Skip to content
Post Views: 59
ரிதம் 20
நாட்கள் இப்படியே அழகாக உருண்டு சென்றன…
Advertisement
அந்தப் படத்தின் முழு கம்போசிங்கும் நடந்து முடிந்திருந்தது. ஒரு படத்தின் பாடலைப் பாடிவிட்டதனால், பயிற்சி தினமும் இருந்திருக்கவில்லை நத்தாஷாவிற்கு. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும்தான் இருக்கும்.
அகாடமியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவர்களுக்குப் பழைய பாடகர்கள் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், நத்தாஷாவிற்கு அந்த அளவிற்கு அனுபவம் இல்லாததால் அவள் அதைச் செய்யவில்லை.
Advertisement
Advertisement
ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் இருக்கும்போதுதான் எல்லா பாடகர்களும் அங்கே கூடுவார்கள். மற்ற நேரத்தில் அட்டவணைக்கு ஏற்பத்தான் பாடகர்கள் அங்கே வந்து செல்வார்கள். அதுவும் காலை, மதியம் என்று இரண்டு வேளைகளில் பிரிந்திருப்பார்கள். இவளுக்கும் மாறி மாறி பாடகர்களோடு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட, அதற்கு மட்டும் அவள் வந்து சென்று கொண்டிருந்தாள்.
அடுத்த படத்தில் யார் யார் பாட இருக்கிறார்கள் என்ற பெயர் பட்டியலிலும் நத்தாஷாவின் பெயர் இருந்தது.
Advertisement
பொதுவாக ஒரு படத்தில் பாடுபவர்களுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு இருக்காது. வெகு சிலருக்குத்தான் இருக்கும். வெகு சில சமயங்களில், குறிப்பிட்ட அந்தப் பாடலை இந்த பாடகர் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றும்போது, இப்படி நடப்பதுதான். அதனால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே அவன் கொடுத்ததுதான். அதனால் அவனைக் கேள்வி கேட்கும் நிலையில் யாரும் இருந்திருக்கவில்லை.
ஆனால், திவ்யாவிற்கு மட்டும் மனதில் ஏதோ ஒரு நெருடல். அதை ஹேமந்திடம் பகிர்ந்து கொண்டாள். ஆனால், நன்றாகப் பேசும் நத்தாஷாவின் மீது அவனுக்கு நன்மதிப்பு இருந்ததால், அவனும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
முதலில் வந்த அந்தப் பெரிய டைரக்டரின் படத்திலும் திவ்யாவிற்குப் பாடல் கிடைத்திருக்கவில்லை. இப்பொழுது அடுத்த படத்திலும் வாய்ப்பு இல்லை. அதனால் மனம் ஏனோ குமைந்து கொண்டிருந்தது. கொட்டித் தீர்க்கத்தான் ஆள் இல்லை அவளுக்கு.
இதற்கு நடுவில் ராகினி மதுரைக்குச் சென்று பரீட்சையை எழுதிவிட்டு வந்தாள். தாயும் மகளுமாக மதுரை வீட்டிற்குச் சென்றுவிட, இவளும் ப்ரீத்தியும் அவர்கள் வீட்டில் பொழுதைக் கழித்தார்கள்.
அவர்கள் தங்கியிருக்கும்போதே வீடு வாடகைக்கு வந்து யாரோ கேட்கிறார்கள் என்று அவர்களுக்கே வீட்டில் சாவியை ஒப்படைத்துவிட்டு, நன்றாகத் தேர்வை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.
“டி.சி எல்லாம் நெக்ஸ்ட் மந்த் வந்து வாங்கிக்க சொல்லிட்டாங்க அக்கா. ஆனா எங்க அப்ளிகேஷன் வாங்கணும்னு நீங்க கொஞ்சம் கௌதம் சார் கிட்ட கேட்டுப் பாருங்க. அப்படியே நானும் மீட் பண்றதுக்குக் கேட்டுப் பாருங்க,” என்றாள் ராகினி.
அவள் ஏற்கனவே கேட்டு வைத்ததுதான். ஆனால், பரீட்சை படிப்பு என்று இருந்ததால் அது தள்ளிப்போனது. கௌதமும் மிக பிஸியாக இருந்தான். அவன் சொன்ன மறுநாள் அவளால் அழைத்துச் செல்ல முடியவில்லை. தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட, அதைக் கவனிப்பதற்கே அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பணம் வந்ததும் பொருட்செலவும் சேர்ந்து வந்தது.
கௌதம் மியூசிக் கம்போசிங்கில் பிஸியாகிவிட, நத்தாஷா அவனைத் தொல்லை செய்யவில்லை. இப்பொழுது பரீட்சை முடிந்ததால், அவனிடம் சென்று கேட்டுவிட்டு ராகினியை அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோலக் கல்லூரி தொடர்பான விஷயங்களையும் பேசிவிட வேண்டும் என்று நினைத்தவள், அன்று அகாடமிக்கு வந்த பிறகு அவனைச் சந்தித்துப் பேசுவதற்காக அவனுடைய காரியதரிசியிடம் கேட்டு நின்றாள்.
“நான் கேட்டுட்டுச் சொல்றேன் நத்தாஷா,” என்றவள், சற்று நேரத்திலேயே அவளுக்கு அழைப்பு விடுத்து மேலே வரச் சொன்னாள்.
இவளும் இரண்டாம் தளத்திற்குச் சென்று, அனுமதி பெற்று கௌதம் அறைக்குச் சென்று நின்றாள்.
“உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் நத்தாஷா. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிப் பாக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அதுவும் நம்ம ட்ரூப் மெம்பர்ஸ்க்கு. முதல்ல உக்காரு,” என்றவன், லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.
அவளுக்குக் குடிப்பதற்குப் பானம் கொண்டு வரப்பட, பார்வையால் அதைக் குடிக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் லேப்டாப்பிற்குள் தன் பார்வையைப் புகுத்திக்கொண்டான்.
“நீங்க பிஸியாயிருக்கீங்கன்னா நான் அப்புறம் வேணா வரேன். எதுவும் முக்கியமான விஷயம் இல்லை,” என்றாள் நத்தாஷா.
“நோ நோ, ஒரு சின்ன வேலைதான். பாதியில நிறுத்த முடியாது. கிவ் மீ டூ மினிட்ஸ்,” என்றவன் தன் வேலையில் மும்மரமாகிவிட, அவள் அந்த அறையை நோட்டமிட்டாள்.
பார்வை சுவரையெல்லாம் சுற்றி வந்து, கடைசியில் அவன் உபயோகித்துக் கொண்டிருந்த டேபிளின் மீது நின்றது. அதில் அவன் தாயின் புகைப்படமிருக்க, அதைக் கையில் எடுத்தாள்.
மலர்ந்த புன்னகையோடு இருந்த மகாலட்சுமியைப் பார்க்கும்போது அவள் முகத்திலும் அந்த மென்னகை ஒட்டிக்கொண்டது.
“வெல்,” என்ற ஆழ்ந்த பெருமூச்சை இட்டுக்கொண்டு, லேப்டாப்பைத் திருப்பி வைத்துவிட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.
“அப்புறம் எப்படி இருக்க”? என்று மந்தகாசப் புன்னகையுடன் கேட்டான்.
சட்டென்று அவன் கேட்ட கேள்வியில் அவளுக்குப் புன்னகை வந்துவிட்டது.
“சாரி சாரி, நான் நேத்துக்கூட உங்களைப் பார்த்தேன். நீங்க ரொம்ப நாள் பார்க்காதவங்ககிட்ட கேக்குற மாதிரி கேள்வி கேட்கவும் எனக்குச் சிரிப்பு வந்துருச்சு,” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“சிரிக்கிறதுக்குக் காரணம் தேவையில்லை. நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்கு. எப்பயும் நீ சிரிக்கணுன்றதுதான் என்னோட ஆசை,” அந்த வார்த்தை மிக உரிமையாகத் தோன்றியது. அவனும் நெகிழ்வாகக் கூறுவது போலத்தான் கூறினான்.
அவள் புருவம் இடுங்க அவனைப் பார்த்தாள். அவன் சடுதியில் தன்னை மீட்டுக்கொண்டான்.
“தினமும் அகாடமிக்கு முன்னபோல வர்றது இல்லையில்லையா?? எப்பயாச்சம் தான் பார்க்கிறோம். அதிலும் நான் உன்னைப் பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு. அதனால கேஷுவலா கேட்டேன். நீ என்னைத் தேடி வந்திருக்கனா கண்டிப்பா ஏதாவது முக்கியமான விஷயமாதான் இருக்கும். சொல்லு, என்ன விஷயம்”? சட்டென்று விஷயத்திற்குத் தாவிவிட்டான்.
அவளுக்கும் வந்த வேலை ஞாபகம் வர,
“அன்னைக்கு ராகினியைக் கூட்டிட்டு வரேன்னு பர்மிஷன் வாங்கினேன். ஆனா அதுக்குள்ள அம்மா உடம்பு சரியில்லாம போயிடுச்சு, அவளுக்கும் பரீட்சை இருந்தது. இப்ப எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டாள். அவளுக்கு இங்க காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்கணும். எந்த காலேஜ்ல வாங்குறதுன்னு தெரியலை. மிடில்ல சேர்க்கிறதுனால உங்களோட ஹெல்ப் வேணும்னு நினைக்கிறேன். அப்ளிகேஷன் எங்க வாங்கணும்னு மட்டும் சொல்லுங்க, நான் வாங்கிக்கிறேன். அதுக்கப்புறம் காலேஜ்ல சேர்க்கும்போது நீங்க உதவி பண்ணாப் போதும்,” என்றாள்.
“ஹோ காட்! இதெல்லாம் எப்படி மறந்தேன்”?? என்று நெற்றியைத் தேய்த்துக்கொண்டான் கௌதம்.
“இட்ஸ் ஓகே சார். நீங்க கம்போசிங்ல பிஸியா இருந்தீங்க, அதனால மறந்திருப்பீங்க. நானும் எக்ஸாம் முடியட்டும்னு வெயிட் பண்ணேன்,” என்றாள் நத்தாஷா.
“ஓகே, ஒரு நிமிஷம்,” என்றவன். அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
“ஆமா சார், நம்மளோட ட்ரூப்ல இருக்கிற சிங்கரோட தங்கச்சிதான். மதுரையிலிருந்து வந்திருக்காங்க. தேர்ட் இயருக்கு அட்மிஷன் வேணும். ஹான், ஒரு நிமிஷம் இருங்க,” என்றவன் தொலைபேசியின் வாய்ப்பகுதியை மூடிக்கொண்டு,
“என்ன டிகிரி”? என்று நத்தாஷாவிடம் கேட்டான்.
அவள் சொன்னதை அப்படியே தொலைபேசியில் பகிர்ந்து கொண்டவன்,
“இல்லை சார், நெக்ஸ்ட் மந்த்தான் டிசி எல்லாம் வரும். அப்ப எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து உங்களைப் பார்க்கச் சொல்றேன். என் பேர்ல ஒரு சீட்டை மட்டும் அலாட் பண்ணிடுங்க போதும். அப்படியே காலேஜ் பஸ்சுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க, ஏன்னா அந்தப் பொண்ணு சென்னைக்குப் புதுசு. ஓகே, அந்தப் பொண்ணோட பேரு ராகினி. அப்ளிகேஷனை எனக்கு மெயில் அனுப்பிடுங்க, நான் பிரிண்ட்டவுட் எடுத்துக்கிறேன்,” என்றான் கௌதம்.
எதிர்முனையில் ஏதோ கேட்கப்பட்டது. அதற்கு அவனுடைய பதில் மட்டும்தான் அவள் காதில் விழுந்தது.
“அப்பா கேட்டா என் பெயரைச் சொல்லுங்க. பை தி வே, நான் இன்னைக்கு அம்மாக்கிட்ட சொல்லிடுவேன். சோ, எந்தப் பிரச்சனையும் இருக்காது,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன்,
“காலேஜ் அப்ளிகேஷன் மேட்டர் ஓவர். அப்ளிகேஷன் மெயில் வந்துடும். நீ ஈவினிங் போறதுக்குள்ள உன் கைல சேருற மாதிரி பார்த்துக்கிறேன். அப்புறம், ராகினியை மட்டுமில்லை, உங்க அம்மாவை மீட் பண்றதுக்கு நான் ஆவலா காத்துட்டிருக்கேன். ரெண்டு நாள் கொஞ்சம் ஷெட்யூல் பிஸியா இருக்கு. சண்டே உங்க வீட்டுக்கு நான் வரவா”? என்று கேட்டுவிட்டான்.
அவள் திகைத்து வாயைப் பிளந்துவிட்டாள்.
“வாயை அடிக்கடி இப்படிப் பிளந்து வைக்காத நத்தாஷா?? ஏதாவது பூச்சி பொட்டு வாய்க்குள்ள போயிடப்போகுது. அப்புறம் உன்னோட குரலுக்குப் பிரச்சனையாகிடும். இன்னொரு பாடல் கம்போசிங் நெக்ஸ்ட் வீக்ல இருக்கு. பிராக்டிஸ் போயிட்டுத்தானே இருக்கு”? என்று சகஜமாகக் கேட்டான்.
அவள் உடனே சுதாரித்துக்கொண்டு ‘ஆம்’ என்று தலையாட்டினாள்.
“பயப்படாத, நான் மட்டும் வரமாட்டேன். கண்டிப்பா எங்க அம்மாவையும் சேர்த்துதான் கூட்டிட்டு வருவேன். அப்புறம் உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு ப்ரீத்தி சொன்னாங்க. அதனால நீயே சமைச்சு வை,” என்றான்.
அவள் அதற்கும் ‘சரி’ என்று தலையாட்டினாள்.
“கீழ ப்ரீத்தி வீடு இருக்கு. மேலதான் நீங்க இருக்கீங்க. வீட்ல உங்க அம்மா இருக்காங்க, உன் தங்கச்சி இருக்கப்போறா. ப்ரீத்தியோட குடும்பமும் இருக்கப்போகுது. அப்புறம் எதுக்கு இவ்வளவு ஷாக்? இன்னுமே என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா நத்தாஷா? தப்பு பண்றவங்க வீட்டுக்கு வருவாங்களா”? என்று புன்னகையோடுதான் கேட்டான்.
“அய்யோ சார்! அப்படி இல்லை. நீங்க எவ்வளவு பெரிய ஆளு?? எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னீங்க, அந்த ஷாக்தான். அப்ளிகேஷன் வாங்க எப்படிப் போகணும், யார் கூடப் போகணும், எந்த பஸ் பிடிக்கணும், எந்த காலேஜ்ல வாங்கணும்னு நிறைய கன்பியூஷன் இருந்தது. ஆனா ஒரே போன் கால்ல எல்லாத்தையும் முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என் கையில அப்ளிகேஷன் இருக்குன்னு சொல்லிட்டீங்க. அதுமட்டுமில்ல, சூப்பர் மேன் மாதிரி சீட்டையும் ஒதுக்கச் சொல்லிட்டீங்க. அந்த ஷாக்ல இருந்து வெளிவர்றதுக்குள்ள நீங்க இதைக் கேட்டதுனால நான் கொஞ்சம் ஸ்டக் ஆகிட்டேன். மத்தபடி நீங்க சொல்ற மாதிரி இல்லை,” என்றாள் படபடப்பாக.
எங்கே அவன் தன்னைத் தவறாக நினைத்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு.
“ஈஸி ஈஸி, நானும் விளையாட்டுக்குத்தான் கேட்டேன். உங்க அம்மாவையும் தங்கச்சியையும் தானே பார்க்கப் போறேன். நீங்க அகாடமிக்குக் கூட்டிட்டு வந்தா அவங்களை மட்டும்தான் பார்க்க முடியும். உங்க வீட்டுக்கு வந்தா ரமேஷ், ப்ரீத்தி, அவங்க அப்பா, உங்க அம்மா, ராகினி இப்படி எல்லாரையும் பார்க்கலாம் இல்லையா?? அதனாலதான் வீட்டுக்கு அம்மாவைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன். அப்புறம் காலேஜ் நம்மளுடையது… ஐ மீன், என் அப்பாவுடையது. அதனால சீட் புக் பண்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. எனக்குன்னு அங்க கோட்டா இருக்கும். இந்த மாதிரி உதவி கேட்டு வர்றவங்களுக்குப் பண்ணுவேன். பெரும்பாலும் ஃபர்ஸ்ட் இயர் சீட்தான் இருக்கும். தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, ஃபீஸ் கட்ட முடியாதவங்க… இது மாதிரி உதவி கேட்டு வருவாங்க. நான் எனக்குன்னு இருக்குற அஞ்சு சீட்டை அவங்களுக்கு வாங்கிக் கொடுப்பேன். இது லாஸ்ட் இயர் இல்லையா?? அதனாலதான் இவ்வளவு பேச வேண்டியிருந்தது. ராகினிக்கு மேல படிக்க ஆசை இருந்தாலும், நம்ம காலேஜ்லயே பிஜியும் படிக்கலாம். இல்லை, உன்னை மாதிரியே குரல் வளம் இருக்குன்னா நம்ம ட்ரூப்லயே சேர்த்து விட்டுடலாம்,” அவன் மிக கேஷுவலாகக் கூறினான்.
அவர்களுடைய வாழ்க்கை அவ்வளவு சுலபமா?? இதுவரை அவர்கள் எல்லாவற்றிற்கும் போராடிக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது என்ன எல்லாமே சுலபமாக நடக்கிறது?? பூமி மாறிச் சுற்றுகிறதா, அல்லது தனி ஒருவன் அதை மாற்றிச் சுத்த வைக்கிறானா?? அவளுடைய கேள்விகள், அதிர்ச்சியாக அவள் முகத்தில் மாறியிருந்தன.
அவள் முகத்திற்கு முன்பாகச் சொடக்கிட்டான்.
“என்ன?? சண்டேக்கு என்ன சமைக்கலாம்னு யோசிக்கிறியா? உன் கையால ஏதாவது சமைச்சுப் போடு. பெருசா ஒன்னும் வேண்டாம். நான் எது இருந்தாலும் சாப்பிடுவேன். பசிக்குத்தான் சாப்பிடுறது, ருசிக்கு இல்லை,” என்றான்.
அவள் பார்த்த ஆண்களின் இவன் வித்தியாசமானவன். எந்தவொரு பெண்ணும் தான் பார்க்கும் ஆணை தன் தகப்பனோடோ, அல்லது தன் உடன்பிறந்தவர்களோடோ ஒப்பிட்டுப் பார்ப்பாள். அவளுக்குச் சகோதரன் இல்லை, தகப்பனும் இதுபோல இல்லை என்றுதான் தோன்றியது.
ரமேஷ் ஒரு வகை என்றால், இவன் வேறு வகை. இவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் சிறிதும் அகங்காரம் இல்லாமல் இருந்தான்.
“இல்லை சார், உங்களைப் பிரமிப்பா பார்க்கிறேன். கண்டிப்பா வீட்ல போய் சொன்னா எல்லாருமே சந்தோஷப்படுவாங்க. அம்மாகூட நிறைய வாட்டி சொல்லியிருக்காங்க, உங்களைப் பார்த்து நன்றி சொல்லணும்னு. ஆனா இதுக்குள்ள அவங்களோட ஆசை நிறைவேறும்னு நான் நினைச்சுப் பார்க்கலை. ரொம்ப நன்றி சார்,” என்றபடி எழுந்து நின்றுவிட்டாள்.
“எனக்கு ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இருக்கே”? என்று அவனும் எழுந்து நின்றபடி கேட்டான்.
“ரிக்வெஸ்ட்டா, என்கிட்டயா?? கட்டளையிடுங்க சார், செய்யக் காத்துட்டிருக்கேன்,” என்று முகம் மலரக் கூறினாள்.
அந்த மலர்வு அவன் முகத்திலும் படர்ந்தது.
“இந்த ‘சார்’ ‘மோர்’ எல்லாத்தையும் விட்டுட்டுப் பேர் சொல்லிக் கூப்பிடு நத்தாஷா.”
“அது கொஞ்சம் கஷ்டம்தான் சார். அதுவும் இப்ப முடியாது, கொஞ்ச நாள் போகட்டும் முயற்சி பண்றேன். அதுவும் இல்லாம நீங்க என்னை விடப் பெரியவங்க. இங்க இருக்கிற எல்லாரும் உங்களை அப்படித்தான் கூப்பிடுறாங்க, ஸ்ரீதர் சாரைத் தவிர. அப்புறம் நான் மட்டும் எப்படி அப்படிக் கூப்பிட முடியும்? நான் என்னோட கூட்டுல இருந்து இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வர்றேன். ரொம்ப அதிகமா பறக்கலாம்னு நினைக்கலை. கொஞ்ச நாள் போகட்டும் சார், முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்,” என்றாள்.
அதற்கு மேல் அவன் அவளை வற்புறுத்தியதில்லை.
error: Content is protected !!