Skip to content
Post Views: 54
ரிதம் 22
தலைவாழை இலையைப் பரப்பி எல்லோரையும் அமர வைத்து, புஷ்பவல்லியும் நத்தாஷாவும் அனைவருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
Advertisement
தானும் அதைச் செய்வேன் என்று கூறிய ப்ரீத்தியை வம்படியாகக் கணவனின் அருகில் அமர வைத்திருந்தார்கள். ராஜேஷும் அங்குதான் இருந்தார்.
எல்லோருக்கும் எல்லாவற்றையும் பரிமாறி முடித்தவர்கள், கடைசியாகச் சிக்கன் கிரேவியைக் கையில் எடுத்தாள் நத்தாஷா. அதன் வாசனை அவள் வயிற்றைப் பிரட்டச் செய்தாலும், பொறுத்துக்கொண்டவள் அதை எல்லோருக்கும் பரிமாறினாள்.
Advertisement
Advertisement
முதலில் அதை உணராதவன், அப்போதுதான் அந்த வாசனையையும் தன் இலையில் வீற்றிருப்பதையும் கவனித்தான். நிமிர்ந்து நத்தாஷாவைப் பார்த்தான். அவள் அதற்குள் மற்றவர்களுக்குப் பரிமாற அங்கிருந்து அகன்றுவிட்டாள். மகாலட்சுமி தன் மகனின் கையில் தன் கையை வைத்து கண்களால் பேசினார்.
அவர்கள் சைவம் என்று அவனுக்குத் தெரியும். அதைத் தாயிடமும் கூறியிருந்தான். ஆனால், இப்பொழுது அவர்கள் இலையில் அசைவச் சாப்பாட்டைப் பார்த்ததும், மகனிடம் என்னவென்று வினவினார்.
Advertisement
அவர்கள் மட்டும்தான் சைவம்; ரமேஷின் குடும்பமல்ல. அதனால் அவர்களுக்கும் அசைவம் பரிமாறப்பட்டது. மற்ற எல்லாவற்றையும் வாங்கி வந்தவள், அதை மட்டும் ரமேஷிடம்தான் வாங்கி வரக் கூறினாள். அதுவும் ப்ரீத்தியின் உதவியோடு.
பரிமாறிவிட்டு ஆழ்ந்த பெருமூச்சோடு நிமிர்ந்து, ‘அவர்கள் சாப்பிடுகிறார்களா?’ என்று பார்த்தாள் நத்தாஷா.
“வாட் இஸ் திஸ் நத்தாஷா”? என்றான் கௌதம் அழுத்தமாக.
அவள் திகைத்து ஒன்றும் புரியாமல் விழித்தாள். அந்த விழிப்பின் பொருளை உணர்ந்துகொண்டவன்,
“எதுக்காக அசைவம் செஞ்சிருக்கீங்க? நீங்க சைவம் தானே? உன் கையால சைவம் சாப்பிடத்தான் நான் விரும்பினேன், அசைவமில்ல” என்றான் கௌதம்.
அவளோ திகைத்து விழித்தாள். அதிக உரிமையுடன் இருப்பது போலத் தோன்றியது. ‘இது என்ன பேச்சு? எங்கே தாய் தவறாக நினைத்து விடுவாரோ?’ என்று பதற்றமாகத் தாயைப் பார்த்தாள்.
ஆனால், அவருக்கு மகளின் மீது அலாதி நம்பிக்கை. அதனால் அதைத் தவறாக அவர் பொருள் கொள்ளவில்லை.
“இல்ல தம்பி, உங்களுக்குச் சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு அவள் பிரண்டுகிட்ட கேட்டுட்டு வந்து சொன்னாள். அதைக்கூட அவள்தான் தம்பி செஞ்சாள்” என்றார் வெள்ளந்தியாக.
“அப்படி இல்லம்மா, எதுக்காக நீங்க கஷ்டப்பட்டு இதெல்லாம் செய்யணும்? உங்க வீட்டுக்குச் சாப்பிட வரோம்னா நீங்க சமைக்கிறதைத்தானே நாங்க சாப்பிடணும்? எங்களுக்குன்னு நீங்க ஏன் இதெல்லாம் சிரமப்பட்டு செஞ்சிருக்கீங்க?” என்றான் கௌதம்.
“அப்படி இல்ல தம்பி. வீட்டுக்கு வரவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தானே நாம செய்யணும்? அதுதானே நம் பண்பாடு? அதுக்குப்பேரு தானே விருந்தோம்பல்? நாம சாப்பிடறதை அவங்க தலையில திணிக்கக் கூடாது. அவங்க அப்பா இருந்தா இதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லதான். ஆனா எங்களுக்கு இதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. உண்மையச் சொல்லணும்னா, இதுதான் முதல் முறையா எங்க வீட்ல அசைவம் செஞ்சிருக்கோம். நீங்க சாப்பிட்டுப் பார்த்துட்டு ருசி நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா நத்தாஷா சந்தோஷப்படுவாள்” என்று முகம் மலரக் கூறினார்.
“கௌதம், அவங்க சமைச்சு வச்சுட்டாங்க. இதுக்கு மேல இந்தப் பேச்சு அனாவசியமானது. அதுவும் இல்லாம நமக்காக ஆசையா சமைச்சிருக்காங்க. அதைப் புறக்கணிக்கிறதும் அதைப் பத்திப் பேசறதும் தப்பு. முதல்ல சாப்பிடு” என்று கூறியவர், தன் இலையில் இருந்த சிக்கன் கிரேவியைத் தான் முதலில் எடுத்து ருசி பார்த்தார்.
உண்மையில் அபாரமாக இருந்தது. நத்தாஷாவை நிமிர்ந்து பார்த்தவர், “நீ முதல் முறையா சிக்கன் கிரேவி செய்யறேன்னு சொன்னா என்னால நம்ப முடியல. ஆனா சொன்னது உங்க அம்மான்றதுனால நான் நம்புறேன். செம டேஸ்டா இருக்கு. எப்படி செஞ்ச?” என்று கேட்டார்.
அவன் பேசியதில் சுருங்கியிருந்த மனம், அவர் பேசியதில் மலர்ந்துவிட்டது. முகம் மலர அவரைப் பார்த்தவள், “யூடியூப் ரெசிபியைப் பார்த்துத்தான் செஞ்சேன் ஆண்ட்டி” என்றாள்.
“ரொம்ப டேஸ்டா இருக்கு. கௌதம், சாப்பிட்டுப் பார்த்துட்டு நீயும் சொல்லு”? என்று கூற, அவன் அவளையே பார்த்துக்கொண்டே அதை எடுத்து ருசித்துப் பார்த்தான்.
அவ்வளவு பிரமாதமாக இருந்தது. ஆனால், அவனுக்கு முன்னால் அவன் தாய் எல்லாவற்றையும் கூறிவிட்டார். அது மட்டுமா? ரமேஷ், ராஜேஷ் என்று எல்லோரும் பாராட்டினார்கள். அவள் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.
‘இதற்கு மேல் தனியாகத் தான் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லை’ என்று நினைத்தவன் அமைதியாகவே உண்டான். அவன் இலையில் அந்தப் பதார்த்தம் காலியானதும் அவள் இன்னும் வைத்தாள்.
அவள் அருகில் வந்து பரிமாறவும் அவளைப் பார்த்துக்கொண்டே, “ரொம்ப நல்லா இருக்கு” என்று சிறு குரலில் கூறினான்.
அனைவரும் கூறினாலும் அவன் மட்டும் கூறவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தவளுக்கு, இப்பொழுது நிம்மதி ஏற்பட்டது.
அவர்களுக்கெல்லாம் பரிமாறி முடித்து, இலைகளை அப்புறப்படுத்திவிட்டுத் தாயும் மகளும் அமர்ந்தார்கள். ஆனால், சொற்ப நேரத்தில் சாப்பிட்டு எழுந்துவிட்டார்கள்.
“என்னமா அதுக்குள்ள சாப்பிட்டு எந்திரிச்சிட்டீங்க?” என்று மகாலட்சுமி கேட்டார்.
“போதுங்க, சரியாத்தான் சாப்பிட்டோம்” என்று புஷ்பவல்லி கூறினார்.
“ஐயோ ஆண்ட்டி, அவங்க இப்படித்தான். அவங்க ரெண்டு பேரும் சரியா சாப்பிடவே மாட்டாங்க. இவங்க வீட்ல சமைக்கிறாங்களா இல்லையான்னு எனக்கு அப்பப்ப சந்தேகமே வரும். ராகினியைத் தவிர இவங்க ரெண்டு பேரும் சாப்பிடுறதுல வேஸ்ட். அவளுக்காகத்தான் இவங்க சமைக்கிறாங்க. இல்லனா ரெண்டு பேரும் பட்டினி கிடக்கச் சொன்னா எத்தனை வருஷம் வேணாலும் கிடப்பாங்க” என்று லகுவாகக் கூறினாள் ப்ரீத்தி.
மகாலட்சுமி பெண்களின் முகத்தைப் பார்த்தார். அவர்கள் முகமலர்வுடன் தான் இருந்தார்கள். ஆனால், அந்த மலர்வுக்குப் பின்னால் இழைந்திருந்த கவலையை மகாலட்சுமியால் புரிந்துகொள்ள முடிந்தது.
“ராகினி, நீ சொல்லு? இவங்க இப்பதான் இப்படிச் சாப்பிடுறாங்களா? இல்ல எப்பயுமே இப்படித்தானா?” என்று மகாலட்சுமி சாதாரணமாகக் கேட்டார்.
அவளோ தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தைக் கொட்டிக் கவிழ்த்துவிட்டாள்.
“இல்ல ஆண்ட்டி, நல்லாத்தான் சாப்பிடுவாங்க. அக்கா கொஞ்சம் லிமிட்தான். எதுவா இருந்தாலும் லிமிட்டாத்தான் எடுத்துப்பாள். ஆனா அம்மா அப்படி கிடையாது, நல்லாச் சாப்பிடுவாங்க. பழைய சாதம் எல்லாம் ஒரு கிண்ணம் ஃபுல்லா சாப்பிடுவாங்க. ஆனா அப்பா சாவுக்கு அப்புறம் அது அப்படியே மாறிடுச்சு. அம்மாவோட உடம்பும் குறைஞ்சிடுச்சு. அக்காவும் அதுக்கப்புறம் சாப்பிடறதைச் சுத்தமா நிறுத்திட்டாள். நான் தான் வற்புறுத்திச் சாப்பிட வைப்பேன்” என்று கொட்டிவிட்டாள்.
“சின்னப் புள்ள ஏதோ புரியாம பேசுறாள். வயிறு சுருங்கிடுச்சு, அவ்வளவுதான் சாப்பிட முடியுது. வயசாகுது இல்லையா?” என்றார் புஷ்பவல்லி.
“ஏங்க, அப்படி என்ன உங்களுக்கு வயசாயிடுச்சு? பார்க்க என்னை விடச் சின்னவங்களாத்தான் இருக்கீங்க. நத்தாஷா தானே உங்களுக்குப் பெரிய பொண்ணு? அப்பக் கண்டிப்பா நாற்பதுகளில்தானே உங்க வயசு இருக்கும்?” என்று அவர் சரியாகவே கணித்துக் கேட்டார்.
புஷ்பவல்லி புன்னகைக்க, அதுவே அவரின் வயதை எடுத்துக்காட்டியது. அதன் பிறகும் சிறிது நேரம் சாதாரணமான பேச்சுக்கள் போய்க்கொண்டுதான் இருந்தது. ராஜேஷ் மட்டும் ஓய்வு எடுப்பதாகக் கூறி கீழே சென்றுவிட, அவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது.
ராகினி திருட்டுப் பார்வையாகக் கௌதமைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்வையோ அவ்வப்போது நத்தாஷாவின் மீது படிந்து மீண்டது.
அவனையே கவனித்துக்கொண்டிருந்ததால் ராகினிக்கு அது புரிந்து தொலைய, அவள் புருவம் இடுங்கியது. ஆனால், இதை யாரிடம் சொல்வது? அல்லது எப்படி கேட்பது?
தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் அருகில், அதுவும் தங்கள் வீட்டில் ஒளிர்ந்துகொண்டிருந்தால் ஏற்படும் ஆர்வம் மட்டும்தான் அவள் பார்வையில் இருந்தது.
ஆனால், கௌதமுடைய பார்வையில் என்ன இருக்கிறது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. மூன்று மணி வரை பேசி இருந்துவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். மகாலட்சுமி புஷ்பவல்லியின் கையைப் பிடித்துக்கொண்டார்.
“நல்ல சாப்பாடு, ஆரோக்கியமான பேச்சு. ஒரு நல்ல குடும்பத்தைப் பார்த்த திருப்தி எனக்கு. நாங்க உங்க வீட்டுக்கு வந்த மாதிரி நீங்களும் குடும்பமா எங்க வீட்டுக்கு வரணும். குடும்பம்னா உங்களையும் சேர்த்துதான் ரமேஷ். இவங்க பெறாத மகனா இருந்து அவங்களுக்கு உதவி பண்றல்ல? நீயும் இந்தத் குடும்பம்தானே? நீயும் உன் மனைவி- அப்பாவோட சேர்ந்து வரணும்” என்று மகாலட்சுமி கூறினார்.
“அதுதான் நாங்க உங்க வீட்ல ஏற்கனவே நிறைய வாட்டி சாப்பிட்டு இருக்கோமே ஆண்ட்டி? உங்க வீட்டுக்கு வந்தா நீங்கதான் சாப்பிடாம அனுப்ப மாட்டீங்களே?” என்று கூறினாள் ப்ரீத்தி.
“அது வேற, இது வேற. அது பொதுப்படையான சம்பிரதாயம். இது அப்படி கிடையாது, விருந்தோம்பல். ஒரு குடும்பத்தைப் பத்தி நாம நல்லாத் தெரிஞ்சுக்கணும்னா பேசிப் பழகுறதுக்காக ஏற்படுத்துகிறது. அது உறவு முறையிலும் இருக்கலாம், இல்ல தோழமையிலும் இருக்கலாம். இப்ப மகாலட்சுமி எனக்கு ஃபிரண்ட்டாயிட்டாங்க. இனி கூப்பிட்டுத்தான் வரணும்னு இல்ல, கூப்பிடாம நாங்களும் வருவோம், நீங்களும் வரணும்” என்று உரிமையாகக் கூறினார்.
அவர்களின் இலகுவான பேச்சு, அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதிலும் சொல்லொண்ணா நிம்மதியையும் சந்தோஷத்தையும் பரப்பியிருந்தது.
“இப்ப நாங்க போயிட்டு வரோம். அம்மா சொன்னதுதான், கண்டிப்பா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துடணும். மெனு என்னன்னு ஒரு லிஸ்ட் போடுங்க. அம்மாவும் நல்லாவே சமைப்பாங்க. அவங்க கை பக்குவத்தை ஒரு பிடி பிடிக்கலாம்” என்று லகுவாகக் கூறியவன், பொதுப்படையாக எல்லோரையும் பார்த்துப் புன்னகையைச் சிந்திவிட்டு, பிறகு நத்தாஷாவிடம் வந்து நின்றான்.
அவளை நேர்பார்வையாகப் பார்த்துத் தலையசைத்தான்.
அவளுக்கும் அந்தத் தலையசைப்பு ஏதோ போல இருந்தது. பதிலுக்கு அவளும் புன்னகை முகமாகத் தலையசைத்துவிட்டாள். ஆனால், அந்த அசைப்பிலும் பார்வையிலும் ஏதோ உரிமை உணர்வு இருந்தது போலத் தோன்றியது. பிறகுதான் அது அவள் மூளைக்கு எட்டியது போல, யோசனையோடு படிகளில் இறங்கினாள்.
காரில் ஏறிய பிறகும் எல்லோரையும் பார்த்துத் தலையசைத்தவன், “அடுத்த வாரம் எங்க வீட்ல மீட் பண்ணலாம். ரமேஷ், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” என்றவன், அவளையும் பார்த்துப் புன்னகைத்தபடி தலையசைத்தான்.
அவளும் அனிச்சைச் செயலாகத் தலையை அசைத்துவிட்டாள். ஆனால், உடனே தன்னை யாராவது கவனிக்கிறார்களா? என்று மற்றவர்களையும் திரும்பிப் பார்த்தாள். தமக்கை பார்ப்பதை உணர்ந்து ராகினி தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.
ஆனால், அவளைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் வித்தியாசமாகப் படவில்லை போல. அதனால் யாரும் அவளைக் கவனித்திருக்கவில்லை.
அவர்கள் சென்ற பிறகும், மாலை முழுவதும் அவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது. ராகினியின் பார்வை தமக்கையை அளவெடுத்துக் கொண்டே இருந்தது. ஆனால், தமக்கையிடம் பெரிதாக எந்த வித்தியாசமும் அவளுக்குத் தெரியவில்லை.
error: Content is protected !!