Skip to content
Post Views: 108
அத்தியாயம் – 01
“ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ
வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்”
Advertisement
இந்த பாடல் கேட்க கேட்க என்ன ஒரு இனிமை.
மார்கழி மாத அதிகாலை சுத்தமான காற்றுக்கும், மெலிதான குளிருக்கும் சூடான வெண்பொங்கல் தான் அனைவரின் விருப்பம் என்றாலும், கூடாரவல்லி அன்று சர்க்கரைப் பொங்கல் மிகவும் பிரதானம். அதிலும் முழங்கை வரை நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் ஆண்டாள் படைத்ததாக வரலாறு.
இந்தப் பாடல் சர்க்கரைப் பொங்கல் போன்ற தித்திப்பான ஒன்று. தமிழின் அழகும், எஸ்.பி.பியின் குரலும் பொங்கலில் மிதக்கும் நெய், முந்திரி, திராட்சையும் கலந்த இன்சுவை. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திகட்டாத சுவையான பாடல்.
Advertisement
அது திருவெறும்பூர் அருகில் உள்ள அசூரில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் டவுன் பஸ். காலை முதல் ஷிப்ட் எடுப்பதால் தெய்வீகப் பாடல்களோடு ஆரம்பித்தார் பேருந்து ஓட்டுனர். அதிலும் அன்று செவ்வாய்க்கிழமை. அதனால் முருகர் பாடல்களே வரிசையாகப் போட்டுவிட்டார். சீர்காழி, டி.எம்.எஸ். எல்லாம் முருகர் பாடல்களுக்கே என வரிசைக் கட்டி நின்றாலும், எஸ்.பி.பியின் இந்தப் பாடல் தனி ரகம்.
Advertisement
தை மாதம் நெருங்கி வருவதால் வயல்களில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராக இருப்பதைப் பார்க்கவே பசுமையாக இருந்தது. இந்த வருடம் மழை அதிகமும் அல்ல. குறைவும் அல்ல. சரியான அளவில் மழை பெய்ததில் நன்செய்ப் பயிர்கள் செழித்திருக்க, கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.
இந்தப் பாடல் வரும் வரையில் ஜன்னல் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பயணிகளில் ஒருவன், எஸ்.பி.பியின் குரல் ஒலித்ததும், கண்களை மூடிக் கொண்டு காதுகளைத் திறந்து வைத்திருந்தான். அவன் பெயர் எழிலன். முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தில் தான் வெளியில் செல்வான் எழிலன். இன்று அதைப் பராமரிப்பிற்கு அனுப்பியிருப்பதால் பேருந்தில் பயணிக்கிறான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வாகனத்தைச் சரி செய்து வைக்கவில்லை என்றால் அந்த புல்லட் அவன் கைக்கு வருவதற்குள் தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும். ஏனெனில் அந்த புல்லட் அவரின் நண்பன் போன்றது.
Advertisement
எழிலன் வேலைக்கு வரும்வரை புல்லட் தான் அவன் தந்தையின் விருப்பமான வாகனம். சிறு வயதிலிருந்தே எழிலனுக்கு அந்த புல்லட்டின் மேல் ஆசை அதிகம். ஆனால் அவன் தந்தையோ விடுமுறை நாட்களில் கூட எழிலனுக்குத் தர மாட்டார். வெளியில் செல்ல அவன் அன்னை மலர்விழியின் ஸ்கூட்டி தான் அவனுக்குக் கிடைக்கும். கேர்லீஷ் ஆக இருக்கும் என எவ்வளவோ சண்டை போட்டாலும், செழியன் வண்டியைத் தரமாட்டார். வேறு வழியில்லாமல் நண்பர்களை வரவழைத்து அவர்களோடு வண்டியில் செல்வான். நல்லவேளையாக கல்லூரிக்குப் பேருந்தில் வந்துவிடுவதால் நண்பர்களின் கேலியில் இருந்து தப்பித்து இருந்தான்.
ஒரு கட்டத்தில் எழிலனின் அம்மா அவனுக்கும் ஒரு வண்டி வாங்கிக் கொள்ளச் செல்ல, அதை அவனே மறுத்துவிட்டான். ஏற்கனவே வீட்டில் ஒரு கார் நிற்கிறது. அதைத் தவிர இரு சக்கர வாகனம் இரண்டு. கல்லூரிக்கும் பேருந்தில் தானே சென்று வருகிறான். தேவையில்லாமல் எதற்கு மேலும் ஒன்று எனக் கூறிவிட்டான் எழிலன்.
சில வருடங்களுக்கு முன் தான் இளஞ்செழியனுக்குப் பதவி உயர்வு வந்திருக்கவே, அதற்கு மேல் புல்லெட்டில் செல்வது நன்றாக இருக்காது என விட்டுவிட்டார். சரியாக அப்போது எழிலன் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருக்க புல்லட் அவனின் உபயோகத்திற்கு வந்தது. அதைக் கொடுப்பதற்குள் செழியன் அவரின் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் நேரத்தை விட அதிகமாக எழிலனுக்குப் பாடம் எடுத்தார். மீண்டும் அதைப் போல பாடம் எடுக்கும்படி வைக்கக் கூடாது என்பதலாயே புல்லட் பராமரிப்பைச் சரியாகச் செய்து விடுவான் எழிலன்.
பொதுவாக விடுமுறை நாட்கள் கணக்கில் கொண்டு தான் புல்லட் சர்வீஸ் செல்லும். சென்ற மாதத்தில் கல்லூரி தாளாளர்களில் ஒருவர் இறப்பின் காரணமாக சில தினங்கள் திடீர் விடுமுறை விடப்பட்டதால், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியிருந்தது. அதற்காகப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறான்.
எழிலன் திருச்சி, தஞ்சை இரண்டுக்கும் நடுவில் உள்ள நூறாண்டுகள் புகழ் பெற்றக் கல்லூரி ஒன்றில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறான். ஆசிரியப் பணி அவனின் இயல்பில் ஊறிப் போன விஷயம். காரணம் அவனின் அப்பா இளஞ்செழியன் ஜியலாஜி துறையில் பேராசிரியராகப் பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து தற்போது கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருக்கிறார். அவனின் அம்மா மலர்விழியும் அதே துறையில் பேராசிரியர். தற்போது அந்தத் துறையின் தலைவர்.
எழிலனுக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். அதனால் அதில் முதுகலைப் படிப்பும், எம்பிலும், ஒரு பிஹெச்டியும் முடித்து விட்டு, தற்போது பேராசிரியராக அதேக் கல்லூரியில் பணியாற்றுகிறான். மேலும் ஒரு ஆராய்ச்சியும் செய்துக் கொண்டிருக்கிறான்.
இந்த விஷயத்தில் எழிலனின் தாத்தாவிற்கு மன வருத்தமே. அவர் நடத்தும் பல்பொருள் அங்காடியை கவனிக்க யாரும் முன்வரவில்லையே என்ற அங்கலாய்ப்பு அதிகம். மகன் செழியன் தான் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தான் என்றால் அவரின் பேரன் எழிலனும் அதே வேலையைத் தேர்வு செய்ததும் வீட்டில் ஒரு போர்க்களம் உண்டாக்கி விட்டார். அதை அப்பாவும், மகனுமாகச் சமாளித்து விட்டனர்.
எழிலனின் ஆதர்ச நாயகன் அவனின் தந்தை தான். சிறு வயதிலிருந்தே அவனின் வீட்டிற்கு வரும் செழியனின் மாணவர்கள் அவரிடம் காட்டும் பணிவு, அவர்களின் பெற்றோர் தரும் மரியாதை எல்லாம் பார்த்து வளர்ந்து வந்தான். அவன் அம்மாவும் பேராசிரியை என்பதால் கூடுதல் மதிப்பு வேறு. பல சவால்கள் பேராசிரியர் பணியில் இருந்தாலும், அவற்றை எப்படிச் சமாளிப்பது, மாணவர்களோடு நட்பாகவும், கண்டிப்போடும் இருப்பது இவை எல்லாம் செழியனின் இயல்புகள். இதைப் பார்த்து தான் எழிலனுக்கும் ஆசிரியர் பணி பிடித்தது. ஆனாலும் அவனுக்கு வரலாறு மீதிருந்த ஈடுபாட்டினால், அதையே படிப்பாகக் கொண்டான்.
அத்தோடு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் செழியனின் அணுகுமுறை எழிலனுக்குப் பிடித்தமே. தாத்தாவோடு அவ்வப்போது அவனின் தந்தை முரண்பட்டாலும், தாத்தாவின் சொல்லுக்கு மீறி நடக்க மாட்டார் செழியன். அதே போல எழிலின் அன்னை மலர்விழியிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் ஒரு குடும்பத் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவனின் அப்பா வாழ்ந்து வந்தார். அவனின் அன்னை ஒரே மகள் என்பதால், அந்த தாத்தா, பாட்டிக்கும் முழு ஆதரவாக இருந்து வருகிறார் எழிலனின் தந்தை.
எழிலனின் குணங்களில் பல செழியன் குணத்தை ஒத்து இருக்கும். கால மாற்றங்களினால் இருவர் இடையில் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே தெரியும். இருவருக்கும் பல விஷயங்களில் ஒத்த சிந்தனை, அணுகுமுறையில் மட்டுமே வித்தியாசம் என எழிலன் தன் தந்தையைக் கொண்டு இருந்தான்.
செழியனுக்கு அடுத்து எழிலனுக்குப் பிடித்த விஷயம் என்றால் அது எஸ்.பி.பி அவர்களின் பாடல் தான். பிறந்த அன்றிலிருந்து அவரின் குரல் கேட்டே தான் வளர்ந்தான். குழந்தைப் பருவத்தில் ஆயர் பாடி மாளிகை பாட்டு கேட்டப் பின் தான் அவனின் உறக்கம். அது அப்படியேத் தொடர்ந்து எழிலனின் பொழுதுகள் பெரும்பாலும் எஸ்.பி.பி அவர்களின் பாடல்களோடு தான் கழியும். மொழி வேறுபாடும் கிடையாது. அவரின் பாடலில் தெலுகு, ஹிந்தி மொழிப் பாடல்களை விரும்பிக் கேட்பான். பாலு அவர்களின் வெறியன் என்றே கூறலாம்.
இன்றைக்கு பேருந்தில் ஒலித்தப் பாடலையும் ரசித்தபடியே மனதுக்குள் இன்றைக்கு நாள் மிகவும் இனிமையாக ஆரம்பித்திருக்கிறது என்று நினைத்தான் எழிலன்.
அடுத்து அடுத்து நிறுத்தங்களில் பயணிகள் ஏறத் துவங்கவே, ஓட்டுனர் பாடல்களை மாற்றினார். பயணிகளின் சலசலப்பும் அதிகமாகவே இருந்தது. அதற்கு மேல் எழிலன் இயற்கையை ரசிப்பதை நிறுத்தி விட்டு, அன்றைக்கு நடத்தப் போகும் பாடங்களுக்கானக் குறிப்புகளை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். வரலாறு எடுப்பதால் வருடம் மற்றும் பெயர்களைக் குறிப்பெடுத்துக் கொண்டால் தான் தவறு நேராது.
அடுத்த இருபது நிமிடங்களில் காலேஜ் ஸ்டாப் இறங்குங்க என நடத்துனர் குரல் கேட்கவும், ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கும் ஒரு வணக்கம் வைத்து விட்டு இறங்கினான் எழிலன்.
கல்லூரி நுழை வாயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் என்பதால், இறங்கியவுடன் தனது அடையாள அட்டை அணிந்துக் கொண்டபடி நடந்தான். அதைப் பார்த்ததும் காவலர்கள் எழிலனுக்கு வணக்கம் வைத்தனர். எழிலனும் பதில் வணக்கம் கூறியபடி நடக்க, இரு சக்கர வாகனத்தில் அவனுக்கு முன்னால் சென்ற மாணவர்கள் வண்டியை நிறுத்தினர்.
“குட்மார்னிங் சர். டிபார்ட்மெண்ட்லே கொண்டு விடட்டுமா?” எனக் கேட்டான் ஒரு மாணவன்.
இரு சக்கர வாகன நிறுத்தங்கள் இவர்கள் டிபார்ட்மெண்ட் வளாகத்திற்கு எதிரில் தான் என்பதால் அப்படிக் கேட்டான் அந்த மாணவன்.
“தாங்க்ஸ் பாய்ஸ். யு கேரி ஆன்” என்றான் எழிலன். மாணவர்கள் தலையசத்தபடிக் கிளம்பினார்.
சற்று வேகமாக நடந்து எழிலன் வரலாறு துறை வளாகத்தை அடையும் நேரம், ஆசிரியர்களின் ஓய்வறையில் லேசான சலசலப்புத் தெரிந்தது. எழிலனைக் கண்டதும் காலை முகமன்களுடன் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். இது எப்போதும் நடப்பது தான்.
வரலாற்றுத் துறையில் ஒரு சில பேராசிரியர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் தான். சீனியர் லெக்சரர்களுக்கு எழிலனை மாணவனாகவேத் தெரியும் என்பதால், அவனோடு நன்றாகவேப் பழகுவார்கள். கல்லூரி முதல்வரான செழியனும் ஆரம்பத்தில் அவர்களோடு தான் ஒன்றாகவே வேலை செய்ததால், அவரின் குணமும் தெரியும். அதனால் எழிலனோடும் அவர்கள் சகஜமாகவே இருப்பார்கள்.
எழிலனுக்குப் பின் வந்தவர்களுக்கு எழிலன் கல்லூரி முதல்வரின் மகன் என்பதும், மற்றொரு டிபார்ட்மெண்ட் ஹெட்டாக அவனின் அம்மா இருப்பதும் தெரிந்ததால், சற்று பயத்தோடு தான் பேசுவார்கள். எழிலன் ஸ்டாஃப் ரூமில் இருக்கும்போது அவர்கள் சட்டென்று பேச மாட்டார்கள். அவர்களின் அசௌகரியம் எழிலனும் அறிந்து இருந்தான் தான். அதிகம் கண்டு கொள்ள மாட்டான். வேலை விஷயமாக அவர்களுக்கு உதவியாகவே இருப்பான்.
அன்றைய நாள் வகுப்பு ஆரம்பித்ததும், முதல் பாடவேளை எழிலனுக்கு முதலாம் வருட மாணவர்களுக்கு இருக்கவே, அந்த கிளாசிற்குச் சென்றான். எப்போதும் போல அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்ததும், எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்தான்.
எல்லோரும் இன்றைய அவனின் பாடத்திற்கு ஆர்வமாக இருக்க, ஒரு பெண் மட்டும் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள். அந்த மாணவி எப்போதும் ஆர்வமாகவே இருப்பவள். இன்டெர்னல் டெஸ்ட்டில் அவனின் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவளும் கூட. என்ன விஷயம் எனக் கேட்க நினைத்தான். ஒருவேளை இயற்கை தொந்தரவுகளோ என்ற எண்ணம் தோன்ற, சற்று நேரம் விட்டுப் பிடிப்போம் என எழிலன் தனது பாடத்தை ஆரம்பித்தான்.
பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே எழிலன் அவ்வப்போது அந்தப் பெண்ணைக் கவனிக்கவும் தவறவில்லை. அந்த வகுப்பு முடியும்வரை, அவள் தலை நிமிரவே இல்லை. முதல் வகுப்பு முடிவதற்கான மணி அடிக்க, அப்போது தான் நிமிர்ந்தாள் அந்தப் பெண்.
சற்று யோசித்து விட்டு, “மணிமாலா, ப்ரேக் டைம்லே ஸ்டாஃப் ரூமிற்கு வா” என்றான் எழிலன்.
அந்தப் பெண் திடுக்கிட்டு “எதுக்கு சர்?” எனக் கேட்டாள்.
எழிலன் அவளை நேராகப் பார்க்கவும், “சரி சர்” எனத் தயக்கத்தோடு பதில் கூறினாள்.
எழிலன் கூறியபடி மணிமாலா வர, “என்ன விஷயம்மா? இன்னிக்கு கிளாஸ் ஒழுங்கா கவனிச்ச மாதிரி இல்லையே?” எனக் கேட்டான் எழிலன்.
அந்தப் பெண் பதறியவளாக, “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சர். கொஞ்சம் ஹெல்த் இஷ்யு” எனக் கூறினாள்.
“நானும் முதலில் அப்படித் தான் நினைச்சேன். ஆனால் உன்னோட தவிப்பும், பயமும் பார்த்தா அப்படித் தெரியலை” என்றான் எழிலன்.
தற்போது மணிமாலாவின் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் எழிலன் பதறிப் போனான்.
சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு அங்கே வேறு யாருமில்லை என அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“என்ன பிரச்சினை மணிமாலா?” எனக் கேட்டான்.
“சர், எங்க குடும்ப விவரம் எல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் உதவித் தொகை வாங்கி தான் படிக்கறேன். ஹாஸ்டல் பீஸ் எல்லாம் ஸ்பான்சர்ஸ் கட்டறதுனால் தான் இவ்வளவு தூரம் வந்து படிக்கறேன். இல்லாட்டி ஏதாவது ஜவுளிக் கடைக்கு அல்லது டெய்லரிங் கோர்ஸ் படிச்சிட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்திருப்பேன். இப்போ அதுதான் நடக்கும் போலிருக்கு”
“அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லையே. இதுவரை உன்னோட இன்டெர்னல் ஸ்கோர்ஸ் எல்லாமே நல்லாவே இருக்கு. கண்டிப்பா செமெஸ்டெரிலும் நல்ல மார்க்ஸ் வரும். சோ ஸ்காலர்ஷிப் கன்டினியூ ஆகும் . நீ ஏன் இப்படி சொல்ற?”
“ஹாஸ்டலில் இருக்க முடியலை சர். தனியா வீடு எடுத்துத் தங்கவும் வசதி கிடையாது. வேறே என்ன செய்யன்னுத் தெரியலை”
“ஹாஸ்டல்லே என்ன தப்பு நடக்குது? அதுவும் கேர்ள்ஸ் ஹாஸ்டல் இங்கே ரொம்பவே ஸ்ட்ரிக்ட். ராகிங் பண்ணறாங்களா?”
“அது ..” என ரொம்பவே தயங்கினாள் மணிமாலா.
“ம். நீ சொல்லுமா. பிரச்சினை என்னனு தெரிஞ்சா தான் நாங்க நடவடிக்கை எடுக்க முடியும்”
“எனக்கு பயமாயிருக்கு சர். நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சா எனக்கு ஏதும் ஆகிடுமோனு தோணுது சர்”
“மணிமாலா இவ்வளோ பயப்படுறனு சொன்னா ரொம்ப பெரிய விஷயமா இருக்கும். உன் ஒருத்தி மட்டுமில்லை. இங்கே இருக்கிற எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பு நிர்வாகம் தான். நீ என்னனு சொல்லுமா”
“சர் வேண்டாம் சர். என் விதிப்படி நடக்கட்டும்.” என மணிமாலா கூறவும், சட்டென்று “என்னோடு வா” என்று அழைத்தான். அந்த நேரத்தில் அடுத்த பாடவேளைக்கான மணி ஒலிக்க, இருவருக்குமே அடுத்து கிளாஸ் இருப்பதால் தயங்கினான் எழிலன்.
பின் “லஞ்ச் டைம் ஜியாலஜி டிபார்ட்மெண்ட் ஹெட் போய் பாரு. நானும் அங்கே வந்துருவேன். நீ தனியாவே அவங்க கிட்டே பேசு. நீதான் சொன்னனு யாருக்கும் தெரியாம நான் பார்த்துக்கறேன். இப்போ கிளம்பு” என்று அனுப்பி வைத்தான் எழிலன்.
மணிமாலா செல்லவும், எழிலனும் தன்னுடைய அடுத்த வகுப்பிற்குச் சென்று பாடங்கள் ஆரம்பித்தான். உள்ளுக்குள்ளே என்ன விஷயமோ என்ற பயம் இருந்தது.
-தொடரும் –
error: Content is protected !!