Skip to content
Post Views: 114
அத்தியாயம்: 16
ஆசிரியர் அறைக்கு, நகலெடுத்த அறிக்கை காகிதத்தை எடுத்துக் கொண்டு சென்றாள் ரிதன்யா. வராண்டாவில் அதிதி ஃபோனை நோண்டிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டவளுக்குப் புருவங்கள் சுருங்கின.
Advertisement
“ஸ்கூல்ல ஹவர்ஸ்ல ஃபோன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா?” என்ற அதட்டலுடன் அவளின் முன் வந்து நின்றாள் ரிது. அவளை நிமிர்ந்தும் பார்க்காது கடந்து செல்ல முயல, அவளின் அலைபேசியை வாங்கிக் கொண்டாள்.
“நான் ஸ்டாப் ரூம்ல இதக் குடுத்திடுறேன். எங்கிட்டத்தான பதில் சொல்ல மாட்டேங்கிற. அங்க இருக்குறவங்க கிட்ட எஸ்ப்ளைன் பண்ணிட்டு வாங்கிக்க.” என்று விட்டு நடக்க, ஃபோனைப் பிடுங்கியவள்,
Advertisement
Advertisement
“நான் எதுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணணும்? இது என்னோடது. எப்ப யூஸ் பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு எனக்கு க்ளாஸ் எடுக்காம, உங்க லிமிட்குள்ள இருங்க. அது தான் உங்களுக்கு நல்லது.” என்று விட்டு செல்ல, அவளை இழுத்துப் பிடித்து கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் இருந்தது ரிதன்யாவிற்கு.
“இந்த மாதிரி மட்டும் சரிகா பேசிருந்தா! கன்னம் பழுத்திருக்கும். லிமிட்ல இருக்கணுமா… மாமனும் மருமகளும் ஒரு மாதிரி பேசி மிரட்டுறானுங்க. எனக்கு என்ன வந்தது!” என்று விட்டு இருக்கைக்குச் சென்றாலும் மனம் நிலையில்லாது துடித்தது அதிதிக்காக.
Advertisement
பார்த்த முதல் பார்வையிலேயே அதிதி மீது அவளுக்கு ஒரு வித ஈர்ப்பு வந்ததிருந்தது.
அவளின் சாயலில் தன்னை உணர்வுபோல் ஒரு பின்பம்.
அதான் பாசத்திற்கான ஏக்கம். தன்னைப் போலவே அவளுடமும் உள்ளது.
கணவனிடம் மட்டுமே கிடைக்க வேண்டிய, காதலுக்கும் அன்பிற்கும் ரிதன்யா ஏங்கியது போல் அதிதியும் தாய்ப் பாசத்திற்கு ஏங்குறாள் என்பதை அவளுடன் பழகிய ஒரே நாளில் கண்டு கொண்டாள்.
இரண்டுமே கானல் நீரான ஒன்று என்று இருவருக்குமே தெரிந்தது. ரிதன்யா தேடுவதை நிறுத்துக் கொண்டாள்.
ஆனால் அதிதி??
“ஆன்டி… எனக்கும் சேத்து தலை பின்னி விடுறீங்காளா!” என்று தயக்கத்துடன் கையில் சீப்பை வைத்துக்கொண்டு பள்ளிச் சீருடையில் வந்தவளின் பார்வை, சரிகாவையும் தன்னையும் தவிப்பாகத் தொட்டு மீண்டதன் பொருளைக் கன நேரத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது ரிதன்யாவால்.
சில காலமே ஆனாலும், அவளுக்குப் பாசத்தை வாரித் தந்ததில் ரிதன்யாவற்கும் மன திருப்தி கிடைத்தது. தாயாக இருக்க முடியாது என்றாலும் அவரின் சாயலாக இருக்க முயன்றாள்.
சுதா வந்து புகார் பத்திரம் வாசித்தப் பின், ‘அவளை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். அதைத் தடுத்து நிறுத்து. இல்லையேல் அதிதியை இழக்க நேரிடும்.’ என்று அவளின் ஆழ்மனம் காரணம் சொல்லாது கதறியது.
அதிதியை மற்றொரு சரிகாவாக மனம் உருவகப்படுத்திக் கொள்ள, ‘அடுத்தவன் பிள்ளை தானே! எக்கேடும் கெட்டுப் போகட்டும்.’ என்று நினைக்கத் தோன்றவில்லை.
வேகமாக ஃபோனை எடுத்தாள். பத்ரிக்கு அழைக்கத்தான் நினைத்தாள். ஆனால் ஒரு வாரத்திற்கு முன் அவன் பேசியது நினைவு வந்தது.
சுருதியிடமிருந்து நம்பர் வாங்கியவள், உடனே அழைக்கவில்லை. ‘அதிதியைப் பற்றி பேச வேண்டும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். அது படிக்கப்பட்டது. ஆனால் பதில் வரவில்லை. ஒரு கிழமை பொறுத்தவள், மறுநாளை அவனுக்கு அழைத்து விட்டாள்.
“நான் ரிதன்யா…” என்று ஆரம்பிக்கும் போதே,
“தெரியுது. என்ன விசயம்?” என்று கடுகடுப்போடு பேசியது உள்ளுக்குள் சினத்தை மூட்டியது. ஆனாலும் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்,
“அதிதிய பத்தி உங்க கிட்ட பேசணும்.”
“அவளப் பத்தி பேச என்ன இருக்கு?”
“அவளுக்கு ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன்.”
“அதெல்லாம் எதுவும் கிடையாது. எங்க வீட்டுப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சினையையும் தைரியமா கையாளத் தெரியும்.” என்றான் பெருமையாக.
“பிரச்சினை வெளில இருந்துன்னு சொல்லல. அவளுக்குள்ள இருக்குன்னு தோணுது.”
“நீயா எதையாவது கற்பன பண்ணீட்டு பேசாத.” என்றவனின் ஒருமையான அழைப்பு அவளுக்குக் கோபத்தைக் தான் தந்தது.
அவனுக்கோ! தங்கள் குடும்பத்திற்குள் நுழைய புதிய வழியா? என்றிருந்தது. எத்தனை பேரைப் பார்த்திருப்பான், அப்புராணியாக இருந்து கொண்டு, மடத்தின் மேல் ஏறி அமர திட்டமிட்டு காய் நகர்த்தும் பலரை. இவளும் அப்படித்தான் என்ற முடிவுக்கே வந்து விட்டான்.
அதிலும் விக்ரம் ஒரு வீடியோவில், “நான் நல்லா சம்பாதிச்சிட்டு இருந்து வரை எங்கூடவே இருந்தா… அவளுக்குத் தேவையானது தேவையில்லாததுன்னு நினைய செஞ்சேன். என்னைக்கு என்னோட வியாபாரம் நொடிச்சுப் போச்சோ! அன்னைக்கே இவன்ட்ட கறக்க காசில்லன்னு விட்டுட்டு போய்ட்டா. ஆனாலும் எனக்கு என் பொண்டாட்டிய ரொம்ப பிடிக்கும். திரும்பி வந்திடும்மா. கடன் வாங்கியாச்சும் நான் உன்னை ராணி மாதிரி வாழ வைப்பேன்.” என்றது, ரிதன்யாவின் குணத்தின் மீது கேள்வியை எழும்பியிருந்தது.
அவள் பேராசைக்காரி. கணவனுடன் அனுசரித்து வாழ முடியாத அளவுக்கு, தான் என்ற சுயநலம் பிடித்தவள். இவளைப் போன்ற அகம்பாவம் பிடித்த பெண்களுக்கு, சந்தோஷமாக வாழும் குடும்பங்களைக் கண்டு பொறாமைப்படுவதும், கலகமூட்டி வேடிக்கைப் பார்ப்பதும் பொழுது போக்கு. அவளைத் தூரத்தில் வைத்திருந்தாலும் ஆபத்தானவள் என்று தான் தோன்றியது.
அதை அவன் குரல் காட்டிக் கொடுத்தாலும், “ஸ்கூல்ல அவளோட ஆக்டிவிட்டி குறைஞ்சிடுச்சி. க்ளாஸ்ல சரியான அட்டன்சன் இல்லை. என்னேரமும் ஃபோன் கேம்ன்னு இருக்கா.” என்று அடுத்தடுத்து அடுக்க,
“நீ அந்த ஸ்கூல் அட்மின் தான? இல்ல டீச்சரா?” என்று நக்கலாக கேட்டவனின் கேள்வியும் அதன் பொருளும் புரியாமல் இல்லை. ஆனாலும் எச்சரித்தே தீர வேண்டும் என்ற முடிவுடன் அழைத்தவள், மனம் நெருடிய அனைத்தையும் கூறினாள், அவன் கேட்டானா இல்லையா என்று தெரியாது.
“உன்னோட அக்கறைக்கு ரொம்ப நன்றி. எங்க வீட்டு பொண்ண பாத்துக்க எங்களுக்குத் தெரியும். நீ மட்டும் உன்னோட லிமிட்ல நில்லு. அது போதும்.” என்றவன்,
“புருஷன் உயிரோட இருந்தும் செத்திட்டான்னு, பொய்யும் புரட்டுமாச் சொல்லி வீடுல தங்கியிருக்குற உன்ன மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து விலகி இருக்குறது தான் என் பட்டர் பன்னுக்கு நல்லது.” என்க, சுர்ரென்று ஏறியது அவளுக்கு.
“என்ன சொன்னீங்க?” என்று மிரட்டுவது போல் பேச,
“நீ ஒரு ஏமாத்துக் காரின்னு சொல்றேன். எங்கள ஏமாத்தி தான எங்க வீட்டுக்குக் குடி வந்திருக்க. ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்த அம்மா கிட்ட உன்னைப் பத்தி சொன்னாளோ… இல்ல உன்னோட வீடியோவ காட்டுனாளோ போதும். அம்மாவே உன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவாங்க. அப்றம் நீ நடு ரோட்டுல தான் நிக்க வேண்டி வரும். ஏதோ போனா போகுதுன்னு தான் கான்ட்ராக்ட் டயம் வரை இருக்க அனுமதிச்சேன்.” என்க,
“உங்க கருணைல ஒன்னும் நான் உயிர் வாழல.”
“அப்ப வீட்ட காலி பண்ணிட்டு போ.”
“நான் ஏன் போகணும்? அன்னைக்குச் சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். உங்கிட்ட வீட்ட வாடகைக்குப் பேசுனது சுருதி. அவ என்னென்ன சொல்லி வாடகைக்குக் கேட்டான்னு எனக்குத் தெரியாது. நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இது தான் நிஜம். அப்றம் இன்னொரு விசயம்… அப்ப சுருதி சொன்னது வேணும்னா பொய்யா இருக்கலாம். ஆனா இப்ப… அது உண்மை. My Ex-husband is no more. சோ இனி நாங்க பொய் சொன்னோம்னு எந்த இடத்துலயும் இருக்காது. சுதா ஆன்டிட்டச் சொல்லி துரத்தி விட்டுடுவேன்னு மிரட்டவும் முடியாது.” என்று விட்டு பட்டென அழைப்பைத் துண்டித்தாள்.
“no more-அ!!” என்று அதிர்ந்து நின்றவனுக்கு, சில வாரங்களுக்கு முன் விக்ரம் கண்ணீருடன், “தன் பிள்ளையைக் கூட காட்டாது இருக்கிறாள்.” என்று புலம்பிய காணொளி நினைவு வந்தது. அது லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் ரிதன்யாவை வசை பாடியும் இருந்தனர்.
விவாகரத்து ஆனதால் ரிதன்யா மற்றும் சரிகாவின் புகைப்படத்தை நேரடியாக போடாது, முகம் மறைத்து போட்டிருந்தான். அவனின் மனைவி இவள் என்று பலருக்குத் தெரியாது போனது. ஆதலால் காணொளிக்கு வரும் விமர்சனங்கள் நிஜ வாழ்க்கையை எட்டிப் பார்க்கவில்லை.
முதலில் முகம் தெரிந்த படி தான் போட்டிருந்தான். மாரி தான் அதில் உள்ள சட்டச் சிக்கலை எடுத்துச் சொல்லி, “உம்மூஞ்சிய காட்டி மட்டும் போடு. வேற போட்டோவ போட்ட… சகளபாடின்னு கூடப் பாக்க மாட்டேன். தூக்கி Defamation, Privacy violationன்னு உள்ள வச்சிடுவேன்.” என்று மிரட்டி நீக்க வைத்தான்.
விக்ரம் தன்னைத்தானே அடித்துக் கொண்டனே! அதில் தான் ரிதன்யாவின் முகம் தெளிவாக இருந்தது. அதையும் நீக்கச் சொல்லி மாரி சட்ட நடவடிக்கைகளை எடுத்தான் தான். ஆனாலும் அது திருட்டுத் தனமாக உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.
வதந்திகளை நம்புவோருக்கு அதன் உண்மை தன்மை எப்படித் தெரியும்?
விக்ரமின் சமூக வளைதல பக்கங்களுக்குச் சென்று பார்த்தான். அதில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்டு, விக்ரம், மனைவி மற்றும் மகளின் பிரிவு தாங்காது தற்கொலை செய்து கொண்டான் என்று பதிவும் போடப்பட்டிருந்தது.
“ஒரு உயிர கொன்னுட்டு, எப்படி இவளால நிம்மதியா நடமாட முடியுது? ச்சீ… என்ன பொண்ணோ! பிசாசு. ஒரு வர்ஷம் தான். அதுக்குள்ள ஏதாவது எடாகூடமா நடந்ததுன்னா உடனே காலி பண்ண வச்சிடணும்.” என்று முணுமுணுத்தவன், ரிதன்யா, அதிதி பற்றிச் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவனின் அலட்சியம், பெரிய விருக்ஷமாக வளரும் முன் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாக எழுந்தவள், அதிதியின் வகுப்பு ஆசிரியரைக் காணச் சென்றாள். அவள் பள்ளி வளாகத்தில் அலைபேசியைப் பயன்படுத்தியதைப் புகாராக பதிந்தாள்.
எப்படியும் பள்ளி நிர்வாகம் அவளின் கார்டியனான பத்ரியிடம் விசயத்தைச் சொல்லும். அதன் பின்னாவது அவளைக் கவனிக்கிறானா என்று பார்க்கலாம். என்று நினைத்தாள்.
இரவு நேரம் என்பதால் அந்த மருத்துவமனையின் நான்காவது மாடி, பேரமைதியாக இருந்தது. நடமாடும் செவிலியர்களின் ஷூ சத்தம் கூட கேட்கவில்லை.
“செல்வராணிக்கா, டாக்டர்ஸ் ரவுன்ஸ் வர்ற நேரமாச்சி. ஸ்டோரேஜ் ரூம்ம க்ளீன் பண்ணலயா?” என்றாள் சுருதி.
“இதோ போறேன் பாப்பா. சாப்பிட்டு போகலாம்னு பாத்தேன்.” என்றபடி எழ,
“முதல்ல சாப்பாட பாருங்க க்கா. அப்றமா அதைப் பார்க்கலாம்.” என்றவள் மேசையில் எடுத்து வைத்திருந்த சில குளுக்கோஸ் பாட்டில்களை எடுத்துக் கொண்டு நோயாளியின் அறையை நோக்கி நடந்தாள்.
அங்கு காலியாக இருந்த குப்பிக்குப் பதிலாக புது குப்பியைக் கட்டித் தொங்க விட்டு, இதயத்துடிப்பை ஆராய்ந்து குறித்து வைத்தாள்.
“நைட்க்குள்ள ட்ரிப்ஸ் முடிஞ்சிடும். நான் அங்க தான் இருப்பேன். டயம் கால்குலேட் பண்ணி நானே வந்திடுவேன். ஆனாலும் எமர்சன்ஜின்னா கூப்பிடுங்க.” என்றவள் இரண்டு ஊசிகளில் மருந்தை நிரப்பி கையில் குத்தி விட்டாள்.
பின் அந்த இடத்தைத் தடவி விட்டபடி, “இரத்தம் கட்டி நிக்கிறி மாதிரி இருக்கு. ஐஸ் பேக் தர்றேன்.” என்று விட்டு செவிலியர்களுக்கானப் பகுதிக்குச் சென்றாள்.
அங்கு மின்னி மறைந்த அலைபேசியைக் கண்டு, இமை மூடித் திறந்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். பின் அழைப்பை ஏற்று காதில் வைக்க,
“அப்ப இந்த மாசமும் சம்பளத்த முழுசா தர மாட்ட! உம்மனசு என்னடி நினைச்சிட்டு இருக்க? பெரிய மகாராணின்னா! அப்படி என்னத்த கேட்டுட்டேன். மாசமான உன்னோட செலவுக்குப் போக மிச்ச சம்பளத்த கொண்டு வந்து குடுன்னு தான கேக்குறேன். பெத்தவளுக்கு குடுக்க நோகுதா உனக்கு. நாங்களும் நோகாம இருக்க நினைச்சிருந்தா நீயும் உன் தம்பி தங்கச்சியும் படிச்சி, இந்த மாதிரி வளர்ந்து நிப்பீங்களா! அடுப்புலயும் கரிலயும் வெந்து கிடந்து, உன்னைக் கஷ்டப்பட்டு வளத்த எங்களுக்கு நீ காட்டுற நன்றிக் கடன் இது தானா.” என்று சரமாரியாக வசைபாடினார் மனோகரி.
காரணம், கடந்த ஆறு மாதங்களாகச் சரிவர பணம் அனுப்பவில்லை சுருதி.
விடுதி வாடகை மற்றும் கைச் செலவு தவிர்த்து மீதி பணம் முழுவதையும் வீட்டிற்கு தந்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
ரிதன்யா வந்த அன்று, டாக்சிக்கு கொடுத்தது போக அவளின் கணக்கில் இருந்த மீதி பணத்தைப் பார்த்துவிட்டாள். முகம் கசங்கியது சுருதிக்கு.
“அது… மாசக் கடைசில… அதான்…” என்று சரிக்கட்டிச் சிரிக்க, அவளை ஏற இறங்க பார்த்தாள் ரிதன்யா.
தங்கம் என்று சொல்லிக் கொள்ள, கடுகளவு கூட அவளின் உடலில் நகைகள் கிடையாது. காதில் ப்ளாஷ்டிக் வளையம். கைகளில் கருப்புக் கயிறு. கழுத்தில் வெளிறிய நிறத்தில் இருந்த சங்கிலியைப் பார்த்ததும் சொல்லி விடலாம் அது கவரிங் என்று. உடையில் நேர்த்தி இருந்தாலும் அது புடவையைக் கிழித்துத் தைக்கப்பட்ட சுடிதார். அழகி. ஆனால் அலங்காரம் செய்யப்படாத சிலை போல் இருந்தாள் பெண். அவளின் பார்வையை உணர்ந்தவள்,
“ஹாஸ்பிடல்ல யூனிஃபார்ம் குடுத்திடுவாங்க. மத்த நேரம் நைட்டி.” என்றவள் விடுப்பு கிடைத்தாலும் ஓவர் டியூட்டி பார்ப்பாளே தவிர விடுதியில் சோம்பிக் கிடக்க மாட்டாள். அப்படிச் சொல்வதை விட, தனிமை அவளுக்கு அச்சத்தைத் தந்தது.
“இப்படியே காலம் முழுக்க இருக்கப் போறியா?”
“வேற எப்படி?”
“கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி கேக்குறேன்.”
“அதான் ஒருத்தனும் ஏறெடுத்துப் பாக்க மாட்டேங்கிறானே.”
“இப்படி கைல காதுல ஒன்னுமில்லாம நின்னா எவெ பாப்பான்? பேருக்காது தங்கம் இருக்கா உங்கிட்ட?” என்றதும் சுருக்கென்றிருந்தது சுருதிக்கு.
“நகை போட்டாத்தான் கல்யாணம் நடக்குமாக்கும். என்னை எனக்காக கல்யாணம் பண்ணிக்கணும். சீர் வரிசைக்காக இல்ல.”
“சினிமா வசனம் வேண்டாம் சுருதி. நடக்குறத பேசு.”
“அதுக்காக நகை நட்ட, ப்ரைஸ் டேக் மாதிரி கழுத்துல மாட்டிக்கச் சொல்றியா? என்னை விலை பேசி நான் யாருக்கும் விக்க மாட்டேன். வரதட்சணை, குடுக்கவோ வாங்கவோ கூடாது.”
“யாருக்கும் குடுக்கச் சொல்லல. உனக்கு நீயேன்னு சேத்து வைக்கச் சொல்றேன். நகை, பொண்ணுங்களோட சொத்து. படிப்பு ஒரு பொண்ணு முன்னேற வழிகாட்டும். நகை அவளுக்குத் தைரியத்த தரும். எவன நம்பியும் நானில்ல. எனக்கும் சொத்து இருக்குங்கிற நிமிர்வத் தரும். எங்கம்மா தான் இதைச் சொன்னாங்க. நான் போட்டுவிட்ட தங்கம் கூடலன்னாலும் பரவாயில்லை. எந்த சந்தர்ப்பத்திலயும் குறையவோ காணாம போய்டவோ கூடாது. அதுல தான் உன் சாமர்த்தியம் இருக்குன்னு.”
முத்துலெட்சுமி அப்படித்தான். எந்தச் சொத்து வாங்கினாலும் மகன் பெயரிலும் தன் பெயரிலும் மட்டும் தான் அண்ணாமலையார் வாங்குவார். மனைவிக்கு என்று அவர் பெரிய செலவு செய்வது என்பது நகைகளுக்கு மட்டும் தான். அந்த நகைகளைத் தான் அவருக்கே அவருக்கென இருக்கும் சொத்து என்று கருதினார்.
திருமணத்தின் போது முப்பது சவரன் நகையுடன் வந்தவர் முத்துலெட்சுமி. தொழிலை விரிவுபடுக்கிறேன் என்று மனைவியிடம் நகைகளைக் கேட்ட போது மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு, கழுத்தில் கிடந்த தாலிச் சரடைத் தந்தாரே தவிர்த்து, பிறந்த வீட்டில் கொடுத்த நகையின் மீது கை வைக்கவில்லை. ஏன் என்றபோது, அது ‘தன் தாயார் தனக்கு கொடுத்த சொத்து. அதன் மீது உங்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் வாங்கி தந்த ஆபரணங்கள் மீது தன் உங்களுக்கு உரிமை உண்டு’ என்றார்.
பெரிய சண்டையே நடந்தது. ஆனால் முத்துலெட்சுமி, ‘நாளை நான் தனியாக நிற்கும் காலம் வரும் போது, இந்த நகைகளாவது எண்ணிடம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் என்னை மதித்து என் மருமகளோ மருமகனோ கஞ்சி ஊற்றுவார். ஏதுவும் இல்லாது நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலை வராது.’ என்றார்.
அவரின் பேச்சு ரிதன்யாவிற்குள் ஆழமாக இறங்கியது. அது பின்னாளில் வேறு ஒரு பிரச்சனையாக உருவெடுத்ததெல்லாம் வேறு விடயம்.
சுருதியிடம் உனக்காக சில சவரனாவது இருக்க வேண்டும் என்றவள், இதோ ஆறே மாதத்தில் கால் பவுனில் கம்மலும், இரண்டு பவுனில் சங்கிலியும் வாங்கிப் போட வைத்தாள்.
அதன் பொருட்டு கொடுக்கும் சம்பளம் சரி பாதிக்கும் மேலாக குறைந்து போனது. அந்த ஆத்திரத்தில் கத்தினார் மனோகரி.
“தம்பிக்கு பரிச்சைக்கி பணம் கட்டச் சொல்லிருக்காங்க. மஞ்சுவும் மாப்ளயும் வந்தா தங்க வேண்டாமா. மாடில ரூம் எடுக்கணும். எனக்கு வேற நெஞ்செல்லாம் அடைக்கிது. காசில்லாம எந்த ஆஸ்பத்திரில பாக்குறான். நீ என்னடான்னா கிள்ளிக் குடுக்குற! என்னாச்சி உனக்கு. அவ்ளோ காச வச்சி என்ன தான் பண்ற?”
“நகை வாங்கிருக்கேன்.” என்றாள் இம்முறை பதிலைத் தள்ளிப்போடாமல்.
“நகையா!!”
“ம்… எனக்குன்னு சேத்து வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். என் கல்யாணத்துக்காக. இந்த மாசம் கொடுத்த பணம் தான் அடுத்த மாசமும் குடுப்பேன்.” என்று திட்டவட்டமாகச் சொல்ல, மனோகரி வசை பாடத் தொடங்கி விட்டார்.
“பரவாயில்லையே… உங்கம்மாட்டா இவ்ளோ தான்னு அடிச்சி பேசுற அளவுக்கு மாற்றம் வந்திருக்கு!” என்று ஆச்சர்ய பாவனையுடன் வந்த குரலில் திரும்பாது நின்றாள் சுருதி.
சின்ன மணி தொங்கிக் கொண்டிருந்த தோடைச் சுண்டி விட்டவன், அவளை ஏற இறங்கப் பார்த்து, “இந்த மாற்றம் மட்டும் இல்ல, உன்னையே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சுருதி.” என்று விட்டுக் கடந்து சென்றான் விஷ்ணுபிரியன்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!