Skip to content
Post Views: 190
மறுநாள், எழில் விக்கியிடம் பேசி, பின் இருவரும் ரத்னாவிடம் அவர் ஊருக்கு செல்வதை பற்றி பேசினார்கள்.
“கார்த்தி வந்திடட்டுமே விக்கி” என்று ரத்னா கூற, அதான் நாங்க ரெண்டு பேரும் வரோமே என்றனர் இருவரும்.
Advertisement
“சின்ன பிள்ளைங்க, உங்க ரெண்டு பேரையும் மட்டும் கூட்டிகிட்டு எப்படி போறது? அதுவுமில்லாமல் அங்க யார் எல்லாம் இருக்காங்களோ, எப்படி நடந்துப்பாங்களோ?” என்றார் ரத்னா கவலையாக.
“எங்க ரெண்டு பேரையும் பார்த்தா அவ்வளவு சின்ன பசங்களாவா தெரியுது?” என்றான் விக்கி.
Advertisement
Advertisement
“அதானே.. நீங்க மட்டும் பதினெட்டு வயசுலயே ஏறி குதிச்சு கல்யாணமே பண்ணிட்டீங்க.. உங்க தம்பி அதைவிட சின்ன வயசுலயே உங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்க. இப்ப நாங்க உதவி செய்றோம்னு சொன்னா சின்ன பசங்கன்னு சொல்றீங்க?” என்றாள் எழில் மூக்கு விடைக்க.
“உன்னை உங்க வீட்ல அனுப்புவாங்களா, எழிலு? என்னன்னு நான் வந்து கேட்கிறது?” என்று அவர் தயங்கவும்,
Advertisement
“அது எல்லாம் நானே அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன் ஆன்ட்டி. நீங்க கிளம்ப ஓகேவான்னு மட்டும் சொல்லுங்க.”
“கார்த்தியும் வந்திடட்டுமே போலாம். எதுக்கு அவசரம் இப்ப?”
“ஆல்ரெடி இருபத்தி அஞ்சு வருஷம் லேட்டா போறோம்.. இதுல அவசரம்னு வேற சொல்றீங்க”
விக்கியும் எழிலும் பேசியே ரத்னாவை சம்மதிக்க வைத்துவிட்டனர். கார்த்தியிடம் போய்ட்டு வந்து கூறிக்கொள்ளலாம் என்றும் கூறி அவரை அமைதி ஆக்கி விட்டார்கள்.
ரத்னா ஒத்துக்கொள்ளவே மகிழ்ச்சியாகவே வீட்டிற்கு வந்தாள் எழில். ரேவதி சொன்னதை போலவே சரவணன் மகள்களை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார்.
எழிலுக்கு பிடித்ததை போல அழகாக ஒரு பிரேஸ்லெட்டை வாங்கிக்கொண்டு இரவு வெளியே உணவையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.
அனைவரும் இரவு உடைக்கு மாறி ஹாலில் அமர்ந்தவுடன்,
“அம்மா சொல்ல மறந்துட்டேன், இந்த வாரம் ரத்னா ஆன்ட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கோம்” என்றாள் எழில்.
“போவான்னு கேட்குறீயா? இல்ல போறேன்னு தகவல் சொல்றியா?” என்றார் ரேவதி.
“இல்லம்மா.. போவான்னு தான் கேட்க வந்தேன். ஆன்ட்டி உங்க கிட்ட எப்படி கேட்கிறதுன்னு சங்கடப்பட்டாங்க. அதான் நானே கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்”
“ரத்னா சங்கட பட்டாங்கன்னா அது சரி இல்லைன்னு அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு. நீ எப்பவும் போல முந்திரி கொட்டை மாதிரி நானே பார்த்துகிறேன்னு சொல்லிட்டு வந்திருக்க?”
“எதுக்கு அம்மா கோவப்படறீங்க? முன்ன கரக்பூருக்கே அனுப்பி வச்சீங்களே? இப்ப இந்த ஊர் தமிழ்நாட்டுல தானே இருக்கு” என்றாள் எழில் குழப்பமாக.
“அன்னைக்கு நான் அனுப்பினேன் தான், சூழ்நிலை அப்படி. தேவையும் இருந்துச்சு. இப்ப என்ன தேவை?”
“அது அவங்க அப்பா அம்மாகூட சேர்றது நல்ல விஷயம் தானே?”
“அது நல்ல விஷயமா கெட்ட விஷயமான்னு இப்ப கேள்வி இல்லை. இதுல நீ தலை இடவேண்டிய அவசியம் இல்லை. அவ்வளவு தான்” என்றார் ரேவதி பேச்சு அவ்வளவுதான் என்பது போல.
எழில் அப்பா உதவிக்கு வருவாரா என்று தந்தையை பார்க்க, அவரோ அம்மா சொல்வதை செய் என்று பார்வை மட்டுமே பதிலாக கொடுத்தார்.
“நான் வரேன்னு ரொம்ப நம்பிக்கையா சொல்லிட்டேன் அம்மா..” என்றாள் பாவமாக.
“எந்த நம்பிக்கையில சொன்ன? அது அவங்க குடும்ப விஷயம். அவங்க பசங்க பார்த்துகிறது தான் நியாயம். சரி அங்க போறேன்னே வை. இந்த பொண்ணு யாருன்னு கேட்டா அவங்க என்ன பதில் சொல்வாங்க?
உறவோ நட்போ, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கணும் எழில். விஜயன் அண்ணன் கல்யாண பேச்சப்பவே உங்கிட்ட இதை சொல்ல தான் நினைச்சேன். அப்ப நீ இருந்த மனநிலையில் என்னால சொல்ல முடியல. எல்லாருக்கும் உதவி செய்றது நல்ல விஷயம் தான். ஆனா, எந்த உதவி யாருக்கு எப்ப செய்யணும்.. எந்த அளவு செய்யணும் அப்படின்னு தெரியணும். சில நேரங்கள்ல நம்ம உதவி செய்ற சூழல்ல ரொம்ப தவிர்க்க முடியாததாக இருக்கலாம். சில நேரம் அத்தியாவசியமா இருக்கலாம். அது வேற. ஆனா இப்ப அவங்க குடும்பத்தை ஒன்னு சேர்க்கிறது உனக்கு தேவையும் இல்லை, அத்தியாவசியுமும் இல்லை. உன் கருத்தை சொல்லு. அதுக்கும் மேலே உனக்கு என்ன உரிமை இருக்கு எழிலு. விஜயன் அண்ணா விஷயத்துல ஆச்சும், உனக்கு உரிமை இருந்துச்சு. புரிஞ்சுக்கோ மா ”
“இப்ப என்ன அம்மா சொல்ல வர்றீங்க?”
“நாளைக்கு ரத்னாகிட்ட எங்க அம்மா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிடு..” என்று முடிவாக கூறி,
“நீங்க என்ன வாய் பார்த்திட்டு உட்காந்துட்டு இருக்கீங்க.. வாங்க போய் படுப்போம், நாளைக்கு வேலை இருக்குல்ல” என்று கணவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் ரேவதி.
“இப்ப என்ன தமிழ் செய்றது? முன் வச்ச காலை பின் வைக்க முடியுமா?” என்று தங்கையிடம் பாவமாக புலம்பினாள்.
“முன்னவே வச்சிட்டு நின்னா, அம்மா காலை உடைச்சு அடுப்பில வச்சிடுவாங்க.. பேசாம பின்னாடி வச்சிடு தப்பில்ல” என்றாள் தமிழ் சீரியஸாக.
“அப்படியா சொல்ற?”
“ஆமா..”
ரத்னாவிடம் சோகமாக எழில் விஷயத்தை கூறவும்,
“சின்ன பிள்ளைன்னு சொன்னா மட்டும் கோவம் வருதே, அதான் நான் நேத்தே சொன்னேன் இல்ல.. விடு எழிலு.. நீ எனக்காக யோசிச்சு தான் சொல்ற. கண்டிப்பா கார்த்தி வந்ததும் இந்த தடவை ஊருக்கு போயிட்டு வந்திடுறேன் சரியா?” என்று ரத்னா தான் எழிலுக்கு சமாதானம் கூறினார்.
சொன்னதை போலவே அடுத்த வாரம் கார்த்தி வந்ததும், அவனை சமாதானம் செய்து அம்மா மகன்கள் மூவரும் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
டாக்ஸியில் தான் புறப்பட்டனர்.
“உங்க அட்ரெஸ் சொல்லுங்க ம்மா, மேப்ல போட்டுக்கலாம்” என்று கார்த்தி கேட்டதுக்கு, முதல்ல சென்னிமலை முருகன் கோவிலுக்கு போயிடலாம். அங்கே சாமியை கும்பிட்டு அப்புறம் அங்க இருந்து எங்க ஊருக்கு நானே வழி சொல்றேன்” என்றார் ரத்னா.
ரத்னாவிற்கு படப்படப்பாக தான் இருந்ததது. இரண்டு மகன்களும் ஆளுக்கொரு பக்கம் அம்மாவின் கையை ஆதுரமாக பிடித்து தட்டிக்கொடுத்தனர்.
ரத்னா சொன்னதை போலவே முதலில் சென்னிமலை முருகனை தரிசித்தனர்.
“இங்க தான் எங்க கல்யாணம் நடந்தது” என்றார் ரத்னா மகன்களிடம்.
ஒருவித உணர்ச்சி பிடியில் இருந்தார் ரத்னா.
பின் மெதுவாக அங்கே இருந்து புறப்பட்டு, அவர்கள் ஊருக்கு கிளம்பினார்கள்.
அவர் பிறந்து வளர்ந்த ஊர்… இருபத்தி ஐந்து வருடத்தில் அடையாளமே தெரியாமல் மாறி போயிருந்தது.
இருந்தாலும் ஒரு வழியாக அவர்கள் வீடு இருந்த ஏரியாவிற்கு வந்தார்கள்.
ரத்னாவின் வீடு இருந்த இடத்தில், இப்பொழுது வேறு வீடு இருந்தது.
“என்ன கார்த்தி, எங்க வீடு இங்க தான் இருந்தது. இது வேற வீடு மாதிரி இருக்கே” என்றார் வருத்தமாக.
“நீங்க இருந்த ஏரியா பேர் என்னம்மா?”
“அது தெற்கு மூணாம் வீதி டா..”
“இது பாலன் நகர்னு போட்டிருக்கே.. புதுசா நகர் அமைச்சிருக்கலாம் அம்மா.”
“எழில் அக்கா சொன்னாங்க தானே, அதான் நீ போட்ட லெட்டர் கிடைச்சிருக்காது போல” என்றான் விக்கி.
ரத்னாவின் வாடிய முகத்தை பார்த்து, “இருங்க அம்மா விசாரிச்சு பார்க்கலாம்” என்றான் கார்த்தி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், அந்த வீட்டில் இருந்து ஒரு பாட்டி வெளியே வருவது தெரிந்தது.
“அந்த பாட்டிகிட்ட கேட்டு பார்க்கலாமா?” என்று விக்கி கேட்டது ரத்னாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
‘அம்மா…’ என்று உதடு முனுமுனுக்க.. ரத்னாவின் கன்னங்களில் கோடாய் இறங்கியது கண்ணீர்.
“அண்ணா, நிஜாமாலுமே அவங்க தான் பாட்டி போல” என்று விக்கி அண்ணாவின் கரங்களை பிடித்துக்கொண்டான்.
அம்மாவையம் தம்பியையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான் கார்த்தி.
error: Content is protected !!