உயிர் உருகும் காதல் எனதே….17
உயிர் உருகும் காதல் எனதே…..17
“நீ ஏன் உடனே வந்த??அங்க இருந்திருக்கலாம்ல……”என்று இதோடு மூன்றாவது முறையாக கேட்டவனை முறைத்தபடி தன் வேலையில் கவனமானாள் துர்கா.நாளை பள்ளி செல்வதற்கு தேவையானவற்றை எடுத்துவைத்துவிட்டு அவள் வர மீண்டும் அதையே தான் கூறினான் வீரா.
அவனிற்கு இந்த இரவு பொழுதுகள் எல்லாம் ஏதோ மாய உலகில் இழுத்துக்கொண்டு சென்று அவனை உற்சாகம் மூட்டி கொண்டுவந்தது போலவே இருந்தது.இன்று மனைவியை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் அவளுடன் பேசியில் பேசியது போல் பேச முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் கோபத்தை தர மாலை வீட்டிற்கு வந்ததலிருந்து இதை தான் அவன் கேட்டுக்கொண்டிருக்க,
“இருங்க நான் அத்தை கூப்பிடுறேன் அவங்க கிட்ட கேளுங்க…..”என்று அவள் அறையின் கதவு அருகே செல்ல,
Advertisement
“இல்ல இல்ல வேணாம்….”என்று அவன் பதறிவிட,துர்கா உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.அவளுக்கு தெரியாதா எதற்காக கணவன் இப்படி பேசுகிறான் ஒரு வகையில் அவளுக்கும் அது நன்றாகவே இருந்தது.ஆனால் நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறதே.இங்கு வந்த பின் வீராவின் வார்த்தைகள் மனதில் வலம் வர,துர்காவின் மனது அதனை கடினப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தது.தனது படுக்கை விரிப்புகளை விரித்துக் கொண்டிருந்தவனின் பார்வை நொடிக்கு ஒருதரம் மனைவியை பார்த்தபடி தான் இருந்தது.அறைக்குள் வந்ததலிருந்து ஏதோ ஒன்றை யோசிப்பதும் பின் தனக்குள்ளே ஏதோ தெளிவு பிறந்துவிட்டது போல் முகத்தை மாற்றிக்கொள்வதுமாக அவள் இருக்க,
“என்ன யோசிக்கிற நீ??….”என்று கேட்டுவிட,ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் தன் படுக்கையில் அமர்ந்திருக்க,இவனும் தன் படுக்கையில் அமர்ந்து,
“முன்னாடியெல்லாம் நீ இப்படி இல்ல?…..”என்று பேச்சை தொடங்க,
Advertisement
“என்ன????……”
Advertisement
“ம்ம் ஸ்கூல் டைம்ல…..எப்ப பாரு உனக்குனு ஒரு கூட்டம் அதோட அரட்ட அடிச்சிக்கிட்டு சந்தோஷமா…..உன் வாய் மூடவே மூடாதானு நான் நினைச்சிருக்கேன்….”என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவனின் மீது ஒரு தலையணை வந்து விழுந்தது.
“ஓய்…..உண்மையை சொன்னா அடிக்கவா செய்ற…..”என்றான் சிரித்துக் கொண்டே,
“அப்படி என்ன பார்த்தீங்க நீங்க….”
Advertisement
“உன் கூடவே ஒருத்தன் சுத்துவானே அவன் பேரு கூட……”
“விமல்…..”என்று அவனுக்கு எடுத்துக் கொடுக்க,
“ம்ம் அவன் தான்….அவனோட என்ன கதை போடுவ நீ கரவுண்டல…..நான் கூட நினைப்பேன் அப்படி என்ன தான் பேசுவீங்களோனு…..”
“அப்படி ஒன்னும் பேசலையே…..”என்றவளுக்கு தன் பாலிய நண்பனின் நியாபகம் வந்தது.அதில் அவளின் முகம் பூவாக மலர வீராவின் மனமும் அதே போல் மலர்ந்தது.
“என்ன பழைய நியபகமா???…..”
“ஆமா….அவனும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ்…..விமலோட அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க…..அவன் தாத்தா,பாட்டி வீட்ல தான் வளர்ந்தான்…..நாங்க அப்ப பக்கத்து வீடா அதனால பிரண்ட்ஸ்….அவனுக்கு நான் எப்போதும் தேன்மிட்டாய்,நெய் வரிகி இதெல்லாம் வாங்கிட்டு போய் கொடுப்பேன்….அவனும் எனக்கு என்னனெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் வீட்ல செஞ்சு எடுத்துட்டு வருவான்…..”என்று தன் நினைவுகளில் அவள் மூழ்க,
“இப்ப எங்க இருக்காரு உன் பிரண்ட்…..”
“இப்ப யூஸ்-ல இருக்கான் கல்யாணம் முன்னாடி வரைக்கும் பேசுவேன்….அப்பறம் டச் விட்டு போச்சு….”என்று பெருமூச்சுடன் கூற,
“இப்ப பேசேன்…..உன் கிட்ட அவன் நம்பர் இருக்குல…..”என்று வீரா கூற,துர்கா திருதிருத்தாள்.
“என்ன முழிக்கிற…..”
“இப்படி திடீர்னு சொல்லுவீங்கனு எதிர்பார்க்கல……அதோட அவனோட நம்பர் டெலிட் ஆகிடுச்சு….”என்று வருத்தமாக கூற,
“இது ஒரு விஷயமா உன் பிரண்ட் வேற யாராவது கிட்ட இருக்கும் வாங்கு…..”என்று கூற,
“ஆமா….என் பிரண்ட் பிருந்தா இருக்கா அவளுக்கு தெரியும் நாளைக்கு கேட்டு வாங்கி பேசனும்….தாத்தா,பாட்டி இறந்ததுக்கு அப்பறம் அவன் இங்க வரதே இல்லை……வர சொல்லனும்…..”என்று கூற வீரா மனையாளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.இப்படியே பழைய கதைகளை பேசியபடி தான் இருவரும் உறங்கினர்.
என்னை இன்று மறந்துவிட்டீர்கள் என்று அவர்களின் கைப்பேசியும் உறங்கிக்கொண்டிருந்தது அவர்களின் பக்கத்தில்.இரண்டு நாட்கள் கடந்து அன்று மாலைவேளை கடையில் கூட்டம் சற்று குறைவாக தான் இருந்தது.தன் அறையில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த வீராவின் அறைக்கதவு வேகமாக திறக்கப்பட யார் என்று பார்த்தவனின் விழிகள் மனைவியை கண்டவுடன் அதிர்ந்து அகல,
“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் தான் வேகமா ஓடி வந்தேன்…..”என்றவள் மூச்சு வாங்க,
“ஏய் எதுக்கு இப்படி ஓடிவர….உட்காரு தண்ணீ எடுத்துட்டு வரேன்…..”என்று அவன் எழ,
“வேணா வேணா…..இருங்க……நான் இன்னைக்கு விமல் கிட்ட பேசினேன்…..”
“ம்ம் நம்பர் கிடைச்சிடுச்சா எப்படி….”
“பிருந்தாக்கிட்டேயும் இல்ல அப்பறம் இன்னொரு பிரண்டை பிடிச்சு அவன் கிட்டேந்து வாங்குனேன்…..”என்றாள் துர்கா.
“என்ன சொன்னாரு உன் பிரண்ட்…..”
“நல்லா திட்டினான் வாங்கிட்டேன்…..”என்று அசடு வழிய,வீராவிற்கு அள்ளிக்கொள்ளலாம் போல் ஒரு உணர்வு திடீர் என்று எழ தன் நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டான்.
“என்னாச்சு…..”என்று துர்கா புரியாமல் கேட்க,
“…….”
“வீரா….வீரா…..”என்று துர்கா தோள் தொட்டதும் தன் நிகழ்வுக்கு வந்தவன்,
“ஆங் என்னமா????…..”என்று கேட்க,
“என்னாச்சு ஏன் இப்படி நடக்குறீங்க???……”என்று கேட்க,
“நடக்குறேனா…..”என்றவன் அப்போது தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர,தன் தலையில் கை வைத்து தேய்த்துக் கொண்டான்.என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் அவள் என்று நினைத்தவனின் பார்வை தன் அருகில் நின்றிருந்தவளை தான் பார்த்தது.
“என்னாச்சு வீரா….இருங்க தண்ணீ எடுத்துட்டுவரேன்…..”என்று நகரப்போனவளை கைபிடித்து நிறுத்தியவன் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.துர்காவிற்கு எதுவும் புரியவில்லை தான் எதாவது கூறி அது மீண்டும் அவனின் மனதை காயப்படுத்திவிட்டாதா என்று தான் பயந்து போனாள்.
“நான் எதாவது சொல்லிட்டேனா…..”என்று கேட்டேவிட்டாள் அவள்.
“இ….இல்ல இல்லமா…..இது வேற….நீ விடு….”
“நீங்க தான் என்னை விடனும்….”என்றவள் கூற,
“சாரி….”
“கை பிடிச்சதுக்கு கூடவா சாரி கேட்பீங்க…..”என்றாள் இலகுவாக,
“ஏன் இப்படி பண்ணீங்க…..நான் பயந்துட்டேன்…..”என்று நெஞ்சில் கை வைத்து கூற வீராவின் பார்வை அவளில் ஊர்ந்து மீண்டது.மீண்டும் அவன் பேச்சின்றி அவன் நிற்க,
“என்ன திரும்பவும் ப்ரீஸ் ஆகிட்டீங்க….”என்று கேட்க,ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன்,
“சரி நீ கிளம்பு….”
“என்ன கிளம்புறதா…..இரண்டு ப்ரண்டஸை இணைச்சிருக்கீங்க…..உங்களுக்கு ட்ரீட் கொடுக்க தான் வந்தேன்…..வாங்க போகலாம்…..”என்று அழைக்க,அவனோ ஏற்கனவே தன்னிடம் ஏற்படும் மாற்றம் புரியாமல் தவித்துக்கொண்டிருக்க அதற்கு இவள் வேறு இப்படி என்னை இம்சிக்கிறாளே என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
“இல்ல இன்னொரு நாள் போகலாம் கொஞ்சம் வேலையிருக்கு….”என்று தன் இடத்தில் மீண்டும் அமர்ந்து கொண்டு,
“ச்சு நீங்க வருவீங்கனு நினைச்சேன்….ஓகே இன்னொரு நாள் கண்டிப்பா போறோம்…..பை…..”என்றுவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.அவள் சென்றதும் மூச்சை இழுத்துவிட்டவனின் மனதில் போயிருக்கலாமோ என்ற எண்ணமும் எழ இது என்ன புதுவிதமான எண்ணங்கள் என் மனதில் இன்று எழுகின்றது என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.துர்கா,வீராவின் வாழ்க்கை அழகாகவே செல்ல தொடங்கியது இப்போது எல்லாம் தன் மனைவியை அவளை அறியாமல் ரசிக்க தொடங்கியிருந்தான் வீரா.துர்காவோ மீண்டும் வீரா பிரிவை பற்றி பேசாததால் சற்று மனநிம்மதியுடன் வலம் வர தொடங்கியிருந்தாள்.
கற்பகத்தை பொறுத்தவரை தன் பிள்ளையின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏற தொடங்கிவிட்டார்.என்னதான் துர்கா அவரிடம் நல்லமுறையில் நடந்து கொண்டாலும் அவளிடம் ஏன் உன் வாழ்வை தொடங்காமல் இருக்கிறாய் என்று கேட்க முடியவில்லை அவரால்.
துர்காவின் வீட்டில் வானாதி இப்போதெல்லாம் சிடுசிடுவென்று சின்ன மகளிடம் விழ தொடங்கியிருந்தார்.அவள் தாய் வீடு வந்து ஒரு மாதம் ஆகின்றது மாசமாக இருக்கிறாள் என்று முதலில் அனைத்தையும் செய்த வானாதிக்கு அதுவே பெரிய தலைவலியாகி போனது.இத்தனைக்கும் வாசினிக்கு பெரிதாக வாந்தி,தலைசுற்றல் என்றெல்லாம் இல்லை மசக்கையான பெண்ணிற்கே உண்டான சோர்வு தான் அதற்கே அவள் ஒரு வேலையும் செய்யாமல் படுத்தபடியே இருந்தாள்.இதில் வானாதியிடம் ஏதாவது குறை கூறிக் கொண்டிருக்க முதலில் சகித்துக்கொண்டவரால் நாட்கள் ஆகா ஆகா எரிச்சல் தான் மண்ட தொடங்கியிருந்தது.
“ஏன்மா என்ன சட்டினி அரைச்சிருக்க….நல்லாவேயில்ல….”என்று வாசினி மேஜையில் சாப்பிட்ட படியே கூற,
“என்னால அவ்வளவு தான் செய்ய முடியும் வாசினி….முடிஞ்சா சாப்பிடு இல்லையா நீ உனக்கு தக்கபடி செஞ்சு சாப்பிடு…..”என்று கோபமாக கூறிவிட,கோபத்தில் பாதி சாப்பிட்டிலேயே எழுந்துவிட்டாள் அவள்.
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பாதி சாப்பாட்டுல எழற…..”என்று வானாதி கோபமாக கேட்க,
“நீ கொஞ்ச நாளாவே சரியில்லமா….உன் பொண்ணு மாசமா இருக்களேனு உனக்கு கொஞ்சமாச்சும் சந்தோஷம் இருக்கா…….எனக்கே உடம்பு முடியலனு தான் இங்க வந்தா நீயும் என்னை விரட்டுற இல்ல…..”என்று இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுவிட்டு தன் அறைக்குள் முடங்கிவிட,முன்பானால் வானாதி பின்னாடியே சென்று மகளை சமாதானம் செய்வார்.இன்று அவருக்கு வேலையும் அதிகமாக இருக்க கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.
மதிய உணவை சமைத்துவிட்டு வந்த வானாதி இன்னும் வாசினி தன் அறையிலேயே இருப்பதை உணர்ந்து அங்கு சென்றார்.அறையில் முழுக்க அவளின் துணிகள் அங்கும்,இங்கும் சிதறிக் கிடந்தது ஒரு பெருமூச்சுடன் பார்த்தவர் படுக்கையில் படுத்திருந்தவளை எழுப்பினார்.
“வாசினி….”
“என்ன எனக்கு சாப்பாடு வேண்டாம்……”என்று படுத்தபடியே குரல் கொடுக்க,வானாதிக்கு கோபத்தை மீறி எரிச்சல் தான் வந்தது.
“என்னவோ பண்ணு……நான் ரேஷன் கடைக்கு போறேன்….வர லேட்டாகும் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்…..”என்றுவிட்டு அவர் வெளியேறிவிட,தன்னிடம் தாய் கெஞ்சிக்கொண்டு நிற்பார் என்று எதிர்பார்த்த வாசினிக்கு ஏமாற்றமாகி போக,நான் உங்களுக்கு அவ்வளவு தான் இல்ல எனக்கு ஒன்னும் சாப்பாடு வேண்டாம் போ என்று வீம்புடன் படுத்துக் கொண்டாள்.
வானாதி சென்ற இடத்தில் அவர் நினைத்ததை விட நேரம் எடுத்துவிட,அவர் வரும் போதே மதிய நேரத்தை கடந்திருந்தது.அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சாப்பாட்டு மேஜையை பார்க்க சமைத்த உணவுகள் அப்படியே இருந்தது.
“இன்னும் சாப்பிடாம என்ன பண்றா இவ…..”என்று நினைத்தபடியே அவளின் அறைக்குள் நுழைய அங்கு அரை மயக்க நிலையில் இருந்த வாசினியைக் கண்டவுடன் அவருக்கு உயிரே நின்றுவிட்டது.பயத்தில் என்ன செய்வது என்று புரியாமல் மகளின் கன்னத்தை தட்டி பார்த்து எழுப்ப முயல முடியவில்லை அவரால்.உடனடியாக அவர் துர்காவிற்கு அழைக்க அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் துர்காவும்,வீராவும் வந்துவிட்டனர் அங்கு.
“துர்கா….சீக்கிரம் வாம்மா…பயமா இருக்கே…..”என்று புலம்ப,
“என்னம்மா என்னாச்சு?……”என்று பதறியபடி வந்த துர்கா தங்கையிருந்த அறைக்குள் நுழைந்தவள் வேகமாக பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளின் முகத்தை துடைத்துவிட்டு தண்ணீரை பருக கொடுக்க வாசினியால் அதை முழுமையாக பருக முடியவில்லை.துர்கா கை,கால் எல்லாம் நடுங்க துவங்கியிருந்தது தங்கையின் நிலை கண்டு.
“க்கா….முடியல….”என்று ஈனமாக அவளின் குரல் வெளிவர,
“ஒண்ணுமில்லடா….இப்ப ஹாஸ்பிட்டல் போயிடலாம்…..”என்றவளின் அழுகையில் இருக்க,வானாதியோ அழவே தொடங்கிவிட்டார்.
“அய்யோ நான் தப்பு பண்ணிட்டேனே….அவ தான் ஒரு வீம்பு புடிச்சவனு தெரிஞ்சே நானும் கோபமா பேசிட்டேனே…..என் புள்ளை இப்படி கிடக்குதே…..”என்று அவர் அரற்ற துவங்க,
“துர்கா ஆம்புலன்ஸ் வந்துடுச்சு…..”என்று கூறிக் கொண்டே அந்த அறைக்குள் வந்தான் வீரபத்திரன்.அவனின் பின்னே கற்பகமும் வந்துவிட,அனைவரின் உதவியுடன் வாசினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
