ஜீவாவின் கேள்வியை நிச்சயம் அர்த்தனா எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி,
“என்ன பிரச்சனை, ஒன்னும் இல்லையே” என்றாள்.
“இங்க பாரு தனா, கேஸ் விஷயமா ரஞ்சனோட சோசியல் மீடியா அக்கவுண்ட் செக் பண்ணினேன். அவன் இன்ஸ்டாகிராம்ல பார்த்தா நீ அவன் ப்ரண்ட் லிஸ்ட்ல இருந்த, ஆனா அன்னிக்கு அவனோட சண்டை போடுற. ஒன்னு முன்னாடியே அவனை உனக்குத் தெரிஞ்சிருக்கணும், இல்லை சண்டைப்போட்ட அப்புறம் தெரியணும். அதுக்கு வாய்ப்பில்லை, இல்லைதானே?” என்று ஜீவா கேட்க,
“நானும் அவனும் பெங்களூர்ல ஒரே ஏரியாவுல ஸ்டே பண்ணியிருந்தோம். ஜிம், ஷட்டில் கோர்ட்ல மீட் பண்ணினதால தெரியும். ப்ரண்ட்ஸ்” என்றாள் விட்டேற்றியாக.
Advertisement
எதுவுமில்லை போல என்று அண்ணனுக்கும் அவளுக்கும் சேர்த்துக் காட்ட நினைத்து வார்த்தைகளை அளந்து, தேர்ந்தெடுத்துச் சொன்னாள். ரஞ்சன் மீது துளிர்விட்ட அன்பின் இருப்பினை உணர்ந்தாலும், இளவெயிலாய் அவள் மனத்தைக் கோபம் சூழ்ந்திருந்தது.
“எப்படி?” என்று ஜீவாவுக்குப் புரியவில்லை.
“எப்படின்னா? அவன் ஃபேமிலி பத்தி பெருசா ஷேர் பண்ணினதில்லை, ஐ மீன் இன் டீடெய்ல். அதனாலதான் அன்னிக்கு அவன் அப்படி பேசினான். அன்னிலிருந்து நான் அவனோட பேசுறது இல்லை. அதுக்கு முன்னாடியும் ஒன்னும் அவன் எனக்கு முக்கியமானவன் இல்லைடா அண்ணா” என்றாள் அர்த்தனா.
Advertisement
“ஓகே! அவங்களோட நமக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் வேண்டாம் தனா. நீ வச்சுக்க மாட்ட, இருந்தாலும் சொல்றேன். அவங்க குடும்பத்துக்கு நடந்த விஷயத்தால அவங்களுக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்லை. முக்கியமா ரஞ்சன், அவன் சொந்த தங்கச்சி ஹஸ்பண்ட் ராஜமகேந்திரனையே சந்தேகப்பட்டான். நம்மை ஈசியா ப்ளேம் பண்ணுவான்” என்றவன்,
Advertisement
“ஓகே, நீ வேலையைப் பாரு” என்றவன் அவன் அறைக்குள் போனான்.
அவனை சந்தித்த கணங்களையும் இப்படி இயல்பாக முடக்க முடிந்தால் எத்தனை எளிதாக இருக்கும் என்று நினைத்தவளுக்குக் கண்ணோரம் கசிந்தது. அதனை உதறியவள் மடிக்கணினியை எடுத்து தன் வேலையில் கவனமானாள்.
Advertisement
************
“ரஞ்சண்ணா, எனக்குக் கார் வேணும். எடுத்துட்டு வரியா?” என்று காலையில் அண்ணனுக்கு அழைத்துக் கேட்டாள் பிரசன்னவர்த்தினி.
“ஏன் எம்.பி சார் கார் கூட உனக்குக் கொடுக்கலையா?” என்று அவன் நக்கல் செய்ய,
“அண்ணா, அடி வாங்காத. அவர் ஜீப் எடுத்துட்டுப் போய்ட்டார். அத்தை, மாமா அவங்க கார்ல ஹாஸ்பிட்டல் போய்ட்டாங்க. என் கார் நம்ம வீட்ல இருக்குதானே, நீ எடுத்துட்டு வரியா? இல்லை நானே டிரைவர் அண்ணாவை எடுத்துட்டு வர சொல்லவா?” என்று பிரசன்னா மிரட்ட,
“வரேன் பிரசன்னா. உன்னையும் பார்க்கணும் போல இருக்கு” என்று ரஞ்சன் சொல்ல, பிரசன்ன வர்த்தினியும் உற்சாகமாக தயாரானாள்.
ராஜமகேந்திரன் காலையிலேயே அவனது தொகுதி அலுவலகம் சென்றுவிட்டான். நேற்றையை இரவெல்லாம் மகேந்திரனைக் குறித்த சிந்தனையில் இருந்தவளுக்கு அவனின் மனவோட்டமும் புரிந்தது. நான் காதலித்து மணந்தவனுக்கு என்ன கொடுத்தேன் நான்?
இந்த கேள்வி அவளை குற்றம் சாட்டியது. அவன் அப்படி இருக்க வேண்டும், இப்படி என்னை தாங்க வேண்டும் என்று நினைக்கும் நான் அவனும் அப்படி நினைப்பான், ஆவல் கொள்வான் என்று ஏன் நினைக்கவில்லை என்ற கேள்விகள்.
காதல் ஏன் எப்போதும் எதிர்ப்பார்க்கிறது. வாங்கிகொள்ளவும், அன்பினை ஏந்தவும் தயாராக இருக்கின்ற காதல் மனம் ஏன் இப்படி அன்பு செய்ய வேண்டும், பிரியத்தைப் பகிர வேண்டும் என்று பெரும்பாலும் நினைப்பதில்லை?
மகேந்திரன் அவன் மனத்தின் எதிர்ப்பார்ப்புகளை அவளிடம் சேர்த்திருந்தான். இத்தனைக்கும் பெரிதான வார்த்தைகள் இல்லை. உனக்கும் எனக்கும் நடுவில் யாரையும் இழுக்காதே என்றான். உண்மைதானே?
அவன் இப்படி உடன்பிறந்தவனுக்காக உருகி, அவளை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் இப்படி புரிதலோடு இருப்பாளா இல்லை என் கணவன் என்னை நினைக்கவில்லையே என்று கரைவாளா? அந்த கேள்வியை அவளிடம் யாரும் கேட்கவில்லை. இருந்தாலும் சுயத்தின் உண்மை பிரசன்னாவை சுட்டது.
காலையில் அவளிடம் சொல்லிக்கொண்டு அவன் சென்றுவிட, காலை உணவு மாமனார் மாமியாரோடு உண்டாள்.
“அவனை சாப்பிட சொல்லாம ஏன் அனுப்பின வர்த்தினி?” என்று வைதேகி மருமகளைப் பேச,
“யார் அவன்? அப்படியே சாப்பிட்டாலும்” என்று புலம்பினார்.
“வைதேகி, சீக்கிரம் சாப்பிட்டு வா. எனக்கு டைமாச்சு” என்று வித்யாதரன் மனைவியை அதட்டினார்.
கணவனை முறைத்தவர், “நீதான் வர்த்தினி இதெல்லாம் பார்க்கணும். அவன் ரொம்ப ஆசைப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணினான். நீ என்னடான்னா ஜாலியா உங்க வீட்ல போய் இருந்திட்ட, திலக் முக்கியமில்லைனு சொல்லல, என் மகனையும் பாருனு சொல்றேன்” என்றார் அழுத்தமாக. அவள் குறுக்கே பேச வர,
“நீ வந்த பின்னாடி அவன் நல்லா இருக்கான், ஆனா மறுபடியும் என்னாச்சுனு தெரியல, ரெண்டு மூணு நாளா டல்லா இருக்கான். கொஞ்சம் அவனைக் கவனி” என்று மீண்டும் அழுத்திச் சொல்ல,
“அத்த, ஒரு நிமிஷம்” என்றாள் கொஞ்சம் ஆர்வமான பாவனையில்.
வைதேகி அவளைக் கேள்வியாகப் பார்க்க, என்ன நினைத்தாளோ மனத்தில் உதித்த கேள்வியைக் கேட்கவில்லை.
மகேந்திரனுக்கும் தனக்கும் நடுவில் யாரையும் கொண்டு வரக்கூடாது என்று நினைத்தாள்.
“சொல்லு வர்த்தினி” என்று வைதேகி அவளையே பார்க்க,
“சொன்னா மட்டும் உங்க பையன் கேட்டுடுவாரா அத்த? எதையாச்சும் சொல்லி சமாளிச்சிடுறார். பட் கண்டிப்பா அவர் ஹெல்த் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டார். நான் கவனிக்கிறேன்” என்றாள் உறுதியாக.
மாமியார் சொன்ன வார்த்தைகளால் மனத்தினுள் ஒரு மறுமலர்ச்சி. என்னை விரும்பி மணந்தானா? இதை அவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் அவன் உண்மையான பதில் சொல்வானா? என்று தெரியவில்லை. இருந்தும் அகவயமான அவ்வுணர்வை ஆராயாமல் அனுபவித்தாள்.
ரஞ்சன் வரவும் அவனோடு ஷாப்பிங் மால் சென்றாள்.
“எங்க போறோம் பிரசன்னா?” என்று ரஞ்சன் கேட்க,
“அவருக்குக் கிஃப்ட் வாங்க போறேன்” என்றாள்.
அவன் புருவங்கள் உயர, “அவர் எலெக்ஷன்ல வின் பண்ணினதுக்கு நான் எதுவும் கிஃப்ட் பண்ணல. ரொம்ப நாளாச்சு, இருந்தாலும் இப்பவாச்சும் கொடுக்கணும் தோணிச்சு” என்று பிரசன்னா விழிகள் மின்ன சொன்னாள்.
ரஞ்சனோ நக்கலாக, “திலக் அண்ணா கண்டெஸ்ட் பண்ணாம இருந்ததால அவர் ஜெயிச்சார்.” என்றான் பட்டென்று.
“ஸோ வாட்?” என்ற தங்கையின் பதிலை ரஞ்சன் எதிர்ப்பார்க்கவில்லை.
“திலக் அண்ணா வின் பண்ணியிருந்தா இப்படி பேசியிருப்பியா இல்லை செலபிரேட் பண்ணியிருப்பியாண்ணா?”
அண்ணன் தாசனான அவனுக்குப் பொய் சொல்ல வரவில்லை. நிச்சயம் கொண்டாடித் தீர்த்திருப்பான்.
“அவர் தப்பு செஞ்சிருப்பார்னு நான் நினைச்சு நம்ப வீட்ல இல்லை. திலக் அண்ணாவுக்காக இருந்தேன். அவர் தப்பு செய்யலனு ப்ரூவ் பண்ண இருந்தேன். அதுக்காக எப்பவும் அவரைப் பேசிட்டு இருந்தா நான் பொறுமையா இருக்க மாட்டேன், அப்பாகிட்ட சொல்லிடுவேன்” என்று அவன் பிரியத்தங்கை பிரசன்னவர்த்தினி மிரட்ட, ரஞ்சனுக்கு அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்ற வார்த்தையில் புன்னகை.
“சாரி” என்றான் மனதார.
பிரசன்னா பதில் சொல்லாமல் முறைக்க,
“நிஜமா எப்பவும் அவர் அண்ணாவோட போட்டி போட்டு எனக்கு அவர்மேல கோவம், மத்தபடி வேறொனுமில்லை” என்றான் ரஞ்சன்.
“அதுக்காக அவர் என் ஹஸ்பண்ட்” என்று பிரசன்னா அழுத்தி சொல்ல,
“சரிம்மா, வா. உன் ஹஸ்பண்டுக்கு கிஃப்ட் வாங்குவோம்” என்று தங்கையை உயர் ரக கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடைக்கு அழைத்துப் போனான்.
“உன் கையைக் காட்டு” என்று அண்ணனை நீட்ட சொன்னவள், அவனுக்கும் ஒரு கைகடிகாரம் பரிசளித்தாள். பின் திலக்கிற்காக வாங்கிய தங்கையை ஆச்சரியத்தோடு பார்க்க,
“மாமாகிட்ட அண்ணாவோட ரிப்போர்ட்ஸ் காட்டினேன். இம்ப்ரூவ்மெண்ட் இருக்குனு சொன்னாங்க, சீக்கிரம் அண்ணா இந்த வாட்சைக் கட்டுவார் பாரு” என்றவள், கணவனுக்கு விலை கூடுதலாக, பார்வைக்கும் அழகாக, கம்பீரமாக ஒரு கைக்கடிகாரத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
அண்ணனை வீட்டில் இறக்கிவிட்டு, சிவன்தாங்கல் சென்றவள் கணவனுக்காகக் காத்திருந்தாள். மதியம் அவன் உண்ண வராததால் அவளே உணவை எடுத்துக்கொண்டு தொகுதி அலுவலகம் சென்றான். நிறைய மனுக்கள் வந்திருக்க, அதையெல்லாம் சரி பார்க்கும் வேலையில் அலுவலக பணியாளர்கள் இருக்க, அவன் அறைக்கு வெளியே இருந்த காத்திருப்போர் அறையில் இருந்தாள் பிரசன்னா.
வேகமாக அறைக்கதவுத் திறக்கும் சத்தம் கேட்க, கணவனோ என்று ஆவலாய் பிரசன்னா கண்களை உயர்த்த, ஸ்ரீதரன் நின்றான்.
“ஹாய் பிரசன்னா, எப்போ வந்த?” என்று அவன் கேட்க,
“ஹாய் மாமா, இப்போதான். எப்போ வருவார் மகேந்திரன்?” என்று கணவனை விசாரிக்க,
“அவனா? இன்னும் டென் மினிட்ஸ் ஆகும். ஒரு மீட்டீங்” என்றவன் பிரசன்னாவிடம் பொதுவாகப் பேசினான்.
“இப்படி உங்கிட்ட பேசினேன் தெரிஞ்சா மகேந்திரன் என்னை உண்டில்லைனு ஆக்கிடுவான். அவனை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும், சொல்லப்போனா உன்னை விட அவனை எனக்கு நல்லா தெரியும். நீ இல்லாத இந்த மூணு மாசத்துல அவன் அவ்வளவு ஃபீல் பண்ணினான் பிரசன்னா. இனி இப்படி செய்யாத” என்று பொறுமையாக ஸ்ரீதரன் அறிவுறுத்த,
பிரசன்னா எப்போதும் பதில் பேசுபவள் அமைதியாக இருந்தாள்.
“என்ன ஒன்னும் பேச மாட்டேங்குற. திலக் எங்களோட செட் ஆக மாட்டான், அதுக்காக நாங்க அவனை வெறுக்கிறோம் கிடையாது. திலக் வச்சு நீ அவனை விட்டுப் போனது ரொம்பத் தப்பும்மா” என்று ஸ்ரீதரன் சொல்ல,
“மாமா, நான் போகல. எனக்கு ஒன்னு சொல்லுங்க.” என்றவள் வெகுவான யோசனைக்குப் பின்,
“அவர், மகேந்திரன்.. எப்படி என்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டார்” என்றதும் ஸ்ரீதரன் முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு.
“கல்யாணமே முடிஞ்சாச்சு. இப்போ ஏன் இந்த கேள்வி” என்று அவன் திருப்பிக் கேட்க, பிரசன்னா முறைத்தாள்.
“அவனுக்கு உன்னைப் பிடிக்கும் பிரசன்னா. காலேஜ் படிக்கிற உங்கிட்ட அவன் அதிகம் பேசல, உண்மையை சொல்லப்போனா நானே எதிர்ப்பார்க்கல அவன் மனசுல நீ இருப்பன்னு. பட் அவங்கம்மா பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சதுமே அவன் உன்னைத்தான் பார்க்கணும்னு சொல்லிட்டான். மீதி கதையை அவங்கிட்ட கேளு, அவ்வளவுதான் எனக்கும் தெரியும்” என்று ஸ்ரீதரன் சொல்ல, பிரசன்னா முகத்தில் காதலின் கிரணங்களை அள்ளித்தெளித்தாற் போலொரு பிரகாசம்.
என்னவோ வாகை சூடிய உணர்வு. சொல்லாவிட்டால் போகிறது. என்னையே அத்தனை ஆண்டும் நினைத்திருக்கிறான் என்ற நினைவே தித்திப்பாக இருக்க, அதனை மெல்ல சுவைத்து உணர்ந்தாள்.
ராஜமகேந்திரனின் அறையிலிருந்து இருவர் வெளியேற, ஸ்ரீதரனுக்கும் அழைப்பு வர, “நீ உள்ள போ பிரசன்னா” என்றான்.
அவள் உள்ளே போக, மகேந்திரன் முகத்தில் பளிச்சென்ற புன்னகை. வெள்ளை முழுக்கை சட்டை, வெள்ளை வேஷ்டி என்று அரசியல்வாதிக்குரிய இலக்கணத்தில் அழகுற மிளிர்ந்தவனை உரிமையாக கண்களவு செய்தாள் பிரசன்னவர்த்தினி.
“என்ன பண்ற நீ? பசிச்சா நானே வரப்போறேன், இல்லை கொண்டு வர சொல்வேன். நீ முதல்ல ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பி. உன் பிரேக் இன்னுமா முடியல? இன்னிக்கு இங்க இருப்பேன், நெக்ஸ்ட் வீக் டெல்லி கிளம்பிடுவேன். அங்கயும் சாப்பாட்டோட வந்திருவியா?” என்று மனைவியிடம் கேட்க, உணவைப் பிரித்து வைத்தவள் முகத்தில் கோபம்.
எதார்த்தமாக இருக்கிறேன் என்று இயல்பான பிரியத்தின் பரிமாறல்களின் பரிமளம் உணராமல் அவன் பேசிட, பிரசன்னாவிற்குக் கணவனிடம் எப்படி காதலைக் காட்ட என்ற திண்டாட்டம்.
தன்னை திண்டாட செய்பவனை என்ன செய்யலாம் என்று பார்க்க, தன்னையும் அறியாமல் அடுத்த நாளே திண்டாட வைத்தாள் பிரசன்னவர்த்தினி.