Skip to content
Post Views: 182

அத்தியாயம்-31
“என் அகராதில காதல்ன்ற வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆதி’ மட்டும் தான். அங்க வேற பேரோ, வேற அர்த்தமோ என்னைக்குமே இருக்காது.”
கேண்டீனில் மதி விக்கியிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து ஆதியின் காதுகளில் அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.
Advertisement
இவ்வளவு பெரிய விஷயத்தை எவ்ளோ ஈஸியா சொல்லிட்டா..
அவளது குரலில் இருந்த தீர்க்கம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது. அதனால்தான் அவளது அன்பு நேரடியாக இதயத்தைத் தைக்கிறது. எந்தப் பகட்டும் இல்லாத, எளிமையான, ஆனால் மூச்சடைக்க வைக்கும் நேசம் அது.
“மதி எனக்கே எனக்கானவளாக வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய குற்றமா?ஏன் அதற்கு இவ்வளவு தடைகள்?”என்று மனம் நொந்தான்.
Advertisement
இந்தச் சிக்கலான சூழ்நிலைக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் வரை அவன் மதியைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.
Advertisement
தர்ஷா சொன்ன கதைகளை அவனால் நம்ப முடியவில்லை. தர்ஷாவை அவன் ஒருபோதும் அப்படி பார்த்ததில்லை என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் பலவருடகாலத் தோழி, அவளை முழுமையாகப் புறக்கணிக்கவும் அவனால் முடியவில்லை.
தர்ஷா சொன்ன அந்தப் பழைய காதல் கதையை நினைவூட்டிக் கொள்ள அவளுடன் வெளியே சென்றான். ஆனால் என்ன செய்தாலும், எதுவுமே அவன் இதயத்தைத் தொடவில்லை.
சில நாட்களிலேயே இது வீண் வேலை தான் தேவையில்லாமல் காலம் கடத்துகிறோம் என்று தோன்றிவிட்டது. ஒருவேளை கடந்த காலத்தில் அவளைக் காதலித்திருந்தாலும், இப்போது அது சாத்தியமே இல்லை என்று திண்ணமாகத் தெரிந்தது.
Advertisement
“இல்லை, இனிமேலும் காத்திருக்க முடியாது உடனே நான் மதியிடம் பேசியாக வேண்டும், இந்த தவறான புரிதலை சரி செய்தே ஆகவேண்டும்.”
உடனடியாக அவளது எக்ஸ்டென்ஷன் நம்பருக்கு அழைத்தான். ஆதியின் குரலைக் கேட்டதும் மதியால் நம்ப முடியவில்லை.
“நிஜமாவே அவன் தான் கூப்பிடுறானா இல்ல இதுவும் என் கற்பனையா?” என்று ஒரு நிமிடம் திகைத்தாள்.
“மதி.. இருக்கியா?” அவனது தவிப்பான குரல் அவளை நிகழ்வுக்கு இழுத்து வந்தது.
“ம்ம்..” .
“ப்ளீஸ், என் கேபினுக்கு வந்து என்னைப் பாரு..”
“திடீர்னு எதுக்குக் கூப்பிடுறான்? ஏதாவது பெரிய குண்டைத் தூக்கிப் போடுவானோ?” என்று வரப்போகும் புயலை எண்ணி அஞ்சினாள்.
கதவை மெல்லத் தட்டினாள்.
“கம் இன்..” என்ற அவனது கம்பீரமான குரல் கேட்டதும் அவளது கால்கள் தளர்ந்தன, கண்கள் கலங்கின.
“என்ன இது, குரலைக் கேட்டதுமே இப்படி பலவீனமாகுறேன்.. இல்ல, நான் தைரியமா இருக்கணும். என் பலவீனத்தை அவன்கிட்ட காட்டக்கூடாது.”
மனதைத் திடப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.
“மதி உட்காரு..”
கடந்த ஐந்து நிமிடங்களாக அவள் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்தாள். ஆனால் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. அவளது பொறுமை முற்றிலுமாக தீர்ந்து போகும் நேரம் அவன் பேசினான்.
“மதி.. நான் உன்னை இங்க கூப்பிட்டது வேலை சம்பந்தமா இல்ல, பெர்சனலா.” மதி பதில் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.
“அன்னைக்கு நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டேன், ஞாபகம் இருக்கா? நமக்குள்ள கடந்த காலத்துல என்ன மாதிரி ரிலேஷன்ஷிப் இருந்ததுன்னு.. நீ இன்னும் அதுக்குப் பதில் சொல்லல.”
மதிக்குக் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. சட்டென்று எழுந்தாள்.
“ஏன் அந்த தர்ஷா சொன்னதைத் தாண்டி நான் சொல்றத நம்பப்போறீங்களா? என்கிட்ட ஏன் இதை கேக்குறீங்க இதையும் உங்க தர்ஷா கிட்டயே போய் கேளுங்க.. யாருக்கு தெரியும்,ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவைப் பத்தி கூட அவளுக்கு தெரிஞ்சிருக்கலாம்.”புயலென அவன் அறையை விட்டு வெளியேறினாள்.
“கடைசியில ரெண்டு பேரோட ஸ்டேட்மெண்ட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிற அளவுக்குப் போயிட்டானா? எவ்வளவு கேவலம் இது? இன்னும் அவன் அந்த தர்ஷாவை காதலிச்சதா தான் நம்பிட்டு இருக்கான்.”
கோபத்தில் மனம்கொதித்தாலும், அதற்கு நேர்மாறாக அவளது கண்கள் கலங்கி குளமாகின..
சரியான கேள்வியைத் தவறான நேரத்தில் கேட்டுவிட்டோமோ என்று ஆதி தன்னைத் தானே நொந்து கொண்டான்.
“ஏன் என் நினைவுகளே என்னை வஞ்சிக்கின்றன?”
தலைமுடியைப் பிய்த்து எறிந்துவிடுபவனே போல பற்றி இழுத்தான். யாரோ தலையில் உட்கார்ந்து கொண்டு சுத்தியலால் அடிப்பது போல வலித்தது. தன் பேக்கைத் திறந்து அந்தத் தலைவலி மாத்திரையை எடுக்க முயன்றான். ஆனால், மருந்தை எடுப்பதற்கு முன்பே அவன் கண்கள் இருண்டன. வேரற்ற மரம் போல அவன் தரையில் சரிந்து விழுந்தான்.
தர்ஷா கடந்த சில நாட்களாக மிகுந்த அதிருப்தியில் இருந்தாள். அவள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் ஆதியிடம் ஒரு சிறிய மாற்றம்கூட வரவில்லை.. அவனது மனதை அவளால் அணுவளவும் அசைக்க முடியவில்லை. அதனால் அவனுக்கு வேறு வழியில் நிர்பந்தம் ஏற்படுத்த முனைந்தாள்.அவனது பழைய நினைவுகள் திரும்புவதற்குள் அவனை எப்படியாவது மீளமுடியாத பந்தத்தில் கட்டிப்போட்டுவிடவேண்டும் என்று துடித்தாள்.
அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஒரு மாயையை ஏற்கனவே சக ஊழியர்களிடம் உருவாக்கியிருந்தாள். இப்போது ஒரு படி மேலே போய், ஆதியிடம் ஆலோசிக்காமலேயே அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக அறிவிக்க ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தாள்.
ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பார்ட்டிக்கு அழைத்தாள். மதி வேலை செய்யும் இடத்திற்குச் சென்றபோது அவளது இருக்கை காலியாக இருந்தது. தர்ஷா ஏமாற்றமடைந்தாலும், தன் வேலையை முடிக்காமல் திரும்ப விரும்பவில்லை. அங்கிருந்த நவீனுக்கும் ஶ்ரீநிதிக்கும் அழைப்புவிடுத்தாள். அவர்கள் முகத்தில் தெரிந்த வெறுப்பு அவர்களுக்கு இந்த நிச்சயத்தில் துளியும் இஷ்டமில்லை என்பதைக் அப்பட்டமாக காட்டியது.
“ஶ்ரீநிதி, தண்மதி எங்கே? அவளை நேர்ல அழைக்கலாம்னு வந்தேன்,”
“அவ ஏதோ வேலையாக வெளியபோயிருக்கா, வர நேரமாகும். நான் விஷயத்தைச் சொல்லிக்கறேன், நீ திரும்பவும் இங்க வந்து சிரமப்பட வேண்டாம்,” என்று ஶ்ரீநிதி எரிச்சலுடன் கூறினாள்.
தர்ஷா கோபமாக அங்கிருந்து கிளம்பிச்செல்ல, ஶ்ரீநிதி கவலையுடன் நவீனைப் பார்த்தாள்.
“என்ன நவீன், நிச்சயதார்த்தம், பார்ட்டின்னுலாம் சொல்றா? இவ்வளவு சீரியஸா போகும்னு நான் நினைக்கவே இல்லை. ஆதிக்கு இது தெரியுமா?”
“தெரியல ஶ்ரீ. அந்த தர்ஷா இந்த அளவுக்குப் போவான்னு நானும் எதிர்பார்க்கலை,”
“மதியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. இதைக் கேட்டா அவ நொறுங்கிப் போயிடுவா,” என்று ஶ்ரீநிதி வருத்தப்பட்டாள்.
“ஆமாம், ஏற்கனவே அவ படுற வேதனை போதும், இதைச் சொல்லி அவளை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்,” என்றான் நவீன்
“இந்த ஆதி ஏன் இப்படி இருக்காரு? மதி அவர் மேல உயிரையே வச்சிருக்கா. ஆனா அவர் இவ்வளவு கல்நெஞ்சக்காரரா இருக்கக் கூடாது. நான் கூட அவர நல்லவர்னு நினைச்சேன், ஆனா இப்போ அவரை எனக்குப் பிடிக்கவே இல்லை,” ஶ்ரீநிதி தன் வெறுப்பைக் கொட்டினாள்.
“அப்படிச் சொல்லாத ஶ்ரீ, அவனுக்கு நிறையப் பிரச்சனைகள் இருக்கு. அவன் இப்படி நடந்துக்கறதுக்கு வெளியே சொல்ல முடியாத காரணங்கள் இருக்கு,” என்று நவீன் தன் நண்பனுக்காக பரிந்தான்.
“என்ன காரணங்கள் நவீன்?” — மதியின் வெட்டும் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர். அவளது கண்கள் கோபத்திலும் வலியிலும் சிவந்திருந்தன.
“என்னை ஒரு குப்பை மாதிரி தூக்கி எறியறதுக்கு அவருக்கு என்ன காரணம் இருக்கு? என் வாழ்க்கையை நரகமாக்கி, என்னை ஒரு நடைப்பிணமா மாத்தினதுக்கு அவர்கிட்ட என்ன நியாயம் இருக்கு? சம்மந்தமேஇல்லாம இப்ப அந்த தர்ஷாவை நிச்சயதார்த்தம் பண்ணிக்கிறதுக்கு அப்படி என்ன உருப்படியான காரணம் இருக்குன்னு சொல்லுங்க நவீன், நான் தெரிஞ்சுக்கணும்!” என்று மதி வெடித்தாள்.
அப்போது ஆதியும் அங்கே வந்து சேர்ந்தான். மதியின் ஆக்ரோஷத்தையும் வலியையும் கண்டு அவன் உள்ளம் கலங்கியது. நவீன் நேராக ஆதியிடம் சென்று,
“ஆதி, என்னடா இதெல்லாம்? நிச்சயதார்த்தம்னு தர்ஷா சொல்றாளே, உனக்குத் தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா?” என்று கேட்டான்.
அவனுக்குமே அது செய்திதான் ஆனால் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “ஆமா,” என்று அழுத்தமாகக் கூறினான்.
“ஆதி, யோசிச்சுப் பேசு. ஒருமுறை முடிவெடுத்துட்டா அப்புறம் பின்வாங்க முடியாது,” என்று நவீன் எச்சரித்தான்.
“நான் அவசரப்படலை நவீன், இது ஏற்கனவே அஞ்சு வருஷம் லேட்டாதான் நடக்குது,” என்றான் ஆதி நிதானமாக.
“தர்ஷா ஏன் இப்படி அவசரப்படுறான்னு உனக்குப் புரியலையா? அவதான் உன் பழைய காதலினு நீ உண்மையாவே நம்புறியா?” என்று நவீன் அவன் புத்தியை தெளியவைக்கப் போராட, ஆதி எதற்கும் மசியாமல், “ஆமா, இப்ப இல்லைனாலும் வருங்காலத்துல தர்ஷாவை என்னால காதலிக்க முடியும்னு நான் நம்புறேன்,” என்றான் உறுதியாக.
தன்னால் தர்ஷாவைக் காதலிக்க முடியும் என்று ஆதி சொன்ன அந்த நொடி, மதியின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போனது. மூச்சு முட்டுவது போல் உணர்ந்தவள், அங்கிருந்து உயிரற்றவள் போல் நடந்துவெளியேறினாள்.
நவீன் முந்தைய நாள் மருத்துவமனையில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான். ஆதி தன் அறையில் மயங்கிக் கிடந்ததைக் கண்டு பதறியடித்துக்கொண்டு அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.
மருத்துவர் நவீன்விடம் எச்சரித்திருந்தார்: “உங்கள் நண்பர் எதற்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார். ஏற்கனவே அவருக்கு மன அழுத்தம் (Depression) மற்றும் ஒற்றைத் தலைவலி (Migraine) இருக்கிறது. பழைய நினைவுகளைக் கொண்டு வர அவர் மூளையை அளவுக்கு அதிகமாகக் கஷ்டப்படுத்துகிறார். இது இப்படியே தொடர்ந்தால் அவர் ‘கோமா’ நிலைக்குச் செல்லவோ அல்லது தன் சுயத்தையே மறக்கவோ (Dementia) வாய்ப்பிருக்கிறது. அவருக்கு ஓய்வும் நிம்மதியும் தான் இப்போதைய மருந்து.”
ஆதி தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில்,படுக்கையின் தலைமாட்டுப் பகுதியில் சாய்ந்து அமர்ந்து புருவ மத்தியில் முடிச்சுடன் நேராக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நவீன் வேகமாக அவனருகில் ஓடிச்சென்று அவனை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டான்.
“டேய்.. நாயே! ஏண்டா இப்படி பண்ண..? இன்னொரு தடவை மயங்கி விழுந்து பாரு.. நானே உன்னைக் கொன்னுடுவேன்… பேச்சு மூச்சு இல்லாம நீ மயங்கிக் கிடந்ததைப் பார்த்து… எனக்கு உயிரே போச்சு தெரியுமா?”
ஆதி அவனுக்கு ஆறுதல் கூறுவது போல அவனது முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“டேய், போதும்டா.. சின்னப் பிள்ளை மாதிரி அழாத…”
அவன் அந்த அணைப்பிலிருந்து விலகி , ஒருவித சங்கடத்தோடு தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். அப்போதுதான் அந்த அறையில் இருந்த நர்ஸ் தங்களை நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பதை அவன் கவனித்தான். அது அவனுக்கு இன்னும் கொஞ்சம் கூச்சத்தைத் தர,
“நான் ஒன்னும் அழல.. கண்ணு வேர்க்குது, அவ்வளவுதான்…” என்று ஒரு மொக்கையான காரணத்தைச் சொல்லிச் சமாளிக்க, அதைக்கேட்டு அந்த நர்ஸ் மீண்டும் சிரிக்க.
“ஹலோ.. சிரிச்சது போதும்.. க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் தனியா பேசணும்.. கொஞ்சம் வெளிய போறீங்களா?”
அவன் சற்றே அதிகாரம் தொனிக்கும் குரலில் சொல்ல, அதற்குப் பதிலாக அந்த நர்ஸ் மீண்டும் ஒருமுறை சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
“ஆதி.. ஏண்டா நீயும் இவ்வளவு கஷ்டப்பட்டு.. மத்தவங்களையும் கஷ்டப்படுத்துற..?”
“ஒருவேளை நான் இப்படி வாழ்றதுதான் என் விதியோ என்னவோ…” என்றான் விரக்தியோடு
“சும்மா ஏதாவது பேசாத.. மதி கிட்ட போய் உண்மையச் சொல்லு.. இந்த தர்ஷா, பழைய காதல் இதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு ஒழுங்கா மதியோட சேர்ற வழியப் பாரு..”
“எப்படிடா சொல்றது? இந்த மெமரி லாஸே என்னால தாங்க முடியல.. இப்போ கோமா லெவலுக்கு போகும்னு சொல்றாங்க.. இந்த நிலைமையில நான் எப்படி அவளை இந்த நரகத்துக்குள்ள இழுத்துவிட முடியும்?”
“உன்னை நான் கொல்லப் போறேன்டா..டோமரு..” ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்திருந்தான் நவீன்.
ஆதியின் இந்த பிடிவாத குணத்தைக் கண்டு அவனுக்கு முற்றிலும் சலித்துப் போனது. தன் ஆதங்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியான குரலில்,
“இங்க பாரு ஆதி.. மதி புரிஞ்சிப்பா, அவ இதையெல்லாம் சரியான அர்த்தத்துல எடுத்துப்பா.. இப்போ அவளோட சப்போர்ட் உனக்குக் கண்டிப்பா தேவை…”
“ஆமா, மதி புரிஞ்சுக்கிற பொண்ணுதான், ஆனா அதுக்காக எவ்வளவு தூரம் அவளை பர்டன் பண்றது? அவளோட நான் பழகின அவ்வளவு நினைவுகளையும் மறந்துட்டேன்.. இருந்தும் கவலைப்படாம, திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிச்சு.. என்னை அவளை லவ் பண்ண வச்சா.. இப்போ இதையும் நான் மறந்துட்டேன்னா? திரும்ப அவ முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா..? எனக்கு திரும்பத் திரும்ப எல்லாத்தையும் ஞாபகப்படுத்தறதுலையே அவளோட ஒட்டுமொத்த லைஃப்பும் பாழாகனுமா… ஒவ்வொரு நாளும் எப்போ எனக்கு என்ன ஆகுமோன்ற ஒரு பயத்தோடயே அவ வாழனுமா… வேணாம்டா, ஷி டிசர்வ்ஸ் த பெஸ்ட். அவ எப்பவும் ஹாப்பியா இருக்கனும்.”
“மண்ணாங்கட்டி.. இப்போ மட்டும் அவ சந்தோஷமாவா இருக்கா? அந்தப் பொண்ணைத்தான் தினம் தினம் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கியே..” நவீன் ஆவேசமாக வெடித்தான்.
“என் மேல அன்பு இருக்குற வரைக்கும் தான் அவ ஃபீல் பண்ணுவா.. அந்த அன்பு காணாம போகும்போது, இந்த வேதனையும் இல்லாம போயிடும்.. அதுக்கப்புறம் அவ நார்மல் ஆகிடுவா…” அவன் ஒரு தீவிரத்தோடு எங்கோ வெறித்தபடி ஒரு பயங்கர அமைதியோடு சொல்ல,
“நீ பேசுறது எனக்கு ஒன்னும் புரியல.. டேய் உன்னோட இந்த கோளாறான மூளைக்குள்ள என்னதான்டா ஓடிட்டு இருக்கு?” என்றான் நவீன் கலக்கத்துடன்,
“நான் அவளை அந்த எல்லைக்கே தள்ளிவிடப் போறேன்.. அங்கிருந்து அவ என்னைக்குமே என்கிட்ட திரும்பி வர மாட்டா…”
மருத்துவமனையில் நடந்த சம்பவங்களையெல்லாம் நினைத்துப் பார்த்து,
“சொன்ன மாதிரியே பண்ணிட்டியேடா பாவி..”நவீன் மிகுந்த விரக்தியுடன் தன் கண்களை மூடிக்கொண்டான்.
தொடரும்..
error: Content is protected !!