உயிர் உருகும் காதல் எனதே…..16
உயிர் உருகும் காதல் எனதே….16
கையில் இருக்கும் பேசியை பார்த்தபடி நின்றிருந்தவனின் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்புக்கள்.இரண்டு முறை பேசி அடித்து ஓய்ந்து மூன்றாவது முறை அடிக்கும் போது தான் எடுத்தான்.
“ஹலோ…..”என்று இவன் அழைக்கும் முன்னே அங்கே அவனின் மனைவி பாட்டை துவங்கியிருந்தாள்.
“யாரைக் கேட்டு லிஸ்டல இல்லாத சாமான் எல்லாம் அனுப்பினீங்க….நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டு தான வந்தேன்…..”என்று துர்கா கத்திக் கொண்டிருக்க,மறுபுறம் அமைதியாக இருக்க,
Advertisement
“ஹலோ…..”என்றாள் சத்தமாக,
“போன எடுத்துக்கிட்டு மாடிக்கு வா…..”என்று அவன் எதுவும் காதில் விழாது போல பேச,
“என்ன நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன்….நீங்க….”என்றவள் அதன் பின் தான் அவன் கூறியதன் அர்த்தம் உணர்ந்து,
Advertisement
“நீங்க மாடில தான் நிக்குறீங்களா….”என்று கேட்டுக் கொண்டே மாடி ஏற,
Advertisement
“ம்ம்….”என்றவனின் கண்கள் முழுவதும் மனைவியின் வீட்டு மாடியில் இருந்தது.துர்காவின் தலை தெரியவும்,
“ம்ம் இப்ப சொல்லு….இல்ல இல்ல திட்டு…..”என்று அவன் ராகமாக கூற,
“என்ன????……”என்றவளின் வேக மூச்சுகள் இவனின் செவிப்பறையை நிறைக்க,உள்ளுக்குள் ஏதோ ஒருவித மாயம் நிகழ்வது போல அவளை பார்த்தபடி நின்றுவிட்டான்.துர்காவிற்கு அவனின் பேச்சில் கோபம் தலைக்கேற,
Advertisement
“உங்களை என்ன செஞ்சா தகும்….தேவையில்லாத வேலையை பார்த்து வச்சிட்டு…..நல்ல பிள்ளை மாதிரி வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கீங்க…..”
“ம்ம்…..”
“என்ன ம்ம்????……”என்றவள் வீராவை பார்த்து கைகளை ஆட்டி செய்கை செய்ய,
“என்ன டான்ஸ் எல்லாம் ஆடுற….”என்றான் அவளை பார்த்துக் கொண்டே கேட்க,
“என்ன நக்கலா…..நான் கீழ போறேன்….”என்றுவிட்டு அவள் இறங்க பார்க்க,
“ஏய் ஏய் போயிடாத இரு…..”என்று இவன் கத்திவிட்டான்.
“ஏன்பா திரும்பவுமா….உன் பொண்டாட்டிக்கிட்ட பேச நேரம் காலமே இல்லையா….”என்று அவனின் பக்கத்து வீட்டுக்கார் தலையை சொரிந்து கொண்டே ஜன்னல் வழியே கூற,
“நீங்க ஜன்னலை மூடிக்க வேண்டியது தான….”
“மக்கும் மூடிட்டா மட்டும் கேட்கமா போயிடுமா…..நீ கத்துறது இரண்டு தெரு வரைக்கும் கேட்கும்….”என்று விட்டு கதவை அடைத்துவிட்டு அவர் செல்ல,இங்கு துர்காவோ பேசியில்,
“யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க….”
“அது ஒண்ணுமில்ல….நீ இரு நான் பேசனும்….”
“என்ன பேசனும்….நான் நாளைக்கு காலையில பணத்தை ஜிபே பண்ணிடுறேன்….”
“நான் அதுக்கு பேச வரல…….”
“பின்ன எதுக்கு பேச வந்தீங்க?……”என்றவள் கேள்வியில் வீரா திணறினான்.உண்மையில் அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை அதை அவளிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் தான் இன்று சாமான்களை அனுப்பிவைத்தது.அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக தனக்கு திட்டவேணும் போன் செய்வாள் என்று காத்திருந்தான்.இப்போது திடீர் என்று அவள் கேட்கவும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நிற்க,
“என்னாச்சு உங்களுக்கு?….”என்றவளுக்கு கணவனின் மனநிலை புரியவில்லை.அவள் கேட்டதுக்கு உடனே பதில் தரவில்லை வீரா நீண்ட நாட்களாய் தனிமையில் தவித்ததவனுக்கு ஊன்றுகோல் போல் வந்தவள் துர்கா.அவளை தன் தனிமைக்கு மருந்தாக நினைத்தான்.ஆனால் நடுவில் ஏதோ அபஸ்வரம் போல மீண்டும் அவனின் பழைய வாழ்வு பூதகரமாக நின்று கேலி செய்ய மீண்டும் தன் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டான்.ஆனாலும் அவனின் கூட்டிற்குள் அவனையறியாமல் துர்காவை இழுத்துக்கொண்டுவிட்டான் அதை அவன் உணரவில்லை.
“ஹலோ ஹலோ…..”என்று துர்கா அழைக்கும் சத்தம் கேட்க,
“ஆங்…..ஒண்ணுமில்ல நீ பாரு…..வைக்குறேன்….”என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான் வீரா.
“என்ன ஒண்ணுமில்ல…ஹலோ….”என்று இங்கு இவள் கத்திக்கொண்டிருக்க,வீரா கீழிறங்க துவங்கிவிட,’இந்த மனுஷனோட’என்று தலையில் அடித்துக் கொண்டவள்.மீண்டும் அழைக்க அது கட் செய்யப்பட்டது.மீண்டும் அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.இனி எடுக்கமாட்டான் என்பது புரிய,
“என்ன பேசவந்தீங்க ஒழுங்கா சொல்லுங்க……”என்று வாட்ஸப்பில் குரல் வழி செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.அனுப்பி இரண்டு நிமிங்கள் கழித்து அது கேட்டுவிட்டதற்கான அறிகுறி காட்டியது.வீரா தட்டச்சு செய்வதும் பின் அழிப்பதுமாக இருந்தான்.பின் குரல் வழியாக ரெக்காட் செய்து அழிப்பதுமாக இருக்க அதனை கவனித்துக்கொண்டிருந்தவளின் பொறுமை பறந்தது.
“நான் என்ன அவ்வளவு கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன்….இப்படி பதில் சொல்லுறதுக்கு திணறிக்கிட்டு இருக்கீங்க….”என்று மீண்டும் ஒரு குரல் பதிவை அனுப்ப,அதையும் கேட்டுவிட்டவன்.
“ஆமா டீச்சரம்மா கரெட்டா பதில் சொல்லைனா மார்க் போடமாட்டீங்களே….”என்று அவன் பதில் அனுப்ப,
“என்ன டீச்சரம்மாவா?????…..”
“ம்ம் ஆமா நீ இப்ப டீச்சர் மாதிரி தான கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க…..”என்றவனுக்கு சற்று முன் இருந்த இறுக்கம் இல்லை.ஏதோ ஒன்றை அவள் கேட்க அதற்கு இவன் பதில் தர என்று வெகு நேரம் என்ன பேசுகிறோம் எதற்காக பேசுகிறோம் என்று புரியாமல்,தெரியாமல் ஒரு இனிய உரையாடல் இருவருக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்தது.பேச்சுகள் அப்படியே அவர்களின் பள்ளிக்காலங்களுக்கு சென்றுவிட இன்னும் சுவாரஸ்சியம் கூடி தான் போனது இருவருக்கும்.இப்படி நேரம் போனது தெரியாமல் இருவரும் பேச ஏதச்சையாக மணியை பார்த்த வீரா,
“அச்சோ மணி ஒன்னு ஆக போகுது…..”என்று கூற,
“ஆமா நானும் இப்ப தான பார்த்தேன்….”
“சரி தூங்கு நாளைக்கு பேசலாம்…..”என்றவன் இயல்பாக கூறிவிட்டு வைத்துவிட,
“என்ன நாளைக்குமா???…..”என்று வாய்விட்டு புலம்பியவளுக்கும் ஒருவித சந்தோஷ சாரல் அடிக்கதான் செய்யத்து.இதோ மேலும் ஒரு வாரம் கடந்து போனது துர்கா தாய் வீடு வந்து அவளும் கிளம்பலாம் என்று பார்க்கும் தருணங்களில்,
“நீ ஏன் போற….இன்னும் எனக்கு முடியலை….அதோட வாசினிக்கும் முடியல இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போயேன்…..”என்று வானாதி கூற,இப்படியே இருவாரம் கடந்துவிட்டது.இதில் வீரா,துர்காவின் பேச்சுகள் தான் இன்னும் இருவரையும் இறுக்கிக் கொண்டிருந்தது.எப்போதடா இரவு வரும் என்று இருவருமே எதிர்பார்க்க துவங்கியிருந்தனர்.
இத்தனைக்கும் காதல் வார்த்தைகள் இல்லை இருவரும் தங்கள் மலரும் நினைவுகளை தான் பகிர்ந்து கொண்டிருந்தனர்.அதுவே அத்தனை பிடித்தங்களை அள்ளி தந்திருந்தது.தினமும் பார்த்துக்கொள்கிறார்கள் தான் இருந்தாலும் இந்த இரவு பேச்சுகள் மிகவும் பிடித்திருந்தது அந்த தம்பதியருக்கு.
“என்ன பெரிமா இன்னைக்கு காலையிலேயே போன் போட்டுட்ட….”என்று நர்மதா கேட்க,
“அங்க அவங்க எப்படி இருக்காங்க…..”என்று கற்பகம் வானாதியை பற்றி விசாரிக்க,
“ம்ம் நல்லா தான் இருக்காங்க…..ஏன் கேட்குற???….”
“இன்னும் என் மருமக வீட்டுக்கு வரலையே அதான்….”என்றவருக்கு துர்கா மீது சற்று வருத்தம் தான்.தினுமும் காலையில் அவருடன் பேசிவிடுவாள் தான் இருந்தும் அம்மா வீட்டிற்கு சென்று இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பது என்று சிறு கோபம் அவளின் மீது.
“என்னாச்சு பெரிமா எதாவது பிரச்சனையா?…..”என்று நர்மதா கேட்க,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லடீ…..இந்த பொண்ணு அம்மா வீட்டுக்கு போயிட்டு இன்னும் அங்கேயே இருக்கு இந்த பையனும் அதை பத்தி எந்த கவலையும் இல்லாம இருக்கான்……அதான்……”என்று மீதி உள்ளதை கூறமுடியாமல் நிறுத்திவிட்டார்.மகன்,மருமகளிடம் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்று புரிந்தது தான் ஆனால் இத்தனை நாள் மனைவி தன்னுடன் இல்லை என்று சிறு ஏக்கம் கூடவா இல்லை மகனிடம்,அது தான் மனதை மிகவும் அழுத்தியது கற்பகத்திற்கு.நர்மதாவிற்கு புரிந்து போனது கற்பகத்தின் மனநிலை.
“பெரிமா எனக்கு ஒரு யோசனை……”
“என்னடீ என்ன யோசனை?……”என்றார் கற்பகம் ஆர்வமாக,
“பேசாம நீயே வந்து உன் சம்மந்தியை பார்த்துட்டு துர்காவையும் அழைச்சுட்டு வந்துடு…..”என்று கூற,
“அது நல்லாயிருக்காதேடீ….”என்று கற்பகம் கூற,
“அட இதுல என்ன இருக்கு உன் மருமக நீ கூப்பிடுற…..முறைபடி பார்த்தா அவங்களுக்கே அது தோணியிருக்கனும் ஆனா தோணலை…..அப்ப நாம நியாபகபடுத்திட வேண்டியது தான்….”என்று நர்மதா கூற,கற்பகத்திகுமே செய்தால் என்ன என்று தோன்றிவிட்டது.ஏற்கனவே வானாதி தன் மகனை குறைவாக பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை அதோடு துர்காவை அவரிடம் விடவும் பயமாக இருந்தது.எங்கே மருமகளின் மனதை மாற்றி விடுவாரோ என்று.துர்கா அப்படிபட்ட பெண்ணில்லை என்று அவரின் மனது கூறுகிறது தான் ஆனால் ஏற்கனவே தோல்வியை கண்டவருக்கு மீண்டும் தோற்றுவிடுவோமோ என்று பயம் அவரை நிதானம் இழக்க செய்திருந்தது.
அதனால் அடுத்த நாள் காலையிலேயே வந்துவிட்டார் துர்காவின் வீட்டிற்கு.வானாதி திடீர் என்று வந்து நிற்கும் சம்பந்தியை பார்த்தவுடன் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
“வாங்க வாங்க….துர்கா இங்க வா…..”என்று மகளை அழைக்க,
“இதோ வரேன்மா…..”என்று சமையலறையில் இருந்து வேர்வையை துடைத்தபடி வெளிவந்தாள் அவள்.இந்த இரண்டு வாரங்களில் இளைத்து,கருத்து போயிருந்தாள்.
“வாங்க அத்த….வாங்க அக்கா…..”என்று இருவரையும் வரவேற்க,
“என்னடீ இது இப்படி கருத்து போயிருக்க…..”என்று கற்பகம் மருமகளின் அருகில் வந்து கேட்டுவிட,வானாதிக்கு என்னவோ போல் ஆனது.
“ம்மா எனக்கு காபி வேணாம் டீ தான் வேணும்…..”என்றபடி முகத்தை துடைத்தபடி வந்தாள் வாசினி.அப்போது தான் எழுந்திருப்பாள் போலும் அவளை பார்த்தாலே தெரிந்தது.கற்பகத்தின் கண்கள் வாசினியையும்,தன் மருமகளையும் மாறி மாறி பார்த்தது.அது வானாதிக்கு இன்னும் சங்கடத்தை கொடுத்தது.
“வாங்க அத்த….”என்று வாசினி கற்பகத்தை வரவேற்க,அவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் தந்தவர் நர்மதாவை அர்த்தமாக பார்த்தார்.
“உட்காருங்க அத்த….காபி எடுத்துட்டு வரேன்…..”என்றுவிட்டு துர்கா சமையலறைக்குள் நுழைய பார்க்க,
“வேண்டாமா….உனக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆகிடுச்சே…..நீ இன்னும் கிளம்பல….”
“இதோ கிளம்பிக்கிட்டே இருக்கேன்….”என்றவளின் குரலே களைத்து போய் வர,கற்பகத்திற்கு தாளவில்லை அவள் தன் வீட்டிற்கு வந்தபிறகு துர்காவை காலை நேரங்களில் எந்த வேலைகளும் வாங்கியதில்லை அவர்.ஆனால் இங்கு அவள் வீட்டு வேலை முடித்துவிட்டு தான் செல்கிறாள் என்று பார்த்தமாத்திரத்தில் புரிந்துவிட,
“உங்களுக்கு உடம்பு முடியலனு துர்கா சொன்னா….இப்ப எப்படி இருக்கு…..”என்று நர்மதா கேட்க,
“ம்ம் இப்ப கொஞ்சம் பரவால….”என்று வானாதி கூற,
“அதான் அம்மாக்கு உடம்பு நல்லாகிடுச்சே துர்கா நீ இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம வீட்டுக்கு வந்துடு…..”என்று பட்டென்று கூறிவிட்டார் கற்பகம்.இதனை துர்கா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.அவள் அதிர்ந்து விழிக்க வானாதிக்கு அத்தனை சங்கடமாகி போனது
வாசினி இதற்கும் தனக்கும் எதுவும் இல்லை என்பது போல் நின்று கொண்டாள்.அவளை பொறுத்தவரை சேவை செய்வதற்கு தனக்கு ஒரு ஆள் இருக்க வேண்டும் அவ்வளவே.புகுந்த வீட்டில் இப்படி படுத்தபடியே இருக்கமுடியவில்லை அதற்கு அவளின் மாமியார் அனுமதிக்கவில்லை என்று தானே இங்கு தாய் வீட்டிற்கு வந்தது.
“அத்த…..அது…..”என்று துர்கா தடுமாற,
“என்னமா அதான் அம்மா உடம்பு நல்லாகிடுச்சே….அதோட இப்ப தங்கச்சியும் வந்திருக்கு அது பார்த்துகாகது…..”என்றவர் வானாதியிடம் திரும்பி,
“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தி உள்ளூர்ல பொண்ணை எடுத்தா இது ஒரு பிரச்சனை…..என்ன உன் மருமக அம்மா வீட்டுக்கு போய் இரண்டு வாரமாகுது இன்னும் வரல….அப்படினு எதிர்த்த வீடு,பக்கத்து வீடுனு எல்லாரும் இப்பவே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க….அதான்….நீ ஸ்கூல் முடிஞ்சு வந்துடுமா…..இந்தா உனக்கு பிடிக்குமேனு கொழுக்கட்டை எடுத்துட்டு வந்தேன் சாப்பிடு…..”என்றுவிட்டு கற்பகமும்,நர்மதாவும் கிளம்பிவிட்டனர்.மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது துர்காவின் வீடு.
துர்காவிற்கு கற்பகத்தின் இந்த திடீர் வரவும்,முடிவும் எதனால் என்று புரியவில்லை.அவள் சங்கடமாக தாயிடம்,
“ம்மா…நீ தப்பா எடுத்துக்காத எல்லாம் அந்த எதிர் வீட்டு கிழவி வேலையா தான் இருக்கும்….நான் தினமும் உன்னை பார்க்க வருவேன்…..”என்று கூற,
“என்னக்கா உன் மாமியார் வந்தவுடனே அம்மாவை கழட்டிவிடுற…..”என்று வாசினி நக்கலாக கூற,
“வாயை மூடுடி…..இப்படி படுத்தே கிடக்காத உடம்புக்கு நல்லது இல்ல…..உடம்பை பார்த்துக்கோ…..”என்றவள் தாயிடம் திரும்ப,அவரோ கையை பிசைந்தபடி நின்றார்.பெரிய மகள் இருந்தவரை அனைத்து வேலைகளை பார்த்துக்கொண்டாள் இனி என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கிவிட்டார்.
“என்னம்மா???……”என்று துர்கா அவரின் தோளை தொட,
“ஆங்…..”
“நீ அவங்க பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காதமா…..ஏதோ அக்கபக்கம் உள்ளவங்க சொல்லிருப்பாங்க அதான்……”என்று தன் தாயை சமாதானப்படுத்த முயல,
“அதுக்குனு இப்படி பொசுக்குனு வந்து கூப்பிட்டு இருக்க வேண்டாம்….வாசினி வேற மாசமா இருக்கா அவளையும் பார்த்துக்கனும் இல்ல…..”என்றவர் துர்காவின் பார்வையில் அமைதியாகிவிட்டார்.துர்காவிற்கு இப்போது புரிந்து போனது எதற்கு தன் மாமியார் தன்னை வீட்டிற்கு அழைத்துவிட்டார் என்று.மேற்கொண்டு தாயுடன் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளாமல் தன் வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள் துர்கா.வானாதியின் பேச்சு ஏனோ துர்காவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.பெற்ற பிள்ளைகளிடம் பாகுபாடு பார்க்கும் பெற்றொர்களால் தான் பிள்ளைகளிடம் ஒட்டுதல் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது.
