மறப்பதில்லை மதிமுகம்-14
அத்தியாயம்-14
கடந்த காலம் – பெங்களூரில்
ஆதி டிரிக்னாமெட்ரி (trigonometry) கணக்கு ஒன்றை மதிக்கு விளக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவள் கவனம் முழுமையாக அதில் இல்லை. அடிக்கடி அவள் பார்வை திருட்டுத்தனமாகப் தன் புத்தகப் பையின் மீது பதிந்து மீண்டது.
Advertisement
அவன் சொல்வதற்கெல்லாம் சும்மா தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தாள். ஆதித்யா அவளது கவனச்சிதறலைக் கவனித்தாலும் முதலில் அதைப் பொருட்படுத்தாமல் விட முயன்றான், ஆனால் நேரம் செல்லச் செல்ல அவனுக்குக் கோபம் வந்தது. ஒரு கட்டத்தில் அவளைக் கூர்ந்து நோக்கியபடி அமைதியானான்.
அவன் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டான் என்பதை உணரவே மதிக்கு சில நொடிகள் பிடித்தது. மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவளை அவனது கோபமான பார்வைதான் வரவேற்றது. அவள் பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.
“இப்ப நான் என்ன சொன்னேன்னு சொல்லு…” என்று முகத்தை நேராக வைத்துக்கொண்டு கேட்டான்.
Advertisement
அவள் பயத்தில் தன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
Advertisement
“உனக்கு என்னதான் ஆச்சு? உன் மனசு எங்க அலைபாய்ஞ்சிட்டு இருக்கு..?”
அவள் எவ்வளவு தடுக்க நினைத்தும், தன் கட்டுப்பாட்டை மீறி அவள் கண்கள் மீண்டும் அவள் ஸ்கூல் பேக்கின் மீது விழுந்தது. அவளது பார்வையைத் தொடர்ந்தவன், அந்தப் பையில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்தான்.
“உன் பையைக் காட்டு..” என்று கட்டளையிடும் தொனியில் கேட்டான்.
Advertisement
ஏதோ புதையலைப் பாதுகாப்பதைப் போல சட்டென்று தன் பையை எடுத்து இறுக்கப் பிடித்துக்கொண்டாள். அவளது இந்த எதிர்ப்பு அவனுக்கு இன்னும் அதிக குழப்பத்தைத் தர என்ன ஆனாலும் பையைச் சோதித்தே தீருவது என்று அவன் முடிவு செய்துவிட்டான்.
அவள் பிடியிலிருந்து பையைப் பிடுங்கி, அதைத் தலைகீழாகக் கவிழ்த்துக் கொட்டினான். சில புத்தகங்களோடு ஒரு ரோஜாப் பூங்கொத்தும் கீழே விழுந்தது.
ஆதி அந்தப் பூங்கொத்தை எடுத்துத் திருப்பிப் பார்த்தான். அதில் ஒரு சிறிய அட்டை (tag) இருந்தது. மதி பயத்தில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள்.
“I love u Thanmadhi…” என்று அந்த அட்டையில் எழுதியிருந்தது. அவன் சட்டென்று அவளைக் குத்திக்கிழிப்பது போல் பார்த்தான்.
“என்ன இது…?” என்று புருவத்தைச் சுருக்கி அடிக்குரலில் வினவினான்.
“அது வந்து…” என்று திணறினாள். அவளது நெற்றியில் வேர்த்தது.
“யார் இத கொடுத்தா?” என்று பூக்களைக் காட்டி அவன் கேட்ட குரல் மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது.
“கிளாஸ்ல கூடப் படிக்கிற பையன்…” என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
“அவனுக்குப் பேர் இல்லையா?”
“நிதீஷ்..”
“இதுல எழுதியிருக்கிறதுக்கு அர்த்தம் தெரியும்தானே?”
அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
“அப்போ உனக்கும் ஓகே தான்.. அதான் அவன் பூ கொடுத்த உடனே ஈ-ன்னு இளிச்சிட்டு வாங்கிட்ட?”
நேரம் செல்லச் செல்ல அவன் கோபம் உச்சத்துக்குச் சென்றது.
மதி கள்ளங்கபடமற்ற ஒரு தேவதை என்று அவன் நினைத்திருந்தான், எந்த கலங்கமும் இல்லாத அவளது அப்பாவித்தனத்தை அவன் ரசித்தான். ஆனால் இப்போது அவள் மற்ற சாதாரணப் பெண்களைப் போலக் கனவுலகில் மிதப்பவளாக மாறிவிட்டாளோ என்ற எண்ணம் அவனுக்கு மிகுந்த ஏமற்றத்தைத் தந்தது.
“இல்லை.. எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை..” என்று முகம் சுளித்துக் கூறினாள்.
“பிடிக்காமத்தான் இதை வாங்கிட்டு வந்து ஒளிச்சு வச்சிருக்கியா?” என்று நம்பிக்கையற்ற குரலில் கேட்டான்.
“உங்களுக்குத் தான் தெரியுமே.. இந்த உலகத்துல என்னால வேணாம்னு சொல்ல முடியாத ஒரே விஷயம் ரோஜாப்பூ தான். இவ்வளவு அழகான பூக்களைக் கொடுக்கும் போது எப்படி வேண்டாம்னு சொல்றது? பாவம்ல இந்த ரோசஸ், நான் வேணாம்னு சொன்னா அதுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்? அதான் வாங்கினேன்.. ஆனா அவன்கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன்.. எனக்கு உன்னைப் பிடிக்கல, இந்த ரோஸை மட்டும் தான் பிடிச்சிருக்குன்னு…”
அவள் சொன்ன பதிலில் வாயடைத்துப் போனான் ஆதி,. தலையைச் சுவரில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.
“கடவுளே.. இந்த தத்திய வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்? அப்பாவித்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. இது முட்டாள்தனத்துக்கும் மேல!”
“லூஸாடி நீ.. யார் என்ன கொடுத்தாலும் வாங்கிப்பியா?” என்று கத்தினான்.
ஆத்திரத்தில் அவளை டி போட்டு பேசியதையும் அவன் கவனிக்கவில்லை.
அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“அவன் பூ கொடுத்தா அதுக்கு நான் என்ன பண்றது? சாக்லேட் கூட கொடுத்தான்.. அதுவும் ஃபாரின் சாக்லேட்.. அதை எவ்வளவு கட் அண்ட் ரைட்டா ரிஜெக்ட் பண்ணினேன் தெரியுமா? சும்மா சும்மா என்னையே திட்டாதீங்க..” என்று சிணுங்கினாள்.
“ஓ.. பண்றதையும் பண்ணிட்டு உனக்குக் கோபம் வேற வருதா? இதெல்லாம் தெரிஞ்சு பண்றியா இல்ல தெரியாமப் பண்றியா? பொண்ணுங்க டிக்ஷனரில வேண்டாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். அந்தப் பையன் நீ அவனோட ப்ரொபோசலை ஏத்துக்கிட்டதா தான் நினைப்பான்..” என்று எரிச்சலோடு விளக்கினான்.
“நான் அவன்கிட்ட இந்த பூவுக்கு பணம் தரேன்னு கூட சொல்லிட்டேனே.. அப்புறம் அவன் எப்படித் தப்பா நினைப்பான்?”
“மண்ணாங்கட்டி… எவனாவது வந்து ப்ரொபோஸ் பண்ணா.. மூஞ்சில அடிச்ச மாதிரி ‘போடா’ன்னு சொல்லத் தெரியாது? இப்படி அவனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துட்டு வந்திருக்க.. எதையுமே உருப்படியா செய்ய மாட்டியா நீ? நாளைக்கு அவன் உன் வீட்டு வாசல்ல வந்து நிக்கப் போறான் பாரு..”
“ஐயோ… அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுடுவாரு… இப்போ என்ன பண்றது? ஆதி சார்.. ப்ளீஸ்.. எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. இந்த பிராப்ளம்ல இருந்து என்னை வெளிய கொண்டு வாங்க..”
“நான் சொல்ற மாதிரி செய்வியா?”
“கண்டிப்பா செய்றேன்..”
“இந்தப் பூக்களைத் தூக்கி குப்பைல போடு. நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் அந்தப் பையன்கிட்ட.. உன் மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லை, இனிமேல் என்னைப் ஃபாலோ பண்ணா பிரின்சிபல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்னு சொல்லு.”
அவள் அந்தப் பூக்களை வருத்தத்துடன் பார்த்தாள். அவளது தயக்கத்தைப் பார்த்து கோபத்தில் பெருமூச்சு விட்டவன்
“உனக்கு ஒரு கூடை ரோஜா நான் வாங்கித் தரேன்.. போதுமா? முதல்ல இதைத் தூக்கிப் போடு..” என்றான்.
அவளது பையிலிருந்து அந்தப் பூக்களைத் தூக்கி எறிய அவன் ஏன் இவ்வளவு துடிக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.
“சரி.. நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்… நாளைக்கு நீங்களும் என் கூட ஸ்கூலுக்கு வருவீங்க தானே?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
அந்தப் பையனைப் போட்டு மிதிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தாலும், அவளை ஒரு தைரியமான பெண்ணாக மாற்ற வேண்டியது தன் கடமை என்று ஆதித்யா உணர்ந்திருந்தான். அவளை வாழ்நாள் முழுவதும் யாராவது தாங்கிக்கொண்டே இருக்க முடியாது.
“இங்க பாரு மதி.. எதுக்குன்னாலும் என் பின்னாடி ஒளிஞ்சுக்கப் பார்க்காதே. நான் எப்பவும் உன் கூடவே இருக்க முடியாது. இதுதான் உன்னோட வாழ்க்கையோட ஆரம்பம். இன்னும் நீ இந்த மாதிரி எத்தனையோ விஷயத்தை ஃபேஸ் பண்ண வேண்டி வரும். ஒவ்வொரு முறையும் நான் உன் பின்னாடியே நிக்க முடியாது. சோ, நீயே இதைக் கையாளக் கத்துக்கணும். நேராக நிமிர்ந்து தைரியமாச் சமாளி. உன்னைப் பார்த்தாலே வாலட்டணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒதுங்கிப் போகத் தோணணும்.. உன் தோரணை அப்படி இருக்கணும்.”
“நிமிர்ந்த நன்னடையும்.. நேர்கொண்ட பார்வையும்.. நிலத்தினில் யார்க்கும் அஞ்சாத துணிவும் -ன்னு பாரதியோட புதுமைப் பெண்ணா இருக்கணும் புரியுதா?”
அவன் வார்த்தைகளைக் கேட்டதும் அவளது முதுகுத் தண்டு தானாக நிமிர்ந்தது. ஒரு புது தன்னம்பிக்கை அவளுள் ஊடுருவியது.
“எனக்காக இதைச் செய்வியா?” என்று அவன் கேட்டான்.
அவன் கேட்டால் அவளால் மறுக்க முடியுமா?
“கண்டிப்பா சார்..” என்று உறுதியுடன் பதிலளித்தாள்.
நிகழ்காலம்
நெக்செஸ் சிஸ்டம்ஸ்:
மதி ஒரு முன்பின் தெரியாத ஆணின் கைகளில் இருந்தாள்.. அந்த நினைப்பே அவள் உடலை ஒரு நிமிடம் அதிர வைத்தது. அனிச்சையாக அவள் உடல் அந்தத் தீண்டலை வெறுத்து ஒதுக்க, அடுத்த கணமே, அவள் தன் கைகளையும் கால்களையும் ஆக்ரோஷமாக உதறி திமிறினாள்.
“டேய் யாருடா நீ…பொறுக்கி..என்னை விடுடா…” அவனது வலுவான பிடியிலிருந்து தப்பிக்க அவள் போராடினாள்.
அவளது அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டுப் போனான். இப்படி ஒரு திடீர் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை போல. நெருப்பைத் தொட்டது போல் சட்டென்று அவளைத் தரையில் போட்டான்.
“ஆஆஆ…” என்று கத்தியபடி அவள் கடினமான கான்கிரீட் தரையில் விழுந்தாள்.
விழுந்த வேகத்தில் பலமாக அடிபட்ட இடத்தைத் தடவிக்கொண்டே, வலியில் முனகியபடி மெதுவாக எழுந்தாள்.
அந்த புதியவனோ வாயைப் பிளந்து கொண்டு நம்பமுடியாத ஆச்சரியத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் முகம் எரிச்சலில் சுருங்கியது.
“எவ்ளோ தைரியம் இருந்தா என்னைத் தொட்டுத் தூக்குவ..? பொறுக்கி..”
அவனது கண்கள் ஆச்சரியத்திலும், அதே சமயம் உண்மையை உணர்ந்த வேகத்திலும் விரிந்தன.
“நீ மயங்கி விழலையா? அப்புறம் எதுக்கு உன் ஃபிரண்ட் உதவி கேட்டு கத்தினா?”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம். முதல்ல உன்னை யாரு வந்து மூக்கை நுழைக்க சொன்னது?”
“ஏன் சொல்லமாட்ட.. என்னோட முக்கியமான வேலைய எல்லாம் விட்டுட்டு அய்யோ பாவம்ன்னு உனக்கு ஹெல்ப் பண்ண வந்தா, நீ என்கிட்டயே ஆட்டிடியூட் காட்டுற. நல்லதுக்கே காலமில்லைன்னு என் பாட்டி சொன்னது சரிதான் போல..”
அவள் கண்களை உருட்டி, அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினாள்.
“அப்போ எதுக்கு இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? போயி உன் அந்த ‘முக்கியமான’ வேலையையேப் பாரு… இங்க யாருக்கும் உன் உதவி தேவையில்லை.”
தன்னுடைய திட்டம் ‘சொதப்பலாகிவிட்ட’ ஆத்திரத்தில் இருந்தாள் அவள்.
“ஹலோ… இப்படி சொல்லி நீ பாட்டுக்கு தப்பிச்சி போயிட முடியாது… எனக்கு விளக்கம் கொடுத்தாகனும். எதுக்காக மயக்கம் போட்ட மாதிரி நடிச்ச?”
“விளக்கமாவது மண்ணாங்கட்டியாவது… நடுவுல வந்து புகுந்து நான் பிளான் பண்ணி வச்சிருந்த எல்லாத்தையும் கெடுத்துட்டு விளக்கம் வேணுமாம் விளக்கம்..”
ஆத்திரத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிவிட்டவள்.
வார்த்தைகளைக் கொட்டிய பிறகு, தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.. ‘அண்டர்லையிங்’ அர்த்தத்தை அவன் புரிந்துகொள்ளக் கூடாதே என்று வேண்டிக்கொண்டாள்.
ஆனால் அவளுடைய துரதிர்ஷ்டம், அவன் அதைத் தெளிவாகக் கேட்டுவிட்டான், அதன் உட்பொருளையும் புரிந்துகொண்டான்.
அவன் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தி, ஒரு நீண்ட விசிலடித்தான்.
“ஓ… அப்போ இது ஒரு டிராப்பா(trap)? நீ உடம்பு சரியில்லாத மாதிரி நடிப்ப, ஒரு குறிப்பிட்ட ஆள் வந்து உன்னைத் தூக்கணும்… ஆனா இது தெரியாம நான் குறுக்கால வந்துட்டேன், அதனால உன் பிளானை சொதப்பிட்டேன், அப்படித்தானே?” என்று சொல்லி சத்தமாகச் வெடிச் சிரிப்பு சிரித்தான்.
அவன் அவளுடைய திட்டத்தை அவளிடமே விவரித்ததில் மதியின் முகம் சங்கடத்தில் சிவந்தது. அதிலும் அவன் சிரிப்பைப் பார்த்ததும், அவன் முகத்தில் ஓங்கி ஒன்று வைத்து அந்தச் சிரிப்பை அப்படியே உறைய வைக்க வேண்டும்போல் ஒரு உந்துதல் எழுந்தது.
“என்ன இது… ஹைதர் அலி காலத்து ஐடியாவா இருக்கு? பாகவதர் காலத்துலயே இது எக்ஸ்பயரி ஆகிடுச்சே..!”
“ஹல்லோ மிஸ்டர்… என் பிளானை விமர்சிக்க நீ யாரு? நீ மட்டும் இல்லைன்னா அது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகியிருக்கும்.”
“ஹலோ… நான் மட்டும் இல்லைன்னா, நீ இப்போ நெக்சஸ் கம்பெனிக்குள்ளேயே இருந்திருக்க முடியாது. இங்க நின்னு என்கிட்ட கத்தறது எல்லாம் ரொம்ப தூரம்.”
அதே வேகத்தில் அவனும் பதிலடி கொடுத்தான்.
“என்ன உளறுர … நீ என்ன கடவுளா?” என்று ஏளனமாக புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“உன்னை இங்க அனுமதிக்க நான் கடவுளா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான்தான் இங்க ரெக்ரூட்மெண்ட் இன்சார்ஜ் (Recruitment In-charge). உன்னோட ரெஸ்யுமேவை (Resume) வேலைக்காகப் ப்ராசஸ் பண்ணதே நான்தான். உனக்கு இவ்வளவு காலாவதியான மூளைன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா உன்னை வேலைக்கு எடுத்திருக்க மாட்டேன்.”
என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாள் மதி. அவனது தோளில் தொங்கிய அடையாள அட்டையை (ID Card) எட்டிப் பார்த்தாள்.
‘விக்னேஸ்வரன்… ஹெச்.ஆர் எக்ஸிகியூட்டிவ்’ (HR Executive) – அவள் மனதில் குறித்துக்கொண்டாள். ஓ, இவன்தான் எனக்கு ஃபோன் பண்ணி இன்டர்வியூக்கு வரச் சொன்னவனா!
பிறகு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். முதல் முறையாக அவனை நன்றாக கவனித்தாள்.
அவளுக்கு ஒத்துக்கொள்ள இஷ்டம் இல்லையென்றாலும், அவன் பார்க்க அழகாகத்தான் இருந்தான். நல்ல உயரம் ஒல்லியான உடல்வாகு, அகன்ற தோள்கள்… தோற்றத்தில் குறை சொல்ல எதுவுமில்லை. ஆனால் அவன் உதட்டில் இருந்த அந்த நக்கலான சிரிப்பு மட்டும், அவளைக் கடுப்பேற்றியது.
அவள் அவனை வெறுப்பாகப் பார்த்தாள். ஆனால் அவனோ பதிலுக்குப் புன்னகைத்தான்.
“நம்ம அறிமுகம் கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும், இதச் சொல்லித்தான் ஆகணும். ஹாய், நான் விக்னேஷ், ஃப்ரண்ட்ஸ் விக்கின்னு கூப்பிடுவாங்க. நீ தண்மதி, புதுசா சேர்ந்திருக்கிற புரோகிராமர் கரெக்ட்டா..?
ஸாரி, உன் இன்டர்வியூ நேரத்துல நான் ஒரு டிரைனிங் புரோகிராம்ல இருந்தேன். அதான் முன்னாடியே மீட் பண்ண முடியல..” அவன் ஒரு நட்புணர்வோடு அவளைப் பார்த்து சிரிக்க,
“ஹலோ…” என்று ஆர்வமில்லாமல் சொன்னாள் மதி.
“மதி.. தெரிஞ்சோ தெரியாமலோ உன் பிளானை நான் கெடுத்துட்டேன். அதுக்கு பிராயசித்தம் பண்ணனும்ன்னு நெனைக்கறேன்?” அவன் வெகு சகஜமாக அவளை மதி என்று அழைத்துப்பேசினான்.
அவள் அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
“எப்படி?”
“வொர்க் அவுட் ஆகுற மாதிரி உனக்கு சில புது ஐடியாக்களைச் சொல்லித்தரேன்,” என்றான் ஒரு குறும்பாக பார்த்து,
அவள் கோபத்தில் அவனை முறைத்தாள்.
“சத்தியமா மதி… நான் கிண்டல் பண்ணல,” இந்த முறை அவனது குரலில் உண்மை தெரிந்தது.
“ஆனா அந்த ஆள் யாருன்னு நான் சொல்ல மாட்டேன்,” என்று அவள் நிபந்தனை விதித்தாள்.
“நானும் கேட்கலையே… அதைப்பத்தி எனக்குக் கவலையும் இல்லை,” அவன் பல்வரிசை தெரிய அழகாக சிரித்தான்.
“அதுக்கு முன்னாடி ஒரு காஃபி சாப்பிடலாமா? உன்னைத் தூக்கிட்டு இவ்வளவு தூரம் லொங்கு லொங்குன்னு ஓடி வந்ததுல என் தொண்டையே காய்ஞ்சு போச்சு,” என்று அவன் பாவனையுடன்கூற, அவள் முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்பியது.
அவள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அந்த மனிதனிடம் ஏதோ ஒன்று இருந்தது, அவள் எவ்வளவு முயன்றாலும் அவனை வெறுக்கத் தோன்றவில்லை. அவன் நம்பகமானவன் என்று அவள் உள்ளுணர்வு சொன்னது.
“ப்ளீஸ் மதி… ப்ளீஸ்… ப்ளீஸ்…” அவன் விளையாட்டாக கெஞ்சினான்.
“சரி…” என்று அவள் இதழ்கள் தானாகச் சொன்னதைக் கேட்டு அவளே வியந்து போனாள்.
தொடரும்..

