Skip to content
Post Views: 40
ரிதம் 15
அங்கிருந்து அவர்கள் இருவரும் கிளம்பிச் செல்லும்போது, “அவருக்கு எப்படி எல்லாமே தெரிஞ்சுது? நீ சொன்னியா?” என்று கேட்டாள் நத்தாஷா.
Advertisement
“அவர் சொல்ற விஷயம் எல்லாம் எனக்கே தெரியாதேடி! உன் மாமியார் வீட்டுல எவ்வளவு சுயநலமா இருக்காங்க பாரு? அவங்ககிட்ட இருக்குற அந்த ஓட்டை வீட்டை நீ பங்குக்குக் கேட்கப்போறேன்னு, முழுப் பூசணிக்காயைச் சோத்துல மறைச்சுட்டாங்க பாரு?” என்றாள் ப்ரீத்தி.
“அந்த நேரத்துல, எதையும் யோசிக்கிற நிலைமையில நான் இல்லடி. அதனால இதெல்லாம் எனக்கே தெரியாது. அப்பாவைக் காப்பாத்துறதுதான் என்னோட குறிக்கோளா இருந்துச்சு. ஆனா, அதுவும் என்னால முடியல” என்று கண்கலங்கினாள் நத்தாஷா.
Advertisement
Advertisement
“பழசையெல்லாம் ஞாபகப்படுத்துற மாதிரி ஆயிடுச்சுல்ல?”
“அதெல்லாம் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்ல ப்ரீத்தி. என் குடும்பத்தையே புரட்டிப்போட்ட நாட்கள் அதெல்லாம். என்னை மட்டும் பாதிச்சிருந்தாக்கூட என்னால அதுல இருந்து மீண்டு வந்திருக்க முடியும். ஆனா, எங்க குடும்பத்தோட ஆணிவேரையே ஆட்டிவச்சிடுச்சு” என்றாள் நத்தாஷா.
Advertisement
“ஆனா, இவ்வளவு கிரிமினலா யோசிக்கிறவங்களை, உங்க அப்பா எப்படிடி நம்புனாரு?”
“நட்புக்கு அப்பா முக்கியத்துவம் கொடுத்தாரு. ஆனா, அவங்க பையனை நல்வழிப்படுத்துவதற்கு அப்பாவையும் என்னையும் ஒரு ஆயுதமா பயன்படுத்திக்கிட்டாங்க.”
“நல்லா இருக்குடி நியாயம்! பெத்து வச்சிருக்க ஒரு பிள்ளையை வளர்க்கத் தெரியாதாம், தறுதலையா விட்டுடுவாங்களாம். கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணுதான் அவங்க பையனைத் திருத்தணுமாம்? ஏன், இவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்களாம்?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
அவளுக்கு மனது ஆறவில்லை. தன் தோழியின் வாழ்க்கை சிதைந்துபோனதை எண்ணி வருந்தாத நாளில்லை. அந்த நேரத்திலும் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்தது இதே ப்ரீத்தியும் அவள் குடும்பமும் தான்.
“எங்க பையனுக்குக் கேட்டா கொடுக்கல. அவசர அவசரமா படிப்புக்கூட முடியாம, யாரோ ஒரு தறுதலையைப் பார்த்து வச்சிருக்காரு உங்க அப்பா” என்று தகப்பனுடன் பிறந்தவள் பேசினார்.
“ஊர்ல இல்லாத பொண்ணைப் பெத்து வச்சிருக்கிற மாதிரி ஆடினாங்க. இப்ப பாரு நிலைமையை, தலைகீழாயிடுச்சு. எங்ககிட்ட எதுக்கும் வராதீங்க” என்று உறவுகள் கூறினார்கள்.
“நாங்க சொல்றதைக் கேட்டாத்தானே? உங்க அப்பா அவர் இஷ்டத்துக்குத்தானே நடப்பாரு? சம்மந்தி வீடுன்னு என்னைக்காவது மதிப்பு கொடுத்திருக்காரா? இப்ப நாங்க மட்டும் என்ன பண்ண முடியும்?” என்று தாய் வீட்டைச் சேர்ந்தவர்களும் கையை விரித்துவிட்டனர்.
துவண்டு இருந்த தாய்க்குத் துணையாக நின்று, ஆண் மகனாக எல்லாவற்றையும் எடுத்துச் செய்தது நத்தாஷாதான். திரும்பி யோசிக்கக்கூட நினைக்காத ஞாபகங்கள் அவை. ஆனால், இவையெல்லாம் அவருக்கு எப்படித் தெரிந்திருக்கிறது? தெரிந்துகொள்ள நினைத்திருந்தால் கூட, இத்தனை நுணுக்கமாக எப்படித் தெரிந்துகொண்டார்? சிந்தனை வயப்பட்டாள் நத்தாஷா.
“அதுவும் நல்லதுக்குத்தான்டி. இல்லனா அவங்க ரெண்டு பேரையும் நீதான் பார்த்துக்கணும்னு உன் தலையில எல்லாம் விடிஞ்சிருக்கும். புருஷன் கூட இருந்து அவங்க அம்மா, அப்பாவைப் பார்த்துக்கிறது வேற; அவர் இல்லாமல் அவங்களைப் பார்த்துக்கிறது வேற. அதுவும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னாடியே முடிஞ்சுபோன அந்த மனுஷனுக்காக, வாழ்க்கை முழுக்க அவங்க வீட்டுல இருக்க வேண்டியதா போயிருக்கும். அதுவும் இல்லாம, உன் ராசிதான் அவங்க பையன் சாவுக்குக் காரணம்னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொன்னவங்க வீட்டுல உன்னால எப்படி வாழ முடியும்? அதைச் சொல்லிக் குத்திக் காட்டிக்கிட்டே இருப்பாங்க. நிம்மதி ரொம்ப முக்கியம் நத்தாஷா, அது இல்லனா எதுவுமே பண்ண முடியாது” என்றாள்.
ப்ரீத்தி சொல்வது உண்மை. கடந்த இந்த வருடங்களில் இதையெல்லாம் அவளும் சிந்தித்துப் பார்த்திருக்கிறாள். தாயும் புலம்பித் தள்ளியிருக்கிறார்.
“நீ வேணா பாரு, நீ பெரிய பாடகியானதுக்கப்புறம் அவங்க உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தத்தான் போறாங்க. அப்ப விளக்கமாறை வச்சு நானே அடிச்சுத் தள்ளத்தான் போறேன். என்ன பேச்சு பேசினாங்க? என்னால இன்னும் அதை ஜீரணிக்கவே முடியல. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மனுஷங்க. அவங்களுக்காக எல்லாம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடக்கூடாதுடி” என்றாள்.
“நீ சொல்றதெல்லாம் நடக்குமான்னு தெரியல? ஆனா, இப்ப நடக்குறதே எனக்குக் கனவு போலத்தான் இருக்கு. அந்தக் கல்யாணத்திலும் எனக்குப் பிடிப்பில்லை; அந்த மாப்பிள்ளை மேலயும் எனக்கு எந்தப் பற்றுதலும் இல்லை. வந்ததும் தெரியல, போன சுவடும் புரியல. என்னோட சந்தோஷத்தையும் என் குடும்ப நிம்மதியையும் வாரிச் சுருட்டிக்கிட்டுப் போனது மட்டும்தான் மிச்சம். கண்டிப்பா என்னால அவங்களோடு இருந்திருக்க முடியாது” என்று கூறிவிட்டுக் கண்களை மூடினாள், தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்காக.
“ம்ஹூம், அதை விடுடி. கௌதம் சார் சொன்ன மாதிரி இனி எல்லாமே உனக்கு நல்ல காலம்தான். நான் என் புருஷன் வீட்டுல பெரிய போர்டு மாட்டி வைப்பேன், ‘இதுதான் பாடகி நத்தாஷா வாழ்ந்த வீடு’ன்னு. என் புருஷன்கிட்ட இதைச் சொல்லும்போது, அவர் கூடப் பெருமையா சொல்லிட்டு இருந்தாரு.”
பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கும் தன் தோழியை ஆதுரமாகப் பார்த்தாள் நத்தாஷா. தனக்கான முயற்சிகள் எல்லாவற்றையும் அவளே எடுத்திருக்க, தன்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, அதற்கான எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒதுங்கி நிற்க நினைக்கும் தன் தோழியின் தோழமையை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால், தன்னால் அப்படி இருக்க முடியுமா?
துன்ப நேரத்தில்தானே நல்ல மனிதர்களை அறிந்துகொள்ள முடியும் என்பார்கள்? உறவுகளின் போலித்தனத்தையும் தோழமையின் பிணைப்பையும் கஷ்டத்தில்தானே புரிந்துகொள்ள முடியும்? அப்படிப் புரிந்துகொண்ட இந்தப்பொக்கிஷத்தை அவளால் விட்டுவிட முடியுமா?
எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய கணவன், தன் குடும்பத்திற்கும் தனக்கும் துணையாக நிற்கிறான். துணை என்பவன் இப்படித்தானே இருக்க வேண்டும்? அந்த விதத்தில் தன் தோழி ராசியானவள் தான். அந்தக் குடும்பத்திற்கு அவள் கடமைப்பட்டிருக்கும்போது, அவளால் அங்கிருந்து செல்ல முடியுமா? அது அவளுக்குப் பாதுகாப்பைக் கொடுக்குமா? பல சிந்தனைகளோடு கிளம்பி வீட்டிற்குப் பிரயாணப்பட்டனர்.
அன்று மாலை வரை ஆகவில்லை. உணவுக்குப் பிறகு சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒவ்வொருவராகக் கலைய ஆரம்பிக்க, இவர்களும் “கிளம்புகிறோம்” என்று நின்றனர்.
“எப்படிப் போவீங்க? ரமேஷ் வரலையே?” என்று கேட்டான் கௌதம்.
“ஆட்டோ பிடிச்சுப் போயிப்போம் சார். வழியெல்லாம் சொல்லியிருக்காரு” என்று கூறினாள் ப்ரீத்தி.
“நானே உங்களை டிராப் பண்ணவா? பயப்படாதீங்க, அம்மா கூட இருப்பாங்க” என்று இலகுவாகக் கூறினான் கௌதம்.
“வேண்டாம் சார்” அவசரமாகப் படபடத்தாள் நத்தாஷா.
கௌதம் மட்டுமல்லாமல் ப்ரீத்தியும் முறைத்துப் பார்த்தாள் அவளை.
“அவள் சொல்றது எதையும் பொருட்படுத்தாதீங்க சார். ஆனா, உங்க வீடு எங்க வீட்டுல இருந்து ரொம்ப தூரம். இங்கிருந்து எங்க வீடு கொஞ்ச தூரம்தான். கேஃபோ இல்ல ஆட்டோவோ பிடிச்சுப் போயிக்குறோம். ரெண்டு பேர் இருக்கோம் இல்லையா? இனிமே தினமும் பழக வேண்டியதிருக்கும்னு அவரும் சொல்லித்தான் அனுப்புனாரு” என்றாள்.
“ஓகே, எனக்குத் தெரிஞ்ச கேப் இருக்கு. நான் அதை புக் பண்றேன். இன்னைக்கு அதுல போய்க்கோங்க” என்றவன், அவர்கள் வேண்டாம் என்று சொன்னதையும் பொருட்படுத்தாமல் அலைபேசியை எடுத்து கேப் டிரைவருக்கு அழைப்பு விடுத்துவிட்டான்.
ப்ரீத்தி ரமேஷுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, அவனும் நிம்மதியாக உணர்ந்தான். “சார் சொல்றதுதான் சேஃப். இன்னைக்கு அவர் புக் பண்ற கேப்லேயே போங்க. வழியை நல்லா பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க” என்று அவனும் கூறிவிட, தனியாகவே இருவரும் பேசிக்கொண்டே வீட்டை வந்தடைந்தார்கள்.
ரமேஷின் தந்தை ராஜேஷ் “என்ன ஆனது?” என்று கேட்டார். அங்கு நடந்தவற்றைக் கேட்டவருக்கும் சந்தோஷமாக இருந்தது. தங்களை நம்பி வந்த குடும்பம் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கும் நிம்மதிதானே? பொறுப்பை வேறு மகன் ஏற்றுக்கொண்டிருக்கிறானே?
“ரொம்ப சந்தோஷம்ம்மா. இனி உன் வாழ்க்கையில எல்லாம் நல்லபடியா நடக்கும். வயசானவனோட வாக்கு பலிக்கட்டும்” என்று கூறினார்.
புஷ்பவல்லி ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டார், இனியாவது தன் மகளின் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும் என்று.
“அக்கா! உங்களைப் பேட்டி எடுத்தாங்களே, அது என்னைக்கு வரும்?” என்று ராகினி துள்ளலோடு கேட்டாள்.
“தெரியல, நாளைக்கு வேணா கேட்டுப் பார்க்குறேன். அப்புறம் கௌதம் சார் இன்னைக்கு உன்னைப் பத்திக் கேட்டாரு. ப்ரீத்தி உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கா போல?” என்றாள் நத்தாஷா.
“நான் அப்பவே சொன்னேன், என்னையும் கூடக் கூட்டிட்டுப் போங்கன்னு. பார்த்தீங்களா? பெரிய மியூசிக் டைரக்டர்; அதைவிட என்ன ஸ்வீட் வாய்ஸ் தெரியுமா அவருக்கு? மனுஷன் வேற ரொம்ப ஹேண்ட்சமா இருப்பாரு. அவரை நேர்ல பார்க்கிற ஆப்பர்சூனிட்டியே கெடுத்துட்டீங்க” என்று சலித்துக்கொண்டாள்.
“நீ இப்படி அநியாயத்துக்கு ஜொள்ளு விடுவேன்னுதான் உன் அக்கா உன்னைக் கழட்டிவிட்டுட்டுப் போனாள். வாய்ப்புக் கிடைக்கிறதுக்கு முன்னாடியே நீ விட்ட ஜொள்ளுல கௌதம் சார் கப்பல் விட ஆரம்பிச்சுருவாரு. அப்புறம் அவங்க அம்மா பெரிய கும்பிடு போட்டு, உன்னை அப்புறப்படுத்தி, தன் பையனைப் பாதுகாக்க வேண்டியதாயிடும்” என்று அங்கலாய்த்தாள் ப்ரீத்தி.
ராகினி அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்திவிட்டு, “ப்ரீத்தி அக்கா! இதுதானே வேணாங்கிறது? நீங்க முதல் முதல்ல கௌதம் சாரைப் பார்த்துட்டு வந்து தனியா ரூம்ல பேசுனது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. உங்களுக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு, அதனால அடக்கி வாசிக்கிறீங்க. எனக்குத்தான் ஆகலல்ல? அதுமட்டுமில்லாம, அழகை ஆராதிக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே?” என்று பாவனையாகக் கேட்டாள்.
அதில் நத்தாஷாவிற்குப் பழைய ஞாபகங்கள் வந்து, இதழ்களில் மென்நகையைப் படரவைத்தது.
“அக்கம் பக்கம் பார்த்துப் பேசுடி, இது என் மாமனார் வீடு. உங்க அம்மா நல்லவேளை காபி போடப் போயிருக்காங்க, அவர் கீழ இருக்காரு. என் புருஷன் எந்நேரம் வேணாலும் வருவாரு. நல்லா போயிட்டிருக்கிற வாழ்க்கையில சிந்து பாட வச்சுடாதடி” என்றாள் ப்ரீத்தி.
“அதெல்லாம் ரமேஷ் அண்ணா ஒன்னும் கோச்சுக்க மாட்டாரு. அவர் மட்டும் ஹேண்ட்சம்ல குறைஞ்சவரா என்ன? உங்களுக்கு அவர் ரொம்ப அதிகம்தான், உங்களைவிட அவர் ரொம்ப அழகு” என்று கூறிவிட, ப்ரீத்தி அவளை அடிப்பதற்காகப் பொருளைத் தேட, அவள் அந்த அறையில் ஓடி ஆடி ஆட்டம் காட்டிவிட்டு, பிறகு தப்பிப்பதற்காக தன் அறைக்குள் சென்று பதுங்கிக்கொண்டாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் சந்தோஷமும், நிம்மதியும், புன்னகையும் மீண்டிருந்தது.
………
தாயின் மடியில் படுத்திருந்தான் கௌதம். அவர் அவன் தலையைக் கோதிக்கொண்டிருந்தார்.
“எப்படிடா இதையெல்லாம் விசாரிச்ச? ரொம்ப பாவம்டா அந்தப் பொண்ணு” என்றார் மகாலட்சுமி. அவரின் வருத்தம் அவர் குரலிலேயே தெரிந்தது.
“ப்ரீத்தி என்னை வந்து மீட் பண்ண அந்த நாள்லையே விசாரிப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன் அம்மா. நான்தான் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன். இனிமேல் கண்டிப்பா அப்படி இருக்க மாட்டேன்” என்றான் கௌதம்.
“ஆனா, பார்த்து ஹேண்டில் பண்ணனும் கௌதம். முதல் முதல்ல அந்தப் பொண்ண நம்ம வீட்டுல பார்க்கும்போது அவள் முகத்துல பயம் மட்டும்தான் இருந்துச்சு. ஆனா, நேத்து அவளை நம்ம வீட்டுல பார்க்கும்போது அவள் முகத்துல சோகம் மட்டும்தான் தெரிஞ்சது. மியூசிக்கால அவளோட சந்தோஷத்தை மீட்டுக் கொண்டுவர முடியுமான்னு தெரியல. ஆனால், வாழ்க்கையையும் சரி பண்ணனும் கௌதம். முள்ளு மேல விழுந்த சேலையை மிகக் கவனமா எடுக்கணும்; கிழிஞ்சிட்டா யாருக்கும் எதுக்கும் பிரயோஜனம் இல்லாம போயிடும். அவசரப்படாம, பதட்டப்படாமல் பொறுமையா ஹேண்டில் பண்ணு. கொஞ்ச நாளைக்கு உன் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டிவை” என்று அவர் அறிவுரை கூறிக்கொண்டிருக்க, அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
“அம்மா, ஐ பேட்லி நீட் யூ. இன்னைக்கு என் கூடவே இருந்துடுங்களேன்” என்றான் கௌதம்.
அவன் இதுபோலக் கேட்கும் நாட்கள் மிக அரிது. அப்படியே அவன் கேட்கும்போது அவர் அதை உதாசீனப்படுத்த மாட்டார்.
“சரி, நான் உன் அப்பாவுக்குப் போன் பண்ணிட்டு வரேன்” என்று கூறி, அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளிச் சென்று பேசினார். அவரையே கௌதம் பார்த்துக்கொண்டிருக்க, பேசிக்கொண்டே கட்டை விரலை உயர்த்தி ‘சக்சஸ்’ என்ற ரீதி
யில் கூறினார். அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை படர்ந்தது. தாயை ஆதுரமாகப் பார்த்தான்.
error: Content is protected !!