Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 13.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அதை உணர்ந்தானோ என்னவோ வேகமாக அவளை நெருங்கியவன் “இப்ப எனக்கு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி”, என்றான்.

 

“எனக்கும்”, என்றவள் குரல் மெலிதாக வெளியே வர அதற்கு பிறகு அனுமதி வேண்டுமா என்ன? அவளுக்கும் உணர்வுகளை அவனிடம் மறைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அவனிடம் தோன்றுவதை அவனிடம் தானே சொல்ல முடியும்?

 



Advertisement

அவன் கரங்கள் அவளை வளைத்து அணைத்துக் கொள்ள அவன் மார்பில் இறுகப் புதைந்தாள். அடுத்த நொடி அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளுடைய இதழ்களைக் கவ்விக் கொண்டான்.

 

இத்தனை வருட ஏக்கம், ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்த ஒற்றை முத்தத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களும் அவன் முதுகில் அலைபாய்ந்து இறுக்கிக் கொள்ள இருவருக்கும் இடையே இடைவெளியே இல்லாமல் போனது.

Advertisement

 

Advertisement

அவளுடைய இதழ்களை அவன் கடித்து விழுங்க வலி எடுத்தாலும் அதை தாங்கிக் கொண்டாள்.

 

எப்போதும் அவன் தான் அவளை நெருங்க ஆர்வம் காட்டுவான். முதல் முறையாக அவள் அவனுடன் நெருக்கமாக ஒட்டிக் கொள்ள அவனுக்கே சிறு வெட்கம் வந்தது. அவள் அவனை ரசித்துப் பார்க்க வேறு செய்ய “ஏய் ஏன் டி இப்படி பாக்குற?”, என்று கேட்டுவிட்டு லேசாக முகம் சிவந்து போய் இருந்தவனை மேலும் ரசித்தாள் ரதி.

Advertisement

 

அவளை தீண்டியதால் உடல் எல்லாம் ஒரு வித குளிர் பரவியது போல உணர்ந்தான் அமர். அவளை முழுதாக கொள்ளையிட்ட நொடி நினைவில் வந்தது. அந்த தீண்டலின் சுவை இப்போது வரை அவனுக்குள் தித்தித்துக் கொண்டே இருக்கிறது.

 

அந்த முதல் சந்திப்பிலும் சரி அதற்கு பின்னான தருணங்களிலும் சரி அவன் சறுக்கி விழுவது அவளிடம் மட்டுமே.

 

அன்று அவளை அந்தரங்கமாய் தீண்டும் போது ஏற்பட்ட அந்த ஜில்லிப்பு இன்று வரை அவன் மனதில் அப்படியே பதிந்து இருக்க இப்போதும் அவன் உடலும் சரி மனமும் சரி அவளைக் கேட்டது. ஆனால் ஏற்கனவே உரிமையில்லாமல் தீண்டி பெரும் தவறு செய்து அதனால் விளைந்த கஷ்டங்கள் பல. மீண்டும் அதே தவறை எப்படி செய்வானாம்?

 

“வெளிய போகலாமா ரதி மா? ஏதாவது தப்பா நினைப்பாங்களோன்னு பயமா இருக்கு?”, என்றான்.

 

அவனை வியப்பாக பார்த்தவள் சிறு சிரிப்புடன் எழுந்து கொள்ள அவனும் அவளை கண்டு புன்னகைத்த படி வெளியே வர அவளும் அவனுடன் சென்றாள். இருவரும் புன்னகை முகமாக ஜோடியாக வர அதைக் கண்ட அனைவரின் முகமும் மலர்ந்தது.

 

“ரெண்டு பேரும் பேசிட்டீங்களா? உங்களுக்குள்ள பிரச்சனை ஒண்ணும் இல்லையே?”, என்று கேட்டாள் சகுந்தலா.

 

“பிரச்சனை எல்லாம் இல்லை மா. ரதியோட காதல் என்னை எப்பவும் மன்னிச்சிரும்”, என்று சொன்ன அமரின் குரலில் அவ்வளவு கர்வம்.

 

“அப்படின்னா நாளைக்கு எல்லாரும் கிளம்புவோம். உடனே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். சம்பந்தி நீங்க என்ன சொல்றீங்க?”,  என்று தாமோதரனிடம் கேட்டாள் சகுந்தலா.

 

ஏனோ சகுந்தலா இஷ்டத்துக்கு முடிவு எடுப்பது போல ஒரு உணர்வு மஞ்சுவுக்கு வந்தது. “அது எப்படி நீங்க வேண்டாம்னு சொன்னா நாங்க கம்முன்னு இருக்கணும், வேணும்னா உடனே சரின்னு சொல்லணுமா?”, என்று கேட்க வந்தாள்.

 

அதை உணர்ந்தோ என்னவோ அவளை பேச விடாமல் முந்திக் கொண்ட தாமோதரன் “எங்களுக்கு பரிபூரண சம்மதம் சம்பந்தி”, என்று சொல்லி விட்டு மனைவியையும் முறைத்துப் பார்த்தார்.

 

அவர் சம்மதத்தில் அனைவரின் முகமும் மலர்ந்து போக திவ்யாவும் புன்னகை முகமாக சாணக்கியனைப் பார்த்தாள். அவன் கண்கள் முதல் முறையாக சில்மிஷத்துடன் அவளைக் கண்டு கண்ணடிக்க ஏனோ திவ்யாவுக்கு புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு.

 

முதல் முறை தீண்டிய போது ஏற்பட்ட அதே உணர்வை இப்போது அவள் முகத்தில் பிரதிபலிக்க அவனுக்கோ அவளை கைகளுக்குள் அள்ளிக் கொள்ள வேண்டும் என்று பேராவல். இருவருமே இருண்ட பக்கங்களாக இருந்த பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட விரும்ப வில்லை.

 

எதற்காகவோ அண்ணனைப் பார்த்த அமர் அப்போது தான் சாணக்கியன் திவ்யாவை சைட் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனுக்கு தந்தை சொல்லி அவர்கள் விரும்பியது தெரியுமே? அண்ணனின் சந்தோஷம் திவ்யாவிடம் தான் என்று கண்டு கொண்டவன் அடுத்து என்ன செய்ய என்று யோசித்தான். அன்னை மட்டுமே இதற்கு உதவ முடியும் என்று தோன்றியது.

 

“அம்மா திவ்யாவுக்கு உடனடியா டைவர்ஸ் வாங்கணும். நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்”, என்றான் திடீரென்று.

 

சகுந்தலா குழப்பத்துடன் அவனைப் பார்க்க அனைவருக்குமே திகைப்பு தான். “ஆமா சம்பந்தி நானே இது விஷயமா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன். இன்னைக்கு சாயங்காலம் வக்கீல் பாக்க போனேன். அவர் ஊர்ல இல்லைன்னு வந்துட்டேன். என் பெரிய மகளுக்கு வழி சொல்லிட்டீங்க. என் சின்ன மகளுக்கு உதவி செய்ங்க”, என்று சொன்னார் தாமோதரன்.

 

திவ்யா வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே அவர் சொல்லி இருந்ததால் “நாளைக்கு காலைல ஒரு பதினொரு மணிக்கு என் கூட வாங்க. என் கூட படிச்ச தீனா இங்க தான் அட்வகேட்டா இருக்கான், அவன் கிட்ட உங்களை கூட்டிட்டு போறேன். அவன் ஒரு நோட்டீஸ் தருவான். நீங்க அதை வாங்கிட்டு நேராவே போய் அந்த பாண்டியன் கிட்ட சைன் வாங்கிருங்க. அதுக்கப்புறம் தீனா பாத்துக்குவான். ஆனா அந்த பாண்டியன் கையெழுத்து போடுவானா? அவன் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா இந்த கேஸ்க்கு தீர்வு உடனடியா கிடைக்காது. கொஞ்சம் இழுத்து அடிக்கும்”, என்றாள்.

 

“கையெழுத்து போடலைனா கொன்னுற மாட்டேன். என் பொண்ணு வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்”, என்று அவர் பேச “மாமா அவன் கையெழுத்து போடுவான். எல்லாம் நல்ல படியா நடக்கும். நீங்க மனசை போட்டு கெடுத்துக்காதீங்க. நாளைக்கு விடிஞ்சதும் எல்லாம் பேசலாம். அவங்களும் டிராவல் பண்ணி வந்துருக்காங்க. நேரமும் அதிகமாகிருச்சு. எல்லாரும் தூங்கலாம்”, என்று அரவிந்த் சொல்ல இப்போது அனைவரும் அவன் பக்கம் திரும்பினார்கள்.

 

“அட ஆமா அரவிந்த், எனக்கு கூட இது தோணலை பாரேன். எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம். அப்புறம் சம்பந்தி எங்க அரவிந்த்க்கு தான் நாங்க ரொம்ப கடமை பட்டுருக்கோம். பொறுப்பான பையன்”, என்று ஆரம்பித்து அவன் ரதிக்கு செய்தது அனைத்தையும் சொல்ல சகுந்தலா மனதில் உயர்ந்து நின்றான் அரவிந்த்.

 

“மாமா எல்லாரையும் தூங்க போக சொன்னா நீங்க என் பெருமை பேசிட்டு இருப்பீங்களா? திவ்யா ரதி உள்ள போங்க. மேடம் நீங்களும் அவங்களும் அத்தை மாமா ரூம்ல படுத்துக்கோங்க. உங்க பசங்க ரெண்டு பேரும் இந்த ரூம்ல தூங்கட்டும்”, என்று சொல்லி தன்னுடைய ரூமைக் கொடுத்தான்.

 

அமருக்கே அரவிந்தை எண்ணி திகைப்பு தான். தன் மேல் கோபமாக இருப்பான் என்று தெரியும். அவனுக்கு தன்னை பிடிக்காது என்றும் தெரியும். ஆனாலும் அவனது நல்ல மனது ரதிக்கு துணை நின்றது இப்போது அவனது அறையையே தங்களுக்கு கொடுப்பது என அனைத்துமே அவனை உயர்த்தி தான் காட்டியது.

 

ரதியும் திவ்யாவும் தங்கள் ஜோடிகளை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் செல்ல சகுந்தலா ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

 

“நீங்களும் உள்ள வந்து தூங்குங்க அரவிந்த்“, என்று அழைத்தான் சாணக்கியன்.

 

“இல்லை சார், நான் மாமா அத்தை கூட ஹால்ல படுத்துக்குவேன்”

 

“சார் இல்லை. இனி அண்ணான்னு சொல்லு. நீயும் இனி எனக்கு அமர் மாதிரி தான்”, என்று சொன்ன சாணக்கியன் அவன் தோளை தட்டிக் கொடுத்து விட்டு அமரை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

அனைவரும் தூங்கச் சென்றாலும் யாருக்கும் தூக்கம் தான் வர வில்லை. மனது நிறைந்திருக்க தூக்கம் எங்கிருந்து வரும்?

 

தாமோதரன் மற்றும் அரவிந் இருவரும் படுத்ததும் அவர்கள் தலை பக்கம் படுத்த மஞ்சு “எனக்கு நடக்குற எதுவும் சரியா படலை”,என்றாள்.

 

“இப்ப என்ன சரியா நடக்கலை?”, என்று கேட்டார் தாமோதரன்.

 

“அது எப்படிங்க? நம்ம பொண்ணை காதல்னு சொல்லி ஏமாத்திட்டு வயித்துல பிள்ளையோட விட்டுட்டு போனான். இத்தனை வருஷம் வரவும் இல்லை. இப்ப வந்து என் பிள்ளை என் பொண்டாட்டி கல்யாணம்னு பேசுறான். அவங்க அம்மாவும் ஒத்து ஊதூது?”, என்று கேட்டாள்.

 

“இங்க பாரு மஞ்சு, அந்த தம்பி மேல எனக்கும் கோபம் இருக்கு தான். ஆனா கோப பட்டா இன்னும் பாதிக்க பட போறது நம்ம ரதி தான். நமக்கு இத்தனை வருஷம் கோபம் இருந்தாலும் ரதிக்கு அந்த கோபம் அவன் மேல இல்லை தானே? இல்லை அவனைத் தவிர வேற யாரையும் தான் அவ ஏத்துக்குவாளா? நம்ம அரவிந்த் பத்தி கூட அத்தனை தடவை பேசிட்டோம். அவனுக்கு வேற பொண்ணு பாக்க சொன்னாளே தவிர அவ வேற யாரையும் ஏத்துக்கலையே? அவனையே நினைச்சு அவன் கூட தானே வாழ்ந்துட்டு இருக்கா. அவளே மன்னிச்சு ஏத்துகிட்ட பிறகு நமக்கு என்ன வீம்பு. நம்ம வேண்டாம்னு சொன்னாலும் பாதிக்க பட போறது நம்ம பிள்ளையும் பேரப் பிள்ளைகளும் தான். நம்ம கோபத்தை விட பிள்ளைங்க எதிர்காலம் முக்கியம்னு எனக்கு தோணுது மா”, என்றார்.

 

“ஆனாலும்”, என்று மஞ்சு இழுக்க “அத்தை அமர் நல்லவன் தான். அவன் அப்பா பண்ணின தப்புக்கு அவன் என்ன பண்ணுவான். ரதிக்கு நடந்ததுக்கு எனக்கும் கோபம் இருக்கு தான். ஆனா அவன் அவளுக்காக தானே விலகி போனான்? இத்தனைக்கும் ரதிக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தான் நினைச்சிட்டு இருந்துருக்கான். இனியும் அவங்களை பிரிச்சு நாம என்ன பண்ண போறோம்? உன் கோபத்தை விட்டுட்டா ரதி நல்லா இருப்பான்னா அதை விடுறது தான் நல்லது. அவ கஷ்ட காலம் எல்லாம் போயிருச்சு. இனி அவ சந்தோஷமா இருப்பா. அதை பாரு”, என்றான் அரவிந்த்.

 

முழுதாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு சமாதானமானாள். பிள்ளைகளுக்காக கோப தாபங்களையும் வெறுப்புகளையும் விடுவது பெற்றவர்களின் இயல்பு தானே?

 

அடுத்த நாள் காலை நான்கு மணி இருக்கும், முதலில் கண் விழித்தது சாணக்கியன் தான். தன்னவளுக்கு விடுதலை கிடைக்காத வரை அவனுக்கு தூக்கம் எங்கிருந்து வரும். இன்று தாமோதரன் விவாகரத்து மனுவில் கையெழுத்து வாங்க போகும் போது பாண்டியன் எந்த பிரச்சனையும் செய்யாமல் கையெழுத்து போட வேண்டும். அவன் போட வில்லை என்றால் ஏதாவது சொதப்பும்.

 

அதனால் எழுந்து கொண்டவன் முகம் கழுவி விட்டு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

 

“இந்நேரம் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க அண்ணா? எங்கயோ கிளம்பி இருக்குற மாதிரி இருக்கு?”, என்று கேட்டான் அரவிந்த்.

 

ஒரு நொடியில் அதிர்ச்சியில், திரும்பினாலும் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டவன் “எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. போகணும்”, என்றான்.

 

“என்ன வேலை? எங்க அண்ணனை தானே பாக்கணும்?”, என்று கேட்க அப்பட்டமான அதிர்ச்சி சாணக்கியனுக்கு.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!