Skip to content
Post Views: 471
சரவணன் கல்லூரியின் புது அட்மிஷன் வேலைகளை கவனிக்க விடுமுறை தினத்திலும் வேலைக்கு வந்திருந்தான். வசீகரன் சின்னபொண்ணுவுடன் உள்ளே வருவதை கண்டு அவர்களிடம் சென்றான்.
“டேய் வசி, புதுசா கல்யாணமான பொண்டாட்டிய கோயில், பீச், சினிமானு கூட்டிட்டு போகாம காலேஜ்க்கு கூட்டிட்டு வந்திருக்கே? அடுத்த வாரம் தானே கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது?”
Advertisement
“சின்னுவ காலேஜ் காம்பஸ்ல இருக்கற ஐஏஎஸ் கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து விடலாம்னு வந்தேன்டா”
Advertisement
“பரவால்லயே இதையாச்சும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணுச்சே. சந்தோஷம்டா”
Advertisement
“ஏன்டா ஒரு மாதிரி பேசறே?” வசி புருவம் சுருக்கினான்
Advertisement
“நேத்து நைட் நீ வேண்டாவோட அக்காங்ககிட்ட பேசினது காதுல விழுந்துச்சு. எனக்கே தெரியாம நான் வேலை செய்யற காலேஜ்ல வேண்டாவ சேர்த்து விட்டிருக்கே. இதுல தம்பி கட்டிக்க போற பொண்ணுனு தெரியாம நானே இவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். அப்பவும் கடைசி வரைக்கும் என்கிட்ட மூச்சுவிடாம இருந்திருக்கே. சரியான கல்லுளிமங்கன்டா நீ. நான் மட்டும் லதாவ லவ் பண்ணது எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணியிருக்கேன். ஆனா நீ என்கிட்ட எதுவுமே சொல்லல, அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்”
‘நாசமா போச்சு. நேத்து நான் பேசினது உனக்கு கேட்டுச்சுனா அண்ணிக்கும் கேட்டிருக்குமே’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.
“சரவணா சொல்லக்கூடாதுனு இல்லடா. அம்மாவுக்கு நான் சின்னுவ கல்யாணம் பண்ணிக்கறது இஷ்டமில்ல. உனக்கு தெரிஞ்சா, நீ அம்மாகிட்ட சொல்லிடுவியோனு தான் சொல்லல” என்றான். ஆனால் அண்ணியிடம் உளறிவிடுவானோ என்று தான் வசி அண்ணனிடம் சொல்லவில்லை.
“ஏன்டா, அவ்வளவு தான் என்னை புரிஞ்சு வச்சிருக்கியா? நான் எப்பவும் நியாயத்தோட பக்கம் தான்டா இருப்பேன். அம்மா முத்துமாணிக்கம் மாமாவுக்கு செஞ்சது துரோகம். அதுவும் பணத்துக்காக மாமாவை ஏமாத்தியிருக்காங்க. அப்படியிருக்கும் போது பெத்த அம்மாவா இருந்தாலும் தப்புனு தான் சொல்லுவனே தவிர அவங்க ஆட்டத்துக்கெல்லாம் துணை போக மாட்டேன்டா”
“தெரியும்டா, அதனாலதான் உன்கிட்ட இதுவரைக்கும் எதுவும் சொல்லாம இருக்கேன்”
“இன்னும் என்னடா சொல்லாம வச்சிருக்கே?” சரவணன் கேட்க
“எதுவும் சொல்லாம இருந்தேன்னு சொல்றதுக்கு டங் ஸ்லிப் ஆகி இருக்கேன்னு சொல்லிட்டேன்டா. சரவணா, சின்னுவ ஐஏஎஸ் கோச்சிங் கிளாஸ் சேர்த்திருக்கறது இப்போதைக்கு வீட்ல தெரிய வேணாம்டா”
“ஏன்டா”
“பெரிசா காரணம் எதுவுமில்ல. எக்ஸாம் முடியட்டும் அப்புறம் சொல்லிக்கலாம்னு நினைக்கிறேன்”
“சரிடா, வேண்டா ஆல் த பெஸ்ட்மா. நல்லா படி. டவுட் இருந்தா கேளு. சொல்லி தரேன்”
“சரிங்க மாமா”
“இங்கே சார்னு கூப்பிடணும் சின்னு” என்று வசி மனைவியை திருத்தினான்
அவள் சம்மதமாக தலையசைத்ததும் அவளை கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிட்டு, “கிளாஸ் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு, நான் வந்து கூட்டிட்டு போறேன்”
“தேங்க்ஸ் மாமு” கண்கலங்கினாள்
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதுக்குடி தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கே. ஒழுங்கா படிக்கணும், இல்லனா ஹாஸ்டல்ல சேர்த்துடுவேன் பாத்துக்க” என்று பொய்யாக மிரட்டிவிட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றான்.
மாலை வகுப்பு முடிந்ததும் சின்னு கணவனுக்கு போன் செய்ய அவன் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான். சின்னுவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் கைநீட்டி குங்குமம் வைக்க அதை குனிந்து வாங்கி கொண்டான். “சின்னு உனக்கு என்ன வேணும் கேளு, வாங்கி தரேன்”
“எதுவும் வேணாம் மாமு”
“எதாச்சும் கேளுடி”
சற்றுநேரம் யோசித்தவள் கண்கள் மிளிர “மாமு என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போறீங்களா? நான் இதுவரைக்கும் நேர்ல பாத்ததே இல்ல. அப்பா காலேஜ்ல சேர்க்க கூட்டிட்டு வரும் போது பீச்சுக்கு கூட்டிட்டு போய் காட்றேன்னு சொன்னாரு. ஆனா நான் காலேஜ்ல சேரும் போது அப்பா இல்ல” என்றவளின் கண்கள் கலங்கிட, அவளின் தோளை அழுத்தி தன்னோடு சேர்த்து அணைத்தபடி காரில் கடற்கரைக்கு சென்றான்.
கடல்களின் அலையை பார்த்ததும் சின்னபொண்ணு குதூகூலத்துடன் சிறுபெண் போல குதித்துக் கொண்டே ஓடி தண்ணீரில் விளையாடவும் கைகளை கட்டிக் கொண்டு அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோடு சேர்ந்து விளையாட மனம் பரபரத்தது. அவள் உடுத்தியிருந்த ஆடை நனைந்திருக்க அவளருகே செல்வது உசிதமல்ல என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கட்டிய மனைவியை கள்ளத் தனமாக ரசித்து கொண்டிருந்தான்.
“மாமு நீங்களும் வாங்க” என்று அவன் கரம்பற்றி அழைத்தாள்.
அவன் இல்லையென மறுப்பாக தலையசைத்தான். “ஏன் வரமாட்டேங்கறீங்க? கடல்ல விளையாட பிடிக்காதா?”
“ரொம்ப பிடிக்கும், அதுவும் உன்கூட விளையாடறதுனா புடிக்காம இருக்குமா?”
“அப்புறம் ஏன் வரமாட்டேங்கறீங்க, வாங்க” என்றவளின் உடலோடு ஒட்டியிருந்த உடையில் அவன் பார்வையும் ஒட்டிக் கொண்டது.
“சின்னு, ஒருத்தனுக்கு நல்ல பசி. அவன்கிட்ட அதோ உனக்கு சாப்பாடு இருக்கு, உன் வேலைய முடினு சொன்னா, அவன் சீக்கிரம் தன் வேலைய முடிச்சுட்டு தன்னோட சாப்பாட்டை சாப்பிடுவான். ஆனா அந்த சாப்பாடை கைல கொடுத்துட்டு வேலைய முடிச்சிட்டு சாப்பிடுனு சொன்னா அவன் மனசுபூரா சாப்பாடு மேல தான் இருக்குமே தவிர வேலை மேல ஓடாது, அப்புறம் வேலைய விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிடுவான்”
“யாருக்கு பசிக்குது? என்ன சொல்றீங்கனு புரியலயே மாமு” விழி அகல கேட்டவளை பார்த்து புன்னகைத்தான்.
“புரியாததால தான்டி நீ சின்னபொண்ணு. போய் அலையோடு விளையாடு, அடுத்த வருஷம் என்னோடு விளையாடு” என்று கண்சிமிட்டினான்.
அவன் பேசியது புரியாவிட்டாலும் கணவனின் கண்சிமிட்டலில் கன்னம் சிவந்தவள், “போதும் மாமு, வீட்டுக்கு போகலாம். உப்பு தண்ணியில உடம்பெல்லாம் பிசுபிசுனு இருக்கு” என்றதும் கார் சீட்டின் மீதிருந்த டவலை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
ஹாலில் லதாவும் அலமேலுவும் அமர்ந்திருந்தனர். காலையின் சென்றவர்கள் இருட்டும் போது தான் வந்திருக்கிறார்கள். சின்னபொண்ணு ஈரஉடையில் வருவதை கண்ட அலமேலு ரெண்டு பேரும் சினிமா பீச்னு சுத்திட்டு வர்றாங்க போலருக்கு என்று மனதிற்குள் புகைந்தார்.
“சின்னு போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு படிக்கற வேலைய பாரு” என்று அவளை முதலில் மாடிக்கு அனுப்பினான்.
“வசி, காளியப்பா சொந்த வேலையா ஊருக்கு போயிருக்காரு”
“அப்படியா? எத்தனை நாளைக்கு லீவு?”
“இனி வேலைக்கு வரமுடியாதுனு சொல்லிட்டாரு”
“சரி வேற ஆள பாக்கறேன்” என்றபடி மாடியேறினான்
“வீட்ல ஆள் இருக்கும் போது வேற ஆள் எதுக்கு பாக்கணும்?”
“ஓ இனிமே நீங்களே சமைக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களாம்மா? நல்ல முடிவு. சின்ன வயசுல உங்க கையால சாப்பிட்டது. உங்க சமையல் எப்படியிருக்கும்னே மறந்து போச்சு”
“நானே முட்டி வலில அவஸ்தை படறேன். ரெண்டு மருமக வீட்டுக்கு வந்தும் நான் ஏன்டா சமையல்கட்டுல அல்லாடணும்?”
“அப்போ இனிமே அண்ணி சமையல் தானா? சூப்பர்”
“ஐயோ எனக்கு சமைக்க தெரியாது”
“எத்தனை நாளைக்கு தெரியாதுனு சொல்லுவீங்க. யூடியூப்ல கத்துக்கோங்க அண்ணி”
“எனக்கு கத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நான் எம்எல்ஏவோட பொண்ணு. என் வீட்ல நான் இருக்கற இடத்துக்கு எல்லாம் என்னை தேடி வரும்”
“அண்ணி எம்எல்ஏவோட பொண்ணுங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டம் இல்ல. நாளைக்கே உங்கப்பா தோத்துட்டார்னா எக்ஸ் எம்எல்ஏ ஆயிடுவாரு. எப்பவும் அப்பாவோட பெருமைய பேசாம உங்க பெருமைய வளர்த்துக்கோங்க”
“பாத்தீங்களா அத்தே? இந்த வீட்ல எனக்கு மரியாதையே இல்ல. தனிகுடித்தனம் போறேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கறீங்க?” என்று லதா கண்ணீர் சிந்தினாள்
“வசி, நானும் பாத்துட்டே இருக்கேன். நீ லதாவுக்கு அண்ணிங்கிற மரியாதையே கொடுக்கறதில்ல. அவ பெரிய இடத்து பொண்ணா இருந்தாலும் சரவணன பிரிச்சிட்டு போகாம நம்ம வீட்ல கூட்டு குடும்பமா இருக்கறா. அவளோட அப்பா தான் நம்ம ரஞ்சனிக்கு காலேஜ் சீட் வாங்கி கொடுத்திருக்காரு. அத மறந்துடாத”
“பரவால்லையேம்மா. அண்ணியோட அப்பா செஞ்ச உதவிய இன்னும் மறக்காம இருக்கே. ஆனா என் சின்னுவோட அப்பா செஞ்சத மட்டும் மறந்துட்டியே”
“என்னடா மறந்துட்டேன்? வாங்கின காசை இல்லனு சொல்லிட்டேனா? திருப்பி கொடுத்தேன் தானே. கல்யாணத்துக்கும் ஒத்துக்கிட்டேன். இப்போ நான் பேசின மாதிரி இந்த வீட்டோட மருமகளா தானே இருக்கா? இன்னும் என்ன பண்ணனும்னு சொல்றே?”
“சின்னுவ சமைக்க சொல்றதுக்கு தானே ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கீங்க?”
“ஆமாடா, என்னால முட்டி வலியோட சமைய கட்டுல நின்னுட்டு சமைக்க முடியாது. அண்ணி குழந்தைய வச்சிட்டு இருக்கா. சமைக்கவும் தெரியாதுங்கறா. ரஞ்சனி டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கறவ, அவகிட்ட வேலை வாங்க முடியுமா?”
“சின்னு கூட தான் காலேஜ் படிக்கிறா அவளால சமைக்க முடியாது. ஹோட்டல்ல ஆர்டர் பண்றேன்”
மாடியிலிருந்த சின்னபொண்ணு கீழே வார்த்தைகள் வலுப்பதை கண்டு அவசரமாக படிகளில் இறங்கி வந்தாள். வசியினை நெருங்கி, “மாமு எதுக்கு ஹோட்டல் சாப்பாடு? சமைக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது. சமைச்சிடறேனே. சண்டை போடாதீங்க”
“இந்த வீட்ல எல்லாரும் சேர்ந்து சமைச்சாங்கனா தான் நீயும் சமைக்கணும். உன்னை மட்டும் யாராவது சமைக்க சொல்லி நீ சமைச்சேன்னு தெரிஞ்சுச்சு உன்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்ருவேன்” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.
“ஏன் உன் பொண்டாட்டி சமைச்சா என்ன ஆயிடுவா? கரைஞ்சு போயிடுவாளா?” அலமேலு எகத்தாளமாக கேட்க
“ஆமா, கரைஞ்சு தான் போயிடுவா”
“அப்படி என்ன இருக்குனு இவகிட்ட நீ மயங்கி கிடக்கறனு எனக்கு சத்தியமா தெரியலடா”
“அவ கிட்ட உண்மையும் நேர்மையும் அப்பாவித்தனமும் புத்திசாலி தனமும் கொட்டி கிடக்கு, அதான் அவகிட்ட மயங்கி கிடக்கறேன். அதுல உனக்கென்ன பிரச்சனை?”
“சரிதான். ஒரே ராத்திரியில தலையணை மந்திரம் போட்டுட்டா போலருக்கு” என்று மெல்லிய குரலில் முனகி கொண்டே அவர் திரும்பி செல்ல, அது வசியின் காதில் தப்பாமல் விழுந்து விட்டது.
“சின்னு, உனக்கு தலையணை மந்திரம் தெரியுமாடி?” என்றான் சத்தமாக
அவள் இல்லையென்று பலமாக தலையசைத்தாள்.
“அம்மா இவளுக்கு தலையணை மந்திரம் தெரியாதுங்கறா. அப்புறம் எப்படி மந்திரம் போடுவா?” என்றான்.
“மந்திரம் போடாம தான் இப்படி தலை கிறுகிறுத்து போயிருக்கே பாரு. எனக்கு தெரியாம எம்புட்டு வேலை பாத்திருக்க நீயி? என்கிட்ட எதையும் மறைக்காதவன் இவள கட்டிக்கறதுக்காக எவ்வளவு பெரிய நாடகம் ஆடியிருக்கேனு எனக்கும் தெரியும்டா? நான் எதுவும் கேட்க கூடாதுனு பொறுமையா இருக்கேன். என் பொறுமைய சோதிக்காத வசி”
“உன்கிட்ட இல்லாதத நான் ஏன்மா சோதிக்க போறேன். நீயும் எதுக்குமா தெரியாததெல்லாம் பண்ணிட்டு இருக்கே. என்ன கேக்கணுமோ கேளு” என்றபடி நீள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
“நேத்து நைட் நீ உன் மச்சினிங்ககிட்ட பேசினத எல்லாம் லதா சொன்னா”
‘இந்த அத்தை கிட்ட உங்க காதுல விழுந்ததா சொல்லி நீங்களாவே கேளுங்க, என் பேரை சொல்லாதீங்கனு பத்துமுறைக்கு மேல சொல்லியிருப்பேன். அப்பவும் உளறி வைக்கறாங்க பாரு’ என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாள் லதா.
வசீகரன் லதாவை அழுத்தமாக பார்த்து விட்டு தன் அன்னையின் பேச்சில் கவனம் செலுத்தினான்.
“நீ பிளான் பண்ணி அவள நம்ம வீட்டுக்கு வர வச்சிருக்கே. அதுமட்டுமா வீட்ல யாருக்குமே தெரியாம அவளை காலேஜ் சேர்த்து படிக்க வச்சிருக்கே. நவ்யாவ கல்யாணம் பண்றதா என்கிட்ட ஒத்துக்கிட்டு அவளுக்கு வேற மாப்பிள்ளைய செட் பண்ணி கொடுத்துட்டு என் வாயாலயே வேண்டாகிட்ட உன்னை கட்டிக்க சொல்லி கேக்க வச்சிருக்கே. மொத்தத்துல அவ மேல இருக்கற மோகத்துல பெத்த தாயை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ எல்லாம் பண்ணிட்டே. இன்னும் எனக்கு என்னடா பாக்கி வச்சிருக்கே. அதையும் பண்ணிடு” என்று திடீரென்று அலமேலு ஆவேசமாய் கத்தி அழ தொடங்கி விட்டார்.
“சூப்பர்மா. நான் பண்ணதெல்லாம் கரெக்ட்டா சொல்றே, அதே மாதிரி நீ செஞ்சதையும் சொல்லியிருக்கலாமே. நான் உன் மகன்ங்கிறதால என்னை நிக்க வச்சு கேள்வி கேக்கறே. ஆனா பாரு, இதுவரைக்கும் என்னால என் அம்மாவ கேள்வி கேக்க முடியல”
“என்னடா பெரிசா கேள்வி கேக்க போறே? அவ அப்பா கிட்ட சம்மந்தம் பேசினேன். அத தானே சொல்றே? ஆமாடா சம்மந்தம் பேசிட்டேன் தான். அதுக்கப்புறம் இவங்கள விட நல்ல சம்மந்தம் வந்துச்சு. அதனால முன்னாடி பேசின சம்மந்தத்தை வேணாம்னு நினைச்சேன். இது தப்பா? ஊர்உலகத்துல எல்லாரும் முதல்ல பேசின சம்மந்தத்தை தான் கல்யாணம் பண்றாங்களா?”
“அதுமட்டும் தான் உன்னோட தப்பாம்மா? நீ வேற எதுவும் பண்ணலயா?”
“வேறே என்னடா பண்ணேன்?”
“முத்துமாணிக்கம் மாமா இறக்கறதுக்கு முன்னாடி நீ அவர்கிட்ட போன்ல பேசியிருக்கே. அதுக்கப்புறம் அவர் இறந்திருக்காரு. இது தெரிஞ்சும் அவரோட சாவுக்கு கூட நீ போகல. இன்னைக்கு வரைக்கும் உனக்கு அத பத்தின குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்ல. உன்னால ஒரு பொண்ணு அநாதையாயிட்டா. அவளுக்கு நீ ஆதரவு தரலனா கூட பரவால்ல. நம்ம வீட்லயே அவளை வேலைக்காரியா நடத்தியிருக்கே. அவளை மிரட்டி என்னென்னவோ பேசி வீட்டை விட்டும் துரத்திட்டே”
அலமேலு உறைந்து நின்றுவிட்டார்.
“வசி, நான் போன்ல முத்துமாணிக்கம் அண்ணாகிட்ட பேசினது உனக்கெப்படி தெரியும்? அப்பா சொன்னாரா?”
“அவர் என்கிட்ட சொல்லல, ஆனா உண்மைய யாராலயும் மறைக்க முடியாதும்மா. எப்படியாச்சும் அது வெளியே வந்தே தீரும்”
“உன் பொண்டாட்டி தான் உனக்கு தப்புதப்பா சொல்லியிருக்கா“
“அவளுக்கே நேத்து நான் சொல்லி தான் தெரியும்”
அலமேலு தொய்ந்து அமர்ந்து விட்டார்
“ஏன்மா அமைதியா உட்கார்ந்துட்டே. நீ பண்ணது இன்னும் இருக்கே சொல்லட்டுமா? நெஞ்சுவலினு நாடகமாடி நவ்யாவ கட்டிக்க என்னை சம்மதிக்க வச்சே. இதெல்லாம் தப்புனு உனக்கு தோணவே தோணாதாம்மா?”
அலமேலுவும் லதாவும் திருதிருவென விழித்தார்கள்.
“இந்த விஷயம் எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா? டே ஒன்ல இருந்து எனக்கு தெரியும். ஆனா ரெண்டு பேரோட பெர்பாமன்ஸ் நல்லா தான் இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் நடிச்சீங்க, நானும் சேர்ந்து நடிச்சேன். தப்பா?” என்று இருவரையும் பார்த்து புருவம் உயர்த்தினான்.
“வசி, இந்த விஷயம் உன் அண்ணாவுக்கு”
“இதுவரைக்கும் நான் சொல்லல, ஆனா என்னை சொல்ல வச்சிடாதீங்க. நீங்க ரெண்டு பேரும் போட்ட நாடகத்த விட என் நாடகம் சின்னது தாம்மா”
லதா பதட்டத்துடன் அலமேலுவை பார்க்க, அவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன நாடகம்?” என்றபடி நடராஜன் வீட்டிற்குள் நுழைய, சரவணனும் அவர் பின்னால் வந்து கொண்டிருந்தான்.
“என்ன நாடகம்னு அண்ணிய கேளுங்கப்பா, சொல்லுவாங்க” என்றான் வசி
“என்னம்மா லதா?”
லதாவுக்கு வியர்த்து வழிந்தது. “மாமா, நானும் அத்தையும் டிவியில நாடகம் பாத்துட்டு இருந்தோம். வசி அதப்பத்தி சொல்லிட்டு இருந்தாரு”
“மாமியாரும் மருமகளும் ஒத்துமையா இருக்கற ஒரே விஷயம், டிவியில நாடகம் பாக்கறது, அதுமட்டும் இல்லனா சீரியல்ல நடக்கற சண்டை வீட்ல நடக்கும், அப்படித்தானே” என்று அவரே சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார்.
அலமேலுவும் லதாவும் கடனே என்று சிரித்து வைத்தார்கள். ஆனால் உள்ளுக்குள் வசிக்கு அவர்களின் செயல் தெரிந்திருக்கிறது என்று வயிற்றுக்குள் ஏதோ ஒன்று சடுகுடு விளையாடியது.
“அத்தை அப்புறம் பேசிக்கலாம்” லதா அலமேலுவின் காதில் கிசுகிசுத்தாள். அவருக்கும் அதுவே சரியென்று பட்டது.
“சின்னு வா போகலாம்” என்று அவளிடம் சொல்லிவிட்டு மாடியேறினான்.
அறைக்குள் சென்றதும், “சமைக்கறதுக்கு எல்லாம் ஏன் மாமு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க? நம்ம குடும்பத்துக்காக தானே சமைக்க போறேன். அதுக்கு எதுக்கு நடந்ததெல்லாம் சொல்லி அவங்கள மிரட்டிட்டு இருக்கீங்க?” என்றாள் அலுப்புடன்
“உனக்கு புரியல சின்னு, அவங்க உன்னை வேலைக்காரியா நடத்த பாக்கறாங்க. இத்தனை வருஷமா வேலை செஞ்சிட்டு இருந்த காளியப்பா திடீர்னு எப்படி யார்கிட்டயும் சொல்லிக்காம வேலைய விட்டு போயிருவாரு” என்றவன் தன் கைப்பேசியில் காளியப்பாவுக்கு அழைத்தான்.
“ஏன் வேலைய விட்டு போயிட்டீங்க? என்ன பிரச்சனை?”
“அது வந்து தம்பி” என்று அவர் தயங்கவும்
“காளியண்ணே, தயங்காம சொல்லுங்க. நான் இருக்கேன்”
“அலமேலு அம்மாவும் லதா மேடமும் தான் வேலைய விட்டு நின்னுட சொன்னாங்க. நீங்க யாரும் கேட்டா ஊர்ல பிரச்சனைனு சொல்ல சொல்லிட்டு கைல ஒரு லட்சம் பணம் கொடுத்தாங்க. நான் போகலனு சொன்னாலும் வேற எதாச்சும் பிரச்சனை பண்ணி என்னை அனுப்பிடுவாங்கனு தோணுச்சு. எதுக்கு வம்புனு கொடுத்த பணத்தை வாங்கிட்டு கிளம்பிட்டேன்”
“நாளைல இருந்து நீங்க வேலைக்கு வாங்க”
“தம்பி, வேணாம்பா”
“நீங்க வாங்க, யாரும் எதுவும் உங்கள பேசமாட்டாங்க. என்னை நம்பறீங்கல்ல?”
“நம்பறேன்பா, நாளைக்கு வரேன்” அவர் சொன்னதும் கைப்பேசியை வைத்தவன், “பாத்தியா சின்னு? உன்னை இந்த வீட்ல வேலைக்காரிய வச்சிருக்க திட்டம் போடறாங்க. யார் என்ன வேலை சொன்னாலும் என் புருஷன் சொன்னா செய்யறேன்னு சொல்லணும் புரியுதா? எனக்கு தெரியாம எதாச்சும் வேலை செஞ்சே, உன்னை ஹாஸ்டலுக்கு அனுப்பிடுவேன்”
“நீங்க சொல்றத மீற மாட்டேன் மாமு. அதுக்கெதுக்கு என்னை ஹாஸ்டலுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டிட்டே இருக்கீங்க?” என்று முகத்தை திருப்பினாள்.
“சரி இனிமே மிரட்டல, நீ படிச்சிட்டு இரு., நான் வந்துடறேன்” என்று அறையை விட்டு வெளியே வந்தான்.
சரவணன் லதா இருவரும் அப்போது தான் அவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.
“அண்ணி உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், இப்படி வாங்க?”
“என்னடா ரகசியம்? உங்க அண்ணிகிட்ட மட்டும் தான் சொல்லுவியா? என்கிட்ட சொல்ல மாட்டியா?” என்று சிரித்தான் சரவணன்
“அண்ணிக்கும் மச்சினனுக்கும் ஆயிரம் இருக்கும், அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. நீ போய் உன் பையனுக்கு பேம்பர்ஸ் மாத்தற வேலைய பாரு”
“இருடா, அடுத்த வருஷம் நீ உன் புள்ளைக்கு பேம்பர்ஸ் மாத்துவ இல்ல, அப்போ பேசிக்கறேன்” என்றபடி சரவணன் குழந்தையுடன் உள்ளே சென்றான்.
லதாவுக்கு வசி என்ன பேச போகிறான் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. தடதடக்கும் இதயத்தோடு அவனெதிரே வந்தாள்.
“அண்ணி, அம்மா நடிச்ச நாடகத்துக்கு டைரக்டர் புரோடியூசர் எல்லாம் நீங்க தான்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன முழிக்கறீங்க? உங்களோட ஹாஸ்பிட்டல்ல அம்மாவுக்கு ஹார்ட்ல ஓட்டைனு பெரிய ரீலா ஓட்டினீங்களே, அது அப்பவே அந்து போச்சு. அது தெரியாம நீங்க ரீலா ஓட்ட நானும் யார்கிட்டயும் சொல்லாம தெரியாத மாதிரியே படம் பாத்துட்டு இருந்தேன்.
நான் ஏன் தெரியுமா யார்கிட்டயும் சொல்லல? சரவணனுக்கு தெரிஞ்சா உங்கள வெறுத்துடுவான். என்னால உங்களுக்குள்ள விரிசல் வரக்கூடாதுனு தான் பொறுமையா இருக்கேன். ஆனா என்னோட பொறுமை எதுவரைக்கும் தாங்கும்னு எனக்கே தெரியாது. பாத்து நடந்துக்கோங்க. என் சின்னுவ சீண்டி பாக்காதீங்க, சேதாரம் உங்களுக்கு தான்” என்று விட்டு கீழே சென்றான்.
(தொடரும்)
error: Content is protected !!