Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 19

கண்ணாமூச்சி 19

பிரஸ் மீட் லைவ் ஸ்ட்ரீமிங் முடிவடைந்த பிறகும், சோல்மேட் நிறுவனத்தின் மீடியா அறையில் அந்த எல்இடி திரை தணிந்த பிறகும், நிலாவின் இதயம் மட்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பவே இல்லை. ‘சினிமா உலகம் சாராத ஒரு சாதாரண பெண்ணோடு அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்’ என்ற விஷ்வாவின் அந்த ஒற்றை வரி, அவளது சிந்தனைகளை அடியோடு ஆக்கிரமித்திருந்தது.
அனன்யா காபி கப்பை மேஜை மேல் வைத்துவிட்டு, நிலாவின் முகத்தையே கூர்ந்து கவனித்தாள். அவளது உதடுகளில் தானாக அரும்பிய அந்த மெல்லிய புன்னகையை அனன்யாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
“என்ன நிலா… முகம் டக்குனு பிரைட் ஆயிடுச்சு? விஷ்வா சார் நயனிகாவை வச்சு செஞ்சதை நினைச்சு சந்தோஷமா, இல்ல அவர் சொன்ன அந்த ‘லைப் பார்ட்னர்’ தகுதியைக் கேட்டு நிம்மதியா?” என்று அனன்யா கிண்டலாகக் கண் சிமிட்டினாள்.


Advertisement

நிலா சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அனன்யா… நயனிகா பண்ணின தப்புக்கு அவங்களுக்குச் சரியான பாடம் கிடைச்சது, அது வேணா ஒரு நியாயமான விஷயம்னு தோணுச்சு. மத்தபடி அவர் யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன?” என்று மடிக்கணினியைத் திறந்து டேட்டா கோப்புகளை ஆராய்வது போல் பாசாங்கு செய்தாள்.
இருந்தாலும் நிலாவின் மனதில் ஒரு கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. அவள் மெதுவாக அனன்யாவைப் பார்த்து, “அதெல்லாம் போகட்டும் அனன்யா… நேத்து நம்ம ஆபீஸ்க்கு விஷ்வா சார் ஏன் வந்தாரு, அவரு பிரவீன் சாரோட ஃபிரெண்டா? ஆனா அவரு ஏன் என்னைத் தேடி வந்தாரு? அவருக்கு என்னோட பேரு எப்படித் தெரியும்? எனக்கும் அவருக்கும் முன்னபின்ன எந்தவொரு அறிமுகமும் இல்லாதப்போ, அவர் எப்படி என் பேரைச் சொல்லி கூப்பிட்டாரு?” என்று கேட்டாள்.
நிலாவின் இந்தத் திடீர் கேள்வி அனன்யாவைத் திக்குமுக்காடச் செய்தது, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு, “நிலா… நீ ஏதோ தப்பா கேட்டுருப்பேன்னு நினைக்கிறேன். நீயும் அவரும்தான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே, அப்புறம் எப்படி விஷ்வா சாருக்கு உன் பேரு தெரியும்?” என்று மழுப்ப முயன்றாள்.

Advertisement

ஆனால் நிலா விடுவதாக இல்லை. “இல்லை அனன்யா… நான் கண்டிப்பா தப்பா கேட்கல. விஷ்வா சார் ரெண்டு மூணு தடவை என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டதை நான் ரொம்ப தெளிவா கேட்டேன். அதுதான் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,” என்று உறுதியாகக் கூறினாள்.

Advertisement

அனன்யா நிலாவைத் தேற்ற முயன்று, “நிலா, நீ ரொம்ப ஓவர்திங்க் பண்ணாத. நான் உன்னை கூப்பிட்டதைக் கூட அவர் கேட்டிருக்கலாம். தேவையில்லாம அதைப்பத்தி எல்லாம் நினைச்சு நீ ரொம்ப குழப்பிக்காத, சரியா?” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
நிலாவின் கேள்வியால் அனன்யா நிஜமாகவே உள்ளுக்குள் தடுமாறிப் போயிருந்தாள். விஷ்வாவுக்கு நிலா இந்த ஆபீஸில் இருப்பது தெரிந்துவிட்ட நிலையில், அவர் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்கிற கவலை அவளைப் பிடித்து ஆட்டுவித்தது. அவள் நேராகப் பிரவீனின் கேபினுக்குள் சென்று தன் கவலையைக் கொட்டினாள்.
“பிரவீன்! நிலா இப்போ விஷ்வா சார் எப்படி அவ பேரைச் சொன்னார்னு கேட்க ஆரம்பிச்சுட்டா. விஷ்வா சார் நிஜ வாழ்க்கையில நிலாவைத் துரத்த ஆரம்பிச்சார்னா, அவ ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிடுவா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என்றாள் அனன்யா.

Advertisement

பிரவீன் நிதானமாக யோசித்துவிட்டு, “பார்த்துக்கலாம், டென்ஷன் ஆகாத, இப்போதைக்கு நாம நிலாவுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் ஆப்ஷன் கொடுத்துடலாமா? அதனால விஷ்வாவும் நிலாவும் நேர்ல சந்திச்சுக்கிற வாய்ப்பை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும்,” என்று ஒரு யோசனையை முன்வைத்தான்.
அதே சமயம், பிரவீன் அனன்யாவை நிமிர்ந்து பார்த்து, “ஆனா அனன்யா, விஷ்வாவும் நிலாவும் சந்திக்குறதைத் தடுக்க நாம ஏன் முயற்சி பண்ணணும்? விஷ்வாவை மீட் பண்றதோ, அதுக்கப்பறம் அந்த உறவு எப்படி போகணும் அப்படிங்குறதோ நிலா தானே முடிவு பண்ணணும்? ஒருவேளை நிலாவுக்கும் விஷ்வா மேல இண்ட்ரெஸ்ட் இருந்து, அவர் ஏன் தன் மேல இண்ட்ரெஸ்டா இருக்கார்னு மட்டும்தான் அவளுக்குக் குழப்பமா இருக்குனா… நாம ஏன் அவங்ககிட்ட அந்த உண்மையைச் சொல்லக் கூடாது?” என்று கேட்டான்.
“என்ன உண்மை பிரவீன்?” என்று புரியாமல் கேட்டாள் அனன்யா.
“அந்த விர்ச்சுவல் வேர்ல்டு மெர்ஜ் ஆன ரகசியத்தை நாம அவங்ககிட்ட சொல்லிடலாம். தொழில்நுட்பக் கோளாறால அவங்க ரெண்டு பேரும் விர்ச்சுவல் உலகத்துல நிஜமாவே ஒருத்தரோடொருத்தர் பழகியிருக்காங்கங்குற விஷயம் தெரிஞ்சா, அவங்களுக்குள்ள நிஜமாவே ஈர்ப்பு இருக்கும் பட்சத்துல, அது அவங்க ரெண்டு பேருக்கும் ஈசியா ஆகிடும்ல?” என்று பிரவீன் எதார்த்தத்தைப் பேசினான்.
பிரவீனின் இந்தக் கேள்வி அனன்யாவை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவள் சற்று யோசித்துவிட்டு, “எனக்கு ஒன்னும் புரியல பிரவீன். நான் முதல்ல இதைப் பத்தி நிலாகிட்ட நிதானமாப் பேசுறேன். அவளோட மனநிலை என்னன்னு தெரிஞ்சுகிட்டு, அதுக்கப்புறம் நாம என்ன பண்றதுன்னு ஒரு முடிவு எடுக்கலாம்,” என்றாள்.
மதிய உணவு இடைவேளையின் போது, ஆபீஸின் கஃபேவில் நிலாவும் அனன்யாவும் அமர்ந்திருந்தனர். அனன்யா தன் உணவை மெல்ல மென்றபடியே நிலாவை ஆழமாகப் பார்த்தாள். பிரவீன் கேட்ட கேள்விகள் அவளது மனதில் ஓடிக்கொண்டிருக்க, மெதுவாக பேச்சைத் தொடங்கினாள்.
“நிலா… சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்குறேன். ஒருவேளை சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்துக்கு நிஜமாவே உன் மேல காதல் இருந்தா… உன்னைத் தேடி வந்து தன்னோட காதலைச் சொன்னா… நீ அதை ஏத்துக்குவியா?” என்று நேரடியாகக் கேட்டாள். அனன்யாவின் இந்தத் திடீர் கேள்வியைக் கேட்டு நிலா அப்படியே திகைத்து நின்று, தன் கையில் இருந்த ஸ்பூனை மெதுவாகக் கீழே வைத்தாள்.
சுற்றியிருந்த ஐடி ஊழியர்களின் சிரிப்புச் சத்தமும், தட்டுகளின் ஓசையும் நிலாவின் காதுகளில் சட்டென்று மங்கிப்போயின. அவளது இதயம் விநாடிக்கு நூறு முறை துடிப்பது போல் ஒரு பிரமை. அனன்யாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கி, மேஜையின் மீதிருந்த ஏதோ ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள் நிலா.
அவள் தன் பதற்றத்தை மறைக்கத் தன் கைகளை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டு, ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டாள். அனன்யாவை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கி, தன் முன்னால் இருந்த காபி கப்பை வெறித்துப் பார்த்தபடி பேசத் தொடங்கினாள்.
“என்ன அனன்யா விளையாடுறியா? நீ கேக்குறதுக்கு சும்மா ஒரு பேச்சுக்குக் கூட என்னால ஆமானு பதில் சொல்ல முடியாது. ஏன்னா, எதார்த்தம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்,” என்று லேசான தவிப்போடு புன்னகைக்க முயன்றாள் நிலா.
“எதார்த்தம்னா நீ எதைச் சொல்ற நிலா?” என்று அனன்யா அவளது மனம் அறிய விரும்பி.
“நான் விளையாடல நிலா, சீரியஸா கேக்குறேன். ஒருவேளை நிஜமாவே அப்படி நடந்தா உன் முடிவு என்ன?” என்று அனன்யா அவளது கைகளை மென்மையாகப் பற்றிக் கொண்டு வற்புறுத்தினாள்.
நிலா ஆழமாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள். அவளது மனதில் விர்ச்சுவல் உலகில் விஷ்வாவுடன் செலவழித்த அந்தப் பேரன்பின் தருணங்களும், இன்று நிஜத்தில் ஒட்டுமொத்த தேசமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்தின் பிரம்மாண்ட பிம்பமும் மோதித் தவித்தன.
“நிஜத்தைச் சொல்லணும்னா அனன்யா… பயமா இருக்கு,” என்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள் நிலா. “விர்ச்சுவல் உலகத்துல நான் பார்த்த விஷ்வா வேற. அங்கே எந்த முகமூடியும் இல்லாம, எந்த ஆரவாரமும் இல்லாம ஒரு சாதாரண மனுஷனா அவர் என் மனசுக்குள்ள குடியேறினார். அவரோட அந்தப் பேரன்புக்காக என் உயிரையே கொடுக்கலாம்னு தோணுச்சு, அது உண்மைதான். ஆனா, இந்த நிஜ உலகத்து எதார்த்தம் வேற அனன்யா.”
நிலா ஜன்னல் வழியே தெரிந்த டைடல் பார்க்கின் பரபரப்பான வெளி உலகத்தைப் பார்த்தாள்.
“அவர் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடுற ஒரு சூப்பர் ஸ்டார். அவரைச் சுத்தி எப்போவும் கேமராக்களோட வெளிச்சமும், மீடியாவோட பரபரப்பும், நயனிகா மாதிரி ஆட்களோட சதிவலைகளும் இருந்துட்டே இருக்கும். என்னோட இந்த நடுத்தரக் குடும்ப பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறை, இதெல்லாம் அந்த உலகத்துக்கு செட் ஆகாது. விர்ச்சுவல் உலகத்துல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்த அந்த அழகான நினைவுகளை ஒரு இனிமையான கனவா மட்டும் என்னோட மனசுக்குள்ள, யாருக்கும் தெரியாத ரகசிய அறையில பூட்டி வச்சுட்டு, இந்த நிஜ உலகத்துல ஒரு சாதாரண பொண்ணா, அவரோட ரசிகையா மட்டும் என்னோட வாழ்க்கையை வாழந்துட்டு போயிடணும்னுதான் என் மூளை சொல்லுது.”
சற்று நிறுத்திய நிலா, தன் மார்பின் மீது கையை வைத்து, லேசான கண்ணீர்த் துளியோடு புன்னகைத்தாள்.
“ஒருவேளை நீ சொல்ற மாதிரி அவர் என்னை நோக்கி வந்தா கூட, என் பயமும் இந்தச் சமூக எதார்த்தமும் என்னை ஒருபடி பின்வாங்கத்தான் வைக்கும்,” என்று தன் அடிமனதின் நிஜமான தவிப்பை உண்மையாகக் கொட்டினாள் நிலா.
சற்று இடைவெளி விட்டவள், தன் மார்பின் இடப்பக்கம் கையை வைத்துக்கொண்டு, மெல்லிய குரலில் தொடர்ந்தாள், “ஆனா… என் மூளை இப்படிப் பேசினாலும், என் இதயம் என்ன சொல்லுது தெரியுமா? அவர் நேத்து பிரஸ் மீட்ல பேசினப்போ, சினிமா இன்டஸ்ட்ரி இல்லாத ஒரு பொண்ணோடு சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுறேனு சொன்னார்ல… அதைக் கேட்டப்போ எனக்குள்ள ஏதோ ஒன்னு துள்ளிக்குதிச்சது உண்மைதான். அவர் மேல எனக்கு இருக்குறது வெறும் ஈர்ப்பு இல்லை, அதுக்கும் மேல ஏதோ ஒரு ஆழமான அன்பு. ஆனா, அந்த அன்பை நிஜ உலகத்துல வாழ வைக்கிறதுக்கான தைரியம் எனக்கு இருக்கானு கேட்டா… நிஜமா எனக்குத் தெரியல அனன்யா!”
நிலாவின் கண்களில் தேங்கியிருந்த அந்த மெல்லிய கண்ணீரும், அவளது குரலில் இருந்த குழப்பமும் விஷ்வாவின் மீது அவளுக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்பதை அனன்யாவிற்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்தியது.
சென்னை நுங்கம்பாக்கத்தின் எல்டாம்ஸ் ரோட்டில் விஷ்வாவின் ராயல் பிளாக் கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பிரஸ் மீட்டிற்குப் பிறகு ஒட்டுமொத்தத் திரையுலகமும் அவனது அடுத்தகட்ட நகர்வை ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தது. ஆனால், காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த விஷ்வாவின் முகம் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தது.
“விஷ்வா… பிரஸ் மீட் செம ஹிட். நயனிகாவை வச்சு செஞ்சதைப் பத்தி சோஷியல் மீடியாவுல ஏகப்பட்ட மீம்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு,” என்றான் காரை ஓட்டியபடி அவனது மேனேஜர் அரவிந்த்.
காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த விஷ்வா ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபடி, “அரவிந்த்… அதை விடு அரவிந்த், அந்த நயனிகா விஷயமெல்லாம் இப்போ பழைய கதை. இனிமேல் நிலா மட்டும் தான் முக்கியம், அவ பிரவீனோட ஆஃபீஸ்ல வேலை பார்க்குறான்னு இப்போ உறுதியாயிடுச்சு, அவளை பார்த்து பேசணும் அரவிந்த்… என் மனசுல இருக்குறதை அவகிட்ட சொல்லணும்…” என்றான் தீர்க்கமான குரலில்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த அரவிந்த் கவலையுடன் விஷ்வாவை ரியர் வியூவில் பார்த்தான். “விஷ்வா… நீங்க சொல்றதை அவங்க ஒருவேளை ஏத்துக்கலைனா என்ன பண்ணுவீங்க? அவங்களுக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் இல்லாமல் கூட இருக்கலாம். அவங்க உங்க ரசிகையா இருக்கலாம், ஆனா அதுக்காக அவங்க உங்க காதலை ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே?” உண்மை நிலவரம் இப்படியும் இருக்கலாம் என்று எச்சரித்தான் அரவிந்த்.
“அதுமட்டும் இல்லாம, நிலாவைப் பார்க்குறதுக்காக நீங்க அடிக்கடி பிரவீனோட ஆபீஸ்க்குப் போறதும் சரியில்லை. அது பிரவீனோட வேலைக்கும் பிராப்ளத்தை உண்டாக்கும். பிரஸ்மீட்டுக்குப் பிறகு மீடியாக்காரங்க நீங்க எங்க போறீங்க, என்ன பண்றீங்கனு தீவிரமா கண்காணிச்சுட்டு இருக்காங்க. இந்தச் சூழ்நிலைல நீங்க அங்கே போறது மீடியா கண்ணுல பட்டா, எல்லாமே ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சிக்கலாயிடும், நிலாவுக்கும் அது பெரிய பிராப்ளத்தை ஏற்படுத்தும். நீங்க நிலா கூட ஒரு உண்மையான, கண்ணியமான ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு நினைச்சா, ரொம்ப நிதானமாவும் கவனமாவும் தான் அடி எடுத்து வைக்கணும்,” என்று எச்சரித்தான்.
விஷ்வா இரு கைகளாலும் முகத்தைத் தேய்த்துக் கொண்டு, தீவிரமாக யோசித்தான். “நீ சொல்றது எல்லாமே நானும் யோசிச்சுப் பார்த்தேன் அரவிந்த். நிலாவுக்கோ பிரவீனுக்கோ தொந்தரவு குடுக்குற மாதிரி நான் அவங்களோட ஆபீஸ்க்கு அடிக்கடி போய் தொந்தரவு பண்ண மாட்டேன். நான் அங்கே போறது இதுவே கடைசி தடவையா இருக்கும். பிரவின்கிட்ட பேசி, நிலாவோட பர்சனல் டீடைல்ஸ்… அட்லீஸ்ட் அவளோட போன் நம்பரையாவது எப்படியாச்சும் வாங்கித் தரச் சொல்லி கேட்கப் போறேன். அது கிடைச்சா போதும், நான் அவகிட்ட நேரடியா பேசிப்பேன்,” என்றான். 
“ஆனாலும் நீங்க ஒரு விஷயத்தை யோசிக்கணும் விஷ்வா, விர்ச்சுவல் உலகத்துல நீங்க சந்திச்ச நிலா மாதிரியே இந்தப் பொண்ணு இருக்கலாம், ஆனா அதே குணத்தோட நீங்க எதிர்பார்க்குற மாதிரி இருப்பான்னு என்ன நிச்சயம்? முகம் அதே மாதிரி இருக்குங்கறதுக்காக கேரக்டரும் அதே மாதிரி இருக்கணும்னு என்ன நிச்சயம்?” லாஜிக் பேசினான் அரவிந்த்.
குழப்பிவிட்டான் அரவிந்த். லேசாகத் தலை வலிப்பது போலிருந்தது விஷ்வாவுக்கு. பதிலேதும் சொல்லாமல் பிரவீனுக்கு ஃபோன் செய்தான். அந்தப்பக்கம் பிரவீன் அழைப்பை எடுக்க, “பிரவீன், உன்கிட்ட கொஞ்சம் பேசணும், சாயங்காலம் வீட்டுக்கு வா, ஆமாம், நாம் சேர்ந்தே டின்னர் சாப்பிடலாம்.” என்று ஃபோனை வைத்தான்.
“வண்டிய வீட்டுக்குத் திருப்பு அரவிந்த், தலை வலிக்குது. எதுவானாலும் யோசிச்சு முடிவெடுக்கணும்,” என்றபடி சீட்டில் தலை சாய்த்து கண்களை மூடிகொண்டான் விஷ்வா. வண்டி மெதுவாக யூ-டர்ன் எடுத்து விஷ்வாவின் வீடு நோக்கி விரைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!