Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மறப்பதில்லை மதி முகம்-2

அத்தியாயம்-2

5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில்..

“இவங்கல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்காங்க… நீயே சொல்லு த்ரிஷா… ஒரு 17 வயசு பொண்ணு, எவ்வளவு ப்ராப்ளம்ச தான் சால்வ் பண்றது…?” தண்மதி அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

யாருமே இல்லாத மொட்டைமாடியில் நின்றுகொண்டு இவள் யாரிடம் பேசுகிறாள் என்று கொஞ்சம் உற்றுப்பார்த்தால்,

அங்கே எட்டுக்கு பத்து பரப்பளவில் அமைந்த அழகிய மாடித்தோட்டத்தில் பல வண்ணங்களில் பூத்துக்குளுங்கிய தன் செல்லப் பிள்ளைகளான ரோஜாச் செடிகளிடம் தான் புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“பாரு ஜோ.. வராத மேத்ஸ்ச (Maths) ‘வா வா’ன்னா எப்படி வரும்? ஒருநாள் எங்க அப்பாவை இந்த கணக்கையெல்லாம் போடச் சொல்லணும், அப்போ அவர் முகம் போற போக்கைப் பார்த்து நான் வயிறு குலுங்க சிரிக்கப்போறேன் பாரு..” என்று அந்த அடர் மஞ்சள் நிற ரோஜாச்செடிக்கு தண்ணீர் ஊற்றியபடி, அந்த காட்சியை மனதில் கற்பனை செய்துபார்த்து கலகலவென சிரித்தாள்.

Advertisement

உலகிலேயே அவளுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள் எவை என்று கேட்டால், “ரோஜா..ரோஜா.. ரோஜா..” என்றுதான் சொல்வாள். தன் வீட்டு மொட்டை மாடியில் ரோஜாச் செடிகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு அழகான தோட்டத்தை அமைத்து பராமரித்து வந்தாள்.

Advertisement

செம்மண்ணில் எரு கலந்து போடுவது, செடிக்கு தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றுவது, இயற்கை உரமாக காய்கறிக்கழிவுகள் வடிகட்டிய டீத்தூள், முட்டை ஓடுகள் முதலியவற்றைப்போடுவது, வாடிய இலைகளை உடனுக்குடன் அகற்றுவது, ஆண்டிற்கு இருமுறை கிளைகளை வெட்டிவிடுவது, இலையில் பூச்சி அரிப்பை கண்டுவிட்டால் வேப்பெண்ணையை நீரில் கலந்து தெளிப்பது என்று பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வாள்.

தினமும் தண்ணீர் ஊற்றும் போது அவற்றிடம் பேசுவதும் அவளுக்குப் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஏனென்றே தெரியாமல் அந்த ‘வேலண்டைன்’ மலர் மீது அப்படி ஒரு பிடித்தம் அவளுக்கு, அதை ஒருவகை கிறுக்கு என்றே கூறலாம். ஒவ்வொரு செடிக்கும் ஒரு சினிமா நடிகையின் பெயரை வைத்திருப்பாள். அவை பதில் சொல்லுமா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தினமும் அவற்றிடம் பேசுவாள்.

அவளுடைய இந்த ரோஜா பித்துக்கு எல்லையே கிடையாது.. அது எந்த அளவுக்கென்றால் எங்காவது ஒரு வித்தியாசமான நிறத்திலோ, வகையிலோ ரோஜாவைக் கண்டுவிட்டால் போதும், நள்ளிரவில் வீடு புகுந்து திருடவும் தயங்கமாட்டாள்.

Advertisement

அவளது வாழ்நாள் லட்சியமே உலகின் பெரிய ரோஜாத்தோட்டமான பல்கேரியாவின் ரோஸ்வேலி,  ஜெர்மனியின் யூரோப்பா ரோசேரியம் கார்டன் முதல் உள்ளூர் ஊட்டி மலர் கண்காட்சிவரை எல்லா இடங்களையும் பார்த்துவிடவேண்டும் என்பதுதான்.

சரி, ரோஜா கதையை விட்டுவிட்டு மீண்டும் கதைக்கு வருவோம்…

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தண்மதிக்கு பிடிக்காத ஒரே விஷயம் என்றால் அது கணக்குதான். ஆனால் பேங்க் மேனேஜரான அவளது அப்பா வெற்றிவேல், தான் தினமும் எண்களிலே விளையாட தன் மகளுக்குக் கணக்குவராமல் போவதா என்ற ஈகோவோ என்னவோ அவளை விடுவதாக இல்லை அவர், ஒருபக்கம் எப்படியாவது அவளைக் கணக்குப்பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்க வைத்துவிடுவது என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்க, மறுபக்கம் அந்த கணக்கோ இவள் மண்டையில் ஏறுவேனா என்று தர்ணா பண்ணிக்கொண்டிருந்தது..

கையில் குழாயைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு செடியாகத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே புலம்பினாள் மதி.

“சாம்… உனக்குத் தெரியுமா? இன்னைக்கு அந்த டியூஷன் மாஸ்டர் எனக்குக் கணக்கு போடத் தெரியலைன்னு பெஞ்ச் மேல நிக்க வச்சிட்டான் கடன்காரன். பசங்க எல்லாம் பார்த்து சிரிச்சாங்க தெரியுமா..? ரொம்ப அசிங்கமாப் போச்சு. அவனுக்கு வாழ்க்கையில ஐஸ்கிரீமே சாப்பிட முடியாத மாதிரி பல்லு சொத்தையாகிப் போகணும்!” என்று சபித்தவள்.

“இந்த அப்பா ஏன்தான் ஊர்ல இருக்கிற எல்லா டியூஷன் சென்டருக்கும் என்னை மாத்தி மாத்தி ஃபுட்பால் விளையாடுறாரோ..”

அடுத்த செடிக்கு நகர்ந்தாள். அந்த பிங்க் வண்ண மலர் சற்று வாடித்தெரியவும்,

“ஹே அமலா பால்… நீ ஏன் இவ்வளவு டல்லா இருக்க? டிவோர்ஸ்  ஆகிடுச்சுன்னா? கவலைப்படாத… எனக்கு இந்த மேத்ஸ் கூட டிவோர்ஸ் ஆச்சுன்னா உனக்கு ட்ரீட் தர்றேன்.”

அடுத்து இருந்த அடர் சிவப்பு நிற ரோஜாச்செடியிடம்..

“ஹாய்… குஷ் ஆன்ட்டி… இந்த ஒரு வருஷம் மட்டும் முடியட்டும், அப்புறம் நான் ஒரு சுதந்திரப் பறவை. உங்களைப் போலவே ‘இளவட்டம் கைத்தட்டும் டும் டும்’ ‘னு நானும் ஆடுவேன்…”

அவள் உற்சாகத்தில் கையில் இருந்த நீர் குழாயுடன் இரு கைகளையும் விரித்து காற்றில் குதித்தாள், அப்போது…

“வாட் த ஹெல்!” என்ற கோபமான குரல் அவளைத் திடுக்கிட வைக்க,

குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியவள் திகைத்துப் போனாள். அங்கே ஒர் இளைஞன் தலையில் நீர் சொட்ட சொட்ட நனைந்த நிலையில் நின்று கொண்டிருந்தான்.

இவன் திடீரென்று எங்கிருந்து குதித்தான்? என்று மதி வியந்தாள்.

அந்தக் குடியிருப்பில் வீடுகள் வரிசையாக தீப்பெட்டிகளை அடுக்கிவைத்தார் போன்று ஒன்றோடொன்று ஒட்டியவாறு வரிசைக்கு பத்து வீடுகளாக கட்டப்பட்டிருந்தது, ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியும் வெறும் மூன்று அடி பொது சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ஏறினால் அப்படியே அடுத்தடுத்த வீடுகளுக்குத் தாவிவிடலாம், அவன் அந்தப்பக்கம் சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருந்திருக்கலாம், அதனால் அவள் அவனைக் கவனித்திருக்கவில்லை.

அவன் மிகவும் கோபமாக எதையோ கைக்காட்டித் திட்டிக்கொண்டிருந்தான். ஆனால் அதிர்ச்சியில் இருந்த மதிக்கு எதுவும் காதில் விழவில்லை,

சில கணங்கள் கழித்துதான் அவன் அவள் கையைச் சுட்டிக்காட்டுவதைக் கவனித்தாள். தான் இன்னும் அவன் மீது தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தவள் உடனே குழாயைக் கீழே போட்டுவிட்டு, மன்னிப்புக் கோரும் முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவனோ பார்வையினாலேயே அவளை சுட்டெரித்துவிடுபவன் போல் முறைத்துக்கொண்டிருந்தான்.. அந்தக் கோபப்பார்வையில் மிரண்டவள் அவன் ஒரு அடி முன்னால் வர, பயத்தில்  பின்வாங்கினாள். அப்போது அவள் தெரியாத்தனமாக தான் கீழேப்போட்ட தண்ணீர் பைப்பின் மேல் காலை வைத்துவிட, அந்தத் அழுத்தத்தில் நீர் அவள் மேலே பீறிட்டு அடித்தது. திடீரென மேலே பீய்ச்சியடித்த ஐஸ் போன்ற குளிந்த நீரில் உடல்விரைத்து, நிலைத்தடுமாறி பின்னால் விழப்போனாள்,

அவ்வளவுதான் கீழே விழுந்து வாரப்போகிறோம் என்று கண்களை இறுக மூடிக்கொண்டே தரையில் டொம்மென்று மோத மனதளவில் ஆயத்தமானாள், ஆனால் அவள் தரையில் விழும் முன்பே இரு வலிய கரங்கள் அவள் விழாதபடி இடையைத் தாங்கிப்பிடித்திருந்தன. காற்றில் அல்லாடிய கைகள் பற்றுதலுக்கு அவனது  டீ-ஷர்ட்டைப் பிடித்துக்கொள்ளசட்டென்று கண்களைத் திறந்தாள்,

அந்த அந்நியனின் முகம் அத்தனை நெருக்கத்தில் இருக்க, அவனது முடியின் நுனியிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் அவள் முகத்தில் பனித்துளிகள் போல் விழுந்தன. அவளது இதயம் படபடத்தது. அந்த நெடியவனின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்,

வெயிலில் தகதகக்கும் செம்பொன் நிறதேகம், அடர்த்தியான வில் புருவங்கள், கோபத்தில் அவளைத் துளைத்த அந்த பெரிய கண்களைக் காத்து நின்ற நீண்ட இமை மயிர்கள், கத்திப்போன்ற கூர்மையான நாசி, லேசாகத் திறந்திருந்த சிவந்த இதழ்கள், சற்றே குழிந்த அழுத்தமான மோவாய், செதுக்கியது போன்ற தாடை, முகத்தில் லேசாக அரும்பியிருந்த தாடி, மீசை…

“ஹேண்ட்சம் ஹங்க்…” என்று அவளது மூளையும் இதயமும் ஒரே நேரத்தில் ஒத்திசைவுடன் கூச்சலிட்டன. பார்வை சற்றே கீழிறங்க அவனது கையில்லா டி-ஷர்ட் அவளை விழாமல் கெட்டியாகப் பிடித்திருந்த வடிவான புஜங்களின் இறுகிய தசைகளை  தாராளமாக காட்ட, அவளது உதடுகள் ‘ஓ’ வென்று தானாக ஆச்சரியத்தில் குவிந்தது.

அவளது இடையைப்பற்றியிருந்த அவன் கரங்களின் சூடு அவளது ஆடையையும் தாண்டி உடலில் மெதுவாக படர்வதை உணர்ந்த தருணம் அவளது உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் எல்லாம் அவள் இதுநாள் வரை அறிந்திராதது..

நுரையீரலில் காற்று உறைய, இமைகள் படபடக்க, இதயத்துடிப்பு ராக்கெட் வேகம் கொண்டது, இனம் புரியாத ஏதோவொன்று அடிவயிற்றைக் கவ்விப்பிடிக்க, அவளைப் பதற்றம் பற்றிக்கொண்டது, வாழ்க்கையில் முதன்முறையாக  வெட்கத்தில் முகம் சிவந்த தண்மதி,சட்டென்று கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது இந்த வினோத ரியாக்‌ஷனைப் பார்த்து அவன் ஆச்சரியத்தில் புருவம் சுருக்கினான்.

“நேர நிமிர்ந்து நிக்காமா இவ ஏன் இப்ப கண்ணை மூடிக்கிறா? நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன்?” என்று நினைத்தவன், பொறுமையிழந்த வேகமூச்சுடன் அவளை நேராக நிமிர்த்தி நிறுத்தினான்.

உடனே கண்களைத் திறந்த மதி, அவனிடமிருந்து விலகி, வேட்டை மிருகத்திடமிருந்து தப்பிக்கும் மானைப் போல வீட்டிற்குள் ஓடினாள். அவன் நம்பமுடியாத தலையசைப்புடன்,

“என்ன பொண்ணு இவ? ஒரு சாரி (Sorry) கூட சொல்லத் தெரியல… அதுமட்டுமில்லாம டேப்பை (Tap) கூட மூடாம ஓடுறாளே..” என்று முணுமுணுத்துக்கொண்டே தண்ணீரை நிறுத்தினான்.

“இவளுக்கு வாட்டர் மேனேஜ்மெண்ட் பத்தி யாராவது கிளாஸ் எடுக்கணும் போல, எவ்வளவு தண்ணியை வீணாக்குறா!” என்று வியந்தபடியே திரும்பிப் போகும்போது அந்த ரோஜாச் செடிகளைப் ஒருமுறைப் பார்த்தான்..

இல்லை, அவள் மொழியில் சொன்னால் ‘சில்வர் ஸ்கிரீன் ஸ்டார்கள்.. “சாம்… த்ரிஷா… குஷ் ஆன்ட்டி…” என்று அவளது குழந்தைத்தனத்தை நினைத்து ஒரு நமுட்டுச் சிரிப்போடு “ஹுச்சி..(லூசுப்பொண்ணு)” என்று தான் புதிதாக பயின்ற கன்னட வார்த்தையை முணுமுணுத்துவிட்டு தன் வீட்டு மொட்டைமாடியில் லாவகமாக தாவி இறங்கினான்.

மதி மூச்சிரைக்கத் தன் அறைக்குள் ஓடி வந்தவள்  “யார் அந்த பையன்? பக்கத்து வீட்டுல அங்கிள், ஆன்ட்டி மட்டும்தானே இருப்பாங்க? ஒருவேளை திருடனோ? அய்யோ மாடிக்கதவை லாக் பண்ணாம வந்துட்டனே..” என்று மேலே பார்த்தபடி டென்ஷனில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்,

அப்போது அவள் அம்மா ரேணுகா அவளது தோளைத் தொட, மதி பயத்தில் துள்ளி குதித்தாள்.

“ஏன்டி இப்படி முழிக்கிற? டிரஸ் எல்லாம் ஏன் இப்படி நனைஞ்சிருக்கு? போய் மாத்திட்டு வா, அப்பா வர்ற நேரமாச்சு,” என்றார் அவர் அவளை வினோதமாகப் பார்த்து..

அதன் பிறகு, அந்தப் புதியவன் பக்கத்துவீட்டு மாலா ஆன்ட்டியின் உறவுக்காரப்பையன் என்றும், சென்னையில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, இங்கே பெங்களூரில் ஒரு கம்பெனியில் இன்ட்டர்ன்ஷிப்காக வந்திருக்கிறான், இன்னும் சில மாதங்களுக்கு அவர்கள் வீட்டில்தான் தங்கியிருக்கப்போகிறான் என்ற விவரங்களை எல்லாம் அவள் அம்மாவிடம் புரணி பேசி அறிந்துகொண்டாள். ஆனால் என்ன முயன்றும் அவன் பெயரை மட்டும் அறியமுடியவில்லை.

அவன் பெயர் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அவள் சின்ன மண்டையைக் குடைந்துக்கொண்டே இருந்தது…

மறுநாள் மாலை, மதி சோஃபாவில் நன்றாக கால் நீட்டி சாய்ந்து படுத்துக்கொண்டு மடியில் டப்பாவில் நிரப்பியிருந்த பாப்கார்னை உள்ளே தள்ளியபடி ‘ஷின்ச்சான்(shinchan) அனிமே” பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“மதி, போய் படிமா… அப்பா பார்த்தா திட்டுவாரு,” என்று அம்மா எச்சரித்தார்.

“போம்மா…” என்று அலட்சியமாக தலை சிலுப்பிவிட்டு,

“அம்மா இன்னும் கொஞ்சம் பாப்கார்ன் கொடேன்..” என்று நயமாக வினவினாள்.

“அடிவாங்கப்போற.. ஒழுங்கா அப்பா வர்றதுக்குள்ள டிவிய ஆஃப் பண்ணிட்டு போய் படி..”

“போம்மா.. சண்டே கூட என்னை நிம்மதியா விடமாட்டியா..? சும்மா படி படின்னு ஏன் என் உயிரை வாங்குறீங்க..? அந்த ‘வால்டர் வெற்றிவேல்’ கிட்டபோய் சொல்லு, இன்னைக்கு நான் படிக்க மாட்டேன்னு,”

“அடிக்கழுதை.. என்னடி அப்பாவ இப்படி பேர் வச்சி கூப்பிடுற..?” என்றார் குரலில் கண்டனத்துடன்.

“பின்ன.. எப்பப்பாரு மூஞ்சிய விரைப்பா வெச்சிருந்தா வேற என்ன சொல்றது? இவருல்லாம் ஐபிஎஸ் ஆகியிருக்கவேண்டியது, ஜஸ்ட் மிஸ்ல பேங்க் ஆஃபீசர் ஆகிட்டாரு..”

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.. நீ ஆச்சு.. உன் அப்பாவாச்சு..” என்றுவிட்டு தன் வேலையைபார்க்கப்போக..

“அப்படி துப்பிட்டு போய்ட்டே இருமா..”

என்ற அவரது செல்ல மகளின் கவுண்ட்டரில் ரேணுகாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது..

“எனக்கென்ன உங்க அப்பா வந்தா நல்லா டோஸ் வாங்கு..” என்று தலையில் அடித்துக்கொண்டு உள்ளே செல்ல..

அவள் மீண்டும் ஷின்ச்சானில் மூழ்கினாள்.

“ஹே ஷின்ச்சான்… என்ன பண்ணிவச்சிருக்க..” என்று மிட்ஸியைப் போல உச்சஸ்தாயில் கத்திக்கொண்டே, எதேர்ச்சையாக வாயில் பக்கம் திரும்பிப்பார்க்க

அங்கே அவன் (மொட்டை மாடிப் பையன்) கைகளைக் கட்டிக்கொண்டு உதட்டோரம் ஏளன வளைவுடன் நின்றிருந்தான்.

தண்மதிக்குத் தூக்கி வாரிப்போட..வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றாள். அவள் தன் டாம் அண்ட் ஜெர்ரி டி-ஷர்ட் மற்றும் த்ரீ-ஃபோர்த் (3/4th) பாண்ட்டில், இப்படி காலை ஆட்டிக்கொண்டு கார்ட்டூன் பார்த்ததை அவன் பார்த்துவிட்டானே.. இவன் முன் இப்படி நிற்கும் படி ஆகிவிட்டதே என்று வெட்கிப்போனாள் மதி..

அதே சமயம் அவன் எப்படி அனுமதியில்லாமல் தங்கள் வீட்டுக்குள் வரலாம் என்ற கோபமும் எழுந்தது.

அவள் அந்நியனாக மாறி கோபமும் ஆத்திரமுமாக கண்ணை உருட்டி ஏதோ பேசத் தொடங்குவதற்குள், அவள் அப்பா உள்ளே வர, அடுத்த கணமே அம்பியைப்போல் பவ்யமான பிள்ளையாக மாறித் தலையைக் குனிந்து கொண்டாள். அவளது இந்த இரட்டை வேடத்தைப் பார்த்து அவன் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தது.

“என்ன தம்பி இங்கயே நிக்கிறீங்க, உள்ள வாங்க… இது உங்க வீடு மாதிரி,” என்று அப்பா அவனை இன்முகத்துடன் வரவேற்றுக்கொண்டே

“பாப்பு… தம்பிக்கு காபி கொண்டு வா,” என்று இவளிடம் கட்டளையிட்டார்.

அவரது “பாப்பு” என்ற அழைப்பில் அவன் கண்கள் உள்ளார்ந்த சிரிப்பில் பளபளப்பதைக்கண்டு மதிக்கு இன்னும் அவமானமாக இருந்தது.

அதே சமயம் அவளது அப்பாவின் இந்த அதிகபடி கவனிப்பும் எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை, அவர் யாரிடமும் இப்படி தேனொழுக பேசி அவள் பார்த்ததில்லையே..

அவள் சிலைப்போல் நிற்பதைப்பார்த்து..

“மதி.. சொன்னது காதுல விழல, போய் தம்பிக்கு காபி கொண்டுவா..” என்ற அதட்டலில் சிட்டாக பறந்தாள்.

“காஃபிலாம் வேண்டாம் அங்கிள்..” என்று அவன் மென்மையாக மறுக்க.

“இல்லப்பா நம்ம வீட்டுக் காஃபி நல்லா இருக்கும் சாப்பிட்டுப்பாரு..” என்றார்.

கிச்சனுக்கு வந்த மதி,

“அம்மா காஃபி வேணுமாம்.. போட்டுக்குடு..” என்றாள் உதட்டைப்பிதுக்கியபடி.

“நான் வேலையா இருக்கேன்டி

அந்த ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு கப்ல ஊத்தி கொண்டுப்போ..” என்றார்.

“இந்த வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்யனும்” என்று அலுத்துக்கொண்டே காஃபியை கப்பில் ஊற்றி கொண்டுப்போனாள்.

இவளைப்பார்த்ததும்,

“தம்பிக்குக் கொடும்மா..” என்றார் அப்பா.

‘இங்க என்ன பொண்ணு பாக்குற பங்ஷனா நடக்குது’ என்று உதட்டை சுளித்துவிட்டு.. இவள் தட்டை நீட்ட அவன் எடுத்துக்கொண்டான்.

காஃபியை ஒரு மிடற்று அருந்தியவனின் கண்களில் சிறு ஒளி தோன்றி மறைய, பிறகு எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் மௌனமாக இருந்துவிட்டான்.

“பெரிய லார்டு லபக்குன்னு நெனைப்பு நல்லா இருக்குன்னு வாயத்திறந்து சொல்லமாட்டாராமா..” என்று ஏளனமாக எண்ணினாள்.

“தம்பி இதுதான் என் பொண்ணு மதி, இவளுக்குத்தான் நீங்க மேத்ஸ் டியூஷன் எடுக்கனும்..”என்ற அப்பாவின் குரலில் அதிர்ந்து விழித்தாள் மதி.

“மத்த சப்ஜெக்ட் எல்லாம் நல்லாதான் படிக்கிறா ஆனா இந்த மேத்ஸ் மட்டும் சுத்தமா வரமாட்டேங்குது, நீங்கதான் பார்த்து கொஞ்சம் பொறுமையா சொல்லித்தரணும்..” என்றார் வினயமாக.

‘அய்யோ இந்த அப்பா ஏன் என் மானத்தை வாங்குறார்..?’ என்று உள்ளுக்குள் புகைந்தாள்.

“மதி இங்கப்பாரு, தம்பி பேரு ஆதி, நம்ம முத்துகுமார் சாரோட ரிலேட்டிவ், ப்ளஸ்டூல ஸ்டேட் ரேங்க்  வாங்கியிருக்காரு, அதுவும் கணக்கில் சென்டம், ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி உனக்கு டியூஷன் எடுக்க சம்மதிக்க வச்சிருக்கேன். நல்ல புள்ளையா தம்பி சொல்லிக்குடுக்கறத புரிஞ்சி படிச்சி பாஸ் பண்ற வழியப்பாரு புரியுதா..?”

மதி சம்மதமாகத் தலையாட்டினாள், ஆனால் மனதிற்குள், ‘இதுக்கு இந்த அப்பா என்னை வடிகட்டின முட்டாள்னே சொல்லியிருக்கலாம், இனிமே எந்த முகத்தை வச்சிட்டு இவனை ஃபேஸ் பண்றது? இந்த அப்பாவ சொல்லனும், இப்படியா ஒருத்தர அறிமுகப்படுத்துவாங்க..?’ என்று நொந்து கொண்டாள்.

“சரி பேசிட்டு இருங்க நான் தோ வந்துடறேன் ” என்று அப்பா உள்ளே சென்ற பிறகு,

அவள் ஓரக்கண்ணால் அவனைப்பார்க்க, அவனது அளவிடும் பார்வையைத் கண்டவள்,

‘என்ன இப்படி பார்க்குறான் உள்ளுக்குள்ள சிரிக்கிறானோ..?’ என்று ஐயுற்றாள்.

“உன் மேத்ஸ் புக்கைக் கொண்டு வா..” என்று கேட்டு வாங்கியவன், சற்றுநேரம் புரட்டிப்பார்த்துவிட்டு

“உனக்கு எந்தச் சேப்ட்டர்ல(chapter) டவுட்?”

‘டவுட்டா? அதுலாம் புரிஞ்சவங்களுக்கு வர்றது…நமக்கு  மொத்தமாவே டவுட் தான்,’ என்று மனதிற்குள் நினைத்தாலும் வெளியே அமைதியாக இருந்தாள்.

“இங்க பாரு, வாயைத் திறந்து எதாவது சொன்னாதானே எந்த சேப்ட்டர் எடுக்கறதுன்னு எனக்குத் தெரியும். இப்படி பேசாம இருந்தா ஒன்னும் கத்துக்க முடியாது..” என்று கண்டிப்புடன் கூறியவன்.

“சரி நான் ஃபர்ஸ்ட் சேப்ட்டர்ல இருந்தே எடுக்கிறேன்,” என்றான்.

“சரிங்க அண்ணா…” என்று போலிப்பணிவுடன் நக்கலாகச் சொன்னாள் மதி.

 “அண்ணாவா?” என்றான் அவன் முகம் சுளித்து,

“நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிற டீச்சர். சோ, ‘சார்’னு கூப்பிடு, புரியுதா?” என்று அமர்த்தலாக சொன்னான்.

“ஓகே சார்ர்ர்…” என்று ராகமிழுத்தபடி கூறும் போதே அவள் கண்கள் உள்ளார்ந்த சிரிப்பில் பளபளத்தது..

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!