சின்னஞ் சிறு பூவே 16.1
பூவே 16.1
Advertisement
“என்ன, நெனைச்சிட்டு இருக்கீங்க… இம்புட்டு தூரம் வந்துட்டு வம்பு பண்ணிக்கிட்டு தெருவிலே நின்னா பொண்ணு என்னங்க நெனப்பா?” என்று கேட்டுக்கொண்டே இடுப்பிலிருந்த கட்டப்பையை கீழே வைத்தார் காளியம்மா.
Advertisement
ராமைய்யாவோ, ‘என்னால முடியாது’ என்று கைகளை ஆட்டி சைகையில் சொன்னதும்…
Advertisement
“வராட்டி போயா… நான் போய் என் பொண்ணைப் பார்த்துட்டு வரேன்…” என்று மீண்டும் கட்டப்பையை இடுப்பில் தூக்கிக் கட்டிக்கொண்டு, வேகமாக மகள் வீட்டை நோக்கி நடந்தார்.
Advertisement
கணவனின் வீம்பை பொருட்படுத்தாமல் காளியம்மா நேராக மகள் வீட்டுக்குள் நுழைந்தார்.
“தெய்வானை!” என்று குரல் கொடுத்தார்.
“யாரு?” என்று கிச்சன் பக்கம் இருந்து வந்த தெய்வானை, அன்னையை கண்டதும் கண்கள் சட்டென கலங்கின.
“ம்மா…” என்று உடைந்த குரலில் அழைத்தபடி அவள் அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.
அந்த ஒரு அழைப்பிலேயே எத்தனை ஏக்கமும், தவிப்பும், பிரிவின் வலியும் அடங்கிக் கிடந்ததோ…
“எப்படி இருக்க?” என்று காளியம்மா கேட்டதும்,
இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் கரை உடைத்த வெள்ளமாய் பெருகியது.
மாதங்கள் கடந்திருந்தாலும், தாயின் முகத்தை நேரில் கண்ட அந்த நொடி தெய்வானை மீண்டும் சிறு பிள்ளையாய் மாறிப் போனாள்.
அன்னையின் கைகளை விடாமல் பிடித்தபடியே அழுதவளுக்கு, அந்த அரவணைப்பே பல நாட்களாகத் தேடிய ஆறுதலாய் இருந்தது.
“போதும்டி… அழறதை நிறுத்து,” என்றார் காளியம்மா.
“போம்மா… உனக்கு எங்கிருந்து என் வலி புரிய போகுது? என் ஊர்ல தொட்டதுக்கெல்லாம் அம்மா வீட்டுக்கு போறாங்க… ஆனா நான்! எத்தனை வருஷமாச்சு… ஒரு நாள் நம்ம வீட்டுல ஒக்கார்ந்து உங்கையால, ஒரு வாய் சோறு சாப்பிட முடியாதான்னு? எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா?” என்று தெய்வானை குரல் உயர்த்தினாள்.
“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையாடி? எனக்கு அம்மான்னு அடையாளம் கொடுத்தவளே நீ தான்… உன்னை இப்படி ஏங்க விட எனக்கு மட்டும் ஆசையாடி? வரச் சொன்னா நீ தான் வரமாட்டுற…” என்று கண்ணீருடன் மகளின் கண்ணை துடைத்தார்.
“அங்க தான் ஒருத்தி என் புருஷனை அசிங்கப்படுத்தினவளோட வாரிசு இருக்கேம்மா… எப்படி நான் அவ முகத்துல முழிக்க முடியும்?” என்று தெய்வானை நிமிர்ந்து பார்த்தாள்.
“நா ஒரு மடச்சி போல நடந்து வந்தவங்களை நிக்க வச்சு பேசுறேன்… நீ வா ம்மா, இங்க ஒக்காரு,” என்று பஞ்சு மெத்தை போல் இருந்த சோபாவை காட்டினாள்.
“என்னடி இது புசு புசுனு இருக்கு…” என்று தடவி பார்த்தார் காளியம்மா.
“ம்மா… அது சோபா ம்மா… உங்க மாப்பிள்ளை தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி வந்தாரு,” என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை டம்ளரில் ஊற்றி கொடுத்தாள்.
தண்ணீரை குடித்த காளியம்மா, அதை வைக்க முயன்றதும் தெய்வானை அதை எடுத்து மேசையில் வைத்தாள்.
வீட்டை சுற்றி பார்த்தவர் “எங்கடி பேர புள்ளைகளை காணோம்.” என்றார்..
“ம்மா, அவங்க அத்தை வீட்டுல இருந்து படிக்க சொல்லி, உங்க மாப்பிள்ளைதான் மெட்ராஸ்ல சேத்து விட்டிருக்காரு…” என்றாள்..
“போடி, புள்ளைங்களை பார்த்து எம்புட்டு நாளாச்சு..!” என்று ஏக்கமாக சொன்னதும்..
“அட , உம்பேரப்புள்ளைங்களை விடு.. ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றாள் தெய்வானை.
“எங்கடி…” என்று வீட்டில் ஆரம்பித்தவர், ஊர் முழுவதையும் ஒரு சுற்று பேசினார்.
இப்படியே தாய், மகள் பேசிக்கொண்டிருக்க,
திடீரென கேட்ட இருமல் சத்தத்தில் இருவரும் நிஜத்துக்கு திரும்பினர்.
“மாப்பிள்ளை…” என்று தன் முந்தானையை சரிசெய்து, தலைகுனிந்து எழுந்து நின்றார் காளியம்மா.
“அட என்னத்தை நீங்க… எத்தனை தடவை சொன்னாலும் இப்படி எழுந்து நிக்கிறீங்க… ஒக்காருங்கத்தை…” என்று சிரித்தபடி வந்து நின்றான்.
காளியம்மாவின் மூத்த மருமகனான சிங்காரவேலன்.
அவன் குரலில் இருந்த இயல்பான நகைச்சுவை வீட்டுக்குள் இருந்த கனத்தை உடைத்தது போல இருந்தது.
“என்னத்தை… முகமே சரியில்லையே… சாப்பிட்டீங்களா இல்லையா?” என்று அக்கறையோடு கேட்டான்.
அவன் கேட்ட விதமே ஒரு பிள்ளை மாதிரி இருந்ததால் காளியம்மாவின் முகத்தில் சின்ன சிரிப்பு வந்தது.
தெய்வானை இன்னும் தலைகுனிந்தபடியே நின்றிருந்தாள்.
“என்னடி… நான் வந்ததும் கூட என்னை பாக்காம அப்படியே நிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே அவள் பக்கம் பார்த்தான்.
அவன் குரலில் கடுமை இல்லை… மனைவியின் மீதான பாசம் மட்டுமே.
“வாங்கத்தை… ஒக்காருங்க…” என்று காளியம்மாவை சோபாவை காட்டி அழைத்தான்.
“நா நிக்குறேன்… நீங்க முதல்ல ஒக்காருங்க மாப்பிள்ளை…” என்றார் காளியம்மா.
“நான் ஒக்காந்துக்குறேன் அத்தை… ஆனா நீங்க இப்படி நின்னுக்கிட்டு பேசாதீங்க…” என்று சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்தான்.
அவன் பேச்சு முழுக்க மரியாதையும், அன்பும் நிறைந்திருந்தது.
தெய்வானை மட்டும் ஒரு நிமிடம் அவனை பார்த்தாள்… பிறகு உடனே பார்வையை கீழே தாழ்த்திக்கொண்டாள்.
அதே நேரம் வாசலில் “ஐயா” என்ற சத்தம் கேட்க,
“என்ன முத்து உள்ள வா” என்றான்..
“ஐயா, நம்ம கணக்குக்கு காக்கா வலிப்பு வந்திடிச்சீங்கய்யா, என்னென்னவோ! செய்து பார்த்தும் வலிப்பு போவலைங்கையா?அதான் உங்ககிட்ட சொல்லி வண்டி வாங்கிட்டு போகலாம்னு வந்தேங்கையா” என்று சொல்லி முடித்தான் வந்தவன்..
“வெளியே டிரைவர் இருப்பான்.. நான் சொன்னேன்னு சொல்லி வண்டி எடுக்க சொல்லு.. நா பின்னாடியே வரேன்” என்று அவனை அனுப்பி வைத்து..
“மன்னிச்சிடுங்கத்தை, உங்க கூட நேரம் செலவழிக்க முடியாம போச்சு.. தெய்வா அத்தையை நல்ல கவனிச்சு அனுப்பு நா முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வர பாக்குறேன்னு” இருவரிடமும் சொல்லிக்கொண்டு, கிளம்பினான்..
“அடுத்தவங்களுக்கு ஒன்னுன்னதும். எப்படி துடிக்குறாரு மாப்பிள்ளை” என்று மகளிடம் பெருமையாக சொன்னார்..
“ஆமாம், நீங்க வாங்கம்மா சாப்பிட அவரு இப்போதைக்கு வீட்டுக்கு வர மாட்டாரு” என்று அன்னையை அழைத்துக்கொண்டு போனாள்…
வெற்றியின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.
“என்னடா சொல்ற நீ… நிஜம்தானா?” என்று அவன் குரல் கடுமையாக ஒலித்தது.
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? நேத்து இராத்திரி உன் அக்காமக பேசினதை என் காதுல கேட்டேன்…” என்றான் மாறன்.
“ஏன் காலையிலேயே சொல்லல?” என்று வெற்றி பல்லைக் கடித்தான்.
“நா என்னடா பண்ணுவேன்? எங்கம்மா காலையிலேயே அவங்க அண்ணனைப் பாக்கணும்னு இழுத்துட்டு போயிட்டாங்க. இதை ஃபோன் போட்டு சொல்ல முடியுமா? அதான் வந்ததும் உன்னைப் பாக்க ஓடி வந்துட்டேன்…” என்றவன்.
“சரி விடு… இப்ப அவன் எங்க இருக்கான்?”
“கள்ளுக்கடைக்கு போறதை பார்த்தேன்…”
கள்ளுக்கடையில் தள்ளுமுள்ளு நடந்து கள்ளு பானை எல்லாம் கீழே கவிழ்ந்து போயிருந்தது.
அந்த கடுப்போட வந்துகொண்டிருந்தான் ராஜன்.
“அதோ வர்றான்…” என்று மாறன் கை காட்டினான்.
வெற்றி ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை.
நேராக ஓடிப்போய் ராஜன் முன்னால் நின்றான்.
“என்னடா இது?” என்று ராஜன் புரியாமல் நிமிர்ந்து பார்க்க,
அடுத்த நொடி வெற்றியின் முஷ்டி அவன் முகத்தில் ஓங்கி விழுந்தது.
“அம்மா!” என்று அலறியபடி தடுமாறி கீழே விழுந்தான் ராஜன்.
“ஏய்! எதுக்குடா அடிக்கிற?” என்று ராஜன் கத்த,
“எதுக்கா?” என்று சீறிய வெற்றி அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
“நேத்து என் அக்கா மகளை என்னடா பண்ண?”
அவன் குரலில் இருந்த ஆத்திரத்தைப் பார்த்ததும் ராஜனின் முகம் வெளிறிப் போனது.
“நா… நா…” என்று தடுமாறியவன் சொல்ல வார்த்தை தேட,
“என்னடா? பேசு! தெரியாத மாதிரி நடிக்கிறியா?” என்று வெற்றி அவனை உலுக்கினான்.
“நான் ஒன்னும் பண்ணலடா…” என்று ராஜன் சொல்லி முடிப்பதற்குள்,
வெற்றி அவன் இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான்.
“அம்மா!” என்று வலியில் கத்தினான் ராஜன்.
அவனை கொஞ்சமும் இரக்கம் பார்க்காமல் பிடித்து நிறுத்திய வெற்றி, அவன் வலது கையைப் பிடித்து பின்னால் முறுக்கினான்.
“ஆஆ… விடுடா! வலிக்குது…” என்று ராஜன் துடித்தான்.
“உன் கையை ஒடைக்குற அளவுக்கு எனக்கு கோவமிருக்கு. ஆனா வயல் வேலை செய்யுற கைன்னு தான் விடுறேன். இல்லன்னா இந்நேரம் கை தனியா கிடந்திருக்கும்!” என்று பல்லைக் கடித்தபடி சொன்னான்.
“இன்னொரு தடவை உன் பார்வை என் அக்கா மகளுங்க மேல விழுந்துச்சு… அப்புறம் பாக்குறதுக்கு கண்ணே இருக்காது. ஞாபகம் வச்சுக்கோ!” என்று விரலை நீட்டி எச்சரித்தான்.
ராஜன் முகமெல்லாம் வலியில் சுருங்கிப் போயிருந்தது.
வெற்றியோ தன் கைலியை காலால் எத்தி இடுப்பில் கட்டிக்கொண்டு,
“நா சொன்னது நெனைவு இருக்குல்ல?” என்று முறைத்தான்.
வலியை மீறி நிமிர்ந்த ராஜன்,
“எம்மேல கை வச்சு பெரிய தப்பு பண்ணிட்ட வெற்றி. இதுக்காகவே ஒரு நாள் நீ அழுவ. அப்ப என் பேரு ராஜன் இல்லை!” என்றான்.
“உன்னால முடிஞ்சா செஞ்சு காட்டுடா!” என வெற்றி அலட்சியமாகச் சொன்னான்.
ஆத்திரத்தில் ராஜன் அவன் சட்டையை எட்டிப் பிடித்தான்.
அடுத்த நொடி வெற்றியும் அவனை நோக்கி பாயப் போக,
“ஏலோ! என்னடா இது?” என்ற குரல் கேட்டது.
பக்கத்து வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சாமிகண்ணு வேகமாக ஓடி வந்தார்.
“சின்னப் பசங்க மாதிரி சட்டையைப் புடிச்சு மல்லுக்கு நிக்குறீங்களே! என்ன பிரச்சனை?” என்று கேட்டபடியே இருவரையும் விலக்கி நிறுத்தினார்.
“மாமா, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இவன் தான் முதல்ல என் மேல கை வச்சான்!” என்று ராஜன் குறை சொன்னான்.
“அப்பிடியா? அதுக்காக ஊரையே கூட்டி சண்டை போடுவீங்களா? ரெண்டு பேரும் ஆம்பள பசங்க தானே?” என்று பெரியவர் கண்டித்தார்.
வெற்றியோ எதுவும் பேசாமல் ராஜனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“வெற்றி கிளம்பு… நீயும் கிளம்புடா… இங்க நின்னா இன்னும் வம்பு தான் பெருசாகும்,” என்று சாமிகண்ணு இருவரையும் விரட்டினார்.
ராஜன் நகரும் முன் வெற்றியைப் பார்த்து முறைத்தான்.
வெற்றியோ, “நா சொன்னது மனசுல இருக்கட்டும்…” என்று
பல்லைக் கடித்தபடி சொன்னான்.
அந்த பார்வையிலேயே எச்சரிக்கை இருந்தது.
ராஜன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாலும், அவன் மனசுக்குள் பழிவாங்கும் நெருப்பு பற்றிக்கொண்டிருந்தது…
