Skip to content
Post Views: 35
கண்ணாமூச்சி 20
அதே தலைவலிதான் பிரவீனுக்கும், ஏதோ விளையாட்டாக விஷ்வாவை வைத்துத் தனது செயலிக்கு பீட்டா டெஸ்டிங் செய்யப் போக, அதனால் இப்போது தன் நண்பனை ஏமாற்றத்திலும் விரக்தியிலும் ஆழ்த்திவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி அவனை அரித்துக் கொண்டிருந்தது.
அனன்யாவும் மதிய உணவு இடைவேளைக்குப் பின் வந்து பெரிதாக மகிழும்படி எதுவும் சொல்லவில்லை. நிலாவுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. விஷ்வாவின் ஃபோன் காலுக்குப் பிறகு அனன்யாவைத் தன் கேபினுக்கு அழைத்தான் பிரவீன்.
“இப்போதான் விஷ்வா கூப்பிட்டான் அனன்யா, சாயங்காலம் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கான், எனக்குத் தெரிஞ்சு நிலா விஷயம்தான் பேசுவான், என்ன பண்றதுன்னு தெயயல எனக்கு,” என்றான் ஆற்றாமையுடன்.
Advertisement
“பிரவீன், நீங்க தப்பா நினைக்கலைன்னா நானும் உங்களோட வரலாமா? நிலா பத்தின விஷயம்னா நானும் அவர் என்ன நினைக்குறார்னு தெரிஞ்சுக்க விரும்புறேன்,” என்றாள் அனன்யா.
“சாரி அனன்யா, விஷ்வாவோட வீடு அவனோட ரொம்ப பிரைவேட்டான ஸ்பேஸ், அவனோட அனுமதி இல்லாம என்னையும் அரவிந்தையும் தவிர யாருமே அங்க போக முடியாது. அவன் ப்ரொட்யூசர்ஸை கூட வீட்டுல வெச்சு சந்திக்க மாட்டான், அதுக்குன்னு அந்த பில்டிங்கல வேற ஃப்ளோர்ல ஆஃபீஸ் இருக்கு,” என்றான் மறுக்கும் விதமாக.
“அப்பறம், விஷ்வாவோட பிரைவசிக்காக நாங்க ஃபாலோ பண்ற இன்னொரு விஷயம், தெரிஞ்சவங்க ஃபிரெண்ட்ஸ் அப்படின்னு யாரையுமே அவனோட வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டோம், கூட்டிட்டு போக அவன்கிட்ட அனுமதியும் கேக்க மாட்டோம், ஃபிரெண்டுங்கறதால அவனால மறுக்க முடியாம கூட போகலாம்ல, அதான்” என்றான்.
Advertisement
விஷ்வாவுடனான பிரவீனின் நட்பின் ஆழம் அனன்யாவுக்குப் புரிந்தது, ஆனால் அதனால் நிலா குறித்த விஷயத்தில் அவளும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. “புரியுது பிரவீன், ஆனா அவர் நிலா பத்தி உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணப் போறாருன்னா, எனக்கும் அவர் கிட்ட சில விஷயங்கள் சொல்லணும், வீட்டுக்குப் போக முடியாதுன்னா, எங்கயாவது வெளில சாப்பிடப் போகலாம்,” என்றாள்.
Advertisement
“சரி, நான் விஷ்வாகிட்ட பேசிட்டு சொல்றேன்,” என்று அனன்யாவை அனுப்பி வைத்தவன், விஷ்வாவுக்கு அழைத்தான்.
அப்போதுதான் விஷ்வா வீட்டிற்குள் நுழைந்திருந்தான், “காஃபி போட்டுக் குடுக்கவா விஷ்வா?” என்ற அரவிந்தின் கேள்விக்கு மறுப்பாகத் தலையசைத்தவன், “நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன், நீ கிளம்பு” என்றபடி தனது ஃபோனை சோஃபாவில் போட்டுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான். அதனால் பிரவீனின் அழைப்பை எடுத்தது அரவிந்த். பிரவீனும் அரவிந்திடம் எதுவும் சொல்ல விரும்பாமல் ஏழரை மணி வாக்கில் வருவதாகச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.
மாலை ஆறரை மணியளவில், இருவரும் அவரவர் கார்களில் விஷ்வாவின் அபார்ட்மென்ட் காம்பெளக்ஸ் வந்தடைய, அனன்யாவைக் கீழேயே காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றான் பிரவீன்.
Advertisement
எப்போதும் போல் டிஜிட்டல் பூட்டின் பாஸ்கீ எண்களை அழுத்திக் கதவைத் திறந்துகொண்டு உள்ள நுழைந்தவன் கண்டது, அந்த வீட்டின் ஒப்பன் கிச்சனில் பரபரப்பாகச் சமைத்துக் கொண்டிருந்த விஷ்வாவைதான்.
“என்னடா பண்ற விஷ்வா, ரெஸ்ட் எடுக்காம நீயே ஏன் சமைச்சுக்கிட்டு இருக்க? ஏதாவது ஆர்டர் பண்ணிருக்கலாம்ல? அரவிந்த் எங்க?” என்றான் நண்பனைச் செல்லமாகக் கடிந்துகொண்டபடி.
“வெளில சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதுடா பிரவீன், அதோட ஒரே லோ-கார்ப் ஹை-ப்ரோட்டீன் டயட் சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. அதான் அம்மா ரெசிபி நோட்புக் பார்த்து சாம்பார் சாதமும் பொட்டேட்டோ ஃப்ரையும் பண்ணிருக்கேன். கூல்டிரிங்ஸ் வேணும் போல இருந்துச்சு அதான் அரவிந்த் வாங்கப் போயிருக்கான்” என்றான் விஷ்வா உற்சாகமாக.
நண்பனின் சிரிப்பு பிரவீனுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது, ஆனாலும் கேட்டான், “நீ ஓகேதானே விஷ்வா?”
“எனக்கென்னடா, ஐ ஆம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னும் சொல்லப்போனா சந்தோஷமா இருக்கேன், தெளிவா இருக்கேன், அதான் உன்கிட்ட மனசு விட்டுப் பேசலாம்னு கூப்பிட்டேன், நிலா விஷயம் பத்தி,” என்றான் விஷ்வா. அவன் முகத்தில் தெளிவு இருந்தது. குரலும் தீர்க்கமாகவே ஒலித்தது.
“ஹ்ம்ம், விஷ்வா… இது நம்ம ஃபிரெண்ட்ஷிப் ரூல்ஸுக்கு எதிரான விஷயம்தான், ஆனா அனன்யா உன்கிட்ட பேசணும்னு சொன்னா, நிலா விஷயமாத்தான்,” என்றான் பிரவீன் தயக்கமாக.
விஷ்வா அவனைக் குழப்பமாகப் பார்க்க, “அனன்யாவும் நிலாவும், சின்ன வயசுல இருந்தே பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ், நம்மளை மாதிரியே, ஒன்னாவே படிச்சு வளர்ந்தவங்க,” என்றான் அனன்யாவின் வருகையை விளக்கும் விதமாக.
இதைக் கேட்ட விஷ்வாவின் முகம் பிரகாசமடைந்தது, “ஓ, அப்படியா… அதுவும் நல்லதுதான், எங்கே? இப்போ வந்திருக்காங்களா?” என்றான்.
“கீழ பார்க்கிங்ல வெயிட் பண்ணிட்டு இருக்கா, உன்கிட்ட கேட்டுட்டு கூப்பிடலாம்னு…” என்று அவன் முடிப்பதற்குள், விஷ்வா அரவிந்தை அழைத்து, அவன் வரும்போது பார்க்கிங்கில் இருந்து அனன்யாவை அழைத்து வரும்படி கூறினான்.
அரவிந்துடன் வீட்டின் உள்ளே வந்த அனன்யா, சற்று தயங்க, “ஹாய் அனன்யா, பிளீஸ், உள்ள வாங்க, பீ கம்ஃபர்ட்டபிள்,” என்றபடி அவளுக்கு கூல்ட்ரிங்க் கொடுக்க, உலகமே அண்ணாந்து வியக்கும் விஷ்வா, தானே விருந்தோம்பல் செய்வதைப் பார்த்து வாயடைத்துப் போனாள்.
அனன்யா ஏதோ சொல்ல வாயெடுக்க, “முதல்ல சாப்பிடலாம், அப்பறம் பேசலாம், விஷ்வா கையால சமைச்ச சாப்பாடு எல்லாருக்கும் கிடைக்காது,” என்றவன் அவளுக்குப் பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல், பிரவீனுடன் சேர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறினான்.
தயக்கத்துடனே சாப்பிட்டாலும், உணவின் சுவை மிக அருமையாக இருந்தது, அதை வெளிப்படையாகவும் சொன்னாள் அனன்யா, எதிர்பாராத விதமாக நண்பர்களுடனான அவனுடைய தனிப்பட்ட நேரத்தில் தலையிடுவதற்கு மன்னிப்பும் கோரினாள்.
“நீங்க நிலாவுக்கு ஃபிரெண்ட்னா, இனிமேல் எனக்கும் ஃபிரெண்ட்தான் என்றவன், “நீங்க இருக்கறதும் ஒருவகையில நல்லதுதான்,” என்றான்.
சிறிது நேரம் மெளனமாக இருந்தவன், “எனக்கு நிலாகிட்ட பேசணும், பிரவீன்,” என்றான்.
“ஆனா, விஷ்வா…” என்ற பிரவீனை இடைமறித்தவன்.
“விர்ச்சுவலா நான் பார்த்த நிலா நிஜம் இல்லை, அது வெறும் இல்யூஷன், உன் ஆஃபீஸ்ல வேலை பார்க்குற, அனன்யாவோட ஃபிரெண்ட் நிலாவுக்கும் அந்த இல்யூஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதுதானே?” என்றான் விஷ்வா.
அவன் குரலில் குழப்பத்திற்கான எந்தவொரு சாயலும் இல்லை, “அது உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும், இன்னும் சொல்லப்போனா சோல்மேட்ல நான் பார்த்த நிலா மாதிரி இந்த நிலாவோட குணாதிசயங்கள் இருக்காமலும் போகலாம். அதனால இப்போ, நிலாவை நிஜமாவே சந்திச்சு, அவளைப் பத்தி தெரிஞ்சுக்க விரும்புறேன்,” என்ற விஷ்வாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.
அவளது பார்வையை நேர்கொண்டு சந்தித்த விஷ்வா, “ஒரு நடிகனா இல்லாம, வெறும் விஷ்வா அப்படிங்குற சாதாரண மனுஷனா நிலாகிட்ட என்னை அறிமுகப் படுத்திக்கிட்டு, என்னைப் பத்தி அவளுக்குப் புரிய வைக்கணும்னு நினைக்கிறேன், அனன்யா” என்றான்.
“ஒருவேளை நிலாக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டா?” என்ற அனன்யாவின் கேள்விக்கு,
“நிலா உண்மையாவே, என் மேல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா, நான் அதுக்கப்பறம் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” அவன் வார்த்தைகளை நம்ப வேண்டுமென்று தோன்றியது அனன்யாவுக்கு.
“ஆனா, நிலாவே ஒத்துக்கிட்டாலும், அவங்க வீட்ல இதையெல்லாம் ஒத்துக்கறது ரொம்ப கஷ்டம் சார், ஒரு தடவை இன்ஸ்டாகிராம்ல ஸ்டேட்டஸ் போட்டதுக்கே அவளோட அப்பா ரொம்ப கோவிச்சுக்கிட்டார், இப்போ ஒரு சினிமா ஆக்டரை அவ காதலிக்குறான்னு தெரிஞ்சா, என்ன நடக்கும்னே தெரியாது… அதனாலேயே நிலா ஒதுதுக்கமலும் போகலாம்…” என்றாள் பயத்துடன்.
“நிலாக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னா, அப்பறம் அவங்களை எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணுறது என்னோட பொறுப்பு,” ஆறுதலாகப் பதிலளித்தான் விஷ்வா.
“ஆனா இந்த சோஷியல் மீடியா, உங்க ஃபேன்ஸ், இவங்கல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு இப்போ நயனிகா விஷயத்துலையே பார்த்தேனே… அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் நிலாவால தாங்கிக்க முடியாது விஷ்வா சார், அவ ரொம்ப சாஃப்ட்டான பொண்ணு” என்றாள் அனன்யா வருத்தமாக.
“பிளீஸ், நிலா என்னோட காதலை ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும், எல்லா விதத்துலயும் அவளோட சேஃப்டி என்னோட பொறுப்பு. நீங்க தைரியமா இருங்க,” என்று வாக்களித்தான். அவன் பேச்சில் உண்மை இருப்பது போல் தோன்றியது அனன்யாவுக்கு. பயமாக இருந்தாலும், எல்லாவற்றையும் மீறி இந்தக் காதல் வெற்றி பெற்றால் நிலா மிகவும் சந்தோஷமாக இருப்பாள் என்று தோன்றியது.
“சரி, இப்போ என்ன பண்ணப் போறீங்க,” என்றவளின் கேள்விக்கு,
“நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும், நிலாவோட ஃபோன் நம்பர் எனக்கு வேணும்…” என்றான் விஷ்வா அனன்யாவைப் பார்த்து.
சில நொடிகள் விஷ்வாவின் கண்களைச் சந்தித்தவள், அதில் உண்மையைக் கண்டாளோ, தீராக் காதலைக் கண்டாளோ, “உங்க ஃபோன் குடுங்க,” என்று அவன் மொபைலை வாங்கி அதில் நிலாவின் மொபைல் எண்ணை உள்ளிட்டுக் கொடுத்தாள்.
“உங்களோட ஃபிரெண்ட்ஸ், உங்களோட அனுமதி இல்லாம உங்க வீட்டுக்குக் கூட யாரையும் கூட்டிட்டு வர யோசிக்குறாங்க விஷ்வா சார், ஆனா நான் என் ஃபிரெண்டோட அனுமதி இல்லாம, அவளோட பர்சனல் ஃபோன் நம்பரை உங்களுக்கு குடுத்திருக்கேன். தயவு செஞ்சு அதைத் தப்பா மட்டும் யூஸ் பண்ணிடாதீங்க. நீங்க ரொம்ப டீசண்டானவரு, பெண்கள் கிட்ட ரொம்ப கண்ணியமா நடந்துப்பீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போவும் அதே மாதிரியே நடந்துப்பீங்கன்னு நம்புறேன்,” என்று கூறிவிட்டு விடைபெற்றாள் அனன்யா.
ஃபோனில் இருந்த நிலாவின் எண்ணை ஏதோ பொக்கிஷத்தைப் பார்ப்பதுபோல் விஷ்வா பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவன் எதுவும் பேசமாட்டான் என்று புரிந்துகொண்ட அரவிந்தும் பிரவீனும் கூட விஷ்வாவுக்குத் தனிமை கொடுத்து கிளம்பினர்.
எட்டரை மணியளவில் வீட்டுக்கு வந்த நிலா, பெற்றோருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்குள் வந்தாள். மனதில் மதியம் அனன்யா கேட்ட கேள்வியை இப்போது தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்…
“இதெல்லாம் சாத்தியமா? விஷ்வாக்கு என் மேல காதல் வருமா? ஏன் வரும்? நான் அவருக்கு எந்த விதத்துலயும் நிகரானவளே இல்லையே?” தூக்கம் வராமல் முரண்டியது.
ஃபோனை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள், ஹாலில் இருந்த தங்கம்மாவிடம், “அம்மா நான் கொஞ்ச நேரம் மாடில போய் பாட்டு கேக்கப் போறேன், வர்றீங்களா?” என்றாள்.
அவர் சீரியல் மும்முரத்தில் இல்லை என்று தலையசைக்க, நிலா அந்த நிலாக்காயும் இரவில், மொட்டை மாடியில் ஜாதிமல்லிக் கொடியின் கீழ் கால் நீட்டி அமர்ந்து, பாட்டிற்காக மொபைலை ஆன் செய்ய…
“பிரைவேட் நம்பர்” என்ற பெயருடன் அதில் ஓர் அழைப்பு வந்தது. ஏதோ தெரியாத எண் என்று அழைப்பை நிராகரித்தவள், ஒரு பாட்டைப் போட்டுக்கொண்டு, அது இயர்பட்ஸ் மூலம் அவள் காதுகளில் ஒலிக்க, கண்களை மூடினாள். மறுபடியும் அதே எண்ணிலிருந்து அழைப்பு காதுக்குள் ஒலித்தது. மறுபடியும் நிராகரித்தாள், இதமான இரவில் இது என்ன தொந்தரவு என்ற எரிச்சலோடு.
சில நொடிகள் கடந்தன, மீண்டும் இசை நின்று “பிரைவேட் நம்பரின்” அழைப்பு… யார்தான் அழைக்கிறார்கள், என்று திட்டுவதற்காகவே அழைப்பை ஏற்றவள், ஏதும் பேசும் முன், அந்த முனையில் ஒரு கம்பீர ஆண் குரல் ஒலித்தது.
“ஹலோ, நிலா… நிலாதானே? நான் விஷ்வா… விஸ்வநாத் பேசுறேன்…”
error: Content is protected !!