Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 16.2

பூவே 16.2

 

 

 



Advertisement

 

வெற்றியின் வீடு கனமான சூழ்நிலையில் இருந்தது. பெரியவர்கள் அனைவரும் நடு மையத்தில் ஆளுக்கொரு பக்கம் நின்றிருந்தனர்.

 

Advertisement

காளியம்மா கடுப்பில் இருந்தார். பெரிய மகளின் வீட்டிலிருந்து சற்று நேரத்துக்கு முன்பு தான் வீட்டிற்குள் வந்தார். உடல் அசதிக்கு சற்று கட்டையை சாய்க்கலாம் என்று நினைத்து படுக்கப் பாயை விரித்த நேரத்தில் தான்,

Advertisement

 

முதலில் மகள் வர, அவளை தொடர்ந்து வந்த மாப்பிள்ளையை கண்டு, பாயை தூக்கி ஓரம் வைத்து,

 

Advertisement

“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்பு கொடுத்த, அன்னையை தீயாக முறைத்து நின்றாள்.

 

அடுத்த சிறிது நேரத்தில் பேத்திகள் இருவரும் உள்ளே வந்தனர்.

 

இவர்களின் சத்தம் கேட்டு பின் கட்டிலிருந்து மயிலம்மாவின் கையை பற்றி வேலுவும், வெற்றியும் உள்ளே வந்தனர்.

 

அவரவர்கள் அந்தந்த இடத்தில் நின்றனர்.

 

“என்னாச்சிடி, வழக்கம்போல மாப்பிள்ளை கூட சண்டை போட்டு வந்துட்டியாடி? பொண்ணுங்களை கட்டிக்கொடுக்குற நிலையில வச்சிக்கிட்டு நீங்க சண்டை போடுறது நல்லாவா இருக்கு?” என்று காளியம்மா பேச்சு பாதியிலே நின்றது.

 

ஆத்திரத்தில் சரசு அலமாரி மீது வைத்திருந்த சொம்பை கீழே தூக்கிப் போட்டாள்.

 

மகளிடம் இதுவரை இல்லாத கோவத்தை கண்டு அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

 

அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தால், அப்பத்தாவை அங்கிருந்து கயிற்று கட்டிலிலே அமர வைத்து,

 

தன் அக்கா அருகே வந்தான். “என்னக்கா முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்ற தம்பியின் வார்த்தையில், அவனின் கைகளை பற்றியவளுக்கு புது தெம்பு கிடைத்தது போல் இருந்தது.

 

அக்காவின் அமைதியை கண்டு மாமனை திரும்பி பார்த்தான்.

 

“என்னாச்சு மாமா, அக்கா ஏன் இப்படி இருக்கா? நீங்க ஏன் ஒரு மாதிரி பதட்டமா நிக்குறீங்க?” என்றான் மாமனை பார்த்து.

 

“அது வந்து வெற்றி…” என்று தடுமாறி நின்ற மாமனை நெற்றி சுருக்கி பார்த்தான்.

 

அவனறிந்த வரையில் எதுக்கும் நேருக்கு நேர் நிற்கும் மாமன் இப்படி தடுமாறி நிற்பது இதுவே முதல் முறை.

 

“அடியே! என்னன்னு சொன்னா தாண்டி எங்களுக்கு தெரியும். அதை விட்டு புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் படம் காட்ட வந்தீங்களா?” என்ற கடுப்போடு மயிலம்மா கேட்க,

 

இருவரிடமும் பதில் இல்லை. சரசு கோவத்துடன் நிற்க, அவள் கணவன் மணியரசு எப்படி பதில் சொல்ல என்ற நிலையில் நின்றான்.

 

“ஏட்டி! உங்களுக்கு எதாவது சேதி தெரிஞ்சா சொல்லுங்களேன்டி. இடிச்ச புளி கணக்கா நிக்கத்தான் வந்தீங்களா?” என்று இப்போது மயிலம்மா பார்வை பேத்திகள் மீது நிற்க,

 

“எங்களுக்கு எதுவும் தெரியாது பாட்டி. ரெண்டு பேரும் ஏன் இங்க வந்து நிக்குறாங்கன்னு தெரியல,” என்று காவ்யா சொல்ல,

 

“க்கா, என்னன்னு சொல்லுக்கா. பாரு அம்மா, அப்பா முகம் சோர்ந்து போய் இருக்கு,” என்றான் வெற்றி.

 

“அவரு காவ்யாவுக்கு சம்மந்தம் பேசிட்டு வந்திருக்காருடா தம்பி,” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

 

“ஏண்டி குறுகெட்டவளே! மொதமொதல்ல புள்ளைக்கு ஒரு சம்மந்தம் கொண்டு வந்தா சந்தோஷப்படுறதை விட்டுட்டு வந்து ஒப்பாரி வைக்குற,” என்ற அப்பத்தாவை முறைத்தவள்,

 

“உங்க மாப்பிள்ளை சம்மந்தம் கொண்டு வரல, நிச்சயத்துக்கே நாள் குறிச்சிட்டு வந்துட்டாரு,” என்றதும்…

 

அனைவரும் ஒரு நிமிடம் அசையாது நின்றனர்..

 

அபிராமியோ காவ்யாவின் காதருகே குனிந்து, “அப்ப உனக்கு பொண்ணு பாக்குற நிகழ்ச்சி எல்லாம் நடக்காதா? நா வேற படமெல்லாம் பார்த்து உன்னை பாக்க வர மாப்பிள்ளைக்கு லட்டுல பச்சை மிளகாய்லாம் வச்சு கொடுக்கணும். போட்டுத் ஒரு பக்கத்துக்கு நா எழுதி வச்சதெல்லாம் வீணா போச்சே,” என்று முணுமுணுத்தாள்.

 

அதை கண்டு பெரியவளுக்கு மயக்கம் வரும் நிலையானது.

 

“ஏய்! அபி அமைதியா இருடி. எனக்கு இப்பவே அடி வயித்துல புளி கரைக்குற மாறி இருக்கு,” என்று இவள், தங்கையை பார்த்து பாவமாக சொன்னாள்.

 

“எருமை, ரொம்ப புளியை கரைக்காத. மாமா அந்தளவுக்கு எல்லாம் விடாது. உன் விருப்பம் கேட்டு தான் நடக்கும். அமைதியா நடக்குறதை பாரு,” தமக்கையின் முகத்தை திருப்பினாள் இளையவள்.

 

இங்கு வேல்விழியோ, ‘காவ்யாக்கா  கல்யாணத்துக்கு எந்த பாவாடை சட்டை போடலாம்… போன பொங்கலுக்கு எடுத்தது… வேணாம் அது பழசாயிடிச்சு… இந்த பொங்கலுக்கு எடுத்தது தான் புதுசா இருக்கு, இதையோ போட்டுக்கலாம்,’ என்ற மனநிலையில் இருந்தாள்.

 

மகள் சொன்ன வார்த்தையை கேட்டு காளியம்மா வாயில் கை வைக்க,

 

ராமைய்யா தன் மாப்பிள்ளையை பார்வையாலே முறைத்து நின்றார்.

 

அதை மனதில் கண்ட மணியரசு பார்வையை நிமிர்த்தவே இல்லை.

 

வெற்றி மட்டும்  அமைதியாக நின்றான்.

 

 

“எய்யா, என்னைய்யா சொல்லுறா உம் பொண்டாட்டி?” என்று மணியரசுவை நேராக பார்த்து கேட்டார் மயிலம்மா.

 

“அது வந்து ஆத்தா…” என்று மீண்டும் தயக்கம் கொண்டான்.

 

“என்னைய்யா நீ சம்பந்தமே பண்ணிட்டு வந்துட்ட, மாப்புள்ள வூடு எப்படின்னு கூட தெரிஞ்சுக்க வழியில்லாம போச்சோ உம் மாமியா வூடு?” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கேட்டார்.

 

“மாப்பிள்ளை என்ன சொல்லுறா சரசு..நிசமாவே காவ்யாவுக்கு  சம்மந்தம் பேசிட்டு வந்துட்டீங்களா” என்று மாப்பிள்ளை பார்த்து காளியம்மா கேட்க,

 

“என்னன்னு வாயை திறந்து சொல்லுங்க மாமா. காவ்யாவுக்கு யாருமே இல்லைன்னு நெனைச்சு சம்மந்தம் முடிச்சிட்டு வந்துட்டீங்க. கல்யாணத்துக்காவது பெத்தவளுக்கு அழைப்பு இருக்கா இல்லையா?” என்றான். கத்தி பேசவில்லை, ஆனா அவன் வார்த்தை அழுத்தமாக வந்து விழுந்தது.

 

வெற்றியை நிமிர்ந்து பார்த்த மணியரசு , “நானே எதிர்பார்க்கலடா, என்னை தூக்கி வளர்த்த அத்தை கடைசி ஆசைன்னு கேட்கும்போது! என்னால் முடியலன்னு.. சொல்ல முடியலடா” என்று உடைந்த குரலில் சொல்ல,

 

வீட்டு மருமகனின் நிலையை கண்டு , யாராலும் உடனே பேச முடியவில்லை, நீங்கள் இருங்க நா இருக்க மாட்டேன்னு..

 

“ஓ வர ஞாயித்துகிழமை நிச்சயம் வச்சிக்கலாம்னு உங்கத்தை தான் சொன்னாங்கல்ல” என்ற சரசு ஒருவித நக்கலுடனே! கேட்டு வைத்தாள்..

 

‘இல்லை’ என்று தலையாட்டிய கணவனை கண்டு, புரிந்து போனது.. நிச்சய தேதி குறிச்சது யாரென்று..

 

“அப்ப , உங்க அக்கா சொன்னதும்.. நீங்களும் தலையாட்டிட்டு வந்துட்டிங்க அப்படித்தானே..?” என்றாள்

 

“இல்லை சரசு , அக்கா சொன்னதும் சரியா இருந்தது.. அதான் தலையாட்டினேன்” என்ற கணவனை கண்டு, முன்பு இருந்த கோவத்தை விட பலமடங்கு உயர்ந்து போனது..

 

“ஓ..‌ உங்கக்கா சொன்னது சரின்னு தலையாட்டி வந்தீங்க.. ஆனா காவ்யாவை நீங்க மட்டும் தனியா வரம் வாங்கி பெத்தீங்களோ..?” என்ற சரசவின் கேள்வியை அங்கேயிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை..

 

“ஏட்டி, ஏதோ? ஆம்பளை சம்மந்தம் பேசிட்டு வந்துட்டான்.. அதை போய் பெருசாக்குற நீ” எனக் காளியம்மா சொன்னதும்..

 

கணவனை விட்டு அன்னை பக்கம் திரும்பியவள்.. “புருஷன் எது பண்ணீட்டு வந்தாலும் நா சரிங்கன்னு தலையாட்டனுமா ம்மா” என்றாள்..

 

“அதுக்கு, என்னடி பண்ண சொல்லுற நீ” என்றதும்..

 

“அது எப்படிம்மா, இந்த நிமிஷம் வரைக்கும். அப்பா எதை செய்யுறதா இருந்தாலும்.. உங்க சம்மதம் கேட்டு தான் பண்ணுறாரு, உங்களை பார்த்து வளர்ந்த நான் மட்டும் புருஷன் பண்ணிட்டு வர எல்லாத்துக்கும் தலையாட்டனும் அப்படித்தானே?” என்றதும், பெற்றவளும் வாயடித்து போனார்..

 

“இப்ப என்ன தாண்டி பண்ண சொல்லுற நீ” என்றவருக்கும் . கண்ணை கட்டிக்கொண்டது, மகள்

பேசும் பேச்சைக்கேட்டு,

 

“அவரு , அக்காவை  வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்க சொல்லுங்க” என்றாள்.. கணவனை பார்த்து,

 

“இப்ப எப்படி சரசு சொல்ல முடியும்.. அங்க சம்மதம் சொல்லிட்டு வந்துட்டு , பொண்ணு கேக்க சொன்னா நல்லாவா இருக்கு” என்றான் பாவமாக ,

 

அனைவரும் அவள் பேச்சில் மூச்சு முட்டும் நிலை தாண்டி, கணவன் தான் சொன்னதுக்கு சரின்னு ஒரு வார்த்தை வராதா’ என்ற கவலையை விட, பொண்ணு பாக்காம நிச்சயம்னு போனா, என்னென்ன பேச்சு வரும்.. அவங்க அக்காங்க , ரெண்டு பேரும் குடும்பத்தோடு பொங்கலுக்கு வந்துட்டு போய்  ஒரு மாசம்  தாண்டிய  நிலையில்..

 

நினைத்து பார்க்கவே கண்ணை கட்டியது.. இங்க இருக்கு யாருக்குமே என் நிலை புரியலையா? என்ற கவலையும் , ஏக்கமுமாக அனைவரையும் பார்த்து நிற்க,

 

அக்காவின் சோர்ந்த முகத்தை கண்டு,   ” என்னக்கா, காவ்யாவை பொண்ணு கேட்டு வரனும் அதானே உன் ஆசை.. அப்படியே நடத்தலாம் விடு இதுக்கு நீ முகத்தை இப்படி வைக்காத” என்றான் வெற்றி..

 

தம்பியின் கையை இன்னும் இறுக்கமாக பற்றினாள்..

 

“என்ன மாமா சொல்லுறீங்க .. பொண்ணு பாக்க வரச்சொல்லி நீங்க வரச்சொல்லுறீங்களா? இல்லை நா சொல்லவா?” என்றான் மாமன் முகம் பார்த்து..

 

” இல்லடா, மறுபடியும் இதை பத்தி பேசனுமா” என்றான் சங்கடமாக,

 

“ஏன்யா, பேசுனா உங்கக்கா

என்ன சொல்லிட போறா, அவ எதுக்கு துடிச்சு போறான்னு.. நெனப்பு இருக்கா, எங்க தான் பொண்ணை ஊரு தப்பா பேசிடுமோன்னு பயந்து நிக்குறா, அதை வார்த்தையால சொல்லக்கூட அவளால் முடியல” என்று மயிலம்மா , பட்டென்று சொன்னதும்..

 

அனைவரும் ஒரு சேர நிமிர்ந்து சரசுவை பார்த்தனர்..

 

தலையை குனிந்து நின்றவள் நிமிரவே இல்லை ,

 

தனக்காக துடித்த அம்மாவை கண்ட காவ்யா ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்..

 

“நா உம்பொண்ணும்மா தப்பு பண்ண மாட்டேன்” எனக் கலங்கிய விழிகளுடன் சொல்ல,

 

மகளின் கண்ணீரை துடைத்தவள்..

 

“நா உன்னை தப்பு சொல்லலடா. ஆனா, உன்னைப் பத்தி நாலு பேரு தப்பா பேசிடக் கூடாதுன்னு தான் பயப்படுறேன். பெத்தவளா அது தானே எனக்கு முதல்ல தோணும்,” என்றவள் மகளின் நெற்றியை வருடினாள்.

 

காவ்யா மேலும் இறுக தாயை கட்டிக்கொள்ள, அங்கிருந்தவர்களின் மனமும் கனத்தது.

 

“சரசு…” என்று மணியரசு மெல்ல அழைக்க,

 

கண்களை துடைத்தவள், “எனக்கு இந்த சம்மந்தத்துல விரோதம் இல்ல. என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும் என்பதுதான் ஆசை. ஆனா, அவளையும் ஒரு வார்த்தை கேட்கணும். பொண்ணு வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கணும். அதுதான் முறையும் மரியாதையும்,” என்றாள் உறுதியாக.

 

மணியரசுவும் சில நொடிகள் அமைதியாக நின்றுவிட்டு, “சரி சரசு. நீ சொல்ற மாதிரியே நடக்கட்டும்,” என்றான்.

 

அந்த வார்த்தையை கேட்டதும் தான் சரசுவின் முகம் சற்று தெளிந்தது.

 

“அதான்… இதை மொதல்லயே பேசிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே,” என்று மயிலம்மா முணுமுணுக்க,

 

“ஆமாடி, வீடே ரெண்டு மணி நேரமா களேபரமா நிக்குது,” என்று காளியம்மாவும் பெருமூச்சு விட்டார்.

 

அதுவரை அமைதியாக நின்றிருந்த வெற்றி, “சரி… எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. மாமா, பொண்ணு கேட்டு வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அப்புறம் காவ்யாக்கிட்டயும் கேட்டு, நல்லபடியா முடிவு பண்ணிக்கலாம்,” என்றான்.

 

தம்பியின் பேச்சில் சரசுவுக்கும் நிம்மதி கிடைத்தது.

 

அங்கே நிலவிய கனமான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக விலக, ஒவ்வொருவரின் முகத்திலும் ஆசுவாசம் பரவியது.

 

“நீயே ! காவ்யாவை கேட்டு சொல்லு மாப்பிள்ளை” என்றான் மணியரசு..

 

“என்ன காவ்யா, உங்க பெரியத்தை மகன் விஷ்ணு கட்டிக்க , உனக்கு சம்மதமா” என்று அவள் முகம் பார்த்தான் வெற்றி..

 

ஒரு நிமிடம் ‘பொங்கலுக்கு வந்த மாமன் ஜடை பிடித்து இழுத்த காட்சி கண் முன்னே வர,

 

மாமனிடம் ” உங்க எல்லாரோட முடிவு தான்.. நா , தனிப்பட்டு சொல்ல எதுவு

மில்லை மாமா” என்றாள்

 

அனைவருக்கும் காவ்யாவின் பதில் மகிழ்ச்சியை தந்தது..

 

சரசு நினைத்தது போலவே! இரண்டாம் நாளே! பொண்ணு கேட்டு வந்தனர்.. மணியரசுவின் சகோதரிகள்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!