Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 14.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 14

 

தனித்து நின்ற போதும்

உந்தன் நினைவுகள்



Advertisement

என்னை தனியே விட வில்லை!!!

 

அரவிந்த் அப்படி கேட்டதும் சாணக்கியன் என்ன சொல்லி சமாளிக்க என்று தடுமாற “எனக்கு தெரியும் அண்ணா உங்க மனசுல திவ்யா இருக்கான்னு”, என்றான்.

Advertisement

 

Advertisement

சாணக்கியன் திகைத்து அவனைப் பார்க்க “நேத்து ரெண்டு பேரும் லவ் லுக் விடும் போதே கண்டு பிடிச்சிட்டேன்”, என்று சொல்ல “ஹா ஹா”, என்று சிரித்து விட்டான்.

 

“திவ்யாவைப் பாக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அவ வாழ்க்கை உங்க கூட தான்னு நினைக்கும் போது எனக்கு அவ்வளவு நிம்மதி. இன்னைக்கு மாமா டைவர்ஸ் பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்க போகும் போது அவன் போடணும். அவ்வளவு தானே?”

Advertisement

 

“ஆமா”

 

“அவன் கண்டிப்பா போட மாட்டேன்னு தான் சொல்லுவான். அம்மா கிட்ட அப்படி தான் சொல்லிக்கிட்டு இருக்கான் போல? வாங்க அவன் கிட்ட நான் உங்களை கூட்டிட்டு போறேன். அவனை போட வைக்க வேண்டியது உங்க பொறுப்பு”, என்று சொல்ல சாணக்கியனுக்கு அவ்வளவு நிம்மதி.

 

“வா போகலாம்?”, என்று சொல்லி விட்டு சாணக்கியன் காரை எடுக்க அரவிந்த் கேட்டை சென்று திறந்தான்.

 

காரை வெளியே எடுத்து விட்டு அரவிந்த்க்காக காத்திருக்க அவர்கள் கார் கிளம்பும் முன் எதிரே வந்து நின்றான் அமர்.

 

இருவரும் அவனைக் கண்டு திகைக்க “எங்க வேணா போங்க. ஆனா நானும் கூட வருவேன்”, என்று சொன்னவன் பின்னால் ஏறி அமர்ந்து விட்டான்.

 

வேறு வழி இல்லாமல் அரவிந்த் சாணக்கியன் அருகே ஏறி அமர கார் மெதுவாக கிளம்பியது.

 

“அமர்”, என்றான் சாணக்கியன். தம்பியிடம் எப்படி எல்லாவற்றையும் சொல்ல என்று ஒரு மாதிரி இருந்தது.

 

“சொல்லு அண்ணா”

 

என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவன் தடுமாற “எனக்கு எல்லாமே தெரியும்”, என்றான் அமர்.

 

சாணக்கியன் சடன் பிரேக் போட்டு அவனைப் பார்க்க அரவிந்தும் அமரைத் திரும்பி பார்த்தான்.

 

“திவ்யா விஷயமா தானே போறீங்க? நீ நைட் முழுக்க தூங்கலை அப்பவே எனக்கு புரிஞ்சது. அது மட்டும் இல்லாம நீயும் திவ்யாவும் விரும்பின விஷயம் பல வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். உங்க காதல் பிரிஞ்சதுக்கு காரணம்”, என்று ஆரம்பித்தவன் நடந்த அத்தனையும் சொல்ல இருவருக்கும் திகைப்பு தான்.

 

தருமருக்கு தெரியும் என்று அடியாள் சொல்லும் போதே சாணக்கியனுக்கு தெரியும் தான். ஆனால் அமருக்கு தெரிந்தது அவனுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது,

 

“நீயும் அண்ணி கூட வாழ்ந்துட்டு இருந்த அண்ணா. அதனால தான் அதைப் பத்தி கேட்டு உன் மனசை கெடுக்க விரும்பலை. இப்ப உங்க ரெண்டு பேருக்குமே வாழ ஒரு வாய்ப்பு இருக்கு அண்ணா. கண்டிப்பா அதுக்கு நானும் உதவுவேன்”, என்று சொல்ல தம்பியைக் கண்டு புன்னகைத்தவன் காரை எடுத்தான்.

 

அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப் பட்டிருந்தான் பாண்டியன். அவர்கள் மூவரும் அங்கே போன போது லேசாக தான் விடிந்திருந்தது. அவன் இருந்தது சாதாரண எலும்பு முறிவு வார்ட் தான். அந்த அறையில் கிட்டத்தட்ட இருபது பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். நோயாளிகள் கட்டிலில் படுத்திருக்க அவர்களுக்கு துணையாக இருந்த உறவினர் ஒருவர் தரையில் படுத்திருந்தார்கள்.

 

விடிந்ததால் ஆள் ஆளுக்கு டீ வாங்கி வருவதும் போவதுமாக இருந்தார்கள். அதனால் எந்த பயமும் இல்லாமல் மூவரும் நேராக பாண்டியனை நெருங்கினார்கள்.

 

தங்கம் டீ வாங்க சென்றிருக்க பாண்டியன் எழுந்து அமர்ந்திருந்தான். அதற்கு அடுத்து ஏழு பெட் தள்ளி தான் அவனுடைய நண்பன் அனுமதிக்கப் பட்டிருந்தான்.

 

தம்பியைக் கண்ட பாண்டியன் “மனுசனா டா நீ? ஒத்தாசைக்கு கூட வர மாட்டிக்க? என்ன அங்கயே தவம் கிடக்க போல? எவன் கிட்டயோ சீரழிஞ்சு ஏமாந்து வந்தவ வேணும்னு தானே அவ வீடே கிடையா கிடக்குற? அசிங்கமா இல்லையா டா உனக்கு?”, என்று அவன் கேட்டது தான் தாமதம் அமைதியாக அவனை நெருங்கிய அமர் அவன் அடி பட்ட காலில் “வலிக்குதா?”, என்று கேட்டு ஒரு அழுத்து அழுத்தினான்.

 

“ஆஆ”, என்று லேசாக அலறி விட்டான் பாண்டியன். திகைப்புடன் அமரைப் பார்க்க “என் ரதியை பத்தி ஏதாவது தப்பா பேசினா இனி இந்த கால் இருக்காது”, என்றான்.

 

“யாரு டா நீ?”, என்று திகைத்து போய் பாண்டியன் கேள்வி எழுப்ப “ரதியோட புருஷன் தான் அவர்”, என்றான் அரவிந்த். அதற்கு மேல் ரதி பற்றி பேசி அடி வாங்க அவன் முட்டாளா?

 

அதனால் அரவிந்திடம் “ஓ, சரி எங்க அந்த ஓடுகாலி? என்னமோ டைவர்ஸ் வேணும்னு கேட்டாளாமே? கொடுப்பேனா நான்? கால் சரியானதும் அவளுக்கு இருக்கு”, என்று சொல்ல இப்போது சாணக்கியன் அவன் காலை நெரித்தான்.

 

வலி உயிர் போக வேதனையாக அவனை பார்த்தவன்
“நீ யாரு டா? எதுக்கு டா அடி பட்ட இடத்துலே அமுக்குறீங்க? வலிக்குது”, என்று சொன்னான்.

 

“உனக்கு தான் வலி எல்லாம் இருக்குமா? மத்தவங்க எல்லாம் மிசினா? நான் தான் திவ்யாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்”

 

“அவ என் பொண்டாட்டி”

 

“இனி இல்லை. இனி அவ என்னோட திவ்யா மட்டும் தான். அவளுக்கும் உனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. நானும் அவளும் ரொம்ப வருஷமா லவ் பண்ணுறோம். இப்ப கல்யாணம் பண்ணிக்க போறோம்”

 

“நினைச்சேன், அவ கூட ஒண்ணா இருக்கும் போதெல்லாம் மரக்கட்டை மாதிரி கிடப்பா. அப்பவே இவ எவனையோ நினைச்சிட்டு தான் இருக்கான்னு தோணுச்சு. என்ன சொன்ன கல்யாணம் பண்ணிக்க போறியா? அவளை நிம்மதியா வாழ விட்டுருவேனா? என் அம்மா என் மாமா கிட்ட கொஞ்சம் பாசமா பேசினா போதும். அவளை என் கிட்ட தான் திருப்பி கொண்டு வந்து விடுவாங்க. அவ என் கூட தான் இருந்தாகனும்”

 

“அதுக்கு நான் விடணும்ல? உன் மாமாவே இன்னைக்கு மதியம் டைவர்ஸ் பேப்பர்ஸ்சோட வருவார். ஒழுங்கா கையெழுத்து போட்டு கொடுக்குற?”

 

“கையெழுத்து  போட மாட்டேன். அது எப்படி நீயும் அவளும் ஒண்ணா வாழ்ந்துறீங்கன்னு பாக்குறேன்”

 

“வாழ தான் போறோம். அதை பாக்க தான் நீ இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்”

 

“என்ன மிரட்டுறியா?”

 

“ஆமா மிரட்ட தான் செய்றேன். வீட்ல குடிச்சிட்டு கிடந்தவன் எப்படி காட்டுக்குள்ள கிடந்தோம்ன்னு யோசிச்சியா?”, என்று நக்கலாக கேட்டான் சாணக்கியன்.

 

“ஏய் அப்படினா இதுக்கெல்லாம் காரணம் நீயா? நினைச்சேன். அந்த பொட்டச்சிக்கு எப்படி அவ்வளவு தைரியம்னு. என் நண்பனை தலைல அடிச்சது அவ தான். அவ தான் அவனைக் கொன்னான்னு நினைச்சேன். ஆனா நீ தான் அவனை கொன்னுருக்க. எங்க கை காலை உடைச்சது நீ தானே?”, என்று கேட்க அவன் சொன்ன உண்மையில் அமர் மற்றும் அரவிந்த் இருவருக்குமே திகைப்பு தான். அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாதே. அமருக்கு லேசாக தெரிந்தாலும் தன்னுடைய அண்ணன் இந்த அளவுக்கு செய்திருப்பான் என்று எதிர் பார்க்கவே இல்லை.

 

“பரவால்ல, இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டியே? நான் தான் பண்ணுனேன். நான் மட்டும் தான் பண்ணுனேன். வேற யாரோ கொன்னாங்கன்னு கேசை திசை மாத்தி விட்டது கூட நான் தான். இவ்வளவு பண்ணின எனக்கு நீ தான் கொலை பண்ணன்னு கோர்த்து விடுறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?  என்ன ஆயுசுக்கும் ஜெயில்ல இருக்க போறியா? ஆனா அதை விட ஈஸியான வழி உன் நண்பன் போன இடத்துக்கே உன்னையும் அனுப்புறது தான். நீ செத்துட்டா திவ்யா விதவை தான். டைவர்ஸ் கேஸ்ன்னு எதுவும் நடக்காது. விதவை பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா போதும் தெய்வம் மாறி என்னைப் பாப்பாங்க”, என்று சொன்னதும் பாண்டியன் எச்சில் விழுங்கினான்.

 

பாண்டியன் பெரிய ரவுடி எல்லாம் இல்லை. தண்ணி அடித்து விட்டு நண்பர்களுடன் ஊரைச் சுற்றும் உல்லாசி. அவனுக்கு திவ்யா போனால் தங்கம் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைப்பாள். அதை விட்டுவிட்டு ஜெயிலுக்கு போகவோ உயிரைக் கொடுக்கவோ அவனுக்கு உடன் பாடில்லை.

 

அவன் அமைதியாக இருக்க “என்ன சொன்னது எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஒழுங்கா மாமா கொண்டு வர பத்திரத்துல சைன் பண்ணுற. கோர்ட்டுக்கு என்னைக்கு வரச் சொல்றாங்களோ அன்னைக்கு வர. இதுல வேற ஏதாவது தில்லாலங்கடி வேலை பாத்த பாண்டியன்னு ஒருத்தன் இருந்ததுக்கு தடையமே இருக்காது”

 

“சரி கையெழுத்து போடுறேன்”, என்று சொன்னவன் தம்பியை முறைத்துப் பார்க்க அவன் எதுவுமே சொல்ல வில்லை.

 

“என்ன அவனை முறைக்கிற? இனி அவன் உன் தம்பி இல்லை. எங்க தம்பி. உன் அம்மா கிட்டயும் சொல்லிரு. இனி அவன் வாழ்க்கைல கூட நாங்க தான் முடிவு எடுப்போம்”, என்று சொன்ன சாணக்கியன் அவனை அழைத்துச் செல்ல அமர் மீண்டும் அவன் காலில் இரண்டு தட்டி விட்டு அவனை அலற வைத்து விட்டே சென்றான்.

 

அன்னை வந்ததும் நடந்ததை அப்படியே மாற்றி ஏற்றி இறக்கி திவ்யாவை தவறாக பேச “அந்த நாய் போனா போறா டா? இதோட தலை முழுகிறலாம். உனக்கு வேற பொண்ணு பாத்து கட்டி வைக்கிறேன். பிள்ளை இல்லைன்னு சொல்லிக்கலாம். நகையை தான் எப்படி கொடுக்க போறோம்ன்னு தெரியலை”

 

“கொஞ்ச நாள் டைம் கேளு மா. பணம் ரெடி பண்ணிட்டு தறோம்ன்னு சொல்லு. அப்படியே இழுத்து அடிக்கலாம். இன்னைக்கு வருவாங்க போல சைன் வாங்க. இவனுங்க வந்து மிரட்டினதை சொல்லாத. அப்புறம் ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். நமக்கு தான் பிரச்சனை”

 

“நல்லா வரும் டா பிரச்சனை. கண்டவன் எல்லாம் மிரட்டுற மாதிரி செஞ்சு வச்சிருக்க. ஒருத்தன் செத்தே போய்ட்டான்.  அவனுங்க கூட சேராதேன்னு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா? இப்ப பாரு அனுபவிக்கிற?”

 

“சரி புலம்பாத விடு, இனி குடிக்கலை”, என்று சொல்ல தங்கமும் வாயை மூடிக் கொண்டாள்.

 

ஆண்கள் மூவரும் திரும்பிச் செல்லும் போது “அண்ணா அன்னைக்கு முழுசா என்ன தான் நடந்துச்சு?”, என்று கேட்டான் அமர்.

 

அரவிந்தும் எதுவும் தெரியாததால் அவனைப் பார்க்க எல்லாவற்றையுமே சொன்னான். திவ்யா அவனைக் கொலை செய்ததை மட்டும் மறைத்துக் கூற ஆனால் அவள் அடித்த அடியில் தான் அவன் இறந்து விட்டான் என்று அவர்களுக்கு புரிந்தது. அவனே மறைக்க நினைக்கும் போது அதை தெளிவு படுத்த அவர்கள் விரும்ப வில்லை.

 

அவர்கள் வீட்டுக்கு போன போது யாருமே கண் விழிக்க வில்லை. மஞ்சு மட்டும் பாலைக் காய்த்துக் கொண்டிருந்தாள்.  இவர்கள் மூவரைக் கண்டு திகைத்தாலும் “டீ போடவா?”, என்று மட்டும் கேட்டாள்.

 

“வேண்டாம் அத்தை, இப்ப குடிச்சா தூக்கம் போயிரும். அப்புறம் குடிக்கிறோம்”, என்று சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு அண்ணனுடன் அறைக்குள் சென்று விட்டான் அமர்.

 

மஞ்சு நே என்று விழித்த படி நிற்க “இது தான் நிதர்சனம் அத்தை. அமர் தான் உன் மருமகன். உன் பொண்ணுக்கு ஏத்த ஜோடி அவன் தான். நாம என்ன நினைச்சாலும் விதி படி தான் நடக்கும். சந்தோஷமா இரு. உன் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் சரியாகிரும்”, என்று அரவிந்த் சொல்ல அவன் கன்னத்தை வருடியவள் “நீ சொல்றதை கேக்குறது நல்லா இருக்கு டா அரவிந்த். நீயும் எங்களுக்கு பிள்ளை தான். உன் வாழ்க்கையும் நல்லா அமைஞ்சா தான் எங்களுக்கு நிம்மதி”, என்றாள்.,

 

“நானும் நல்லா தான் இருப்பேன். நீங்க எல்லாம் என் கூட இருக்கீங்க தானே? அப்புறம் என்ன? சரி சரி உன் மாப்பிள்ளைகளுக்கு விருந்து தயார் செய். ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? இல்லை மாமா போறாங்களா?”

 

“மாமா தூங்குறார் டா. நீ போய்ட்டு வரியா?”

 

“பை எடுத்து கொடு. வாங்கிட்டு வரேன்”, என்று சொல்ல அவர்கள் இருவரும் என்ன வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

 

காலையில் கண் விழித்ததும் அவினாஷ் கண்ணில் விழுந்தாள் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகா. அவனுக்கு அவளைத் தெரியும் என்பதால் அவன் இதழ்கள் தன்னால் புன்னகைக்க அன்னையை தேடினான்.

 

“அவி கண்ணா”, என்ற படி அவன் அருகே அமர்ந்தாள் குளியல் அறையில் இருந்து வந்த ரதி. அக்காவின் குரலில் திவ்யாவும் எழுந்து கொண்டவள் அவர்களைப் பார்த்தாள்.  சட்டென்று எழுந்து அன்னையைக் கட்டிக் கொண்ட அவினாஷ் “அம்மா அவந்திகா”, என்றான் அவள் புறம் கை நீட்டி.

 

“ஆமா டா, அவந்திகா பாப்பா தான். உன்னைப் பாக்க தான் வந்திருக்கா. இந்த செல்ல குட்டியைப் பாக்க அப்பாவும் வந்திருக்காங்களே?”, என்று சொல்லும் போதே எழுந்த அவந்திகா “அம்மா”, என்ற படி அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள இரண்டு பிள்ளைகளையும் அன்புடன் அள்ளிக் கொண்டாள்.

 

எத்தனை நாள் கனவு இது? இரண்டு பிள்ளைகளைப் பார்த்து ரதி முகம் அழகாக மலர திவ்யா அவர்களை படம் எடுத்துக் கொண்டாள்.

 

“அப்பாவா? அப்பா எங்க? நான் பாக்கணும்?”, என்று கேட்டான் அவினாஷ். அவனுக்கு அமரைத் தெரியும். போட்டோவில் பார்த்திருக்கிறான். ஆனால் அமர் தான் தந்தை என்றெல்லாம் தெரியாது. தெரிந்தால் பார்க்க வேண்டும் என்று கேட்பான் என்று எண்ணி தான் அவள் சொல்ல வில்லை.

 

“நான் போய் உங்க அப்பாவை வரச் சொல்றேன்”, என்று சொன்ன திவ்யா வெளியே வர அமரும் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!