஏன் முகமெல்லாம் ரொம்ப அசதியா இருக்கு? ஒழுங்கா தூங்கினியா இல்லையா?”
“ம்ம்” என்று தலையாட்டினான்.
அவனைக் கண்டு நாணப்புன்னகை சிந்தியவள்,
“ஒரு நிமிஷம்” என்றுவிட்டு அவனின் பெற்றோர் புகைப்படத்திற்கு முன் சென்று நின்றாள்.
‘அம்மா, அப்பா, என் மனசுல உள்ளத அஜூ கிட்ட சொல்லப்போறேன். அவன் மனசுலயும் என்ன இருக்குனு எனக்கு தெரியும். ஆனா அவன் வெளிப்படையா என்கிட்ட சொல்ற மாதிரி தெரியல. அதான் நானே சொல்லிடலாம்னு வந்திருக்கேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!!’ என்று மனதினுள் வேண்டிக்கொண்டாள்.
“அஜூ…”
அவன் முன்னே சென்று நின்றாள்.
“சொல்லு…”
“அது…” என்றவள், தனது பையிலிருந்த, வண்ணத்தாள்களால் அழகாக சுற்றப்பட்ட இதய வடிவ உருவை, அவனுக்கு பரிசளித்தாள்.
அதனை பிரித்துப்பார்த்தவன், கண்களில் ஈரம் கொண்டான். அவனது கால்கள் தளர, கைகள் மெலிதாய் நடுங்கின. அமைதியாய் சில நொடிகள் அவன் அப்பரிசினை வெறித்துப் பார்க்க, முகம் மலர்ந்திருந்த அஞ்சலி, அவனது குழப்பத்தைக் கண்டு, முகம் வாடிப்போனாள்.
“அஜூ”
“எப்படி வந்த அஞ்சலி?”
“கார்ல… தெரிஞ்ச ட்ரைவர் ஓட்டிட்டு வந்தாரு…”
“சரி, வீட்டுக்கு கிளம்பு. போகும்போது இதை தூர எறிஞ்சுட்டு, மனசுல உள்ளதை அழிச்சுட்டு வீட்டுக்கு போ” என்றவன், அப்பரிசினை அவளது கைகளில் திணித்தான்.
அஞ்சலிக்கு மூச்சு முட்டி, கண்களில் குளம் கட்டின.
“அ… அஜூ… உனக்கு என்னை…”
“பிடிக்கும் அஞ்சலி. ஆனா அது காதல் இல்லை…”
“அஜூ…”
“அஞ்சலி, என் வாழ்க்கையில நீ வரலேனா, இந்நேரம் எங்கையாவது சாவு வீட்ல தான் பாடிக்கிட்டு இருந்திருப்பேன். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டு இருந்திருப்பேன். உண்மையில அதான் நான். இந்த யூடியூப், ப்ரோக்ராம் பேரு புகழ் கைத்தட்டு எல்லாம் நீ எனக்கு போட்ட பிச்சை…”
“என்ன வார்த்தை சொன்ன அஜூ?” என்று பதைபதைத்து ஒரு அடி எடுத்து வைத்து முன்னே சென்றவள், சுதாரித்துக்கொண்டு மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தாள்.
“அதெல்லாம் உன் திறமைக்கு கிடைச்ச பரிசு அஜூ” என்றவள், கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க கூட நினைக்கவில்லை. அவளது வேதனையைக் கண்டவனுக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இருப்பினும் முகத்தினை அவன் இறுக்கமாக வைத்திருந்தான்.
“அஞ்சலி, என் வீட்ல நான் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுனு யோசிக்கும்போது, உன் வீட்ல நீ சாப்பிட்ட தட்டை எடுக்க ரெண்டு பேர் தயாரா இருப்பாங்க…”
“அஜூ பணம் காசெல்லாம்”
“முக்கியம் அஞ்சலி” என்று இடைமறித்தான். அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்திருந்தாள்.
“பணம் முக்கியமில்லைனு சொல்றவன் எல்லாருமே பணக்காரனாத்தான் இருக்கான். இல்லாதபட்டவனுக்குத் தான் அந்த வலி தெரியும். அந்த பணம் இருந்திருந்தா என் அம்மாவை அப்பா காப்பாத்தியிருப்பாரு. அது இல்லாமத்தான் கடைசி வரை நிம்மதியே இல்லாம புலம்பியே செத்தாரு. நானும் அப்படி சாக விரும்பல… நீ எனக்கு செஞ்சதுக்கு எப்பவும் நன்றியோடு இருப்பேன். அதே நேரத்துல கிடைக்கற வாய்ப்பை பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறணும். அது மட்டும் தான் என் மனசுல இருக்கு…”
கண்களை துடைத்துக்கொண்டவள்,
“நிச்சயம் பெரிய ஆளா வருவ அஜூ. உனக்காக நான் காத்திருப்பேன்…” என்றாள், அன்போடு.
“உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? நீ நினைச்ச மாதிரி உன் அப்பா உன்கிட்ட அன்பா இருக்காரு. உன் சித்தப்பாவும் அப்பாவும் சண்டையை மறந்து ஒன்னு சேர்ந்துட்டாங்க. போய் உன் குடும்பத்தோட சந்தோஷமா இரு. குடும்பம் இல்லாதவனுக்கு தான் அதோட அருமை தெரியும்”
“என்ன சொல்ற அஜூ? என்னென்னமோ தேடித்தேடி காரணம் சொல்லிக்கிட்டே இருக்க? உனக்கு என்னை…” என்றவள், இதழ்களைக் கடித்து மேற்கொண்டு பேசமுடியாமல் அமைதியானாள்.
“காரணம் தேடறேன்னு புரியுதுல்ல, கிளம்பு. நான் அப்போ சொன்னது தான். என் அப்பா செஞ்ச அதே தப்பை நான் செய்யமாட்டேன்…”
சில நிமிடங்கள் அழுதவள், கண்களை துடைத்துக்கொண்டு, அவனது பெற்றோரின் புகைப்படத்திற்கு முன் சென்று நின்றாள்.
“நான் காதலை மட்டும் தான் தேடினேன். காதல் பக்கத்துல முற்றுப்புள்ளி தான் வச்சேன். கமா போடவே இல்லை. இருந்தும் நான் தேடினது கிடைக்கல” என்றவள் ஒருமுறை அர்ஜுனை பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். சிரித்துக்கொண்டு வந்தவள், தற்பொழுது அழுதுகொண்டிருப்பதைக் கண்ட மதன் பதறினான்.
“அஞ்சலி, என்ன ஆச்சு அஞ்சலி?”
“என் வாழ்க்கையோட கடைசி நம்பிக்கையும் உடைஞ்சு போச்சு மதனா. இனி எப்படி வாழப்போறேன்னு தெரியல…”
“அஞ்சலி, அழாத… ப்ளீஸ்…” என்று மதன் கூற, வேகமாக சென்று காரில் அவள் ஏற, உடனே வண்டி புறப்பட்டது.
அறைக்குள் மதன் விரைய, அவளது புடவைக்குள் முகத்தினை புதைத்துக்கொண்டு அர்ஜுன் அழுதுகொண்டிருந்தான்.
