தன்னுடைய மறதியால் மனையாள் அனுபவிக்கும் தர்மசங்டங்களை உணர்ந்தான் எனினும், அதற்காக அவள் செய்யும் எல்லாவற்றையும் அவனால் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவள் மனத்தைக் காயப்படுத்திவிடக் கூடாது எனப் பார்த்துப் பார்த்து நடந்துகொள்ளும் போதும், ஏதாவது குறை கண்டுபிடித்து ஏசுகிறாளே என வருந்தினான் ஷ்ரவன்.
அவ்வளவு வெறுப்பு இருந்தால், இந்த உறவே வேண்டாம்னு சொல்லிட்டு ஒரேடியா விலகிருக்கலாம்ல. தவறு என்மேல இருக்குன்னு தழைஞ்சு போனா, என் அன்பையே கொச்சைப்படுத்தறாளே,’ வந்த கோபத்திற்கு அனைவரிடமும் பகிரங்கமாய் உண்மையைச் சொல்லி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென அவன் மனம் பரபரபத்தது.
“அதான்டா! என் ஃப்ரெண்ட்ஸ் உங்க கல்யாணத்துக்குத் தந்த கிஃப்ட, கண்டுபிடின்னு உன் பொண்டாட்டி உனக்குத் தந்த ஹோம்வர்க்,” தருண் கேலி செய்ய,
Advertisement
பரிசுப்பொருளுடன், அதைப்பற்றி விளக்கிய பாவை அவளின் பளிங்கு முகமும் மனக்கண்ணில் வந்து அவனை இம்சித்தது.
‘ஒரு வேளை இதுவும் தான் குணமாக வேண்டுமென அவள் கையாளும் ஒரு யுக்தியா. கோபம் தலைக்கேறும் அளவிற்கு வெறுத்துப்பேசினா என் நினைவுகள் திரும்பிடும்ன்னு என்னை உசுப்பேத்துறாளா,” சிந்தனையில் கரைந்தான்.
அண்ணனின் காதோரம் தலைசாய்த்த தருண், “அவகிட்ட என்னை மாட்டிவிட்டுடாத. ஒரேவொரு க்ளூ தரேன். அது உன் கண்ணெதிரே இந்த ஹால்லதான் இருக்கு,” கூறி தன் அறையை நோக்கி நடந்தான்.
Advertisement
சுற்றிமுற்றி பார்த்தும், பரிசுப்பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாவை அவளின் உள்நோக்கத்தைப் பற்றியும் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவும் இயலவில்லை.
இடியாப்ப சிக்கலாய் மண்டையைக் குடைந்த இல்லறத்தின் மர்மங்களை மறக்கும் மருந்தாக, மென்பொருள் நிறுவனத்தின் கட்டிடம் எழுப்பும் பணித்திட்டத்தில் தன் முழு கவனத்தையும் செலுத்தினான்.
இதற்கிடையில் ரம்யாவோ, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாத தன் அவலநிலையை எண்ணி கூனிக்குறுகினாள். வாய்விட்டு அழக்கூட முடியாத அளவிற்கு, சாருலதா அவளை நிழலாய்த் தொடர்ந்தார்.
ஷ்ரவனை ஒருமுறை அழைத்துப் பேசினால் சங்கடம் தீர்ந்துவிடும் என மனம் ஏங்க, அதை செய்யவிடாமல் அவள் சுயம் குறுக்கே நின்றது. தினம் ஒருமுறை அழைத்து நலன்விசாரித்த தருண் உத்ராவிடமும் கூட அவளால் மனம் திறந்து பேசமுடியவில்லை. கடுகளவு வருத்தத்தைக் காட்டினாலும் அது ஷ்ரவன் காதுகளுக்குச் சென்றுவிடும் என அறிந்தவள் புன்சிரிப்புடன் உறவாடினாள்.
மாமனார் மாமியாரிடமானபேசக் கூடத் திராணி இல்லை அவளுக்கு. அவர்களுடனான பெரும்பாலான தொடர்புகள், குறுஞ்செய்திகளின் வாயிலாக மட்டுமே.
நாட்கள் அதன் போக்கில் ஓட, அதுவே அவர்களின் தினசரி வழக்கமானது.
அன்று புதன்கிழமை. மதிய உணவு உண்ட மயக்கத்தில், உத்ரா குழந்தையுடன் உறங்கச் செல்ல, தொலைக்காட்சி முன் ஐக்கியமானார் திலகா.
திரையில் தான் மிகவும் ரசித்துப் பார்க்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் தொடங்கவிருப்பதைக் கண்டவரின் முகம் புன்னகையில் விரிந்தது.
அதேசமயம் வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவும், “பொறுக்காதே இந்த மார்கெடிங்க் பசங்களுக்கு!” சலித்துக்கொண்டவராக கதவைத் திறந்தார்.
வந்திருப்பது மூத்த மகன் எனக் கண்டவர், “என்னடா ஷ்ரவன். இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட,” வினவிக்கொண்டே அவன் உள்ளே வர வழிவிட்டார்.
“சைட்டுக்குப் போயிருந்தேன் ‘ம்மா. வெயில்ல ரொம்ப நேரம் இருந்ததுல தலை வலிக்க ஆரம்பிச்சிடுத்து. அதான் அப்பாகிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்,” என்றவன்,
“சூடா காபி போட்டுத்தா ‘ம்மா. கொஞ்ச நேரம் தூங்கினால் சரியாகிடும்,” உடைமாற்றிக்கொண்டு வருவதாகக் கூறி நகர்ந்தான்.
கால்மணி நேரத்தில் திரும்பி வந்தவன், அலைபேசியில் தட்டிக்கொண்டிருக்கும் அன்னையின் பக்கத்தில் அமர்ந்தபடி காபி குவளையைத் தேடினான்.
உலகம் மறந்தவராக அலைபேசியில் மூழ்கியிருக்கும் அவர் தோற்றத்தை உற்று நோக்கியவனுக்கு, சமையலறைக்கு எழுந்து சென்றிருப்பாரா எனக் கூடச் சந்தேகமாக இருந்தது.
“காபி எங்கம்மா?” சிடுசிடுத்தான்.
“டூ மினிட்ஸ் டா. இதை நோட் பண்ணிட்டு போறேன்,” அலைபேசியிலிருந்து அவர் எதையோ குறிப்பேட்டில் எழுதிக்கொள்ள,
“எனக்குத் தலைவலின்னு சொல்றேன். என்னைக் கவனிக்காம அந்த ஃபோனை குடைஞ்சிட்டு இருக்குற,” கடிந்தான்.
“இதுவும் உனக்காகத்தான் செஞ்சிட்டிருக்கேன்,” பதிலுக்கு எகிறியவர், அலைபேசியை மகன் கையில் திணித்து,
“பாக்கி மருந்து பெயரை எழுதி, அதுக்கு கீழே இருக்கும் நம்பருக்கு ஃபோன் பண்ணி ஆர்டர் கொடு,” அதட்டி சமையலறைக்குள் புகுந்தார்.
திரையில் ரம்யாவின் பெயரைக் கண்டதும் திடுக்கிட்டான் ஷ்ரவன். தனக்கான மருந்துகளை வாங்கச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள் எனக் கண்டவனின் கண்கள் விரிந்தது.
திலகா சொன்னபடி விவரங்களைக் குறித்துக்கொண்டவன், அந்தக் குறுஞ்செய்தியை மூட, மாமியாருக்கும் மருமகளுக்குமான தகவல் பரிமாற்றம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது என உணர்ந்தான்.
எந்தக் குறுஞ்செய்தியைத் திறந்தாலும் தன்னைப் பற்றியே இருப்பதைக் கவனித்தவனுக்கு, எத்தனை நாட்களாக இது நடக்கிறது எனக் கண்டறியும் ஆவல் மேலோங்கியது.
திரையைத் தள்ள தள்ள ரிப்பன்போல நீண்ட குறுஞ்செய்திகளின் தொடக்கம், அவர்கள் பிரிந்த நாளன்று என்று கண்டுகொண்டான்.
முதல் செய்தி, அன்று அவன் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில். ‘அவர் வீட்டுக்கு வந்துட்டாரா ‘ம்மா?’ என்றிருப்பதைக் கண்டவன்,
‘அடிப்பாவி! இத்தனை அன்பும் அக்கறையும் வச்சுகிட்டு, தள்ளியிரு! பேசாதேன்னு! ஆயிரம் நிபந்தனை போட்டிருக்க,’ முணுமுணுத்தவனின் இதழ்கள் என்னவள் என்ற கர்வத்தில் விரிய,
புது குறுஞ்செய்தி வந்த ஜோரில் அலைபேசி சிணுங்கியது.
‘சொல்ல மறந்துட்டேன்! ரெண்டு வாரத்துக்கு மட்டும் வாங்கிக்கோங்க. அதையே கன்டின்யூ பண்ணலாமா வேண்டாமான்னு டாக்டர் ஒவ்வொரு அப்பாயின்ட்மென்ட் போதும் டெஸ்ட் எடுத்துட்டு சொல்லுவாரு,’ என அவன் தர்மபத்தினிதான் அனுப்பியிருந்தாள்.
திலகா பதில் அனுப்புவதுபோல அவன் பாவலா செய்ய, இமைக்கும் நொடியில் இன்னொரு குறுஞ்செய்தி திரை இறங்கியது.
‘பீரோல ரெட் ஃபோல்ட்ர் வச்சிருக்கேன். ரசீத்த ஷ்ரவன்கிட்ட தந்து பத்திரமா ஃபைல் பண்ணச் சொல்லுங்க. கையோட செய்யச்சொல்லுங்க. இல்லேன்னா மறந்து எங்கேயாவது வச்சிட்டு தேடுவாரு,” வளவளவென்று எழுதியிருந்தாள்.
“நான் என்ன நாள் முழுக்கவா ஆபீஸே கதின்னு சுத்திட்டு இருக்கேன்,” முறைத்தவன், “அவ என்ன சொன்னாலும் நம்பிடுவியா ‘ம்மா,” எனச் செல்லமாக அன்னையின் கன்னத்தைக் கிள்ளினான்.
பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது என மென்சிரிப்புடன் இமைகளை மூடித்திறந்தவர், “நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிகிட்டா அவ ஏன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லப்போகுறா,” என்றார் ஆதங்கத்துடன்.
அன்னையின் ஜாடை பேச்சில் திடுக்கிட, “அப்போ… அப்போ எங்களுக்குள்ள என்ன… என்ன பிரச்சனைன்னு உனக்கு… உனக்குத் தெரியுமா…” வார்த்தைகள் வருவேனா எனச் சண்டித்தனம் செய்தது.
அதற்கும் மென்சிரிப்பு ஒன்றினை உதிர்த்த திலகா, “பிரச்சனைன்னு தெரியும்; ஆனால் என்ன பிரச்சனைன்னு தெரியாது,” என்றார்.
“எப்படிம்மா?” என்றவனின் விழிகள் அகல விரிந்தன.
“கல்யாணமான நாளுலேந்து உங்களை பார்த்துட்டு வரேன்டா. பிறந்த வீடானாலும் சரி; வேற இடத்துக்குப் போகணும்னாலும் சரி; நீ கூட வரலேன்னா பிரோக்ராம் கேன்சில் பண்ணுவாளே தவிர, எந்த இடத்துலயும் தனியாவே தங்கமாட்டா. அப்பேர்ப்பட்டவ அம்மா வீட்டுல தனியா தங்கும்போதே உங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்குன்னு எனக்கு லேசா சந்தேகம் வந்துது.
ரெண்டு நாளுல நீ இல்லாத கதையெல்லாம் சொல்லி அவள அங்கேயே இருக்கச் சொல்லப்போகுறேன்னு சொன்னதும், என் சந்தேகம் ஊர்ஜிதமாயிடுத்து,” சர்வசாதாரணமாகப் பதிலளித்தார்.
அன்று ரம்யாவும் திலகாவை எப்படிச் சமாளித்தான் என்றுதான் ஆயிரம் கோணத்தில் குறுக்கு விசாரணை செய்தாள் என்பது நினைவுக்கு வர,
“நான் கதை சுத்துறேன்னு தெரிஞ்சும் ஏன்மா அமைதியா தலையாட்டின?” ஆவலாய் வினவினான்.
“சூடு ஆறருத்துக்கு முன்னாடி காபியைக் குடி,” எனப் புன்சிரிப்புடன் கையசைத்தவர்,
“உங்களுக்குள்ள ஏற்பட்ட மனஸ்தாபம் எங்க யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நீங்க சாமர்த்தியமா காய் நகர்த்தும்போது, நாங்களும் அதுல தலையிடாம இருக்குறதுதானே பெருந்தன்மை,” எனக் கண்சிமிட்டினார்.
அதைக் கேட்டவனுக்குப் புரையேறியது.
‘மெல்ல குடிடா,” தலையில் தட்டிக்கொடுத்தார்.
“சொல்லக்கூடாதுன்னு இல்ல…. நாங்க இந்த முடிவுக்கு வந்ததுக்குக் காரணம்…” அவன் தொடங்கியதும்,
“எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம் ஷ்ரவன்,” எனத் தடுத்தவர், மகனின் தலைகோதியபடி,
“உங்க ரெண்டுபேருக்குள்ள இருக்கும் அன்யோன்யம் எனக்கு நல்லாவே தெரியும். நீங்களே பேசி சமாதானமாகிடுவீங்கன்னும் தெரியும்,” என மென்னகைத்தார்.
ஷ்ரவனின் முகத்தில் விரக்தி சிரிப்பொன்று தோன்றி மறைய,
“அப்படியே பிரச்சனை கைமீறி போனாலும், நீ வாய்திறந்து சொல்றீயோ இல்லையோ, என் மருமக என்கிட்ட எல்லாத்தையும் கொட்டிடுவா,” நம்பிக்கை ததும்ப பேசினார்.
“அது என்ன, நான் சொல்லலேனாலும் அவ சொல்லுவான்னு சொல்ற. இந்த வீட்டுல அவளுக்கு ஓவர் செல்லம்தான்,” முணுமுணுத்தவன்,
குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்த மாமியார் திடீரென அழைக்கவும், அநாவசியமாக அழைக்கமாட்டார் என்ற யூகத்தில் இரண்டாவது ஒலியிலேயே, அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்கம்மா,” மனையாளின் மெல்லியகுரல், கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின் செவிகளில் விழ, அவனுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.
குளிரூட்டியின் ஜில்லென்ற காற்றும், “லைன்ல இருக்கீங்களா? நான் பேசுறது கேக்குதா?” என ஓயாமல் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தவளின் ரம்மியமான குரலும் கலந்து கிறக்கம் செய்ய, இன்னிசை மழையில் லயித்தவனாக மெத்தையில் சாய்ந்தான்.
ஓரிரண்டு நிமிடங்களுக்கு மறுபக்கத்திலிருந்து பதில் வராமல்போக, அழைப்பைத் துண்டித்து அவளே அழைத்தாள்.
ஹெலோ என மங்கையின் குரல் கேட்டதும், “நான் ரசீத்தை கண்ட இடத்தில் வச்சு மறக்குறதுக்கு முன்னாடி நீயே வந்து ஃபைல் பண்ணிடு,” வம்பு செய்தான்.
“ஷ்ரவன்! நீங்களா!” அதிர்ந்தாள் பெண்.
அவளை இன்னும் சீண்டிப்பார்க்க விழைந்தவன், முட்டிய சிரிப்பைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டு, “நைட் சாப்பிட வேண்டிய மருந்து தீர்ந்துபோய் ரெண்டு நாளாச்சு. இன்னைக்குத்தான் வாங்கச்சொல்லி மெசேஜ் அனுப்பிருக்க. என்ன கணக்கு வச்சிருக்கியோ போ,” குற்றம் சாட்டினான்.
அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவன், “அம்மாவோட ஃபோன் மெமரி வெடிக்கும் அளவுக்கு என்னைப்பற்றி விசாரிச்சு அத்தனை மெஸேஜ் அனுப்பிருக்க ரம்யா. உன் அன்பையும் அக்கறையையும் என்கிட்டயே காட்டக்கூடாதா,” ஏக்கம் வழிய கேட்டான்.
அப்போது அவளிடம் அதே பிடிவாதம்.
சொல்லத்தான் முடியும்; கட்டாயப்படுத்த முடியாது என்ற விரக்தியில் அவன் அலைபேசியை அணைக்க வர, தன் அலைபேசி பளிச்சிடுவதை கவனித்தான்.
“இனி உங்களுக்கே மெஸேஜ் செய்யறேன்,” எனப் படித்தவனுக்கு அவள் வெகுளித்தனத்தை எண்ணி சிரிப்பு முட்டியது.
மீண்டும் அம்மாவின் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டவன், அவள் அழைப்பைத் துண்டிக்கவில்லை என உணர்ந்தான்.
“ஓ மேடம் பேசமாட்டீங்களா!”
.”…”
“உனக்கே இது சிறுபிள்ளைத்தனமா தெரியல ரம்யா,”
“….”
அழுத்தக்காரி எப்படிக் கேட்டாலும் பேசமாட்டாள் என உணர்ந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. கூடவே, எதேச்சையாக அமைந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், அவளிடம் மனம்விட்டுப் பேச வாய்ப்பே கிடைக்காது என்ற நிதர்சனமும் புரிந்தது.
“ஒரு விஷயம் க்ளியர் பண்ணறேன் ரம்யா. விலகியிருந்தால்தான் எனக்குக் குணமாகும்ன்றது உன் நம்பிக்கை. நீ என்கிட்ட சகஜமா பேசிப்பழகினால்தான் எனக்குக் குணமாகும்ன்றது என் நம்பிக்கை,” என்றான் கசந்த குரலில்.
“….”
“சரி ரம்யா! என்னோட பேசுறதும் பேசாததும் உன் இஷ்டம். ஆனால் ஒண்ணே ஒண்ணு யோசிச்சுப்பாரு. என்னையும் அறியாமல்தான் நான் உன்னைத் தண்டிச்சிட்டு இருக்கேன். எல்லாம் தெரிஞ்சியிருந்தும் நீ என்னைத் தண்டிச்சிட்டு இருக்குற,” கனத்த மனத்துடன் கூறினான்.
“….”
இதற்கு மேலும் பேசிப்புரியவைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவன், அழைப்பைத் துண்டித்தான்.
காணாமல் போன தலைவலி யூடர்ன் எடுத்து வந்ததுபோல மண்டையே பாரமானது அவனுக்கு. சோகத்தில் மூழ்க கூடத் தெம்பில்லாமல் தலையை அழுந்த பிடித்துப் படுத்துக்கொண்டான். வராத தூக்கத்தை வா வா எனக் கண்மூடிக் கெஞ்சியவனின் அலைபேசி ஒலித்தது.
‘பெட்டர் ஹாஃப் காலிங்க்,’ திரையில் கண்டதும், உள்ளம் பரவசம் கொண்டபோதும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி,
“ஹெலோ!” என்றான்.
“ஷ்ரவன்! நான் இப்பவே கிளம்பி வரேன்,” விசும்பினாள் அவன் சரிபாதி.
அதைச் சற்றும் எதிர்பார்த்திராதவன், “ஹேய் ரம்யா! அழாதே ப்ளிஸ். என்னாச்சு உனக்கு,” பதறினான்.
“இல்ல ஷ்ரவன்! உங்க நல்லதுக்குத்தான் விலகி இருக்கணும்னு நெனச்சேன். ஆனால் அதையே நீங்க தண்டைனயா எடுத்துக்கிறத என்னால தாங்கிக்கவே முடியல,” விசும்பல்களுக்கு இடையே அவள் பேச முயல,
“ஏதோ வருத்தத்துல சொல்லிட்டேன் ரம்யா. மனசுல போட்டுக் குழப்பிக்காத. நான் சொல்ல வரத கொஞ்சம் பொறுமையா கேக்குறியா,” எனக் கேட்டான்.
“ம்ம்” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.
“விலகி இருக்கணும்னு நினைக்குற உன் எண்ணம் சரின்னு அன்னைக்கே மனசளவுல ஏத்துக்கிட்டேன். அதை உன்கிட்ட வாய்விட்டும் சொன்னேன் தானே,” நினைவூட்டினான்.
“ம்ம்.”
“உன் விருப்பப்படியே எனக்கு முழுசா குணமாகுறவரை பிரிஞ்சு இருக்கலாம். ஆனால் அதுக்காக ஜென்ம விரோதிகள் மாதிரி நடந்துக்கவேண்டாமே,” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தினான்.
“ரொம்ப அதிகமா கேட்கல ரம்யா. தினமும் ஒரு அஞ்சு நிமிஷமாவது என்னோட ஃபோன்ல பேசு. அதுபோதும்! உன் குரலைக் கேட்க கேட்க, என் மனைவி கைக்கெட்டும் தூரத்திலிருந்தும் அவளோட சேர்ந்து வாழ முடியலையேன்னு எனக்குள்ள ஏக்கம் அதிகமாகும். அந்தப் பரிதவிப்பே நான் சீக்கிரம் குணமாகி வர வழிவகுக்கும்னு நம்பறேன்,” மனம்திறந்து பேசினான்.
தன் உருவத்தை மறந்த போதிலும், அவன் தன்மேல் வைத்திருக்கும் காதல் மட்டும் இம்மியளவும் குறையவில்லையே எனக் கண்மூடி உள்வாங்கியவள், விட்டால் அவனிடம் ஓடிச்சென்றுவிடும் மனநிலையில் தவித்தாள்.
“சரி ஷ்ரவன். நாளைலேந்து தினமும் அஞ்சு நிமிஷம் பேசுறேன்,” எனக் கூறி அன்றைய பொழுதுக்குத் தப்பிக்க நினைத்தாள்.
ஐந்து நிமிடங்கள் என ஒரு பேச்சுக்குச் சொன்னால், அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறாளே என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்,
“ரூல்ஸ் ரம்யா!” எனச் செல்லமாக முணுமுணுத்துக்கொள்ள,
“என்ன சொன்னீங்க?” சண்டைக்குப் பாய்ந்தாள்.
“ரூல்ஸ் ரம்யான்னு கூப்பிட்டேன்,” பயமின்றி அழுத்திச் சொன்னவன், “நாளைக்கு கதை இருக்கட்டும். இன்னைக்கு கோட்டாவுல இன்னும் ரெண்டு நிமிஷம் பாக்கியிருக்க. அதுக்குள்ள டாடா சொல்ற,” அவள் போக்கிலேயே மடக்கினான்.
பெண்ணவளுக்கு வெட்கம் அப்பிக்கொள்ள, “நாளைக்குச் சேர்த்துப் பேசுறேன்,” எனக் குழைந்து தப்பிக்கப் பார்த்தாள்.
“ம்ம்… அந்த வாரத்துலேயே போயிட்டு வந்துட்டேன் ஷ்ரவன். நீங்க கெஸ் பண்ணமாதிரி சப்லிமென்ட்ஸ் சாப்பிடச் சொல்லிருக்காங்க. மற்றபடி ஐ ஆம் ஃபைன்,” பகிர்ந்தாள்.
பயந்த அளவிற்கு ஒன்றுமில்லை என நிம்மதி பெருமூச்சுவிட்டவன், மருத்துவர் சொன்னதை விவரமாகப் பகிருமாறு கேட்க, அவளும் மனம்திறந்து பேசினாள்.
எதிர்பாராத விதத்தில் தங்களுக்குள் நிலவி வரும் பனிப்போர் மெல்ல கரைவதாய் உணர்ந்தான். திடீர் தலைவலிக்கும் அதற்குக் காரணமாக இருந்த சூரிய பகவானுக்கும் நன்றிகூறி, அன்னையைத் தேடிப் பறந்தான்.
“அடேய் அடேய்.. சூப்பர் பாட்டுடா,” ரிமோட்டைத் தரச்சொல்லி கெஞ்சினார் திலகா.
“இனி நீ தினமும் நாள்முழுக்க டிவி பார்க்கலாம்; என் பொண்டாட்டி உனக்கு மெசேஜ் அனுப்பி வேலை வாங்கமாட்டா,” கண்சிமிட்டி, அன்னையின் மடியில் தலைவைத்துப் படுத்தான்.
ஊடல் கொண்ட தம்பதிகள் சமரசமாகிவிட்டார்கள் என உணர்ந்தவரின் இதழோரம் புன்சிரிப்பு தேங்கியது. திரைப்படம் பார்க்கும் ஆசையும் மறைந்து, தானே தொலக்காட்சியை அணைத்து, மகனின் தலையைக் கோதியவர்,
“என் மருமக வளைஞ்சு கொடுக்குறதுனால, அவள பேசியே கவுத்துடலாம்னு தப்புக்கணக்குப் போட்டுடாத. மரம் செடியெல்லாம் ஓரளவுக்குத்தான் வளைஞ்சு கொடுக்கும். ஓவரா வருத்தினால், ஒட்டமுடியாத அளவுக்கு ரெண்டா பிளந்துடும்,” உவமை சொல்ல, அது அறிவுரையா எச்சரிக்கையா என ஆழ்ந்த யோசனையில் கரைந்தான் ஷ்ரவன்.
நாளொன்றுக்கு ஐந்து நிமிடங்கள் என்று தொடங்கிய அவர்களது தொலைப்பேசி சம்பாஷணைகள், ஒரே வாரத்தில் இருமுறை, மும்முறை பலமுறை எனப் பல்கிப் பெருகி கணக்கில்லாமல் நீடித்தது.
பனிகாலத்தில் காய்ந்துபோன மரமொன்று வசந்தகாலத்தில் துளிர்விடுவது போல இவர்களுக்கு இடையிலும் காதல் மெல்ல மலர்ந்தது.
தென்னை மரத்தின் கிளைகளுக்கு இடையே அஸ்தமனமாகும் செம்மஞ்சள் நிற சூரியனின் அழகை ரசித்தபடியே மொட்டைமாடியின் மதில்சுவற்றில் சாய்ந்துகொண்டவள், கணவனுக்கு அழைத்தாள்.
இரண்டுமுறை அழைத்தும் அவன் எடுத்தபாடில்லை. இயந்திர கதியாக நடைப்பயிலத் தொடங்கினாள்.
“உன் நல்லதுக்குத்தானே சொல்றோம் ரம்யா,” அவன் அக்கறையாகப் பேச,
“நீங்க வேற ஷ்ரவன்,” என்றவள், அம்மா தன்னை தினமும் எப்படி உபசரிக்கிறார் என வர்ணித்து,
“இந்த ஒரு மாசத்துலேயே நாலு கிலோ ஏறிட்டேன் ஷ்ரவன். இதே ரேட்டுல வெயிட் போட்டேன்னா, அப்புறம் உங்களுக்கு என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறதே குதிரைக்கொம்பாகிடும்,” சிணுங்கினாள்.
“ஒருமுறை செஞ்ச தப்ப மறுபடியும் செய்யமாட்டேன் ரம்யா,” அவன் உள்வாங்கிய குரலில் சொல்ல,
“விளையாட்டுக்குத்தானே சொல்றேன். ஏன் சீரியஸ் ஆகுறீங்க,” சலிப்பாய் கண்டித்தவள்,