Skip to content
Post Views: 112
“அப்பனே விநாயகா.. எல்லோரையும் காப்பாத்துப்பா..” என்று சொல்லி காதுகளைப் பிடித்துக் கொண்டு இலகுவான தோப்புக்கரணம் ஒன்றை போட்டு விட்டு கையில் இருந்த தேங்காயை சிதறுக் காயாக உடைத்தார் அந்த மத்திம வயது டாக்சி டிரைவர்.
உடைத்து விட்டு சட்டைப்பையில் கையை விட்டு சில நாணயங்களை எடுத்து அந்த நெடுஞ்சாலையோரத்தில் இருந்த வழி விடு பிள்ளையார் கோவிலில் இருந்த அந்த சிறிய உண்டியலில் போட்டு விட்டு திரும்பி “போலாமா மேடம்?’ என்றார்.
“ம்ம். போலாம்” என்றாள் கவிநயா. அங்கு இருந்த சிறிய கிண்ணத்தில் இருந்த விபூதியை அணிந்த வாறே.
“சாரி மேடம். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இந்த பக்கம் போகும் எல்லா வண்டியும் இங்க நிக்காம போகாது மேடம்” என்றார் அவர் கூடுதலாக.
Advertisement
“பரவாயில்ல போங்க” என்றாள் அவள் போனில் மணியை பார்த்தவாறே.
கவிநயா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. தற்போது ட்ரான்ஸ்பரின் பேரில் திருச்சி தஞ்சைக்கு இடையில் இருக்கும் ஒரு கிராமத்தின் உயர்நிலைப்பள்ளியில் பணியில் சேர இருக்கிறாள்.
ஏற்கனவே ஒரு முறை அந்த கிராமத்திற்கு போய் தங்குவதற்கு வீடு பார்த்து உறுதி பண்ணி விட்டு வந்திருக்கிறாள்.
Advertisement
சமைத்து சாப்பிட கொஞ்சம் பாத்திரங்கள், மிகவும் அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே ஒரு சிறிய லோடு வண்டியில் அனுப்பி விட்டு பின்னே அவள் ஒரு டாக்சியில் போய்க் கொண்டு இருக்கிறாள்.
Advertisement
கொஞ்ச நாட்கள் அவள் அங்கே தனியாக தான் இருக்க வேண்டியிருக்கும். அவள் அம்மா வரும்வரை.
கவிநயாவின் தம்பி கவின் சேலத்தில் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான்.
நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கும் அந்த வீட்டிற்கு சமையல் செய்ய ஒரு பெண்மணி உண்டு.
Advertisement
தற்போது அவளின் கணவன் இறந்து விட்டதால் ஒரு மாத விடுப்பில் இருக்கிறாள்.
எனவே கவினுக்கு சமைத்துப் போடுவதற்கு என்று அம்மா வேணி அவன் வீட்டில் இருக்கிறார்.
ஹோட்டலில் சாப்பிட்டு வயிறு கெட்டுப் போய் மிகுந்த கஷ்டப்பட்டு தேறியிருக்கும் அவனை மீண்டும் ஹோட்டலில் சாப்பிட சொல்ல முடியாமல்,
“நான் இங்க சமாளிச்சுக்கறேன்ம்மா.. கிராமம் தானே அக்கம் பக்கம் ஆட்கள் இருப்பாங்க. தனியா இருக்க எனக்கு பயம் ஒண்ணுமில்லை” என்று அம்மாவையும் தம்பியையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறாள் கவி.
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஹவுஸ் ஓனர் அம்மா ரஞ்சிதாவும் கூட “பயப்படாதீங்கம்மா.. நாங்க பார்த்துக்கிறோம். தைரியமா போயிட்டு வாங்க” என்று தைரியம் சொல்லி அனுப்பி விட்டாள்.
அரைகுறை மனதாக தான் போய் இருக்கிறார் வேணியும்.
“இவ்வளவு கஷ்டப்படணுமா நாம.. சொன்னா கேட்டா தானே..” முணுமுணுத்துக்கொண்டே தான் போனார் அவர்.
ஒரு அம்மாவாக அவர் வருத்தப்படுவதிலும் நியாயம் இருக்க தான் செய்கிறது!
பின்னே இந்த ட்ரான்ஸ்பர் ஒன்றும் கவிக்கு வந்ததில்லை!
அவள் கூட வேலை செய்யும் ராணி டீச்சருக்கு வந்தது.
கவிக்கு திருச்சி திருவெறும்பூரில் இருக்கு ஒரு பள்ளிக்கு தான் மாற்றம் வந்து இருந்தது.
ஆனால் ராணி டீச்சருக்கு பல வருடங்கள் கழித்து இப்போது தான் குழந்தைப் பிறந்து இருக்க, கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு அந்த கிராமத்தில் துணைக்கு யாருமில்லாமல் வேலைக்கு போக முடியாத சூழ்நிலை!
கவி அவளுக்கு உதவி செய்வதற்காக இந்த ஊருக்கு தான் போவதாக சொல்லி, ம்யுச்சுவல் ட்ரான்ஸ்பர் மாற்றிக் கொண்டார்கள், அதற்கு என உள்ள ஆட்களை வைத்து!
அது தான் வேணி அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தம். மகள் இப்படி தெரியாத கிராமத்தில் போய் தனியாக இருக்க வேண்டியதாகி விட்டதே என்று.
கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தை என்று இருந்தால் கூட விட்டு விடலாம். அவள் ஆச்சு அவள் புருஷன் ஆச்சு என்று!
இப்போது அதுவும் முடியவில்லை!
கல்யாணம் பண்ணி வச்சும் மகள் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே!
இவ பெரிய தியாக செம்மல்! அப்படியே எல்லோருக்கும் விட்டுக் கொடுத்துட்டே இருப்பா!
இப்ப.. இந்த ட்ரான்ஸ்பர்ல மட்டுமா.. புருஷன் விசயத்திலும் தான்!
ஆதங்கம் மட்டும் தான் பட முடிந்தது அவரால்!
கவிநயா, அவள் அம்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டே சென்றதில் நேரம் போனதே தெரியவில்லை.
“மேடம்.. இந்த ரைட் கட் தானே?” என்றார் டிரைவர்.
“ஆமாண்ணா.. அங்க .. அந்த ப்ளு கலர் பெயின்ட் அடிச்ச வீடு தெரியுது பாருங்க..
அந்த வீடு தான். அங்க நிறுத்துங்க. அது ஹவுஸ் ஓனர் வீடு.
அங்க போய் சாவி வாங்கிட்டு, இன்னும் ஒரு கிலோ மீட்டர் தாண்டி உள்ளே போகணும் சாமான் இறக்கி வைக்க வேண்டிய வீட்டுக்கு” என்று சொல்லி விட்டு கதவைத் திறந்து கீழே இறங்கினாள்.
வாசலில் போய் காலிங் பெல் அடித்தவுடன் ஒரு நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த ஒரு பெண் எட்டிப் பார்த்து விட்டு,
“ஓ..வாங்க டீச்சர்.. நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு தான் காலையிலேயே வீட்டை எல்லாம் நல்லா துடைச்சி மாப் பண்ண சொல்லிட்டேன் நந்தினி கிட்ட. உள்ள வாங்க” என்று உள்ளே அழைத்து ,
“பாப்பா.. ஏய்..இங்க வாடி.. காலையில நந்தினி சாவி கொண்டு வந்து கொடுத்தா இல்ல.. அந்த வீட்டு சாவி.. அத எடுத்துட்டு வா..” என்று உள்ளே நோக்கி குரல் கொடுக்க,
“இதோ வர்றேன் அத்தை” என்று ஒரு சிறுமியின் குரல் கேட்டது.
சிறிது நேரத்தில், “அத்தை சாவி இந்த பெரிய பெட்டியோட கிடுக்குல விழுந்துடுச்சு. எடுக்க முடியல” என்று சிறுமியின் குரல் கேட்க,
“இருங்க டீச்சர் வர்றேன்” என்று சொல்லி உள்ளே போனாள் ரஞ்சிதா.
“ஒரு வேலை உருப்படியா செய்றியா.. ஒரு சாவி எடுக்க சொன்னா.. அதையும் இப்படி உள்ளே போட்டுட்ட..” என்று அவள் தலையில் ஓங்கி குட்டினாள் ரஞ்சிதா..
அந்த சிறுமியோ அழுதவாறு,
“இல்ல அத்தை அது எனக்கு எட்டல..அதான் இந்த ஸ்கேலை வச்சு தள்ளி விட்டேன். அப்ப அது உள்ளே விழுந்துடுச்சு..” என்றாள்.
“போ.. போய்த் தொலை..” என்று அவளை தள்ளி விட்டு, அந்த பெரிய மரப்பெட்டி கிடுக்கில் தன் கையை விட்டு சாவியை எடுக்க முயன்றாள் ரஞ்சிதா. சுவரில் தேய்த்து கையில் சிராய்ந்தது தான் மிச்சம்!
“ஷ்..ஷ்” என்றவாறு கையை வெளியில் எடுத்து விட்டு, இந்த பெட்டியை என்னால நகர்த்த முடியாது.
ஸ்பேர் கீ செட் ஒண்ணு பீரோல இருக்கு அத கொடுத்துட வேண்டியது தான் என்று தனக்குள் சொல்லியபடி, பீரோவில் இருந்து அதை எடுத்து வந்து கவியிடம் கொடுத்தாள் ரஞ்சிதா.
சாவியை வாங்கிக் கொண்டு, நன்றி சொல்லி விட்டு கவி வெளியேற முற்படுகையில், அந்த பழைய காலத்து வீட்டின் உயரம் குறைவான நிலைப்படியில் நன்கு முட்டிக் கொண்டாள்!
நெற்றியில் நல்ல அடி! சட்டென்று புடைத்துக் கொண்டு விட்டது!
“அச்சோ..” என்றவாறு நெற்றியைப் பிடித்து தேய்த்துக் கொண்டாள்.
“பார்த்து குனிஞ்சு வாங்க டீச்சர். நல்லா இடிச்சுக்கிட்டீங்களா.. நல்லெண்ணெய் கொண்டு வரட்டா.. நல்லா தேய்ச்சு விடுங்க” என்றாள் ரஞ்சிதா.
“இல்ல.. வேணாம். பரவாயில்லை. உள்ளே வரும் போது பார்த்து கவனமா தான் வந்தேன். வெளியே வரும்போது மறந்தாப்ல வந்திட்டேன். சரிங்கம்மா.. நான் வர்றேன்”.
“சரி..நல்லபடியா போய் பால் காய்ச்சுங்க. சாமி கும்பிட தேவையானது எல்லாம் வாங்கிட்டீங்களா?”
“ம்ம். வாங்கி வைக்க சொல்லி இருக்கேன். சத்துணவு ஆயா அன்னலட்சுமி அக்கா கிட்ட”
“அவ கிட்டயா சொன்னீங்க.. சரி.. பார்த்துக்கங்க. ஆனா ரொம்ப வச்சுக்காதீங்க. கொஞ்சம் பொறாமை பிடிச்ச பொம்பள அது.
உங்களுக்கு எது வேணுமின்னாலும் எனக்கு ஒரு போன் பண்ணுங்க. கூச்சப்படாதீங்க.
நேர்ல வர முடியலைன்னாலும் ஒரு போன் பண்ணுங்க. இட்லி மாவு, காய்கறி இப்படி எதுன்னாலும்..”
கவி சிநேகமாக சிரித்து விட்டு,
“அவசியப்பட்டா கண்டிப்பா கேக்குறேன்” என்று சொல்லி காரில் ஏறினாள்.
******
நாலாயிரம் சதுர அடியில் இருந்தது அந்த வீடு!
வீடு என்றால் வீடு அவ்வளவு பெரியதில்லை.
முன்னேயும் பின்னேயும் நிறைய இடம் விட்டு இரண்டாயிரம் சதுர அடியில் மிகவும் அழகாக இருந்தது அந்த புத்தம் புதிய அந்த வீடு!
வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் இருக்க, முன்னே அழகான நேரித்தியான மிகவும் ரசனையான முறையில் பரமாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் பூந்தோட்டம்!
அங்கு இருக்கும் நிறைய பூக்களின் பெயர்கள் கூட அந்த ஊர் மக்களுக்கு தெரியாது!
அத்தனையும் உயர்ரக அலங்காரப் பூக்கள்!
Exotic Flowers!
கூடவே நம் ஊர் மல்லிகை, பன்னீர் ரோஸ், டேலியா முதலியவைகளும் உண்டு!
பின் புறம் மாதுளை, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா முதலிய பழ மரங்கள் பக்க வாட்டிலும், பின்புறம் காய்கறி தோட்டமும் இருந்தது.
ஆனால் துளசி மாடத்தில் இருந்த துளசி மட்டும் வாடி வதங்கி காய்ந்து போய் இருந்தது!
எல்லாவற்றுக்கும் திருஷ்டி வைத்தார் போல அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு இற்றுப் போன பழைய ட்ராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது!
அதன் கீழே பழைய சிமென்ட் மூட்டைகளில் மணல், எம் சான்ட் மற்றும் பொடி ஜல்லிக் கற்கள்!
வீட்டின் உள்ளே போனாள் கவி.
அவள் கார் வந்து நிற்பதைக் கண்டவுடன் எங்கிருந்தோ ஓடி வந்தாள் அன்னமும். அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் வயர் கூடை.
“வாங்க டீச்சர், நீங்க கேட்ட எல்லா பொருளும் வாங்கிட்டேன். இந்தாங்க. இது மிச்சம் காசு”.
“நீங்களும் உள்ள வாங்க அக்கா.”
“நானா.. அது.. வந்து.. சரி வர்றேன்.” என்று சொல்லி கையில் கட்டி இருக்கும் சிவப்பு கயிறைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
“சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க டீச்சர். உங்களுக்கு வேற வீடே கிடைக்கலியா?”
“ஏன்.. இந்த வீட்டுக்கு என்ன?”
“இந்த வீட்டுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.. ஆனா.. நீங்க ஒண்ணு யோசிச்சீங்களா? இவ்வளவு சூப்பரா இருக்கிற இந்த வீட்டில் இருக்காம, அந்த ரஞ்சிதா ஏன் அந்த பழைய வீட்டில் இருக்கா?”
“ம்ம். அதையும் தான் சொல்லிட்டாங்களே.. இந்த வீட்டில் கொஞ்சம் பிரச்சினை ஆச்சாம். அத மறக்க தான் மறுபடியும் அந்த பழைய வீட்டுக்கே போய்ட்டாங்களாம்!” பேசிக் கொண்டே பூஜைக்கு தயார் செய்தாள் கவி.
ஒரு பிள்ளையார் முருகன் லட்சுமி சரஸ்வதி பெருமாள் இருக்கும் ஒரு சிறிய படம், ஒரு சின்ன குத்து விளக்கு இவற்றை எடுத்து வைத்து விட்டு, கூடவே கொண்டு வந்த இண்டக்சன் ஸ்டவில் பாலைக் காய வைத்தாள்.
“என்ன பிரச்சினைன்னு சொன்னாளா?”
“ம்ம். அது வந்து… இது அவங்க தம்பியோட வீடு. அவங்க தம்பியோட ஒய்ஃப் யார் கூடவோ ஓடிப் போய்ட்டாங்கன்னு” அவள் சொல்லிக் கொண்டே ஸ்டவின் ப்ளக்கை சொருகி ஆன் செய்த போது லேசாக ஷாக் அடித்தது!
“அய்யோ..” என்று சொல்லி கையை எடுத்துக் கொண்டாள் கவி!
“எலக்ட்ட்ரிசியனை வர சொல்லி எல்லா ப்ளக் பாயிண்ட்டையும் செக் பண்ண சொல்லணும்” என்று சொல்லியவள்,
“இப்ப எப்படி பால் காய்ச்சுறது?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வாசலில் ஒருவன் குரல் கொடுத்தான்.
“டீச்சர்… டீச்சர்.. ரஞ்சிதா அக்கா இந்த காஸ் சிலிண்டரை இங்க போட்டு விட சொல்லிச்சு”.
“அப்பா.. ரொம்ப தாங்க்ஸ். உங்கள காணோம்னு தான் நான் கரண்ட் அடுப்பைப் பத்த வைக்க போனேன்!”
என்று சொல்லி காஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.
“அப்படியா உங்க கிட்டயும் சொன்னாங்க? எல்லோர் கிட்டயும் அப்படி தான் சொல்லிட்டு இருக்கா அந்த ரஞ்சிதா.
ஆனா எனக்கு என்னமோ அந்த பொண்ணு.. அதான் மஞ்சுவை ரஞ்சிதாவும் அவ புருசனும் தான் என்னமோ பண்ணிட்டங்கன்னு தோணுது.
அதுவும் இல்லாம இந்த வீட்டில் ஏதோ நடமாட்டம் வேற இருக்கு! அதான் அவங்க இந்த வீட்டை காலி பண்ணி போய்ட்டாங்க.
இப்ப நீங்க வந்து இருக்கீங்க. அதுவும் தனியா இருக்க போறீங்க வேற!
பார்த்து ஜாக்கிரதையா இருங்க டீச்சர். முடிஞ்சா வேற வீடு மாத்திட்டு போய்டுங்க.
நான் வேணா வேற வீடு பார்த்து தர்றேன். பாதி மாச வாடகையை கமிசனா கொடுங்க போதும்!” என்றாள் அன்னம்.
“ஆரம்பிச்சுட்டியா உன்னோட வேலையை” என்றவாறு உள்ளே வந்தான். காஸ் சிலிண்டர் போட வந்தவன்.
“போ.. முதல்ல இங்கேர்ந்து.. புதுசா வந்தவங்கள போய் இப்படி பயமுறுத்திக் கிட்டு?”
“நான் என்னடா இல்லாதத சொன்னேன். பாரு.. இப்ப காய்ச்சின பால் கூட முறிஞ்சு போய்டுச்சு. சாமிக்க்கு உடைச்ச தேங்காய் அழுகிப் போய்டுச்சு!” என்று அவற்றைக் காட்டினாள் அன்னம்.
கவியும் அப்போது தான் பார்க்க, அடுப்பில் இருந்த பால் அப்படியே திரிந்து போய் இருந்தது. கையில் உடைத்து வைத்திருந்த தேங்காய் கூட அழுகல்!
“அய்யோ என்ன இது?” என்று உள்ளுக்குள் சின்ன க்லேசம் தோன்றவே செய்தது!
“ம்ம். அதுவும் உன்னோட வேலை தான்! அந்த லட்சணத்தில் தேங்காய் வாங்கிட்டு வந்திருக்க.
பாலை காலையில் இருந்து பிரிட்ஜில் வைக்காமவெளியேவே வச்சுருந்தா முறியாம என்ன பண்ணும் இந்நேரத்துக்கு?”
“நீ இது மாதிரி ஏதாச்சும் பண்ணி வைப்பன்னு தான் ரஞ்சிதா அக்கா மறுபடியும் போய் பார்த்துட்டு வர சொல்லுச்சு. கூடவே வேற தேங்காய் பழம், அப்புறம் பால் பிரிட்ஜில் வச்ச பால் தூக்கையும் கொடுத்து விட்டுச்சு. இந்தாங்க டீச்சர். அன்னம் பேச்சை எல்லாம் கேக்காதீங்க.
இது எங்க ஸ்கூல் டீச்சர் தான். நான் தான் இந்த வீட்டை அவங்களுக்கு காட்டி உங்க கிட்ட அனுப்பி வச்சேன்.
அதனால எனக்கு வீட்டு ப்ரோக்கர் கமிசன் வேணுமின்னு ரஞ்சிதா அக்கா கிட்ட கேட்டுச்சு.
அது தர முடியாதுன்னு சொன்ன கோபத்துல உங்க கிட்ட ஏதோ ஏதோ சொல்லி பயமுறுத்துது! நீங்க அத எல்லாம் காதில் வாங்கிக்காதீங்க!
இன்னொரு எம்ப்டி சிலிண்டர் இங்க இருக்காம். அத எடுத்தார சொல்லுச்சு அக்கா”. என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அவன்.
அன்னம் கோபமாக கிளம்ப,
“அக்கா.. ப்ளீஸ். இருங்க.. சாமி கும்பிட்டு பால் குடிச்சுட்டு போங்க” என்று கவி எவ்வளவோ சொல்லியும் கோபித்துக் கொண்டு போய் விட்டாள் அன்னம்.
வேறு வழியின்றி, தான் மட்டுமே தனியாக பாலைக் காய்ச்சி சாமி படம் முன் வைத்து வணங்கி விட்டு, ஒரு டம்ளரில் ஆற்றி எடுத்துக் கொண்டு அந்த வீட்டின் ஹாலுக்கு வந்தாள் கவி.
அங்கு இருந்த அந்த அலங்கார மர ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு பாலைக் குடித்தாள்.
ஊஞ்சலில் மெதுவாக ஆடியபடி, ஒரு கையில் பால் டம்ளரோடு, ஒரு கையில் போனை எடுத்து அவள் அம்மாவை வீடியோ காலில் அழைத்தாள்.
திரையில் தோன்றிய அவள் அம்மா முதலில் கண்டது கவியின் நெற்றிப் புடைப்பை தான்!
“ஏய்.. என்னடி இது..?” அவர் பதறிய பின் தான் அவளுக்கு தான் இடித்துக் கொண்டதே நினைவு வந்தது!
“அது ஒண்ணுமில்லம்மா..” என்று நடந்ததை சொல்லி விட்டு, அன்னம் சொன்னதையும் சொல்லி சிரித்தாள்.
“அப்போ யார் சொல்றது உண்மை?”
“ரஞ்சிதா அம்மா பொய் சொல்ற மாதிரி தெரியல எனக்கு!” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த ஊஞ்சலின் மேலே இருந்த ஒரு கொக்கி சுவற்றில் இருந்து முறிந்து கொஞ்சம் கொஞ்சமாக கழன்று கொண்டிருந்தது!
“அன்னம், அவங்க கமிசன் தராத கோபத்தில் கண்டதையும் சொல்லுது! மத்தபடி அவங்கள பார்த்தா கெட்டவங்க மாதிரி தெரியல!
இந்த வீட்டில் எல்லா பொருளும் இருக்கு. நீங்க ஒண்ணும் கொண்டு வர வேண்டாம்.
இங்க இருக்கிறதை யூஸ் பண்ணிக்கோங்க. மாடியில் இருக்குற ரூமில் எங்க பொருளை எல்லாம் போட்டு வச்சுருக்கோம்.
கீழேயே உங்களுக்கு எல்லா வசதியும் இருக்கு. மாடிக்கு ரொம்ப தேவைன்னா மட்டும் போங்க அப்படின்னு சொன்னாங்க.
கவின் கூட பரவாயில்ல அக்கா.. உனக்கு அந்த கிராமத்தில் கூட சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட் மாதிரி வீடு கிடைச்சுருக்குன்னு கிண்டல் பண்ணினான்.
பார்த்து பார்த்து ரசிச்சு ரசிச்சு வீட்டைக் கட்டிட்டு வாழக் கொடுத்து வைக்கல பாரு? என்றாள் கவி ஊஞ்சல் ஆடியபடி, கழன்று கொண்டு இருப்பது தெரியாமல்!
“ஆமா.. இப்படி ஒரு வீட்டையும் கட்டின புருசனையும் சின்ன பொம்பள பிள்ளையை விட்டுட்டு எப்படி தான் ஓடிப் போக மனசு வந்துச்சோ அந்த ராட்சசிக்கு” என்றார் வேணி கோபமாக!
இப்போது ஊஞ்சலின் இன்னொரு கொக்கியும் கழன்று கொண்டு எந்நேரமும் கவி கீழே விழப் போகும் நிலை!
“ச்சே..ச்சே. அப்படி எல்லாம் டக்குனு ஒரு பொம்பளய தப்பா பேசக் கூடாதும்மா.
உண்மையில என்ன நடந்துச்சோ? கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேப்பதும் பொய். தீர விசாரிக்காம, ஒரு குடும்ப பொண்ணை, அதுவும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவ தப்பா பேசக் கூடாதும்மா..” கவி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, கழன்று தொங்கிய அந்த கொக்கி மீண்டும் சரியாகியது!
“ஏண்டி.. நீ தானே சொன்ன அந்த ரஞ்சிதா நல்லவன்னு..”
“சொன்னேன் தான்மா.. அதுக்குன்னு அவங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே எடுத்துக்க முடியாதுல்ல..”
“அப்படி சொல்லுங்க டீச்சர்..” வாசலில் குரல் கேட்டது!
அது..
நந்தினி..
மஞ்சள் லில்லி மீண்டும் மலரும்..
error: Content is protected !!