Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 22

அறைக்குள் நுழைந்தும் மனைவியை கீழே இறக்காமல் அவள் முதுகை வருடிக்கொண்டே, “சின்னு” என்று மெல்ல அழைத்தான். அவள் அப்போதும் தலையை நிமிர்த்தவோ அவனிலிருந்து இறங்கவோ தோன்றாமல் அவன் தோளில் தேம்பி கொண்டிருந்தாள்.
அவளை கைகளில் ஏந்தியாறே சென்று கட்டிலில் அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான். அவள் வாகாக அவன் தோளில் சாய்ந்து தன் அழுகையை தொடர அவளின் இருகன்னத்தையும் ஒற்றைக் கையால் அழுந்த பற்றி அவளை பார்த்தான். கண்களும் மூக்கும் சிவந்து போயிருந்தது. “அழாத சின்னு” என்றான் கொஞ்சலாக


Advertisement

மெலிதாக வந்து கொண்டிருந்த கண்ணீர் அவன் கொஞ்சலில் மீண்டும் அடைமழையென உடைப்பெடுக்கவும் “சின்னு” என்று அதட்டிக் கொண்டே அங்கே இருந்த தண்ணீர் பாட்டலில் இருந்த தண்ணீரை அவளுக்கு புகட்டினான். நீரை பருகியதும் அவள் அழுகை சற்றே மட்டுப்பட்டிருந்தாலும் கண்ணீர் மழை நிற்காமல் கண்களில் வழிந்து கொண்டிருந்தது. அவளின் கன்னத்தை அழுந்த துடைத்தவன் “நீ இன்னும் வளரவே இல்லடி. பால்வாடில படிக்கிற ஸ்கூல் பொண்ணு மாதிரி அழுதுட்டு இருக்கே, அழுமூஞ்சி” என்றபடி அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

Advertisement

அவள் அழுகை நின்ற பாடில்லை என்பதால் “இது வேலைக்காவாதுடி. ஸ்கேல் வச்சு தான் உன்னை மிரட்டணும் போலருக்கு” என்று வாயின் மீது விரலை வைத்து “ஷ்” என்று பொய்யாக மிரட்டினான். 

Advertisement

“நான் இன்னும் கொஞ்ச நேரம் அழணும் மாமு. அப்பதான் என் மனசுல இருக்கற பாரம் எல்லாம் இறங்கும். அப்பா போனதுக்கப்புறம் தோள்ல சாய்ஞ்சு அழ எனக்குனு யாருமே இல்லாம இறுகி போயிருந்தேன். இப்போ நீங்க இருக்கீங்க, நான் அழணும்” என்று அவன் தோளில் சாய்ந்தபடி அவன் முழங்கையை தன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டாள்.

Advertisement

“பர்ஸ்ட் நைட்ல முத்த மழை பொழிவேனு பார்த்தா இப்படி கண்ணீர் மழையா பொழிஞ்சிட்டு இருக்கியேடி” என்று அவளை சீண்டினான்.
அவன் சொன்னது தான் தாமதம் என்று அவள் அவன் கன்னத்தை கைகளில் ஏந்தி நெற்றி, கண்கள், நாசி, கன்னம் என்று ஆவேசத்துடன் முத்தமிட்டாள். சின்னுவின் செயலில் இன்பமாக அதிர்ந்தவன் குறும்புடன் தன் இதழ்களை தொட்டு காட்ட. அவளோ  வசியின் அடர்ந்த மீசையை நன்றாக முறுக்கி விட்டாள். அவனும் மீசையை ஒற்றை விரலால் கம்பீரமாக முறுக்க கண்களில் கண்ணீருடன் சிரித்தாள்.
“போதும் சின்னு, அழாத. நீ அழறத பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உனக்கு யாருமில்லாட்டி என்னடி? நான் இருக்கேன் இல்ல? அவங்கள நினைச்சு ஏன் அழற?”
“நான் என்ன தப்பு பண்ணேன்னு இவங்க எல்லாம் என்னை வெறுக்கறாங்க மாமு? அஞ்சாவது பொண்ணா பொறந்தது என் தப்பா? வேண்டாம்னு பேரு வச்சு என்னை எப்பவும் வேண்டாதவளாவே ஒதுக்கி வச்சாங்க. கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போற இடத்துலயாயவது எல்லாருக்கும் பிடிச்ச பொண்ணா இருக்கணும்னு ஆசப்பட்டேன் மாமு. அத்தை எங்க வீட்டுக்கு வந்தப்போ அவங்களாவே என்னை கூப்பிட்டு என் தலையில பூ வச்சு விட்டாங்க. என் அம்மாவே வந்து எனக்கு பூ வச்சு விட்ட மாதிரி எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? அப்பாவும் அத்தை உன்னை நல்லா பாத்துபாங்கனு சொல்லிட்டே இருப்பாரு. நானும் அவங்கள அம்மாவ தான் நினைச்சேன். ஆனா அவங்களும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க, ஏன் மாமு?” கலங்கிய குரலில் கேட்டவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
“லதா அக்காவுக்கும் ஆரம்பத்துல இருந்தே என்னை பிடிக்கல. என்னை ஏன் எல்லாரும் வேண்டாதவளாவே பாக்கறாங்க” என்று அவன் மார்பில் கண்ணீர் வடித்தாள்.
“சின்னு, நீ என் உயிர்டி, நான் உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன். நீ ஏன் அவங்கள நினைச்சு வருத்தப்படறே? நான் இருக்கேன் சின்னு” என்றான் அவள் தலையை ஆதரவாக வருடிக் கொண்டே
அவனை நிமிர்ந்து பார்த்து, “நீங்களும் உங்க அன்பும் எனக்கு கிடைச்சதுக்கு காரணம் என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் மாமு. கடவுள் உங்க விஷயத்துல மட்டும் எனக்கு வரம் கொடுத்திருக்காரு. ஆனா மத்த எல்லாரும் சேர்ந்தது தானே குடும்பம்? எந்த பக்கம் திரும்பினாலும் முகத்தை திருப்பிட்டு போனா எனக்கு எப்படியிருக்கும்? வலிக்குது மாமு” என்று அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு விம்மினாள்.
“நாம தனியா போயிடலாமா சின்னு”
“வேணாம் மாமு, நான் அதுக்காக பேசல. நாளைக்கு நமக்கு புள்ள பொறந்தா கூட யாரும் பாக்க மாட்டாங்களா? என் வீட்டு ஆளுங்களும்  உங்க வீட்டு ஆளுங்களும் என் கூட சகஜமாவே இருக்கமாட்டாங்களா? அப்படி அவங்க என்கிட்ட நல்லா பேசணும்னு நான் என்ன பண்ணனும் மாமு? எனக்கு தெரியல” இயலாதவளாக அவள் பேச, அவளின் ஆதங்கம் வசீகரனுக்கு நன்றாகவே புரிந்தது.
“சில உறவுகளை தவிர மத்த உறவுங்க எல்லாம் வசதி வாய்ப்பையும் பதவியையும் வச்சு தான் மனுஷங்கள எடை போடறாங்க, நீ நல்ல நிலைமையில இருந்தா உன்கிட்ட வந்து பேசுவாங்க. நிலமை தவறிட்டா திரும்பி கூட பாக்க மாட்டாங்க. நீ சொன்ன என்வீட்டு ஆளுங்களும், உன் வீட்டு ஆளுங்களும் அந்த மாதிரி தான். அவங்க உன்கிட்ட அன்பு காட்டினா கூட அது உண்மையான அன்பா இருக்காது சின்னு. அந்த பொய்யான அன்புக்காகவா நீ ஏங்கற?”
“இல்ல, எந்த தப்பும் பண்ணாம அவங்க முன்னாடி அடிபணிஞ்சு நிக்கற நான் அவங்க முன்னாடி தலைநிமிர்ந்து நிக்கணும்”
“குட், அதுக்கு என்கிட்ட ஒரு வழி இருக்கு”
“என்ன மாமு?”
“உனக்கு வேண்டாம்னு பேரு வைக்க சொல்லி யோசனை கொடுத்த ஊரே உன்னையும் உன்னோட வளர்ச்சியையும் பார்த்து மூக்கு மேல விரல வைக்கணும், நம்ம வேண்டாவா இதுனு ஆச்சர்யபடணும். பொம்பளை பிள்ளைங்க சாபம் இல்ல வரம், இனிமேலாச்சும் வேண்டாம்னு எந்த பெண் குழந்தைக்கும் பேர் வைக்காதீங்கனு எல்லாருக்கும் உறைக்கிற மாதிரி நீ உயர்ந்து காட்டணும், உன்னோட வளர்ச்சிய பார்த்து உன் சொந்தக்காரங்க மட்டுமில்ல என் வீட்லயும் மரியாதை தானா தேடி வரும். அந்த அளவுக்கு நீ உயரணும் சின்னு”
கண்களை துடைத்து கொண்டு, “எப்படி மாமு நான் எப்பவும் நினைக்கிற போலவே நீங்களும் சொல்றீங்க? சின்ன வயசுல இருந்தே வேண்டாம்னு இருக்கற இந்த பேரோட நான் எதையாவது சாதிக்கணும், அப்ப தான் பொம்பளை பிள்ளை பாரமில்லனு எல்லாருக்கும் தெரியும்னு நினைப்பேன். அதுக்கு தான் படிச்சே ஆகணும்னு ஊர விட்டு ஓடி வந்து காலேஜ்ல சேர்ந்தேன். படிப்பு இன்னும் ஒரு வருஷத்துல முடிய போவுது, ஆனா இதுல என்ன சாதிக்க போறேன்னு எனக்கே தெரியல மாமு”
“எதாச்சும் பண்ணு, ஆனா உன் அக்காங்க சொன்ன மாதிரி சமையல்கட்டுல வேலைக்காரி மாதிரி மட்டும் நிக்காதே. நான் அதுக்கு உன்னை விட மாட்டேன். சாப்பாடு வீட்டு வேலை எல்லாம் அவசியம்னாலும் அதுலயே முழுநேரம் முழ்கிட கூடாது. அதை தாண்டி சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு”
“ஆனா என்ன சாதிக்கறதுனு தான் தெரியலயே மாமு” என்றாள் 
“உன் அக்கா சொன்ன வேலையே பாரு சின்னு”
“புரியல”
“ஒரு வருஷம் படிச்சு முடிச்சதும் என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்க போறேனு உன்னை நக்கலா கேட்டாங்க இல்ல. கலெக்டராவே ஆயிடு”
“மாமு! விளையாடாதீங்க. நான் கலெக்டரா எப்படி ஆக முடியும்?”
“ஏன்? யார் வேணும்னாலும் கலெக்டர் ஆக முடியும், உன்னால முடியாதா? வேண்டாம் பொண்ணு ஐஏஎஸ்னா சும்மா கெத்தா இருக்காது?”
“மாமு, சீரியசாவா சொல்றீங்க?” கண்களை அகல விரித்தாள்.
“நமக்கு பொறக்க போற குழந்தை மேல சத்தியமா சொல்றேன் சின்னு”
“ஐயோ, அதுக்காக குழந்தை மேல எல்லாம் ஏன் சத்தியம் பண்றீங்க?”
அவளை அழுத்தமாக பார்த்தவன், “குழந்தை பொறக்கறதுக்கான எந்த ஸ்டெப்பும் இன்னும் எடுக்கல, அதுக்குள்ள பொறக்காத குழந்தை மேல சத்தியம் பண்றீங்கனு சண்டை போடறீயா?” என்று அவன் புருவம் உயர்த்தவும் சின்னுவின் முகம் சிவந்து போனது.
“சின்னு சீரியசா பேசிட்டு இருக்கும் போது, வெட்கப்பட்டு மாமுவோட மூடை மாத்தாதே” என்று பொய்யாக மிரட்டிவிட்டு, “நீ பைனல் இயர் படிக்கும் போதே ஐஏஎஸ் எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிடு. காலேஜ் காம்பஸ்ல இருக்கற கோச்சிங் சென்டர்ல ஈவ்னிங் கிளாஸ் சேர்த்து விடறேன். டிகிரி முடிச்சதும், ஐஏஎஸ்க்கு பிரிமிலினரி எக்ஸாம் எழுது”
“ம், என்னால முடியுமா மாமு?”
“கண்டிப்பா முடியும். நாளைக்கே உன்னை கோச்சிங் சென்டர்ல சேர்த்துடறேன். நீ எப்பவும் போல காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்கோ. இங்கே இருந்தா அம்மாவும் அண்ணியும் உன்னை எதாச்சும் மூட் அவுட் பண்ற மாதிரி நடந்துப்பாங்க. ஒரு வருஷம் எதிலயும் டைவர்ட் ஆகாம படி. நானும் பிசினஸ்ல முழுகவனம் செலுத்தறேன். மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ஓகேவா”
இல்லை என்று பலமாக தலையை இடம் வலமாக ஆட்டினாள்
“ஏன் சின்னு?”
“நான் உங்கள விட்டு ஹாஸ்டலுக்கெல்லாம் போக மாட்டேன், உங்க கூட தான் இருப்பேன், இங்கே இருந்தே படிப்பேன்” என்று அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள்.
மனைவியின் கன்னத்தை வருடியபடி, “சின்னு, என் நிலம தெரியாம பேசாதடி. நாம ஒரே வீட்ல இருந்ததுக்கே உன்னை சீண்டிட்டே இருப்பேன். இப்போ ஒரே ரூம்ல உன்னை சீண்டாம எல்லாம் என்னால இருக்க முடியாது சின்னு” என்றான் ஆழ்ந்த குரலில்
“உங்கள யார் சீண்ட வேணாம்னு சொன்னது?” என்றாள் சலுகையாக
“கல்யாணத்துக்கு முன்னாடி சீண்டினது வேற, இப்போ என் சீண்டல் எல்லாம் வேற மாதிரி இருக்கும் சின்னு” என்றவனின் குரல் குழைந்திருந்தது. இதழ்கள் அவளின் இதழ்களை உரசிக் கொண்டு நின்றிருக்க, கரங்கள் அவளின் இடையை அழுத்தியது.
“பரவால்ல” அவள் குரலும் குழைந்து நலிந்து ஒலிக்க
“என்னடி பரவால்ல? காலைல தானே என்கிட்ட கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் வேணாம்னு சொன்னே? மறந்துட்டியா?”
எதிர்பாராமல் நடந்த திருமணத்தினால் காலையில் அவளுக்கு இருந்த மன நிலைமை வேறு. அதற்கு பின்பு வசீகரன் அவளை திருமணம் செய்வதற்காக நடத்திய சாகசங்களை விவரித்ததோடு இடையிடையே அவன் செய்த சீண்டல்களும் தீண்டல்களும் அவளையும் அவன் மேல் மையல் கொள்ள வைத்திருந்தது. அதுமட்டுமில்லாமல் வசீகரன் அவளை ஆட்கொள்ள எத்தனை ஆவலாக இருந்தான் என்பது அவளும் அறிவாள் தானே! 
அதனால் தலையை கவிழ்த்து, “உங்களப்பத்தி முழுசா தெரியாம வேணாம்னு சொல்லிட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்
அவளின் நாடியை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களை தன் கண்களோடு கலக்க விட்டான். “இப்போ என்னை முழுசா தெரிஞ்சுக்கிட்டியா?” அவன் பார்வையில் இதுவரை இருந்த சகஜ நிலை மாறி இருந்தது. அது அவளை விழுங்கும் பார்வை. 
அவன் கண்களை நேராக பார்க்க முடியாமல் பார்வையை தழைத்து கொண்டவள், “ம்” என்றாள்
“ஆனா நான் உன்னை முழுசா தெரிஞ்சுக்கலியே சின்னு” என்றவன் பேச்சை கேட்டதும் கைகளை கொண்டு தன் முகத்தை மூடி வெட்கத்தை மறைக்க முயன்றாள்.
அவளின் கரத்தை விலக்கி குனிந்து அவளை பார்த்தான். “சின்னு, முழுசா உன்னை தெரிஞ்சுக்கவா?” என்று அவள் காதில் ரகசியமாக கேட்க, அவளோ அவன் மார்பில் சாய்ந்து தன் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“சின்னு கொல்றடி என்னை. படிப்புல கவனம் சிதறும்னு பாக்கறேன். உன் படிப்பு முடியறதுக்கு ஒரு வருஷம் தானே இருக்கு. காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்கறீயா? படிப்பு முடிஞ்சதும் நம்ம வாழ்க்கைய தொடங்கலாம். என்ன சொல்றே?”
“உங்கள பிரிஞ்சு நான் ஹாஸ்டலுக்கு போக மாட்டேன். மத்தபடி நீங்க சொல்றத கேக்கறேன்” என்றாள் முடிவாக
“சரி எழுந்து அந்த கப்போர்ட்ல ஒரு பெரிய புக் இருக்கு பாரு, எடுத்துட்டு வா”
“எதுக்கு மாமு?”
“முக்கியமான பொது அறிவு கேள்வி பதில் எல்லாம் அதுல இருக்கு. நான் ரீசனிங் பத்தி சொல்லி தரேன்”
‘எதே’ என்று அவள் அவனை பார்க்க, “உன் போனுக்கு சில வீடியோ லிங்க் அனுப்பறேன், நான் இல்லாதப்போ அதுல கொஞ்சம் பாரு. எங்கே உன் போன்?”
“காலைல உங்க ரூம்னு தெரியாம உள்ளே வந்தப்போ கைல தான் வச்சிருந்தேன். உங்கள திடீர்னு பாத்ததும் பதட்டத்துல கீழே போட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் அத கவனிக்கல மாமு” என்றாள் அவன் என்ன சொல்வானோ என்ற பயம் தெரிந்தது.
“ரூம்ல தானே விழுந்திருக்கு, இரு போன் பண்றேன். ரிங்டோன் வச்சிருக்கே தானே” என்றபடி அவள் எண்ணிற்கு அழைத்தான்.
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
என்ற பாடல் ஒலிக்கவும் சின்னபொண்ணு அதிர்ந்து விழிக்க, வசீகரனின் விழிகள் வியப்பில் விரிந்து கொண்டது.
“சின்னு, இந்த ரிங்டோன் எப்போ மாத்தினே?”
“நேத்து நைட், ரிசப்ஷன் முடிஞ்சதும் உங்களுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பினேனே அப்போ” என்றாள் மெல்லிய குரலில்.
“ஏன் இந்த பாட்டு வச்சிருக்கே?”
“அதுல உங்க பேரு வருது இல்ல. அப்பா உங்க பேரு என்கிட்ட சொன்னப்போ எனக்கு இந்த பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு”
“ஓஹாே என் பேரை கேட்டே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு இதுதான் காரணமா? அந்த பாட்டுல வர்றத நானும் செய்யற மாதிரி யோசிச்சிருக்கியா சின்னு?” ஆழ்ந்த குரலில் கேட்டான்.
அவளிடம் பதிலில்லை மெளனமாக தலை கவிழ்ந்தாள். 
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் தொண்டையை செருமிக் கொண்டு, “சரி போய் புக் எடுத்துட்டு வா” என்றான்.
அவன் கூறிய அலமாரி ஏற்கனவே உயரத்தில் இருந்தது. சின்னபொண்ணு எட்டி அந்த அலமாரியை தொட முயற்சிக்க, அவளின் புடவை விலகி இடை தெரியவும் வசீகரனுக்கு மூச்சடைத்தது. என்ன முயன்றும் பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை.
மிடறு விழுங்கியபடி மனைவிக்கு தெரியாமல் அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான். அதை உணராதவளோ, “எந்த புக் எடுக்கணும் மாமு” என்று கேட்க, அவளால் எடுக்க முடியாத உயரத்தில் கடைக்கோடியில் இருக்கும் புத்தகத்தை காட்டினான்.
அவளோ அவன் காலையில் முத்தமிட பயன்படுத்திய சிறிய இருக்கையை கொண்டு வந்து அலமாரிக்கு முன்னே போட்டு அதில் ஏறி நின்று தன் உடலை வில்லென வளைத்து உயரத்தில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். முடியாமல் போகவே கால் பெருவிரலில் எம்பினாள். அதில் அவள் கால்கள் தடுமாறவும் ஒடிச்சென்று அவளை தாங்கி பிடித்தான்.
வசியின் கரங்கள் கட்டுபாடுகளை மறந்து வரம்பை மீறி அவள் மேனியெங்கும் அலைபாயவும், “மாமு” என்று அவள் தடுமாறினாள். அவளின் இடையை பிடித்து உயரமாக தூக்கி அந்த புத்தகம் இருந்த இடத்தில் நிறுத்தினான். அவள் சுலபமாக அதை எடுத்தபின்பு அவளை மெல்ல கீழே இறக்கினான்.
இருவருக்கும் இடையே புத்தகம் இருந்தாலும், கண்கள் காந்தமென ஒன்றில் மற்றொன்று சிக்கியிருந்தன. “சின்னு”
“ம்”
“உன்னை பக்கத்துல வச்சிட்டு என்னால நல்லவன் வேஷம் போட முடியலடி”
“என்ன சொல்றீங்கனு புரியல” விழித்தாள்
“படிப்பு முடியற வரைக்கும் ஹாஸ்டல்ல தங்கிக்க சின்னு, தினம் காலேஜ்க்கு நான் வருவேன், அங்கே வந்து உன்னை பாத்துக்கறேன். ஹாஸ்டலுக்கு போயிடுறீயா?”
“என்னை ஹாஸ்டலுக்கு அனுப்பறதுலயே குறியா இருக்கீங்க. உங்களுக்கும் நான் வேணாமா மாமு” என்றவளின் உதடுகள் அழுகையில் பிதுங்க அவளை இறுக அணைத்து அவளின் இதழ்களை வன்மையாக புசிக்க தொடங்கியிருந்தான். கரங்கள் அவளை தழுவியதில் அவள் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகம் நழுவியிருக்க, அதை பிடித்து பக்கத்திலிருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவளை படிக்க தயாராகி விட்டது போல அவளை இருகரங்களில் தூக்கி கொண்டு நடந்தான்.
வசீகரனின் அதிரடியில் சின்னுவின் கன்னங்கள் சிவந்து காதுமடல்கள் சூடாகி சிவந்து போயிருந்தது. அவளை அவன் கட்டிலில் கிடத்தியதும், “எனக்கு பாடம் எடுக்கறேன்னு சொன்னீங்க, என்ன பண்றீங்க?” மெல்லிய குரலில் கேட்டாள்.
“இப்பவும் பாடம் தான் எடுக்க போறேன்” என்றவன் தன் புத்தகத்தை திறக்க தொடங்கியிருந்தான். அவளை மேற்கொண்டு பேச விடாமல் இதழ்களை புசித்தபடி அவளுக்குள் சங்கமிக்க ஆரம்பித்தான். தன் அன்பான அக்கறையான பேச்சிலும், சீண்டலிலும் சின்னுவின் மனதை வசீகரித்திருந்தவன் இப்போது தன் விரல்களாலும் இதழ்களாலும் அவளை கொள்ளையிட தொடங்கியிருந்தான். 
கணவனின் கைப்பாவையாக இருந்தவளால் இடையிடையே மாமு என்று முனக மட்டுமே முடிந்தது. அவளின் மெல்லிய முனகல் அவனை பித்தங்கொள்ள செய்ய பெண்மையின் சாகரத்தில் மயங்கி அவளை கிறங்க செய்திருந்தான். 
இதழோடு இதழ் சேர்த்து, 
உயிரோடு உயிர் கோர்த்து 
இருவரும் தங்களை தொலைத்து 
ஒருவரில் மற்றவரை தேடி
விடியும் வரை 
இடைவிடா மோகனம் அங்கே 
மெளனமாக அரங்கேறிக் கொண்டிருந்தது.
(தொடரும்)

One thought on “மெளனம் 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!