Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 18

ரிதம் 18

அடுத்த நாள் அவன் தாமதமாகத்தான் வந்தான். அதுவரை அவள் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தாள்.



Advertisement

அனைவரையுமே மேலே உள்ள ரெக்கார்டிங் அறைக்கு வரச் சொன்னவன், நேராக அங்கேயே சென்றுவிட்டான்.

எல்லோரும் வந்ததும், அவர்களைப் பொதுவாக இருக்கும் அந்த அறையில் அமர வைத்தவன், அவளை மட்டும் ரெக்கார்டிங் அறைக்குள் அழைத்துச் சென்றான். இருவரும் ஹெட் செட்டைக் காதுக்கு மாட்டி, மைக்குக்கு முன்னால் நின்றபடி லிரிக்ஸைப் பாடுவதற்கு ஏற்பப் பொருத்தி வைத்தார்கள்.

Advertisement

Advertisement

வெளியே அமர்ந்திருந்த மற்றவர்கள் அவர்களைக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபடி அங்கிருந்த ஹெட்போனைத் தங்களுக்கு மாட்டிக் கொண்டார்கள். இப்பொழுது அவர்கள் பாடுவதை வெளியே அமர்ந்தபடி இவர்கள் கேட்கலாம்.

“1..2…3” என்று நம்பரைச் சொல்லிவிட்டு அவன் பாட ஆரம்பிக்க, அவள் மட்டுமல்ல அங்கிருந்த மற்ற பாடகர்களும் அவன் குரலில் லயித்துக் கேட்க ஆரம்பித்தார்கள்.

Advertisement

முதல் நாள் செய்த பிசகை அன்று நத்தாஷா செய்யவில்லை. அந்த வரிகளையும் அதே லயத்தோடு உணர்வுபூர்வமாகப் பாடி முடித்தாள். அவளைத் திரும்பிப் பார்க்காமல் அவன் மென்னகையை உதிர்த்தான்.

அவளுக்காகப் பாடல் வரிகளைக் கூட மாற்ற நினைத்தான். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால், கர்மசிரத்தையாக அதன் நுணுக்கங்களை உணர்ந்து பாடுபவள் என்று அவனுக்கு உணர்த்திவிட்டாள்.

“வெல்டன் நத்தாஷா. செமையா பாடின. உன்மேல நான் வச்சிருந்த நம்பிக்கையைக் காப்பாத்திட்ட. இன்னைக்கு மதியானம் டைரக்டர் முன்னாடி ஃபைனல் ரிகர்சலுக்குக் காத்துட்டு இரு” என்று அவளைப் பாராட்டி வெளியில் அனுப்பியவன், சோகமான ஒரு சோலோ பாடலைப் பாட ஆரம்பித்தான் கௌதம்.

பாடல் வரிகளில் மட்டுமல்ல குரலிலும் முகத்திலும் அந்த உணர்வுகளைக் கொண்டு வந்தான். கேட்டுக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவன் அழகிற்கும் திறமைக்கும் உணர்வைப் பிரதிபலிக்கும் திறனுக்கும் நடிக்கவே செல்லலாம் என்று தோன்றியது.

ஏதோ அவன் மனதில் இருக்கும் குமுரலைப் பாடுவது போல அத்தனை பாவனைகளைப் பிடித்தான். உணர்ச்சித்ததும்பப் பாடினான். நத்தாஷாவிற்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு சொட்டு கண்ணீர் அவள் கன்னத்தை நனைக்கும் போதுதான் அதையே அவள் உணர்ந்தாள். கைகள் கொண்டு அதைத் துடைத்து விட்டவள் யாராவது தன்னைப்பார்த்து விட்டார்களா என்று கவனித்தாள். ஆனால் எல்லோருமே அதே நிலையில் தான் இருந்தார்கள்.

பாடி முடித்தவன் கட்டை விரலை உயர்த்தித் தம்ஸப் போல வைத்து ஓகேவா?? என்ற ரீதியில் தலையாட்டிக் கேட்டான். அனைவரும் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைத்தபடி நன்றாக இருந்தது என்று செய்கையால் செய்து காட்டினார்கள்.

தலைக்குக் கொடுத்திருந்த ஹெட்போனைக் கழற்றிவிட்டு வெளியில் வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக ரெக்கார்டிங் அறைக்குள் சென்று தங்களுக்குக் கொடுத்த பாடல்களைப் பாடிவிட்டு வெளியில் வந்தார்கள். அந்தப் படத்திற்காகத் தேர்வு செய்த பாடகர்கள் மட்டும்தான் அந்த அறைக்குள் இருந்தார்கள். மற்றவர்கள் அடுத்த படத்திற்கான பாடல் செஷனில் கீழே இருக்கும் ரெக்கார்டிங் தியேட்டரில்தான் இருந்தார்கள்.

ஒவ்வொருவராகப் பாடும் போது அதில் அவன் கண்டுபிடித்த குறைகளைக் கூறினான். திட்டவில்லை, கடிந்து கொள்ளவும் இல்லை. தட்டிக்கொடுத்துதான் பாட வைத்தான். அதேபோல அவன் பாடிவிட்டு வெளியில் வந்த போதும் தன் பாடலில் ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்கத் தவறவில்லை. ஆனால் குறை இருந்தால்தானே அவர்களால் சுட்டிக்காட்ட முடியும்? அவன் பாடலிலும் குரலிலும் அவர்களைத்தான் அவன் மெஸ்மரிசம் செய்து விட்டானே? பிறகு எப்படி அவன் குரலில் குறையை அவர்களால் கண்டுபிடிக்க முடியும்?

“நல்லா பாடுறிங்க? இது இன்னும் கொஞ்சம் ஏத்திப் பாடுனா நல்லா இருக்கும்.”

“இந்த இடத்துல உச்சரிப்பு கொஞ்சம் அழுத்தமா இருக்கணும்.”

“இந்த இடத்துல உணர்ச்சி பத்தல.”

இப்படி ஒவ்வொருவருக்கும் அவன் எதிர்பார்த்தவற்றைக் கூறிக் கொண்டிருந்தான். ரெக்கார்டிங் அறையினுள்ளே பாடும்போது அவன் இடைநிறுத்தவில்லை.

கையில் நோட்ஸ் போலக் குறித்துக் கொண்டிருந்தவன் வெளியில் வந்த பிறகுதான் அவர்களுக்குப் பொறுமையாக எடுத்துக் கூறினான்.

நத்தாஷா அனைத்தையும் கவனித்துக் கொண்டு சிவனே என்று அமர்ந்திருந்தாள். மற்றவர்களிடமும் கருத்து கேட்டான், அவளிடம் கேட்கவும் இல்லை, அவள் கூறவும் இல்லை.

‘நேத்து நம்மள மட்டும் கூப்பிட்டுத் தனியாக் கண்டிச்சாரு. இன்னைக்கு எல்லார் எதிர்க்கையும் எல்லார்கிட்டயும் நல்லாதான் பேசுறாரு. ஆனா நேத்து அவர் பேசும்போது கோபம் அதிகப்படியா இருந்த மாதிரி ஃபீல் ஆச்சு.. நமக்கு இப்படி கற்பனையா தோணுதா, இல்ல உண்மையிலேயே அப்படித்தானா?’

‘நம்மள அவருக்குப் பிடிக்கலையா? அதனாலதான் கோபப்படுறாரா? இல்ல வேற எதுவுமா? ஆனா எல்லாருக்குமே அவங்களோட குறையைச் சொல்றாரு தானே?’

‘ஆனா உன்னோட குறையை உன்கிட்ட மட்டும் சொன்னாரு. மத்தவங்களுக்குத் தெரியிற மாதிரி சொல்லல?’ என்று அவளது மனம் எடுத்துக் கூறியது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவள் தலையை உலுக்கிக்கொண்டாள்.

‘உனக்குக் கற்பனை அதிகம் டி. கற்பனை பண்ணுங்க, கனவு காணுங்கனு அப்துல் கலாம் ஐயா சொல்லியிருக்காங்க. ஆனா நீ இப்படியெல்லாம் கனவு கண்டால், உன்னுடைய நிம்மதி பறிபோயிடும்’ என்று தனக்குத் தானே கடிந்து கொண்டவள், மற்றவர்களின் பாடலைக் கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

மதிய இடைவெளிக்குப் பிறகு, எல்லோரும் மீண்டும் மேலே அழைக்கப்பட்டார்கள். எல்லோரும் பதட்டமாகச் செல்வது புரிந்தது. ‘நான் தான் புதிய பாடகி, எனக்குப் பதட்டம் இருக்கிறது. இவர்களுக்கு ஏன் இந்தப் பதட்டம்?’ மனதில் நினைத்ததை அவள் ஸ்ரீதரிடம் கேட்டுவிட்டாள்.

“இந்த டைரக்டருக்கு ரொம்பக் கோபம் வரும். பாடல் சரியில்லைனா சிங்கரைப் பிடிச்சுத் திட்ட ஆரம்பிச்சுருவாரு. பெரிய டைரக்டர் வேறல்ல? கொஞ்சம் ப்ரவுடான பேர்வழிதான். நமக்குக் கிடைச்ச இந்தச் சான்ஸ் ரிஜெக்ட் ஆகுறதுக்கும் வாய்ப்பு இருக்கு.”

“பட் கௌதமுக்கு அது பிடிக்காது. அதிர்ந்து பேச மாட்டார். கோபப்பட மாட்டார், பொறுமையா நம்மளோட தவறைச் சுட்டிக்காட்டித் திருத்துவார். எங்ககிட்ட எல்லாம் ஏற்கனவே ரிகர்சல் எடுத்துட்டாரு. இன்னைக்குக் காலைல நடந்தது ஃபைனல் ரிகர்சல். கௌதம் எதிர்க்க மற்றவர்கள் எங்களைத் திட்டுவது பிடிக்காது. அவரும் பண்ண மாட்டாரு, அடுத்தவங்களையும் செய்ய விடமாட்டார். நமக்காக அவர் இந்த ப்ராஜெக்ட்டை ரிஜெக்ட் பண்ணினாலும் பண்ணிடுவாரு” ஸ்ரீதர் பேசிக் கொண்டிருக்க, அவள் விழி விரித்து அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏற்கனவே இதுபோல ஒன்னு நடந்திருக்கு நத்தாஷா. ஒருவாட்டி ஒரு பெரிய டைரக்டர் சான்ஸ் கொடுத்தார். எல்லாம் நல்லபடியாத்தான் போச்சு. ஆனால் திவ்யா கொஞ்சம் பாட்டுல சொதப்பிட்டாள். உடனே அந்த டைரக்டர் கோவமாக் கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்ப கௌதம் என்ன பண்ணாரு தெரியுமா?” என்று கேட்க,

அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

“மன்னிச்சிடுங்க சார், நாங்க எல்லாம் மனுஷங்கதான். தவறு பண்றது மனுஷங்களோட இயல்புதான். நாங்க ஒன்னும் ரோபோ கிடையாது, எங்களுக்குக் கொடுத்த கமெண்ட்டை அப்படியே டெலிவர் பண்றதுக்கு. ரெக்கார்டிங்கின் போது மிஸ்டேக் வந்தா திரும்பவும் டேக் எடுப்போம். சரியா பாடல் வர வரைக்கும் டேக் போய்க்கிட்டே இருக்கும். உங்களுக்கான பாடலை நாங்க கரெக்டா கொடுத்துடுவோம். அதுக்காக நீங்க இப்படிக் கோவப்பட்டுக் கத்த வேண்டிய அவசியமில்லைன்னு முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டார்.”

அவள் வாயைப் பிளந்து “அப்புறம் என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.

“அவரோ வயதான அனுபவம் மிக்க டைரக்டர். இவர் இளையவர். இவர் சொல்றதை அவரால ஏத்துக்க முடியுமா? அதுவும் இத்தனை பேர் எதிர்க்கப் பேசினதை இன்சல்ட் பண்ற மாதிரி நினைச்சுட்டாரு. கோவமாக அவரும் பேச, இவர் அமைதியா கையைக் கட்டிக்கிட்டு, ‘சாரி சார், எனக்கும் என் ட்ரூப்புக்கும் மரியாதை இல்லாத இடத்தில் நான் வொர்க் பண்ண மாட்டேன். நீங்க வேற யாராவது இசையமைப்பாளரைப் பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டாரு. அந்த ஆள் முகத்தைப் பார்க்கணுமே? கடுகடுன்னு வச்சுக்கிட்டு, ‘நீ எப்படி இந்த இண்டஸ்ட்ரில இருக்கிறாய்ன்னு நான் பார்க்கிறேன்’னு கிட்டத்தட்ட மிரட்டிட்டுப் போனாரு.”

அவள் முகத்தில் இன்னும் சுவாரசியம் கூடியது.

“ஆனா அடுத்த ஒரு வாரத்துல வேற ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டுக்கு இந்தப்பாடல்களையே மாத்திப் போட்டுக் கொடுத்துட்டாரு. படமும் ஹிட்டாயிடுச்சு, பாட்டும் ஹிட்டாயிடுச்சு. இந்த வருஷத்தோட பெஸ்ட் மியூசிக் டைரக்டரா கௌதமுக்குப் பரிசு கிடைச்சது. சிறந்த பாடகியா திவ்யாவுக்கும் கிடைச்சுது” என்று முடித்தான் ஸ்ரீதர்.

“கௌதம் சாருக்கு ரொம்பக் கோபம் வருமா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் நத்தாஷா.

“தெரியல, எங்ககிட்ட இதுவரைக்கும் காட்டினதில்ல. அன்னைக்கு அந்தப் பெரிய டைரக்டர்கிட்ட காட்டுனதுதான் நான் முதல்முறையாக அவர் கோபப்பட்டுப் பார்த்தேன். ஆனாலும் நிதானம் தவறல. ஹார்ஷான வார்த்தைகள் பேசல. அந்த டைரக்டர்தான் அப்படிப் பேசினார். அவர் போனதுக்கப்புறம் நான் கூடக் கேட்டேன், ‘உங்களுக்கு அவர் பேசுனதுல கோபம் வரலையா’ன்னு? அதுக்கு என்ன சொன்னாரு தெரியுமா? ‘பாவம் வயசானவரு, அவரை மதிக்கலைன்னாலும் அவர் வயசுக்கு நாம மரியாதை கொடுக்கணும் இல்ல’ன்னு கேட்டாரு.”

“சம்டைம் அவர் முகத்துல கோபம் தெரியும். கோவம் வந்தா தன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு அமைதியா வெளிய போயிடுவாரு. சில நேரங்களில் தன்னைக் கட்டுப்படுத்தக் கண்ணை மூடித் திறப்பாரு. அவ்வளவுதான் நான் பார்த்திருக்கேன்” என்று தோள்களைக் குலுக்கினான் ஸ்ரீதர்.

‘நேற்றும் இதுபோல ஒன்றுதான் நடந்தது. வருபவர் பெரிய டைரக்டர், அவர் வந்து தாங்கள் தவறாகப் பாடக் கூடாது என்பதற்காகச் சரிசெய்து இருக்கிறான். நான் புதியவள் என்பதால் நிறைய தவறுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருக்கிறான்.’

‘அதனால் தன்னைத் தனியாகப் பாட வைத்துத் தன் தவறைச் சுட்டிக்காட்டி இருக்கிறான். இன்றும் மற்றவர்களுக்கு அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்டுகிறான். அவன் சாதாரணமாகத்தான் இருக்கிறான். நீதான் அதிகப்படியாகக் கற்பனை செய்கிறாய்’ என்று தனக்குத் தானே கூறிக்கொண்டவள், அன்று மிகச் சாதாரணமாக இருந்தாள். ஆனால் தன்னால் இந்த ஸ்டுடியோவிற்கும் கௌதமுக்கும் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்பதில் திடமாக இருந்தாள்.

முன்பே டைரக்டர் எல்லாம் வந்து அமர்ந்திருக்க, இவர்கள் அந்த ரெக்கார்டிங் ரூமிற்கும் வெளியே சோபாவில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவனுடைய காரியதரிசி அழைக்கும் போது, ஒவ்வொருவராகச் சென்று பாடிவிட்டு வர வேண்டும். இவளும் மற்றவர்களோடு வெளியில் தான் இருந்தாள். கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது, ஆனால் அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

உள்ளே அவர்களிடம் பேசிவிட்டு வெளியில் வந்தவன், “இங்க பாருங்க யாரும் டென்ஷனாகக் கூடாது. ரொம்ப ரிலாக்ஸா இருங்க. காலைல எப்படி எல்லாரும் சேர்ந்து ரிகர்சல் பண்ணோமோ அதே மாதிரி பண்ணனும். ஏதாவது ஒரு இடத்துல நீங்க மிஸ் பண்ற மாதிரி இருந்தாலும், அது மற்றவங்களுக்குத் தெரியாத மாதிரி மிஸ் மேட்ச் பண்ணிடனும். கூடப் பாடுற கோ-சிங்கர் அதுல கான்சென்ட்ரேட் பண்ணுங்க. மற்றபடி உங்களுக்குப் புதுசா சொல்றதற்கு எதுவும் இல்ல. நல்லா பண்ணுங்க” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

“நத்தாஷா, முதல்ல நம்மளோட பாட்டுதான். நெர்வஸ் எல்லாம் எதுவும் இல்லைல?” என்று கேட்டான் கௌதம்.

“பிராக்டீஸ் நல்லா பண்ணியிருக்கேன். என்னோட பெஸ்ட் கொடுப்பேன்” என்றாள்.

“ஓகே, லெட்ஸ் கோ, ஆல் தி பெஸ்ட்” என்று கூறியவன் கையோடு அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“கௌதம், இதுதான் அந்த நியூ சிங்கரா? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று இயக்குனர் கேட்க, “2020 சரிகமபதநி கான்டெஸ்ட் வின்னர் ஆக வேண்டியவங்க. ஜஸ்ட் மிஸ் ஆகிட்டாங்க. அப்பவே எங்க ட்ரூப்ல இணைந்துட்டாங்க. பட் படிப்பு முடிச்சுட்டு வர்றதுக்கு லேட்டாயிடுச்சு. டிவில பார்த்திருப்பீங்க” என்று நிறுத்திவிட்ட அவனும் பாடுவதற்காக உள்ளே சென்றான்.

இருவரும் தங்களை மறந்து கண்களை மூடியபடி பாட ஆரம்பித்தார்கள். அத்தனை முறை பயிற்சி செய்ததில், அந்தப் பாடல் அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அவனுக்கும் அந்தப் பாடல் வரிகள் அத்துபடிதான்.

இயக்குனரும், உதவி இயக்குனரும், அவருடன் வந்தவர்களும் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்கள். அவன் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு வெளியில் வந்தான். அவள் அங்கேயே நின்றாள்.

“வாவ் ரியலி அமேசிங்! நீங்க சொல்லும்போது எனக்கு நம்பத் தோணல. பட் ரியலி ஆசம் (Awesome). லிரிக்ஸ், மியூசிக், வாய்ஸ் எல்லாமே சூப்பரா இருந்தது. உங்களோட பாடலை நான் பார்த்து ரசிச்சுதான், இந்தப் படத்தை உங்களுக்குக் கொடுக்கணும்னு முடிவு பண்ணேன். ஆனா இந்தப்பொண்ணோட குரலும் அமேசிங். உண்மையிலேயே இவங்களுக்குப் பிரைட் ஃபியூச்சர் இருக்கு” என்று இயக்குனர் கூறிக்கொண்டே அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தார்.

‘அழகாகவும் இருக்கிறாள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர், அதைக் கௌதமிடம் சொல்லவில்லை. அவனிடம் அப்படியெல்லாம் பேச முடியாது என்று அந்த இயக்குனருக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் கௌதமுக்கு அந்த இயக்குனரின் பார்வை புரிந்தது.

“ஓகே நத்தாஷா, நீங்க இங்கிருந்து கிளம்பலாம்” என்று கூறினான்.

“கண்டிப்பா இந்தப்பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்தான். என்ன நான் சொல்றது?” தன் உதவி இயக்குனரிடம் கேட்டார் டைரக்டர். அவரும் ஆமாம் சாமி போட்டார்.

“பாட்டை நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க கௌதம். எவ்வளவு அருமையான லிரிக்ஸாக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்குறது, இசையும் பாடகர்களும் தானே? பெரும்பாலானவங்க அதைச் சிறப்பாவே செய்வாங்க. சிலர் சொதப்பி வைப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கீங்க” என்று நேரிடையாகப் புகழாரம் சூட்டினார்.

“ஓகே சார், அடுத்த பாட்டுக்குப் போகலாம்” என்று கௌதம்தான் அந்தப் பேச்சை கத்தரித்தான். அதன் பிறகு, அடுத்தடுத்த பாடல்களைப் பாட வைத்தான்.

பாடி முடித்தவர்கள் கீழே ரிகர்சல் ஹாலுக்குச் செல்லும்படி கட்டளையிட்டான். கடைசியாக அவன் பாட வேண்டிய அந்த சோகப் பாடலைப் பாடி முடித்தான். டைரக்டருக்கு முழுத் திருப்தி. பாராட்டிவிட்டுப் பாடலைப் பதிவு செய்து கொடுக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!