Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 14.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

 

“குட் மார்னிங் மச்சான்”, என்று சொன்ன திவ்யா புன்னகைக்க அவளை கண்டு நெகிழ்வாக பார்த்தவன் வம்பிழுக்கும் நோக்கோடு “குட் மார்னிங் அண்ணியாரே”, என்று சொன்னான்.

 

அவள் அவனைக் கண்டு திகைத்து அதிர்வாக பார்க்க “கூடிய சீக்கிரம் உன்னை எங்க வீட்டுக்கு நிரந்தரமா கூட்டிட்டு போயிருவோம் திவி. உன் கஷ்ட காலம் எல்லாம் உன்னை விட்டு போயிருச்சு சரியா?”, என்றான்.



Advertisement

 

கண்களில் நீர் வர “தேங்க்ஸ் மச்சான்”, என்றாள்.

 

Advertisement

“உள்ள உன் ஆள் குப்புற படுத்து தூங்கிட்டு இருக்கான். போய் எழுப்பு போ. நான் என் ஆளையும் என் பிள்ளைகளையும் பாக்க போறேன்”

Advertisement

 

“ஐயோ உள்ளயா? யாராவது பாத்தா? எனக்கு பயமா இருக்கு?”

 

Advertisement

“எதுக்கும் பயப்படாத அந்த திவ்யா எங்க போனா? இப்ப நீ பயந்தா அவன் கூட கிடைக்கிற அந்த தனிமையை இழந்துருவ? யார் என்ன கேள்வி கேட்டாலும் அண்ணன் பாத்துக்குவான். உள்ள போகனுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ”, என்று சொல்லி விட்டு செல்ல தயக்கத்துடன் உள்ளே சென்றாள் திவ்யா.

 

உண்மையிலே சாணக்கியன் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருக்க ஏனோ அவன் தனக்காக வந்ததும் தனக்காக எல்லாம் செய்ததும் அவள் மனதை நெகிழ செய்ய அவன் தன்னவன் என்ற உரிமையில் அவன் அருகே கட்டிலில் அமர்ந்தவள் சிறு குறுகுறுப்போடு அமர்ந்த வாக்கிலே அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.

 

அறைத் தூக்கத்தில் இருந்தவன் அவள் கொடுத்த அசைவில் கண் விழித்து சட்டென்று நிமிர்ந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

இப்போது அவள் அதிர “அவி பாப்பா தான் படுத்திருக்கான்னு நினைச்சேன் டி. அவளும் உன்னை மாதிரி தான் பண்ணுவா. ஆனா என்னோட தேவதையா இருப்பேன்னு நினைக்கலை”, என்றவன் அவளை இன்னும் இறுக்கி அணைக்க “ஐயோ விடுங்க, நான் போகணும்”, என்றாள் சிறு கூச்சதுடன்.

 

“இனி எப்பவும் உன்னை விடுறதா இல்லை. நீயே சொன்னா கூட விட மாட்டேன். இனி நீ எனக்கு மட்டும் தான்”

 

“அவன் டைவர்ஸ் தருவானா?”

 

“இன்னைக்கே கையெழுத்து போடுவான் டி. போடலைனாலும் அவன் கிட்ட இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு”

 

“நிஜமா?”

 

“சத்தியமா டி. ஒரு ரெண்டு மூணு மாசம் மட்டும் பொறு. டைவர்ஸ் கிடைச்ச அடுத்த நாள் நம்ம கல்யாணம் தான்”

 

“ம்ம்”

 

“அது வரைக்கும் இங்க உள்ள காலேஜ்ல எதுவும் விசாரிச்சிட்டு இருக்காத. உன் படிப்பு உன்னோட கனவு எல்லாம் இனி என்னோட பொறுப்பு. சென்னைல நான் எல்லாம் விசாரிச்சு வைக்கிறேன். அது வரைக்கும் அம்மா அப்பா வீட்ல இருந்து நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அங்க இங்க எலும்பு இருக்குற இந்த திவி வேண்டாம். எங்க தொட்டாலும் பஞ்சு மாறி இருக்குற என்னோட திவ்யா தான் வேண்டும்”

 

“பழசை மறைக்கலையா நீங்க?”

 

“இன்னொரு பொண்ணு கூட வாழும் போது நான் அதை நினைக்க கூடாது டி. ஆனா நினைக்காம இருக்க ரொம்ப கஷ்ட பட்டேன். ஆனா என்னோட உணர்வுகளை தொட்ட முதல் பொண்ணு நீ தான் டி. அதே மாதிரி நீயும் என்னை மறந்திருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஐ லவ் யு திவி”, என்றவன் உரிமையாக அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

 

அவள் அவன் கைகளுக்குள் கரைந்தாள். ஏனோ இத்தனை நாள் சுடுமணலில் தண்ணீர் கூட இல்லாமல் நடந்தவளுக்கு இன்று பூஞ்சோலையில் இளைப்பாறிய நிம்மதி கிடைத்தது.

 

அதே நேரம் ரதியின் அறைக்குள் வந்த அமரைக் கண்டு மூவரின் கவனமும் அங்கே திரும்பியது. அவனும் அவர்களைப் பார்த்த படி நெருங்கி அவர்கள் அருகே அமர்ந்தான். ரதி மூவரையும் சிறு சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள். அவந்திகா அன்னையின் கழுத்தை கட்டி இருக்க ரதி மடியில் அமர்ந்திருந்த அவினாஷ் தயக்கத்துடன் அவனைப் பார்க்க இரு கை நீட்டி “அப்பா கிட்ட வா டா”, என்றான். அதைச் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கி போனது. யாருக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்று எண்ணிக் கொண்டான்.

 

அவினாஷ் அன்னையை பார்க்க “அவர் உன் அப்பா டா அவி. அப்பா கிட்ட போ”, என்று ரதி சொன்னதும் எழுந்தவன் அவன் அருகே தயக்கத்துடன் வர அடுத்த நொடி அவனை வாரி அணைத்துக் கொண்டான். அவந்திகா இப்போது அன்னையின் மடியில் சொகுசாக அமர்ந்து கொண்டாள்.

 

அமர் ஏதோ கேள்வி கேட்க அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவினாஷ். அவனது துறுதுறு கண்கள், சிரிக்கும் விழிகள், செப்பு உதடுகள் என தன்னையே மறு பிம்பமாய் பார்க்கும் உணர்வு அமருக்கு. மகனின் அழகில் அப்படியே மெய் மறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் கைகள் அவனை அணைத்துக் கொண்டது. ஏனோ பிள்ளையை கைக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்று அப்படி ஒரு ஆவல்.

 

ரதியை நிமிர்ந்து பார்க்க அவளும் நெகிழ்வுடன் அவனையும் மகனையும் தான் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவரையும் பார்த்த அமருக்கு, தான் யாருக்கும் நியாயம் செய்ய வில்லை என்ற உண்மை கடைசி வரை அவனை சுட்டுக் கொண்டே இருக்கும் என்று புரிந்தது.

 

மகனிடம் கவனத்தை திசை திருப்பினான். அவனை வெளியே அழைத்துச் செல்வேன் என்றும் நிறைய பொம்மை வாங்கித் தருவேன் என்றும் அமர் சொல்லிக் கொண்டிருக்க அடுத்த நொடி என்ன நினைத்தானோ அமரின் கன்னத்தில் உதடு பதித்தான் அவினாஷ்.

 

அவன் முத்ததிதில் அப்படி ஒரு நிறைவு. இதை விட உயர்ந்த பரிசு இந்த உலகில் உண்டா? மகனை இறுக்கி அணைத்தவன் ரதியை வா என்று கண்ணைக் காட்ட அவளும் மகளுடன் அவன் கரங்களுக்குள் சரணடைந்தாள். மூன்று பேரையும் இறுக்கி அணைத்த அமருக்கு எல்லையில்லா நிம்மதி, அவன் மனது தன்னுடைய கூட்டுக்கு வந்த பறவையின் நிலையை ஒத்திருந்தது.

 

இனி இவர்களை எந்த சூழ்நிலையிலும் பிரிய கூடாது என்ற முடிவை எடுத்தான். இத்தனை நாள் வாழாமல் விட்ட சந்தோஷத்தை மீண்டும் திரும்பிப் பெற்று விட வேண்டும் என்ற பேராவல் அவனிடம். அவர்களைக் காண வந்த திவ்யா அவர்கள் தனி உலகத்தில் இருக்க கலைக்க மனதில்லாமல் திரும்பி நடந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து தான் “அம்மா பசிக்குது மா”, என்றாள் அவந்திகா.

 

அடுத்த நொடி தாயாக மனது பரபரப்பு அடைய “குட்டி வா பிரஷ் பண்ணிட்டு வரலாம். அவி கண்ணா நீயும் வா”, என்று அழைத்தாள் ரதி.

 

“வர மாட்டேன்”, என்னும் விதமாய் அவன் அமரின் கழுத்தைக் கட்டிக் கொள்ள அவனுக்கு அப்படி ஒரு பூரிப்பு.

 

கடைசியில் அவனே மகனைத் தூக்கி கொண்டான்.  இருவரையும் பல் துலக்க வைத்து முகம் கழுவி விட்டு நால்வரும் கீழே வந்தார்கள். அமர் கையில் மகன் இருக்க அவள் கையில் இருந்தாள் மகள். அவர்களை குடும்பத்துடன் பார்த்ததும் அனைவருக்கும் கண்கள் பணித்தது. ஏனோ ரதியின் முகத்தில் இருந்த மலர்ச்சி இது வரை யாரும் காணாதது.

 

அதற்காக தான் யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே தான் இருக்க வேணும் என்று சொல்கிறார்களோ என்று தோன்றியது.

 

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்கள். இத்தனை நாள் இல்லாத சந்தோஷம் அந்த வீட்டில் இருந்தது. அமர் மகனுக்கு ஊட்ட ரதி மகளுக்கு உணவு ஊட்டினாள். திவ்யா சாணக்கியனுக்கு விழுந்து விழுந்து பரிமாறினாள். அதை கண்டவர்களுக்கு திவ்யாவும் புதிதாக தெரிந்தாள்.

 

அரவிந்தும் பொறுப்பாக அனைவரையும் உபசரிக்க சகுந்தலா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் பல கணக்குகள் உதயமானது.

 

காலை உணவு முடிந்ததும் “அத்தை நான் கடைக்கு போய்ட்டு வரவா? டிரஸ் ஒண்ணும் எடுத்துட்டு வரலை”, என்று கேட்டாள் ஸ்வேதா. காலையில் திவ்யா கொடுத்த ரதியின் உடையை தான் அணிந்திருந்தாள்.

 

“ஐயோ சாரி டா, நான் உன்னை அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்ல?”, என்று ஒரு நொடி யோசித்தவள் “தம்பி அரவிந்த்”, என்று அழைத்தாள்.

 

“சொல்லுங்க மா”

 

“ஸ்வேதாவை வெளிய கூட்டிட்டு போறியா? அவ டிரஸ் ஒண்ணும் கொண்டு வரலை. நான் உன் மாமா கூட லாயர் பாக்க போகணும். உனக்கு வேலை இருந்தா சொல்லு. நான் அமர் இல்லைன்னா சாணக்கியனை போக சொல்றேன்”, என்றாள்.

 

“நானே போறேன் மா, சும்மா தான் இருக்கேன். அமர் அவன் குடும்பத்தோட டைம் செலவழிக்கட்டும். உங்க கூட சாணக்கியன் அண்ணா வரட்டும். நான் அவங்களை கூட்டிட்டு போறேன். கடை பக்கத்துல தான்”, என்று சொல்ல சகுந்தலா சொன்னதும் ஸ்வேதாவும் கிளம்பச் சென்றாள்.

 

அவன் வண்டி தான் வைத்து இருப்பதால் வேறு வழியில்லாமல் “என் கிட்ட வண்டி தான் இருக்குங்க. இது ஓகே வா? இல்லை ஆட்டோ பிடிக்கவா?”, என்று கேட்டான்.

 

“இல்லை எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லை. வண்டிலே போகலாம்”, என்று சொன்னவள் அவன் கிளப்பியதும் அவன் பின்னே இரண்டு புறமும் கால் போட்டு அமர்ந்தாள். அவன் திகைத்து விழிக்கும் போதே அவன் தோளில் கை வைத்து கொண்டாள்.

 

ஒரு நொடி ஜெர்க் ஆனவன் அவள் இயல்பே அது தான் என்று புரிந்து அமைதியாக வண்டியை ஓட்டினான். சிறிது தூரம் சென்றதும் “நேத்து சைகைல என்ன சொன்னீங்க?”, என்று கேட்டாள்.

 

“அது சாணக்கியன் அண்ணனும் திவ்யாவும் சைட் அடிக்கிறதை அவ்வளவு தீவிரமா பாத்துட்டு இருந்தீங்களா? பெரியவங்க கண்ணுல பட்டுறக் கூடாதுன்னு தான் பாக்காதீங்கன்னு சொன்னேன். கொஞ்ச நாள் அவங்க விஷயம் தெரிய வேண்டாம்னு நினைச்சேன்”

 

“ஓ சாரி எனக்கு தெரியாது. பெரிய அத்தான் எனக்கு தெரிஞ்சு அக்காவைத் தவிர வேற யாரையும் நிமிந்து கூட பாத்தது கிடையாது. அதான் அதிசயமா இருந்தது. கூடவே சுவாரசியமாவும் இருந்தது. அதான்”

 

“அவங்க ரொம்ப வருஷமாவே லவ் பண்ணிருக்காங்க”, என்று சொல்ல ஓ என்றவள் அந்த காதல் கதையை கேட்க அவனுக்கு தெரிந்த வரையில் சொல்ல அவளும் சுவாரசியமாக அவனுடன் கதை பேசிய படியே வந்தாள்,

 

கடைக்குச் சென்று அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுக்க வைத்தான். பில் செலுத்தும் போது “நான் கொடுக்கவா?”, என்று கேட்டான்.

 

“அதெல்லாம் பணம் நிறைய இருக்கு. அப்பா சேத்து வைக்கிறது எல்லாம் சும்மா தான் இருக்கு”, என்றவள் பணம் செலுத்தி விட்டு வர அவளை டீ குடிக்க அழைத்துச் சென்றான். இருவருக்கும் இடையே ஒரு தோழமை உருவானது போல இருந்தது.

 

அமர் ரதியின் கதையையும் அவள் கேட்க அதையும் சொல்லிக் கொண்டிருக்க அவர்களுக்கு அந்த நேரம் நன்றாகவே சென்றது.

 

சொன்னது போல மதியம் சகுந்தலா, சாணக்கியன், தாமோதரன் மூவரும் தான் பாண்டியனைப் பார்க்கச் சென்றார்கள்.

 

அவர்களை கண்டு அவன் முகத்தை திருப்ப தங்கம் எதுவோ புலம்ப தாமோதரனோ “எதுவும் பேச தேவை இல்லை. கையெழுத்தை மட்டும் போடு”, என்று மட்டும் சொன்னார்.

 

சாணக்கியனை ஒரு பார்வை பார்த்தவன் வேறு வழி இல்லாமல் அவர் காட்டிய இடமெல்லாம் கையெழுத்தை போட்டு விட்டு நீட்டினான்.

 

சாணக்கியன் அவனை நக்கலாக பார்க்க பாண்டியனுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவனை பகைக்கவும் தைரியம் இல்லை.

 

“நகை”, என்று தாமோதரன் ஆரம்பிக்க “எல்லாம் அடவுல இருக்கு தம்பி. கொஞ்ச நாள் டைம் கொடு. கொடுத்துறோம்”, என்று தங்கம் சொல்ல அவர்களுக்கும் அமைதியாக போவதை தவிர வேறு வழி இருக்க வில்லை.

 

அவன் கையெழுத்து போட்ட நிம்மதியில் அனைவரும் கிளம்ப சாணக்கியன் மட்டும் அவனை முறைத்த படியே சென்றவன் மீண்டும் திரும்பி வந்து “இனி எங்க வாழ்க்கைல குறுக்க வந்த, அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள். ஞாபகம் வச்சிக்கோ”, என்றவன் அதற்கு பின்னர் தான் அங்கிருந்து சென்றான்.

 

அமர் இன்று எங்கேயும் வெளியே செல்ல வில்லை. மனைவி குழந்தைகளுடன் முழு நேரத்தையும் செலவிட்டான். ஏனோ திகட்ட திகட்ட அவர்கள் மூவரின் பேச்சைக் கேட்டுக் ஆனந்த பட்டுக் கொண்டிருந்தான்.

 

மதியம் உணவு உண்டு முடிந்ததும் அன்னையுடன் இருக்க தனிமை கிடைக்க அமர் அண்ணனின் மனதில் இருப்பதை தெளிவாக சகுந்தலாவிடம் சொல்லி விட்டான். அதைக் கேட்டு அவளுக்கு திகைப்பு தான்.

 

இரண்டு மகன்களையும் தான் புரிந்து கொள்ள வில்லையோ என்ற எண்ணம் வர அவளுக்கே அவள் வாழ்வை எண்ணி வெறுப்பு தான் வந்தது.  தான் கணவரையும் புரிந்து கொள்ள வில்லை, பிள்ளைகளையும் புரிந்து கொள்ள வில்லை. மனைவியாக தான் தோற்று விட்டோம் என்றால் அன்னையாகவும் தோற்று தான் விட்டாள். மகன்களின் வாழ்வை சரி செய்ய அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.

 

அன்று இரவு அனைவரும் சென்னை கிளம்பி விட்டார்கள். அமர், அரவிந்த், சாணக்கியன் மட்டும் காரில் செல்ல மற்ற அனைவருக்கும் விமானத்தில் டிக்கட் போட்டான் அமர்.

 

பிளைட்டில் சென்றவர்கள் முதலில் சென்னைக்கு சென்றதும் போக நினைத்தது ரதி மற்றும் திவ்யாவின் வீட்டுக்கு தான்.

 

வீடு முழுக்க தூசி மட்டும் இருக்கும் என்பதால் அமர் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து விட்டான். அவர்கள் உள்ளே சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்க காலையில் தான் காரில் மற்றவர்கள் வந்தார்கள். அனைவரும் குளித்து கிளம்பி அமர் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே கோபத்தில் கொதித்துப் போய் இருந்தார் தருமர்.

 

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!