Skip to content
Post Views: 529
வசீகரனின் நேரடி தாக்குதலில் லதாவிற்கு வியர்த்து விட்டது. சரவணனுக்கு தெரிந்தால் அவளை மொத்தமாக வெறுத்துவிடுவானே என்று பயத்தோடு முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
“லதா எதாச்சும் பிரச்சனையா? வசி என்ன பேசிட்டு போறான்?”
Advertisement
“அவர் தான் சொன்னாரில்ல? அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் ஆயிரம் இருக்கும், அதெல்லாம் உங்களுக்கெதுக்கு?” என்று அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பதில் கேள்வி கேட்க,
Advertisement
“அண்ணியாரும் கொழுந்தனும் எலியும் பூனையுமா சண்டை போட்டுட்டு இருந்தீங்க, திடீர்னு ராசியாயிட்டீங்களா?” என்றான் சந்தேகமான குரலில்
Advertisement
“நம்பிக்கையில்லனா உங்க தம்பிகிட்ட என்ன பேசனாருனு கேட்டுக்கோங்க”
Advertisement
“ஏய், ச்சீ. திடீர்னு தனியா பேச கூப்பிட்டானே பிரச்சனையானு கேட்டேன், மத்தபடி நீயும் அவனும் ஒத்துமையா இருந்தா எனக்கும் சந்தோசம் தான். எப்பவும் வீட்ல மாமியார் மருமக சண்டை தான் வரும். நம்ம வீடு கொஞ்சம் வித்தியாசம். அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் தான் முட்டிக்குது” என்றான் சரவணன் இலகுவான குரலில்
சமீபகாலமாகவே சரவணன் லதாவிற்குள் மனகசப்பு இருந்ததால் இருவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை. இப்போது வசீகரன் லதாவை அழைத்து உரிமையாக பேசுவதும் லதா வசியை கொழுந்தன் என்று சொந்தம் பாராட்டுவதும் சரவணனுக்கு மனநிறைவை கொடுத்திருந்தது.
“லதா இங்கே வா” என்று அவளை அழைத்தான்
அவளும் அருகில் வந்து அமர்ந்தாள். மனைவியின் கரத்தை எடுத்து தன் கரத்திற்குள் வைத்துக் கொண்டு, “நாம லவ் பண்ணப்போ வீட்ல எவ்ளோ பிரச்சனை வந்துச்சு தெரியுமா? நான் வீட்ல அப்பா அம்மாவ எதிர்த்து எதுவும் பேச மாட்டேன். வசி தான் எனக்காக வீட்ல பேசினான். நம்ம காதல், கல்யாணத்துல முடிஞ்சதுக்கு அவனும் ஒரு காரணம். அவனோட காதலுக்கு நாம எந்த உதவியும் பண்ணல. ஆனா உபத்திரமாவாவது இருக்க கூடாதில்லயா?
அதுமட்டுமில்ல கல்யாணமாகி நீ இந்த வீட்டுக்கு வந்த புதுசுல காலைல சீக்கிரம் எந்திரிக்கறது இல்ல, வீட்ல எந்த வேலையும் செய்யறதில்லனு அம்மா புலம்பிட்டே இருந்தாங்க. எப்போ ரெண்டு பேருக்கும் முட்டிக்கிட்டு தனியா போயிடலாம்னு நீ ஆரம்பிச்சிடுவியோனு நான் வசிக்கிட்ட புலம்புவேன். வெளிநாட்ல இருந்தா கூட அவன் தான் அம்மாவ பேச விடாம அடக்கி வச்சான். ‘எந்த காலத்துல இருக்கே, வீட்டுக்கு வர்ற மருமக வேலை செய்யறதுக்காக தான் வர்றாங்களா? முடிஞ்சா செய்யட்டும், இல்லனா வேலைக்கு ஆள் வச்சுக்கோ’னு அதட்டுவான். அதனால இன்னொருத்தருக்கு வேலையும் கிடைச்சு வருமானமும் கிடைக்கும்னு சொல்லுவான். இந்த மாதிரி பல விஷயத்துல உனக்கும் என் அம்மாவுக்கும் பிரச்சனை வராம பாத்துக்கிட்டான்.
அவன் விஷயத்துல அம்மாவ ஹேண்டில் பண்றதே அவனுக்கு பெரிய டாஸ்க். இதுல நீயும் அவன் பொண்டாட்டிய மட்டம் தட்டினா அவனுக்கு கோவம் வராதா லதா?” என்றான் மென்மையான குரலில்
“சாரிங்க” லதா தலையை குனிந்து கொண்டாள்.
“இதுக்கு மேல பாத்து நடந்துக்கோ. உனக்கு வேண்டாவ புடிக்கணும்னு அவசியமில்ல. புடிக்கலனா விலகி இரு. அத விட்டுட்டு அவமானப்படுத்தாத, பாக்க நல்லாவே இல்ல”
“நான் வேணும்னு எதையும் செய்யல சரவணன்” என்றாள் மெல்லிய குரலில்
“சரி விடு, இதுக்கு மேலே பாத்து நடந்துக்கோ“
“ம்”
“அப்படியே என்னையும் கொஞ்சம் பாத்துக்கலாமில்ல” என்றவனின் பேச்சை கேட்டு லதா விழி விரிக்க, சரவணன் அவளின் கன்னத்தில் இதழ்பதித்திருந்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கணவனின் அன்பு முத்தத்தில் கரைந்தவளுக்கு உள்ளுக்குள் தான் செய்த செயல் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. சரவணனுக்கு விஷயம் தெரிந்தால் அவனுடைய அளவில்லா அன்பு கிடைக்காமல் போய்விடுமே என்று மனதிற்குள் சூறாவளியாக கவலை சுழற்றி அடித்தது. அவளுடைய குற்ற உணர்ச்சியை பற்றி உணராத சரவணன் மனைவியை மஞ்சத்தில் கிடத்தி அவளை கொண்டாட ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலை காளியப்பா வேலைக்கு வந்தபோது வசீகரனும் வீட்டில் இருந்ததால் யாரும் அவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவரும் வழக்கம் போல சமையல் வேலையை செய்ய தொடங்கி விட்டார். சீக்கிரம் செல்ல வேண்டி இருந்ததால் வசீகரன் சின்னபொண்ணுவுடன் சாப்பிட்டு விட்ட கிளம்பி விட்டான்.
மற்றவர்களும் கிளம்பிய பின்பு அலமேலுவும் லதாவும் ஒன்றாக சாப்பிட்டார்கள்.
“லதா இந்த வீட்ல என்னோட நிலைமை எப்படி ஆயிடுச்சு பாத்தியா? நான் வேணாம்னு அனுப்பின ஆள் வீட்டுக்குள்ள வந்து வேலை செய்றான். இப்போல்லாம் எனக்கு இந்த வீட்ல மரியாதையே இல்ல. அது சரி, நான் வேணாம்னு நினைச்ச பொண்ணையே எம்மவன் கட்டினு வந்துட்டான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன? என்னை பாத்து பயந்துட்டு இருந்தது சமையல்காரன் மட்டும் தான். இனிமே அவனும் என்னை மதிக்க போறதில்ல” என்று அலமேலு விரக்தியாக பேசினார்
லதா பதிலேதும் சொல்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“என்னம்மா எதுவும் பேச மாட்டேங்கிறே?”
“இதுக்கு மேல இந்த விஷயத்துல நான் தலையிடறதா இல்லத்தே”
“ஏன்மா?”
“நேத்து நைட், வசி என்னை கூப்பிட்டு பேசினாரு” என்று வசி அவளை மிரட்டியதை கூறினாள்.
“நான் முத்துமாணிக்கம் அண்ணன்கிட்ட பேசனது மொத நெஞ்சுவலினு நாடகமாடினது வரைக்கும் அனைத்தும் தெரிஞ்சு வச்சிருக்கானே இந்த வசி பையன். அவன் எனக்கு வாங்கி கொடுத்த கல் வளையல்ல எதாச்சும் கேமரா வச்சிருக்கானானு பாரு” என்று கையை நீட்டினார்.
“ஐயோ அத்தே, கேமரா எல்லாம் எதுவுமில்ல. வசி நம்மள விட புத்திசாலி. நாம என்னை செஞ்சாலும் அவருக்கு தெரிஞ்சிடுது”
“ஆமாமா, அவன் சின்ன வயசுலருந்தே சுட்டி தான். அம்மா அம்மானு என் புடவைய புடிச்சுட்டு என்பின்னாடியே சுத்திட்டு இருப்பான். இப்போ என்னடான்னா அவன் பொண்டாட்டி முந்தாணைய புடிச்சிட்டு சுத்தறான். அவ முன்னாடி என்னைய நிக்க வச்சு கேள்வியா கேக்கறான். அந்தளவுக்கு அவனை மயக்கி வச்சிருக்கா அவ. எத்தனை நாளைக்கு மயங்கி கிடக்கறான்னு பாக்கறேன். நாளைக்கே எனக்கு தெரிஞ்ச நம்பூதிரிய போய் பாத்துட்டு வருவோம். வசிக்கு அவ மேல இருக்கற மயக்கத்த அவர் தெளிய வச்சிடுவாரு”
“ஆத்தாடி, என்னைய ஆள விடுங்க. நீங்க துரும்பை அசைச்சா கூட உங்க மகன் கண்டுபிடிச்சிடுவாரு. ஏற்கனவே செஞ்ச தப்பை எப்படி சரவணன்கிட்ட இருந்து மறைக்கிறதுனு தெரியாம இருக்கேன். இதுல புதுசா வேற ஆரம்பிக்காதீங்க. சரவணனுக்கும் எனக்கும் இதுவரைக்கும் ஒரு சின்ன சண்டை கூட வந்ததில்ல தெரியுமா? என் முகம் பாத்து மனசு கோணாம நடந்துக்குவாரு. அப்படிபட்டவரு வசியோட பொண்டாட்டிக்கிட்ட நான் நடந்துக்கிறத பாத்து என்கிட்ட மொகம் கொடுத்து பேசறதே இல்ல. இப்போ தான் சண்டை சமாதானத்துல முடிஞ்சிருக்கு. திரும்பவும் பிரச்சனைய இழுத்துவிட்டுக்க நான் தயாரா இல்ல” என்று லதா எழுந்து கொண்டாள்.
“உனக்கு உன் புருஷன் கைவிட்டு போயிடுவானோனு பயம். ஆனா எனக்கு நான் பெத்த புள்ளை என் கையை விட்டு போயிட்டானேனு கவலை. நேத்து வந்தவளுக்காக பெத்த தாயையே எடுத்தெறிஞ்சு பேசறான்” என்று அலமேலு தொடர்ந்து பேசவும் லதா அங்கே நிற்காமல் அவசரமாக மாடிக்கு சென்றுவிட்டாள்.
அலமேலு மட்டும் தனிமையில் கொதித்து கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் வேலைகளில் முழ்கி இருந்தார்கள். சின்ன சின்ன டென்டர்களை நன்றாக முடித்து கொடுத்து வசீகரன் தொழிலை விரிவு படுத்தி கொண்டிருந்தான். ஒரு வாரம் கடந்திருக்க கல்லூரியின் கடைசி வருடத்தின் முதல் நாள் என்பதால் சின்னபொண்ணு தயாராவதற்காக குளித்து விட்டு வந்தாள், அன்று வசீகரனுக்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்தது.
“சின்னு, காலேஜ்க்கு சரவணன் கூட போயிடுறீயா? நான் சாயந்திரம் உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்”
“என்ன மாமு, முதல்நாள் என்கூட வருவீங்கனு நினைச்சேனே” என்று அவன் சட்டை பட்டனை நோண்டியபடி கேட்டாள்.
“டிரான்ஸ்போர்ட் மினிஸ்ட்ரில இருந்து மீட் பண்ண கூப்பிட்டு இருக்காங்க சின்னு. நேரத்துக்கு போகலனா நல்லாயிருக்காது”
“ம், போயிட்டு, நேரம் கிடைச்சதும் எனக்கு போன் பண்ணுங்க”
“ஒகே. இப்போ கழட்டி விட்ட பட்டனை கொஞ்சம் போட்டு விடறீயா?” என்றான் புன்னகையோடு
அவள் நாணத்துடன் அவன் சட்டையிலிருந்த பட்டனை போட்டு விட்டபின், டையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்கு கட்ட தெரியாது மாமு, இதுவரைக்கும் நான் யாருக்கும் டை கட்டினதே இல்ல”
“நான் கூட தான் இதுவரைக்கும் யாருக்கும் தாலி கட்டினதே இல்ல, எப்படி கட்டணும்னு கூட தெரியாது. குத்துமதிப்பா உன் கழுத்துல கட்டலயா. அதுமாதிரி நீயும் என் கழுத்துல டை கட்டிவிடு” என்றான் சீண்டலாக
“ம்” என்று முகத்தை சுருக்கி கொண்டு அவன் நீட்டிய டையை வாங்கினாள். அவன் உயரத்திற்கு எட்டி அவன் கழுத்தில் கூட அதை அவளால் போட முடியவில்லை. “கொஞ்சம் தலைய குனிங்க மாமு” சிணுங்கினாள்
“பொண்டாட்டி முன்னாடி தலை குனிஞ்சு நிக்கறவன் இல்லடி இந்த வசி” என்று நன்றாக நிமிர்ந்து நின்றான்.
அவள் டையை அவன் கையிலேயே திணிக்கவும், “என் கழுத்துல டையை கட்டாம போனா உன் கூட பேச மாட்டேன்” என்றதும் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்கவும், “சின்னு ஏன்டி அழற?” என்று பதறினான்
“ஏன் மாமு என்கூட பேச மாட்டேன்னு சொன்னீங்க?”
“நான் சும்மா சொன்னேன்டி, அதுக்கு போய் அழறீயா?”
“சும்மா கூட சொல்லாதீங்க. என்னால தாங்க முடியல” என்று அவள் மீண்டும் கண்ணீர் விட, கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடியில் அமர்த்தினான்.
அவள் கண்களை துடைத்துவிட்டபடி, “நான் உன் கூட பேசலனா, உயிரோட இல்லனு அர்த்தம், என் உயிர் இருக்கறவரைக்கும் நீயே என்கூட பேசலனா கூட நான் உன்கிட்ட பேசாம இருக்கமாட்டேன்” என்றவனின் இதழ்களை வலிக்க கடித்து வைத்தாள்.
“ஏய் காலைல உனக்கு ஏன்டி இந்த கொலை வெறி” என்று இதழ்களை தேய்த்துக்கொண்டான்.
“இனிமே இப்படியெல்லாம் பேசினா, கடிச்சு வச்சிருவேன்” என்றாள் மிரட்டலாக
“இப்படி பேசினா தான் கடிப்பியா? நீ கடிக்கறதுக்காகவே இன்னும் பேசுவேன்” என்று அவன் சிரிக்க, அவள் அவன் கன்னத்தை கடிக்க வர, அவன் கட்டிலில் சாய என்று இருவரும் மஞ்சத்தில் உருண்டு புரண்டார்கள்.
ஒருகட்டத்தில் மனைவியின் மேல் வசீகரன் மொத்தமாக படர்ந்திருந்தான். அவன் அவளை பார்த்த பார்வையில் அவளின் இமைகள் படபடக்க தொடங்கியிருந்தது. மிடறு விழுங்கியபடி அவளின் தொண்டை குழியை பார்த்தான். இருவரின் இதயதுடிப்பும் ஒரே லயத்தில் துடிக்க, வசி தன் வசமிழந்து சின்னபொண்ணுவின் இருகரங்களை தன் கரங்களால் அழுத்தி பிடித்தபடி தன் இதழ்களால் அவளை ஆராதிக்க துவங்கிவிட்டான். அதற்குள் அவனுடைய கைப்பேசி விடாமல் ஒலிக்கவும் சுயம் பெற்றான்.
பதறி அவளை விட்டு விலகி எழுந்து உடையை சரி செய்து கொண்டான். சின்னபொண்ணு வசியை நேராக சந்திக்க முடியாமல் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க அவளை சமநிலை செய்யும் பொருட்டு, “சின்னு சீக்கிரம் டை எப்படி கட்டறதுனு யூடியூப்ல பாத்து கத்துக்க, இனிமே நீ தான் எனக்கு தினம் கட்டணும்”
“நீங்க உயரமா இருக்கீங்க மாமு, எனக்கு எட்டல”
“என் மடியில உட்கார்ந்துட்டு கட்டு”
“ம்”
“சரி கிளம்பட்டுமா?”
“ம்” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியேறினான்.
அவன் முத்தமிட்ட இடம் மொத்தம் அனலாக தகிக்க மீண்டும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு தயாராகினாள். அவள் வெளியே வரும் போதே சரவணன் காத்துக் கொண்டிருந்தான்.
“வசி உன்னை காலேஜ்ல டிராப் பண்ண சொல்லிட்டு போனான், கிளம்பலாமா?” என்று கேட்க அவளும் தலையசைப்புடன் சரவணனுடன் காரில் கிளம்பினாள்.
திருமணம் ஆனபின் ஒரு வாரமாக தினம் வசீகரனுடனே கல்லூரிக்கு கோச்சிங் கிளாஸ் வந்து சென்றாள். ஆனால் இன்று அவன் உடன் வராதது மனதிற்கு என்னவோ போல இருந்தது.
“ஐ மிஸ் யூ மாமு” என்று செய்தியை அனுப்பியிருந்தாள்.
சரவணன் அலுவலகத்திற்குள் சென்று விட சின்னு தன் வகுப்பிற்குள் சென்றாள்.
அவளின் வகுப்பு தோழிகளும் தோழர்களும் அவளை சூழ்ந்துக் கொண்டனர். “வேண்டா புரபசர் சாரோட தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே, சொல்லவே இல்ல? சரவணன் சாரே ஹேன்ட்சம்மா இருப்பாரு, அவர் தம்பி இன்னும் செமயா இருப்பாரே. அவருக்கு எப்படிடி உன்னை பிடிச்சது? எப்போ லவ் பண்ணீங்க? உன்னை பாக்கறதுக்காகவே இந்த காலேஜ்ல கெஸ்ட் புரபசரா சேர்ந்தாருனு பேசிக்கறாங்களே உண்மையா?” என்று ஆளாளுக்கு கேள்விகளால் அவளை தாக்க அவள் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“சரி அதை பத்தி தெரிஞ்சு என்ன ஆக போகுது? பர்ஸ்ட் நைட்ட பத்தி சொல்லு” என்று ஆளாளுக்கு கேட்க வாயை பொத்திக் கொண்டாள்.
“ஏய் பொண்ணுங்களாடி நீங்கெல்லாம், போய் படிக்கற வேலைய பாருங்கடி” என்று செல்வி அனைவரையும் துரத்திவிடவும் சின்னபொண்ணு தோழியை நன்றியுடன் பார்த்தாள்.
“வேண்டா, எல்லாருக்கும் சொல்றதுக்கு உனக்கு கூச்சமா இருக்கும். என்கிட்ட மட்டும் சொல்லுடி, பர்ஸ்ட்நைட்ல என்ன நடந்துச்சு? சினிமாவுல காட்ற மாதிரி பால் சொம்போட உள்ளே போனியா?” என்று செல்வி கேள்வி கேட்கவும் சின்னபொண்ணு தலையில் கைவைத்துக் கொண்டாள்.
வகுப்பறையே கூச்சலாக இருக்கவும், சரவணன் “என்ன இங்கே சத்தம்?” என்றபடி உள்ளே வந்தான். அவன் வந்ததும் அனைவரும் அமைதியாகிவிட, அவனும் அன்றைய முதல் நாள் பாடத்தை எடுக்க தொடங்கிவிட்டான்.
சின்னபொண்ணுவும் பாடத்தில் கவனமாக இருந்த சமயம் அவளின் கைப்பேசி அலறியது. ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால் போதும்’ என்ற ரிங்டோன் ஒலிக்கவும் ஒட்டுமொத்த வகுப்பறையும் அவளை தான் பார்த்தது.
அவள் வேகமாக தன் பர்ஸை திறந்து அதை அணைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, மீண்டும் கைப்பேசி அலறியது. இந்த முறை வகுப்பில் இருந்த மாணவ வாண்டுகள் எல்லாம் கூட சேர்ந்து பாடவும் சரவணன் முகத்தில் கடுமையை வரவழைத்திருந்தான்.
“வேண்டா, வாட் இஸ் திஸ்?” என்று அதட்ட
“சாரி சார்” என்று எழுந்து நின்றாள். அப்போதும் அவள் கையில் பாடல் ஒலிக்கவும், “கிளாஸ் ரூம்ல இருக்கும் போது போன் அலொவ்ட் இல்லனு தெரியாதா? அட்லீஸ்ட் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைக்கணும்னு கூடவா தெரியாது? முட்டாள். போய் கிளாஸூக்கு வெளியே நில்லு” என்றான் ஆசிரியனாக
முகத்தை தொங்க போட்டுக் கொண்டு கைப்பேசியுடன் வெளியே சென்றாள். மீண்டும் கைப்பேசி ஒலிக்கவும் அதை ஏற்று காதில் வைத்தாள்.
“சின்னு, மிஸ்யூ மாமுனு மெசேஜ் அனுப்பியிருக்கே. என்னாச்சுடி. கிளம்பி வரட்டுமா?”
“போ மாமு. உங்கனால பர்ஸ்ட் நாளே கிளாஸூக்கு வெளியே நிக்கறேன். நான் மெசேஜ் அனுப்பினா நீங்களும் மெசேஜ் தானே அனுப்பணும். எதுக்கு போன் பண்ணீங்க?”
“உன் மெசேஜ் பார்த்ததும் போன் பண்ணி பேசணும்னு தோணுச்சு. கிளாஸ் டைம்னு கவனிக்கல. ஏன் கிளாஸூக்கு வெளிய நிக்கிறே? யாரோட சப்ஜெக்ட் இன்னைக்கு? சரவணன் கிட்ட சொல்லு அவன் பேசி உள்ளே அனுப்பிடுவான். இரு நானே அவனுக்கு போன் பண்ணி சொல்றேன்”
“ஐயோ மாமு, என்னை திட்டி வெளியே அனுப்பினதே சரவணன் மாமா தான்”
அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே சரவணன் வெளியே வந்தான். புரபசராக அவளை திட்டி வெளியே அனுப்பினாலும் தம்பி மனைவியை திட்டி விட்டதால் அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று வெளியே வந்தான். அவள் கைப்பேசியில் கணவனுடன் பேசிக் கொண்டிருக்கவும் அமைதியாக நின்றான். அவனை கண்டதும் சின்னபொண்ணு போனை அணைக்க போக பேசு என்பதாக செய்கை செய்தான்.
“சரவணனனா உன்னை திட்டினான்? என்னனு திட்டினான்?” வசி கேட்க
“கிளாஸ் நேரத்துல போன்லாம் யூஸ் பண்ண கூடாது, சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கணும்னு சொன்னாரு. வேற எதுவும் திட்டல”
“கிளாஸ் நேரத்துல போன் யூஸ் பண்ண கூடாதுனு சொல்றவன் தான் கிளாஸை கட் அடிச்சிட்டு அண்ணி கூட சினிமா மால்னு லவ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருந்தான். அவன் சொல்றானா? தம்பி பொண்டாட்டி தம்பிகூட போன்ல பேசறதுக்கு கூட அலோவ் பண்ண மாட்டானாமா?” என்று வசீகரன் சரவணனுக்கு வசைபாட
“மாமு, நான் அப்புறமா பேசட்டுமா?” என்றாள் சின்னபொண்ணு சரவணனை பார்த்து விழித்தபடி
“சின்னு, அவன் சொல்றான்னு நீ போனை ஸ்விட்ச்ஆப் எல்லாம் பண்ணிடாதே. மாமுவுக்கு எப்பவெல்லாம் உன்கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போ போன் பண்ணுவேன்”
“கிளாஸ் நேரத்துல போன் வந்தா மாமா திட்டுவாரு மாமு”
“அவன் கிடக்கறான் கெளசிக்”
“யாரடா கெளசிக்னு சொல்றே?” என்று சரவணன் குரல் கேட்கவும்
“சரவணா? நீயேப்படா லைன்ல வந்தே?”
“நான் கிளாஸ கட் அடிச்சத உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு இருந்தியே அப்பவே வந்துட்டேன்”
“அது சும்மா உன் லவ் ஸ்டோரிய சொல்லிட்டு இருந்தேன்டா”
“நான் கெளசிக்கா? கிளாஸ் நேரத்துல போன் பண்ண நீதான்டா கெளசிக்”
“நாம ரெண்டு பேருமே கெளசிக் தான்டா. உன் லவ்வுக்கு நான் எவ்வளவு தூது போயிருப்பேன். நீ என் பொண்டாட்டி கூட போன்ல பேசறதுக்கு கூட அலோவ் பண்ணலனா எப்படிடா?”
“அதுக்கு கிளாஸ் நேரத்துல போன் பண்ணுவியா? நான் புரபசரா இருந்துட்டு கேள்வி கேக்கலனா எல்லாருக்கும் இதே மாதிரி போன் வரும். அப்பவும் வாயை மூடிட்டு தான் கேள்வி கேக்காம இருக்கணும். போன் சைலண்ட்ல இருந்தா கூட பரவால்ல, கிளாஸ் ரூமுக்கே கேக்கற மாதிரி பாட்டு வேறே” என்று சின்னபொண்ணை பார்க்க, அவள் தலையை குனிந்துக் கொண்டாள்
“வசீகரா பாட்டா?” புன்னகையுடன் கேட்டான் வசீகரன்
“ஆமா”
“உனக்கு பொறாமைடா. உன் பேர்ல சாமி பாட்டு தான் இருக்கும். நான் வேணும்னா அண்ணிகிட்ட சொல்றேன். ‘ஓம் சரவண பவ என்னும் திருமந்திரம்’னு ஒரு பாட்டு இருக்கு, அதையே ரிங்டோனா வச்சிட சொல்றேன்”
“ஒண்ணும் தேவையில்ல. கிளாஸ் நேரத்துல உன் ரொமான்ஸ கொஞ்சம் அடக்கி வைச்சா அதுவே போதும்”
“டேய் அதுக்காக என் பொண்டாட்டிகிட்ட பேசாம இருக்க முடியாது. மிஞ்சி போனா என்ன பண்ணுவ? கிளாஸ விட்டு வெளிய அனுப்ப போறே. நான் வந்து அவளை காபி ஷாப்க்கு கூட்டிட்டு போய் உன் கிளாஸ் முடிஞ்சதும் கூட்டிட்டு வந்து விட்ருவேன்”
“கல்யாணத்துக்கு முன்னாடி பண்றதெல்லாம் இப்போ பண்ணிட்டு இருக்கே”
“அதனாலென்ன? நீ போனை சின்னுகிட்ட கொடுத்துட்டு நடைய கட்டு” என்று சொன்னான்.
“வேண்டா தப்பா எடுத்துக்காதம்மா. அந்த இடத்துல நான் அப்படி பேசினா தான் சரியா இருக்கும். இல்லனா தம்பி பொண்டாட்டிக்கு மட்டும் சலுகை காட்றாருனு தப்பா பேசுவாங்க”
“நீங்க செஞ்சது கரெக்ட் தான் மாமா. இனிமே போனை சைலண்ட்ல போட்ருவேன்”
“சீக்கிரம் பேசிட்டு கிளாஸுக்கு போ” என்றுவிட்டு சரவணன் வேறு வகுப்பை நோக்கி சென்றான்.
அவன் சென்றதும் கைப்பேசியை காதில் வைத்தவள், “மாமு”
“சின்னு நீ உதட்டுல கடிச்சு வச்சதால மீட்டிங்ல எல்லாரும் என்னை பாத்து சிரிக்கறாங்கடி”
“அச்சோ சாரி மாமு”
“பரவால்ல விடு, லவ் பைட்ஸ்னு சமாளிச்சிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட பர்ஸ்ட் டே கிளாஸ் எப்படி போகுது?”
“நல்லா தான் போகுது, ஆனா பசங்க எல்லாம் என்னை ரொம்ப ஓட்றாங்க. பர்ஸ்ட் நைட் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லுனு நச்சரிக்கறாங்க. அவங்க கிட்ட இருந்து செல்வி தான் என்னை காப்பாத்தினா. அப்புறம் அவளும் என்கிட்ட மட்டும் சொல்லுடினு கேட்டுட்டே இருந்தா மாமு”
“நீயென்ன சொன்னே?”
“நான் எதுவும் சொல்லல, படிச்சிட்டு இருந்தேன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா”
“அப்புறம்?”
“கிஸ் கூடவா பண்ணலனு கேட்டா”
“நீயென்ன சொன்னே?”
அவளிடம் மெளனம்
“சொல்லு சின்னு”
“நான் எதுவும் சொல்லல, அதுக்குள்ள மாமா கிளாஸூக்கு வந்துட்டாரு”
“சரி என்கிட்ட சொல்லு”
“என்ன சொல்லணும்?”
“பர்ஸ்ட் நைட்ல என்ன நடந்துச்சு?”
“அதான் எதுவும் நடக்கல, எல்லாம் கனவுனு சொல்லிட்டீங்களே”
“சின்ன பொண்ணு அதுவும் படிக்கற பொண்ணுக்கு புத்தி போகுது பாரு. நான் பர்ஸ்ட் டே கிளாஸ்ல என்ன நடந்துச்சுனு தான் கேட்டேன், நீ வேறே ஏதோ பேசிட்டு இருக்கே. போய் ஒழுங்கா படி. இல்லனா ஹாஸ்டல்ல சேர்த்துடுவேன்” என்று மிரட்டினான்
“எப்பவும் மாத்தி பேசறதே வேலை, போங்க மாமு” என்று சிணுங்கினாள்
சிணுங்காதே சிணுங்காதே
உன் சிணுங்கலில் என்னை வதைக்காதே
அவள் சிணுங்கல் கிண்கிணி நாதமாய் அவன் காதில் ஒலிக்க மென்நகையுடன் “சரி, மீட்டிங்கல கூப்பிடறாங்க. நெக்ஸ்ட் கிளாஸ் முடிஞ்சதும் பிரேக்ல ப்ரீயா இருந்தா நீயே கால் பண்ணு” என்று அழைப்பை துண்டித்தான்.
அன்று மாலை கல்லூரி முடிந்ததும் மனைவியை அழைத்து செல்ல வசீகரன் அவள் வகுப்பு இருக்கும் வளாகத்திற்குள் வந்தான். சின்னபொண்ணு அவன் வந்ததை கவனிக்காமல் உடன் பயிலும் தோழிகளுடன் பேசிக் கொண்டே வர, அவன் கைப்பேசியை எடுத்து அவளுக்கு போன் செய்தான். வகுப்பு முடிந்ததும் அவள் கைப்பேசியை சைலண்டிலிருந்து எடுத்திருந்தால் வசீகரா பாடல் ஒலிக்கவும் அவள் திரும்பி தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கணவனை கண்டதும் முகம் மலர்ந்தாள். உடன் பயிலும் தோழிகள் அனைவரும் கோரசாக “வசீகரா” பாடலை பாட ஆரம்பித்துவிட்டனர்.
வெட்கத்தில் நெற்றியை தேய்த்தபடி தன் முகத்தை மறைத்தவன் தன் சின்னுவின் கரம் பற்றி வேகமாக நடந்து காருக்குள் சென்றான்.
(தொடரும்)
error: Content is protected !!