Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 10.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

“சரிக்கா அந்த ஆண்ட்டி எப்படி இருக்காங்க?”

 

“நீ கேட்ட அப்புறம் தான் ஒரு விஷயம் சொல்லலைன்னு நினைவு வருது திவி. ஆண்ட்டி நல்லாவே இல்லை டி”, என்றவள் சாணக்கியன் பற்றிச் சொல்ல திவ்யா அதிர்ந்து தான் போனாள்.

 



Advertisement

“என்னக்கா சொல்ற?”

 

“ஆமா டி, அந்த ஆள் பண்ணின பாவத்துக்கு அமரோட அண்ணன் வாழ்க்கை போச்சு. அந்த பொண்ணும் அவ குழந்தையும் இறந்துட்டாங்களாம். அமர் அண்ணன் அதுல இருந்து நடைபிணமா தான் இருக்காங்க. நம்ம பாப்பா தான் அவங்களுக்கு இப்போதைக்கு மருந்தா இருக்கா. இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். லவ் பண்ணின எங்களுக்கே ஒருத்தரை ஒருத்தர் மறக்க முடியலை. அவர் அந்த பொண்ணு கூட வாழ்ந்த வாழ்க்கையை எப்படி மறப்பார்?”, என்று ரதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே திவ்யாவுக்கு கேட் திறக்கும் சத்தம் கேட்டது.

Advertisement

 

Advertisement

“அக்கா அவன் வந்துட்டான். நான் வைக்கிறேன். நீ போட்டோ அனுப்பு”, என்று சொல்லி விட்டு வைத்து விட ரதி அந்த புகைப்படங்களை தங்கைக்கு அனுப்பி விட்டு பயணத்தை தொடர்ந்தாள்.

 

அவள் அனுப்பிய புகைப்படங்களை பார்த்த திவ்யா அவ்வளவு ஆனந்த பட்டாள் என்றால் அவனையே அறியாமல் விழுந்திருந்த சாணக்கியனின் புகைப்படத்தில் அப்படியே அவள் கண்கள் நிலை குத்திப் போனது.

Advertisement

 

பல வருடங்களுக்கு பிறகு அவனைப் பார்க்கிறாள். அவனது மொபைல் எண் அவளிடம் இருக்கிறது தான். அதில் அவன் ஏதாவது கடவுளின் புகைப்படத்தை தான் வைத்திருப்பான். என்றாவது அவனது புகைப்படத்தை வைக்க மாட்டானா என்று பல நாள் எண்ணி இருக்கிறாள். ஆனால் அவளுக்கு அவனைப் பார்க்கும் சந்தோஷம் கிடைக்கவே இல்லை. ஆனால் ரதி மூலம் இன்று அவளுக்கு கிடைத்தது.

 

முன்பை விட இன்னும் அழகும் கம்பீரமும் கூடியது போல இருந்தது. அவன் வாழ்க்கையைப் பற்றி ரதி சொன்னது நினைவில் வர “நீயாவது சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேனே?”, என்று எண்ணிக் கொண்டவளின் விரல்கள் தன்னாலே அவன் முகத்தை வருட “ஏய் சாப்பாடு எடுத்து வை டி சனியனே”, என்ற குரல் அவளை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.

 

போனை அவன் பார்க்காதவாறு எடுத்து வைத்தவள் சிறிது சந்தோஷமான மனநிலையுடன் அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றாள்.

 

உண்டு முடித்து வந்ததும் அவள் படுத்து விட அதற்கு பின் விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்த பாண்டியன் அவள் இடையில் கை போட அமைதியாக இருந்தாள்.

 

அடுத்து அவள் அனுமதி இல்லாமலே அவன் அவளை காயப் படுத்த ஆரம்பிக்க ஏனோ இந்த முறை அவள் முகத்தில் சிறு புன்னகை. சாணக்கியனின் நினைவு கொடுத்த சந்தோசமோ என்னவோ? அவன் கொடுத்த காயத்தையும் இன்று புன்னகையுடனே ஏற்றுக் கொண்டாள்.

 

அதே நேரம் தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த அமர் சாணக்கியனை திரும்பிப் பார்த்தான். அவனோ குழந்தையின் தலையை வருடிய படி ஏதோ யோசனையில் இருந்தான்.

 

“அண்ணா”

 

“என்ன டா?”

 

“என்னை மட்டும் கேக்குற? நீ உன் வாழ்க்கைல என்ன பண்ண போற? உனக்குன்னு ஒரு சந்தோஷம் வேண்டாமா?”

 

“ஏன்? எனக்கு என்ன அமரா? நான் சந்தோஷமா தான் இருக்கேன்”

 

“உன் மனசாட்சியை தொட்டுச் சொல்லு, நீ சந்தோஷமா தான் இருக்கேன்னு”

 

“என் நிலைமைல தான நீயும் இருக்க? நீ சந்தோஷமா இருக்கியா? நீ என்ன கஷ்ட படுறியோ அதே கஸ்டம் தான் எனக்கும். ஆனா இதை மாத்த வேண்டாம். இப்படியே போகட்டும் டா அமரா. சரி நான் தூங்க போறேன். நீ பாப்பா பாத்துக்கோ. கனவு கண்டுகிட்டு பிள்ளையை கீழ தள்ளிறாத”, என்று சொல்லி விட்டு செல்ல தலையணையை தூக்கி அவன் மேல் எறிந்தான் அமர். சிறு சிரிப்புடன் அங்கிருந்து சென்றான் சாணக்கியன்.

 

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ரதிக்கோ குழந்தையைப் பார்த்து சந்தோஷம் வந்தாலும் மனதில் எப்போதும் இருக்கும் வலி மேலே எழுந்தது. அமர் அருகே இல்லாமல் அவள் பட்ட கஷ்டங்கள் பல.

 

அன்னை தந்தை கூட இருந்தாலும் ரதிக்கு அனைவரும் கை விட்ட நிலை தானே? அவர்களையும் குறை சொல்ல முடியாதே. இது அவளது தவறு தானே? அதற்கான தண்டனையை அவள் அனுபவிக்க வேண்டும் தானே?

 

மனதின் கஷ்டங்களை அடக்கி அன்னையின் சுடு சொல்லை எல்லாம் தாங்கி குழந்தைக்காக என அவள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம். வேறு ஆண்கள் அவளை சீண்டாமல் பாதுகாத்தது அவளது பிறந்த வீடு. எங்கே போனாலும் தந்தை இல்லை என்றால் அரவிந்த் உடன் வருவான் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். தன்னந்தனியாக ஒரு பெண் குழந்தையை பெற்று எடுப்பது எல்லாம் பெரிய விஷயம் தான். உடலாலும் மனதாலும் அவள் அமரை அதிகம் தேடியது நிஜம்.

 

நான்கு பேரின் வாழ்க்கையும் அடுத்து என்ன என்ற பதில் தெரியாத கேள்வியாக நகர நால்வருக்கும் விடையை அந்த கடவுள் தான் எழுத வேண்டும்.

 

அடுத்த நாள் காலையில் அமர் அலுவலகம் செல்வதற்கு முன்பே அமைச்சரின் குடும்பம் வீட்டுக்கு வந்து விட்டது. தருமர் தான் மகன் போவதற்கு முன்பு அவர்களை அங்கே வர வைத்திருந்தார்.

 

“வாங்க”, என்று மட்டும் கேட்டான் அமர். ஏனென்றால் என்ன இருந்தாலும் அவர்கள் அண்ணனின் உறவு அல்லவா? சாணக்கியனும் “வாங்க”, என்றவன் ஸ்வேதாவிடம் சில வார்த்தைகள் பேசினான். சகுந்தலா அனைவரையும் உபசரிக்க அவந்திகாவோ ஸ்வேதாவின் மடியில் அமர்ந்து கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

நழுவி விடலாமா என்று அமர் எண்ணும் போதே “சின்ன மாப்பிள்ளை, இருங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். எங்களுக்கு ஒரு ஆசை”, என்று சிவஞானம் ஆரம்பிக்க அமர் என்ன எதுவென்று எதுவுமே கேட்க வில்லை.

 

“இல்லைங்க, எனக்கு இதுல விருப்பம் இல்லை. இந்த பேச்சு இனி வேண்டாம்”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டான் அமர்.

 

அவன் பட்டென்ற பதிலில் அனைவரும் திகைக்க “இங்க பாருங்க, நான் பேசுறது உங்களுக்கு இன்சல்ட் பண்ணுற மாதிரி இருக்கலாம். என் வாழ்க்கைல நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும். எனக்கு எப்பவோ கல்யாணம் முடிஞ்சிருச்சு. எங்களுக்குன்னு ஒரு குழந்தை இருக்கு. என் பொண்ணுக்காக தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். இத்தனை வருஷத்துல ஸ்வேதா எனக்கு நல்ல பிரண்டா தான் தெரியுறா. என்னால அவளை எப்பவும் வேற மாதிரி நினைக்க முடியாது. நீங்க வேற நல்ல சம்பந்தம் பாருங்க அவளுக்கு”, என்றவன் அண்ணன் மட்டும் அன்னையிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

 

“என்ன சம்பந்தி சின்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டு போறார்? இப்ப என்ன பண்ணுறது?”, என்று கேட்டார் சிவஞானம்.

 

“நானும் எவ்வளவோ பேசி பாத்துட்டேன், அவனை சம்மதிக்க வைக்க முடியலை”, என்றார் தருமர்.

 

“எனக்கு ஒரு ஐடியா தோணுது”, என்றான் சாணக்கியன்,.

 

“என்ன?”

 

“பேசாம ஸ்வேதாவையும் அமரையும் அடிக்கடி சந்திக்க வைங்க. அவங்க பேசுறதுக்கு ஒரு வாய்ப்பு உருவாக்குங்க. அப்படின்னா அமர் மனசு மாற வாய்ப்பு இருக்கு. அதும் நம்ம பட்டுகுட்டிக்கு ஸ்வேதாவை ரொம்ப பிடிக்கும். அவங்க ஒண்ணு சேந்தாலே போதுமே? கண்டிப்பா அவி குட்டிக்காக   அமர் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிப்பான்”

 

“நல்ல ஐடியா, நான் அமர் அத்தான் மனசை மாத்துவேன். நாளைல இருந்து பாருங்க”, என்ற ஸ்வேதா அவந்திகா புறம் திரும்பி “குட்டி, நாளைல இருந்து உன் அப்பா பின்னாடியே சுத்துறோம், அவரை தூக்குறோம்”, என்று குழந்தையையும் கூட்டணியில் சேர்த்தாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ கிளுக்கிச் சிரித்தாள்.

 

அடுத்த நாள் வீட்டுக்குச் சென்ற ரதியின் வாழ்க்கை இயல்பு போலவே அவள் மகன் வேலை என்று செல்ல அமர் வாழ்க்கையிலோ மாற்றம் மட்டுமே.

 

சொன்னது போலவே அமருக்கு ஸ்வேதாவிடம் இருந்து  அதிக டார்ச்சல் கிளம்பியது. அதுவும் அவள் அவந்திக்காவுடன் கூட்டணி வைத்து அத்தான் அத்தான் என்று அவன் பின்னேயே சுற்றித் திரிய அமருக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

 

உண்மையிலே ஸ்வேதா அவ்வளவு நல்ல பெண். மிகவும் மென்மையான குணம் கொண்டவள். “அத்தான் பாப்பாவை பார்க் கூட்டிட்டு போவேன்ன்னு அவளுக்கு பிராமிஸ் பண்ணிருக்கேன். பிளீஸ் நீங்களும் வாங்களேன்”, என்று அழைக்க அவனால் எப்படி மறுக்க முடியுமாம்?

 

அவளிடம் அவனும் நட்பின் அடிப்படையில் பேசினான் தான். ஆனால் அவள் அவனிடம் அதிக உரிமை எடுத்தாள். அனைத்தும் குழந்தையை சாக்கு வைத்து நடப்பது தான் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. குழந்தையை வைத்து அவள் தன்னை நெருங்க முயல்கிறாளோ என்ற எண்ணம் அவன் நிம்மதியைக் குலைத்தது.

 

அவளின் சிறு பிள்ளைத் தனமான செய்கையில் குழந்தையும் வேறு ‘ஸ்வேதா ஆண்ட்டி’ என்று சொல்லி அவளிடம் ஒட்டிக் கொள்ள அவனுக்கு தான் கடுப்பாக இருந்தது.

 

ஸ்வேதாவுக்கு அமரை சந்திக்க அவனிடம் பேச என ஏதாவது காரணம் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாக அவளிடமே கூட சொல்லி விட்டான். அவள் மனதை புரிந்தவன் ரதி தான் அவன் மனதில் இருக்கிறாள் என்று கூட சொல்லி விட்டான்.

 

“நான் உங்களை எதுவும் கட்டாயப் படுத்தலையே அத்தான். நான் கல்யாணம் பத்தி கூட உங்க கிட்ட பேசலையே? நான் குழந்தை கூட பேசுறது உங்களுக்கு பிடிக்கலையா?”, என்று பாவமாக பேச அவனுக்கு என்ன சொல்ல என்று கூட தெரிய வில்லை.

 

“என் மனசுல தப்பான எண்ணம் எதுவுமே இல்லை அத்தான். உங்களுக்கு விருப்பம் இல்லாதப்ப எதுக்கு உங்களை கட்டாயப் படுத்தப் போறேன். அதுக்குன்னு நட்பா கூட இருக்க கூடாதா??”, என்று முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு அவள் கேட்க அவன் எப்படி மறுப்பானாம்?

 

“சரி விடு, பீல் பண்ணாத”, என்று அவன் தான் அவளை சமாதானம் பண்ண வேண்டியது இருந்தது.  ஸ்வேதாவுக்கு உண்மையிலே அமரை பிடித்திருந்தது. அது இப்போது அல்ல. சாணக்கியன் ஸ்னேகா திருமணம் நடந்த போதே பிடிக்கும். அதை காதல் என்று எண்ண வில்லை என்றாலும் அவனை அவ்வளவு பிடிக்கும். ஸ்னேகாவின் மரணத்திற்கு பிறகு அவந்திகா அந்த வீட்டுக்கு வந்த பிறகு அவன் காதல் கதையை கேட்டு அவள் மனதில் சிறு சுணக்கம் வந்தது தான்.

 

ஆனாலும் அவளுக்கு அவனை பிடித்திருந்தது. வீட்டில் வேறு திருமணம் அவனுடன் தான் என்று பேசியதால் அவனை அவள் மனம் எளிதாக ஏற்றுக் கொண்டது. அவன் குழந்தை மீது கூட அவளுக்கு ஒரு பற்று வந்தது. அதற்கு அவந்திகாவின் கள்ளம் கபடமற்ற அன்பே காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. அமரை திருமணம் செய்ய அவ்வளவு ஆசை இருந்தாலும் அதற்கு அவன் சம்மதிக்க வேண்டுமே என்பது தான் அவள் வேண்டுதலாக இருந்தது.

 

அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு வந்த ரதி ஒரு பதினொரு மணி போல தன்னுடைய தோழி நந்தினியைக் காண சென்றிருந்தாள். அவள் ஒரு வங்கியில் பணி புரிவதால் அங்கேயே சென்று விட்டாள். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் தான் என்பதால் ரதியின் காதல் கதை எல்லாம் அவளுக்கு தெரியும்.

 

அவளைக் கண்டதும் “எப்படி இருக்க ரதி?”, என்று கேட்டாள். அதற்கு அவளிடம் இருந்து லேசான சிரிப்பு மட்டுமே வந்தது.

 

“என்ன டி எதுவுமே பேச மாட்டிக்கிற? சரி விடு. அரவிந்த் அண்ணா எப்படி இருக்காங்க?”

 

“நல்லா இருக்கான். அவனால தான் நிறைய நாள் நான் நிம்மதியா இருக்கேன்”, என்றாள் ரதி.

 

“பழைய விஷயம் எதையும் யோசிக்காத டி. எல்லாம் ஒரு நாள் மாறும்”

 

“ம்ம்”

 

“வேற வாழ்க்கையை யோசிச்சு பாரேன் டி. அமர் ஒரு துரோகி டி”, என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்த ரதி “இன்னொரு தடவை அப்படிச் சொல்லாத நந்து. என் அமர் அப்படி இல்லை”, என்றாள் கடுப்பாக.

 

“உன்னை வேண்டாம்னு சொன்னவன் மேல எதுக்கு தான் இந்த பாசமோ?”

 

“அவங்க என்னோட அமர். அவங்களை என்னைக்கும் என்னால வெறுக்க முடியாது. என்னை வேண்டாம்னு சொன்னது கூட எனக்காக தான் இருக்கும்”

 

“என்னமோ போ? வாழ வேண்டிய வயசல இப்படி இருக்கியேன்னு தான் கேட்டேன், சரி சொல்லு என்ன விஷயமா வந்துருக்க?”

 

“ஒரு உதவி கேட்டு வந்துருக்கேன் டி. நீ தான் செய்யணும்”

 

“சொல்லு டி, உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்?”

 

“திவிக்கு உன் பேங்க்ல இருந்து லோன் கொடுக்குற மாதிரி நாலு கையெழுத்து வாங்கிட்டு அவ கிட்ட நான் கொடுக்குற பணத்தைக் கொடுத்துரு”

 

“எதுக்காக டி? நீயே கொடுக்கலாம் தானே?”

 

“இந்த பணம் போச்சுன்னா ஒரு மாசத்துக்கு அவன் அவளை அடிக்க மாட்டான். அதுக்காக தான். நானா கொடுத்தா அவ வாங்க மாட்டா”, என்று சொன்னவளின் குரல் தங்கையின் நினைவில் கரகரத்தது. கண்ணீரும் லேசாக வெளியே வந்து விட்டது.

 

“அழாத டி”

 

“எப்படி அழாம இருக்க? என்னால என் தங்கச்சி உயிரோட துடிச்சிட்டு இருக்கா. எல்லாமே என் தப்பு தான். இதுல எல்லாரும் அமரை மட்டும் குறை சொல்றீங்க? நடந்த விஷயத்துல என் பங்கும் இருக்கு தானே?”, என்று சொல்ல நந்தினியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

 

“சரி டி, நான் லோன்னு சொல்லி அமெளண்ட் அவ கிட்ட கொடுக்குறேன். நீ ஒரு வார்த்தை அவளுக்கு சொல்லிரு”, என்றாள்.

 

ரதியும் திவ்யாவிடம் முழுதாக உண்மையைச் சொல்லாமல் லோன் தருவதாக மட்டும் சொல்ல “உனக்கு என்ன பைத்தியமா அக்கா? என் கைல ஒரு ரூபாய் கூட இருக்க விட மாட்டாங்க. வீணா போகும் அக்கா. அவன் ஃபிரண்ட்ஸ் கூட தான் திரியுவான். பணம் காலியாகுற வரைக்கும் வீட்டுக்கு வர மாட்டான்”, என்றாள் திவ்யா.

 

“பணம் கொடுத்ததா உன்னைக் கஷ்டப் படுத்தாம இருப்பாங்கள்ல? குடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வராம இருந்தா நிம்மதியா தூங்குவல்ல? அது மட்டுமில்லாம நம்ம வீட்ல உனக்கு போட்ட தாலிசெயினையாவது திருப்பி உன் கழுத்துல போடு டி”

 

“தாலிக்கே மதிப்பு இல்லை. அதுக்கு செயின் ஒண்ணு தான் குறைச்சல். நான் கஷ்டப் படுறேன் தான். அதுக்குன்னு லட்ச கணக்குல வீணாக்க போறியா? இவன் தேவையில்லாம செலவு பண்ணுறதுக்கு நீ தெண்டம் அழனுமா?”

 

“உன் வாழ்க்கையவே வீணாக்கிட்டேனே திவி. இது பணம் தானே? போனாப் போகுது”

 

“உன் மேல எந்த தப்பும் இல்லை. இதையே உளராத அக்கா. சரி நான் பணம் வாங்கிக்கிறேன். நந்தினி அக்காவைப் போய் பாக்குறேன்”, என்று சொன்னதும் தான் ரதி விட்டாள்.

 

சொன்னது போலவே பணம் கைக்கு வந்து சேர பாண்டியன் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. அவளுடைய தாலிச் செயினை மட்டும் திருப்பி அவளிடம் கொடுத்தான். அதற்கு பின் மீதி பணம் என்ன ஆனது என்று கேள்வி கூட கேட்க அவன் விட வில்லை. அவன் நண்பர்களுடன் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான்.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!