Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-6

அத்தியாயம்-6

ஐந்து வருடங்களுக்கு முன்பு, பெங்களூரு…

கேட்டிலிருந்து கதவு வரைக்கும் நடப்பதற்குள்ளேயே மதியின் இதயம் டொம் டொம்மென்று அடித்துக்கொள்வது அவள் காதுகளில் கேட்டது.. அப்பாவை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தை எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு தள்ளிப்போட எண்ணி மிகமெதுவாக எட்டுவைத்து நடந்தாள்.

வரவேற்பு அறையில் அமர்ந்து அப்பா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவர்  வாசலில் சத்தம் கேட்டதும், பேப்பரைக் கீழே இறக்கி அவளைப் பார்த்தார்.



Advertisement

“பாப்பு.. ஏன் அங்கேயே நிக்கிற? உள்ள வா,” என்று அழைத்தார்.

அவரது குரல் சாதாரணமாகத்தான் இருந்தது, ஆனால் மிரண்டிருந்த அவளது மனதிற்கு அது மிரட்டலாகக் கேட்டது. அவள் மெதுவாக அவருக்கும் அவளுக்குமான இடைவெளியைக் குறைத்து, “இம்மென்றால் அழுதுடுவேன்” என்கிற முகபாவனையுடன் தன் தேர்வுத்தாளை நீட்டினாள்.

அவர் அதை வாங்கிப்  பார்த்தவர் கண்களில் கனல் தெறித்தது . மதியின் கைகால்கள் உதறலெடுத்தது . ஆனால் அவள் எதிர்பார்த்தது போல பெரிய பாம் எதுவும் வெடிக்கவில்லை.  எதுவும் பேசாமல் குமுறும் எரிமலையை உள்ளே அடக்கியபடி  பேனாவை எடுத்து அதில் கையெழுத்திட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்தார்.

Advertisement

அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வசவு கூட இல்லாமல் கையெழுத்து வாங்கியாச்சா? இது அவளுக்கு  எட்டாவது அதிசயம் போலவே தோன்றியது.

Advertisement

ஒரு பெரிய  கண்டத்திலிருந்து தப்பிய நிம்மதியுடன் அப்படியே நைஸாக உள்ளேப் போகத் திரும்பினாள். ஆனால் அப்பாவின் சிம்மக்குரல்  அவளை நிறுத்தியது.

“மதி…இந்த மாதிரி உதவாக்கரை மார்க் வாங்குறது இதுவே கடைசியா இருக்கட்டும். இந்த புது டியூஷன்லயாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியப் பாரு,” என்றார் கண்டிப்பான குரலில்.

அவரது அதட்டலில்  உடல் நடுங்கினாலும், அவள் எதிர்பார்த்த பேரழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை. மிகவும் அடக்கமாகத் தலையசைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்று பெருமூச்சு விட்டாள்.

Advertisement

“அப்பாடா… ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்!”

முதலில் இது தன் அதிர்ஷ்டத்தினால் நடந்ததாக அவள் நினைத்தாள். ஆனால், பின்னர்தான் இதில் ஆதித்யா ஆற்றிய முக்கியப் பங்கு பற்றி அவளது அம்மா மூலம் அவளுக்குத் தெரிய வந்தது.

“ம்மா… அப்பா என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்காரு? அவருக்கு உடம்பு சரி இல்லையா? என் மார்க்கைப் பார்த்துக்கூட எரிமலை வெடிக்கவே இல்லையே…”

“இப்போ என்ன உனக்கு திட்டு வாங்கணும்.. அவ்வளவுதானே? இரு அப்பாவைக் கூப்பிடுறேன்… ‘ஏங்க’…”

மதி பதறிப்போய் அம்மாவின் வாயைப் பொத்தினாள்.

“அம்மா… இறங்கின வேதாளத்தைத் திரும்ப முருங்கை மரத்துல ஏத்தி விட்டுடுவ போல இருக்கே… சும்மா இரும்மா.. பீதியைக் கிளப்பாத…”

“ஹேய்.. அப்பாவைப் போய் வேதாளம்னு சொல்ற? வாய் மேலயே போடுவேன்,”

“அய்யோ சாரி சாரி.. நீ ஒரு அஞ்சலி தேவிங்கிறதை மறந்து வாயை விட்டுட்டேன்..”

“மேத்ஸ் வருதோ இல்லையோ.. வாய் மட்டும் நல்லா வருது உனக்கு!”

“அம்மா.. எப்படிம்மா இந்த அதிசயம் நடந்தது? என்னால இன்னும் நம்ப முடியல… ‘குற்றம் – நடந்தது என்ன’ கொஞ்சம் விளக்கமா சொல்லேன்…” என்று ஆர்வமாகக் கேட்டாள் மதி.

“இதுக்கெல்லாம் காரணம் அந்த ஆதி தம்பிதான்.”

“என்னம்மா சொல்ற?”

“ஆமா.. அவரு டியூஷன் சொல்லித் தர வந்த முதல் நாளே சொல்லிட்டாரு.. ‘அங்கிள்.. உங்க பொண்ணு கிட்ட இருந்து உடனடியா ரிசல்ட் எதிர்பார்க்காதீங்க.. ஒரே நைட்ல அவ சென்டம் அடிப்பான்னு கற்பனையும் பண்ணாதீங்க. இது ஒரு ஸ்லோ ப்ராசஸ் (Slow process).. இதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதனால உடனே அவ மார்க் வாங்கலைன்னு திட்டாதீங்க. கண்டிப்பா இந்த வருஷ கடைசியில அவளை நல்ல மார்க் வாங்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அதுவரைக்கும் நீங்க பொறுமையா இருக்கிறது ரொம்ப முக்கியம்’னு சொன்னாரு. அதான் உங்க அப்பா கோபத்தை வெளிய காட்டாம மறைச்சுக்கிட்டாரு,”

அம்மா சொன்னதையெல்லாம் யோசித்தபடி மதி தன் அறைக்குத் திரும்பினாள்.

“வாவ்.. வாட் ய மேன்..!” என்று வியந்தாள்.

தற்போதைய பிரச்சனையைத் தீர்த்தது மட்டுமல்லாமல், வரப்போகும் சிக்கலையும் முன்கூட்டியே கணித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டிருக்கிறானே.

ஒரு பக்கம் அப்பாவைக் கோபப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் அப்பா திட்ட மாட்டார் என்று தெரிந்தும் அவளிடம் அதைச் சொல்லாமல் அவளது தைரியத்தையும் உயர்த்தியிருக்கிறான்.

இதை நினைக்க நினைக்க ஆதித்யாவின் மீதான அவளது மரியாதை பல மடங்கு உயர்ந்தது. அவனைப் பற்றிய அவளது பார்வையும் புரிதலும் நேர்மறையாகத் திரும்பியது.

ஆதித்யா அவளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும், அதற்கு பின்னணியில் ஒரு மறைமுகமான அக்கறை இருக்கிறது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொண்டாள்.

ஆதிசார் உண்மையிலேயே தன் நலன் விரும்பிதான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படவே அவனுடைய  கடுமையான சுபாவத்தை பெருசுபடுத்தாமல் புறக்கணிக்க  முடிவெடுத்தாள்.

திடீரென்று தன் அம்மா உரக்கக் கூப்பிடுவதைக் கேட்டு மதியின் சிந்தனையோட்டம் கலைந்தது.

“மதி…”

“என்னம்மா…”

“மழை வர்ற மாதிரி இருக்கு.. மாடியில காயப்போட்ட துணியை அப்படியே எடுத்துட்டு வாம்மா,” என்று சமையலறையிலிருந்து அம்மா கத்தினாள்.

வழக்கமாக அம்மா இப்படி ஏதாவது வேலை சொன்னால் சோம்பல் பட்டுக்கொண்டு  போக மறுப்பாள். ஆனால் தற்போது இருந்த மனநிலையில், அவள் யோசிக்காமல் கீழ்ப்படிந்தாள்.

“சரிம்மா..”

மொட்டை மாடியில் கனமழை வருவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசியது. குளிர்ந்த காற்று அவள் முகத்தில் அடிக்க, தலைமுடி நாலாப் பக்கமும் பறந்து அவளைப் படுத்தியது. அந்த வேகமான காற்றில், துணி காயப்போடும் ‘கிளிப்’புகள் பிடித்துக் கொண்டிருந்த துணிகளை எடுப்பது அவளுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது.

அப்போதே லேசாகத் தூறல் போட ஆரம்பித்திருந்தது.

 அவள் அவரசம் இன்னும் அதிகரிக்க, கெட்டியாக கிளிப் போடப்பட்டிருந்த ஒரு துணியை வலுக்கட்டாயமாக இழுக்க, அது எதிர்பாராத விதமாக அவளது கையை விட்டு நழுவி காற்றில் பறந்தது.

 அது அப்படியே பறந்து போய் பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருத ஆதித்யாவின் முகத்தை  மூடியபடி விழுந்தது.

மதியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இது அப்படியே ஒரு சினிமா காட்சி போல இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம்தான்.. இது சினிமாவாக  இருந்திருந்தால்  கதாநாயகியோட துப்பட்டா பறந்து போய் விழுந்திருக்கும்.. ஆனா இங்கே விழுந்தது அவளது பிக்கி (piggy) படம் போட்ட டீ-ஷர்ட்!”

“ச்சீ.. எவ்வளவு  அன்-ரொமாண்டிக் ஆ இருக்கு (unromantic)!” என்று ஏமாற்றத்திலும் அவமானத்திலும் உதட்டைப் பிதுக்கினாள்.

இதற்கிடையில் ஆதி தன் முகத்தை மறைத்து விழுந்த சட்டையை எடுத்தான். பிறகு வேகமான எட்டுகளை வைத்து அவளை நோக்கி வந்தான்.

அவனது மனதில் என்ன ஓடுகிறது என்று அவளால் கணிக்க முடியவில்லை. “திரும்பவும் என்னைத் திட்டப் போறாரா?”

 தன்  சட்டையை கையில் பிடித்தபடி அவன்  அவளை நோக்கி வருவதைப் பார்க்கையில் அவளது இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது.

அவன் அங்கிருந்த தடுப்புச் சுவரை லாவகமாகத் தாண்டி அருகில் வர. மதி எதுவும் பேச முடியாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தாள்.மழை இன்னும் கொஞ்சம் வலுத்திருந்தது.

அவன்  அருகில் வந்து, அந்த டீ-ஷர்ட்டை அவளிடம் நீட்டியபடி மென்மையாகப் தன் வெண் பற்கள தெரிய புன்னகைத்தான்.

“கடவுளே.. இவர்  சிரிக்கிறாரே!”

 அவளுக்குள் ஏதோ ஒன்று தலைகீழாக புரண்டது ,வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒரு உணர்வு.

 “அய்யோடா.. இவரோட முறைப்பை விட சிரிப்பு ரொம்ப ஆபத்தானதா இருக்கே!” என்று நினைத்துக் கொண்டாள்.

கணநேரம் கூட அவன் கண்களை எதிர்கொள்ள முடியவில்லை அவளால், எங்கிருந்தோ நாணம் வந்து ஒட்டிக்கொள்ள கன்னங்கள் சூடாவதை உணர்ந்தாள். சட்டென்று பார்வையைத் தாழ்த்திக்கொண்டவள்,

அவனது கைலிருந்த தன் சட்டையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, மின்னல் வேகத்தில் உள்ளே ஓடினாள்.

“யார்ரா இவ.., இன்னும் பாதித் துணி கொடியிலயே தொங்குது.. அதை எடுக்காமா எதுக்கு இப்படி ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடுறா?”  என்று அவன் புரியாமல் விழித்தான்.

யாரோ துரத்துவது போல மதி தன் அறைக்குள் ஓடிப் போய் கதவைச் சாத்திக்கொண்டாள். படபடவெனத் துடிக்கும் இதயத்தின் மீது கை வைத்தபடி சாத்தியக் கதவின் மீது சாய்ந்து நின்றாள்.

இரண்டாவது முறையாக அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருக்கிறாள். ஆனால் முதல் முறை இருந்த பயத்திற்கும் இப்போது இருக்கும் உணர்வுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். முன்னது பயம்.. இது என்னவென்று அவளுக்குப் பெயரிடத் தெரியவில்லை.

அவன் அதே ஆதிதான், ஆனால் அவனைப் பார்க்கும் விதம் இப்போது மாறிவிட்டது.

தன் டீ-ஷர்ட்டை அவன் கையில் பிடித்திருந்ததை நினைக்கும் போதே அவள் முகம் செக்கச் செவேலென்று சிவந்துபோனது. முதலில் பயமாக இருந்தாலும், பிறகு அந்த உணர்வு அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. அவளுக்கே தெரியாமல் , ஒரு “Puppy Love” அவளுக்குள் அரும்பத் தொடங்கியிருந்தது.

ஒரு மாலை நேரத்தில் மதி பக்கத்து வீட்டு மாலா ஆன்ட்டியின் வீட்டிற்குச் சென்றாள். அவர் சமையலறையில் எதையோ மும்முரமாக கிண்டிக்கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி மதி சமையலறை மேடை (Slab) மீது சட்டென்று குதித்து அமர்ந்தாள்.

மதியின் குரலைக் கேட்டதுமே மாலா ஆன்ட்டியின் முகம் சட்டென்று மலர்ந்தது.

“அல்வா பண்ணிட்டு இருக்கேன்டி குழந்தே..” என்றார்  வாஞ்சையோடு.

“எதுக்கு ஆன்ட்டி.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ..?”

“ஆதிக்கு ரொம்பப் பிடிக்கும், அதான்..”

“ஆன்ட்டி உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன். ஆதி சார் உங்க தங்கச்சிப் பையனா?”

“ இல்லையே”

“அப்போ அவரு உங்களை ஏன் பெரியம்மான்னு  கூப்பிடுறாரு?” என்று நெற்றியைச் சுருக்கிக் கேட்டாள் மதி.

“ஆதி.. அங்கிளோட தம்பி பையன்டிம்மா…”

“ஆன்ட்டி.. நீங்க சார் மேல இவ்வளவு பாசமா இருக்குறதைப் பார்த்து அவர் உங்க ப்ளட் ரிலேஷன்னு (blood relation) நினைச்சேன்.”

“எனக்கு அவன் சொந்தப் பிள்ளை மாதிரிதான்மா..  எனக்குக் கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா குழந்தைங்க இல்லை. என் பிறந்த வீட்டு சொந்தகளே அவங்க வீட்டு விசேஷத்துக்கு என்னைக் கூப்பிடாம ஒதுக்கி வச்சாங்க. என் கூடப் பிறந்த தங்கச்சி அவளோட வளைகாப்புக்கு கூட என்னைக் கூப்பிடல. அப்போ நான் எவ்வளவு நொந்து போயிட்டேன் தெரியுமா? அப்பவே என் பிறந்த வீட்டுச் சொந்தத்தை நான் ஒதுக்கி வச்சுட்டேன்.

அப்போ நாங்க சென்னையில கூட்டுக் குடும்பமா இருந்தோம். ஆதித்யா பிறந்ததும் ஆஸ்பிட்டல்லயே அவனோட அம்மா அவனை என் கையில கொடுத்து, ‘அக்கா இனிமே இவன் உங்க பிள்ளை, நீங்கதான் இவனை வளர்க்கணும்’னு சொன்னா. நான் அங்கேயே அழுதுட்டேன் தெரியுமா? கூடப் பிறந்தவளுக்குக் கூட இல்லாத பாசம் அவளுக்கு இருந்தது.

ஆதிக்கு  அவனோட அம்மா குணம். அப்படியே என்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். அவனை நானேதான் வளர்த்தேன். எனக்கு ஒரு பிள்ளை இல்லைங்கிற ஏக்கமே இருந்ததில்லை தெரியுமா.. ஆதிதான் என் பிள்ளை. இப்போ ரெண்டு வருஷமாதான் அங்கிளுக்கு இங்கே டிரான்ஸ்பர் ஆகி வந்ததால அவனைப் பிரிஞ்சு இருக்கேன்.”

மதி அவரை வருத்தத்துடன் பார்த்தாள். மாலா ஆன்ட்டியை நினைத்து அவள் மனம் பாரமானது.

“உன்கிட்ட பேசிக்கிட்டே அல்வாவை விட்டுடப் போறேன்.. இதைக் கைவிடாம கிளறணும், இல்லாட்டி அடி பிடிச்சுடும்.” மாலா ஆன்ட்டி தன் வேலையைத் தொடர்ந்தார்.

“எதுக்கு ஆன்ட்டி இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யணும்? கடையில வாங்கிட வேண்டியதுதானே.. சிம்பிள்!”

“இதுதான் இந்த காலத்துப் பிள்ளைங்க.. எல்லாம் உங்களுக்கு நோகாம ஈஸியா கிடைக்கணும். வீட்டுப் பலகாரத்தோட ருசி கடையில கிடைக்குமா?” என்று செல்லமாக சாட,

“நீங்க கஷ்டப்படுறீங்களேன்னு சொன்னா என்னையே திட்டுறீங்களே?”  மதி சிணுங்கினாள்.

“இதெல்லாம் உனக்கு இப்போ புரியாது.. பெரியவள் ஆனா தான் புரியும்.”

“நான் இப்போவே பெரிய பொண்ணுதான். எனக்குப் புரியும், என்ன விஷயம்னு சொல்லுங்க ஆன்ட்டி.”

“அடி இவளே.. ஆம்பளைங்களோட மனசைப் பிடிக்கணும்னா அதுக்குக் குறுக்கு வழி அவங்க வயிறுதான்!”

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல..”

“பொண்டாட்டி நல்லா சமைச்சுப் போட்டா, புருஷன் அவளை ரொம்ப விரும்புவான். நமக்காக இவ்வளவு கஷ்டப்படுறாளேன்னு அவ மேல பாசமா இருப்பான். அப்படி அவங்க பாசமா நடக்கும்போது, அவங்களுக்காக நாம பட்ட கஷ்டம் எல்லாம் காணாமப் போயிடும். நான் எப்படி உங்க அங்கிள் மனசுல இடம் பிடிச்சேன்னு நினைக்கிற? என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்போ நான் செஞ்ச வாழக்கா பஜ்ஜியையும் இஞ்சிடீயையும் வச்சுத்தான்!” என்று தன் சமையல் திறமையைப் பற்றி சிறு வெட்கத்துடன் பெருமையடித்தார் மாலா ஆன்ட்டி.

மதி சமையலறை மேடையிலிருந்து அவசரமாகக் குதித்திறங்கினாள். “ஆன்ட்டி என்கிட்ட கொடுங்க.. நான் கொஞ்ச நேரம் கிளறுறேன்.”

“வேண்டாம் மதி.. உனக்கு கை வலிக்கும்.”

“பரவாயில்லை ஆன்ட்டி..” என்று அவரிடமிருந்து  வலுக்கட்டாயமாக கரண்டியைப் பிடுங்கி அல்வாவைக் கிளறத் தொடங்கினாள்.

சில நிமிடங்களிலேயே அவளது கைகள் சோர்ந்து போயின. மணிக்கட்டு வலிக்க ஆரம்பித்தது.நெற்றியில் வியர்த்து ஊற்றியது.

“ஆன்ட்டி இன்னும் எவ்வளவு நேரம்?” என்று பொறுமையிழந்து கேட்டாள். மதி டயர்ட் ஆகிவிட்டாள் என்பதை ஆன்ட்டி புரிந்து கொண்டார்.

“இன்னும் கொஞ்ச நேரம்தான்மா,” என்று பொய் சொன்னார்.

“ஆன்ட்டி இன்னும் கொஞ்சம்தானே.. நீங்களே பண்ணிடுங்களேன்,” என்று ஏதோ பெரிய உதவி செய்த பாவனையில் பொறுப்பை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தாள்.

மாலா ஆன்ட்டி செல்லம்போல இருந்த அந்தக் குழந்தையைப் பார்த்து ஆதூரமாக சிரித்தார்.

மதியைத் தன் சொந்த மகளைப் போலவே அவர் நேசித்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லாததால் அந்த ஏரியாவில் உள்ள எல்லா குழந்தைகளிடமும் அன்பைப் பொழிவார். ஆனால் மதி அவருக்கு ரொம்ப ஸ்பெஷல். அவளது ஓயாத  பேச்சும், நொடிக்கொருமுறை மாறும் முகபாவனையும்,அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனநிலை சரியில்லாத போதோ அல்லது சோகமாக இருக்கும்போதோ மதி பக்கத்தில் இருந்தால் போதும்..அவளது விளையாட்டுப்பேச்சிலும், குறும்புசேட்டையிலும்  கவலை மறந்து மனம் லேசாகிவிடும்,

“ஆன்ட்டி.. ஆதி சாருக்கு அல்வா கொடுக்கும்போது, நான் தான் செஞ்சேன்னு சொல்லுவீங்களா?” என்று மின்னும் கண்களுடன் கேட்டாள்.

“கண்டிப்பா சொல்றேன்டி ராஜாத்தி…” என்று அவள் மோவாயைத் தடவி முத்தமிட்டார்.

மதி தனக்குப் பிடித்தப் பாடலை முணுமுணுத்தபடி துள்ளிக் குதித்துக்கொண்டு  ஓடினாள்.

 ஆன்ட்டி மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

“கிறுக்குப்பொண்ணு.. அல்வா பண்றதுன்னா பாலைக் கொஞ்ச நேரம் கலக்குறதுன்னு நினைச்சுட்டா.. எவ்வளவு வெள்ளந்தியா இருக்கா!பெருமாளே, இந்தக் குழந்தை எப்பவும் சந்தோஷமா இருக்கமாதிரி பார்த்துக்கோ..” என்று ஒரு அவசரப் பிரார்த்தனையை பெருமாளிடம் போட்டுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

அது ஒரு சனிக்கிழமை.. காலை 10 மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய மதி, மாலை 5 மணிக்கு எழுந்து  தூக்கக் கலக்கத்தோடு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“லஞ்ச் சாப்பிடுற நேரத்தைப் பாரு… ஆதி தம்பி வர்ற டைம் ஆயிடுச்சு.. இப்படித் தூங்கி வழிஞ்சிட்டு இருக்கா… உன்னையெல்லாம் என்ன பண்றது?” என்று தட்டில் சோறு பரிமாறிக்கொண்டே அம்மா அவளைக் கடிந்து கொண்டார்.

ஆதியின் பெயரைக் கேட்டதுமே மதியின் சோம்பல் காற்றில் பறந்தது. கண்ணை விரித்துப் பார்த்தவள், தட்டில் இருந்ததைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தாள்.

“என்னம்மா.. தினமும் வெண்டைக்காய் பொரியலா?”

“நான் என்னடி பண்றது? வெண்டைக்காய் சாப்பிட்டாதான் மேத்ஸ் நல்லா வரும்னு உங்கப்பா.. உனக்குத் தினமும் வெண்டைக்காய் தரச் சொல்லிருக்காரு. செஞ்சு தரலைன்னா அவரு திட்டுவாரு.. செஞ்சு தந்தா நீ திட்டுற.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே…” என்று அலுத்துக் கொண்டார் .

“தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டா மேத்ஸ் வராது.. வெண்டைக்காய் மேல வெறுப்புதான் வரும்,” என்று புலம்பியபடியே, ஏதோ மருந்தை  விழுங்குவது போலச் சோற்றை விழுங்கினாள் மதி.

ஆதி வீட்டிற்குள் நுழைந்தபோது முதலில் பார்த்தது மதியின் அந்த சுளித்த முகத்தைத்தான். பிறகு அந்த அம்மா-மகள் உரையாடலைக் கேட்டவனின் அமர்த்தலான   முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.

“கியூட்டி..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அதற்குள் ஆதியை பார்த்ததும் மதி, எழுந்துகொள்ள எத்தனிக்க, அவன் அவளைத் தடுத்தான்.

“இல்ல இல்ல.. நீ முதல்ல சாப்பிடு.. நான் மாடியில வெயிட் பண்றேன்.”

“ஹாய் ஆன்ட்டி..” என்று அம்மாவிடம் சிறு தலையசைப்புடன் மாடிக்குச் சென்றான்

மதி மின்னல் வேகத்தில் சோற்றை விழுங்கிவிட்டு, தட்டைச் சமையலறையில் வைத்தாள். அங்கே அம்மா அவனுக்கு காபி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,அவளது மூளையில் ஒரு பல்பு எரிந்தது!

“ஆம்பளைங்களோட மனசைப் பிடிக்கணும்னா அதுக்குக் குறுக்கு வழி அவங்க வயிறுதான்..” – மாலா ஆன்ட்டியின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.

சட்டென்று முடிவெடுத்தவளாக!

 “அம்மா.. நான் காபி போடுறேன்..” என்றாள்.

“என்னடி அதிசயம் இது?”

“அம்மா ப்ளீஸ்.. எங்க பிசிக்ஸ் டீச்சர் மாதிரி ரொம்பக் கேள்வி கேட்காத.. எப்படிப் போடணும்னு சொல்லு, நான் அப்படியே பண்றேன்.”

அம்மா அவளை ஒரு ஆச்சரியமான பார்வை பார்த்துவிட்டு, காபி போடும் முறையைச் சொன்னார். அம்மா சொன்னபடியே காபியைத் தயாரித்து, ஒரு ட்ரேயில் வைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். படிக்கட்டுகளில் ஏறும்போது,

 “காபி நல்லா இருக்குமா, இருக்காதா?” என்கிற சந்தேகம் அவளுக்கு வந்தது.

அதைச் சரிபார்க்க, ஒரு சின்ன சிப் (sip) குடித்துப் பார்த்தாள்.

 “ஆஹா.. பக்கா!”

ஏதோ ஒரு பெரிய சாதனை செய்தது போல அவள் முகம் ஜொலித்தது. ட்ரேயை அவனுக்கு முன்னால் நீட்டினாள். அவன் அந்த கப்பை  எடுப்பதற்கு  முன் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான்.

“இது எச்சி காபிதானே?”என்று கேட்டான் ஒற்றைப் புருவம் உயர்த்தி

“இ.. இல்ல.. சார்..” என்று திணறினாள்.

அவன் தன் கையை உயர்த்தி, அவளது மேலுதட்டில் லேசாக ஒட்டியிருந்த காபிநுரையை  சுட்டுவிரலால் துடைத்து, அவளிடம் காட்டினான்.

அவள் மாட்டிக்கொண்ட அவமானத்தில் தலை கவிழ்ந்தாள்.

 “சாரி சார்… ஃபர்ஸ்ட்டைம்நானேகாபிபோட்டேன், அதான்சர்க்கரைசரியாஇருக்கான்னுகொஞ்சமாடேஸ்ட்பண்ணிப்பார்த்தேன்.. வேணா உங்களுக்குநான்வேறகாபிபோட்டுத்தர்றேன்..”என்றாள் மென்குரலில்.

“பரவாயில்லை, இதுவே இருக்கட்டும்.”

அவன் சிரித்துக் கொண்டே அந்தக் காபியைப் பருக. மதி ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

“ம்ம்.. நல்லா இருக்கு!” என்று அவன் பாராட்ட.

அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல்போனது. மின்னும் கண்களோடும் இனம் புரியா குறுகுறுப்புடனும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!