Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-24

அத்தியாயம்-24

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் கிளட்சை அழுத்தி ஆதித்யாவின் இடது கால் வலிக்கத் தொடங்கியது.

டீ நகரிலிருந்து பீச் சென்று மீண்டும் அண்ணா நகர் திரும்புவது சிரமம் என்று தெரிந்தாலும்,  அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பைத் தக்கவைக்க, அவன் தன் கால் வலியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.



Advertisement

மெரினா கடற்கரை:

அலைகள் கரையை வந்து மோதும் அழகை ரசித்தபடி இருவரும் மணலில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரம் அமைதி நிலவியது. திடீரென்று “சுண்டல்.. சுண்டல்..” என்ற சத்தம் கேட்டதும்

ஆதித்யா அவளை எச்சரிப்பது போல் பார்த்து தலையாட்டினான்.

Advertisement

“சான்ஸே இல்லை மதி.. நீ அந்தச் சுண்டலைச் சாப்பிடக் கூடாது நான் வாங்கித்தர மாட்டேன்.” என்று அவளது ஆசையை முளையிலேயே கிள்ளினான்.

Advertisement

“கஞ்சூஸ்..” என்று முணுமுணுத்தாள்.

“எவ்வளவு சாப்பிடுவ? இப்படியே போனா உனக்கு ஃபுட் பாய்சனிங் ஆகிடும்.”

‘ஃபுட் பாய்சனிங்’ என்றதும் அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். ‘இவனுக்கு ஏதாவது நினைவிருக்கிறதா?‘

Advertisement

“உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு ஃபுட் பாய்சனிங் ஆகும்னு?” என்று ஆர்வம் பரபரக்க கேட்டாள்.

அவன் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான். “இவ்வளவு அன்ஹைஜீனிக்கான ஃபுட்ஸ் சாப்பிட்டா யாருக்கும் ஃபுட் பாய்சனிங் தான் ஆகும்.. இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?”

அவள் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது.

“சரி போலாமா?” என்று கைகளைத் தட்டியபடி எழுந்தான்.

“இவ்வளவு தூரம் பீச்சுக்கு வந்து சுண்டல் கூட சாப்பிட முடியலை.. எல்லாம் இந்த ஹிட்லரால தான்..”

அவள் முணுமுணுத்தது அவனுக்குக் கேட்டது.

“நீ என்ன சாபம் கொடுத்தாலும் என்கிட்ட வேலைக்காகாது சரியா? நோ மீன்ஸ் நோ..” என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

அன்று காதலர் தினம் என்பதால் கடற்கரை முழுவதும் காதலர்கள் கூட்டமாக இருந்தது. ஆங்காங்கே தற்காலிகமாக நிறைய கடைகள் முளைத்திருந்தது.

வண்ண விளக்குகளால் ஜொலித்த ஒரு சாக்லேட் கடையில் காதலர் தினத்திற்காகப் பிரத்யேகமாகச் செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்கப்பட்டன. அங்கு இருந்த இதய வடிவிலான பலூன்கள் மற்றும் அலங்கார விளக்குகள் அவளைக் கவர்ந்தன.

திடீரென்று “வசீ..” என்ற குரல் அருகில் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது, ஒரு அழகான பெண் தன் துணைவனை அழைப்பதைக் கண்டார்கள்.

“என்ன அதி..?” என்று அவன் அன்பாகக் கேட்டான்.வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவன் போல் பொலிவுடன் இருந்தான் அவன்.

அவர்கள் புதிதாகத் திருமணமான தம்பதி போலத் தெரிந்தார்கள்.ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அந்தப் பெண் ஒரு டெடி பியரைக் காட்டி “எனக்கு அது வேணும்.. எவ்வளவு கியூட்டா இருக்குல்ல?” என்றாள்.

“ஆமா கியூட் தான், ஆனா உன்ன விட இல்லை..” என்று அவன் வழிந்தான்.

அவள் வெட்கப்பட்டு அவனை விளையாட்டாக அடித்தாள். “எனக்கு வேணும் வாங்கி குடுங்க..” என்றாள் கொஞ்சலாக.

அவன் விற்பனைப் பெண்ணிடம் விலையைக் கேட்டபோது, அந்தப் பெண்,

“சாரி சார், இது சேல்ஸ்க்கு இல்லை. காதலர்களுக்காக ஒரு கேம் வச்சிருக்கோம். இந்த பேஸ்கட் பால் நெட்ல பாலை(ball) போடுறவங்களுக்கு தான் இந்த டெடி பியர் பரிசு. இதுக்கு பேரு ‘சோல் மேட் பியர்’ (Soul Mate Bear). உங்க காதலி அல்லது மனைவிக்காக நீங்க இதை ஜெயிக்கணும். அப்படி ஜெயிச்சு கொடுத்தா உங்க காதல் சக்சஸ் ஆகும், கல்யாணமானவங்க வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருப்பாங்கன்றது ஒரு சென்டிமென்ட். அந்த டெடி ஒரு இதயத்தை நீட்டுற மாதிரி இருக்கு பாருங்க.. நீங்க உங்க பார்ட்னருக்கு காதலை வாழ்க்கை முழுக்கக் கொடுத்துக்கிட்டே இருப்பீங்கன்னு சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இதை டிசைன் பண்ணிருக்காங்க,” என்று விளக்கினாள் அந்தப் பெண்.

“அதிதி.. இதையெல்லாம் நீ நம்புறியா? முட்டாள்தனமா இல்லை?”

“ஏன் எல்லா பசங்களும் இப்படி இன்சென்சிட்டிவ்-ஆ இருக்கீங்க? இது எவ்வளவு ரொமாண்டிக் தெரியுமா! எனக்குத் தெரியாது, நீ எனக்காக அந்த டெடி பியரை ஜெயிச்சுத் தரணும். அப்போதான் நீ என்னை உண்மையா லவ் பண்றன்னு நான் ஒத்துப்பேன்“ என்று ஆடம் பிடித்தாள்.

“அடிப்பாவி.. இந்தச் சின்ன விஷயத்துக்காக நம்ம காதலையே அடமானம் வைக்கிறியேடி..”

“வாயால வடை சுட்டது போதும்.. முதல்ல கேம்ல ஜெயிக்கிற வழியைப் பாரு..”

“யார்கிட்ட.. இந்த வசீகரன் கிட்டயேவா காலேஜ்ல நான் பேஸ்கட் பால் ஆடினதெல்லாம் மறந்துடுச்சா? இப்ப எப்படி போடுறேன்னு பாரு..” என்று களமிறங்கினான்.

நமது  ஆதியும் மதியும்  இருவர் பேசுவதையும் நாசூக்காக ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய அவர்களுக்கும் ஆர்வம் மேலிட, அங்கேயே நின்று பார்த்தனர்.

“சார் அதுக்கு முன்னாடி, இந்தப் போட்டியில கலந்துக்க நீங்க எங்களோட ‘வேலண்டைன் கிஃப்ட் பாக்ஸ்’ வாங்கணும்,” என்றாள் அந்தப் பெண்.

“இது வேறயா? நல்ல பிசினஸ் ஸ்டிரேட்டஜியா இருக்கே.. 50 ரூபாய் பொம்மைக்கு நாங்க 500 ரூபாய்க்குச் சாக்லேட் பாக்ஸ் வாங்கணுமா? அதி, இது வேஸ்ட் ஆஃப் மணி-னு உனக்குத் தோணலையா?”

“விடுங்க, நான் கேட்டதே தப்பு,” என்று அவள் முகம் திருப்ப.

“ஓகே ஓகே.. முறைக்காதே, வாங்குறேன்..” அவன் பணத்தைக் கொடுத்து இதய வடிவச் சாக்லேட் பாக்ஸை வாங்கி ஓர் அழகிய புன்னகையுடன் தன்னவளிடம் கொடுத்தான்.

“அதி, பாலை என்கிட்ட பாஸ் பண்ணு..”

“ஏன் உனக்கு கையில்லையா நீயே எடுத்துக்க மாட்டியா?”

அவன் தலையில் அடித்துக்கொண்டு..

“கஷ்டகாலம்டி, இதுல நீ எனக்கு ரொமான்ஸ்ச பத்தி கிளாஸ் எடுக்கற..? ஏய் பைத்தியம் நீதான்டி என் லேடி லக், உன் கையால எடுத்து கொடுத்தா பேஸ்கெட்ல விழும், அதான் உன்னை எடுத்து தர சொன்னேன்..

“ஓ அதான் ரீசனா.. சாரி..” என்று அசடு வழிந்துவிட்டு..

“ஆனா  நீங்க கண்ண மூடிட்டு போட்டாலும் விழதான் போகுது.. சிருஷ்டி யுனிவர்சிட்டியோட ஸ்டார் ப்ளேயர் ஆச்சே..”

“வழவழன்னு பேசாமா பந்தைக் குடுடி பொண்டாட்டி..” என்று தன்னவள் கையிலிருந்து  பந்தை வாங்கினான்.

பேஸ்கெட் பால் கூடை சற்று உயரமாகத்தான் இருந்தது..

பந்தை சரியாக குறிபார்த்தவன் லாவகமாக பேஸ்கெட் செய்ய.. அங்கே சுற்றிக் கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

அதிதி  எல்லையற்ற மகிழ்ச்சியில் அவனைக் கட்டிக்கொண்டாள்.

“ஐ லவ் யூ சீனியர்.. யு ஆர் த பெஸ்ட்!”

“ஏய், எல்லாரும் பாக்குறாங்க..” அவனது குரல் மட்டும் புகார் சொன்னதே தவிர, மனம் அதை வெகுவாக ரசித்தது.

“பாக்கட்டும் எனக்கென்ன?  என் புருஷன்.. உலகத்துலயே பெஸ்ட் ஹஸ்பண்ட்.. நான் ஹக்  பண்ணுவேன்,” என்று உரிமையாகச் சொன்னாள் அவன் காதல் மனைவி.

அதற்குள் அந்த விற்பனைப் பெண் டெடி பியரை அவனிடம் கொடுக்க அதை வாங்கி, மண்டியிட்டு தன் மனைவிடம் நீட்டினான்.

அந்த கண் நிறைந்த ஜோடியை பார்க்க அவ்வளவு நிறைவாக இருந்தது..

“ஷோ ஆஃப்ஸ் (Show offs)..”

“சோ கியூட் (So cute)..” என்று ஆதியும்  மதியும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

மதி அந்த ஜோடியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். “எவ்வளவு அழகான ஜோடி.. நாமும் எதிர்காலத்துல இவங்க மாதிரி இருக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா இவரை மாதிரி ஒரு கடூஸ் கூட இருக்கும்போது நான் எப்படி அந்தப் பொண்ணு மாதிரி சிரிக்க முடியும்?” என்று பெருமூச்சு விட்டாள்.

ஆதித்யா மனதிற்குள், “எப்படி சீன் போடுறாங்க..கிரிஞ்சா இருக்கு..ஆன இந்த மதி ஏன் இப்படி டிரீமி ஐஸோட  அவங்களைப் பார்க்குறா? எனக்கு எதோ ஆப்பு ரெடி பண்றான்னு தோணுது.”

அவள் எதிர்பார்த்தபடியே பாவமான பப்பி  ஃபேஸ் வைத்துக்கொண்டு கெஞ்சும் விழிகளால் அவனைப் பார்த்தாள்.

அந்த பார்வைக்கு மசியாமல்.  “இப்ப என்ன?” என்று கடுமையாகக் கேட்டான்.

அவள் உதட்டைப் பிதுக்கினாள். ‘பாரு.. அவரு அந்தப் பொண்ணுக்கிட்ட எப்படி அன்பா பேசுறாரு? இவர் என்னடான்னா நாய் மாதிரி குரைக்கிறாரு..’

“ஒன்னுமில்லை” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“நீ இந்த கேம்ல என்னைப் பார்டிசிபேட் பண்ணச் சொல்லப் போறேன்னு எனக்குத் தெரியும்.. ஆனா மதி இது கப்புல்ஸ்கான விளையாட்டு. நாம ஒன்னும் கப்புல் இல்லை” என்று அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.

“இப்ப யாராவது கேட்டாங்களா? இதை ஒரு சேலஞ்சா எடுத்துக்கோங்களேன்.. எனக்கு சாக்லேட்டும் பிடிக்கும், டெடியும் பிடிக்கும்.. ப்ளீஸ் ஆதி சார்..”

“வேணாம் மதி.. இதுல அர்த்தமே இல்லை..” என்று மறுத்தான்.

“சரி விடுங்க.. எப்பவும் நீங்க நினைக்கிறதைத் தான் செய்வீங்க.. உங்ககிட்ட இதை எதிர்பார்த்தது என் தப்பு தான்” என்று மூக்கை உறிஞ்சினாள்.

அவன் கண்களை உருட்டினான். “நிஜமாவே இவளுக்கு என்னை எப்படி விழவைக்கணும்ன்னு நல்லாத் தெரிஞ்சுருக்கு.. காலையில இருந்து நான் எதையாவது என் இஷ்டத்துக்குச் செஞ்சேனா? எல்லாம் இவ இஷ்டப்படி தானே நடக்குது?”

“இப்ப என்ன, அந்த டெடி வேணும் அதானே.. வா” என்றான் எரிச்சலாக.

“அதைச் கொஞ்சம் சிரிச்சுட்டே சொன்னா என்ன ஹிட்லர்.. எப்பப் பார்த்தாலும் உர்ருன்னு மூஞ்சிய வச்சுக்கிறது..”

முதலில் அவன் சாக்லேட் பாக்ஸ் வாங்கினான்.

மதி ஆசையாக பந்தை எடுத்து அவனிடம் நீட்ட, அவன் அவளை அலட்சியம் செய்துவிட்டுப் வேறு பந்தை எடுத்து இலக்கை குறிவைத்து போட்டான்,

முதல் முறை.. தவறிவிட்டது.

அவள் முகம் வாடியது.

“இன்னொரு சான்ஸ் கிடைக்குமா?” என்று விற்பனையாளரிடம் கேட்டான்.

“அதற்கு இன்னொரு பாக்ஸ் சாக்லேட் வாங்க வேண்டும்” என்றாள் அந்த விற்பனைப்பெண். அவன் வேறு வழியின்றி வாங்கினான்.

இரண்டு…

மூன்று…

நான்கு…

ஒவ்வொரு முறையும் பந்து தவறியது. மதியின் கையில் சாக்லேட் பாக்ஸ்கள் குவிந்தது தான் மிச்சம்.

“பரவாயில்லை சார்.. சாக்லேட் எனக்குப் பிடிக்கும் தான், ஆனா எவ்வளவு சாப்பிட முடியும்? டெடி வேணாம் விட்டுடுங்க.. எதுக்கு வீண் செலவு” என்று மதி சொன்னதைக்கேட்டு எரிச்சலானான் ஆதி.

“இவள் என்ன என்னைக் கையாலாகாதவன் என்று நினைத்துவிட்டாளா?” அவனது ஈகோ சீண்டப்பட்டது.

சுற்றியிருந்தவர்களும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர். “என்னை ஏன் எல்லாரும் பாவப்பட்ட ஜீவன் மாதிரி பார்க்குறாங்க?” என்று பல்லைக் கடித்தான்.

“இன்னொரு பாக்ஸ் குடுங்க..” என்று பிடிவாதமாகக் கேட்டான்.

அந்த விற்பனை பெண்ணும் அவனுக்குப் பரிந்து,

“சார், இந்தத் தடவை விழலைன்னாலும் பரவாயில்லை.. நீங்க அஞ்சு பாக்ஸ் வாங்கிட்டீங்க, அதனால இந்த டெடிய காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கோங்க” என்றாள்.

ஆனால் ஆதி அந்தப்பெண்ணை முறைத்தான்.

“நீங்க தானமா ஒன்னும் தர வேணாம்… என் கேரள் ஃப்ரண்ட் ஆசைப்பட்ட டெடி பியரை நான் என் சொந்த திறமையால ஜெயிச்சு அவளுக்கு குடுப்பேன்.” என்றான் பிடிவாதக் குரலில்.

‘என் கேர்ள்ஃப்ரண்ட்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் மதியின் இதயம் படபடத்தது. நிஜமாகவே அவன் அப்படிச் சொன்னானா?

“ஏன் அப்படிப் பார்க்குற? பால(ball) குடு..”

அவள் முகம் முழுவதும் புன்னகையாக பந்தைக் கொடுத்தாள். அவன் இப்போது முழு கவனத்தையும் கூடையின் மீது வைத்து பந்தை எறிந்தான்.. அது சரியாகக் கூடைக்குள் விழுந்தது!

சுற்றியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தன்னவளுக்காக தான் வென்ற டெடியை  பெருமையாக  அவளிடம் நீட்டி,

“இப்ப ஹேப்பியா?”என்று ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்டான்..

அவள் முகம் கொள்ளா சிரிப்புடன் அதைப் பெற்றுக்கொண்டாள். உணர்ச்சிப்பெருக்கில் அவள் கண்களில் சட்டென்று நீர் முட்டியது.

“வெரி  ஹேப்பி..” என்றாள் அவனைக் காதலுடன் பார்த்து..

“அவன் என்ன லூசா? நாலு தடவை பல்பு வாங்கிட்டு அஞ்சாவது தடவை போட்டதுக்கு என்னமோ வேர்ல்ட் கப் ஜெயிச்ச மாதிரி சீன் போடுறான்” என்றான் வசீகரன் ஏளனமாக,

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அவன் அவனோட கேர்ள் ஃப்ரண்ட் ஆசையை நிறைவேத்த எவ்வளவு கஷ்டப்பட்டான் பாருங்க.. அவன் தான் கிரேட்” என்றாள் அதிதி.

“என்னை விட அவன் ஒன்னும் கிரேட் இல்லை.. நான் எப்படி ஃபர்ஸ்ட் அட்டெம்ட்லயே போட்டேன் பாத்தல்ல?”

“நிச்சயமா நீங்க தான் கிரேட்.. ஆனா அவனும் குறைஞ்சவன் இல்லை. அவன் எத்தனை தடவை போட்டான்றது முக்கியம் இல்லை, ஜெயிக்கிற வரைக்கும் முயற்சி பண்ணான் பாருங்க, அதுதான் முக்கியம்.”

“ஆமா, 2000 ரூபாய் செலவு பண்ணி 200 ரூபாய் பொம்மையை வாங்கியிருக்கான்..”

“வசி, காசு பணத்தைப் பார்த்தா இது சின்ன விஷயம் தான்.. ஆனா தன் காதலியோட சந்தோஷத்துக்காக அவன் போட்ட எஃபர்ட் தான் பெருசு.. அவளுக்காக அவன் எதை வேணும்னாலும் செய்வான்னு தோணுது.”

“போதும்.. அவனை ஏன் இவ்வளவு புகழ்ற.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அடுத்தவங்க கதை நமக்கெதுக்கு?” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“ஏன்.. பொறாமையா?” என்று குறும்பாகக் கேட்டாள்.

“எனக்கா? அந்த லூசர் மேலயா? சான்ஸே இல்லை..”

“என்ன இருந்தாலும் கடைசியில அவன் அவ மனச ஜெயிச்சுட்டான்.. அந்தப் பொண்ணு முகத்துல இருக்குற சந்தோஷத்தைப் பாருங்க..”

“நீ சொல்றதும் சரிதான், சரி நேரமாகுது கிளம்பலாமா கிட்டி?” என்று அவன் கையை நீட்டினான். அவள் தன் கையை அவனுடன்  கைகோர்த்துக்கொண்டாள். இருவரும் நடக்கத்தொடங்கினர்.

“வசி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவங்க ரெண்டு பேர் பேரும் ஆதி,மதியாம்.. ரைமிங்கா இல்ல..”

“அது உனக்கு எப்படி தெரியும்?”

“அவங்க பேசும்போது ஒட்டுக் கேட்டேன்..” என்றாள் அசடு வழிய.

அவன் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.

“ஒட்டுக் கேட்டேன்னு எவ்வளவு பெருமையா சொல்ற பாரு! கியூட்டுடி நீ..”

இருவரும் சிரித்துக்கொண்டே நடக்க, அவர்களது குரல் மெல்ல காற்றில் கரைந்து தேய்ந்தது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!