Skip to content
Post Views: 55
ரிதம் 19
அடுத்து வந்த ஒரு வாரமும் அதே பாடலின் ரிகர்சல் சென்றது. அந்த ரிகர்சல் எல்லாம் கீழே உள்ள ரெக்கார்டிங் அறையில்தான் நடந்தது. எல்லோருமே இப்பொழுது நன்றாகப் பாடினார்கள்.
Advertisement
ரெக்கார்டிங் நாளும் வந்தது. காலையில் ஒரு சிலருக்கு நேரத்தைக் குறித்துக் கொடுத்தவன், மதியத்தில் மற்றவர்களுக்குக் குறித்துக் கொடுத்தான்.
நத்தாஷாவிற்கு மதியம் வரச் சொல்லித்தான் குறித்துக் கொடுத்தான். அவளும் ப்ரீத்தியோடு வந்திருந்தாள். காலையில் பாடலைப் பாடி முடித்தவர்கள், அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றார்கள்.
Advertisement
Advertisement
இவளுடைய முறை வரும்போது இவளை மேலே வரச் சொன்னவன், இருவரும் சேர்ந்து பாடும் அந்த டூயட் பாடலைப் பாடி முடித்தார்கள். பிறகு அவன் பாடும் சோலோ பாடலைப் பாடினான்.
காதில் இருந்த ஹெட்செட்டைக் கழற்றும்போது எதேச்சையாக அவன் பார்வை அவளின் புறம் சென்றது. அவள் மெய்மறந்து அமர்ந்திருப்பது தெரிந்தது.
Advertisement
அவள் முன்னால் வந்து நின்றான். அப்போதுதான் தன் உணர்வுக்கு வந்தவள் எழுந்து நின்றாள்.
“பாட்டு நல்லா இருந்துச்சா?? லிரிக்ஸ்”??
இத்தனை நாட்கள் கழித்து இன்று ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று அவனுக்கும் தெரியவில்லை, அவளுக்கும் புரியவில்லை. ஆனாலும் பதில் சொன்னாள்.
“ரொம்ப நல்லா இருந்துச்சு சார். இந்த பாடலிலும் வார்த்தைகள் எல்லாம் ரொம்ப அருமை. பாட்டுக்கே நீங்க உயிர் கொடுத்த மாதிரி இருக்கு. இந்த படத்துல நடிக்கிற நடிகரும் இதே போல உணர்ச்சிப் பிழம்போடு நடிச்சா நல்லா இருக்கும்,” தன்னை மறந்து மனதில் இருப்பதை அப்படியே பாராட்டு மழையாகப் பொழிந்தாள்.
“மத்தவங்க சொல்லும்போது தெரியல நத்தாஷா. ஆனா நீ சொல்லும்போது அது உண்மையாத்தான் இருக்கும்னு நம்பத் தோணுது. நம்மளோட அருமை நம்மள விட மத்தவங்களுக்குத்தான் நல்லா தெரியும். உன் குரலோட அருமை உனக்கு புரியாது. அது எனக்கு நல்லா தெரியும்,” என்றான்.
அவள் பதில் கூறவில்லை, வெறும் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தினாள்.
“நீ பாடுன இந்த முதல் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, உனக்கு பெஸ்ட் ஃபீமேல் சிங்கர் அவார்டு கிடைச்சுதுனா எனக்கு என்ன கிப்ட் தருவ”? என்று கேட்டான்.
அவள் தடுமாறினாள்.
“சொல்லு நத்தாஷா, ஏதாவது கிப்ட் கொடுப்ப தானே”? நமட்டுச் சிரிப்போடு கேட்டான்.
“இந்த வாய்ப்பே எனக்கு நீங்க கொடுத்த கிப்ட் தான் சார். கண்டிப்பா என்னால முடிஞ்ச எந்தக் கிப்டையும் உங்களுக்குக் கொடுக்க நான் தயாராக இருக்கேன்,” என்று அவன் மீது இருக்கும் நம்பிக்கையில் வாக்குக் கொடுத்தாள்.
“நான் கிப்டை இப்ப கேக்க மாட்டேன். நீ என்னைக்கு பெஸ்ட் சிங்கர் அவார்டு வாங்குறியோ, அன்னைக்கு சொல்றேன் எனக்கு என்ன கிப்ட் வேணும்னு,” என்றான். அவள் சரி என்று தலையாட்டினாள்.
“இது உங்களுடைய முதல் திரைப்பாடலுக்கான பேமெண்ட்,” என்று செக் அடங்கிய கவரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
கண்கள் பனிக்க அதைப் பெற்றுக்கொண்டவள், கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
“நீங்க ஸ்ட்ரகில் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னால பேமெண்ட் முதல்லயே தர முடியாது. எல்லாருக்கும் ஃபாலோ பண்ணுற அதே புரோட்டக்காலை நான் உங்களுக்கும் ஃபாலோ பண்ணித்தான் ஆகணும். பட் ட்ரஸ்ட் மீ, இனிமே பேமெண்ட்ல எந்த டிலேவும் வராது,” என்றான் கௌதம்.
“சார், இதுவே எனக்கு சீக்கிரம்தான். எனக்கு முதல்ல பிராக்டிஸ் கொடுத்து த்ரீ டூ சிக்ஸ் மன்த்க்கு அப்புறம்தான் பாட்டு கொடுப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க ரெண்டே வாரத்துக்குள்ள பிராக்டிஸ் கொடுத்து, ரிகர்சல் வச்சு, அப்கமிங் மூவியிலேயே எனக்குப் பாட்டு கொடுத்திருக்கீங்க. எத்தனை பேருக்கு சார் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும்? உங்களைப் போல ஒரு சில நல்லவங்க இருக்கறதுனாலதான் இந்த பூமியில மழை பெய்யுது. தோல்வியை மட்டுமே சந்திச்சுட்டிருந்த எனக்கு முதல் முறையா வெற்றியைக் கொடுத்திருக்கீங்க சார்,” அவள் நெகிழ்வாகக் கூறும்போதே கண்கள் கலங்கிவிட்டன.
“நோ மோர் டியர்ஸ், நத்தாஷா. இனிமே உனக்குத் தோல்வி இல்லை, வெற்றி மட்டும்தான். அதேபோல இனிமே உன் கண்ணிலிருந்து கண்ணீர் வரக்கூடாது. உங்க அப்பாவோட இறப்புக்கு நீ சிந்தின கண்ணீர்தான் உன்னோட கடைசி கண்ணீரா இருக்கணும். கடந்த இந்த வருஷத்துல வாழ்க்கையோட நீ போராடிட்டுத்தானே இருக்க?? அதே தைரியத்தோட இரு. வாழ்க்கை உனக்கு நன்மையை மட்டும் செய்யும். இனி எப்பவும் உன் முகத்துல இந்தக் கண்ணீரை நான் பார்க்கக் கூடாது நத்தாஷா,” என்று கூறியவன் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்குப் புரியவில்லை.
ஆனால் ஒரு நல்ல தோழமை கிடைத்ததாக நினைத்தாள். கவரைப் பிரித்துச் செக்கைக் கவனித்தாள். “சார், ஃபைவ் லாக்ஸா? நீங்க செக்கை மாத்திக் கொடுத்துட்டீங்களா”?? என்று கேட்டபடி அவள் பெயரை கவனித்தாள்.
அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் புன்னகையோடு நின்றிருந்தான். “சார், சச் ஏ பிக் அமௌன்ட்? அதுவும் முதல் பாட்டுக்கு,” என்று தவிப்பாகக் கேட்டாள்.
அதிக பணம் என்பது ஆபத்துதானே?? அதுவும் சினிமா உலகத்தில்? தங்கள் வேலையை விட அதிகமாகப் பணம் கொடுத்தால், அது எதற்காக இருக்கும் என்ற தவிப்பு ஏற்பட்டது.
“நத்தாஷா, நான் முதல்லயே சொன்னதுதான். இங்க யாரும் பெரியவங்க சின்னவங்கன்னு இல்லை, நாம எல்லாரும் ஒரு குரூப். ஒரே ஆலமரத்துக்குக் கீழ இருக்கிற விழுதுகள். இங்க புதுசு பழசு அதெல்லாம் இல்லை, எல்லாருக்கும் ஒரே பேமெண்ட்தான். அதுவும் இந்த பேமெண்ட் உங்களுக்கு எவ்வளவு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்னு எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி நீங்க சம்பாதிச்சு சேலரி வாங்கி இருப்பீங்க. ஆனா உங்களோட பேஷன்ல சம்பாதித்த முதல் பேமெண்ட். உங்க அம்மா கைல கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கங்க. ஏன்னா இன்னைக்கு அவங்க இல்லைன்னா இது சாத்தியப்பட்டிருக்காது. அன்னைக்கு அவங்க கணவனுக்குக் கட்டுப்பட்டு இருந்தவங்க, இன்னைக்கு உன்னோட சிறகை விரிச்சுப் பறக்கறதுக்கு உனக்கு அனுமதி கொடுத்திருக்காங்க,” என்றான்.
“என்னதான் அவங்க எனக்கு அனுமதி கொடுத்தாலும், நீங்க வாய்ப்புக் கொடுக்கலைன்னா எதுவுமே இல்லை சார்,” அவன் கூற வருவது அவளுக்குப் புரியாமல் ஒன்றுமில்லை. ஆனால் வெகுசிலர்தான் தனக்குக் கிடைத்த பெருமையைப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். இவன் செய்த உதவியைக் கூடத் தன் தாய்க்குச் சமர்ப்பணம் செய்கிறான். ‘ஒரு நிமிடம் தவறாக நினைத்துவிட்டேனே??’ என்று மனம் வருந்தினாள்.
“கண்டிப்பா சார். ஆனா உங்களுக்கும் நான் ரொம்ப ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கும், எனக்கு உறுதுணையா இருந்தவங்களுக்கும் கண்டிப்பா காலம் முழுக்க நான் உண்மையாய் இருப்பேன் சார்,” என்றாள்.
“ஓகே, நோ மோர் டியர்ஸ், போய் என்ஜாய் பண்ணுங்க.”
“அப்புறம் சார், ஒரே ஒரு ரிக்வெஸ்ட்,” என்றாள் தயக்கமாக.
“இங்க இருக்கிற யாரும் முதலாளி தொழிலாளின்னு இல்லை, மேல கீழன்னு இல்லை. சோ, என்கிட்ட இந்தத் தயக்கம் உனக்குத் தேவையில்லாதது. நீ நம்ம குரூப்ல சேர்ந்துட்ட. ரிக்வெஸ்ட்ன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்ல வேண்டாம். என்ன சொல்லணுமோ சொல்லு,” என்றான்.
“என்னோட தங்கச்சி பேரு ராகினி. அவள் உங்களோட மிகப்பெரிய ஃபேன். உங்களைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டுட்டே இருக்காள்,” என்று அவள் சொல்லும்போதே அவன் இடைப்புகுந்தான்.
“அவங்களைக் கூட்டிட்டு வாங்கன்னு உன்கிட்ட எப்பயோ சொல்லிட்டேனே நத்தாஷா?? நானும் மறந்துட்டேன். நாளைக்கே கூட்டிட்டு வா,” என்றான்.
“இல்லை சார், மியூசிக் கம்போசிஷன் ரொம்ப பிஸியா போயிட்டிருந்தது. அதான் இதெல்லாம் முடிஞ்ச பிறகு, உங்ககிட்ட பர்மிஷன் கேட்டுட்டுக்கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன்.”
“ஒண்ணும் பிரச்சனை இல்லை, இந்த வாரத்துல எப்ப வேணாலும் கூட்டிட்டு வாங்க. நாளைக்கே இருந்தாலும் நோ இஸ்யூஸ். டைரக்டர் இன்னும் படத்தை முடிக்கல, சோ படத்தோட கம்போசிங்கிற்கு லேட் ஆகும்,” என்றான்.
முகம் மலரத் தலையாட்டிவிட்டு கீழே வந்தவள், ப்ரீத்தியைக் கட்டி அணைத்துத் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். அவள் பின்னோடு வந்தவனுக்கு அது தவறாமல் பட்டது.
மாலை ஆறு மணி தாண்டிக் கொண்டிருந்ததால் ரமேஷும் அவர்களைத் தேடி உள்ளே வந்துவிட்டான். அவள் அவனிடமும் தன் செக்கைக் காட்டிச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அதன் பிறகு கௌதமிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும், ராஜேஷின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் படிகளில் ஏறிச் சென்றாள். ப்ரீத்தியும் அவளுடனே சென்றாள்.
கௌதம் சொன்னது போலத் தாயைப் பார்த்ததும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி எழுந்தாள். தன் அறையில் படித்துக் கொண்டிருந்த ராகினியும் குரல் கேட்டு வெளியில் வந்து விஷயத்தைத் தெரிந்துகொண்டு, தன் தமக்கையைக் கட்டி அணைத்துத் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
“அப்பா படத்துக்கு முன்னாடி செக்கை வச்சிடுமா. ஒரே பாட்டுக்கு இத்தனை சம்பளம் கிடைக்கும்னு எனக்குத் தெரியாது. உங்க அப்பா இருந்து பார்த்துச் சந்தோஷப்படக் கொடுத்து வைக்கல. அவர் வேண்டாம்னு சொல்லும்போது, நானாவது அடம் பிடிச்சு உன்னை அப்பவே அனுப்பி வச்சிருந்தா இந்நேரம் நீ பெரிய பாடகியாயிருப்ப. அவரும் நம்மளோட இருந்திருப்பார், உன் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும். சினிமா உலகத்துல இருக்கிறவங்க எல்லாரும் கெட்டவங்க இல்லைன்னு இந்தத் தம்பி நிரூபிச்சுட்டாரு,” என்று கண் கலங்கக் கூறினார்.
அதன் பிறகு அந்தப் பணத்தை மாற்றி வீட்டிற்கு முன்பணம்கூடக் கொடுத்து வராததைச் சொல்லி, ரமேஷிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தார்கள். அவன் வேண்டாம் என்றான், ஆனால் வற்புறுத்திக் கொடுத்திருந்தார்கள்.
அடகு வைத்த தாயின் கம்மலை மீட்க வேண்டுமென்று அதற்காகப் பணம் எடுத்துத் தனியாக வைத்தாள். பிறகு வீட்டுச் செலவிற்கு என்று பிரித்தார்கள்.
………
“முதல் பாட்டுக்கே அஞ்சு லட்ச ரூபாவா”? மென்னகையோடு கேட்ட தன் தாயைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“ரொம்ப கஷ்டப்படுறா அம்மா. நான் கூப்பிட்ட ஒரு வார்த்தைக்காக எல்லாத்தையும் விட்டுட்டு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்காங்க. இந்த பணம் அவங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். ரமேஷும், ப்ரீத்தியும் அவளுக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. நானும் ஹெல்ப் பண்றேன்னு சொன்னா அவள் அக்செப்ட் பண்ண மாட்டாள். இப்போதைக்கு என்னால இப்படித்தான் உதவி பண்ண முடியும்,” என்றான்.
“சப்போஸ் நத்தாஷா மத்த யாருக்காவது இதை ஷேர் பண்ணிட்டா அப்ப என்ன பண்ணுவ”? என்று கேட்டார் மகாலட்சுமி.
“அவளோட குணத்துக்கு அப்படிப் பண்ண மாட்டா அம்மா. அண்ட் மோர் ஓவர், நாம முதல்ல இருந்த நிலைமை வேற, இப்ப இருக்கிற நிலைமை வேற. குரூப்ல இருக்கிற எல்லாருக்கும் ஒரு பாட்டுக்கு டூ லேக்ஸ் கிட்டதான் கொடுக்கிறேன். ஐ நோ, இதைவிடக் கம்மியாவும் கொடுக்கலாம். ஆனா என்னை நம்பி வந்திருக்கவங்களுக்கு நல்லா பண்ணனும்னு நினைக்கிறேன் அம்மா. நிறைய படங்கள் வருது. நெக்ஸ்ட் மந்தும் ஒரு படத்துக்கு மியூசிக் கம்போசிஷன் இருக்கு. அப்ப எல்லாருக்குமே அஞ்சு லட்ச ரூபாய்னு பேமெண்ட்டை ஏத்திடலாம். அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது நத்தாஷாவா இருக்கட்டும்,” என்றான்.
“நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் இரைப்பது போலவா”? புன்னகையோடு அவன் தாய் கேட்க,
“எல்லாருக்கும் நல்லா பண்ணனும்னு நான் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்ததுதான் அம்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்குச் சேலரி தௌஸண்ட் டிஜிட்லதான் இருந்தது. இந்த வருஷம்தான் லாக்ஸ்ல வந்துச்சு. லாஸ்ட் த்ரீ மன்த்ஸாத்தான் அதை டூ லாக்ஸா மாத்துனேன். நெக்ஸ்ட் மந்த் அதை ஃபைவ் லாக்ஸா மாத்திட்டுப் போறேன்.”
“நீ உன்னைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நல்லது பண்ணனும்னு நினைக்கிற, எனக்கு அது தெரியும். சும்மா உன் வாயைப் பிடுங்குறதுக்காகக் கேட்டேன். சரி அதெல்லாம் விடு, என்ன முடிவு எடுத்திருக்க”?
“எதைப் பத்திம்மா“?
“நத்தாஷாவைப் பற்றித்தான்.”
“இப்போதைக்கு நான் எதைப் பற்றியும் யோசிக்கல அம்மா. கொஞ்ச நாள் போகட்டும்,” என்றான்.
“சரி சாப்பிட வா,” என்று அவனை அழைத்துச் சென்றார்.
error: Content is protected !!