Skip to content
Post Views: 126

அத்தியாயம் 37
‘என்ன நடக்குது இங்க…?’ ஆதியும் நிஷாவும் கையைப்பிடித்துக்கொண்டு நின்ற அந்தக் காட்சியைக் கண்டு அடிவயிற்றில் அமிலம் சுரந்து தொண்டைவரை கசந்தது மதிக்கு.
அவள் அவர்களைச் சந்தேகப்படவில்லை என்றாலும், அவர்கள் அத்தனை நெருக்கமாகவும் இயல்பாகவும் பழகுவதைப் பார்க்கும்போது அவளுக்குள் ஒரு விவரிக்க முடியாத கோபமும் ஏமாற்றமும் உண்டானது. முகம் அநியாயத்திற்குச் சுருங்கிபோனது.
Advertisement
“நிஷாக்கா, நந்து கூப்பிடுறான்.. வீட்டுக்குப் போக டைம் ஆச்சாம்,” ஆதியைத் தவிர்த்துவிட்டு வேறு எங்கோ பார்த்தபடி சொன்னாள்.
“ஐயோ டைம் ஆயிடுச்சா? லேட்டா போனா அம்மா என்னை வறுத்தெடுத்துடுவாங்க. நான் கிளம்புறேன் ஆதி,” என்று பதற்றமாக வெளியேற முற்பட்டவள், அதே வேகத்தில் மீண்டும் உள்ளே வந்தாள்.
“ஐயோ, முக்கியமா வந்த வேலையை மறந்துட்டேனே! ஆதி, இந்தா என்னோட வெட்டிங் இன்விடேஷன், இப்படி லாஸ்ட் மினிட்ல கொடுக்கிறேன்னு தப்பா நினைக்காத. ஆனா நீ கண்டிப்பா மேரேஜுக்கு வரணும்.”
Advertisement
“இல்ல நிஷா…” அவன் மறுக்க முயன்றான், ஆனால் நிஷா விடவில்லை,
Advertisement
“உன்னோட எந்த சாக்கையும் நான் கேட்க மாட்டேன்… நீ வந்தே ஆகணும், அவ்வளவுதான். ஓகே பை.. பை மதி..”
அவள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து பறந்துவிட்டாள். ஆதியும் மதியும் தனித்துவிடப்பட்டனர்!
அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சங்கடமான அமைதி நிலவியது.
Advertisement
“உண்மைய சொல்லணும்னா… பாஸ்ட்ல உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ நல்ல ரிலேஷன்ஷிப் இல்ல..” மதி உணர்ச்சியற்ற தொனியில் சொன்னாள்.
“என்னாலயும் அதை உணர முடிஞ்சது..” என்று சொன்னவன், தொடர்ந்து.. “ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லை.. என்னால அவகிட்ட ரொம்ப கம்ஃபர்டபிளா பேச முடியுது,” என்றான்.
“ஓ…” அவனது பதிலில் உதட்டை சுளித்துவிட்டு, காதில் புகைவராத குறையாக அவள் கிளம்ப,
“உன்னோட நிஷாக்கா ஒரு விஷயம் சொன்னா..”
என்றான் அவளது முகபாவனைகளை அணு அணுவாக ஆராய்ந்தபடி,
“என்ன சொன்னா..?” அவளது இதயத்துடிப்பு வேகமெடுத்தது.
“இன்னைக்கு ரோஷனோட பேச்சுலர்ஸ் பார்ட்டியில என்னையும் கலந்துக்க சொன்னா..”
‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவள்,
“அதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?” என்றாள் எரிச்சலாக,
அவள் தவிப்பை ரசித்து உள்ளுக்குள் சிரித்தபடி,
“உனக்கு தெரியும்தானே.. பேச்சுலர்ஸ் பார்ட்டினா எப்படி இருக்கும்னு. எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்க..
“அதுக்கு?”
“அங்க போனா.. நானும் குடிக்க வேண்டியது வரலாம்.”
“நீங்க குடிங்க, குடிக்காம போங்க.,எனக்கென்ன அதைப்பத்தி..?”
“அப்போ நான் குடிச்சா பரவால்லையா உனக்கு?”
“நீங்க குடிச்சிட்டு நடு ரோட்டுல உருண்டா கூட.. எனக்கு பிரச்சனையில்லை.. போதுமா?”
“தேங்க்ஸ் மதி எனக்குப் பர்மிஷன் கொடுத்ததுக்கு! இன்னைக்கு எனக்கு நிஜமாவே குடிக்கணும் போலத்தான் இருக்கு”
கொதிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,
“உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைத் தாராளமா பண்ணுங்க… அது எந்த விதத்துலயும் என்னை பாதிக்காது!”
அலட்சியமாக பேசிவிட்டு அவள் அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினாள்.
ஆதி பார்ட்டிக்குக் கிளம்பிச் சென்று சில மணி நேரங்கள் ஆகியிருந்தது.
அவன் குடிக்கப் போவதாகச் சொன்னது நிஜம்தானா, இல்லை வழக்கமாக அவளை வம்புக்கு இழுப்பது போல இதையும் சும்மா விளையாட்டிற்குச் சொன்னானா என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவனது வார்த்தைகளை அலட்சியப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், அவன் சொன்னது, மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஒலித்து அவளை அநியாயத்திற்குக் குடைந்து கொண்டிருந்தது.
அவள் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த போது,’
திடீரென்று அவளது மொபைல் போன் அதிர்ந்தது. திரையில் ‘ரோஷன்’ பெயரைக்கண்டதும் அவளுக்கு ஒருகணம் உடம்பெல்லாம் பதறியது.
“ஹலோ..” அத்தனை பதற்றத்துடன் ஒலித்தது அவள் குரல்,
“ஹலோ மதி… நந்து அங்க இருக்கானா?” ரோஷனின் அவசரக்குரல் அவளுக்குள் ஒரு விசித்திரமான பயத்தைக் கிளப்பியது.
“நந்துவா? என்ன விஷயம் மாமா..?”
“இங்க ஒரு சின்ன பிரச்சனை. நந்துவோட ஹெல்ப் தேவைப்படுது. அவனோட மொபைலை ரீச் பண்ண முடியல, அதான் உனக்குக் கூப்பிட்டேன். உனக்கு இங்க பார்ட்டி நடக்குற வென்யூ தெரியும் தானே? ப்ளீஸ், அவனை உடனே இங்க அனுப்பி வை..”
அவனது குரலில் இருந்த பதற்றம் அவளது கவலையை இன்னும் அதிகமாக்கியது… “என்ன பிராப்ளம் மாமா..?“
“அதை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல மதி… ஆதி நல்லா குடிச்சிட்டு இங்க ஒரே ரகளை பண்ணிட்டு இருக்காரு..!” ரோஷன் சொல்லியதைக்கேட்டு மதிக்கு அப்படியே தலை சுற்றுவது போல இருந்தது!
“மாமா, என்ன சொல்றீங்க?”என்று படபடப்பில் கத்திவிட்டாள்.
“ஆதி நல்லா குடிச்சிட்டாரு மதி, இப்போ அவரைக் கட்டுப்படுத்தவே முடியல… அவரை பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும். அதுக்குத்தான் நந்துவை வரச் சொன்னேன்…”
“ஆதி சாரா.. வாய்ப்பே இல்லை,அவரு குடிக்க மாட்டாரு..” ரோஷனின் வார்த்தைகளை நம்ப மறுத்து, மிகவும் உறுதியான குரலில் சொன்னாள்.
“அவரு குடிக்கமாட்டேன்னு தான் சொன்னாரு. ஆனா, என்னோட ஃப்ரண்ட்ஸ் தெரியாம கூல் டிரிங்க்ஸ்ல மிக்ஸ் பண்ணிக் கொடுத்து குடிக்க வச்சிட்டாங்க. இதுதான் ஆதிக்கு ஃபர்ஸ்ட் டைம் போல.. அவங்களுக்கும் தெரியாது, இப்போ ரொம்ப ஃபீல் பண்றாங்க. நான் அவங்க சார்பா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், சாரி மா..”
“என்ன மாமா நீங்க, சாரிலாம் சொல்லிக்கிட்டு… விடுங்க. இப்போ அவரு எப்படி இருக்காரு?”
“அவருக்கு நல்லா போதை ஏறிடுச்சு.. ஹேண்டில் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நானே கூட்டிட்டுவந்திருப்பேன், ஆனா என்னால இப்போ பார்ட்டியை பாதியில விட்டுட்டு வர முடியல. நந்துவை கொஞ்சம் வரச் சொல்லு, அவன் கூட நான் ஆதியை பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன்..”
“ஓகே மாமா… நான் அனுப்பி வைக்கிறேன்.”
ஃபோனை கட் செய்தவளின் இதயம் படபடவென்று வேகமாக அடித்துக்கொண்டது,
ஆதி சார்… அதுவும் போதையிலா..?’
அவளால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! எல்லாவற்றிற்கும் மேலாக, நந்து அவரைத் தன் ரோல் மாடலாக, ஹீரோவாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் ஆதியை இந்த நிலைமையில் பார்த்தால்,அவனிடம் அவரது மதிப்பு என்னாகும்?
எனக்கு அவர் மேல கோபம், வெறுப்பு இருக்கலாம்… ஆனா மத்தவங்க கண்ணு முன்னாடி அவரோட மரியாதை குறையுறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது!’
நந்துவை அனுப்புவதற்குப் பதிலாக, அவளே நேரில் செல்வது என்று முடிவெடுத்தாள்.
இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள அவசரமாகக் கிளம்பி பார்ட்டி நடைபெற்ற ராடிசன் ஓட்டலை அடைந்தாள். ஆனால் அங்கே… ஆதியும் ரோஷனும் பார்ட்டி நடக்கும் ரெஸ்டாரண்ட் வாசலில் நின்றபடி ரொம்ப சாதாரணமாக, இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்! ஆதியின் நடத்தையைக் கூர்ந்து கவனித்தாள். அவன் நிதானம் தவறாத தெளிவோடு,நன்றாகத்தான் இருந்தான்!
“மதி…!! நான் நந்துவைத்தானே அனுப்பி வைக்கச் சொன்னேன்? நீ ஏன் இந்த லேட் ஹவர்ஸ்ல இங்கவந்த ?” ரோஷனின் அதட்டலான குரலில் அவள் சற்றுத் தடுமாறினாள்.
“அது… அது வந்து… நந்துவோட ஃபோன் எனக்கும் ரீச் ஆகல மாமா…”
ரோஷன் ஆதியைப் பார்த்து, பலமாக சிரிக்கத் தொடங்கினான்!
“நான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன்ல ஆதி..? மதி உங்களை அவ்வளவு லவ் பண்றான்னு! இப்போ பாருங்க… உங்களுக்கு என்ன ஆச்சோன்னு பதறிப்போய் ஓடி வந்திருக்கா! எனக்குத் தெரியும், என்னோட கணிப்பு எப்பவுமே தப்பாது!” அவன் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள..
அப்போதுதான் மதிக்கு உறைத்தது… தன் முன்னால் நின்றுகொண்டிருக்கும் இந்த இரண்டு பேராலும் தான் அசிங்கமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று..
அவள் ஆதியை உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள்.
“ஓகே, நான் உள்ளப்போறேன். ஆதி பை.. மதியைப் பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. வீட்டுக்கு போயிட்டு எனக்கு ஒரு கால் பண்ணிடுங்க..”
“சூர்.. பை ரோஷன்,” ஆதி அவனுக்கு விடை கொடுத்தான்.
பிறகு மெதுவாக, தன் முன்னால் அக்னி தேவியாக மாறி நின்று கோபக் கனலை வீசிக்கொண்டிருந்த தன் தேவதையின் பக்கம் திரும்பினான்.
மதியின் கண்கள் அவன் மீது ஈட்டிகளைப் பாய்ச்சின, அவளது முகம் ஆத்திரத்தில் சிவந்திருந்தது. ஆனால், ஒரு வார்த்தை பேசாமல் அங்கிருந்து விறுவிறுவென்று திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
“மதி, ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு…” அவளை நிறுத்த அவன் அவளது கையைப் பற்றினான்.
பற்றிய கையை ஆவேசமாக உதறிவிட்டு, இன்னும் வேகமாக நடந்தாள்.
அவன் அவளுக்குப் பின்னால் ஓடிவந்து, அவளைக் கடந்து முன்னால் நின்று வழியை மறித்தான்.
“ஸாரி மதி… நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. ப்ளீஸ் லெட் மீ எக்ஸ்ப்ளெயின்,” அவன் கெஞ்சினான்.
“நீங்க என்ன விளக்கம் சொல்லப் போறீங்க, ஹான்..? இந்த உலகத்துலயே நீங்க ஏமாத்துறதுக்குன்னே பிறப்பெடுத்து வச்சிருக்க இளிச்சவாய் நான், அதனால நீங்க நினைச்சப்பல்லாம் என்னை ஏமாத்தி விளையாடுறீங்கன்னு சொல்லப்போறீங்க… அப்படித்தானே?” அவள் ஆத்திரத்தோடு கத்தினாள். அது பலரது பார்வைப்படும் பொதுஇடம் என்பதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் அவள் இல்லை; அந்தளவுக்கு அவளது மனம் காயப்பட்டிருந்தது.
“அப்படி இல்லை மதி…”
“வேற எப்படி..? உங்களுக்கு நான் அவ்வளவு மலிவா போயிட்டேன்ல? நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்ற நாய் குட்டின்னு நினைச்சிட்டீங்களா? அன்னைக்கு என்கிட்ட ஸாரி கேட்கும்போதுகூட, நீங்க நிஜமாவே கொஞ்சமாவது வருத்தப்படுறீங்கன்னுதான் நினைச்சேன்.. ஆனா நீங்க மாறல,உங்களுக்கு என்னோட உணர்வுகளைப் பத்தி துளி கூட அக்கறை இல்லை…உங்க கையில இருக்க பொம்மை மாதிரி என்னை ஆட்டிவைக்க நினைக்கிறீங்க..தெரியாமத்தான் கேட்கிறேன்… இப்படி என்னை, அழ வச்சு பார்க்குறதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம் கிடைக்குது?” கண்களில் கண்ணீர் வழிய,கேட்டவளின் குரல் உடைந்தது.
அவன் அவளது கண்களை நேராகப் பார்த்தபடி, “அவ்வளவுதானா? பேசி முடிச்சிட்டியா? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?” என்று கேட்டான்.
“நான் உன்னை லவ் பண்றேண்டி.. நீ என்னோட உயிர்! உன்னை அழ வச்சு பார்க்குறதுல எனக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும்? நீ கஷ்டப்பட்டா உன்னை விட அதிகமா எனக்குத்தான் வலிக்கும், அதை முதல்ல புரிஞ்சுக்கோ..”
“இன்னிக்கு நீங்க பண்ண இந்த டிராமாவுக்கு அப்புறமும் உங்க வார்த்தைகளை நம்ப நான் முட்டாள் இல்ல?”
“நீ எவ்வளவுதான் இல்லைன்னு மறுத்தாலும், உனக்கு என் மேல அக்கறை இருக்குங்கிறதைக் காட்டத்தான் நான் இப்படிப் பண்ணினேன்.. நான் உன் மனசுல இருக்கேங்குற உண்மையை எதாலயும் மாத்த முடியாது, அவ்வளவு லேசுல நீ என்னை தூக்கிப் போட்டுட முடியாது! நாம ரெண்டு பேரும் ஒன்னா சேந்து வாழ விதிக்கப்பட்டவங்க, நாம ஒருத்தரை விட்டு ஒருத்தர் எப்பவுமே ஓட முடியாதுங்கிறதை உனக்கு புரியவைக்கனும்னு நினைச்சேன் அவ்ளோதான்…”
“இங்க பாருங்க மிஸ்டர் ஆதித்யா.. நான் ஒன்னும் உங்கமேல இருக்குற காதல்னால இங்க வரல. நந்து முன்னாடி உங்களோட மானம் போயிடாம… உங்க மரியாதையைக் காப்பாத்த மட்டும்தான் நான் இங்க வந்தேன்!”
“ஆனா, என் மேல உனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லைன்னா…என்னோட மரியாதையைப் பத்தி நீ ஏன் கவலைப்படணும்?”
“ஒருத்தருக்கு உதவி செய்றதுக்கு அவங்களை காதலிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. எல்லாரையும் குப்பை மாதிரி தூக்கிப் போடுறதுக்கு… நான் ஒன்னும் உங்களைப் போல ஈவுஇரக்கமில்லாதவள் கிடையாது!”
அவனை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த கடைசி வார்த்தைகளை சொன்னாள்… அது சரியாக இலக்கைத் தாக்கியது!
அவளது வார்த்தைகள் தந்த வலியால் அவனது முகம் சுருங்கியது.
“எனக்குத் தெரியும், நான் உனக்கு நிறைய வலிகளைக் கொடுத்திருக்கேன்… ஆனா என்னால கடந்த காலத்தை மாத்த முடியாது. அதனாலதான் நம்ம எதிர்காலத்தைச் சரி பண்ணப் பார்க்கிறேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு மதி… நான் உன்னை இப்போவே என்னை மன்னிச்சிடுன்னு கேட்கல. அட்லீஸ்ட் என்னை இவ்வளவு தூரம் தள்ளி வைக்காத, அதைத்தான் நான் கேட்கிறேன். உனக்குக் கோபம் வருதா? கோபப்படு… என்னைத் திட்டணும், அடிக்கணும்னு தோணுதா? தாராளமா பண்ணு… ஆனா இப்படி உன்னை நீயே கட்டுப்படுத்திட்டு, எதுவும் நடக்காத மாதிரி அலட்சியமா நடிக்காத. ஏன்னா, என்னை காயப்படுத்துறேன்னு நினைச்சு உன்னை நீயே அதிகமா காயப்படுத்திக்கிற! நமக்குள்ள இருக்கிற இந்த இடைவெளியைச் சரி பண்ணி உன்னை சந்தோஷமா வச்சுக்க தான் ட்ரை பண்றேன்… நான் என்ன பண்ணா நீ ஹேப்பியா இருப்ப சொல்லு? நான் பண்றேன்…ஆனா ப்ளீஸ் என்னை அவாய்ட் பண்ணாத!”
“நான் ஹேப்பியா இருக்கணும்னா நீங்க என்னோட லைஃபை விட்டுப் போனா போதும்…முடியுமா?”
“அதுதான் உனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்னா நான் எப்பவோ போயிருப்பேன் மதி… ஆனா நீ பொய் சொல்ற, நா இல்லாம உன்னால எப்பவுமே ஹேப்பியா இருக்க முடியாது…” அவளது கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி உறுதியாகச் சொன்னான்.
“ஆனா நீங்க இருந்தாலும் என்னால ஹேப்பியா இருக்க முடியாது!” அவள் உடனே திருப்பி அடித்தாள்.
“எனக்கு ஒன்னுன்னா இப்படிப் பதறி அடிச்சுக்கிட்டு, ராத்திரின்னும் பார்க்காம ஓடி வந்திருக்க… இதுக்கு அப்புறமும் நீ இப்படிச் சொன்னா யாராவது நம்புவாங்களா?” ஒற்றைப் புருவத்தை நக்கலாக உயர்த்திக் கேட்டான்.
அவள் தன் பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்; அவனுக்குச் சரியான பதிலடி கொடுக்க வார்த்தைகள் கிடைக்காமல் திணறினாள்.
“உண்மையைச் சொல்லணும்னா… கடைசி வரைக்கும் நீ வருவியா மாட்டியான்னு எனக்கு ரொம்ப டென்ஷனா இருந்தது தெரியுமா? நீ வந்ததும்தாண்டி எனக்கு உயிரே வந்தது தேங்க்ஸ் டியர்…” ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு அவளைச் சட்டென்று இழுத்துத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்! ஆனால் அவள் கண் இமைக்கும் நேரத்தில் அவனைத் தூரத் தள்ளினாள்.
“என்னை இனிமேல் தொடவே தொடாதீங்க..!” மிரட்டுவது போல தன் விரலை நீட்டி எச்சரித்தாள்.
“ஓகே, இனிமேல் தொடல… போதுமா?” தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைந்தான்.
“ஆனா நீ இவ்வளவு ஸ்வீட்டாவும் கியூட்டாவும் இருந்தா… என்னாலயும் என்னைக் கட்டுப்படுத்த முடியலடி செல்லக்குட்டி..!” என்று சொன்னபடியே அவளது கன்னங்களை ஆசையாகக் கிள்ளினான்!
அவனது கைகளைத் தட்டிவிட்டு அவனைக் கோபமாக முறைத்தாள்.
“தொடாதீங்கன்னு சொன்னேன்ல!”
“ஓகே பேபி.. இனிமேல் உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னைத் தொடமாட்டேன், போதுமா?” முகமெல்லாம் சிரிப்போடு அவன் சொல்ல, அது அவளுக்குள் இன்னும் அதிக எரிச்சலைக் கிளப்பியது!
‘பேபி.. டியர்.. எல்லாம் தண்ணிப்பட்டபாடா இருக்கு..
திடீர்னு இவருக்கு என்ன ஆச்சு..?’
அவளுக்கு அது ஒரு மாதிரியாக, விசித்திரமாக இருந்தது; அதே சமயம் மனதிற்குள் கோடி அருவி குளுகுளுவென்று கொட்டியது போல் சிலிர்ப்பதையும் தடுக்கமுடியவில்லை.. தலையை உலுக்கிக்கொண்டு,
“நான் கிளம்புறேன்..” என்று நடக்கத் தொடங்கினாள்.
“இரு, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்..” அவன் அவளைப் பின்தொடர்ந்தான்.
“நோ வே நான் உங்ககூட வர மாட்டேன்..”
“ப்ளீஸ் பேபி..”
“நோ..”
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..“
“நோ..நோ..நோ..!”
அந்த செல்ல சண்டை, அவர்கள் வீடு வந்து சேரும் வரை தொடர்ந்தது..
error: Content is protected !!