Skip to content
Post Views: 109

அத்தியாயம் 28
மதியை அவன் தன் வீட்டிலிருந்தும், தன் இதயத்திலிருந்தும் தூக்கி எறிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அது நிஜமாக இல்லாவிட்டாலும், அவளுக்கு அப்படியொரு மாயையைத்தான் ஏற்படுத்தியிருந்தான் ஆதி.
அவள் எவ்வளவோ முயன்றும், அவன் அவளைப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை.
Advertisement
அவள் காயப்பட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். காரணமே இல்லாமல் அவன் இப்படித் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவளது நலனுக்காக தான் இதை செய்தாகவேண்டும் நினைத்தான்.
அவளுக்கு அந்த வலியைத் தந்ததற்காகத் தன்னைத்தானே கொன்றுவிடலாமா என்று கூட அவனுக்குத் தோன்றியது. அவன் தனக்குள்ளேயே ஒரு பெரிய போரை நடத்திக் கொண்டிருந்தான், ஆனால் அந்தப் போரின் இரு முனைகளிலும் தோற்கப் போவது அவன் மட்டும்தான் என்று தோன்றியது.
அவளிடமிருந்து தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அவனையுமறியாமல் அவன் அவளைப் பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
Advertisement
திடீரென்று நவீன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். அவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
Advertisement
“டேய், மதியை ஏண்டா நம்ம டீம்ல இருந்து தூக்கணும்னு நினைக்கிற?”
ஆதி ஒரு கணம் திணறினான்.. அவன் அந்தத் திடீர் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை.
“நீ என்ன பேசுறன்னு எனக்குப் புரியல…?”
Advertisement
“உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காதடா…” அவன் கோபத்தில் குரலுயர்த்த,
“நவீன்..மைண்ட் யுவர் வாய்ஸ்…” என்று அதட்டினான்.
“நீ பெரிய அப்பாட்டக்கர் பி.எம்-ஆவே (PM) இருந்துட்டு போ.. எனக்கு ஒன்னும் பயம் கிடையாது.. இந்த முறைப்பையெல்லாம் என்கிட்ட காட்டாத…” என்று தன் பார்வையைச் சற்றும் விலக்காமல் அவனை எதிர்கொண்டான்.
“இப்போ என்ன வேணும் உனக்கு?” ஒரு சலிப்பான பெருமூச்சுடன் ஜன்னலை நோக்கி நடந்தான். நவீனுக்குத் தன் முதுகைக் காட்டியபடி வெளியே வெறித்தான்.
“கௌஷிக் கிட்ட மதியை அவனோட டீம்க்கு எடுத்துக்க சொன்னியாமே.. ஏதோ அண்டர் தி டேபிள் டீலிங் மாதிரி.. டீம் லீடர் நான் என்கிட்ட சொல்லாம உன் இஷ்டத்துக்கு எப்படி முடிவுகளை எடுக்கலாம்?” என்றான் கொதிப்புடன்,
“கௌஷிக் டீம் ஒரு புது ப்ராஜெக்ட் பண்றாங்க, அது முன்னாடி மதி பண்ண ப்ராஜெக்ட் மாதிரிதான் இருந்தது.. அதான் மதியை சேர்த்துக்க சொல்லி சஜஸ்ட் பண்ணினேன்.. இதுல நீ இவ்வளவு ஆவேசப்படுற அளவுக்கு என்ன இருக்குன்னுதான் எனக்குத் தெரியலை. நான் அவளோட கரியர் குரோத்துக்காகத்தான் இதைப் பண்றேன்…” ஆதி எவ்வளவு சாதாரணமா முடியுமோ அவ்வளவு சாதாரணமாகக் கூறினான்.
“கரியர் குரோத்தா..? நிஜமாவே அதான் ரீசனா?” நவீனின் பார்வை ஆதியை துளைத்தது.
ஆதி அப்போதும் அவனது பார்வையைத் தவிர்த்தான்.
“ஆமா, கண்டிப்பா அதான் ரீசன்.. வேற என்னவா இருக்க முடியும்…?”
நவீன் அவனை ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு,
“டேய் நீ யாருடா? எனக்கு தெரிஞ்ச ஆதிக்கு ப்ரொபஷனல் லைஃபையும் பெர்சனல் லைஃபையும் எப்படித் தனித்தனியா வச்சுக்கணும்னு தெரியும்.. ஆனா எனக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கிற இந்த அரைகுறை மனுஷனைப் பார்த்தா அப்படித் தெரியல..எதோ ஏலியன் மாதிரி தெரியற…”
“எனக்கு மதி கூட எந்த பெர்சனல் ரிலேஷன்ஷிப்பும் இல்ல…”
“டேய்.. இந்த பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் என்கிட்ட சொல்லாத.. நான் ஒன்னும் பிளே ஸ்கூலுக்கு போற பாப்பா இல்லை.. உனக்கும் மதிக்கும் நடுவுல ஒரு கரண்ட் ஓடுற விஷயம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”
“தேவையில்லாம உளறாத நவீன்…” .
“இப்ப எதுக்கு மதியை டீம் மாத்தணும்னு நினைக்கிற.. உண்மையைச் சொல்லு…” நவீன் விடாப்பிடியாகக் கேட்டான்.
ஆதி சிறிது நேரம் அமைதியாக இருந்தான், பிறகு ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு ,
“மதிக்கு என் மேல ஃபீலிங்ஸ் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்..அதை வச்சுக்கிட்டு அவ கஷ்டப்படறதை நான் விரும்பல.. அதான் அதை ஆரம்பத்துலேயே கட் பண்ணனும்ன்னு நினைக்கறேன்…” ஒருவழியாக அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.
“என்ன முட்டாள்தனமா பேசுற ஆதி? மதிக்கு உன் மேல ஃபீலிங்ஸ் இருக்குன்னா அது நல்ல விஷயம்தானே.. அதை எதுக்கு கட் பண்ணனும்னு நினைக்கிற? நிஜத்தைச் சொல்லணும்னா, ரொம்ப நாளுக்கு அப்புறம் உன் லைஃப்ல நடந்த ஒரே நல்ல விஷயம் மதிதான்.. அதை ஏன்டா வேண்டாம்னு சொல்ற? இங்க பாரு, உனக்கு மதியை பிடிச்சிருக்குல்ல?” அவனது கண்களை நேராகப் பார்த்து கேட்டான்.
ஆதி அவனது பார்வையைத் தவிர்த்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்.
“டேய் என்னைப் பாருடா.. உனக்கு மதியை பிடிச்சிருக்குதானே?”
“டேய்.. எல்லாம் தெரிஞ்ச நீயே எப்படிடா இப்படி கேக்குற? நான் எப்படிடா…? நான் ஒரு முழுமையான மனுஷன் இல்லடா…” என்றான் வேதனையுடன்
“லூசு மாதிரி பேசாத.. இந்த டிப்ரஷன், அம்னீஷியாவெல்லாம் ஒரு நோயே கிடையாது.. மதி மாதிரி ஒரு பொண்ணு உன்னோட லைஃப்ல இருந்தா இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை..”
“ஆனா மதியோட நிலைமை…? அவளுக்கு இத விட நல்ல லைஃப் கிடைக்கணும் இல்லையா?”
“அதை முடிவு பண்ண நீ யாரு.. அவளே முடிவு பண்ணிக்கட்டும்.. இப்படி எதையாவது தத்தக்க பித்தக்கனு உளறிக்கிட்டு மதி மாதிரி ஒரு அருமையான பொண்ணை மிஸ் பண்ணிடாத.. அவ்ளோதான் சொல்லிட்டேன்…”
“அதுமட்டும் இல்லை நவீன்.. உனக்கே தெரியாத ஒரு விஷயம் இருக்கு…”
“என்னது?”
“என்னோட பாஸ்ட்ல (Past) நான் யாரையோ லவ் பண்ணியிருக்கேன்..”
“என்னடா சொல்ற?”
“ஆமா.. நான் ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கேன்.. அதைப்பத்தி என் பேரண்ட்ஸ் கிட்ட கூட பேசியிருக்கேன்…” ஆதி தன் கனவில் கண்ட அந்தச் சம்பவத்தைப் பற்றி விளக்கினான்.
“ஆதி, அது வெறும் உன்னோட கற்பனையா கூட இருக்கலாம்டா…”
“இல்ல, அது கனவு இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்.ஆனா என்ன யோசிச்சலும் அந்தப் பொண்ணு யாருன்னு மட்டும் ஞாபகம் வரமாட்டேங்குது…” என்றான் வெறுப்புடன்,
“வாய்ப்பே இல்லை.. நீ யாரையாவது லவ் பண்ணியிருந்தா ஃபர்ஸ்ட் என்கிட்டதான் ஷேர் பண்ணியிருப்ப.. எனக்குத் தெரிஞ்சு நீ யாரையும் லவ் பண்ணலை…” நவீன் உறுதியான குரலில் கூறினான்.
“உனக்குத் தெரியாத ரகசியம் எதுவும் என்கிட்ட இல்லைன்னு நீ எப்படிடா அவ்வளவு உறுதியா சொல்ற??”
“இப்போ என்னதான் சொல்ல வர்ற?”
“நவீன்.. உனக்குத் தெரியாதுடா… எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஒண்ணுமே தெரியாம கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்ல இருக்கும் போது.. இந்த ஒரே கனவுதான் திரும்பத்திரும்ப வரும்.. அதுக்கு மேல என்ன யோசிச்சாலும் ஒன்னும் ஞாபகம் வராது.. ஏன் இப்படிலாம் கனவு வருதுன்னு எனக்கு எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா? அதுக்கப்புறம் எனக்கு நினைவு வந்த பின்னாடிதான், என் பேரண்ட்ஸ் இறந்துட்டாங்கன்ற விஷயமே எனக்குத் தெரிஞ்சது.. அப்பறம்தான் புரிஞ்சது எனக்கு வந்தது கனவு இல்லை, முகத்துல அறையுற நிஜம்னு… அப்போதாண்டா நான் முழுசா உடைஞ்சு போயிட்டேன்.. என் பேரண்ட்ஸ் உயிரைப் பறிச்சுட்டு நான் மட்டும் உயிரோட இருக்கிறதை நினைச்சு என்னையே நான் வெறுத்தேன்… இந்த உலகத்துல வாழ எனக்கு எந்த தகுதியும் இல்லைன்னு நினைச்சேன்..
ஆனா சைக்கியாட்ரிஸ்ட் (Psychiatrist) கூட நடந்த செஷன்ஸ்க்கு அப்புறம்தான், அவரு எனக்குள்ள ஒரு சின்ன நம்பிக்கையை விதைச்சாரு.. அவரு ‘ஆதி.. உனக்கு வாழ காரணமே இல்லைன்னு ஏன் நினைக்கிற.. நீ யாரையோ லவ் பண்ணேன்னு சொன்னியே, அவளுக்காக வாழு.. இப்போ உனக்கு வாழ ஒரு காரணம் இருக்கு.. உனக்காக இல்லைன்னாலும் உன்னோட காதலுக்காக வாழு.. அவ உன்கிட்ட திரும்பி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணு..’ன்னு சொன்னாரு.
அதுக்கப்புறம்தான் நான் நம்ப ஆரம்பிச்சேன், ஒரு நாள் அவ என்கிட்ட வருவான்னு.. அவ என் முன்னாடி வந்தா கண்டிப்பா நான் அவளை அடையாளம் கண்டுப்பேன், எனக்குப் பழைய நினைவுகளும் வந்துடும்னு பகல் கனவு கூட கண்டிருக்கேன்.. வாழ்க்கையில அந்த ஒரு சின்ன நம்பிக்கையை வச்சுக்கிட்டு, முகம் தெரியாத அந்த ‘அவளோட’ வருகைக்காக நான் கிட்டத்தட்ட 5 வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. அவ வரவே இல்லைனா கூட, என் வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் இப்படியே வெயிட் பண்ணியே வாழ்ந்து முடிச்சிடணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. மதியை மீட் பண்ற வரைக்கும்!
வறண்ட என் வாழ்க்கையில குளிர்ந்த மழைச் சாரல் மாதிரி வந்தா மதி.. எனக்குள்ள எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்டா.. நான் ஆழமா புதைச்சு வச்சிருந்த உணர்வுகளையெல்லாம் மறுபடியும் உயிர்ப்பிச்சு வெளிய கொண்டு வந்துட்டா.. ஆனா அவ என்னதான் பண்ணினாலும், நான் தேடிட்டு இருக்கிற அந்த பொண்ணு மதி இல்லையே..”
ஆதி தன் ஒரே நண்பனிடம் தன் இதயத்தை முழுமையாகக் கொட்டித் தீர்த்தான். நவீன் அவனைப் பரிதாபமாகப் பார்த்து, ஆறுதலாக அவனது தோளைத் தொட்டான்.
“இங்க பாரு ஆதி.. இருக்காளா இல்லையான்னே தெரியாத ஒரு ஆளுக்காக, கண் முன்னாடி இருக்கிற ஒரு தேவதையை வேண்டாம்னு சொல்லுவியா? உனக்கு நிஜமாவே பைத்தியம் புடிச்சிருச்சா ஆதி?”
“நவீன்… அந்த ஆக்சிடென்ட்ல நான் இழந்த ஒரு வருஷ நினைவுகள்ல, நான் பெங்களூர்ல கழிச்ச அந்த ஆறு மாசமும் அடங்கும்…” ஆதி தாழ்ந்த குரலில் கூறினான்.
“சோ?” நவீன் தன் புருவங்களைச் சுருக்கினான்.
“அங்க நான் மதியை ஏற்கனவே மீட் பண்ணியிருக்கேன்.. நான் அவளுக்கு டியூஷன் கிளாஸ் கூட எடுத்திருக்கேன்…”
“என்னது?!” நவீன் திடீரென்று உற்சாகமடைந்தான்.
“இது செம விஷயமாச்சேடா.. இப்பதான் எனக்கு எல்லாமே புரியுது.. இவ்வளவு நாளா மதி மாதிரி ஒரு ஸ்வீட்டான பொண்ணு, உன்னை மாதிரி ஒரு மொரட்டு பீஸ் மேல எப்படி இன்ட்ரஸ்ட் காட்டுறான்னு யோசிச்சிட்டே இருந்தேன்… சோ, இதுதான் விஷயமா! அவதான் உன்னோட பாஸ்ட்ல இருந்த அந்தப் பொண்ணு, கரெக்டா? அவ்ளோதானே, எல்லாப் பிரச்சினையும் சால்வ் ஆயிடுச்சு…” நவீன் தனக்கு சாதகமாக விஷயங்களைக் கோர்க்கத் தொடங்கினான்.
ஆதி அவனை அனுதாபத்துடன் பார்த்தான்.
“ரொம்ப வானத்துல பறக்காத நவீன்.. மதிதான் நான் விரும்பின பொண்ணுன்னா, அவ ஏன் இவ்வளவு காலமா என்னைத்தேடி வராம இருந்தா? அவ ஏன் இத்தனை வருஷமா என்னை கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணல? எனக்குதான் அம்னீஷியா (ஞாபகமறதி) இருக்கு.. அவளுக்கு இல்லையே.. சரி அதை விடு… அவ இந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் கூட, ஒரு தடவை கூட எங்களோட பாஸ்ட் ரிலேஷன்ஷிப் பத்தி என்கிட்ட சொல்லலையே, சோ அது கண்டிப்பா மதி இல்லைன்னு தெளிவா தெரியுது.இது எல்லாத்துக்கும் மேல, அப்போ அவ ஸ்கூல் படிச்சிட்டு இருந்த சின்னப் பொண்ணுடா.. அவளை எப்படிடா நான் லவ் பண்ணியிருக்க முடியும்?.”
“அவ சின்னப் பொண்ணுன்னா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ மட்டும் என்ன தொண்டு கிழவனாவா இருந்த?நீயும் சின்னப் பையன்தானே.. முதல்லயே இப்படித்தான் இருக்கும்ன்னு முன் முடிவோட நீ ஆர்கியூ பண்ணாத.. மைண்டை ஓப்பனா வச்சுக்கிட்டு திங்க் பண்ணு…” நவீன் அவனுக்குப் புத்தி புகட்ட முயன்றான்.
“எனக்கென்னமோ அது மதியாதான் இருக்கும்னு தோணுது..”
“ஒருவேளை இல்லைனா?”
“பாசிட்டிவா திங்க் பண்ணுடா மடையா…” அவனது எதிர்மறை எண்ணங்களின் மூட்டையைப் பார்த்து நவீன் எரிச்சலானான்.
“என்னோட லைஃப்ல எது பாசிட்டிவா நடந்திருக்கு? நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்.. ஆனா நூறுல ஒரு பெர்சன்ட் சான்ஸா அது மதி இல்லாம போயிட்டா? மதியை அக்சப்ட் பண்ணதுக்கு அப்புறம் எனக்குப் பழைய ஞயாபகம் வந்து, அது வேற பொண்ணுன்னு தெரிஞ்சா என்ன பண்றது? அது மதிக்கு பண்ற அநியாயம் இல்லையா? அவளை நான் எப்படி முழு மனசோட லவ் பண்ண முடியும்? லைஃப் முழுக்க சந்தேகத்தோடையும் பயத்தோடயும் எப்படிடா வாழ்றது? எல்லாத்துக்கும் மேல மதிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ தாங்குவாளா? மதியோட சந்தோஷத்த பணயம் வச்சு என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது.. இதெல்லாம் யோசிச்சுதான் நான் அவளை விட்டு விலகி போகலாம்னு முடிவு பண்ணினேன்.. முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போகப் போக சரியாயிடும்.. நானும் இன்னும் கொஞ்சநாள்ல யூ.எஸ் (US) போயிடுவேன், அப்புறம் அவளும் என்னை மறந்துடுவா…”
“டேய், உன்னோட கற்பனை உலகத்துலேயே வாழாதடா.. கொஞ்சம் கண்ண தொறந்து நிஜ உலகத்தைப் பாரு, அது ரொம்ப கலர்ஃபுல்லா அழகா இருக்கு.. நீ இருட்டை மட்டுமே பார்த்துட்டு இருக்க.. சந்தோஷமா வாழ்றதுக்கு வழிய தேடு.. இப்படி எல்லாத்தையும் ஒதுக்கிட்டு ஓடுறதுக்கு வழி தேடாத.. எனக்கென்னமோ நீ மதி கிட்ட பேசினா எல்லாம் சரியாயிடும்னு தோணுது..”
“நோ வே நவீன்.. மதிக்கு இது எதுவுமே தெரியக் கூடாது…” ஆதி அவசரமாக மறுத்தான்.
“ஆதி ப்ளீஸ், ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாரு.. மதி கிட்ட நீ எல்லாத்தையும் சொல்ல வேண்டாம்.. உங்களோட பாஸ்ட் லைஃப்ல என்ன நடந்தது, உங்களுக்குள்ள என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் இருந்ததுன்னு கேஷுவலா கேளு.. உனக்குத் தெரியாத விஷயங்களைப் பத்தி நீயாவே ஒரு முடிவுக்கு வராத.. ஓப்பன் ஹார்ட்டடா கேளு.. கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும்ன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு…”
அவர்கள் பேசத் தொடங்கியதிலிருந்து முதல் முறையாகக் ஆதித்யாவின் முகத்தில் ஒரு சிறிய தயக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது…
நவீன் அந்த வாய்ப்பை நழுவவிடத் தயாராக இல்லை.
“இப்போ நீ போய் பேசுறியா? இல்லை நான் போய் பேசவா?” என்று நவீன் மிரட்டுவது போல் கேட்க,
“வேண்டாம்.. நீ போக வேண்டாம்.. நானே மதி கிட்ட பேசுறேன்…” ஆதி அரைமனதாக ஒப்புக்கொண்டான்.
“அப்போ இப்பவே போய் பேசு…” அவன் தன் மனதை மாற்றுவதற்குள் நவீன் அவனை முடுக்கினான்.
ஆதி தன் கண்களில் துளிர்த்த ஒரு புதிய நம்பிக்கையோடு தலையசைத்தான்…
நவீன் தன் நண்பனின் வாழ்க்கை ஒருவழியாகச் சரியாகப் போகிறது என்ற திருப்தியான புன்னகையோடு அவனைப் பார்த்தான்.
ஆனால், அவர்கள் இருவருக்குமே தெரியாது… வெளியிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் தங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் ,அது விதியை மாற்றி எழுத திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதையும்.
தொடரும்..
error: Content is protected !!